திங்கள், 7 ஆகஸ்ட், 2023

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில்( மலேசியா)


பத்துமலை  ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில்


                        
சிங்கப்பூர் சுற்றுலா பதிவு பின்னால் வரும்.  

ஆடி கிருத்திகை 9 ஆம் தேதி  என்பதால் பத்துமலை கோவில்  தொடர் பதிவு செய்யலாம் என்று  நினைத்து இருக்கிறேன், முருகன் அருள வேண்டும். 


 மலேசியாவில் புகழ் பெற்ற  குகை கோவில். 
இந்த குக்கைக் கோயில் சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகுள் அமைந்து இருக்கிறது.


மலேசியாத் தலை நகர் கோலாம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே , கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது.


பத்துமலை பெயர் காரணம் ;- இந்த குகை கொயிலின் உள்ளே  பல குகைகள் உள்ளன. இந்த சுண்ணாம்பு குன்றுகளுக்கு அருகில் உள்ள  பத்து ஆற்றின் பெயரிலிருந்து  பத்துமலை என்ற பெயர் உருவாகி உள்ளது.


 கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய திரு. கே தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு  கட்டப்பட்டது இந்த மலைக்கோவில். அப்போது ஒற்றையடிப் பாதைபோல் இருக்குமாம், அந்த பாதையில்  சென்றுதான் முருகபெருமானை வணங்கி வந்து இருக்கிறார்கள்.இப்போது 272 படிகள் உள்ளது.

இந்த கோவில் போனது  முருகன் அருள்தான். மகன் அவனின் திருமணநாளுக்கு (ஜூன் 7 ம் தேதி) பத்துமலை முருகன் கோவில் போக வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான். எனக்கு தெரியாது, எனக்கு    "இனிய அதிர்ச்சி" (சர்ஃப்ரைஸ்) கொடுத்தான்.  


மலேஷியா   குடியேற்ற  அனுமதி  ஆபீஸ் போய் சிறிது நேரம் அமர்ந்து இருந்தோம். நான் முருகனை வணங்கி கொண்டு அமர்ந்து இருந்தேன், எனக்கு மலேசியா விஷா கிடைக்குமா என்று சந்தேகம் இருந்தது.( அவர்களுக்கு விஷா  இருந்தது எனக்கு தான் இல்லை)  அரைமணி நேரம் கழித்து  190 வெள்ளி கட்ட சொன்னார்கள் கட்டியவுடன் விஷா கொடுத்து விட்டார்கள்.  (Visa ON Arrival) உள்ளே வந்தபின் கொடுக்கும் விஷா கொடுத்தார்கள்.  வெகு துரிதமாக விஷா கொடுத்து விட்டார்கள்.

 "அம்மா இனி நீங்கள் முருகன் கோவில் பார்க்கலாம்" என்றான் மகன். ஒருபக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் எப்படி ஏறுவது என்ற  பயம் ! எனக்கு இடுப்புவலி, கால்வலி இருந்தது படிகள் ஏற வேண்டுமே!என்று கவலை பட்டேன்.

"அதெல்லாம் ஏறி விடலாம்" என்று தைரியம் கொடுத்தார்கள், மகன், மருமகள், பேரன் மற்றும் உறவினர்கள். அதில் குறிப்பாக என் கணவரின் தம்பி மகளின் மாமியார் "அதெல்லாம் ஏறி விடுவீர்கள் மதினி கிடைக்கும் சந்தர்ப்பத்தை  நழுவ விடாதீர்கள்!  வலி மாத்திரை வைத்து கொள்ளுங்கள், மெது மெதுவாக ஏறி விடுங்கள்" என்றார்கள். 
முருகனை தரிசனம் செய்து வந்தபின் அவர்களுக்கு நன்றி சொன்னேன்.


140 அடி கொண்ட முருகன் சிலை நம்மை வரவேற்கிறது. இந்த முருகன் சிலையை உருவாக்க மூன்று ஆண்டுகள்  ஆனதாம்.
2006 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம்  சிலை திறப்புவிழா நடந்து இருக்கிறது.

கீழே தெரியும் இந்த கோவிலில்  ஆறுபடை முருகனுக்கும் சன்னதிகள் மற்றும்  , பெரிய விநாயகர்  இருக்கிறார்.



கோவில் முன் வாசலில் ஒருபக்கம் கோவிலின் விவரம், மறு பக்கம் கோவில் திறக்கும் நேரம்  அறிவிப்பு  உள்ளது.


முருகனின் ஆட்டுகிடா வாகனம் நின்றது வாசல் முன்


புறாக்களுக்கு தனி பதிவு போடுகிறேன் வரும் அன்பர்கள் புறாக்களுக்கு உணவு  போடுகிறார்கள். பேரன் புறாக்களுடன் விளையாடினான். சட்டென்று பறந்து மீன்டும் சட்டென்று அமருவது பார்க்க அழகு.

நான்கு  வரிசையாக படிகள்   உள்ளன,  தை பூசம் சமயம் காவடிகள் அதிகம்  என்பதால் நடு பகுதியில் காவடி தூக்கி செல்பவர்களும்  சும்மா நடந்து போகிறவர்கள் மற்ற இரு பக்கமும் போய் வருவார்களாம். சீனர்கள் காவடி எடுப்பார்களாம் அதிகமாய். தைபூச விழா மிக அருமையாக நடக்குமாம்.தைபூச காவடி விழாவை. தொலைகாட்சியில் நீங்கள் எல்லோரும்  பார்த்து இருப்பீர்கள். 

 மகன்  அரிசோனா மகா கணபதி கோவிலுக்கு தைபூச விழாவிற்கு  முருகனுக்கு திருவாச்சி செய்து கொடுத்தான், அப்போது மலேசியா பத்துமலை முருகனை வணங்க வேண்டும் என்று நினைத்தானாம்.  அதன் படி முருகனை பார்த்து விட்டோம்.

நான் முதன் முதலில்  மகன் வீட்டு கொலுவிற்கு பொம்மைகள் வாங்கி கொடுத்த போது  பத்துமலை முருகன் வாங்கி கொடுத்தேன்.  இப்போது நேரில் பார்த்து விட்டோம்.



படி ஏறும் இடத்தில் உள்ள  முன் பகுதியில்  முருகனின் அழகிய கோலங்கள்


உள் பக்கம் இருந்து எடுத்த படம்

மதியம் 3.30க்கு வந்தோம்  கோவிலுக்கு,  வெயில் இல்லை மேக மூட்டமாக இருந்தது 

கோரானா காலத்தில் போட்டது

முருகனை கும்பிட்டு ஏற ஆரம்பித்தோம்

இருமருங்கிலும் அழகான மயில் சிலை

மேலே இருக்கும் கடைக்கு தண்ணீர் பாட்டில்  கொண்டு போகிறார் விற்பனைக்கு.  நம்மால் சும்மா ஏற முடியவில்லை,  அவர்  தலைசுமையோடு ஏறுகிறார். அவருக்கும் தேக பலத்தை கொடுக்க பிரார்த்தனை செய்து கொண்டேன்.

செருப்பு போட்டு கொண்டு போகிறார்கள் எல்லோரும் பூட்ஸ் போட்டு கொண்டு எப்படி ஏறுவது என்று தயங்கினேன்,  இங்கு  எல்லோரும் போட்டுக் கொண்டுதான் போவார்கள் அப்படியே நீங்களும் போங்கள் என்றார்கள். 

கீழே இறங்கி கொண்டு இருந்தவரிடம் தண்ணீர் பாட்டிலை பிடிங்கி கொண்டு விட்டது.
திறக்கும் போது கீழே கொட்டி விட்டது அதை குடிக்கிறது
இன்னும் யாரிடம் பிடுங்கலாம் என்று பார்க்கிறது

கைபிடியில் இடை இடையே இப்படி அழகான குமிழ் இருக்கும் அதில் ராஜா போல அமர்ந்து பார்க்கிறது  குரங்கு. எல்லா குரங்களும் அதில்தான் அமர்கிறது. இங்கு உள்ள  குரங்குகள் பேர் "மாக்காவ்" .

கைபையை என் மருமகள் தூக்கி கொண்டு முன்னால் போய் விட்டாள், பேரன் காமிராவை வாங்கி கொண்டான்.நான் அலை பேசியை மட்டும் வைத்து கொண்டு  சிறிது நேரம் நிற்கும் போது படங்கள் எடுத்தேன்.

காமிராவில் எடுக்கும் படங்கள் அவன் எடுத்தான். அவன் எடுத்த படங்கள் இன்னொரு பதிவில். இந்த பதிவில் நான் எடுத்த படங்களும், மகன் எடுத்த படங்களும்  இடம்பெறுகிறது.


பேரன் "ஆச்சி அங்கு குரங்கு உட்கார்ந்து இருக்கிறது பார்த்து போக வேண்டும்,  கீழே காலி பாட்டில் கிடக்கிறது அதில் காலை வைத்து விடாதீர்கள்" என்று கவனமாக ஏற சொல்லி பின்னாலேயே வந்தான். மகன் முன்னால் எங்களை   படம் எடுத்து கொண்டும் என்னை உற்சாகப்படுத்தியும்  ஏற வைத்தான்.  

கைபிடியை பிடித்து கொண்டு மெதுவாக ஏறினேன்
முன்பு நிறைய மலை கோவில்கள் , படி ஏறி இருக்கிறேன் இப்போது முடியவில்லை.
படி முடியும் போது மகன்  அவ்வளவுதான் வந்து விட்டோம் என்று  மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான்.

அவ்வளவுதான் ஏறி விட்டீர்கள்!
பேரன் "ஆச்சி கவனமாக பார்த்து வாங்க"மேலே இருந்து தண்ணீர் சொட்டுகிறது, அதனால் கீழே எல்லாம் தண்ணீர் என்று எச்சரிக்கை செய்தான்.


தரை எல்லாம் தண்ணீர்
ஏறி வந்த களைப்பு தீர சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொள்ள வசதி செய்து இருக்கிறார்கள்.

வெளி நாட்டவர், மற்றும் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் வருகிறார்கள் முருகனை தரிசிக்க

குடையின் கீழ் மயிலோடும் வேலோடும்   இருக்கும் அழகிய முருகன் 

குகையிலிருந்து தண்ணீர் சொட்டு விழாமல் இருக்க முருகனுக்கு  குடை  என்று பேசி சிரித்து கொண்டோம்.

இடும்பனை முதலில் வணங்கி விட்டு  செல்வோம்



சில படிகள் இறங்கினால் கடைகள் இருக்கிறது




கடைகளை தாண்டி படிகளில் இறங்க வேண்டும்.

மேலும் சில படிகள் இறங்கினால் மூலவர் இருக்கும்  இடம் வரும் 

படிகளின் பக்கவாட்டத்தில் மலையில் பழனி மலை முருகனின் ஆண்டி கோல சிலை அழகாய் இருக்கிறது,. இடும்பன் சிலை இருக்கிறது.  முருகனுக்கு சின்ன ஆலயமும் இருக்கிறது.

4.30 இந்த இடம் இருட்டாய் இருக்கிறது, குகை என்பாதால்.

3.30 க்கு ஏற ஆரம்பித்தோம். 4.30க்கு மலை குகைக்கு வந்து விட்டோம். அவர்கள் இன்னும் சீக்கீரம் வந்து இருப்பார்கள். நான் ஏற தான் கூடுதல் நேரம் ஆகி விட்டது.


மலை மேலே முருகன் கோவில்  ஆலய பூஜை நேர விவரங்கள்
மூலவர் இருக்கும்  இடத்தின் கோபுரம்
தூரத்தில் தெரியும் படிகளில் ஏறி அங்கு இருக்கும் முருகனை முதலில் தரிசனம் செய்தோம்

மூலவர் சன்னதி 4.30 க்கு திறக்க வில்லை என்பதால் மேலே இருக்கும் முருகனை பார்த்து வர போனோம். அங்கும் திரை போட்டு இருந்தது. ஐந்து நிமிடத்தில் திறந்து விட்டார்கள். அருமையான முருகன் தரிசனம். முருகனை ஆடி கிருத்திகை அன்று பார்ப்போம்.



வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

------------------------------------------------------------------------------------------------

42 கருத்துகள்:

  1. படங்களும் விவரங்களும் சிறப்பாக்க் கொடுத்திருக்கிறீர்கள்.

    நாமே மலை ஏறி தரிசிப்பதைப் போன்ற உணர்வு.

    முருகனின் அருளால் உங்களுக்குத் தரிசனம் கிடைத்திருக்கிறது. மகன், பேரன் மற்றும் உறவினர்கள் உங்களை உற்சாகமூட்டியது நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்களும் விவரங்களும் சிறப்பாக்க் கொடுத்திருக்கிறீர்கள்.

      நாமே மலை ஏறி தரிசிப்பதைப் போன்ற உணர்வு.//

      நன்றி.

      //முருகனின் அருளால் உங்களுக்குத் தரிசனம் கிடைத்திருக்கிறது. மகன், பேரன் மற்றும் உறவினர்கள் உங்களை உற்சாகமூட்டியது நெகிழ்ச்சி.//

      முருகன் அருளும், சொந்தங்கள், உறவினர்கள் கொடுத்த தைரியமும் தான் மலை ஏற வைத்தது.

      நீக்கு
  2. மலை ஏறிய களைப்பு தெரியாமல் நீங்கள் சிறிது ஓய்வு எடுத்த பிறகு முருகன் தரிசனம் கொடுத்திருக்கிறான்.

    முருகனின் சிலை நேர்த்தி, அழகிய படிகள், எல்லோரையும் அலெர்ட்டாக இருக்க வைக்கும் குரங்கார் என அனைத்தும் கவர்ந்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலை ஏறிய களைப்பு தெரியாமல் நீங்கள் சிறிது ஓய்வு எடுத்த பிறகு முருகன் தரிசனம் கொடுத்திருக்கிறான்.//

      ஆமாம், உண்மை.

      //முருகனின் சிலை நேர்த்தி, அழகிய படிகள், எல்லோரையும் அலெர்ட்டாக இருக்க வைக்கும் குரங்கார் என அனைத்தும் கவர்ந்தன//

      ஆமாம், முருகனின் சிலை நேர்த்திதான். படிகளின் வண்ணங்கள் கண்ணை கவர்கிறது. தூரத்திலிருந்து பார்க்க அழகு.
      குரங்கார் சேட்டைகள், அவைகள் மரத்தில் , மலையில் வேர்களை பிடிஹ்து ஏறுவது இறங்குவது எல்லாம் பயத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது. ஒரு பையனிடம் செல்லை பிடுங்கி விட்டது, தண்ணீர் பாட்டிலை நிறைய பேரிடம் பிடுங்கி விட்டது. குழந்தைகளை கடித்து இருக்கிறதாம். அதனால் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது குராங்காரிடம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. அழகிய படங்கள்.  அத்தனை படிகள் இருப்பது போல நீங்களும் படிப்படியாய் விவரம் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறீர்கள்.  அத்தனை படிகளையும் பொறுமையாய் ஏறி முருகனை வணங்கி விட்டீர்கள்.  அத்தனை படி ஏறுவது என்னாலேயே சிரமம் என்று நினைக்கிறேன்.  வாழ்க உங்கள் மனவலிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அழகிய படங்கள். அத்தனை படிகள் இருப்பது போல நீங்களும் படிப்படியாய் விவரம் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறீர்கள்.//

      நன்றி ஸ்ரீராம்.

      //அத்தனை படிகளையும் பொறுமையாய் ஏறி முருகனை வணங்கி விட்டீர்கள். அத்தனை படி ஏறுவது என்னாலேயே சிரமம் என்று நினைக்கிறேன். வாழ்க உங்கள் மனவலிமை.//

      இல்லை பார்க்கத்தான் பயமாக இருக்கிறது, ஏறி விடலாம் நீங்கள், உங்களுக்கு வயது குறைவுதானே1
      வாழ்த்துக்கு நன்றி. வயதானவர்களுக்கு உடல் வலிமையை விட மன வலிமைதான் வேண்டி இருக்கிறது.

      நீக்கு
  4. பத்து என்பது ஆற்றின் பெயரா?  இல்லை பத்து வகையான ஆறுகளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பத்து என்பது ஆற்றின் பெயரா? இல்லை பத்து வகையான ஆறுகளா?//
      பத்து என்பது ஆற்றின் பெயர்தான். இணையத்தில் படித்த விவரங்களை கொடுத்து இருக்கிறேன். நிறைய புராண கதைகள் எல்லாம் இருக்கிறது. கோவிலில் அதெல்லாம் போடவில்லை.

      நீக்கு
  5. சேலத்துக்கு அருகில் சமீபத்தில் 143 அடியிலோ, 146 அடியிலோ ஒரு முருகன் சிலை வைத்திருக்கிறார்கள்.  ஆசியாவிலேயே அதுதான் உயர்ந்த முருகன் சிலை என்று சொன்னார்கள்.  நான் பார்த்து பதிவும் போட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேலத்துக்கு அருகில் சமீபத்தில் 143 அடியிலோ, 146 அடியிலோ ஒரு முருகன் சிலை வைத்திருக்கிறார்கள். ஆசியாவிலேயே அதுதான் உயர்ந்த முருகன் சிலை என்று சொன்னார்கள். நான் பார்த்து பதிவும் போட்டிருந்தேன்.//

      முன்பு இதுதான் பெரிய முருகன் சிலை என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இருந்தது, இப்போது சேலம் முருகன் கோவில் அதை முறியடித்து விட்டது. உங்கள் பதிவு படித்து இருக்கிறேன்.

      நீக்கு
  6. மலேசியா குரங்கு முறுக்கிய மீசையுடன் இருப்பது போல இருக்கிறது. நாட்டாமை போல மேலே அமர்ந்து கீழே ஜனங்களை பார்க்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலேசியா குரங்கு முறுக்கிய மீசையுடன் இருப்பது போல இருக்கிறது. நாட்டாமை போல மேலே அமர்ந்து கீழே ஜனங்களை பார்க்கிறது!//

      ஆமாம் , வயதான நாட்டாமை போல இருக்கிறது.
      நான் கைபிடியை பிடித்து ஏறி கொண்டு இருந்தேன், இந்த குரங்காரார் மிகவும் தொந்திரவு, இந்த பக்கம் அமர்ந்து இருக்கும் போது அந்தப்பக்கம் கைபிடியை பிடிக்க வேண்டும், இந்த பக்கம் அமர்ந்து இருக்கும் போது அந்த பக்கம் பிடிக்க வேண்டும். கவனம் மிகவும் தேவை பட்டது.

      நீக்கு
  7. பேரனின் அக்கறை, மகனின் அன்பு, மருமகளின் அன்பு உற்சாகம் கொடுத்து ஏற்றி விட்டது எல்லாம் நெகிழ வைக்கிறது.  மாற்று மதத்தினர், வெளிநாட்டவர் பக்திக்காகவும் சிலர் வந்தாலும், சிலர் ஒரு சுற்றுலா ஸ்தலமாக, பொழுதுபோக்கு ஸ்தலமாக எண்ணியும் வருவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரனின் அக்கறை, மகனின் அன்பு, மருமகளின் அன்பு உற்சாகம் கொடுத்து ஏற்றி விட்டது எல்லாம் நெகிழ வைக்கிறது.//

      அவர்கள் கொடுத்த ஊக்கம் இல்லையென்றால் என்னால் ஏறி இருக்க முடியாது. மகன் சொன்னான் நீங்கள் மூன்று வருடங்களுக்கு முன் அப்பாவுடன் சமணமலை எல்லாம் ஏறி இருக்கிறீர்கள், நார்த்தான் மலை படிகளே இல்லை ஏறிவிட்டீர்கள் அதனால் ஏறலாம் என்று உற்சாகபடுத்தியதால்தான் ஏறமுடிந்தது . பேரன் ஆச்சி உன் கைப்பைதான் கல் மாதிரி கன்மாக இருக்கிறது, அதை நீங்கள் தூக்க வேண்டாம் அம்மாவிடம் கொடுத்து விடுங்கள் நீங்கள் மட்டும் ஏறி வாங்க என்றான். காமிராவை வைத்து கொண்டு படம் எடுக்கிறேன் என்று படியில் காலை சரியாக வைக்கவில்லை என்றால் விழுந்து விடுவீர்கள் என்று காமிராவை அவன் கழுத்தில் மாட்டி கொண்டான்.

      //மாற்று மதத்தினர், வெளிநாட்டவர் பக்திக்காகவும் சிலர் வந்தாலும், சிலர் ஒரு சுற்றுலா ஸ்தலமாக, பொழுதுபோக்கு ஸ்தலமாக எண்ணியும் வருவார்கள்.//
      பக்தியாக வழிபடிபவர்களும் இருந்தார்கள். சுற்றுலா போல குகையை பார்க்க வந்தவர்களும் உண்டு.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. பத்துமலை முருகன் தரிசனம் காலை எழுந்தவுடன் எனக்கு கிடைத்தது முருகன் அருள். படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. அத்தனைப்படிகள் ஏற தாங்கள் சிரமபட்டாலும், எப்படியோ தங்களை ஒரு விடாமுயற்சியுடன் தங்கள் மகன் அழைத்துச் செல்ல உதவியிருக்கிறான் முருகன். "அவன்" அருளால் உங்களுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் முருகன் தரிசனம் கிடைத்தது. படங்கள் அனைத்தையும் பெரிதுபடுத்தி பார்த்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்


      //அருமையான பதிவு. பத்துமலை முருகன் தரிசனம் காலை எழுந்தவுடன் எனக்கு கிடைத்தது முருகன் அருள். படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது//

      நன்றி. ஆடி செவ்வாய் முருகனுக்கு உகந்த நாள் அதனால்தான் நேற்று இரவு போட்டேன் பதிவை.

      . //அத்தனைப்படிகள் ஏற தாங்கள் சிரமபட்டாலும், எப்படியோ தங்களை ஒரு விடாமுயற்சியுடன் தங்கள் மகன் அழைத்துச் செல்ல உதவியிருக்கிறான் முருகன்//
      ஆமாம், மகனின் ஆசையை நிறைவேற்றி என்னையும் வரவைத்து இருக்கிறான்.

      //"அவன்" அருளால் உங்களுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் முருகன் தரிசனம் கிடைத்தது. படங்கள் அனைத்தையும் பெரிதுபடுத்தி பார்த்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      அவன் அருளால் தான் அவன் தாள் வணங்க வேண்டும். உங்கள் வார்த்தைகள் மகிழ்ச்சி அளிக்கிறது. மெதுவாக வாங்க காலை நேரம் வீட்டுக்கடமைகள் இருக்கே! எனக்கும் இன்று வேலைகள் இருக்கிறது. பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்க கொஞ்சம் தாமதம் ஆகும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. படிப்படியான பதிவு தான்... விளக்கங்கள் அருமை அம்மா...

    முருகா சரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //படிப்படியான பதிவு தான்... விளக்கங்கள் அருமை அம்மா...

      முருகா சரணம்...//

      உங்கள் கருத்துக்கு நன்றி தன்பாலன்

      நீக்கு
  10. நிறைய படங்கள். விரிவான அனுபவ குறிப்பு. கூடவே நடந்தது போன்ற உணர்வு. நல்ல கட்டுரை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //நிறைய படங்கள். விரிவான அனுபவ குறிப்பு. கூடவே நடந்தது போன்ற உணர்வு. நல்ல கட்டுரை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

      நீக்கு
  11. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    கோயிலின் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
      நன்றி.

      //கோயிலின் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது சகோ//
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி


      நீக்கு
  12. சிறப்பான பதிவு.. அழகான படங்கள்.. விரிவான தகவல்கள்..

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //சிறப்பான பதிவு.. அழகான படங்கள்.. விரிவான தகவல்கள்..

      அருமை.. அருமை..//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. முருகனின் அருளால் தங்களுக்குத் தரிசனம் கிடைத்திருக்கின்றது...

    மலேஷியாவின்
    பத்துமலை பற்றி சில வருடங்களுக்கு முன்பு நானும் பதிவு எழுதியுள்ளேன்..

    80 களில் வெளிவந்த வருவான் வடிவேலன் எனும் திரைப்படத்தைப் பார்த்து விட்டு பத்துமலை, சிங்கப்பூர் தைப்பூச விழாவைக் காண மாட்டோமா என்ற ஆவல் வந்தது..

    முருகன் அருளால் அது நிறைவேறியது.. சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகள்.. தைப்பூச விழாவில் கலந்து கொண்டு படங்கள் எல்லாம் எடுத்திருக்கின்றேன்..

    அப்போது
    சிங்கப்பூர் வேலையாட்கள் மலேஷியா செல்வதற்கு அனுமதி இல்லை..

    மலேஷியா பத்துமலை தரிசனம் செய்வதற்கு விருப்பம் தான்..

    எப்போது கூடி வருமோ தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //முருகனின் அருளால் தங்களுக்குத் தரிசனம் கிடைத்திருக்கின்றது.//

      ஆமாம், அவன் அருள்தான்...

      மலேஷியாவின்
      பத்துமலை பற்றி சில வருடங்களுக்கு முன்பு நானும் பதிவு எழுதியுள்ளேன்..//

      படித்து இருப்பேன் மறந்து விட்டது.

      //80 களில் வெளிவந்த வருவான் வடிவேலன் எனும் திரைப்படத்தைப் பார்த்து விட்டு பத்துமலை, சிங்கப்பூர் தைப்பூச விழாவைக் காண மாட்டோமா என்ற ஆவல் வந்தது..

      முருகன் அருளால் அது நிறைவேறியது.. சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகள்.. தைப்பூச விழாவில் கலந்து கொண்டு படங்கள் எல்லாம் எடுத்திருக்கின்றேன்.//

      நானும் அந்த படம் பார்த்து இருக்கிறேன். 78 என்று நினைக்கிறேன். அந்த படம் பார்த்து விட்டு காசி போனோம்.
      தைப்பூச விழா மிக சிறப்பாக நடக்குமே! தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன். நீங்கள் நேரில் பார்த்தது மகிழ்ச்சி.

      //அப்போது
      சிங்கப்பூர் வேலையாட்கள் மலேஷியா செல்வதற்கு அனுமதி இல்லை..//

      ஓ அப்படியா!

      //மலேஷியா பத்துமலை தரிசனம் செய்வதற்கு விருப்பம் தான்..

      எப்போது கூடி வருமோ தெரியவில்லை..//
      இறைவன் ஆசையை நிறைவேற்றி வைப்பார்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு
  14. முதல் படமே அழகு!!! ஆமாம் மலேசியாவில் ரொம்ப புகழ்பெற்ற கோயில். பலரும் இதைச் சுற்றுலாதலமாகவே பார்க்கறாங்க.

    மகன் மருமகள் பேரன், மாமாவின் தம்பி வகை உறவுகள் என்று எல்லோரும் உற்சாகப் படுத்தி முருகனின் கனிவுப் பார்வையால் ஏறிட்டீட்ங்க கோமதிக்கா....உடனே விசா கிடைத்ததும் அதனால்தான்.. பாருங்க டக்கென்று நடந்துவிட்டது.

    முருகர் - மலேசியா முருகனைப் பார்த்ததும், துளசி போய் வந்து பதிவு போட்டது நினைவு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      //முதல் படமே அழகு!!! ஆமாம் மலேசியாவில் ரொம்ப புகழ்பெற்ற கோயில். பலரும் இதைச் சுற்றுலாதலமாகவே பார்க்கறாங்க.//

      அப்படி சொல்லமுடியாது கீதா , பலர் மிகுந்த பக்தியோடு வருபவர்களும் இருக்கிறார்கள். சிலர் சுற்றுலா தலமாக பார்க்கிறார்கள்.

      //மகன் மருமகள் பேரன், மாமாவின் தம்பி வகை உறவுகள் என்று எல்லோரும் உற்சாகப் படுத்தி முருகனின் கனிவுப் பார்வையால் ஏறிட்டீட்ங்க கோமதிக்கா....உடனே விசா கிடைத்ததும் அதனால்தான்.. பாருங்க டக்கென்று நடந்துவிட்டது.//

      ஆமாம் அனைத்தும் சாதகமாக நடந்து நானும் முருகனை தரிசனம் செய்து விட்டேன். நீங்கள் சொல்வது போல முருகனின் கனிவுபார்வைதான் ஏற்றி விட்டது.

      //முருகர் - மலேசியா முருகனைப் பார்த்ததும், துளசி போய் வந்து பதிவு போட்டது நினைவு வந்தது.//

      ஆமாம்.




      நீக்கு
  15. ஓ முருகனின் வாகனம் ஆட்டுக்கிடாவா? அமைதியா நின்று கொண்டிருக்கு

    ஆமாம் அக்கா புறாக்கள் சட்டென்றுபறந்து சட்டென்று அமரும். இங்கும் புறாக்கள் நிறைய. பலரும் உணவு போடுறாங்க....பெரிய கூட்டம் புறாக்கள் இங்கு. நானும் படங்கள் வீடியோக்கள் எடுத்திருக்கிறேன்.

    தைப்பூசம் ரொம்பச் சிறப்பாக நடக்கும் அது போல இலங்கை கதிர்காமம் முருங்கன் கோயிலிலும்.

    //நான் முதன் முதலில் மகன் வீட்டு கொலுவிற்கு பொம்மைகள் வாங்கி கொடுத்த போது பத்துமலை முருகன் வாங்கி கொடுத்தேன். இப்போது நேரில் பார்த்து விட்டோம்.//

    அருமை...பாருங்க கோமதிக்கா மனதுக்கு நிறைவான விஷயம்...மனதில் நினைப்பது நல்லதாக இருக்கணும்னு அதுக்குத்தான் சொல்றாங்க கண்டிப்பா அது நடக்கும் என்றும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ முருகனின் வாகனம் ஆட்டுக்கிடாவா? அமைதியா நின்று கொண்டிருக்கு//

      ஆமாம், அதுவும் ஒரு வாகனம், யாகத்தில் வந்த ஆடு மிகவும் அட்ட்டகாசம் செய்தது . ஆட்டை அடக்கி கட்டிபிடி வைத்தியம் செய்து அதை சாந்தம் ஆக்கி தன் வாகனமாக வைத்து கொண்டார்.

      //ஆமாம் அக்கா புறாக்கள் சட்டென்றுபறந்து சட்டென்று அமரும். இங்கும் புறாக்கள் நிறைய. பலரும் உணவு போடுறாங்க....பெரிய கூட்டம் புறாக்கள் இங்கு. நானும் படங்கள் வீடியோக்கள் எடுத்திருக்கிறேன்.//

      நல்லது ஒரு நாள் போடுங்கள் பதிவில்.

      //தைப்பூசம் ரொம்பச் சிறப்பாக நடக்கும் அது போல இலங்கை கதிர்காமம் முருங்கன் கோயிலிலும்.//

      ஆமாம். கதிர்காமம் முருகனை மாமாவுடன் தரிசனம் செய்து விட்டேன்.

      //அருமை...பாருங்க கோமதிக்கா மனதுக்கு நிறைவான விஷயம்...மனதில் நினைப்பது நல்லதாக இருக்கணும்னு அதுக்குத்தான் சொல்றாங்க கண்டிப்பா அது நடக்கும் என்றும்..//

      ஆமாம், ஆனால் நான் நினைத்து பார்க்கவில்லை மலேசியா போவோம் என்று மகன் தான் போக வேண்டும் நினைத்தான். என்னையும் அவன் அழைத்து போனான். அது இறைவன் அருள் தான்.


      நீக்கு
  16. முருகனைக் கூப்பிட்டு முருகனைக் கும்பிட்டு, உங்க கால் வலியை முறையிட்டு ஏறியிருக்கீங்க!! சரியாகிவிடும்.

    மயில் சிலைகள் படிகள் கீழே உள்ள கோயில் எல்லாமே பார்க்க அழகு. குகைக் கோயில் கவர்கிறது.

    ஓ மேலே கோயில் சன்னதி வரை செருப்பு/ஷூ போட்டுக் கொண்டு ஏறுவாங்க போல...

    ஓ குரங்கார் திறக்கறப்ப கொட்டிடுச்சா...கீழே தண்ணீரை குடிப்பதைப் பார்த்ததும் சிரித்துவிட்டேன்...ஆனால் பாவம் பாருங்க. தண்ணி வேண்டியிருந்திருக்கு பிடுங்கிருக்கு.

    நம்ம ஊர் ல கூப்பிடுவது போல ம(மா)க்காவ்!!!!! மக்கா!!! பாருங்க என்னைன்னு சொல்லுது பாருங்க, வயதான தாடி மீசையுடன் இருப்பவர் போல இருக்கு அதைப் பார்க்க.

    நல்ல காலம் கைலருந்து ஃபோனை பிடுங்கலை...இனி கொஞ்ச நாள்ல அதுவும் பயன்படுத்த அதுக்குத் தெரிஞ்சுடும் என்று நினைக்கிறேன். பேரன் உங்களோடு நிற்கிறார்!!

    "ஆச்சி அங்கு குரங்கு உட்கார்ந்து இருக்கிறது பார்த்து போக வேண்டும், கீழே காலி பாட்டில் கிடக்கிறது அதில் காலை வைத்து விடாதீர்கள்" என்று கவனமாக ஏற சொல்லி பின்னாலேயே வந்தான். மகன் முன்னால் எங்களை படம் எடுத்து கொண்டும் என்னை உற்சாகப்படுத்தியும் ஏற வைத்தான். //

    அருமை. மகனின் பாசமும். பேரனின் பாசமும் உற்சாகமும்....இறைவன் அவர்களோடு எப்போதும் இருந்து காக்கட்டும்!

    கீதா






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முருகனைக் கூப்பிட்டு முருகனைக் கும்பிட்டு, உங்க கால் வலியை முறையிட்டு ஏறியிருக்கீங்க!! சரியாகிவிடும்.//

      உங்கள் வாக்கு பலிக்கட்டும் . முருகனும் அருள்வார்.

      //ஓ மேலே கோயில் சன்னதி வரை செருப்பு/ஷூ போட்டுக் கொண்டு ஏறுவாங்க போல...//

      ஆமாம்.

      //ஓ குரங்கார் திறக்கறப்ப கொட்டிடுச்சா...கீழே தண்ணீரை குடிப்பதைப் பார்த்ததும் சிரித்துவிட்டேன்...ஆனால் பாவம் பாருங்க. தண்ணி வேண்டியிருந்திருக்கு பிடுங்கிருக்கு.//
      குரங்காருக்கு ஒரு கட்டிடத்தின் மேலே தண்ணீர் ட்ஹேக்கி வைத்து இருந்தார்கள், அதில் குதித்து விளையாடி கொண்டு தான் இருக்கு, குடிக்க மினரல் வாட்டர் அதற்கு வேண்டுபோல ! நல்ல வெயில் தாகம் இருக்கும் தானே!

      //நம்ம ஊர் ல கூப்பிடுவது போல ம(மா)க்காவ்!!!!! மக்கா!!! பாருங்க என்னைன்னு சொல்லுது பாருங்க, வயதான தாடி மீசையுடன் இருப்பவர் போல இருக்கு அதைப் பார்க்க.//

      ஆமாம்.

      //நல்ல காலம் கைலருந்து ஃபோனை பிடுங்கலை...இனி கொஞ்ச நாள்ல அதுவும் பயன்படுத்த அதுக்குத் தெரிஞ்சுடும் என்று நினைக்கிறேன். பேரன் உங்களோடு நிற்கிறார்!!//
      ஆமாம், பேரன் கூடவே வந்தான் அதனால் பத்திரமாக வந்தேன்.

      //மகனின் பாசமும். பேரனின் பாசமும் உற்சாகமும்....இறைவன் அவர்களோடு எப்போதும் இருந்து காக்கட்டும்!//

      வழி எங்கும் காலி பாட்டில் நிறைய கிடந்தது அதனால் கவனம் கவனம் என்று பேரன் சொல்லி கொண்டு வந்தான். அவர்கள் தாத்தா போல தரையை பார்த்து நட கவனமாக என்று சொல்லி கொண்டே வந்தான்.
      உங்கள் ஆசிகளுக்கு நன்றி.



      நீக்கு
  17. நீங்கள் பிடித்டுக் கொண்டு ஏறுவது தெரிகிறது சிரமம் ஆனால் உங்களால் ஏற முடியும் கோமதிக்கா.

    படி முடியும் போது மகன் அவ்வளவுதான் வந்து விட்டோம் என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான்.//பேரன் "ஆச்சி கவனமாக பார்த்து வாங்க"மேலே இருந்து தண்ணீர் சொட்டுகிறது, அதனால் கீழே எல்லாம் தண்ணீர் என்று எச்சரிக்கை செய்தான்.//

    மனம் நெகிழ்ந்து கண்ணில் நீர் வந்துவிட்டது கோமதிக்கா.....

    இப்படியான குகைகளில் நீர் சொட்டு இருக்கிறது கோமதிக்கா. நீர்க்கசிவு மலைகள் ஆங்காங்கே தேங்கியிருக்கும் நீர் கசியும் போல.

    வெயில் மழை இரண்டிற்கும் குடை பாருங்க முருகனுக்கு!!! அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் பிடித்டுக் கொண்டு ஏறுவது தெரிகிறது சிரமம் ஆனால் உங்களால் ஏற முடியும் கோமதிக்கா.//

      மகன் காணொளி எடுத்து இருக்கிறான் நான் ஏறுவதை. அது வலையேற மறுக்கிறது. இன்னொரு நாள் முயற்சி செய்து போட வேண்டும்.
      //மனம் நெகிழ்ந்து கண்ணில் நீர் வந்துவிட்டது கோமதிக்கா.//

      அக்காவை போல தங்கைக்கும் மனம் நெகிழ்ந்து விடுகிறது.

      //இப்படியான குகைகளில் நீர் சொட்டு இருக்கிறது கோமதிக்கா. நீர்க்கசிவு மலைகள் ஆங்காங்கே தேங்கியிருக்கும் நீர் கசியும் போல.//

      ஆமாம். அடர்த்தியான மரங்களிலிருந்தும் மழை நீர் சொட்டு உண்டு பாறைகளிலிருந்தும் நீர் சொட்டு உண்டு.

      //வெயில் மழை இரண்டிற்கும் குடை பாருங்க முருகனுக்கு!!! அழகு!//

      ஆமாம்.

      நீக்கு
  18. குகை உள் பிரம்மாண்டம்! பரந்து விரிந்து இருக்கு இல்லையா?

    மூலவர் அதன் மேலே மலைக்கோயிலா...ஓ உள்ளே புகைப்படம் எடுக்கலாம் இல்லையா? உள்ளே பார்க்க காத்திருக்கிறேன் கோமதிக்கா

    அருமையான பயணம். ஏறிவிட்டீங்க! இனியும் முடியும் கோமதிக்கா..உங்களால்.

    குகை என்பதால் சீக்கிரம் இருட்டு வந்துவிடுகிறதோ. மேலே உள்ள பழனி முருகன் சன்னதியும் அழகா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குகை உள் பிரம்மாண்டம்! பரந்து விரிந்து இருக்கு இல்லையா?

      மூலவர் அதன் மேலே மலைக்கோயிலா...ஓ உள்ளே புகைப்படம் எடுக்கலாம் இல்லையா? உள்ளே பார்க்க காத்திருக்கிறேன் கோமதிக்கா//
      குகை நல்ல பிரம்மாண்டம் தான்.
      புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு. படங்கள் வரும் நாளை.

      //அருமையான பயணம். ஏறிவிட்டீங்க! இனியும் முடியும் கோமதிக்கா..உங்களால்.//

      அங்ககெல்லாம் பயணம் நிறைய செய்து விட்டு ஒரு மாதமாக ஓய்வு எடுத்து கொண்டு இருக்கிறேன். கால்வலி இடுப்பு வலி குறைந்து வருகிறது.

      //குகை என்பதால் சீக்கிரம் இருட்டு வந்துவிடுகிறதோ. மேலே உள்ள பழனி முருகன் சன்னதியும் அழகா இருக்கு//

      ஆமாம். உள்ளே இருட்டு , குளிர்ச்சி இரண்டும் இருந்தது.
      உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி கீதா.

      நீக்கு

  19. திருச்செந்தூரில் தாமரைப்
    பூவுடன்..
    திருப்பரங்குன்றம், திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை இங்கெல்லாம் அஞ்சேல் எனும் அபய கரம்.. பழனி சுவாமிமலையில் தண்டாயுதத்துடன் தரிசனம்.. முருகனின் வலப்புறத்தில் வேலாயுதம் சாற்றுப்படி..


    சிற்பகலா சாஸ்திரப்படி முருகனின் வலக்கரத்தில் வேல் செதுக்குவதில்லை /வடிப்பதில்லை என்று ஆன்றோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன்..

    இன்றைக்கு எல்லாம் மாற்றம்..

    பத்துமலை முருகனின் வலக்கையிலும் ஆத்தூர் முருகனின் இடக்கையிலும் வேல் இருக்கின்றது..

    அடிப்படை மாற்றப்பட்டு விட்டது..

    எல்லாம் அவனது விருப்பம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்செந்தூரில் தாமரைப்
      பூவுடன்..
      திருப்பரங்குன்றம், திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை இங்கெல்லாம் அஞ்சேல் எனும் அபய கரம்.. பழனி சுவாமிமலையில் தண்டாயுதத்துடன் தரிசனம்.. முருகனின் வலப்புறத்தில் வேலாயுதம் சாற்றுப்படி..//

      ஆமாம்.

      //சிற்பகலா சாஸ்திரப்படி முருகனின் வலக்கரத்தில் வேல் செதுக்குவதில்லை /வடிப்பதில்லை என்று ஆன்றோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன்..//

      ஓ சரி.

      இன்றைக்கு எல்லாம் மாற்றம்..

      //பத்துமலை முருகனின் வலக்கையிலும் ஆத்தூர் முருகனின் இடக்கையிலும் வேல் இருக்கின்றது..

      அடிப்படை மாற்றப்பட்டு விட்டது..

      எல்லாம் அவனது விருப்பம்..//

      ஆமாம் அவன் விருப்பபடிதான் எலாம் நடக்கிறது.



      நீக்கு
  20. வணக்கம் சகோதரி

    படங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. பத்துமலை பெயர் காரணம் அறிந்து கொண்டேன். ஜோதி டிவியில் கந்த சஷ்டி கவசம் பாடும் போது, முருகன் ஸ்தலங்களை வரிசையாக காண்பிப்பார்கள். அதில் இந்த பத்துமலை கோவிலும் வரும். பாடல் வரிகளுடன்அந்த உயரமான முருகனை தரிசிக்கும் போது மெய் மறந்து போகும். அதன் அழகிய கலர்கலரான படிக்கட்டுகள் கண்களை கவரும். இன்று அதில் ஏறிச் செல்ல வேண்டிய முறைகளையும் பற்றி தெரிந்து கொண்டேன்.

    குகைக் கோவிலுக்குள் இருக்கும் மூலவர் கோபுரத்தை தரிசித்து கொண்டேன். குடைக்கு கீழே வேலோடும், மயிலோடு இருக்கும் முருகனையும் வணங்கிக் கொண்டேன்.

    படியேறி மேலே சென்ற பின் மூலஸ்தான முருகனை தரிசிக்க மறுபடியும் படிகளின் வழியே கீழே இறங்கிச் செல்ல வேண்டுமா? இருப்பினும் கோவிலின் அமைப்புகள் நன்றாக உள்ளது.

    தாங்கள் சிரமமில்லாமல் அத்தனை படிகளும் ஏற தங்கள் மகன், மருமகள் பேரன், மற்றும் உறவினர்கள் ஒத்துழைப்பு தந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோருக்கும் அன்பான வாழ்த்துகள்.

    அழகிய சிம்மமாசத்தின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு ராஜா போல் உள்ளது அந்த வானரம். வானரங்களின் அட்டகாசங்கள் கொஞ்சம் பயத்தைதான் உண்டு பண்ணுகிறது. ஆனால், அடர்த்தியான மரங்கள், மலைகளில்தானே அதன் வாசஸ்தலமும். என்ன செய்வது.? மனிதர்களை துன்புறுத்தாமல் அது பாட்டுக்கு சென்றால் நல்லது. எல்லாவற்றையும் நீங்கள் விபரமாக வர்ணிக்கையில், பதிவில் உங்களுடன் வந்த ஒரு திருப்தி உண்டாகிறது. அடுத்த பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. பத்துமலை பெயர் காரணம் அறிந்து கொண்டேன். ஜோதி டிவியில் கந்த சஷ்டி கவசம் பாடும் போது, முருகன் ஸ்தலங்களை வரிசையாக காண்பிப்பார்கள். அதில் இந்த பத்துமலை கோவிலும் வரும். பாடல் வரிகளுடன்அந்த உயரமான முருகனை தரிசிக்கும் போது மெய் மறந்து போகும். அதன் அழகிய கலர்கலரான படிக்கட்டுகள் கண்களை கவரும். இன்று அதில் ஏறிச் செல்ல வேண்டிய முறைகளையும் பற்றி தெரிந்து கொண்டேன்.//
      நானும் ஜோதி டிவியில் நானும் பார்ப்பேன். இப்போது நேரில் பார்த்து வந்து விட்டேன்..


      //படியேறி மேலே சென்ற பின் மூலஸ்தான முருகனை தரிசிக்க மறுபடியும் படிகளின் வழியே கீழே இறங்கிச் செல்ல வேண்டுமா? இருப்பினும் கோவிலின் அமைப்புகள் நன்றாக உள்ளது.//

      படியேறி சென்ற பின் மீண்டும் பத்து படி கீழே மூலவரை தரிசிக்க போக வேண்டும். அதன் பின் 25 படிகள் ஏறி மேலே வள்ளி தெயவானையுடன் இருக்கும் முருகனை பார்க்க வேண்டும்.

      //தாங்கள் சிரமமில்லாமல் அத்தனை படிகளும் ஏற தங்கள் மகன், மருமகள் பேரன், மற்றும் உறவினர்கள் ஒத்துழைப்பு தந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோருக்கும் அன்பான வாழ்த்துகள்.//

      உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

      //அழகிய சிம்மமாசத்தின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு ராஜா போல் உள்ளது அந்த வானரம்//

      ஆமாம்.

      //வானரங்களின் அட்டகாசங்கள் கொஞ்சம் பயத்தைதான் உண்டு பண்ணுகிறது. ஆனால், அடர்த்தியான மரங்கள், மலைகளில்தானே அதன் வாசஸ்தலமும். என்ன செய்வது.?//
      மனிதர்களை துன்புறுத்தாமல் அது பாட்டுக்கு சென்றால் நல்லது. //

      ஆமாம். அதன் இடத்தில் அது இருந்தால் பயமில்லை. அதற்கு எல்லாம் கொடுத்து பழக்கி விட்டோம்.

      இன்று முழுவதும் வெளி வேலைகள் நாளை மெதுவாக தான் வரும் பதிவு.
      உங்கள் அன்பான விரிவான கருத்துக்கு நன்றி.மீண்டும் வந்து பதிவின் படங்களை பார்த்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி.



      நீக்கு
  21. மீண்டும் பத்துமலை முருகனை தரிசித்துக் கொண்டோம்.

    பலநாள் ஆவலின் பின் எங்களுக்கு தரிசனம் கிடைத்தது.நாங்கள் காலையில் சென்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //பலநாள் ஆவலின் பின் எங்களுக்கு தரிசனம் கிடைத்தது.நாங்கள் காலையில் சென்றோம்.//

      ஓ அப்படியா! நீங்கள் சென்று வந்ததை பதிவு செய்ய்யலாமே மாதேவி.
      மீண்டும் பதிவுகள் நீங்கள் எழுத வேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு