புதன், 9 ஆகஸ்ட், 2017

நினைவோ ஒரு பறவை! விரிக்கும் அதன் சிறகை!

என் கணவர் வரைந்த படங்களை என் வலைத்தளத்தில் ஒரு இடத்தில் சேகரிக்கலாம் என்று  சேமிக்க ஆரம்பித்தேன், அப்புறம் பார்த்தால் அதில் சக பதிவர்களின் அன்பு அழைப்பின் பேரில் எழுதிய பதிவுகள் வந்தன. 

//முன்பெல்லாம், போட்டிகள், தொடர்பதிவுகள் என கொண்டாட்டமாக இருக்கும்! எத்தனை தொடர்பதிவுகள் – ஒரே தொடர்பதிவுக்கு பலரிடமிருந்தும் அழைப்பு வரும் அளவிற்கு இருந்ததும் உண்டு. இப்போதெல்லாம் எழுத யாருமே இல்லையோ என்ற ஐயம் வந்திருக்கிறது! சக பதிவர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்த விருதுகள் அளித்து மகிழ்ந்ததும் நடந்திருக்கிறது. விருதுகள் மூலம் பணங்காசு கிடைக்காது என்றாலும், நாம் எழுதுவதையும் மதித்து சக பதிவர் ஒருவர் விருது அளிக்கிறாரே என்ற மகிழ்ச்சி நிச்சயம் கிடைத்திருக்கும் – விருது பெற்ற ஒவ்வொரு பதிவருக்கும்!//

இப்படி சொன்னவர் யார் என்று தெரிந்து இருக்கும்  உங்களுக்கு. வெங்கட் நாகராஜ்  தான்.
சமீபத்தில் வெங்கட் தன் 1400 வது பதிவில் குறிப்பிட்டுச் சொல்லி ஆதங்கப்பட்டு இருந்தார்.

வெங்கட்  பதிவைப் படித்தவுடன்  எனக்குத் தொடர் பதிவுகளை (நான் எழுதிய ) படிக்க ஆசை வந்து விட்டது.  படித்தேன், இங்கு பகிர்ந்த பதிவுகளில் நான் எழுதிய சில தொடர் பதிவு இருக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியான காலங்கள்!

இன்னும் நிறைய தொடர் அழைப்புகள்  பதிவுகள் இருக்கிறது.  இந்த பதிவில் கணவர்
படம் வரைந்த தொடர் அழைப்பு பதிவுகள் மட்டும் இங்கு இருக்கிறது. படத்துக்கு கீழே
பதிவுகளில்  எழுதியவைகளை கொஞ்சமாய் பகிர்ந்து இருக்கிறேன்.


என் கேள்விக்கென்ன  பதில் ? என்ற தொடர் பதிவில்

அம்பாளடியாள் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள்.  10 கேள்விகள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மதுரைத் தமிழன் அவர்கள் அம்பாளடியாளை அழைத்து இருந்தார்கள். அம்பாளடியாள் கேள்விகளுக்கு மிக அழகாய் பதில் அளித்து இருந்தார்கள். 



தீபாவளி வாழ்த்துக்கள் மலரும் நினைவுகள் பதிவுக்கு வரைந்த படம்
இந்தப் பதிவும் தொடர் அழைப்பு தான்.

ராக்கெட் விட, பாட்டில்கள் தயார் செய்து வைத்துக் கொள்வோம். சரம் வைக்கும் போதும், லட்சுமி வெடி வைக்கும் போதும், ”திரியைக் கிள்ளி வை !இல்லையென்றால் வெடிக்காது”என்று அண்ணன் சொல்வதைக் கேளாமல், பற்ற வைத்து விட்டுஓடி வருவேன். ”நுனியில் கொஞ்சம் தீக்கொழுந்து கனன்று வரும் போது தான் ஓடி வரவேண்டும்” என்று அண்ணன் சொல்லித் தந்தான்.  வைத்து விட்டு வெடி பற்றுவதற்கு  முன்பே ஓடிவந்தால் ஒரே சிரிப்பு.  சில நேரம் திரியில் தீப்பொறி வரவில்லை என்று பக்கத்தில் பார்க்கப் போனால் டபாரென்று வெடித்து நம்மைப் பயமுறுத்தும்.அவை எல்லாம் அற்புதமான நேரங்கள். திரும்பி வராத காலங்கள்.






ஆசியா அவர்கள் தொடர் பதிவுக்கு  அழைப்பு விட்டு இருந்தார்கள்.

-நீங்கள் வெகு காலமாய் பாதுகாத்து வைத்து இருக்கும்  பொருளைப்பற்றி -என்று கூறியிருந்தார்கள்.  அந்த பொருளின் படமும் போடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள். என் அப்பாவைப் பற்றிக்கூற எனக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய ஆசியாவிற்கு நன்றி. நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கி கொடுத்த பாரின்
வாட்சைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

அம்மாவின் சிங்கப்பூர் வாட்ச் சில்வர் கலரில் வெள்ளைகல் சுற்றி பதித்த , மூடி
போட்டது. அந்த வாட்சை பெரும்பாலும் நான் தான் கட்டி செல்வேன்.

பள்ளியில் தோழிகள் மணி கேட்டால் பெருமையாக அதை திறந்து மணி சொல்வேன். எல்லோரும் அதை திறந்து மூட ஆசைப்பட்டு மணி கேட்பார்கள்.
ஒரு பொருட்காட்சிக்குச் சென்றிருந்த போது அந்த வாட்ச், கூட்டத்தில் எங்கோ விழுந்துவிட்டது.  பொருட்காட்சி முழுவதும்  நானும் என் அண்ணனும் தேடினோம்.



காலை எழுந்துகொள்ள வேண்டும் என்றுஅலாரம் வைத்துக் கொண்டு படுப்பவர்கள் கூட அது அடிக்கும் போது அதன் தலையில் தட்டிவிட்டு மறுபடியும்  போர்வையை முகம்  முழுதும் மூடிக் கொண்டு  தூங்குவது உண்டு. 


அபிராமி அன்னைக்கு அழகிய அங்கி என்ற பதிவுக்கு அபிராமி பட்டர் வரலாறு

அந்த அங்கி பலகோடி ரூபாய் மதிப்புடையதானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அம்மனுக்குச் சாற்றுமுன் இத்திருவுருவத்தை திருக்கோயிலினுள்ளும் திருவீதிகளிலும் எழுந்தருளி திருஉலா செய்தனர். அதுவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆதீனகர்த்தர்கள்,பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு அங்கி சார்த்தும் வைபவம் நடைபெற்றது.





சித்தன்னவாசல் பதிவுக்கு வரைந்து தந்த படம்.

அண்மையில் 'கழுகுமலை' பதிவு போட்ட போது- சமணர் படுக்கை பற்றி குறிப்பிட்டு எழுதிய போது,  அந்த பதிவுக்கு பின்னூட்டம் கொடுத்த G.M. பாலசுப்பிரமணியம் சார்,

 //புதுக்கோட்டைக்கு அருகில் ஓவியங்களுடனும் கல் படுக்கைகளுடனும் சிற்பங்களுடனும் ஒரு இடம் பார்த்திருக்கிறேன். பெயர் நினைவுக்கு வரவில்லை. வாழ்த்துக்கள் // 

என்று  சொல்லி இருந்தார்கள். அவர்களுக்கு நான் ”அந்த ஊர் பெயர் சித்தன்னவாசல் , அங்கு மகள் மருமகனுடன் சென்று வந்தோம், அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்”  என்று பதில் அளித்தேன். சாரால் மற்றொரு பதிவு போட வாய்ப்பு கிடைத்து விட்டது.


பொங்கலோ பொங்கல் !  பதிவுக்கு  வரைந்து தந்த வாழ்த்து அட்டை

பொங்கல் திருநாள் இந்த ஆண்டு  முன்பு போல்   இல்லை.  பயிர் பச்சை செழிப்பாக வளரவில்லை.  தண்ணீர் இல்லை, மழை இல்லை என்று மக்களின் மனக்குறை. இதைப் போக்க என்ன வழி என்று தானே பார்க்க வேண்டும்.

திருநெல்வேலியில் சமீபத்தில் ஜானகி ராம் ஓட்டலில் தங்கி இருந்தோம். அவர்கள் வைத்து இருக்கும் மாருதி ஓட்டலில் தான் உணவு உண்டோம். அங்கு எழுதி இருந்த ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது
துணிப்பை என்பது எளிதானது.
            தூரஎறிந்தால் உரமாவது
            பிளாஸ்டிக் என்பது அழகானது
           விட்டு எறிந்தால் விஷமாவது 

என்று எழுதி வைத்து இருந்தார்கள்.
   பெய்யும் மழை பூமியில் சென்று ,தங்கி, நிலத்தடி நீராக மாறினால் தான் மக்களுக்குப் பயன்படமுடியும்.  மழை நீரை நிலத்துக்குள் புக விட மாட்டேன் என்கிறது பாலிதீன் பைகள்.   அதை அரசு தடை செய்தாலும் , மக்கள் பயன்படுத்துவது குறையவில்லை.  சில கடைகளில் பிளாஸ்டிக் பை கிடையாது, தயவு செய்து வீட்டில் இருந்து பை கொண்டு வரவும் ,என்று போட்டு இருக்கிறார்கள்.

-----------------


பொங்கலோ பொங்கல் -பாகம்-2 


வீட்டில் மூலை முடுக்கு எல்லாம் சுத்தம் செய்வது.  வீட்டை வெள்ளை அடித்து சுத்தம் செய்வது.  பரணில் இருக்கும் வேண்டாததை வெளியே எறிந்து வேண்டியவைகளைச் சுத்தம் செய்து எடுத்து வைப்பது  என்று எவ்வளவு வேலை.

சீன வாஸ்து சொல்கிறது வேண்டாதவை என்று நாம் எடுக்காத பொருட்களில் கெட்ட சக்திகள் வந்து குடி கொண்டு விடும் என்று.  இயந்திரமோ, மனித உடலோ உபயோகிக்காவிட்டால்  அப்படித்தான் ஆகி விடும்.
                                                                     ----------


மாட்டுப்பொங்கல் பதிவுக்கு வரைந்து தந்த படம்

 உழவுக்கும், தொழிலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும், வீரத்திற்கும் உதவியாக இருக்கும் மாட்டுக்கு இன்று மரியாதை செய்யும் நாள் ,மாட்டுப் பொங்கல். கடுமையாக உழைக்கும் பெண்ணையும் ஆணையும் மாடாய் உழைக்கிறார் என்று சொல்லி மாட்டுக்குப் பெருமை சேர்க்கிறோம்.
                                                                 --------------------------


இளமையின் ரகசியம் தீரா கற்றல் பதிவுக்கு வரைந்த படம்.

வயதானவர்கள் நிறைய எழுதுகிறார்கள், இணையத்தில். வயது ஆக ஆக  ”மெமரி லாஸ் ” பிரச்சனை வரும் என்கிறார்கள்  மருத்துவர்கள்  அதற்கு நிறைய புத்தகங்கள் படிக்கச் சொல்கிறார்கள்.  நாளைடைவில் இந்த பிரச்சனை சரியாகி விடும் என்கிறார்கள் அதற்கு இணையம் கை கொடுக்கும், அவர்களுடம் பேச ஆள் இல்லை என்றால் அதற்கு இணையம் ஒரு நல்ல துணை. ஏதாவது கதை,கட்டுரை தன்  வாழ்க்கையில் கிடைத்த அனுபவம், தனக்குத் தெரிந்த சமையல் கலை, தையல் கலை, மற்றும் தனக்குப் பிடித்த புத்தகங்கள், சினிமா விமர்சனம் , பயணக்கட்டுரை எல்லாம் எழுதுகிறார்கள். அதைப் படித்து கருத்து சொல்பவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். பாராட்டு ஒரு நல்ல டானிக். அது அவர்களை நாள் முழுவதும்  உற்சாகத்தோடும் மனபலத்தோடும் வாழவைக்கும் மருந்து ஆகிறது.  மெமரி லாஸும் போய் சிறு வயது நினைவுகள் எல்லாம் வருகிறது. பலருடன் தன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்வாய் இருக்கிறார்கள். நண்பர்களிடமிருந்து நாள்தோறும் ஏதாவது புதிதாய்க்  கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். தன்  உடல்  குறையையே எப்போதும் கூறிக்  கொண்டு இருக்காமல்  குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்கள்,  தனக்கு தெரிந்த கைவைத்தியம், உடலோம்பல் முறைகள் எல்லாம் எல்லோருக்கும் சொல்கிறார்கள். பிறர் சொல்வதைக் கேட்கிறார்கள்.

சித்திரை  முதல் நாளில்  ’ பண்புடன் ’  இணைய இதழுக்காக  நான் எழுதிய  கட்டுரை.
---------------------------------------




இன்ப மழை பெய்ய வேண்டும் என்ற பதிவுக்கு வரைந்து தந்த படம்.

இயற்கை விஞ்ஞானி  நம்மாழ்வார்  அவர்கள் ஒரு தொலைக்
காட்சியில் சொன்னார்: //தண்ணீர் உபயோகத்திற்கு  ,நம் தந்தைக்கு அவருடைய அப்பா குளம், ஏரியைக் காட்டினார்,   நம் தந்தை,
குழந்தைகளுக்கு கிணற்றைக் காட்டினார், நாம் நம் குழந்தை
களுக்கு பைப்பைக் காட்டினோம்., நம் குழந்தைகள் அவர்களின் குழந்தைகளுக்குப் பாட்டிலைக் காட்டுகிறார்கள். //

வருங்காலத்தில் நிலைமைஎன்னவாகும்?

 மண்ணுக்கு மழைத்துளி, நமக்கு உயிர்த்துளி. பறவைகள் கூட மழை
எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள வானிலை அறிக்கையை எதிர்பார்க்கிறதாம்.

எங்கள் பிளாக்’  ஆசிரியர்
குழுவில் உள்ள ஸ்ரீராம் அவர்கள்  இன்று பகிர்ந்து கொண்ட கற்பனைக் கவிதை பாருங்கள்.

//வானிலை அறிக்கையைக்
கொஞ்சம்
சத்தமாக வையுங்கள்
ரமணன் சொல்கேட்டு
மழை வரும் நாள்
அறிந்து
ஆடுகிறேன்..//

எப்படி இருக்கிறது  மயில் சொல்லும் கவிதை ? மழை பெய்து பறவைகளும்,
விலங்குகளும் ஆடட்டும்.

                                                           ---------------------------






திருப்பூவண உலா பதிவில்  அப்பர் தேவாரத்திற்கு வரைந்த படம்.

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்
       கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
             காதில்வெண் குழையோடு கலந்து தோன்றும்
    இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
             எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
                      பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

                                                                  ----அப்பர் தேவாரம்

--------------------------------------



மின்சாரமே! மின்சாரமே! பதிவுக்கு வரைந்து  தந்த படம்.

சாத்தூர் பஸ்நிலையத்தில் ஒரு  அறிவிப்புப் பலகை பார்த்தேன்.  அதை
உங்களுடன் பகிர எழுதி வைத்துக் கொண்டேன்.  போட்டோ எடுக்க காமிரா
அப்போது கையில் இல்லை.

காணவில்லை
ஊர்- தமிழ்நாடு
வயது- 200 ஆண்டுகள்
பெற்றவர்- பெஞ்சமின் பிராங்களின்
அடையாளம்- - மிகவும் பிரகாசமாக இருப்பார், தொட்டால் ஷாக் அடிப்பார்.
அருமை மின்சாரமே! உன்னை காணாமல் நாங்கள் வெகு நாட்களாய் அல்லல்
படுகிறோம். எப்போ நீ வருவாய் ? கண்ணில் நீரோடு காத்திருக்கிறோம்.
--இப்படிக்கு தமிழ்நாட்டு மக்கள்.

-எப்படி இருக்கு அறிவிப்பு!
நிலமை இப்படி ஆகிவிட்டது!
                                                   --------------------------

அம்மா என்றால் அன்பு  அன்னையர் தின பதிவுக்கு வரைந்து தந்த படம்

அம்மா என்றால் அன்பு.   அன்பு என்றால் அம்மா. சொல்லச் சொல்ல இனிக்கும், அம்மா என்னும் அழைப்பு. அவரவர்களின் அம்மா அவரவர்களுக்கு என்றுமே சிறப்புதான்.(உயர்த்திதான்)

அன்னையர் தின சிந்தனை பதிவு.
                                                   -------------------------



கழுகுமலை பதிவுக்கு வரைந்து தந்த படம் (வெட்டுவான் கோயிலை படம் பிடிக்கும் காட்சி)

.

                            ------------------------


ஜலீலாவின் பேச்சிலர் சமையல் குறிப்பு போட்டிக்கு வரைந்து தந்த படம்.

ஆஹா  உருளை!
இந்த சமையல் குறிப்புகளை ஜலீலாவிற்கு  பேச்சிலர் சமையலுக்கு அனுப்பி இருக்கிறேன்.

உருளைக்கிழங்கு காரக்கறி

தக்காளி சாதம்

தனியா பொடி(கொத்தமல்லி விதை பொடி)

ஆப் பாயில் உருளை.

இந்த போட்டியில் திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார் வெற்றி பெற்றார்.  
அடடா --- என்ன அழகு!
அடையைத் தின்னு பழகு!


என்  கணவர் என் பதிவுகளுக்கு வரைந்து தந்த படங்களும்  பதிவுகளின் சுட்டியும். இன்னும் இருக்கிறது அது அடுத்த பதிவில்  பார்க்கலாம்.
பழைய பதிவுகளில் எவ்வளவு பதிவர்கள் ! வந்து பின்னூட்டம் கொடுத்து இருக்கிறார்கள் .  நினைத்துப் பார்த்து, படித்துப் பார்த்து மகிழ்கிறேன்.
நினைவு பறவை சிறகை விரித்துக் கொண்டு போய் கொண்டே இருக்கிறது ஆனால் அதை அடக்கி   கொஞ்ச நினைவுகள் மட்டும்.


//பதிவுலகம் முன்பிருந்த நிலையும் இப்போது இருக்கும் நிலையும் மனதில் தோன்ற, அந்த எண்ணங்களை அப்படியே பதிவிட்டேன். பதிவுலகம் மீண்டும் புத்துணர்வோடு இயங்கும் நாளை எதிர்நோக்கி நானும்…..// 


வெங்கட் சொன்னது போல் நானும் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறேன்.
                                                 வாழ்க வளமுடன்.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

அகிலமெல்லாம் போற்றும் அம்மன் அருள்.!

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த  மாதம்.  ஆடிச்  செவ்வாய், ஆடி வெள்ளி எல்லாம் மிக சிறப்பாய் வீடுகளில், ஆலயங்களில் பூஜைகள் நடை பெறும். பண்டிகைகள் ஆரம்பிக்கும் மாதமும்  ஆகும். கோயில்களில் விழாக்கள் நடைபெறும் அம்மனுக்கு.

தொலைக்காட்சி சேனல்கள் போட்டிக் கொன்டு அம்மன் படங்கள், விழாக்களை ஒலிபரப்பிக் கொண்டு இருக்கிறது.

பதிவுகளில் ஆடிச் சிறப்பு   அம்மன்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

பக்திமணம் கமழும் ஆடி மாதத்தில்  நான் மயிலாடுதுறையில் இருக்கும் போது எடுத்த அம்மன் படங்கள் உங்கள் பார்வைக்கு.


மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி திருக்கோயிலில் ஆடி வெள்ளி அன்று செய்யும்  சந்தனகாப்பு அலங்காரம்.

 
                                               சாந்த நாயகி

Image may contain: 3 people
Add caption
மயிலாடுதுறையில் இருந்த போது அங்கு உள்ள  கள்ளக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன்.
No automatic alt text available.
அம்மனின் பின் அலங்காரம்.


புனுகீசுவரர் கோயில் துர்க்கை அம்மன் வெள்ளிக் கிழமை ராகு கால பூஜை சிறப்பு   அலங்காரம் புஷ்பபாவாடை.
புனுகீசுவரர் கோவில் துர்க்கை அம்மன்

ஆடி வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை சமயம்  குத்து விளக்கை அம்மனாக அலங்காரம்.

மயிலாடுதுறை செல்வ விநாயகர் கோயில் ஸ்ரீ சிவதுர்க்கை ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில்  ஒவ்வொரு அலங்காரம்
கஜலட்சுமி அலங்காரம்

பாம்பு புற்றில் அம்மன் இருப்பது போல்
 அலங்காரம்
சிவதுர்க்கை
தேங்காய் பூவால் அலங்காரம்.
சிவதுர்க்கை அம்மன்  பழ அலங்காரம்.
சிவதுர்க்கை மீனாட்சி  அலங்காரம்.
சமயபுர மாரியம்மன் படம் வைத்த காவடி.

                                           
அம்மனை தாயின் தோளில் அமர்ந்து  பார்க்கும்  பச்சைக்கிளி

இன்று பக்கத்து வீட்டில் வரலட்சுமி அம்மன் விழாவிற்கு அழைத்தார்கள்  போய் அம்மனை வணங்கி தாம்பூலம் வாங்கி வந்தேன்.

அனைவருக்கும் வரலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும்.

                                                              வாழ்க வளமுடன்.

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஆடிப்பெருக்கு


//அன்னையின் அருளே வா வா வா
 அன்னையின் அருளே வா வா வா
 ஆடிப் பெருக்கே வா வா வா//

கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய பாடல். ஆடிப்பெருக்கு என்றால் நினைவுக்கு வரும் பாடல்.
Image may contain: indoor
ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
மீனாட்சி அன்னை பச்சை பட்டுப் புடவைக் கட்டி, கிளி வாகனத்தில் வருகிறார்.
அன்னையின்  அருளால்  மழை பொழிய வேண்டும்.

மதுரையில் மக்கள் தண்ணீருக்கு கஷ்டப்படுவதைப் பார்த்தால்  கஷ்டமாய் இருக்கிறது. இரண்டு நாட்களாய் நல்ல  மழை இங்கு.  ஆடி என்றால் அடைமழை பொழியும் என்பார்கள், "ஆடி பட்டம் தேடி விதை"  என்று சொன்னது போல்  ஆடி மாதம் விதை விதைத்து  எங்கும் பசுமையாக 
நாடு செழித்தால் நல்லது.

எங்கள் பழைய வீட்டில் பழுது பார்க்கும் வேலை நடக்குது.  அதற்கு 
லாரி தண்ணீர் வாங்கிதான் வேலைபார்க்கிறோம். 
கார்ப்பரேஷன் தண்ணீர்- நினைத்தால் வருகிறது.

மகன் வீட்டில் இருக்கிறோம்.  இப்போது தண்ணீர் கஷ்டம் இல்லை .  எல்லோரும் தண்ணீரை சிக்கனமாய் உபயோகப்படுத்த சொல்லி அறிக்கை அனுப்புகிறார்கள். இன்னும் போக போக மழை இல்லை என்றால் கஷ்டம் தானே!

மயிலாடுதுறையில் இருக்கும் போது ஆடிப் பெருக்குசமயத்தில் காவேரிக்கரையில் பூஜை செய்வோம், அதுபோல்  மதுரை வைகைக் கரையில் பூஜைகள் உண்டா தெரியவில்லை.  


ஒரு முறை மயிலாடுதுறையில்  காவேரிக் கரையில் தண்ணீர் இல்லாமல் படித்துறையின்  படி மேலேயே கொண்டு போன காதோலை,கருவளையல் , காப்பரிசி பழங்களை வைத்து வணங்கினேன். ஆற்று மண் எடுத்து பிள்ளையார் பிடித்து வணங்குவார்கள் . இன்று .
வீட்டிலே  சின்ன பித்தளைக்குடத்தில் தண்ணீர் பிடித்து வைத்து காவேரியை நினைத்து வணங்கி கொண்டேன்.   என் பழைய பதிவுகளை படித்துப் பார்த்தேன். நீங்களும் படித்துப் பார்க்கலாம்.




இன்று தினமலரில் வந்த ஆடிப்பெருக்கு விழா செய்தி :-

*// நன்மை அனைத்தும் பெருகும் இந்த நல்ல நாளில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும். நாட்டில் மழை வளம் பெருகும். 

* 'பெருக்கு' என்பதற்கு 'சுத்தம் செய்தல்' என்றும் பொருள் உண்டு. ஆடிப் பெருக்கில் வெள்ளம் ஓடும் போது ஆற்றிலுள்ள அசுத்தங்கள் அடித்துச் செல்லப்பட்டு தூய்மை உண்டாகும். அது போல, மனதிலுள்ள தீய எண்ணத்தை பக்தி என்னும் வெள்ளம் பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை இந்த நாள் உணர்த்துகிறது.

 தங்க நகை வாங்க ஏற்ற நாள் இன்று. வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வாங்கலாம். செய்யும் நற்செயலால் புண்ணியம் பெருகுவது போல இன்று செய்யும் சேமிப்பு பலமடங்காக பெருகும். தொழில் தொடங்கினால் லாபம் பெருகும்.

* திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ரங்கநாதர், விநாயகர், அகத்தியர் ஆகியோருடன் சம்பந்தம் கொண்ட புனித காவிரியில் நீராடினால் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் உண்டாகும். மாங்கல்ய பலம் பெறவும், விளைச்சல் பெருகவும் காவிரித்தாயை வழிபடுவர்.

* இன்று லட்சுமி தாயாருக்கு பால், தேன், தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்தால் மனம் குளிர்ந்து அருள்வாள். பாலை குழந்தைகளுக்கும், தேனை பெண்களுக்கும், தானியத்தை பறவைகளுக்கும், பொங்கலை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் முன், வாசலில் கோலமிட வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி நித்ய வாசம் செய்வாள்.//


. - நன்றி தினமலருக்கு.


இன்றைய காலண்டரில் தேதி கிழிக்கும் போது படித்த செய்தி, ஆடி பதினெட்டாம் பெருக்குவிழா, புதுவருடக்காலண்டர்கள் பூஜையுடன் தொடக்கம் என்று.

நம்பிக்கைகள் வாழ்க!





  




மயிலாடுதுறை காவேரி , வீட்டுக் குப்பைகள் கிடக்கிறது.

வீரநாராயண ஏரி

  வீரநாராயணப்பெருமாள் கோயில்,வேதபுஷ்கரணி, காவேரி நதி (2014)


காவேரிப் படித்துறை (மயிலாடுதுறை) இரண்டு வருடங்களும் முன் தண்ணீர்  இல்லை. இப்போது இருக்கா என்று தெரியவில்லை. ஆற்றை சுத்தம் செய்து காவேரிவரக் காத்து இருக்கிறார்கள்.


கிணற்றிலும் நீர் இல்லை

Image may contain: tree, plant and outdoor
ஏற்றம்  மாடல் பழமையை நினைவு படுத்த  அமைத்து உள்ளார்கள். கும்பகோணம் பக்கம் உள்ள ஒரு விடுதியில்.

புதுக்கோட்டை  பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் மழவராயன்பட்டியை சேர்ந்த கருப்பன் என்ற கருப்பையா  அவர்கள்  (வயது 90) .
30 ஆண்டுகளாக ஏற்றத்தின் உதவியுடன் கிணற்றுப் பாசனம்  செய்த விவசாயி .இப்போது வறட்சியால் ஏற்றம் முடங்கி கிடப்பதாய்  வருத்தப்பட்டதை பத்திரிக்கையில் படித்தேன்.
.

சிறுவர்கள் சப்பரம் செய்து இழுத்து செல்வார்கள் ஆடிப் பெருக்கு விழாவில்.
மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மீண்டும் அந்த மகிழ்ச்சி வர வேண்டும்.
நீர் நிலைகள் நிரம்பி வழிய வேண்டும்.
Image may contain: one or more people, people standing, tree, plant and outdoor
 ஆற்றிற்கு  சிறு தேர் உருட்டிச் செல்லும் சிறுவன்



நீரின்  பெருமையை, மதிப்பை மனதால் உணர்ந்து  அதைப் போற்றி வணங்குவோம்.

ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.


”மாரி மழை பொழிய வேண்டும்,மக்கள் சுற்றம் வாழ வேண்டும்
காடு கரை நிறைய வேண்டும்,மக்கள் கஷ்டம் தீர வேண்டும்.”


ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய்ப் பொழிய   வாழ்த்துவோம்.

                                                                வாழ்க வளமுடன்.

திங்கள், 31 ஜூலை, 2017

காட்சிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் !

ஊமத்தம்பூ- மொட்டும் மலரும்

ரேடியோ பூ என்றும் சொல்லுவோம். கிராமபோன் ஸ்பீக்கர் போல் இருப்பதால் இந்த பேர்.


வேம்பும், அரசமரமும் -நாகர்கள் மரத்தடியில் -மரத்தின் உள் பகுதியை உற்றுப் பார்த்தால் ஐந்து தலை நாகம் கண், மூக்குடன் இருப்பது போல் இருக்கிறது. தெரிகிறதா என்று பாருங்கள்.
காய்ந்த மொட்டை மரத்தைத் தழுவிப் படர்ந்து  மொட்டை மரத்திற்குப் பசுமையைக் கொடுத்து மயில்களை வரவேற்று இருக்கிறது பசுமைக் கொடி.

புல் புல் பறவை   மாடிப்படிக்கு அடியில் கேபிள் ஒயர்களை சேர்த்துக் கூடு கட்டி குஞ்சு பொரித்து, குஞ்சுக்கு உணவு அளிக்கிறது. காத்திருந்து  காத்திருந்து பதிவில்.
மாயவரம் வீடு.

 இங்கு  (மதுரையில்) கேபிள் ஒயர் உள்ள சுவற்றின் பொந்துக்குள் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி இருக்கும் படத்தைப் போட்டபோது எல்லோரும் பயந்தார்கள்.  இறைவன்  பறவைகள் கூடு கட்டும் போது   பயமில்லா வரத்தை அளித்து இருப்பார் போலும்.


கோவையில் அத்தை வீட்டில்  மொட்டைமாடியில் வேண்டாம் என்று தூக்கிப் போட்ட கட்டைக்கு அடியில் தூங்கு முஞ்சிமர இலைகள் விழுந்து கிடக்கும் குப்பையில்  குடைபிடித்து இருக்கும் காளான்கள்

நான் வித்தியாசமானவன் என்று தனித்திருக்கும் காளான்!
கற்றாழைப்பூ-
பூ மேல் நோக்கிப் பூக்காமல் கீழ் நோக்கிப் பூத்து இருக்கிறது  


கீரைக் கடைசல், வத்தக் குழம்பு  செய்த கல்சட்டி,
அரைக்கீரை, வத்தக்குழம்பை  இந்த சட்டியில் சுண்ட வைத்த சுண்டக் கறி அத்தனை ருசியாக இருக்கும். இப்போது கீழாநெல்லி முளைத்து கேட்பாரற்றுக் கிடக்கிறது மொட்டைமாடியில்.
ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டவை , இன்று மூலையில்!


  எங்கள் தோட்டத்தில் நந்தியாவட்டைச் செடியின்
 தண்டில் பச்சோந்தி .
நிறம் மாறுவதினால் இதனை அப்படித்தானே சொல்வார்கள்.


மாயவரம் வீட்டில் தொட்டிகளில்   நிறைய பூச்செடிகள் வைத்து இருந்தேன்,  அரளிச் செடி முதன்முதலில் பூத்த போது

மேய்ச்சல் நிலம் கண்ணுக்கு எட்டிய தூரம் இல்லை வெகு தூரம் போகணும் அண்ணே !  அதுதான் ஆட்டோ சவாரி!

"நம்ம ஊர் போல வருமா? "பாடலில்  இந்தக் குளியலைப் பற்றி வரி வருது சொல்லுங்களேன்

இது எதற்கு என்று தெரியும் தானே?

பழமையான கோயிலில்  கோபுரத்தில் இருந்த கதை சொல்லும் சிற்பங்கள் இந்தக் கதை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். குழந்தை யார் என்று?  எங்கள் பிளாக் புதிர் போல இருக்கா?

                                                               வாழ்க வளமுடன்!