நான் சமையல் குறிப்பு எழுதியதே இல்லை. சமையல் அட்டகாசம் தளம் வைத்து வித விதமான சமையல் செய்து அசத்தும்
சகோதரி ஜலீலா அவர்கள் சமையல் போட்டி அறிவித்து ஒருமாதம் ஆகி விட்டது. என்னையும் அழைத்து இருந்தார்கள்
நான் ஊருக்கு போய் விட்டு வந்ததால் அவர்கள் அழைப்பை தாமதமாகத்தான் பார்த்தேன். நான் வலைச்சரத்தில் எனக்கு பிடித்த பதிவுகளை குறிப்பிடும் போது அவர்களுக்கு அவர்கள் சமையலை புகழ்ந்து சமையல் ராணி என்று பட்டம் கொடுத்தேன். அவர்கள் சமைப்பது போல் எல்லாம் என்னிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். நான் இப்போது அனுப்பி இருக்கும்
சமையல் குறிப்பை பார்த்து விட்டு இனி மேல் சமையல் குறிப்பு கேட்க மாட்டார்கள் என நினைக்கிறேன். முதலில் சமையல் குறிப்புக்கு அளவு சரியாக சொல்லத்தெரியவேண்டும். என் அம்மா கண் அளவு சொல்லிக் கொடுத்தார்கள் . என் மாமியார் டம்ளர் அளவு சொல்லிக் கொடுத்தார்கள். ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர். கலந்த சாதம் செய்யும் போது ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு.தண்ணீர் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
முன்பெல்லாம் ஆண்களுக்கு சமைப்பது கஷ்டம் இப்போது எல்லாம் எளிதாக எல்லாம் கிடைக்கிறது. என் கணவர் கல்யாணம் ஆவதுக்கு முன் சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள். கணேஷ் ராம் 777 என்ற திடீர் தயாரிப்புக்கள்
வாங்கி சமைப்பார்களாம், ஈகிள் சாம்பார் பொடி, புளியோதரை பொடி வாங்கி சமைத்து இருக்கிறார்களாம். அவர்கள் எல்லாம் நன்றாக சமைப்பார்கள் இருந்தாலும் திருமணம் ஆனவுடன் சமைப்பதையே விட்டு விட்டார்கள். நான் ஊருக்கு போனால் பெண், மகன் எல்லாம் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு செய்து கொடுத்தது இல்லை.
திருமணம் ஆகாத ஆண்கள் தாங்களே சமைத்துக் கொள்ள எளிதாக இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. சமைக்க வேண்டும் நினைக்கும் ஆண்கள் எப்படியும் சாதம் குக்கரில் வைக்க தெரிந்து இருக்கும்.
அவர்களுக்கு அம்மா அல்லது உடன் பிறந்தவர்கள், சாம்பார் பொடி, புளிக்காச்சல் , பருப்புப் பொடி, மற்றும் பொடி வகைகளை எப்படியும் செய்து கொடுத்து இருப்பார்கள். எதுவும் சமைக்க பிடிக்கவில்லை என்றால் சாதம் வைத்து பொடிகளை போட்டு, நெய்யோ, நல்லெண்ணெயோ விட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அவர்கள் கொடுத்த பொடிவகைகள் தீர்ந்து விட்டால் எளிதாக அவர்களே வறுத்து பொடி செய்து கொள்ளலாம். அப்படி ஒரு பொடி வகையை சொல்கிறேன்.
தனியா(ய்) இருப்பவர்களுக்கு உடலை நன்கு வைத்துக் கொள்ள:
தனியாவில் உடல் செல்களை பாதுகாக்கும் ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளது.
தனியா பொடி:
----------------------
தேவையானவை
உளுத்தம்பருப்பு -அரைக்கரண்டி,
கடலைப்பருப்பு -அரைக்கரண்டி
தனியா - 1 கரண்டி(வரக்கொத்துமல்லி )
மிளகு -கால்ஸ்பூன்.
வற்றல் மிளகாய் - 3 { காரம் வேண்டும் என்றால் மேலும் ஒன்றோ, இரண்டோ சேர்த்துக் கொள்ளலாம்.)
உப்பு- அரை ஸ்பூன்(தேவைக்கேற்ப)
பெருங்காயம் -சிறிது அளவு. (கால்ஸ்பூன்) கட்டி வறுத்து போட்டால் வாசம் கம கம என்று இருக்கும் ஆண்களுக்கு அதை உடைத்து போட நேரம் இல்லை என்றால் பெருங்காயப் பொடி கால் ஸ்பூன் போட்டுக் கொள்ளலாம்.
மேலே உள்ள் சாமான்கள் எல்லாவற்றையும் வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு சிறிது சிவப்பாய் (கருகாமல்)
ஆறியவுடன் பொடி செய்து கொண்டு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
தொட்டுக் கொள்ள உருளை காரக்கறி செய்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு காரக்கறி
அரிசி வைக்கும் பாத்திரத்திற்கு மேலயே வேறு பாத்திரத்தை வைத்து உருளையை நன்கு கழுவி விட்டு அதில் போட்டு வேக வைத்து எடுத்து தோலை உரித்து நான்காக வெட்டிக் கொண்டு, கடுகு,, உளுந்தபருப்பு தாளித்து உருளையை போட்டு, கொஞ்சம் மிளகாய் தூள், கொஞ்சம், மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு போட்டு பிரட்டி, சிறு தீயில் அவ்அப்போது கிளறி விட்டால் முறு , முறு உருளை மசாலா கறி ரெடி. (நினைவு இருக்கட்டும் சிறு தீயில்)
சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் உருளை கிழங்கு என்றால் பிடிக்கும் தானே!
![]() |
| (என் கணவர் வரைந்த படம்) |
வெங்காயமும் போட்டு செய்யலாம், வெங்காயம் இல்லாமல் இருந்தால் நல்ல முறு முறு என்று இருக்கும்.
தக்காளி சாதம்
தக்காளி சாதம் எளிதாக செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி அரை கப்.
தக்காளி பழம் 2 பெரியது.
பெரிய வெங்காயம் 1
பச்சை பிளகாய் 2
கடுகு கால்ஸ்பூன்
உளுந்தபருப்பு - அரை ஸ்பூன்.
சாம்பார் பொடி அரைஸ்பூன்.
ஒரு கப் சாதத்திற்கு இரண்டு கப் தண்ணீர் சிறிது நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு விட்டால் உதிரி உதிரியாக சாதம் ஒன்னோடு ஒன்று ஒட்டாமல் வரும்.
சாதத்தை நல்ல உதிரி உதிரியாக வேகவைத்து ஒரு தட்டில் போட்டு ஆறவைத்துக் கொள்ளவேண்டு.வாணலியில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடு, உளுந்து தாளித்துக் கொள்ளலாம், சிறிது பட்டை, சோம்பு , கிராம்பு
வேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம், பிடிக்காதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டாம். பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி கொண்டு (சிறிது உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கும்) பின் தக்காளியை போட்டு வதக்கி கொண்டு சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கி பின் ஆறவைத்த சாதத்தைப் போட்டு கிளறி இறக்கினால் தக்காளி சாதம் ரெடி. அதன் மேல் பச்சை கொத்துமல்லியை நன்கு கழுவி சிறிதாக வெட்டி போட்டு அலங்கரிக்கலாம். சிறிது நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட்டால் நல்லசுவையாக
இருக்கும் தக்காளி சாதம்.
இதற்கு தொட்டுக் கொள்ள உருளைக் கறியும், உருளை சிப்ஸ், வடகம், வத்தல் எல்லாம் நன்றாக இருக்கும்.
இன்னொரு உருளை சமையல் குறிப்பு:
உருளைக்கிழங்கை நன்கு கழுவிக் கொண்டு பொடி பொடியாக தோலோடு வெட்டிக்கொண்டு அதை வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து மஞ்சள் பொடி, மிளகாய் தூள், உப்பு போட்டு சிறு தீயில் வதக்கினால் அருமையான உருளை பொரியல் கிடைக்கும்.
மற்றுமொரு சமையல் குறிப்பு:
ஆப் பாயில் உருளை
உருளையை கொஞ்சம் கனமாய் வட்டமாய் வெட்டிக் கொண்டு அதை எண்ணெயில் பொரித்து எடுத்து மிளகுத்தூள், உப்புத்தூள் போட்டும் செய்து சாப்பிடலாம். (ஆப் பாயில் உருளை என்று சொல்வார்கள்) என் அப்பா ,என் கணவர், என் குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
இந்த சமையல் குறிப்புகளை ஜலீலாவிற்கு பேச்சிலர் சமையலுக்கு அனுப்பி இருக்கிறேன்.
சமையல் குறிப்புகள் கொடுத்தது இல்லை. இந்த சமையல் குறிப்பு பேச்சிலருக்கு தெரிந்த சமையலாககூட இருக்கலாம்.

