நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 மே, 2024

ஞாயிறு உலாக்கள்





 

இந்த மாதம்  அரிசோனா ஊர் முழுவதும்  மஞ்சள் பூ பூத்த மரங்களை பார்க்க முடிந்தது.  வானத்தின் நீலமும், வெண்மேகமும் மஞ்சள் பூக்களும் பார்க்கவே அழகு.

இந்த மரம் அரிசோனாவின் மாநில மரம். இதன் பேர் "பாலோ வெர்டே"  மார்ச்  பிற்பகுதியில்  பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் , மே வரை அழகாய் பூத்து குலுங்கும். 

வியாழன், 16 ஜூன், 2016

அன்பருடன் ராமர் வந்தார்

இன்று எங்கள் வீட்டுக்கு   எண்ணங்கள்  வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி . கீதா சாம்பசிவம் அவர்கள்  துணைவருடன் வந்து இருந்தார்கள்.

கண்ணனுக்காக
சாப்பிடலாம் வாங்க
பேசும் பொற்சித்திரமே
என் பயணங்களில்
ஆன்மீக பயணம்
எண்ணங்கள்

என்று ஆறு வலைதளங்களில்  சளைக்காமல் எழுதி அசத்துபவர்.
எல்லோரிடமும்  அன்புடன் உரிமையுடன் பேசும் நேசமானவர்.

முகநூலிலும் அசத்தி வருகிறார்.

இன்று அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வருவதாய் நேற்று சொன்னார்கள்.  நண்பர் ஸ்ரீராமிடம்   போன் நம்பர் வீட்டு முகவரி  வாங்கி வீட்டுக்கு வந்து விட்டார்கள்.  ஸ்ரீராமுக்குநன்றி.

இன்று காலை மீனாட்சி தரிசனம் முடித்து  எங்கள் இல்லத்திற்கு வந்தார்கள்.  அவர்களை முதன் முதலில் பார்த்தாலும் வலைத்தளம் மூலம் பல ஆண்டுகள் பழகியதால்  சந்திப்பு  சரளமாய்  இருந்தது.
அவர்கள் நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையிலும் எங்கள் வீட்டுக்கு வந்து சென்றது மகிழ்ச்சியாக இருந்தது.  திரு, சாம்பசிவம் சாரும்   எங்கள் சாரிடம் கல கல என்று நன்கு பேசினார்கள். எங்களை அவர்கள் வீட்டுக்கு வரும் படி அழைத்து சென்றார்கள்.

பதிவர்கள் சந்திப்பு அடிக்கடி நடந்து இருக்கிறது கீதா அவர்கள் வீட்டில்.   அவர்கள் வீட்டில்  சந்திப்பு நடந்த   நிகழ்வுகளை நணபர்கள் அவர் அவர் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதை   எல்லோரும் படித்து இருப்பீர்கள்.



இன்று ஸர்வ  ஏகாதசி. ராமநாமம் சொன்னால் நல்லது என்பார்கள்.  கீதா வீட்டுக்குள் வந்தவுடன் என்னிடம் ராமர் பட்டாபிஷேக  படம் என்று சொல்லி  கொடுத்தார்கள் , மிகவும் மகிழ்ச்சி  அடைந்தேன். என்னிடம் அந்த படம் இல்லை.  அவர்கள் வீட்டு பூஜை அறையில் ராமர் பட்டாபிஷேக படம் வைத்து இருப்பார்கள்,  ராமநவமி பதிவுகளில் பார்த்து இருக்கிறேன் பழமையான படம் மிக அழகாய் இருக்கும்.   நிறைய படங்களை  மாட்ட இடம் இல்லை இந்த வீட்டில்  சாமி  படங்கள் எல்லாம் பெட்டியில்  அடைத்து வைக்கப்பட்டு உள்ளது. பூஜை செய்யும் போது மானசீகமாய் அவற்றிற்கு பூஜை செய்து கொள்வேன்.  அப்படியும் ராமர் வந்து விட்டார் வீட்டுக்கு என்றால் நல்லது தானே!

//நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று  இரண்டு எழுத்தினால்.//
- கம்பராமாயணம்..

இனி நடப்பது எல்லாம் நன்மைதான் என்று  மனம் சொல்கிறது.





அவர்களின் பயணம் இனிதாக வேண்டும். 

                                                           வாழ்க வளமுடன்.

----------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 31 மார்ச், 2016

ஓவியரும் , ரசிகரும்

என் பதிவுகள் சிலவற்றுக்கு என் கணவர் ஓவியம் வரைந்து தந்தார். அதை பார்த்தவர்கள் பாராட்டினார்கள்.  அதுவும்   எங்கள் Blog  ஸ்ரீராம் , என் கணவர் வரையும் ஓவியத்தை பாராட்டி விட்டு அடுத்த பதிவில் சார் படம் இல்லை என்றால் ஏன் வரையவில்லை சார்? என்று கேட்பார். நான் சாரிடம் உங்கள் ஓவியத்தை காணோம் என்று உங்கள்  ரசிகர் ஸ்ரீராம் கேட்கிறார் என்று சொல்வது உண்டு.

எழுத்துப்பணி நிறைய இருந்ததால் அவர்களால் வரைந்து தர முடியவில்லை. சமீபத்தில் மதுரை வந்து இருந்த போது எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். ஸ்ரீராம் ஸ்ரீராம் மனைவி,  ஸ்ரீராம் அண்ணா  மூவரும் வந்து இருந்தார்கள்.  ஸ்ரீராம் வலைத்தளத்தின் மூலம்  பழக்கம், ஆனால் அவர் மனைவியும் அண்ணாவையும் அன்றுதான் பார்த்தேன் வெகு நாள் பழகியது போல் நன்றாக பேசினார்கள்.  மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அவர்கள் இரண்டு மூன்று இடங்களுக்கு செல்லவேண்டியது இருந்ததால் சந்திப்பு வெகு சீக்கீரத்தில் முடிந்து விட்டது. குறுகியகால இடைவெளியிலும் சாரை படம் வரைய சொல்லி வேண்டுகோள்விடுத்து சென்றார் ஸ்ரீராம்..அடுத்த பதிவுக்கு வரைந்து தருவதாய் சொல்லி இருக்கிறார்கள்.  ஸ்ரீராம் வேண்டுகோள்படி  . 


 ஸ்ரீராம்   எனக்கு அப்பாவின் இரண்டு புத்தங்களை   பரிசாய் அளித்தார்கள். ” இவனும் அவனும்” என்ற சிறுகதை தொகுப்பும்,   ”தூறல்கள் ” என்ற புத்தகமும் .
இன்னும் முழுதாய் படிக்கவில்லை  விருந்தினர் வருகை, உறவினர் மணிவிழா என்று நேரம் சரியாகி விட்டது.

ஸ்ரீராம் அப்பா அவர்களைப்பற்றி துளசிதரன் அவர்கள் எழுதிய பதிவு ஒன்றில் தெரிந்து கொண்டேன். கதை எழுதுவார்கள் என்றும் தன் மனைவி மேல் உள்ள பிரியத்தில் அவர்கள் பெயருடன் தன் பெயரை இணைத்து ஹேமலதா பாலசுப்ரமணியம்  என்ற பெயரில் எழுதி வந்தார்கள் என்று அறிந்து கொண்டேன்.

தூறல்கள் புத்தகத்திற்கு  திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்  அளித்துள்ள அணிந்துரையில் மேலும் தெரிந்து கொண்டேன். 

தூறல்களீல் எனக்கு பிடித்த , எல்லோருக்கும் பிடித்த வானத்தைப்பற்றி சொல்லி இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது.   படித்துப்பாருங்களேன். 

 டல் அடிக்கும் போதும் மனச்சோர்வின் போதும் வானத்தை நிமிர்ந்து பார்த்தால் போதும் என்கிறார். நமக்கு வானத்தைப் பார்ப்பது பிடிப்பது போல்    வானத்திற்கும் நம்மிடம் பேசப் பிடிக்கிறதாம், காத்து இருக்கிறதாம்.

எனக்கு சிறு வயதில் இருந்தே வானத்தைப் பார்ப்பது பிடிக்கும். மேகங்கள் செய்யும் ஜாலங்கள் அற்புதமாய் இருக்கும். நமக்கு தெரிந்த கற்பனை காட்சிகள் மற்றவர்களுக்கும் தெரிகிறதா என்று கேட்டு அவர்களுக்கும் அது தெரிந்தால் குழந்தையின் குதுகலம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் . காட்சி மட்டும் தான் நாம் கண்டோம்  பாலசுப்பிரமணியம் சார் அது பேசுவதையும் கேட்கச் சொல்கிறார்.  பேசுவதைவிடக் கேட்பது நல்லது என்கிறார். வானத்தை பார்ப்பதையும், வானம் பேசுவதையும்  கேட்டால் அலுப்பு போயே போச்சு.
அப்புறம் என்ன! உலகம் பிறந்தது   எனக்காக என்று பாடத் தொடங்கி விடுவோம்  பாலசுப்பிரமணியம் சார் சொல்வது போல்.

                 
      
                      

தூறல்கள் புத்தகம் விலை 40 ரூபாய்.

இவனும் அவனும் சிறுகதை தொகுப்புக்கு அணிந்துரை திரு. கர்ணன் அளித்து இருக்கிறார். ஜீவி சார்  புத்தகத்தில் (ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை) குறிப்பிட்டுள்ள  பல ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இருக்கிறார் திரு. ஹேமலதாபாலசுப்பிரமணியன் அவர்கள்.


//கும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.பா ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, -கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி. ஜானகிராமன் மற்றும் பல எழுத்தாளர்கள் வாழ்ந்த காலத்தில் , உடன் வாழ்ந்தவர். ஹேமலதா பாலசுப்பிரமணியன் அப்போது சிறுவயது.இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரார்  கு.ப. ரா. கு .ப. ரா மனைவியும் பாலசுப்பிரமணியம் மனைவி ஹேமலதாவும் நெருங்கிய சினேகிதிகள் //

என்று குறிப்பிடுகிறார். கர்ணன் அவர்கள்.

இவனும் அவனும் சிறுகதைத் தொகுப்பில் 25 கதைகள் இருக்கிறது. அதில் 12 ஆவது கதையான  .”நாலணா”  கதையில் ஆரம்பத்தில் வரும் வாக்கியம் இது. மாதக்கடைசியைப் பற்றி சொல்கிறார் :- //அப்படி ஒன்றும் கடைசியுமல்ல . தேதி  இருபதுதான். ஆனாலும் என்ன? ஏழுதேதிவரை கையும், பையும் குலுங்கும். அதன் பின் மனம் மட்டும் குலுங்கும் -இது ஒரு வாழக்கை// என்று .//

கலைவாணர் முதல்தேதி படத்தில் பாடுவாரே தேதி  ஒன்னிலே இருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், தேதி 21லிருந்து திண்டாட்டம், திண்டாட்டம். பாடல் நினைவுக்கு வருது.

13 ஆவது கதை - எனக்குப் பிடிச்ச பூ !  என்ற கதையில் 

இரு பெண்கள்  பேசிக் கொள்வது.

உங்களுக்கு என்ன பூ பிடிக்கும்?”

“எனக்கு ரோஜா பிடிக்கும், மல்லிகை பிடிக்கும் ரெண்டும் ரொம்ப கிராக்கி கெடைக்கிறதே இல்லை.”

உங்களுக்கு?
வாழைப்பூ

சமைக்கிறதுக்குக் கேக்கலே...:

நானும் அதைச் சொல்லலே... புடிக்கிறது எதுவா இருந்தா என்ன? கெடைக்கிறது அது இல்லியே ... கெடைக்கிற்தையே புடிக்கிறதாக்கிக்கிறதுதான் நல்லது, இல்லியா! எனக்கு கிடைக்கிறது வாழைப்பூதான்.!”
ஏன் வாழைப்பூவும் நல்லது தானே - உடம்புக்கு ரொம்ப நல்லதும்பாங்க!:

வாழைப்பூவை கவனிச்சிருக்கீங்களா கீழே மட்டும்தான் விரிஞ்சிருக்கும் ....மேலே முகம் கூப்பி குறுகி  இருக்கும். மத்த பூ மாதிரி அதுக்குச் சிரிக்கவே தெரியாது //  
இப்படி பேசி முடித்தவுடன்  சிரிக்கிறார்கள். இருவரும் உரக்கச் சிரிக்கிறார்கள் மனம் லேசாகி விட்டதாய்ச் சொல்லிக் கொள்கிறார்கள்.

 நிறைய பெண்கள் தங்களுக்குப் பிடிக்காத வாழ்க்கையை பிடித்ததாய்  ஆக்கி க்கொண்டு வாழ்வதைச் சொல்கிறது கதை.

 படித்த இரண்டு கதையும் எனக்குப் பிடித்து இருக்கிறது. மற்ற கதைகளை நிதானமாய் ப்படிக்க வேண்டும்.

திருமதி ஹேமலதா பாலசுப்பிரமணியன் அவர்கள் பெயரில்  அறப்பணிச்சேவைகள்  எப்படி உருவானது அதனால் யார் யார் பயனடைகிறார்கள் என்று பாருங்கள்.

 ஸ்ரீராமின் தாயார் தன் சேமிப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். ஸ்ரீராமின் அப்பா தன் ஓய்வூதியத்தில்  50 சதவீதம் கொடுக்கிறார்,  அது ஒரு பெரிய செயல் நல்ல செயல். ஸ்ரீராம் அப்பா வணக்கத்துக்குரியவர். மருத்துவத்துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவரது படைப்புகள் 1950 முதல் 1980 வரை பல்வேறு பத்திரிக்கைகளில் வந்து இருக்கிறதாம்.அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டதுதான்  ”இவனும் அவனும் ” சிறுகதைத்  தொகுப்பு. 


இவனும் அவனும்  - புத்தகம் கிடைக்குமிடம்  மணிவாசகர் நூலகம். விலை 90 ரூபாய்.

நல்ல பெற்றோர்கள் பெற்ற மகன் நல்லவைகளை பதிவிடுகிறார் . ஒவ்வொரு சனிக்கிழமையும் பாஸிட்டிவ் செய்திகளை தொகுத்து வழங்குவார்.


                                                                      *      *      *

பல பதிவுகளுக்கு என் கணவர் வரைந்த ஓவியங்கள்

பாலீதீன் மறுசுழற்சி



அபிராமி பட்டர் கதை





கோவிலில் லட்சதீபம் ஏற்றுதல் 
இலட்சதீபம்


கழுகுமலை வெட்டுவான் கோவில்




கழுகுமலை

ஜல்லிகட்டு



மாட்டுப் பொங்கல்



மின்சாரமே ! மின்சாரமே!!



பொங்கலோ பொங்கல் -- பாகம் - 2




டிக் டிக் கடிகாரம் அன்பை கூறும் கடிகாரம்

இளமையின் ரகசியம்  - தீராக்கற்றல்


ஆஹா உருளை !



சிக்குபுக்கு ரயிலே ரயிலே!


KUMKUM school

home

ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதால்  என் கணவரின் படங்கள் இங்கு பகிர பட்டு இருக்கிறது. ஸ்ரீராமுக்கு நன்றி.

                                                                   வாழ்க வளமுடன்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

மூத்தோர் சொல் அமுதம்

வாழ்க்கையில் நமக்கு உயர்ந்த குறிக்கோள் இருக்க வேண்டும். அவ்வாறு உயர்ந்த குறிக்கோள்களை அடையப் பாடுபடும் பொழுது அவ் உயர்ந்த இலக்குகளை அடைய முடிய வில்லை என்றாலும் முயற்சியாவது செய்த திருப்தி கிடைக்கும். பெரியவர்கள் எப்போதும் எல்லோருக்கும் பயன் அளிக்கும் சொற்களையே சொல்லி வந்து இருக்கிறார்கள்

//சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்.//


மூத்தோர் சொல் அமுதம் என்பார்கள். அவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் ஏதாவது காரண காரியம் இருக்கும். நாம் முழுக்க கடைப்பிடிக்கிறோமா இல்லையோ கொஞ்சமாவது கடைப்பிடிக்கலாம்.

சேது அம்மாள் என்ற எங்கள் குடும்ப நண்பர், தான் எழுதி வைத்த குறிப்புகளை என்னிடம் கொடுத்தார்கள். அதில் அவர்கள் நல்ல விஷயங்களை எழுதி இருக்கிறார்கள். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



1. ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு திருக்குறள் உரையுடன் இருத்தல் வேண்டும்.

2. ஒரு நாளைக்கு ஐந்து குறட்பாக்களையாவது படித்து உணர்ந்து நடத்தல் வேண்டும்.

3. கூடியவரை பிறருக்கு உதவும் வகையில் வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளல் வேண்டும்

4.வாழ்வை இனியாதாக்குவது அன்பு. கஷ்டங்களிலிருந்து மீளச் செய்வது அன்பு. குடும்ப வாழ்க்கையை செம்மைப் படுத்துவது அன்பு.

5. ஊக்கமானது இடையறாது உள்ளத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இடையறாது செடி வளர்வது போன்று ஊக்கமுடையவரது உள்ளம் வளர்கிறது.

கூட்டு வழி பாட்டின் நன்மைகள்:
------------------------------


கூட்டு வழிபாட்டின் போது எல்லோருடைய மனமும் ஒன்றி விடுவதால் மனதில் சலனங்கள் - தீய எண்ணங்கள் தோன்றுவதில்லை. கூட்டு வழிபாட்டின் மூலம் இறைவனை வேண்டுதல் செய்கையில் கருணை மழை பொழியக் காத்திருக்கிறான் இறைவன்.

கூட்டு வழிபாட்டின் மூலம் பக்தி செய்ய இறைவன் திருவருள் பெற்ற பரமஞானிகளின் பாடல்கள் துணை செய்யும்.

நடைமுறை வாழ்வில் கூட்டுறவின் மூலம் செயல் பட்டால் நிச்சயம் பலன் உண்டு.
தனி மரம் மழையைக் கொண்டு வருவதில்லை. மழைக்குத தேவையானது பல மரங்கள், அடர்ந்த காடுகள்.

கூட்டு வழிபாடு செய்ய இறைவன் திருவுள்ளம் இரங்கும்.

வேண்டுதல்:
----------

1. எல்லாம் வல்ல பேரா இயற்கை பெருந்தெயவமே! உன்னையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். உலக உயிரினம் வளமுடன் வாழவும் மனித குலம் உடன் பிறப்பாக எண்ணி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவும் அருள்புரிவாய் இறைவா!

2. வானமழை பொழியவும் பயிர்கள் செழிக்கவும் உயிர்க்கூட்டம் பசியாறவும் அறநெறிப்பட்ட உலகமாய் வையகம் வாழ அருள் தருவாய் இறைவா!

3. பொய், பொறாமை, புறங்கூறல்கள், களவு, காமம், சூது, வாது, வஞ்சனை நீக்கி அன்பு, அறிவு, அருள், அறம், உண்மை, உதவி, உயர்வு, ஒற்றுமை, பகுத்துண்ணும் பண்பு, எடுத்துத்தரும் இயல்பு, கனிமொழி உரைக்கும் உணர்வு, சான்றோரைப் போற்றும் சால்பு, தெய்வத்தைப் பராவும் கடமை உணர்வு இவையாவும் பெற்றவர்களாய் வாழ வழி செய்வாய் இறைவா!

4. நிலவினிடத்திலே உள்ள அருளையும் (குளிர்ச்சி) உலகங்காக்கும் உத்தமப் பண்பையும் வளரும் தன்மையையும் நான் பெற அருள்புரிவாய் இறைவா!

5.கதிரவனிடத்திலே உள்ள பேரொளியையும் கதிர் வீச்சையும் பேராற்றலையும் நான் பெற அருள் புரிவாய் இறைவா!

6.நட்சத்திர மண்டலத்திலே உள்ள எல்லா சக்திகளையும் நான் பெற அருள் புரிவாய் இறைவா!

7.வானவெளியில் நடமாடும் சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், யோகிகள் அவர்களின் அருளாசியை நான் பெற அருள்புரிவாய் இறைவா!


8. வழிபடு கடவுளாம் தாய் தந்தையர், மூதாதையர் யாவரின் அருளாசியை நான் பெற அருள்புரிவாய் இறைவா!

9.உலகம் நன்றாக இருக்க அருள் புரிவாய் இறைவா!

10 நானும் என் குடும்பத்தாரும் என் உறவினரும் என் நட்பினரும் என்னை நாடியவரும், என்னால் நாடப் பட்டவரும் என்னைச் சார்ந்திருக்கும் பலவகை உயரினங்களும் நலமாக இருக்க அருள் புரிவாய் இறைவா!

அவர்கள் எழுதி வைத்த தினப்படி குறிப்புகள்:
---------------------------
காலை 4.30 துயிலெழுதல்- இறைஉணர்வு- நீதிநூல்படித்தல்
காலைக்கடன்- நடத்தல்- உடற்பயிற்சி- உடல் உழைப்பு- செய்தித்தாள் படித்தல்
ரேடியோ கேட்டல்- வீட்டுவேலை- இறைவழிபாடு- காலை உணவு.

9-1 பணி

மாலை 1-2 இறை உண்ர்வு - மதிய உணவு (முதியவர்கள் சிறிது ஓய்வு)
2-5 பணி
3- 6.30 நடத்தல்- (ஓடுதல்) - உடற்பயிற்சி- விளையாட்டு=- உடல் உழைப்பு- பொழுது போக்கு.
6.30- 8.30 படிப்பு- ரேடியோ கேட்டல் டி.வி பார்த்தல்- இறை வழிபாடு.
8.30. 9 இரவு உணவு.
9- 10 குடும்பக்கணக்கு- அளவளாவுதல் ரேடியோ- அடுத்தநாள் திட்டம்.
அறநூல் படித்தல்- இறையுணர்வு -துயில் கொளல்.

விடுமுறை நாட்களை எப்படி செலவு செய்வது என்பதை எழுதி வைத்து இருக்கிறார்கள்.

விடுமுறை நாட்கள்:
-------------------

கோயில் செல்லுதல், குடும்ப கூட்டு வழிபாடு- வீட்டு வேலைகள் அவசியமான அலுவலக வேலை- குழந்தைகள் படிப்பு- விளையாட்டு- முழு ஒய்வு. பொழுதுபோக்கு- அடுத்த் வாரத்திட்டம் -துறைத்தேர்வு -மேல்படிப்பு - திட்டமிடுதல் -வீடுகட்டுதல்- சிக்கனம் - சேமிப்பு- நல்ல முதலீடு.

அவர்கள் எந்த வீட்டு விஷேசங்களுக்கு வந்தாலும் தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்த்து மகிழச்சியோடு செய்வார்கள். அவர்கள் வீட்டுக்கு போனாலும் நமக்கு உணவு செய்து கொடுத்து, வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய் கனிகள் கொடுத்து மகிழவார்கள்.
எங்கள் மன்றத்தில் ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி நடந்தால், நடத்தும் ஆசிரியருக்கு உணவு தன் கைப்பட சமைத்து எடுத்து வந்து தானே பக்கத்தில் இருந்து தாயின் பரிவுடன் பரிமாறுவார்கள்.
அவர் ஒருத்தருக்கு மட்டும் உணவு கொண்டு வரமாட்டார்கள்- கூட நாலு பேர் உண்ணும் அளவு தான் கொண்டு வருவார்கள். எப்போதும் யாருக்கும் உதவி செய்ய காத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் வயது 80க்கு மேல். வேலை செய்ய அலுப்பு ஏற்படும் போதெல்லாம் அவர்களை நினைத்துக் கொள்வேன் சுறு சுறுப்பு வந்து விடும்.

அவர்கள் சொல்லும் அறிவுரை தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்தால் மருத்துவ செலவைத் தவிர்க்கலாம்.

எல்லா பக்கங்களிலிருந்தும் தூய்மையான எண்ணங்கள் நம்மை வந்து அடையட்டும் என்று நாம் தினம் வேண்ட வேண்டும் என்பார்கள். நாமும் அந்த மாதிரி வேண்டுவோம்.