செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

மறை பொருளான தெய்வமே நான்




ரோஜா பதிவை படிக்க வரும் அனைவருக்கும்  மலர் கொத்து கொடுத்து  வரவேற்கிறேன்.

ரோஜா எந்த நிறந்தில் இருந்தாலும் அழகானதுதான், அதன் மணம் எந்த அளவில் இருந்தாலும் அது இறைவனின் அன்பை ஏந்தி வருவது.
- அன்னை அரவிந்தர் 

மலர்களில் ராஜா  என்று பாராட்டப்படும் மனம் கவர்ந்த  ரோஜா பூக்களின் படங்கள் இந்த பதிவில். மலரே மலரே நீயார் ?  என்று மலரிடம் கேட்டதற்கு மலர்  சொல்லும் பதிலும் இருக்கிறது பதிவில்.




.

//வெள்ளை , இளஞ்சிவப்பு, நற்சிவப்பு , மஞ்சள், பச்சை  நிறங்களில் பூக்கும் .இவை குளிர்ச்சியை தரும். மனக்கலக்கத்தை  போக்கும்.
தனது படைப்பின் மீது கடவுள்  வத்த அன்பை காட்டுவது  ரோஜாவின் மென்மை. சில ரோஜாக்கள் மிகப்பெரியவையாய் , வனப்புள்ளதாய்,   மகிழ்ச்சி
அளிப்பதாய்  இருக்கின்றன.//
  -அரவிந்த  அன்னையின்  மந்திர் மலர்கள் 


மனிதர்களை நேசிக்க முடிந்தால்  தெய்வத்தின் கருணையில் 
சிலிர்ப்பெய்த முடியும்.


இளஞ்சிவப்பு ரோஜா  வலிமையைத்  தரும்


சிவப்பு ரோஜா மனிதனின்  காமத்தை, கோபத்தை , ஆசையை  விருப்பத்தை தெய்வீக் அன்பாக மாற்றி விடும்.

இன்றைய துன்பம் நேற்றைய தவறுகளின் விளைவு  என்று எண்ணுவோம்.துன்பத்தின் உச்சியில் இருக்கும் போது நம் மீது நமக்கு நம்பிக்கை போய் விடுகிறது. ஆன்மீகத்தை நாடுகிறது. இறைவன் மேல் பாரத்தை போடுகிறது. வாழ்வில் கர்மவினைகள் நீங்கி விட்டால் நாம் புது மனிதரவோம். நம் வாழ்வும் புது வாழ்க்கை ஆகி விடும். 

























மலர்கள் எல்லாம் எப்படி இருக்கிறது? நன்றாக இருக்கிறதா?



 எனக்கு மலர்கள் பிடிக்கும் என்பதால்( உங்களுக்கு  மட்டும் தான் பிடிக்குமா  எங்களுக்கும் தான் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது ) 
என்  மகன் அவன் வீட்டில் பூத்த ரோஜா மலர்கள் படம் அனுப்பினான், மகன், மருமகளின் நட்பு எனக்கும் நட்பு அவர்கள் அவர்கள் வீட்டில் பூத்த ரோஜா மலர்கள் படம் அனுப்பி வைப்பார்கள் எனக்கு. அந்த மலர்கள் படமும்  இதில் இடம்பெற்று இருக்கிறது. எங்கள் குடியிருப்பு  வளாகத்தில் கீழ் வீட்டில் வைத்து இருக்கும்   பூத்தொட்டியில் பூத்த ரோஜா மலர்களும் இடம் பெற்று இருக்கிறது.

நான் காலையில்  தினம் ஸ்டேட்டஸ்  "வானம் "படம் போட்டு வாழ்க வையகம்!, வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் மலர்கள் படம் போட்டு  "வாழ்க வளமுடன்" என்று போட்டு வருகிறேன். தினம்  நான் எடுத்த வானம், மலைகள், சூரியன் என இயற்கை காட்சிகளும்,  நான் எடுத்த மலர்கள்  படமும்  போட்டு வருகிறேன். 

காலை மலர்களை பார்த்தால் எல்லோருக்கும்  மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். என்பதால் அதை போடுவேன்.


வேதாத்திரி அவர்களின் தத்துவத்தின் படி  "மலரின் பயணம்" என்பது மனிதன் தன் அறிவை மலரச்செய்து, குறைகளை நீக்கி , தற்சோதனை மூலம் தெய்வீக நிலையை  அடையும்பரிணாமப் பயணத்தை  குறிக்கிறது. இது தவம் மற்றும் தவறை உணர்ந்து திருந்துதல் மூலம் மன அமைதி, உறுதி  மற்றும் மேன்மையை எய்தும் வாழ்க்கை மலர்ச்சியாகும்.

பயணத்தின் நோக்கம்:- மனிதன் அகத்தாய்வு மற்றும் தவம் மூலம் மனதை தூயமை படுத்தி , அறிவின் முழுமையை அடைவதே மலரின் பயணத்தின் இலக்கு.

தற்சோதனை :-  இந்த பயணம் தவறுகளை களைந்து நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளும்  ஒரு தொடர் செயல் முறை.

தவம்:- தவம் தரும் மன அமைதியால் குறைகளை அறிந்து அவற்றை அகற்றி வாழ்க்கை மலர்ச்சியடைய வழி வகுக்கிறது.


தெய்வீக  வாழ்க்கை :- இந்த ஞான பயணத்தின் முடிவில் , மனிதன் தன் குறைகளை நீக்கி இயற்கையோடு இயைந்த் தெய்வீக வாழ்க்கையை வாழ முடியும்.


மலரிடம் நீயார்? என்று கேட்டதற்கு அது சொல்லும்  பதிலும் இதில் இருக்கிறது. இந்த பாடலை போட்டு தவம் செய்யலாம் மலர் தவம்.

மலரே மலரே என்று மலரிடம் கேட்கும் கேள்விக்கு  மறை பொருளான தெய்வம் என்று சொல்லும் மலர். நேரம் இருக்கும் போது கேட்டு பாருங்கள்.


மலர் வழியே விளங்கும்  மறைபொருள்


மலரே மலரே  நீயார் உன் 
மணமும் அழகும் வண்ணமும் என் 
பலவாறான நினைவகற்றிப் 
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்.      ( மலரே ) 

இயற்கை அழகை  ரசிக்கும் உன் 
எண்ணம் மிகமிக உயர்ந்துளது 
செயற்கை மயக்கம் தெளிந்தறிவு 
செம்மை பெற என் கதை சொல்வேன்   ( மலரே )

மலரே நீயார் எனக் கேட்டாய் 
மறை  பொருளான தெய்வமே நான் 
சிலரே அறிவார் இவ்வுண்மை
சிந்தனை செய்ய வல்லவர்கள்                 ( மலரே )

பரம அணுக்கள் பல கோடி 
பண்பாய்க்  கூடி ஒரு கூத்து 
கரம் கோத்தாடும் நாடகத்தோர் 
கட்டம் எந்தத் தோற்றமும் ஆம்               ( மலரே )

இறைவன் என்ற ஆதிபரம் 

எடுத்த பலப்பல கோடி உரு 
நிறைந்த பெரிய மண்டலமே 
நெடிய விரிந்த  பேரண்டம்                          ( மலரே )

பெரிய இயக்க மண்டலமே 
 பிரபஞ்சம் எனும் மேடையிலே 
அரிய உருவ அழகோடு 
ஆடுகிறேன் நான்  அவன்கதையாய்        ( மலரே )

ஆதியின் அசைவே பரம அணு 
அவை  ஒவ்வோர் அளவில் கூட 
வேதம் கூறும்  ஐம்பூதம் 
விண்முதல்  மண்வரை வேறில்லை       ( மலரே )

ஒவ்வொரு பொருளும் பரமுதலாய் 
அவ்வுருவறையில் வந்த கதை 
செவ்விய சிறு சொல் பரிணாமம் 
சிறப்பை உணர்வாய் நீயுமதே                     ( மலரே )

என்னை கண்ணால் பார்மலராய் 
எனதமாய்ப் புணர அணுக்கூட்டே
முன்னம் பரமே அணுவாச்சு 
மூலம் சிவமாம் பிரம்மமதே                        ( மலரே )


உருவம் மலர்தான் உட்பொருளை 
உணர விண்ணெனும் நுண்ணணுவே 
அருவம் ஆதி  அசைந்த நிலை 
அணுகுதல் அகண்ட பேரண்டம்                 ( மலரே )


உன்னை யாரென்றேன் மலரே 
உணர்த்தி விட்டாய் உண்மைப்பொருள்

பின்னை இந்தப் பேரறிவில் 
பிறழாதிருப்பேன் விழிப்புடனே                 ( மலரே )


ஆறறிவாக வாழ்  மனிதர் 
அதற்கு ஏற்பப் பொருத்தமுள 
பேறு  உண்மைப் பொருளுணர்தல் 
பிறவிப் பயனைப் பெற்றுவிட்டேன்        ( மலரே )



- வேதாத்திரி மகரிஷி

பாடல் வரிகளை 

வேதாத்திரியம்  வாழ்க வளமுடன் யோகா தளத்திலிருந்து எடுத்து போட்டு இருக்கிறேன். அவர்களுக்கு நன்றி.

இந்த பாடலை போட்டு மலர் தவம் செய்வோம். கொஞ்ச நாட்களாக செய்யவில்லை. இன்று செய்தேன். மலர் பதிவு ஏற்படுத்திய உணர்வு.
அடிக்கடி செய்ய வேண்டும் இனி. மன கலக்கம், மனச்சோர்வு  போக்கும் தவம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக