வியாழன், 3 ஆகஸ்ட், 2023

ஆற்றுக்கு போலாம் வாங்க!



முதலில் நிற்பது எங்கள் கார்

கொள்ளிடக்கரையில்(வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழா 

முன்பு எழுதிய பதிவு இனிய நினைவுகளை திரும்பி பார்த்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இயற்கையைப் போற்றி வணங்குதல் நன்மைதரும். இதை
 உணர்ந்த மக்கள் காலம் காலமாய்ப் போற்றி 
வந்திருக்கிறார்கள். இயற்கையைக் கடவுளாக நினைத்த நம் முன்னோர்கள் ஆறு, குளம், ஏரி, கிணறு ஆகிய 
நீர்நிலைகளையும்  வணங்கினர். இப்போது நீர்வளங்களைத்
 தரும் ஆறு, குளம், ஏரி, கிணறு எல்லாம் வற்றி வருகின்றன.  
அதனால்  ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடுவதில் 
பழைய உற்சாகம் இல்லை என்றாலும் ஆடிப்பெருவிழா  
ஆங்காங்கு நடைபெற்று வருகிறது.    ஆடிப்பெருக்கு 
விழாவைக் கொள்ளிடக்கரையில் கொண்டாடியதைப் 
பார்த்து வந்து  எழுதிய பதிவு இது.

கொள்ளிடக்கரையில் (வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு
 விழாவைப்  பார்க்க போனோம். கொள்ளிடம் பாலம் விழா
 கோலம் பூண்டு இருந்தது. தென்னை ஓலை, குறுத்தோலை,
 கலர் பேப்பர்களால் அலங்காரம் என்று  பாலம், கார்கள், 
பஸ்கள், வேன்கள் என ஜே ஜே என்று  இருந்தது.





ஆற்றுக்குப் போகும் பாதையில் வரவேற்புக்கு வாழைமரத்தோரண வாயில்
கொள்ளிடக்கரை போகும் வழி எல்லாம் கடைகள்  இருந்தன,



அழகிய  பீங்கான் பொம்மைகள், ஜாடிகள், பூத்தட்டு ,சின்ன உரல்  என்று விற்பனைப் பொருட்கள்

போகும் வழி எங்கும் வேப்பமரம்- சித்ரான்னங்களை அங்கு வைத்து சாப்பிடுகிறார்கள்

                                                       குல்பி ஐஸ்

பஞ்சு மிட்டாய்

குழந்தைகளுக்குப் பலூன் 


ஆலமரத்தின் நிழலில் குடைராட்டினம் , தள்ளு வண்டியில் அன்னாசி பழக்கடை, கீழே பெரியவர்  கன்னத்தில் கை வைத்து வியாபாரம் ஆகவேண்டுமே ! கவலையில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து இருக்கிறார்.


பூஜைப் பொருட்கள், கறுப்பு, சிவப்புக்கயிறுகள்  விற்பனை


மாங்காய், தேங்காய்  பட்டாணி சுண்டல் , கொண்டைக்கடலை சுண்டல்

ஆற்றம் கரையோரம் வந்து விட்டோம். ஆற்று மண் எடுத்து காவேரி அம்மனாக பிடித்து வைத்து  காப்பரிசி, மாவிளக்கு, கனிவகைகள், காதோலை, கருவளையல், மஞ்சள் கயிறு, பூக்கள் வைத்து வழிபடுகிறார்கள்.


வழிபட்டபின் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறுகள் கட்டிக் கொள்கிறார்கள்.




படைத்து  ஆற்றில் விட்ட காசு  போன்ற பொருட்களை எடுக்கும் சிறுவர்கள் 
 

புனிதநீராடும் பக்தர்கள்,



தூரத்தில் கொள்ளிடம் ரயில் பாலம்

இன்னொரு புறம் -கொள்ளிடம்    சாலைப்போக்குவரத்துப்  பாலம்

ஆடிப்பெருக்கு விழாவை ரசித்துப்பார்க்கும் என் கணவர்


அந்தக்காலத்தில் ஆடிப்பெருக்கு சமயத்தில் நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படும் . மரங்கள் செடிகள் எல்லாம் பூத்துக்குலுங்கும்.  சிறியவர்கள், பெரியவர்கள் எல்லாம் மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ்வார்கள் . ஆற்றில், அருவியில் குளித்தால் நல்ல பசி எடுக்கும் . அப்போது கொண்டுவந்திருக்கும் கட்டுசாதம், சித்ரான்னங்களை குடும்பத்துடனும் நட்புகளுடனும் சாப்பிட்டுக் களித்து இருப்பர். ஆடி மாதம் நல்ல காற்று வீசி உடலுக்கும், உள்ளத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கும்.  

 ஆனால் இப்போது மரங்கள் குறைந்து மழை குறைந்து வளம் குன்றிக் காணப்படுகிறது.  ”ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்” என்பார்கள். இப்போது இருக்கும் கொஞ்சநஞ்ச மரங்களும் அசையவேமாட்டேன் என்கிறது . ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் காற்று வேகமாய் வீசும் என்பார்கள்.மீண்டும் அந்தக்காலம் வரவேண்டும். ஆறுகள் நிறைய வேண்டும்.


ஆடிப் பட்டம் தேடி விதை என்று மரங்களும் செடிகளும் நட்டு  வளப்படுத்த வேண்டும்.

’நீரின்றமையாது உலகு’ என்பது போல் அந்தக்காலத்தில் கனவுகளின் பலன்களிலும்  ஆறு, குளம் இடம் பெற்று இருக்கிறது அவற்றில் சில:-

 ‘ஆற்றில் ஓடி வருகின்ற நீரைஅதில் வெள்ளமாகக் கண்டாலும் நன்மை உண்டாகும்.”

“குளங்கள், கிணறுகள், ஆறுகள்  முதலியவை வற்றிப்போகுமாறு கனவு கண்டால் வறுமை வந்து சேரும் . 

“ஆறுபெருகிக் கரைகளை உடைத்துச்சென்றால் வெகுவிரைவில் நாட்டின் மீது பகைவர் படையெடுப்பர் ’

கடலைத் தாண்டுதல், ஆற்றைத் தாண்டுதல்  போல் கனவு கண்டால் நினைத்த காரியம் முடியும்

இப்படி அந்தக் காலத்தில் நீர் நிலைகளைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கை பின்னப்பட்டு இருந்தது..

அக்காலத்திலும் காவிரி நதி பாயும் சோழநாட்டில் கடும் பஞ்சம் வந்த போது திருநனிபள்ளி என்ற ஊர் பாலை நிலமாக் இருந்தது என்றும், அதை மருதநிலமாக மாற்றினார் திருஞானசம்பந்தர் என்றும் புராணங்கள் மூலம் அறிகிறோம்.  இந்தக்காலத்திலும் அப்படி மாற்றம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைப்பு வருகிறது.

ஆறு, குளங்களில் நீர் இல்லை இப்போது.  ஆடி பெருக்குவிழாவை  மக்கள் மழை வேண்டியும் குடும்ப நலம் வேண்டியும் வணங்கி வருகிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், காவேரி அன்னை! கருணை மழை பொழிய வேண்டும்! 



ஆற்றுக்குப் படைக்கவருபவர்களை ஆசீர்வாதம் செய்ய மினி வேனில் வந்த தச்சக்குள மாரியம்மன்.



எல்லோரும் மங்கலமாக இருக்கவும், ஊர் செழிக்கவும் மழை வேண்டியும்

 வேண்டிக் கொண்டோம்.


அனைவருக்கும் ஆடிப்பெருக்கு  பண்டிகை  வாழ்த்துகள்!

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------

33 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது பழைய பதிவை மீண்டும் தந்தமைக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது பழைய பதிவை மீண்டும் தந்தமைக்கு நன்றி சகோ.//

      உங்களுக்கு இது பிது பதிவுதான் ஜி.

      பழைய பதிவை நீங்கள் படிக்கவில்லை, உங்கள் பின்னூட்டம் இல்லை.

      இப்போது எங்கும் போகவில்லை, நினைவுகளுடன் பயணிக்க இந்த பதிவு.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  2. ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துகள்..//
      வாழ்த்துக்கு நன்றி.
      உங்களுக்கும் என் வாழ்த்துகள்.

      நீக்கு
  3. எத்தனை முறை படித்தாலும் திகட்டாத பதிவு..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை முறை படித்தாலும் திகட்டாத பதிவு..

      வாழ்க நலம்...//

      ஆமாம், நினைவுகளை அசை போடுவதில் சுகம்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. சிறப்பு
    ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //சிறப்பு
      ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்//

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்களுக்கும் ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துகள். உங்கள் அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
    .
    பதிவையும், படங்களையும் மிக அருமையாக இன்றைய தினத்திற்கு பொருத்தமாக அமையுமாறு எடுத்து வழங்கியதில் மிக்க மகிழ்வாக உள்ளது. படங்களை பார்க்கையில் மனதுக்குள் உற்சாக மகிழ்வு வருகிறது. நான் இதையெல்லாம் இவ்வளவு பெரிய விழாவாக அருகில் சென்று பார்த்ததில்லை. ஆனால், எங்கள் பிறந்த வீட்டருகில் ஒரு கால்வாய் அப்போது நல்ல நீர் வளத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு சென்று அருகிலிருக்கும் உறவினர் வீட்டு குழந்தைகளுடன் இந்தப் பண்டிகையை கொண்டாடியுள்ளோம்.

    திருமணமாகி புகுந்த வீடு வந்தபின்னர் தொலைக்காட்சி என்ற ஒன்று வந்து, அதை நாங்களும் வாங்கி பயன்படுத்திய பின்னர் செய்தி சேனல்களில் இதைப்பற்றி பார்த்துள்ளேன். மற்றபடி ஆண்டுதோறும் வீட்டில் கலவன் சாதங்கள் செய்து, பூஜை முடித்து இறைவனுக்கு நேவேத்தியமும் செய்த பின், அக்கம் பக்கம் வீடுகளுக்கு பிரசாதம் தருவேன். இப்போது இங்கு வந்த பின் அக்கம் பக்கம் வீட்டு மனிதர்கள் என்ற பிணைப்பும் ஏதுமில்லை.

    உங்கள் நேரடியான விவரிப்பும் படங்களும் பார்க்கையில் நன்றாக உள்ளது. உண்மைதான் அந்த கால நினைவுகளை அசை போட வைத்து விட்டது தங்கள் பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    உங்கள் முந்தைய பதிவுக்கு நான் இன்னமும் வரவில்லை. ஏதோ வேலைகளுடன் நேற்றெல்லாம் பொழுது போய் விட்டது. பதிவுகள் எதற்கும் வரவில்லை. பிறகு வந்து அதையும் படித்து விட்டு கருத்துக்கள் தருகிறேன். மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //பதிவு அருமை. தங்களுக்கும் ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துகள். உங்கள் அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி.//

      உங்கள் நல் வாழ்த்துக்கு நன்றி கமலா
      //பதிவையும், படங்களையும் மிக அருமையாக இன்றைய தினத்திற்கு பொருத்தமாக அமையுமாறு எடுத்து வழங்கியதில் மிக்க மகிழ்வாக உள்ளது. படங்களை பார்க்கையில் மனதுக்குள் உற்சாக மகிழ்வு வருகிறது.//
      உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது போல எனக்கும் மகிழ்ச்சி.என்னை உற்சாகப்படுத்தி கொள்ள பண்டிகை தின பதிவுகளை படித்து மகிழ்கிறேன்.

      //நான் இதையெல்லாம் இவ்வளவு பெரிய விழாவாக அருகில் சென்று பார்த்ததில்லை. ஆனால், எங்கள் பிறந்த வீட்டருகில் ஒரு கால்வாய் அப்போது நல்ல நீர் வளத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு சென்று அருகிலிருக்கும் உறவினர் வீட்டு குழந்தைகளுடன் இந்தப் பண்டிகையை கொண்டாடியுள்ளோம்.//

      சிறு வயதில் அக்கம் பக்கம் வீட்டாருடன் மகிழ்ச்சியாக நாங்களும் பண்டிகையை கொண்டாட நீர்நிலைகளுக்கு போய் அங்கு இருக்கும் மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடியதும் , சிறுவர்கள் சப்பரம் போல செய்த சிறு தேர் ஓட்டி விளையாடியதும் நினைவுகளில்.
      மயிலாடுதுறை வந்த பின் அது தொடர்ந்தது மகிழ்ச்சி.

      //ஆண்டுதோறும் வீட்டில் கலவன் சாதங்கள் செய்து, பூஜை முடித்து இறைவனுக்கு நேவேத்தியமும் செய்த பின், அக்கம் பக்கம் வீடுகளுக்கு பிரசாதம் தருவேன். இப்போது இங்கு வந்த பின் அக்கம் பக்கம் வீட்டு மனிதர்கள் என்ற பிணைப்பும் ஏதுமில்லை.//

      குழந்தைகள் இருந்த போது அப்படி நானும் செய்தேன், அக்கம் பக்கம் கொடுத்து விடுவேன் .இங்கு வந்த பின் நானும் நீங்கள் சொல்வது போல அக்கம், பக்கம் கொடுப்பது இல்லை. வீட்டு வேலைக்கு உதவும் அம்மாவுக்கு மட்டும் கொடுக்கிறேன்.

      //உங்கள் நேரடியான விவரிப்பும் படங்களும் பார்க்கையில் நன்றாக உள்ளது. உண்மைதான் அந்த கால நினைவுகளை அசை போட வைத்து விட்டது தங்கள் பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      இந்த நாளை நானும் பழைய படங்களை பார்த்து அசை போட்டு உங்களுடன் பகிர்ந்து மகிழ்ந்தேன்.

      //உங்கள் முந்தைய பதிவுக்கு நான் இன்னமும் வரவில்லை. ஏதோ வேலைகளுடன் நேற்றெல்லாம் பொழுது போய் விட்டது. பதிவுகள் எதற்கும் வரவில்லை. பிறகு வந்து அதையும் படித்து விட்டு கருத்துக்கள் தருகிறேன். மிக்க நன்றி சகோதரி.//

      நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம் பழைய பதிவை.
      தொடர் பதிவு நிறைய இருக்கிறது பகிர பூங்கா படங்கள்.

      வீட்டு வேலைகள் குழந்தைகள் இருக்கும் போது இருந்து கொண்டே தான் இருக்கும் சில நாள் அதிகமாக இருக்கும்.
      இத்தனைக்கும் இடையில் வந்து அனைத்தையும் ரசித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி கமலா.





      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      //சிறப்பு...

      படங்கள் அழகு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. பழைய பதிவையும் பார்த்து வந்தேன் கோமதிக்கா....அங்கு பீங்கான் ஜாடிகள் கடை பலூன் சுண்டல் எல்லாம் திருவிழாவை பறைசாற்றுகின்றன. அழகான விழா. ஆற்றில் நீர் நிறைந்து இருக்கு. ஆனால் ஆற்றில் பொருட்கள் மிதப்பதுதான் கஷ்டமாக இருக்கு

    இறைவன் படங்கள் அருமை.

    ஆடிப் பெருக்கு எனக்கும் எங்கள் ஊர் நினைவுகளைத் திரும்பி அசைபோட வைத்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //பழைய பதிவையும் பார்த்து வந்தேன் கோமதிக்கா....அங்கு பீங்கான் ஜாடிகள் கடை பலூன் சுண்டல் எல்லாம் திருவிழாவை பறைசாற்றுகின்றன. அழகான விழா. ஆற்றில் நீர் நிறைந்து இருக்கு. ஆனால் ஆற்றில் பொருட்கள் மிதப்பதுதான் கஷ்டமாக இருக்கு//

      பழைய பதிவை பார்த்து வந்தீர்களா? உங்கள் பின்னூட்டம் இல்லை. நிறைய பேர் படிக்கவில்லை அதனால் இந்த பதிவை பகிர்வோம் என்று பகிர்ந்தேன்.
      //இறைவன் படங்கள் அருமை.//

      ஆமாம் , நல்ல அலங்காரம் செய்து இருந்தார்கள்.

      //ஆடிப் பெருக்கு எனக்கும் எங்கள் ஊர் நினைவுகளைத் திரும்பி அசைபோட வைத்தது//

      உங்கள் ஊர் நினைவுகள் வந்து போனதா? மகிழ்ச்சி.



      நீக்கு
  8. இங்கு ஆடிக் காற்று அடித்தாலும், பறக்கும் அளவு அடிக்கலைதான். இங்கு மரங்கள் இருக்கும் பகுதியிலும், மற்ற இடங்களில் மண்ணை அடித்துத்தள்ளியது ஒரு சில தினங்கள்....நடைப்பயிற்சி செய்தப்ப. மற்றபடி குறைவுதான சௌகரியங்கள் நமக்குத் தேவைப்படுகிற்தே. நல்ல சாலைகள், பயண நேரம் குறைதல் என்று இல்லையாக்கா. மனதிற்கு வருத்தம்தான். அதுவும் வயல்கள்ம் மரங்கள் தோட்டங்கள் அழிவது, அதை அழிக்காமல் செய்து, அல்லது மீண்டும் மரங்கள் நட்டு வளர்த்தால் நல்லதே.

    வளர்ச்சியும் கூட அடிப்படை இயற்கையை அழிக்காமல் இருந்தால் நல்லது.

    இப்போதெல்லாம் ஆடிப்பெருக்கு சும்மா சாப்பாடுதான். ஆடிப்பெருக்கு என்றில்லை எல்லாப் பண்டிகைகளுமே சாப்பாட்டுடன் முடிகிறது ஏதோ சம்பிரதாயம் என்று. கொண்டாட்டங்கள் இல்லாமல்.....அதனால் சுவாரசியம் இல்லாமல் கடந்து செல்கிறது. நம்மைச் சுற்றி உள்ள நல்லதை எடுத்துக் கொண்டு பழைய நினைவுகளை மனதி அசை போட்டுக் கொண்டு கடந்து செல்ல வேண்டியதுதான் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கு ஆடிக் காற்று அடித்தாலும், பறக்கும் அளவு அடிக்கலைதான். இங்கு மரங்கள் இருக்கும் பகுதியிலும், மற்ற இடங்களில் மண்ணை அடித்துத்தள்ளியது ஒரு சில தினங்கள்.//
      அந்த மாதிரி காற்றும் அன்றும் இல்லை. இப்போதும் காற்று இல்லை.



      ..//.நடைப்பயிற்சி செய்தப்ப. மற்றபடி குறைவுதான சௌகரியங்கள் நமக்குத் தேவைப்படுகிற்தே. நல்ல சாலைகள், பயண நேரம் குறைதல் என்று இல்லையாக்கா. மனதிற்கு வருத்தம்தான். அதுவும் வயல்கள்ம் மரங்கள் தோட்டங்கள் அழிவது, அதை அழிக்காமல் செய்து, அல்லது மீண்டும் மரங்கள் நட்டு வளர்த்தால் நல்லதே.//

      மரங்களை, மலைகளை, தோட்டங்களை மற்றும் வயல்களை அழிக்கமல் சாலை விரிவாக்கம் நடக்காதுதான்.மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் சொல்வது போல மீண்டும் கிடைக்கும் இடங்களில் மரம் வளர்க்கலாம்.

      //வளர்ச்சியும் கூட அடிப்படை இயற்கையை அழிக்காமல் இருந்தால் நல்லது.//

      ஒரளவு இயற்கையை அழிக்காமல் செய்ய முயலாம்.

      //இப்போதெல்லாம் ஆடிப்பெருக்கு சும்மா சாப்பாடுதான். ஆடிப்பெருக்கு என்றில்லை எல்லாப் பண்டிகைகளுமே சாப்பாட்டுடன் முடிகிறது ஏதோ சம்பிரதாயம் என்று. கொண்டாட்டங்கள் இல்லாமல்.....அதனால் சுவாரசியம் இல்லாமல் கடந்து செல்கிறது. நம்மைச் சுற்றி உள்ள நல்லதை எடுத்துக் கொண்டு பழைய நினைவுகளை மனதி அசை போட்டுக் கொண்டு கடந்து செல்ல வேண்டியதுதான் என்று தோன்றுகிறது.//

      ஆமாம், உள்ளூர் விடுமுறை இருக்கும் மயிலாடுதுறையில், காலை முதல் ஆத்துக்கு போகிறவர்கள், போய் வந்தவர்கள் என்று சாலையில் கூட்டம் இருக்கும். முதல் நாள் மருதாணி வைத்து பூ கட்டி வைத்து விடுவார்கள். மாவிளக்கு மாவு இடித்தல், காப்பரிசி தயார் செய்வது என்று மக்கள் மிக உற்சாகமாக இருப்பார்கள் வீடுகள் தோறும் மாக்கோலம். ஆடிக்கு அழைத்து வந்த மாப்பிள்ளைக்கு விருந்து தயார் செய்வார்கள்.
      இப்போது பண்டிகைகள் அதுவும் ஒருநாளாக கடந்து போவது உண்மை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  9. பழைய பதிவு பார்த்த நினைவு இருக்கிறது.  அழகிய படங்கள் பழைய நினைவுகளை கூட்டி வருகின்றன.  அந்தக் காலம் போல இந்தக் காலம் இல்லை என்பது ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபணமாகி வருகிறது.  படத்தில் ஸாரைப் பார்த்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //பழைய பதிவு பார்த்த நினைவு இருக்கிறது. அழகிய படங்கள் பழைய நினைவுகளை கூட்டி வருகின்றன. //

      ஆமாம் ஸ்ரீராம். பழைய நினைவுகளை மூட்டு எடுக்க உதவுகிறது பழைய பதிவுகள்.
      //அந்தக் காலம் போல இந்தக் காலம் இல்லை என்பது ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபணமாகி வருகிறது. படத்தில் ஸாரைப் பார்த்தது மகிழ்ச்சி.//

      அந்தக்காலம் போல இந்தக்காலம் இல்லை என்றாலும் இப்போது இன்னும் கூட்டம் கோவில்களில் பக்தி வேறு மாதிரி இருக்கிறது.
      சாருடன் ஒவ்வொரு ஆடிப்பெருக்கும் ஒவ்வொரு கோவில் போய் வந்த நினைவுகள் வந்து போகிறது மனதில். பதிவுகளில் அவர்கள் இருக்கும் படங்களை பார்த்து மனதை ஆறுதல் படுத்தி கொள்கிறேன்.

      நீக்கு
  10. தஞ்சையில் குடி இருந்திருந்தாலும் ஆடிப்பெருக்கு போன்ற பண்டிகைகளை வீட்டோடு கொண்டாடிய வழக்கம்.  ஆறு, குளம் என்று நாடிச் சென்றதில்லை.  கலவை சாதம் வீட்டில் தயார் செய்து இறைவனுக்கு படைத்து உண்டு மகிழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தஞ்சையில் குடி இருந்திருந்தாலும் ஆடிப்பெருக்கு போன்ற பண்டிகைகளை வீட்டோடு கொண்டாடிய வழக்கம். ஆறு, குளம் என்று நாடிச் சென்றதில்லை. கலவை சாதம் வீட்டில் தயார் செய்து இறைவனுக்கு படைத்து உண்டு மகிழ்வோம்.//

      எங்கள் வீடுகளிலும் வீட்டில் தான் கொண்டாடுவோம். மயிலாடுதுறை போன பின் அக்கம் பக்கத்து வீட்டாருடன் ஆற்றுக்கு போவேன். அப்புறம் சார் கூட்டி போக ஆரம்பித்து விட்டார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. ஆடிப்பெருக்கு விழா படங்கள் பார்த்து மகிழ்ந்தேன்.

    35 வருடங்களுக்கு முன்பு மேட்டூரில் பார்த்த கொண்டாட்டங்கள் நினைவுக்கு வந்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //ஆடிப்பெருக்கு விழா படங்கள் பார்த்து மகிழ்ந்தேன்.//

      நன்றி.

      35 வருடங்களுக்கு முன்பு மேட்டூரில் பார்த்த கொண்டாட்டங்கள் நினைவுக்கு வந்தன//

      மேட்டூரில் நன்றாக இருக்கும் என்று என் மாமா பெண் அங்கு இருந்தவர் சொல்லி இருக்கிறார். 35 வருடங்களுக்கு முன் என்றால் நல்ல கொண்டாட்டாங்கள் இருந்து இருக்கும்.

      நீக்கு
  12. நெல்லையில் இருக்கும்போது ஆடி பதினெட்டில் கலவை சாதங்களுடன் (என் பெரியப்பா வீட்டில் இருந்தபோது அவ்வளவு விமர்சையாக அவர்கள் பண்ண மாட்டார்கள்), ஊர் இளவட்டங்களோடு தாமிரவருணிக்குச் சென்று விட்ட ஏக்கப் பெருமூச்சுகள் நினைவுக்கு வருகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையில் பெரியப்பா வீட்டில் இருக்கும் போது கலவை சாதம் எடுத்து கொண்டு தாமிரபரணிக்கு போவீர்களா? அங்கு போய் ஏன் ஏக்கப் பெருமூச்சு விட்டீர்கள்? மற்ற வீடுகளில் தடபுடலாக செய்வதை நண்பர்கள் சொல்வார்களா?

      ஆடிப்பெருக்கு சமயம் தாமிரபரணி ஆற்றில் கொண்டாட்டம் நன்றாக இருக்குமா? அந்த நினைவுகள் வந்து இருக்கும் இப்போது உங்களுக்கு இல்லையா?

      நீக்கு
    2. //ஏன் ஏக்கப் பெருமூச்சு விட்டீர்கள்?// - ஹாஹாஹா... அது பதின்ம வயது இல்லையா? இளவட்டங்கள் போல மாடர்னாக டிரெஸ் போட்டுக்கலையே மற்றும் அவர்களில் சிலரைப் பார்த்தும்தான் ஏக்கப் பெருமூச்சு... அந்த வயது இல்லையா?

      நீக்கு
  13. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

    இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே

    அது ஏன் ஏன் எனத் தெரியவில்லை. கொண்டாடும் மனநிலையே இல்லை. அப்புறம் பசங்களுக்கு எப்படி அந்த உற்சாகங்களைக் கடத்த முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

      இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே//

      ஆமாம், அந்த நாள் நினைவுகள் வந்து போகிறது எனக்கும்.

      //அது ஏன் ஏன் எனத் தெரியவில்லை. கொண்டாடும் மனநிலையே இல்லை. அப்புறம் பசங்களுக்கு எப்படி அந்த உற்சாகங்களைக் கடத்த முடியும்?//

      உங்களுக்கு என்னாச்சு? பண்டிகை கொண்டாடும் மனநிலையை இல்லை என்று சொல்கிறீர்கள்? பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விட்டதால் வேறு பொறுப்பும் கடமைகளும் மனதில் இருக்கிறதோ! இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உற்சாகமாக இருங்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. முன்பெல்லாம் தீபாவளினா, காலையில் எண்ணெய் குளியல், லேகியம், புது டிரெஸ் இறைவன் சன்னிதியில் இருக்கும், மாட்டிக்கொண்டு, வெடி வெடித்து, நண்பர்களுடன் வெளியே சென்று என்று ஒரே கொண்டாட்டம். பொங்கலும் அப்படித்தான். இப்போ என்னவோ எல்லாமே ஒரே நாளாகத்தான் எனக்குத் தெரிகிறது. பசங்க பக்கத்தில் இருக்கும் அவர்களது பாட்டி வீட்டுக்குச் செல்வார்கள், ஆசி வாங்க. நம்ம ஊர் நம்ம கிராமம் என்பது ஒரு தனி இன்பம்தான். (ஆனா அந்த கிராமங்களே தொலைக்காட்சிப் பெட்டிக்குள் அடங்கிவிட்டன என்பதும் நிஜம்தான்)

      நீக்கு
    3. முன்பெல்லாம் என்று பேசி விட்டாலே வயதானவர்கள் பட்டியலில் சேர்த்து விடுவார்கள், பார்த்து கொள்ளுங்கள்.

      //காலையில் எண்ணெய் குளியல், லேகியம், புது டிரெஸ் இறைவன் சன்னிதியில் இருக்கும், மாட்டிக்கொண்டு, வெடி வெடித்து, நண்பர்களுடன் வெளியே சென்று என்று ஒரே கொண்டாட்டம். பொங்கலும் அப்படித்தான். இப்போ என்னவோ எல்லாமே ஒரே நாளாகத்தான் எனக்குத் தெரிகிறது. //
      தீபாவளிக்கு கிடைக்கும் புது துணி, பட்சணம், வெடி என்று எதிர்ப்பார்ப்பு இருந்தது அப்போது மட்டும் தான் அது கிடைக்கும். இப்போது அப்படி இல்லை எல்லா நாளும் இனிப்புகள், வித விதமான உடைகள் கிடைக்கிறது, அதனால் அதில் ஆர்வம் குறைந்து விட்டது.

      கிராமங்கள், நகரங்கள் எல்லாம் தொலைகாட்சி பெட்டிக்குள்தான்.
      எல்லாவிழாக்களும் இப்போது தொலைக் காட்சியில் காட்டுகிறார்கள். மக்கள் அதிலே கண்டு களித்து கொள்கிறார்கள்.

      //பசங்க பக்கத்தில் இருக்கும் அவர்களது பாட்டி வீட்டுக்குச் செல்வார்கள்,//

      அது நல்ல விஷயம். அவர்கள் ஆசி அவர்களுக்கு எப்போதும் வேண்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  14. அருமையான படங்கள், வாசகங்கள் மற்றும் பகிர்வு. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  15. ஆடிப் பெருக்கு படங்கள் அழகு. கண்டு மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      பழைய பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி, நன்றி மாதேவி.

      நீக்கு