திங்கள், 16 பிப்ரவரி, 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


என் கணவர் வரைந்த ஓவியம். (கணினி ஓவியம்)


சிவராத்திரி  பூஜை நல்லபடியாக  நிறைவு பெற்றது.




அவன் அருளாலே  அவன் தாள் வணங்கி   என்று மாணிக்க வாசகர் சொன்னது போல  அவன் அருளால் வீட்டில் எளிமையாக சிவராத்திரி பூஜையை செய்து வழி பட்டேன்.

நேற்று என் தோழி உமையாளுடன் 10. 30 வரை தேவாரம், திருவாசகம் படித்தேன்.  பிறகு 12 . 30ம்வரை விழித்து இருக்க வேண்டும் என்று நினைத்து ஜோதி தொலைக்காட்சியில் பல  கோயில்களில் அபிஷேக காட்சிகள் முதல் காலம் பூஜை பார்த்தேன்.  இரண்டு நாட்களாய் உடம்பு சரியில்லாம்ல் சிவராத்திரியாக விழித்து இருந்த என்னை சிவன் ராத்திரி அன்று நிம்மதியாக தூங்க வைத்து விட்டார் இறைவன்.


மகன் வீட்டுத் தோட்டத்தில் பூத்த மலர்கள் பூஜைக்கு

மகன் வீட்டில் நடந்த  சிவராத்திரி பூஜை படங்கள்.
மருமகள் அனுப்பிய படம் 




பேரன் பூஜை அப்போ  பாடிய போது எடுத்த காணொளி சிறிய காணொளிதான்.  அவன் பாடிய போது  சிவன் மண்டபத்திலிருந்து பூ கீழே விழுந்ததை பார்க்க எனக்கு ஆனந்தமாக இருந்தது.  



மகன் செய்த மண்டபம் அதில் நடுவில் சுழலும் நடராஜா, கடைசியில் அவன் அப்பா வரைந்த கணினி  ஓவிய காணொளி வரும்.


சிவராத்திரி வழிபாடு என்று  2022 ஆம் ஆண்டு போட்ட பதிவு 

என் மாமா, என் கணவர் மற்றும் கணவரின் அண்ணா சிவ பூஜை செய்த படங்கள் இருக்கும்.


இந்த வருடம்  என் கணவரின் அண்ணாவீட்டில்  நாலு கால பூஜை படங்கள்




திருக்கேதீச்சரம் திருக்கோயில்  


இந்த பதிவில் எழுதிய சிறிய  பகுதி :-  இதை படித்து விட்டு முழு 

பதிவையும்  படித்து பாருங்களேன்.


கேதீச்சரநாதனை கெளரிநாதர், கேதீச்சரர், மகா துவட்டாபுரநாதர், ஈழக்கைலாயநாதர், தென்கயிலாயநாதர், மத்யசேதுநிவசர், நாகநாதர், இராஜராஜேவரர், நித்தியமணவாளர், பெருந்துறை ஈசன், எனப் பல பெயரால் அழைக்கப்படுகிறார் இத்தலத்தின் புண்ணியதீர்த்தமாகிய பாலாவி ஆறு பற்றி சம்பந்தர் சுவாமிகள் அருளிய பதிகத்தில் “மாதோட்டத்து அத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே” என்றும், சுந்தரர் அருளிய திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ”பாலாவியின் கரைமேல்” என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. ”பன்வினை போக்கும் பாலாவி” என்றும், ”பரம்பரன் உருவாய் உற்ற பாலாவி”என்றும் திருக்கேதீச்சரப்புராணம் கூறுகிறது. 


நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!



சிவராத்திரி சிறப்பு பதிவாக திருக்கச்சூர்  பதிவு போட்டு இருந்தேன் அதிலிருந்து ஒரு சிறு பகுதி :-    




சுந்தரர் திருக்கழுக்குன்றம் சென்று விட்டுக் காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருக்கச்சூர் வந்தார். நீண்ட தூரம் வந்ததால் களைப்பாலும் பசியாலும் வாடினார்.  அவர் பசியைப் போக்க இறைவர்  முதியவர் வேடத்தில் வந்து சுந்தரரிடம் 'இங்கேயே சிறிது நேரம் அமர்ந்து இருங்கள்! இதோ உணவுடன் வருகிறேன்' என்று சொல்லி திருவோடு ஏந்தி வீட்டு வீடாகச் சென்று உணவு பெற்று சுந்தரருக்கும் அவருடன் வந்த அடியார்களுக்கும் அமுது படைத்தார்.

முழுதும் படித்து பாருங்கள்.



  மாணிக்க வாசகர் பிறந்த ஊர் 


ஸ்வாமி சன்னதி  உள் நுழைவாயிலில்,  குருந்த மரம் அடியில் மாணிக்க வாசகருக்கு  தீட்சை கொடுக்கும் காட்சி சித்தரிக்கப் பட்டு இருக்கிறது.
சிவன் இக் கோவிலில் சுயம்பு ரூபமாய் இருக்கிறார். அவரது தலையில் பசுவின் கால்தடம் இருக்குமாம்.


மாணிக்க வாசகர் திருவாதவூரார் என்று அழைக்கபடும் காரணமான கோயில்.
படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

தண்டபாணி தேசிகர் பாடிய பாடல்.

இறைவன் அடியாருக்கு இறங்கி வருவான் தாயாய் என்பதற்கு  சான்று.

இறைவன் நந்தனார்  செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொடுத்த காட்சியை கண்டு நந்தனார்   பரவசபட்டு பாடிய பாடல்

என்னப்பன் அல்லவா எந்தாயும் அல்லவா !


முன்பு சிவன் ராத்திரிக்கு  கோயில் போய் வணங்கி வந்து பதிவுகள் போடுவேன், இப்போது  வீட்டிலிருந்து ஜோதி தொலைக்காட்சியில் பல கோயில்களை தரிசனம் செய்கிறேன். அதனால் பழைய பதிவை பகிர்ந்து இருக்கிறேன்.  .


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!



-------------------------------------------------------------------------------------------------------------------------

21 கருத்துகள்:

  1. முதல் படமே மாமா வரைந்த படமே பதிவின் ஹைலைட்!

    கோமதிக்கா.. இறைவன் எளிமையான முறையைத்தான் விரும்புகிறார்.

    இரண்டு நாட்களாய் உடம்பு சரியில்லாமல் சிவராத்திரியாக விழித்து இருந்த என்னை சிவன் ராத்திரி அன்று நிம்மதியாக தூங்க வைத்து விட்டார் இறைவன்.//

    இறைவனுக்குத் தெரியும் கோமதிக்கா. அவர் பார்த்துக் கொள்வார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //முதல் படமே மாமா வரைந்த படமே பதிவின் ஹைலைட்!//

      நன்றி கீதா.

      //கோமதிக்கா.. இறைவன் எளிமையான முறையைத்தான் விரும்புகிறார்.

      இரண்டு நாட்களாய் உடம்பு சரியில்லாமல் சிவராத்திரியாக விழித்து இருந்த என்னை சிவன் ராத்திரி அன்று நிம்மதியாக தூங்க வைத்து விட்டார் இறைவன்.

      இறைவனுக்குத் தெரியும் கோமதிக்கா. அவர் பார்த்துக் கொள்வார்!//
      இரண்டு நாட்களாக இரவு தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்பட்டேன் கீதா, புத்தகம் படித்தேன், பக்தி பாடல்,சினிமா பாடல் , என்று கேட்டேன் மணி தான் ஓடியதே தவிர தூக்கம் வரவில்லை . வழக்கம் போல 4 மணிக்கு எழுந்து விட்டேன். (பகலில் தூங்க மாட்டேன்.) அந்த அசதி போல சிவன் ராத்திரிக்கு விழித்து இருக்க வேண்டும் நினைத்தும் முடியாமல் தூங்கி விட்டேன்.
      நீங்கள் சொல்வது போல பார்த்து கொண்டார் என்னை தூங்க வைத்து.
      நன்றி கீதா


      நீக்கு
  2. மகன் வீட்டு சிவராத்திரி பூஜை படங்கள் சிறப்பு, கோமதிக்கா.

    சிவன் மண்டபத்திலிருந்து பூ கீழே விழுந்ததை பார்க்க எனக்கு ஆனந்தமாக இருந்தது. //

    ஓ அப்படி விழுந்தால் ஆசிவழங்கியது போல அர்த்தமோ அக்கா? கவின் அசத்தல். நல்ல சூழலில் வளர்கிறார்.

    மகன் செய்த மண்டபம் வாவ்! 3டி முறையில் செய்திருக்கிறார் இல்லையா? கணினியில்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் வீட்டு சிவராத்திரி பூஜை படங்கள் சிறப்பு, கோமதிக்கா.//

      நன்றி கீதா


      //ஓ அப்படி விழுந்தால் ஆசிவழங்கியது போல அர்த்தமோ அக்கா? கவின் அசத்தல். நல்ல சூழலில் வளர்கிறார்.//

      ஆமாம் கீதா , பூ விழுந்ததை பார்த்து மகன் , மருமகளிடம் கவினை இறைவன் ஆசீர்வாதம் செய்து விட்டார் என்று தான் சொன்னேன்.


      //மகன் செய்த மண்டபம் வாவ்! 3டி முறையில் செய்திருக்கிறார் இல்லையா? கணினியில்?//
      மகன் செய்த மண்டபம் சுழலும் நடராஜரை பாராட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  3. திருக்கேதீச்சுரம், திருக்கச்சூருக்குச் செல்லும் சுந்தரருக்கு இறைவன் அமுது படைத்த புராணமும் தெரிந்தது கோமதிக்கா. திருக்கச்சூர் சென்னைக்கு அருகில்தான் இருக்கிறது போல. அறிந்ததில்லை இதுவரை.

    நந்தனார் படம் பார்த்திருக்கிறேன். இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். இப்போதும் கேட்டுக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருக்கேதீச்சுரம், திருக்கச்சூருக்குச் செல்லும் சுந்தரருக்கு இறைவன் அமுது படைத்த புராணமும் தெரிந்தது கோமதிக்கா. திருக்கச்சூர் சென்னைக்கு அருகில்தான் இருக்கிறது போல. அறிந்ததில்லை இதுவரை.//

      ஆமாம் கீதா , அடுத்த முறை சென்னை போகும் போது போய் வாங்க நன்றாக இருக்கும்.

      //நந்தனார் படம் பார்த்திருக்கிறேன். இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். இப்போதும் கேட்டுக் கொண்டேன்.//

      ஆமாம், இப்போது சின்ன குழந்தைகள் கூட பாடுகிறார்கள்.அவர்களுக்கும் பிடித்து இருக்கிறது.
      உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  4. சிவராத்திரி சிறப்பு பகிர்வு நன்று. நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //சிவராத்திரி சிறப்பு பகிர்வு நன்று. நல்லதே நடக்கட்டும்.//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு
  5. ஸார் வரைந்த ஓவியம் நன்றாக இருக்கிறது. 
     
    தூக்கம் விழிக்காமல் இருந்தது நல்லதுதான் என்று தோன்றியது.  ஏற்கனவே உடம்பு சரியில்லை என்று சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //ஸார் வரைந்த ஓவியம் நன்றாக இருக்கிறது. //

      நன்றி ஸ்ரீராம்.

      https://mathysblog.blogspot.com/2017/07/blog-post_23.html

      அருள்மிகு சாந்தநாயகி உடனுறை அருள்மிகு புனுகீசுவரர் திருக்கோயில்
      படத்தில் பகிர்ந்து இருக்கிறேன் ஸ்ரீராம்.

      //பழைய பதிவில் திறமையான அந்தக் கைகள் வரைந்த படத்தையும் என் கமெண்ட்டையும் மறுபடி பார்த்து வந்தேன்!//
      சாரை பாராட்டி இருக்கிறீர்கள்.
      அந்த பதிவை முடிந்தால் பாருங்கள். கங்கை நீர் சொட்டும், விளக்கு தீபம் ஆடும் .

      //தூக்கம் விழிக்காமல் இருந்தது நல்லதுதான் என்று தோன்றியது. ஏற்கனவே உடம்பு சரியில்லை என்று சொன்னீர்கள்.//

      ஆமாம், இப்போது சரியாகி விட்டது, இருந்தாலும் தூக்கம் சரியாக இருக்க மாட்டேன் என்கிறது. இன்று மூன்று மணிக்கு எழுந்து விட்டேன் அவ்வளவுதான் தூக்கம். சில நாட்கள் இப்படித்தான்.

      நீக்கு
    2. பழைய பதிவுகளை பார்த்து கருத்து அங்கு சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. நான் எப்போதுமே விழித்ததில்லை.  ரொம்பப் பெருமையா சொல்லிக்கறேன்னு நினைக்க வேண்டாம்..!  வருத்தமாதான் சொல்றேன்!  இதெல்லாம் முதலிலிருந்தே வந்திருந்தால்தான் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் எப்போதுமே விழித்ததில்லை. ரொம்பப் பெருமையா சொல்லிக்கறேன்னு நினைக்க வேண்டாம்..! வருத்தமாதான் சொல்றேன்! இதெல்லாம் முதலிலிருந்தே வந்திருந்தால்தான் உண்டு!//

      நான் சிறு வயதில் விழித்து இருக்கிறேன்.
      சார் தான் விழித்து இருப்பார்கள். முதல் காலம் பூஜை வீட்டில் செய்வார்கள் இரண்டாம் கால பூஜைக்கு கோயிலுக்கு போவோம் அது முடிந்தவுடன் என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டு அவர்கள் மீதி கால பூஜைகளை பார்த்தபின் காலையில் தான் வருவார்கள்.
      என் மாமனார் நாலுகாலமும் வீட்டில் சிவபூஜை செய்வார்கள் அதற்கு கண்விழித்து பழக்கம் சாருக்கு.

      நீக்கு
  7. காணொளியில் சட்டென பூ கீழே விழுந்ததும் ஒரு கணம் சிலிர்த்து விட்டது!   மகன் செய்த மண்டபத்தில் சுழலும் நடராஜரை தரிசித்தேன், ரசித்தேன்.  ஸார் வரைந்த ஓவியமும் சட்டென வந்து சென்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளியில் சட்டென பூ கீழே விழுந்ததும் ஒரு கணம் சிலிர்த்து விட்டது!//
      ஆமாம். கோவிலில் சில நேரம் சுவாமியை பார்த்து கொண்டு அவருடன் மனதால் பேசி கொண்டு இருக்கும் போது பூ விழுந்தால் மனம் சிலிர்த்து போகும். மகன் , மருமகளிடம் சொன்னேன் கவினை ஆசீர்வாதம் செய்து விட்டார் என்று.

      //மகன் செய்த மண்டபத்தில் சுழலும் நடராஜரை தரிசித்தேன், ரசித்தேன். ஸார் வரைந்த ஓவியமும் சட்டென வந்து சென்றது.//

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. பூஜைப் படங்களை அருமை..  என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பாடலை ரசித்தேன்.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பூஜைப் படங்களை அருமை.. என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பாடலை ரசித்தேன். //
      எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. சிவராத்திரி பதிவு நன்று.

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் அப்பன் அல்லவா... நானும் அவ்வப்போது முணுமுணுக்கும் பாடல்.

    ந்ந்தனார் படம் பலமுறை, பசங்களுடன் வீட்டில் பார்த்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //சிவராத்திரி பதிவு நன்று.

      எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் அப்பன் அல்லவா... நானும் அவ்வப்போது முணுமுணுக்கும் பாடல்.

      ந்ந்தனார் படம் பலமுறை, பசங்களுடன் வீட்டில் பார்த்திருக்கிறோம்.//

      இந்த பாட்டு பிடிக்கும் என்று முன்பு ஒரு தடவை சொல்லி இருந்தீர்கள்.
      நந்தனார் படம் பல ஆண்டுகள் ஆனாலும் நல்ல தெளிவாக இருக்கிறது பார்க்க .

      உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத்தமிழன்

      நீக்கு
  10. ​3 D படங்கள் அழகு. நானும் உங்களைப் போலத்தான். பல நாட்கள் இரவில் தூக்கம் வராமல் விழித்திருப்பேன், பகலில் தூங்குவேன். ஆனால் சிவராத்திரி அன்று நல்ல உறக்கம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்

      //3 D படங்கள் அழகு. //

      நன்றி.

      //நானும் உங்களைப் போலத்தான். பல நாட்கள் இரவில் தூக்கம் வராமல் விழித்திருப்பேன், பகலில் தூங்குவேன். ஆனால் சிவராத்திரி அன்று நல்ல உறக்கம்.//

      நான் இரவு முழுவதும் விழித்து இருந்தாலும் பகலில் தூங்க மாட்டேன்.
      காலை 4 அல்லது 4.30 மணிக்கு எழுந்து கொள்ளும் பழக்கம் எப்போதும்.
      தூங்க கூடாது என்று சொல்லும் போது தூக்கம் வருவது இயல்பு.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு