திருக்கடவூருக்கு பின் நாங்கள் போன கோவில் வைத்தீஸ்வரன் கோவில். திருக்கடவூரிலிருந்து பக்கம், அரைமணி நேரத்தில் போய் விட்டோம்.
23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. தொலைக்காட்சியில் பார்த்தேன் . வைத்திய நாதன் அருளால் இத் தலத்தை பல வருடங்களுக்கு பின் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
கோபுர வாசலுக்கு நேரே பழனி ஆண்டவர் கீழே இருப்பது போன்ற கோலத்தில் இருப்பார்.
பழனி ஆண்டவர் சன்னதி பக்க சுவற்றில் இந்த பாடல் கல்வெட்டு இருக்கிறது. இறைவன் வெறுத்தால் நாம் என்ன செய்வது?
இந்த சிலை இருக்கும் தூண் திருக்குளம் போகும் வழியில் உள்ளது.
திருக்குளத்தின் பேர் "சித்தாமிருத தீர்த்தம்" திருக்குளத்தில் குளித்து வெல்லம் கரைத்து விட்டால் நோய் நொடி இருக்காது என்பார்கள். ஆனால் இப்போது கரைக்கவிடுவது இல்லை. ஒரு அட்டை பெட்டி வைத்து அதில் போட்டு விட சொல்கிறார்கள். மக்கள் வெல்லம் வாங்கி வந்த பாலிதீன் பை, மட்டும் பேப்பரை அப்படியே குளத்தில் போட்டு விடுகிறார்கள், குளம் அசுத்தமாகிறது என்று இந்த தடை.
நாங்கள் போன அன்று (ஏப்ரல் 22 ம் தேதி) திருக்குளத்திற்கு போக முடியாத படி அடைத்து இருந்தார்கள். மக்கள் கம்பி கதவு வழியாக வெல்லத்தை தூக்கி குளத்தில் போட்டு விடாமல் இருக்க கதவை பச்சை துணியால் மூடி மறைத்து இருந்தார்கள்.திருக்குளத்தை படம் எடுக்க முடியவில்லை. திருக்குளத்தில் ஏதோ வேலை நடக்கிறது, இன்னும் இரண்டு நாள் கழித்து தான் திறப்பார்கள் என்றார்கள்.
நான் முன்பு எடுத்த திருக்குளபடத்தை தேட முடியவில்லை அதனால் கூகுள் படம் போட்டு இருக்கிறேன். நன்றி கூகுளுக்கு.
புள்ளிருக்கு வேளூர் பெயர் காரணம் சொல்லும் சிலை
கிழக்குக் கோபுர வாசல் வழியாக நாங்கள் போனோம்.
தல விருட்சம் வேப்பமரம். பல காலமாக ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பேரில் இருந்த மரம் இப்போது இல்லை. படர்ந்து விரிந்து நிழல்பரப்பி கொண்டு இருந்த மரம் இப்போது இல்லை.
கம்பி தடுப்புக்குள் இப்போது மாதுளையும், சின்னதாக வேப்பமரமும் புதிதாக நடப்பட்டு இருக்கிறது. இந்த தலவிருட்சம் ஒவ்வொரு யுகத்திலும் என்ன மரமாக இருந்தது என்ற பலகை இருக்கும். இப்போது அதை எடுத்து விட்டார்கள், பிரகாரத்தில் சாப்பிடக் கூடாது என்ற பலகை இருக்கிறது.
வேப்பமரத்தடியில், பிள்ளையார், ஆதி வைத்தியநாதர் சண்டேஸ்வரர் இருக்கிறார்கள்.. விளக்கை சாமி பக்கத்தில் ஏற்றுகிறார்கள். என்று கம்பி கதவு போட்டு விட்டார்கள் இப்போது.
அங்காரகன் சன்னதி மாற்றம் பெற்று இருக்கிறது
நவக்கிரக தலங்களில் செவ்வாய்க்கு உள்ள தலம்.
செவ்வாய் வைத்தியநாதரை வணங்கி தன் பிணியை நீக்கி கொண்டார்.
தையல் நாயகி சன்னதி
சுவாமி சன்னதி நடை திறக்க காத்து இருக்கும் மக்கள்
சுவாமியை கம்பி கதவு வழியே பார்க்க வசதி செய்து இருக்கிறார்கள். என்ன செய்தாலும் எனக்கு வைத்திய நாதரை பக்கத்தில் போனால் தான் பார்க்க முடியும். அவருக்கு முன் கண்ணாடி வைத்து இருப்பார்கள், அது சுவாமி உயரம் இருக்கும் தூரத்திலிருந்து பார்த்தால் சாமி மறைக்கும்.
கதவு திறந்தவுடன் உள்ளே ஓட்டம்
மெதுவாக எல்லோரும் இடித்து கொள்ளாமல் போகலாம் கூட்டம் அவ்வளவு இல்லை, இருந்தாலும் முட்டி மோதி கொண்டுதான் போவோம் என்றால் என்ன செய்வது!
புதுபித்த தூண்களில் விபூதிகள்
சுவாமி சன்னதிக்கு இடது பக்கம் செல்வமுத்துக்குமரன் சன்னதி உள்ளது. அவரை காத்து இருந்து பார்த்தோம் 5 மணிக்கு நடை திறந்தார்கள்.
செல்வமுத்துக்குமாரசாமி சன்னதி பக்கம் கஜலட்சுமியும் அதற்கு பக்கத்தில் இந்த திருமுறை கோவிலும் இருக்கிறது.
அங்கு சிவப்பு முடிக்கயிறும், "திருச்சாந்துருணடை" என சொல்லும் பிரசாதமும் கிடைக்கும் முருகன் சன்னதி படியில் அமர்ந்து 10 ரூபாய் மருந்து விற்பார்.
செல்வமுத்துக்குமாரசாமிக்கு ஒவ்வொரு கிருத்திகைக்கும் அபிசேகம் அலங்காரம் மிக சிறப்பாக இருக்கும். தனி மண்டபத்தில் நடக்கும். மண்டபம் அருகில் ஆறுமுகர் இருக்கிறார்.
அருணகிரி நாதர் திருப்புகழ் இருக்கிறது. செல்வமுத்துக் குமரனுக்கு.
திருமுறை கோயில்
அடுத்து சண்டேஸ்வரர் சன்னதி அதன் அருகில் கிணறு இருக்கிறது.
விசாரசருமர் சண்டேஸ்வரர் என்று அழைக்கப்பட்ட கதை சித்தரிக்கப்பட்டு உள்ளது. கதை உங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.
சண்டிகேஸ்வரர் என்று எழுதி இருக்கிறார்கள்.
சிவபெருமான் தன்னுடைய தொண்டருக்கெல்லாம் தலைவனாக்கி, "தான் ஏற்றுக் கொண்ட அமுதும், பரிவட்டமும் புஷ்பமும் உனக்கே கிடைக்கும்படி சண்டேசுரபதத்தைத் தந்தோம்" என்று சொல்லி தம்முடைய தலையில் அணிந்திருந்த கொன்றை மாலையை எடுத்து அவருக்கு சூடும் காட்சி.
கங்கை கொண்ட சோழபுரத்தில் இந்த காட்சி மிக அழகாய் சிற்ப வடிவில் இருக்கும்.
ஜடாயு குண்டம் :- கீழே வரும் புராணவரலாறு சிலைவடிவில் உள்ளது.
சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது , அதனை தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டிவீழ்த்தினான்.இராமர் இந்த வழியாக சீதையை தேடி வந்த போது அவரிடம் நடந்தவற்றைச்சொல்லி உயிர் துறந்த இடம். இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி ஜடாயுவின் உடலை தகனம் செய்த இடம் "ஜடாயு குண்டம் என்று அழைக்கப்பட்டது என்று புராண வரலாறு.
கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் அந்த குண்டத்தில் இருந்து விபூதியை ஒருவர் எடுத்து கொடுத்து "குண்டத்தை சுற்றி வந்து விட்டு காசு போடுங்கள்" என்று கேட்டு கொண்டு இருப்பார் பல வருடங்களாக. (ஒவ்வொரு கிருத்திகையின் போதும் நான் பார்த்த காட்சி)
அந்த குண்டத்தில் உள்ள திருநீற்றை பூசினால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை இருந்தது பக்தர்களிடம்.
அப்புறம் நிறைய காசுகள் விழ ஆரம்பித்தவுடன் கோயில் நிர்வாகமே இப்படி உண்டியல் போல உருவாக்கி விட்டார்கள்.
திருநீறு இல்லை பூசி கொள்ள . குண்டத்திற்குள் பணம் கொட்டி கிடக்கிறது. இடைவெளியே யாரும் எடுத்து விடாமல் இருக்க கண்ணாடி தடுப்பு வேறு போட்டு இருக்கிறார்கள்.
குண்டத்திற்கு எதிர் பக்கம் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு மேலே சட்டைநாதர் இருக்கிறார். சீர்காழி கோவிலில் இருப்பது போல மேலே இருக்கிறார். முன்பு இருட்டுக்குள் உற்று பார்த்தால்தான் தெரிவார்.
இப்போது நல்ல விளக்கு ஒளியில் சட்டைநாதர் பிரகாசமாக தெரிகிறார். சங்கநிதி, பதுமநிதி அருகில் இருக்கிறார்கள்.
வெளி பிரகார மேல் விதானத்தில் அழகிய வேலைப்பாடு
சுழலும் லிங்கம் நாம் எந்த பக்கம் நின்றாலும் அந்தபக்கம் ஆவுடையார் திரும்பும். முதன் முதலில் மீனாட்சி அம்மன் கோவில் மேல் விதானத்தில் பார்த்தேன். அப்புறம் நிறைய கோயில்களில் இப்போது பார்க்கிறேன்.
உள் கோபுரமும், வெளி கோபுரமும் தெரிகிறது பிரகாரத்திலிருந்து . அழகிய சிறிய நந்தவனம் இருந்தது இப்போது இல்லை.
அம்மன் கோயில் விமானமும் தங்க கலசமும்
சுழலும் லிங்கம் நாம் எந்த பக்கம் நின்றாலும் அந்தபக்கம் ஆவுடையார் திரும்பும். முதன் முதலில் மீனாட்சி அம்மன் கோவில் மேல் விதானத்தில் பார்த்தேன். அப்புறம் நிறைய கோயில்களில் இப்போது பார்க்கிறேன்.
உள் கோபுரமும், வெளி கோபுரமும் தெரிகிறது பிரகாரத்திலிருந்து . அழகிய சிறிய நந்தவனம் இருந்தது இப்போது இல்லை.
அம்மன் கோயில் விமானமும் தங்க கலசமும்
வைத்தீஸ்வரன் கோயில் என்றாலே எனக்கு மாயவரம் மலரும் நினைவுகள் வந்து விடும். மாயவரத்தில் இருந்தவரை ஒவ்வொரு கிருத்திகைக்கும் வைத்தீஸ்வரன் கோயில் சென்று விடுவோம். மதுரை வந்த பின் பழமுதிர் சோலை போவோம் கிருத்திகைக்கு. இப்போது வீட்டில் முருகன் வழிபாடு.
இன்று கிருத்திகை அதனால் இந்த பதிவை எழுதி விட்டேன்.
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருத்துமாகித்
தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
-அப்பர்
வைத்தியநாதனும், தையல்நாயகியும், முத்துக்குமரனும் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருளட்டும்.
அடுத்த பதிவில் வேறு கோயில் பார்ப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------------------------------------------------
அனைத்துப் படங்களும் அருமை. விரிவான தகவல்களுக்கு நன்றி. திருக்குளம் அழகு. பெயர்க் காரணம் சொல்லும் சிலை தெளிவு. விதானச் சிற்பங்கள் மற்றும் முதலிரண்டு படங்களில் கோணங்கள் அருமை. தூண்களில் திருநீற்றைப் போட்டுச் செல்லும் வழக்கம் பல கோயில்களில் உள்ளன. அதைத் தவிர்க்க, வேண்டியவர் எடுத்துக் கொள்ளும்படியாக திருநீறு, குங்குமத்தை வைத்து விடுகிறார்கள் இப்போது சில கோயில்களில்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//அனைத்துப் படங்களும் அருமை. விரிவான தகவல்களுக்கு நன்றி. திருக்குளம் அழகு. பெயர்க் காரணம் சொல்லும் சிலை தெளிவு. விதானச் சிற்பங்கள் மற்றும் முதலிரண்டு படங்களில் கோணங்கள் அருமை.//
//தூண்களில் திருநீற்றைப் போட்டுச் செல்லும் வழக்கம் பல கோயில்களில் உள்ளன//
ஆமாம். அதற்கு அந்த தூணில் கிண்ணங்கள் மாட்டி வைத்து இருக்கிறார்கள் சில கோயில்களில் அப்படியும் தூண்களில் கொட்டி விட்டு தூணில் கையை துடைக்கும் பழக்கம் வேறு இருக்கிறது.
நம் வீடுகளில் புதிதாக வெள்ளையடித்தால் (வர்ணம் பூசினால்) அதை அழுக்கு செய்ய தயங்குவோம் அல்லவா? அது போல தயக்கம் கோயில்களில் வர மாட்டேன் என்கிறதே!
//திருநீறு, குங்குமத்தை வைத்து விடுகிறார்கள் இப்போது சில கோயில்களில்.//
கொரோனா வந்தது முதல் சில கோயில்களில் நாமே திருநீறு, குங்குமம் எடுத்து கொள்ள வைத்து விட்டார்கள்.
சில கோயில்களில் துளிதான் விபூதி, குங்குமம் தருகிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
கூட்டம் எப்போதும் எங்கும் அப்படித்தான்...
பதிலளிநீக்குபடங்கள் அருமை... ஒவ்வொரு விளக்கமும் அருமை அம்மா...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அருமை... ஒவ்வொரு விளக்கமும் அருமை அம்மா..//
உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.
திருத்தல சன்னிதி படங்கள், கோபுர படங்கள் மிகவும் அருமை.
பதிலளிநீக்குசிற்பங்களையும் படமெடுத்துப் போட்டிருப்பதை ரசித்தேன்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குதிருத்தல சன்னிதி படங்கள், கோபுர படங்கள் மிகவும் அருமை.
சிற்பங்களையும் படமெடுத்துப் போட்டிருப்பதை ரசித்தேன்.//
நன்றி நெல்லைத் தமிழன்.
கோவில்களில் குங்குமம் போன்றவை கொடுப்பதைவிட, ஒரு தட்டில் வைத்து பக்தர்களையே எடுத்து இட்டுக்கொள்ளும்படிச் செய்யவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இல்லைனா, ஆங்காங்கே தீத்திவிட்டுடறாங்க இல்லைனா கொட்டிடறாங்க. கோவில்ல, கண்டிப்பா வெளிப்பகுதில கை அலம்பும் இடமும் இருக்கணும். இல்லைனா, பிரசாதம் கொடுத்தால், கையை சுவர்ல தொடச்சுடறாங்க
பதிலளிநீக்கு//கோவில்களில் குங்குமம் போன்றவை கொடுப்பதைவிட, ஒரு தட்டில் வைத்து பக்தர்களையே எடுத்து இட்டுக்கொள்ளும்படிச் செய்யவேண்டும் என்று நான் நினைக்கிறேன். //
நீக்குஅப்படி சில கோயில்களில் செய்கிறார்கள். சில கோயில்களில் அளவாக கொடுக்கிறார்கள்.
//ஆங்காங்கே தீத்திவிட்டுடறாங்க இல்லைனா கொட்டிடறாங்க. கோவில்ல, கண்டிப்பா வெளிப்பகுதில கை அலம்பும் இடமும் இருக்கணும். இல்லைனா, பிரசாதம் கொடுத்தால், கையை சுவர்ல தொடச்சுடறாங்க//
சில இடங்களில் கிண்ணங்கள் தூண்களில் மாட்டி வைத்து இருக்கிறார்கள். குங்குமம் தனியாக, விபூதி தனியாக போட.
பிரசாதம் சாப்பிட்டால் கை கழுவ பிரகாரத்தில் தண்ணீர் குழாய் இருக்கிறது, குடிக்க தண்ணீர் இருக்கிறது இந்த கோயிலில்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நெல்லைத்தமிழன்.
அல்லது மிகவும் குட்டியான ஒரு பொட்டலத்தில் கட்டி கையில் கொடுத்து வீட்டில் சென்று இட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி விடலாம்.
நீக்குகாசியில் அப்படித்தான் குட்டி பொட்டலத்தில் விபூதி தருவார்கள்.
நீக்குஅழகிய படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது நமது மக்களிடம் கோயிலில்கூட சுத்தமாக நடந்து கொள்ளும் பக்குவம் இன்னும் வரவில்லை என்ன செய்வது ?
பதிலளிநீக்குபடங்கள் வழியாக தல புராணத்தையும் அறியத் தந்தமைக்கு நன்றி. வாழ்க வையகம்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது//
நன்றி.
நமது மக்களிடம் கோயிலில்கூட சுத்தமாக நடந்து கொள்ளும் பக்குவம் இன்னும் வரவில்லை என்ன செய்வது ?//
இந்த மக்களுக்கு தெரியும் , சில புதிதாக கட்டப்பட்ட கோயில்களில் மிகவும் கெடுபிடியாக எதையும் உள்ளே அனுமதிப்பது இல்லை. கண்காணிப்பு காமிரா உள்ளது . அங்கு குப்பைகளை போடாமல் வருகிறார்கள்தானே!
தலபுராணம் நிறைய இருக்கிறது இந்த கோயிலுக்கு. நான் அந்த அந்த படத்திற்கு உள்ள கதைகளை மட்டுமே சொல்லி இருக்கிறேன்.
தையல் நாயகிக்கு, முருகனுக்கு, வைத்திய நாதனுக்கு, செவ்வாய்க்கு என்று நிறைய இருக்கிறது.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. வைத்தீஸ்வரன் கோவில் படங்களும், விபரங்களும் அருமை. கோபுர தரிசனங்கள் கண்டு கொண்டேன். கோபுர வாசலுக்கு நேரே இருக்கும் பாலதண்டாயுதபாணி சிலையும், புள்ளிருக்கும் வேளூர் பெயர் காரண சிலையும் அழகாக உள்ளது. வைத்தீஸ்வரன் சன்னதியும், அம்பாள் தையல்நாயகி சன்னதியும் கண்டு இறைவன், இறைவியை தரிசித்துக் கொண்டேன். திருக்குளப்படமும் நன்றாக உள்ளது.
இந்தக் கோவிலுக்கு நவகிரஹ கோவில்கள் தரிசனத்திற்கு என நாங்கள், ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தோம். ஆனால், இப்போது இந்த கோவில் அமைப்புகள் அவ்வளவாக எனக்கு நினைவிலில்லை. மகன்கள் ஆங்காங்கே கைப்பேசியில் எடுத்தப் போட்டோக்களும் கணினியில் ஏற்றி வைத்திருந்தனர் அது ஏதோ பழுதாகி மாயமாகி விட்டது. இரண்டு மூன்று தினங்களுக்குள் எல்லா நவகிரஹ கோவில்களும் அவசர தரிசனங்கள். அதனால் அதிகமாக நினைவிலில்லை. மீண்டும் ஒருமுறை நிதானமாகச் செல்ல இறைவன் அருள வேண்டும்.
தாங்கள் எடுத்த மேல் விதான படங்கள் அழகாக இருக்கிறது. உள் கோபுர, வெளிகோபுர படங்கள் மனதை கவர்கிறது. அம்மன் கோவில் விமானத்தையும் தங்க கலசத்தையும் தரிசித்துக் கொண்டேன்.
வைத்தியநாதனும், தையல்நாயகியும், முத்துக்குமரனும் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள் வேண்டுமென நானும் மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குபதிவு அருமை. வைத்தீஸ்வரன் கோவில் படங்களும், விபரங்களும் அருமை. கோபுர தரிசனங்கள் கண்டு கொண்டேன்.//
நன்றி.
கோபுர வாசலுக்கு நேரே இருக்கும் பாலதண்டாயுதபாணி சிலையும், புள்ளிருக்கும் வேளூர் பெயர் காரண சிலையும் அழகாக உள்ளது. //
நன்றி.
முன்பு நவக்கிரக கோயில்கள் என்று தரிசனம் செய்யும் போது வேக வேகமாக பார்ப்போம்.நானும் ஒறு முறை அப்படி ஒரேநாளில் 9 கோயில்களை பார்த்து இருக்கிறேன்.
நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
மேல் விதான படங்கள் எல்லாம் கொஞ்சம் தான் போட்டு இருக்கிறேன். நிறைய இருக்கிறது அழகாய்.
கோயில் முன் பக்க வாசல் போகவில்லை, அங்கு கடைகள் இருக்கும் அங்கு பெரிய மண்டபம் இருக்கிறது.நாங்களும் இன்னும் இரண்டு கோயில்கள் பார்த்து விட்டு மதுரைக்கு திரும்ப திட்டமிட்டதால் இன்னும் சில இடங்களை இந்த கோயிலில் பார்க்க வில்லை. பெரிய கோயில் இது.
உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி கமலா.
வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் போய் வாருங்கள்.
விரிவாக படங்களுடன் சிறப்பாக உள்ளது. நான் வைத்தீஸ்வரன் கோயில் பல தடவை சென்றிருந்தாலும் உங்களை போல் எல்லாவற்றையும் நுணுக்கமாக கண்டு படம் எடுக்கவும், சிலைகளின் தாத்பர்யம் பற்றிய செய்திகளையும் சேகரிக்க தோன்றவில்லை. நல்ல பதிவு.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//விரிவாக படங்களுடன் சிறப்பாக உள்ளது.//
நன்றி சார்.
எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் கோயில்கள் செல்லும் போது அவர்கள் குழந்தைகளுக்கு சொல்வேன். அப்போது காமிரா, அலைபேசி எல்லாம் கிடையாது. இப்போது இருக்கிறது. பதிவு வேறு எழுதுகிறோம். கொஞ்சம் தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த கோயிலுக்கு நிறைய கதைகள் இருக்கிறது, அனைத்தையும் பகிர வேண்டுமென்றால் இந்த கோயிலுக்கு மட்டுமே நிறைய பதிவுகள் போட வேண்டும்.
தையல் நாயகி சன்னதிக்கு தனி சுற்று பிரகாரம் உள்ளது.
உங்கள் கருத்துக்கு நன்றி சார்.
இப்போது மாறி இருக்கின்றன என்று சொல்லும் நிறைய விஷயங்கள் மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றன. ஏனோ அந்த மாற்றங்கள். எனக்கு கோவில்களை பெயிண்ட் பூசி புதுப்பிப்பது நளள்தோ கெட்டதோ எனக்கு விருப்பமில்லாத காட்சி. கோவில்கள் பழைமையுடன் இருப்பது சிறப்பு என்று தோன்றும். ஆனால் பழமை என்ற பெயரில் அழுக்காக அல்ல.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்கு//ஏனோ அந்த மாற்றங்கள். எனக்கு கோவில்களை பெயிண்ட் பூசி புதுப்பிப்பது நளள்தோ கெட்டதோ எனக்கு விருப்பமில்லாத காட்சி. கோவில்கள் பழைமையுடன் இருப்பது சிறப்பு என்று தோன்றும்.
ஆனால் பழமை என்ற பெயரில் அழுக்காக அல்ல.//
அங்காரகன் சன்னதி பல முறை மாற்றம் கண்டு இருக்கிறது. நவக்கிரக பரிகார தலத்தில் செவ்வாய்க்கு இந்த கோயில் என்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகம் என்பதால் வெளி பிரகாரத்திற்கு மாற்றபட்டது. அப்புறம் கீழே இருக்கும், இப்போது படிகள் வைத்து சுவாமி தெரிவது போல உயர்த்தி கட்டி இருக்கிறார்கள்.
பழமையை சிதைக்காமல் பழுது பார்த்து சுத்தமாக வைத்து கொள்ளலாம்.
படங்கள் யாவும் சிறப்பு. நான் இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் வாய்ப்பு வரவில்லை. அந்தப் பக்கத்துக்கு கோவில்கள் எல்லாமே சிறப்பு வாய்ந்தவை. தலைசிருட்சம் ஏன் மாறிக்கொண்டே இருக்கிறது? பிரகாரத்துச் சிற்பங்களை என்ன செய்தார்கள்?
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//நான் இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் வாய்ப்பு வரவில்லை. அந்தப் பக்கத்துக்கு கோவில்கள் எல்லாமே சிறப்பு வாய்ந்தவை. //
ஆமாம். திவயதேசங்களும், பாடல்பெற்ற தலங்களும் நிறைய இருக்கிறது. நமக்கு நேரம் தான் வேண்டும் எல்லாவற்றையும் பார்க்க.
சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மாயூரநாதர் கோயில் என்று வரிசையாக சென்னையில் இருந்து வரிசையாக பார்த்து விடலாம். எல்லாம் பக்கம் பக்கம் தான்.
வாய்ப்பு விரைவில் வரட்டும். தலவிருடசம் பேர் யுகத்தில் மாறுவதாக செய்தி. காரணம் தெரியாது. பிரகாரத்தில் சிற்பங்கள் இருக்கிறது. நான் எடுக்கவில்லை. அங்கு நிறைய பேர் பிரார்த்தனை செய்து கொண்டு மறைத்து கொண்டு இருந்தார்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
கோம்திக்கா கோயில் கோபுரங்கள் மிக அழகு. படங்கள் ரொம்ப அழகு. ஏனோ பெயின் பூசுகிறார்கள். பெயின்ட் பூசி ரொம்ப நவீனப்படுத்தாலம் முன்பு இருந்தது போலவே கல் கோபுரங்கள் பழமையுடன் இருப்பது ரொம்பப் பிடிக்கும்.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குகோபுரங்கள் முன்பு இருந்த மாதிரி தான் வர்ணம் பூசி இருக்கிறார்கள் கீதா.
கோபுரங்களில் புதுமை செய்யவில்லை. கோயிலுக்கு உள்ளே நிறைய மாற்றம் இருக்கிறது.
கோபுரம் உள் பழனி ஆண்டவர் தெரிவது அழகான படம் என்றால் அடுத்து திருக்குளம் மிக அழகு. வைத்தீஸ்வரன் கோயில் போயிருக்கிறேனே நாங்கள் சென்றிருந்த போது கலர் இல்லா கோபுரங்கள், திருக்குளத்தில் இவ்வளவு தண்ணீர் இல்லை என்பதோடு ரொம்ப அசுத்தமாக இருந்தது. குப்பை கூளமாக, 6 வருடங்களுக்கு முன். குளம் சுற்றி இருக்கும் அந்தப் பிராகாரம் அவ்வளவு அழகு அப்போது இருந்த கேமரா நிக்கான் பழுதாகி இருந்ததால் கொண்டு செல்லவில்லை. அதுவும் சாதாரண நிக்கான் இப்போதுள்ளது போலத்தான். என்றாலும் படங்கள் நன்றாக வரும்.
பதிலளிநீக்குஇப்போது திருக்குளத்தில் இப்படிக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருப்பது மிகவும் நல்லது.
கீதா
கீதா , திருக்குளபடம் நான் எடுக்கவில்லை அது மட்டும் கூகுள்.
நீக்குகுளத்தை பார்க்க முடியாதபடி மூடி வைத்து இருந்தார்கள்.
மிகவும் அழகான குளம். நான் எடுத்த பழைய படங்களை தேட முடியாமல் கூகுளில் எடுத்து போட்டேன்.
குளத்தை சுற்றி இருக்கும் பிரகாரம் அழகாய் இருக்கும்.
நீங்கள் பார்த்த போது கோபுரங்கள் வண்ணம் போய் இருக்கும்.
23 வருடங்கள் ஆகி விட்டதே கும்பாபிஷேகம் நடந்து. அதுவும் அந்த பக்கம் எல்லாம் வீடு, கோயில் எல்லாம் சீக்கீரம் பழசு போல ஆகி விடும்.
கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் சுத்தம் பராமரிக்க முடியும்.
புள்ளிருக்கு வேளூர் பெயர் காரணம் சொல்லும் சிலை//
பதிலளிநீக்குசெம அழகு.
ஹப்பா பிராகாரத்தில் சாப்பிடக் கூடாது என்று சொல்லியிருப்பது அருமை. நாங்கள் சென்றிருந்த போது மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டுக் கடை விரித்து சின்னக் குழந்தைகள் எல்லாம் இரைக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்,
நாங்கள் போயிருந்த போது தையல்நாயகி சன்னி மூடியே இருந்தது, குருக்களை அழைத்து பைசா கொடுத்துத் திறந்து காட்டச் சொல்லி கற்பூர ஆரத்திக் காட்டினார். ஏனோ கோயில் மிகவும் டல்லாக இருந்தது அப்போது. சிறு குழந்தைகள் விளையாட்டு ஒரு புறம், மறுபுறம் பெண்கள் உட்கார்ந்து வம்புப் பேச்சு....
பெரிய கோயில் பழமையான கோயில். ஆனால் எந்த சன்னதியிலும் விளக்கு கூட ஏற்றப்படாமல் இருட்டாகவே இருந்தது. அப்போது சீரமைப்பும் நடந்துவருவதன் அடையாளமும் இருந்தது.
இப்போது நன்றாக இருக்கும் என்று படங்களிலிருந்து தெரிகிறது
கீதா
//புள்ளிருக்கு வேளூர் பெயர் காரணம் சொல்லும் சிலை//
நீக்குசெம அழகு.//
முன்பு அதற்கு குங்குமம், சந்தனம் எல்லாம் பூசி தெரியாது, இப்போது சுத்தமாக தெரிவதால் படம் எடுத்தேன். எனக்கும் பிடித்த படம்.
ஒவ்வொரு கார்த்திகை அன்றும் மக்கள் கட்டு சாதம் கட்டி கொண்டு வந்து அபிசேகம் பார்த்து விட்டு குடும்பமாக மகிழ்ச்சியாக பேசி களித்து சாப்பிடுவார்கள். காலை விரதமாக இருப்பார்கள்.
குளத்தில் குளித்து ஈரஉடைகளுடன் கோயில் வலம் வருவார்கள் அதனால் கோயிலில் பார்த்து நடக்க வேண்டும். அம்மன் சன்னதி வாசலில் மாவிளக்கு பார்ப்பார்கள். சாமி கும்பிடும் போது கவனமாக நிற்க வேண்டும். கார்த்திகை அன்று கோவில் பிரசாத கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும், புளியோதரை, சர்க்கரை பொங்கல், தயிசாதம், முருக்கு, லட்டு என்று வியாபாரம் அதிகமாக இருக்கும்.
நீங்கள் எத்த வருடம் போனீர்கள்? சாதா நாளில் கூட கூட்டமாகத்தான் இருக்கும். அம்மன் சன்னதிக்கு குருக்களை அழைத்தால் தான் வருவார்கள் நிறைய அர்ச்சனை சேரும் போது குருக்கள் வருவார். அர்ச்சனை செய்பவர்கள், மட்டும் உள்ளே அனுமதி மற்றவர்கள் தடுப்புக்கு வெளியே நின்றுதான் அம்மனை பார்க்க வேண்டும்.
அம்மனுக்கு நிறைய விளக்கு உள்ளே ஏற்றி இருந்தார்கள் அதனால் நன்றாக பார்க்க முடிந்தது அம்மனை.
வெகு காலமாக சீரமைப்பு பணி நடந்து கொண்டுதான் இருந்தது.
நன்றாக இருக்கிறது கோயில் இப்போது.
ஆமாம் கோமதிக்கா இந்தத் தள்ளுமுள்ளு என்றாலே கஷ்டமாகிவிடுகிறது.
பதிலளிநீக்குதிருமுறைக்கோயில் இப்பவும் இப்படித்தான் இருக்கிறதா அப்போதும் மணல் இப்படிக் குவிந்து இருந்தது...திருப்பணிகள் நடப்பதன் அடையாளமாக...
இங்கும் ஜடாயு குண்டம் மற்றும் அந்தக் கதை யைக் கேட்டதும் எனக்கு எங்கள் ஊர் ஜடாயுபுரமும் இப்படிச் சொல்லப்படுவதுண்டே என்று தோன்றியது.
குண்டம், காசு கண்ணாடித் தடுப்பு, விபூதி இல்லாமை...என்னவோ போங்க எல்லாமே வியாபாரம்.
சட்டை நாதர் எல்லாம் அன்று இருட்டில்தான் இருந்தார், சீர்காழி கோயிலில் நல்ல தரிசனம் கிடைத்ததுண்டு மேலே ஏறிப் போக வேண்டுமே....அக்கோயிலும் போனதுண்டு.
அதன் கீழ் வரும் அந்த டிசைன்கள், கோபுரங்கள் எல்லாமே அழகான படங்கள்.
அனைத்தும் அழகான படங்கள் கோமதிக்கா
கீதா
தள்ளு முள்ளு இல்லாமல் பார்க்கலாம். யாராவது வரிசை படுத்தினால்.
நீக்குதிருமுறைக்கோயில் பக்கம் இருப்பது மணல் இல்லை, நெல் உமி(தவிடு)
மக்கள் கிடைக்கும் இடம் எல்லாம் விளக்கு வைத்து எண்ணெய் ஆக்கி இருப்பதை எடுக்க அதை குவித்து வைத்து இருக்கிறார்கள்
//இங்கும் ஜடாயு குண்டம் மற்றும் அந்தக் கதை யைக் கேட்டதும் எனக்கு எங்கள் ஊர் ஜடாயுபுரமும் இப்படிச் சொல்லப்படுவதுண்டே என்று தோன்றியது.//
நிறைய இடங்களில் கதை ஒன்று போல இருக்கும் கீதா செவி வழி செய்திதானே!
யாரோ ஒருவர் காசு போட்டு ஆரம்பித்து வைத்தது இப்படி வந்து நிற்கிறது.
சிதம்பரம் சாமி சன்னதி பக்கம் கிணற்றில் காசு போடுவது, ஸ்ரீவில்லி புத்தூரில் ஆண்டாள் மாலை அணிந்து அழகு பார்த்த கிணறு இன்று காசு போடு உண்டியால் ஆகி விட்டது. திரிநாகேஸ்வரத்தில் கிணற்றில் காசு போடுகிறார்கள் அதில் காசு போட்டால் செல்வம் சேரும் என்று சொல்கிறார்கள் இப்போது. முன்பு கிடையாது.
சீர்காழியில் படி ஏறி போய் பார்க்க வேண்டும். மயூரநாதர் கோவிலில் இப்படி படி இருக்கும். ஆனால் அவரை அர்த்த சாம பூஜை சமயம் தான் பார்க்கலாம். கீழே இருந்து பார்க்கலாம் அவரை.
அனைத்தையும் ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
ஒன்றும் செய்ய முடியாது.
பல முறை சென்றுள்ளேன். உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் சென்ற உணர்வு. நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
பல வருடங்களுக்கு முன் சென்று வந்த நினைவு. உங்கள் பதிவு வழி மீண்டும் தரிசனம். பகிர்ந்து கொண்ட படங்களும் தகவல்களும் வெகு சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றிய பதிவு அருமை.. உடனடியாகப் படிக்க இயல வில்லை.. சக்தி ஒன்று உடலினுள் பிரவேசித்திருந்ததால் மிகவும் அழுத்தம்.. நேற்று மாலையில் இருந்து தூக்கம்.. தஞ்சையம்பதியில் கூட பதிவு எதுவும் தர இயலவில்லை.. இன்று இங்கு இரவு குருதி பூஜை..
பதிலளிநீக்குஇந்நிலையில் ஊருக்குப் புறப்பட்ட என்னை இன்னும் சில தினங்களுக்கு இங்கேயே இருக்கும்படிக்குச் செய்து விட்டாள் அன்னை..
எல்லாம் அவள் செயல்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குவைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றிய பதிவு அருமை..//
நன்றி.
//ஊருக்குப் புறப்பட்ட என்னை இன்னும் சில தினங்களுக்கு இங்கேயே இருக்கும்படிக்குச் செய்து விட்டாள் அன்னை..//
நலிந்தவர்களுக்கு அருள்வாக்கு சொல்ல வேண்டும் என்பது அன்னையின் விருப்பம் போலும்.,இருங்கள். பதிவை மெதுவாக படிக்கலாம்.
திருநீறு குங்குமத்தை சிதற விடக் கூடாது என்பதை நம்மவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்..
பதிலளிநீக்குநெற்றியில் பூசிக் கொண்ட விபூதியை வாயால் ஊதி விடக்கூடாது என்பதே நம்மவர்களுக்குத் தெரிவதில்லை..
கோயிலுக்கு இறை தொண்டாக சிறு சிறு paper packet களை வாய்ப்புள்ளோர் வழங்கலாம் என்பது எனது கருத்து..
திருநீறை கீழே சிந்தாமல் பூசி கொள்ள சொல்வார்கள்.
நீக்குதிருநீறு பூசும் முறைகள் நிறைய இருக்கிறது.
கோயிலில் விழாக்கள் சமயம் சிறு சிறு பேப்பர் பைகளில் விபூதி குங்குமம் கொடுப்பார்கள் ஒரு பக்கம் கோயில் பேர், மறுபக்கம் அவர்கள் பெயர் போட்டு. அது போல எப்போதும் கொடுக்கலாம். நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வைத்தீஸ்வரன் கோயில் பல முறை சென்றிருக்கிறேன். எங்க குழந்தைகளுக்கெல்லாம் அங்கே ஒரு மொட்டை கட்டாயமாய் உண்டு. கடைசியாக 2016 ஆம் ஆண்டில் போனப்போ திருக்குளத்தின் சுற்றுப் பிரகாரக் கூரைகள் எல்லாம் விழுந்துவிடுமோ என்று பயப்படும் நிலையில் இருந்தன. திருப்பணி முடிந்து கும்பாபிஷேஹத்தையும் தொலைக்காட்சி தயவில் பார்த்தாச்சு. கோயிலுக்குத் தான் இன்னமும் போகவில்லை. ஆனால் திருவாரூர்க் கோயிலுக்குச் சென்ற அனுபவம் இனிமேல் இந்த மாதிரிக் கோயில்களுக்கெல்லாம் போக முடியுமா என யோசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குஎங்கள் வீட்டு குழந்தைகளுக்கு வைத்தீஸ்வரன் கோயில் மொட்டை உண்டு. நானும் கும்பாபிசேகத்தை தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். திருவாரூர் கோயில் பெரியது. மிகவும் கஷ்டபட்டீர்களா கால்வலியில்? மெதுவாக நடந்து தரிசனம் செய்ய வேண்டியதுதான்.
மனபலத்தில் நடமாடி கொண்டு இருக்க வேண்டும்.
கருத்துரை போச்சா என்னனு தெரியலை. // நெற்றியில் பூசிக் கொண்ட விபூதியை வாயால் ஊதி விடக்கூடாது என்பதே நம்மவர்களுக்குத் தெரிவதில்லை..// இது பல வருடங்களாகத் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் ஒரு ஐதிகமாக மாறி விட்டது. சொன்னாலும் கேட்பவர்கள் இல்லை.
பதிலளிநீக்குகருத்துரை வந்து விட்டது. திருக்கடவூர் பதிவில் உங்கள் கருத்தை காணோம் என்று தேடினேன். நீங்கள் சொல்வது போல நீங்கள் போட்டு வரவில்லையோ என்று.
நீக்குஇந்த பதிவுக்கு போட்டது வந்து விட்டது.
நெற்றியில் பூசி கொண்ட விபூதியை வாயல் ஊதும் காட்சிகளை தொடர்களில் வைப்பது மிகுந்த அக்கறையை காட்ட வைக்கிறார்கள் போலும்!
திருப்பணி என்னும் பெயரில் பழைய கல் தளங்கள் எல்லாவற்றையும் எடுத்துவிட்டுப் புதிதாக டைல்ஸ் போட்டு வழுக்கி விழ வைக்கின்றனர். நாம் சொன்னாலும் சண்டை போடுவார்கள். என்ன சொல்ல. வர்ணங்கள் தேவையானவற்றுக்கு மட்டும் அடிக்கலாம்.
பதிலளிநீக்கு
நீக்கு//திருப்பணி என்னும் பெயரில் பழைய கல் தளங்கள் எல்லாவற்றையும் எடுத்துவிட்டுப் புதிதாக டைல்ஸ் போட்டு வழுக்கி விழ வைக்கின்றனர்.//
ஆமாம். நாம் என்ன சொல்வது? வசதியை காட்ட வீடுகளில் போடுகிறார்கள் என்றால் கோயில்களிலும் இப்படி செய்தால் என்ன செய்வது?
வர்ணங்கள் தேவையானவற்றுக்கு முன்பு என்ன வர்ணம் தீட்டி இருந்தார்களோ அதையே செய்யலாம். .
உங்கள் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி.
வைத்தீஸ்வர நாதர் விரிவான விளக்கங்களுடன் படங்களும் நன்று.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பின் கோமதி மா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
வைத்தீஸ்வரன் எல்லோரின் சங்கடங்களையும்
தீர்த்து வைக்க வேண்டும். நான் இந்தக் கோயில் சென்று
40 வருடங்கள் ஆகிவிட்டது.
திருக்குளம் அருகே படம் கூட எடுத்துக் கொண்டோம்.
கருடன், ஜடாயு என்று பல ஊர்களில்
ராமாயணக் கதைகளும் கோவில்களூம்.
அருகிலேயே புள்ளம் பூதங்குடி இருக்கிறது.ஜடாயு மோக்ஷம் எத்தனை ஊரில்
நடந்ததோ என்று தோன்றும்:)
விபூதி குங்குமம் தூணில் சார்த்தி விட்டுச் செல்லும்
மக்களைக் காண வருத்தமாக இருக்கும்.
அவர்களுக்குக் கொடுத்ததை,
மற்றவர் வேறு எடுத்துக் கொல்வாஆற்கால்.
நீங்களே நிலைமை மாறி இருப்பதைச் சொல்வதால்
ஆறுதலாக இருக்கிறது.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குவைத்திய நாதன் அனைவரின் சங்கடங்களை தீர்த்து வைக்கட்டும்.
நீங்கள் திருக்குளம் அருகே படம் எடுத்து கொண்டது மகிழ்ச்சி.
ராமாயண, மகாபாரத கதைகள் நிறைய கோயில்களில் இருக்கிறது.
நீங்கள் சொல்வது போல் விபூதி கிடைக்காதவர்கள் தூணில் உள்ளதை எடுத்து கொள்வார்கள்தான். கிண்ணத்தில் போட்டால் எடுத்து கொள்வார்கள்.
எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு இருக்கும் தானே!
அனைத்துப் படங்களும் கண்ணுக்கு விருந்து.
பதிலளிநீக்குஇந்த செவ்வாயன்று இந்த தரிசனம் கிடைத்ததும் அவன் அருளால்
தான்.பிறகு பார்க்கலாம். மிக நன்றி அன்பு கோமதி. நலமுடன்
இஉங்கள் அம்மா.
அக்கா செவ்வாய் கிழமை தரிசனம் செய்து விட்டீர்கள் மகிழ்ச்சி.
நீக்குஎல்லாம் அவன் அருள்தான்.
உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றி அக்கா.