சிறு வயதில் கோவையில் இருந்தோம், அப்புறம் புகுந்த வீடும் கோவை ஆனது. சிறு வயதில் மேட்டுப்பாளையம் சாலையில் சாய் கோயில் இருந்தது. (அவர் பேரில் அந்த இடம் சாய் பாபா காலனி ஆனது) அந்த கோயில் பேர் "நாகசாயி கோயில்."ஒரு முறை பக்கத்து வீட்டு அக்கா அழைத்து சென்றார்கள். அப்புறம் நானும் என் அக்காவும் வார வாரம் போய் வருவோம். நாங்கள் காந்திபுரத்தில் இருந்தோம், அங்கிருந்து பேருந்தில் சென்று வருவோம்.
தமிழ் நாட்டில் முதன் முதலாக சாய் பாபாவிற்கு அமைந்த கோயில் அது.1965 முதல் 70 வரை போய் இருக்கிறோம், அப்புறம் அப்பாவுக்கு தேனீ ஊருக்கு மாற்றல் ஆகி விட்டது.
மீண்டும் கோயிலுக்கு திருமணம் ஆன பின் போனோம். மாமனார் வீட்டுப் பக்கம் தான் கோயில். மாமா சிவபக்தராக இருந்தாலும் சாய் கோயில் போய் வருவதை தடுக்க மாட்டார்கள். அங்கு கொடுக்கும் விபூதியை (உதியை ) கொடுத்தால் மந்திரமாவது நீறு சொல்லி பூசிக் கொள்வார்கள்.
மாமியார் உடல் நலம் இல்லாமல் இருந்த போது சாயிபாபா கோவில் அருகில் இருந்த ஒரு ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். அப்போது கோயிலில் விழா நடந்து கொண்டு இருந்தது. அத்தை "யாரவது ஒருவர் இருங்கள் மற்றவர்கள் கோயில் போய் வாருங்கள்" என்பார்கள். பாபா கோயிலில் "ராம நாம ஜபம் " செய்து கொண்டு இருந்தார்கள். ஆஸ்பத்திரியிலும் அந்த ஜபம் கேட்கும். அத்தை அதை கேட்டுக் கொண்டுதான் இறைவனடி சேர்ந்தார்கள்.
மாயவரத்தில் இருந்த போது சாய் கோயில் இல்லை வேறு இடங்களுக்கு போகும் போது அதுவும் ஆறு வருடங்களுக்கு முன் சில இடங்களில் பாபா கோயில் பார்த்தோம். இப்போது பிள்ளையார் கோயில்கள் போல நிறைய சாய் கோயில்கள் அமைந்து இருக்கிறது. எல்லா இடங்களிலும். அவர் எளிமையாக வாழ்ந்தார். அவருக்கு இப்போது பெரிய பெரிய கோயில்கள் அனைத்து வசதிகளுடனும் அமைந்து இருக்கிறது. வரும் பக்தர்களுக்கு அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது.
மதுரைக்கு நிரந்தரமாக வசிக்க வந்த பின் மதுரை ஆண்டாள் புரத்தில் உள்ள சாய் கோயில் போவோம் நானும் என் கணவரும். அப்புறம் மதுரை வீட்டுக்கு மிக அருகில் பிள்ளையாருக்கு அருகில் சின்னதாக ஒரு கோயில் இருக்கும்,
அப்புறம் மாடக்குளம் போகும் வழியில் ஒரு சித்தர் (அவர் சாய் பக்தர்) கட்டிய கோயில் ஒன்று அதற்கு வாரா வாரம் அழைத்து செல்வார்கள் மாலை ஆரத்தியில் கலந்து கொள்வோம்.
என் கணவரின் இறுதி நேரத்திலும் உதியை பூசிவிடச்சொல்லி பூசி கொண்டார்கள்.
இப்போது மகன் ஊரில் கொஞ்ச நாளாக வாரா வாரம் புதன் கிழமை போகிறோம். அப்போது எடுத்த படங்கள். பதிவாக.
சாய் பாபா சிலைக்கு முன் பகுதியில் வலது பக்கம் பிள்ளையார், இடது பக்கம் சிவன், நடராஜர் இருக்கிறார்கள். பிரதோஷ அபிஷேகம் பூஜை உண்டு.
முன்பு பழைய சாய் கோயிலில் இருந்த சாய் பாபா சிலை, தத்தாத்ரேயர் இங்கு இடம்பெற்று விட்டார்கள்.
இப்போது புதிதாக பெருமாள், முருகன் வள்ளி தெய்வானையுடன் இருக்கிறார்கள்.
கண்ணன் ராதை
துவாரகா மயி
தியான மண்டபம் தனியாக இருக்கிறது அமர்ந்து தியானம் செய்ய ஆசனங்கள் உள்ளது அமர்ந்து தியானம் செய்யலாம்.
பழங்கள், இனிப்புகள், பாஸ்தா , எலுமிச்சை சாதம் என்று மாலை நேரம் பிரசாதம் கிடைத்தது, இவைகள் தீர்ந்து விட்டால் பழங்கள் தருவார்கள். வியாழன் கூட்டமாக இருக்கும் என்பதால் புதன் கிழமை மாலை ஆரத்திக்கு போய் வருவோம்.
நேற்று மருமகள் தேங்காய் சாதம், மற்றும் கோதுமை மாவில் செய்த இனிப்பு(கோதுமை ஹல்வா) செய்து இருந்தாள். வார வாரம் ஏதாவது பிரசாதம் செய்து கொண்டு போய் மாலை ஆரத்தி நடக்கும் செய்யும் சமயம் கொடுப்பாள். அவள் அக்கா நல்லபடியாக இந்தியா சென்று திரும்பி வந்தமைக்கு நன்றி சொல்லி இனிப்பு செய்து கொடுத்தாள் பாபாவுக்கு.
இன்னொருவர் நூடுல்ஸ் செய்து கொண்டு வந்து இருந்தார், மற்றும் பட்டானி, இனிப்பு மக்கா சோளம் போட்ட கலவை சாதம். வாரா வாரம் கோவில் பிரசாதம். அதில் உப்பு, உறைப்பு எல்லாம் மிக குறைவாக இருக்கும்.
வீட்டில் மகன் செய்த மண்டபம். வீட்டில் பூத்த அரளி மாலை, மற்றும் வியாழன் மருமகள் ஏதாவது பிரசாதம் செய்வாள். கிண்ணத்தில் இருக்கிறது.
சாய் மந்திர் அமைந்து இருக்கும் இடத்தை ஒரு பறவை பார்வையாக இந்த காணொளியில் பார்க்கலாம். ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் தான் பார்க்கலாம்.
//மனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
உறுதியோடு தன்னைத்தந்து தியாகி ஆகலாம்
ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்.
குணம் குணம் அது கோவிலாகலாம் //
இந்த பாட்டில் வருவது போல
மனிதனாக அவதரித்து குணத்தால் உயர்ந்து, அன்பர்களின் அன்பால் கோயிலில் சிலையாக அமர்ந்து அருள்புரிகிறார்.
மானிட பிறவியின் சிறப்பு இது தான். இந்த ஞானியின் வரவால் ஷீரடி பெருமை பெற்றது.
இறை நம்பிக்கை, பொறுமை இந்த இரண்டும் அவசியம் என்பதே இவரின் தாரக மந்திரம். நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் நினைவு கொள்வேன்.
அவர் சொல்வது போல கடவுளே அனைவரின் பாதுகாப்பாளர் அவரை நம்பிக்கையுடன், பொறுமையுடன் பணிவோம்.
ஓம் சாயி ராம் !
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------
ஓம் சாயி ராம். படங்கள் நன்றாயிருக்கின்றன. மூன்றாவது படம் வெகு அழகு.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குமூன்றாவது படம் வானம், மரங்கள் படமா? ஆமாம், வானம் அழகாய் இருந்தது அதுதான் எடுத்தேன்.
ஆமாம். முதலில் எல்லாம் சாயி பாபாவுக்கு இவ்வளவு கோயில்கள் இருந்ததில்லை. இப்போதெல்லாம் ஒவ்வொரு ஏரியாவிலும் காணக் கிடைக்கின்றது. வருடா வருடம் பாஸ் பிறந்த நாளுக்கு நாங்கள் மயிலை பாபா கோவில் சென்று வருவோம். (அப்போது வல்லிம்மா வீட்டுக்கும் சென்று வந்ததுண்டு) ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு காயின் எடுத்து வைத்து விடுவார் பாஸ். அதை எல்லாம் பாபா கோவில் உண்டியலில் போடுவார். ராமாபுரத்தில் வைத்தியநாத பாபா கோவில் என்று ஒன்று தொடங்கினார்கள். அதன் அருகில்தான் மாமாவும் அக்காவும் வசித்தார்கள். எனவே அங்கும் சென்றதுண்டு.
பதிலளிநீக்குமுதன் முதலில் கட்டிய கோயில் என்பார்கள் மயிலை பாபா கொயிலை.
நீக்குநான் போய் இருக்கிறேன். முன்பு சாய் கோயிலுக்கு போய் விட்டு வல்லி அக்காவீட்டு கொலுவிற்கு போய் வந்த பகிர்வு படித்து இருக்கிறேன்.
உங்கள் மனைவியின் பிறந்தநாளுக்கு போய் வருவது சிறப்புதான்.
//ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு காயின் எடுத்து வைத்து விடுவார் பாஸ். //
நல்ல பிரார்த்தனை. வல்லி அக்காவும் எனக்கு சொன்னார்கள் ஒரு முறை.
வைத்தியநாத பாபா கோவில் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் போன து இல்லை.
நங்கநல்லூர் சாய் பாபா கோவில் போய் இருக்கிறேன். சாம்பார் சாதம் சூடாய் கொடுத்தார்கள்.
//மாமாவும் அக்காவும் வசித்தார்கள். எனவே அங்கும் சென்றதுண்டு.//
மாமாவின் நினைவுகள் இங்கும் வந்து விட்டது.
என் பாஸ் பயங்கர சாயி பக்தை. கொரோனா சமயமெல்லாம் அவரை மீட்டுக் கொடுத்ததே ஸாயிதான் என்பார். மூலைக்கு மூலை பாபா படம் வைத்திருக்கிறார்.
பதிலளிநீக்கு//என் பாஸ் பயங்கர சாயி பக்தை. கொரோனா சமயமெல்லாம் அவரை மீட்டுக் கொடுத்ததே ஸாயிதான் என்பார். மூலைக்கு மூலை பாபா படம் வைத்திருக்கிறார்.//
நீக்குநம்பிக்கை நல்லதுதான். சாயி காத்து இருக்கிறார்.
மருமகளுக்கும் பாபா மேல் நம்பிக்கை அதிகம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஸ்ரீ ஷிர்டி சாய்நாதர் புகழ் வாழ்க...
பதிலளிநீக்குபதிவு அருமை..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஸ்ரீ ஷிர்டி சாய்நாதர் புகழ் வாழ்க..//
பதிவு அருமை//
நன்றி.
எண்ணற்ற துறவியர் வாழ்ந்த அண்ணாமலை திருத்தலத்தைப் போல மதிப்பு மிக்கது தஞ்சாவூர்.. ஆனால் வெளியே தெரியாது..
பதிலளிநீக்குசத்ரபதி சிவாஜியின் ஞானகுருவாகிய ஸ்ரீ ஸமர்த்த ராமதாசர் கூட இங்கு சில காலம் தங்கியிருந்திருக்கின்றார்..
இங்கும் சாய்நாதருக்குக் கோயில் எழுப்பியிருக்கின்றார்கள்...
//எண்ணற்ற துறவியர் வாழ்ந்த அண்ணாமலை திருத்தலத்தைப் போல மதிப்பு மிக்கது தஞ்சாவூர்.. ஆனால் வெளியே தெரியாது..//
நீக்குதஞ்சாவூர் மிகவும் சிறப்புகள் உடைய இடம்தான். சித்த புருஷர்கள் இருந்த இடம்தான்.
//சத்ரபதி சிவாஜியின் ஞானகுருவாகிய ஸ்ரீ ஸமர்த்த ராமதாசர் கூட இங்கு சில காலம் தங்கியிருந்திருக்கின்றார்..//
ஆமாம் , படித்து இருக்கிறேன்.
எல்லா இடங்களிலும் சாய் கோயில் இருக்கும் போது ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள மக்கள் வாழும் தஞ்சையில் இல்லாமல் இருக்குமா!
அந்த முதல் படத்தில் பாபாவுக்கு முன்னால் வாகனப் பிரதிஷ்டையும் செய்திருக்கின்றார்கள்...
பதிலளிநீக்குநமது சித்தர்களின் கோயில்களில் கூட இப்படிக் கிடையாது..
இந்த மாதிரி வேலைகளை வைணவத்தில் செய்வதில்லை...
//நமது சித்தர்களின் கோயில்களில் கூட இப்படிக் கிடையாது..//
நீக்குஅப்படியா சொல்கிறீர்கள்?
நாங்கள் பார்த்த சித்தர்கள் சமாதி கோவில்களில் நந்தி வாகனம் வைத்து இருந்தார்கள். சித்தர் சமாதி மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து இருப்பார்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நீங்கள் சொல்வது சரிதான்...
நீக்குசித்தர்கள் தமது சரீரத்தை நிர்விகல்பமாக்கிய இடங்களில் அதாவது பூமிக்குக் கீழ் அவர்களது திருவுடம்பு இருக்க மேலே லிங்கப் பிரதிஷ்டை செய்து அதன் பின் அந்த சிவலிங்கத்திற்காக நந்தி வாகனம் பிரதிஷ்டை ஆகியிருக்கும்..
தஞ்சையில் கரந்தை பாவா ஸ்வாமி நிர்விகல்பத்தில் மேலே கோயிலில் சிவலிங்கமும் நந்தியும் இருக்க, - பூமிக்குக் கீழே 20 அடி ஆழத்தில் ஜீவ சமாதியில் அவுடை இல்லாத் லிங்கம் மட்டுமே.. நந்தி இருக்காது...
அதே சமயம் பெரிய கோயிலில் கருவூரார் சந்நிதியில் - பதிணெண் சித்தர்களுள் கருவூராரும் ஒருவர் - கருவூரார் தம் திருமேனி மட்டுமே விளங்கும்.. அங்கே நந்தி இருக்காது...
தஞ்சை ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக் கோயிலில் கொங்கண சித்தர் பீடத்துக்கு முன்பாக ஞானதீப மேடை மட்டுமே..
தஞ்சை கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் - வசிஷ்ட மகரிஷிக்கு முன்பாகவும் சரி, கோரக்க சித்தரின் பிருந்தாவனத்துக்கு எதிரிலும் சரி நந்தி கிடையாது..
துறவறம் ஏற்று 12 ஆண்டுகள் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் தவமிருந்த தலம் தஞ்சை..தஞ்சையில் ஸ்ரீ ஸ்வாமிகளின் பிருந்தாவனத்துக்கு எதிரில் எந்த வாகனமும் கிடையாது...
ஆனால் தாங்கள் காட்டியிருக்கும் பாபா கோயில் அப்படியில்லையே...
நீண்ட விரிவான கருத்துக்கு நன்றி.
நீக்குநந்தி வழி பாடு நல்லதுதான்.. பாபா பக்தர்கள் சிவனை வழிபடுபவர்களுக்கு சிவனாக, ராமரை வழிபடுபவர்களுக்கு ராமராக , குரு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் குருவாக காட்சி அளிப்பதாக சொல்கிறார்கள்.
சிவனாக நினைப்பவர்கள் நந்தி வழிபாடும் செய்யலாம் என்று வைத்து இருப்பார்கள் போலும்.
தங்கள் மீள் வருகைக்கு நன்றி.
1965 லேயே பாபாவை தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்த விடயம் அறிந்தேன்.
பதிலளிநீக்குதேவகோட்டையில் பல நூறு ஆண்டுகள் சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலில் கூட்டமில்லை.
நேற்று வந்த பாபா கோவிலால் தெரு அல்லோலப்படுகிறது. எனது வீட்டுக்கருகில்...
வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்
நீக்குநாங்கள் 1965ல் இருந்த போது போனேன் என்றேன். கோவில் அதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது.
//தேவகோட்டையில் பல நூறு ஆண்டுகள் சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலில் கூட்டமில்லை.//
நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது, நான் தேவகோட்டை பல மூறை வந்து இருக்கிறேன், அந்த கோயிலில் கூட்டம் நிறைய இருந்ததே!
தேவகோட்டையில் உள்ள கோட்டை அம்மன் கோயிலில் காய்கனி அலங்காரம் பார்க்க அவ்வளவு கூட்டம் இருக்கே! ஒருவர் படம் அனுப்பி இருந்தார். தேவகோட்டை மாரியம்மன் கோயிலுக்கு மாவிளக்கு போட கூட்டம் நிறைய இருக்காம் வெளி நாட்டிலிருந்து எல்லாம் வந்து இருக்கிறார்கள் என்று நகரத்தார் மக்கள் கூறினார்கள்.
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சாய் கோயிலில் கூட்டம் இருப்பதால் உங்கள் தெரு நல்ல கல கலப்பாக இருக்கும். நல்லதே நடக்கட்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்களும் காணொளியும் அருமை...
பதிலளிநீக்குபொருத்தமான திரைப்படப் பாடல்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களையும், காணொளியும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பாடல் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
கடந்த (2010) திமுக ஆட்சியின் போது நிலவிய கடுமையான மின் வெட்டினால் பாதிக்கப்பட்டவர்களுள் நானும் ஒருவன்.. நான்கு லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கணினி மையம் முற்றாக செயல் இழந்து போனது... கைப் பொருளை இழந்து மிகவும் சிரமத்துக்கு ஆளாகினேன்...
பதிலளிநீக்குஇருப்பினும் நம்பிக்கையை இழக்காமல் கோயில் கோயிலாக தரிசனம்..
தஞ்சை வடக்கு ராஜ வீதியில் உள்ள் வடக்கு நோக்கிய ஆஞ்சநேயர் கோயில் விசேஷம்.. ஒரு நாள் மாலை அங்கு சென்று வழிபட்டு விட்டு பிரகாரத்தில் வலம் வந்த போது அங்கே மாட்டப்பட்டிருந்த நாள் காட்டியில்
ஸ்ரீ சாய்பாபாவின் படம்.. புன்னகையுட்ன் திகழ்ந்த அந்தத் திருமுகம் மனதுக்கு ஆறுதலாக இருந்தது..
அடுத்த சில மாதங்களில் முன்பு வேலை செய்த நிறுவனத்திலிருந்து அழைப்பு.. மீண்டும் குவைத்..
இங்கு வந்த சில நாட்களில் - இப்படியான ஏற்பாட்டினைச் செய்த நண்பர் சாகுல் எனது அறைக்கு வந்து என்னை அவரது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார்..
அங்கே அவரது அறையில் முதலில் தென்பட்ட நாட்காட்டியில் -
புன்னகை பூத்தபடி ஸ்ரீ சாய்பாபா...
//கடந்த (2010) திமுக ஆட்சியின் போது நிலவிய கடுமையான மின் வெட்டினால் பாதிக்கப்பட்டவர்களுள் நானும் ஒருவன்.. நான்கு லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கணினி மையம் முற்றாக செயல் இழந்து போனது... கைப் பொருளை இழந்து மிகவும் சிரமத்துக்கு ஆளாகினேன்..//
நீக்குமின் வெட்டால் ஏற்பட்ட துனபம் மனது கஷ்டமாக இருக்கிறது படிக்கும் போதே!
ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ சாய்பாபாவின் புன்னகை செய்யும் படம் ஆறுதல் அளித்து விட்டது உங்களுக்கு. இறைவனை நம்பியவர்களுக்கு இப்படி ஏதாவது அறிகுறிகள் மூலம் தன் இருப்பை காட்டுவார் என்பார்கள். உங்களுக்கு அமைந்து இருக்கிறது.
//நண்பர் சாகுல் எனது அறைக்கு வந்து என்னை அவரது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார்..
அங்கே அவரது அறையில் முதலில் தென்பட்ட நாட்காட்டியில் -
புன்னகை பூத்தபடி ஸ்ரீ சாய்பாபா...//
உங்கள் அனுபவத்தை படிக்கும் போது மெய் சிலிர்ப்பு.
இறைவனை நம்புவர்களுக்கு ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு நினைப்பும் காரண காரியம் இல்லாமல் நடைபெறுவது இல்லை என்பது தெரியும்.
உங்கள் உள் உணர்வு சொல்வது எப்போதும் நடக்கும். எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைத்து வாழ்த்தி கொண்டு இருங்கள்.
படங்கள்
பதிலளிநீக்குகாணொலிகள்
பகிர்வு அருமை
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
தகவல்கள் நன்று. இப்போது தமிழகத்தில் பெரிய அளவில் சாய்பாபா கோவில்கள் அமைத்து வருகிறார்கள். சமீபத்தில் திருச்சியில் கூட பிரம்மாண்டமான ஒரு கோவில் அமைத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குமுன்பு டெல்லி வந்த போது நிறைய பாபா கோயில்களுக்கு மகள் அழைத்து போய் இருக்கிறாள்.
//இப்போது தமிழகத்தில் பெரிய அளவில் சாய்பாபா கோவில்கள் அமைத்து வருகிறார்கள்.//
ஆமாம், தமிழகத்தில் இப்போது நிறைய அமைந்து இருக்கிறது.
//சமீபத்தில் திருச்சியில் கூட பிரம்மாண்டமான ஒரு கோவில் அமைத்திருக்கிறார்கள்.//
இங்கு வருவதற்கு முன் மகனுடன் சென்னை செல்லவேண்டி இருந்தது, அப்போது அந்த தென் ஷீரடியும் தரிசனம் செய்து வந்தேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஹூஸ்டனிலும் சாய்பாபா கோயில் புதிதாகக் கட்டி இருந்தார்கள். நாங்களும் போய் இருக்கோம். ஆனால் படங்கள் எடுக்க முடியலை. :( இந்தக் கோயில்/படங்கள் எல்லாமும் சிறப்பு. வியாழன் அன்று சாய்பாபாவுக்கு நேர்ந்து கொண்டு விரதம் இருந்திருக்கேன். சாய் சரித்திரம் வாசித்திருக்கேன். பின்னாட்களில் விட்டுப் போய்விட்டது. வியாழக்கிழமைகளில் மௌன விரதம் இருந்திருக்கேன். அதெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் எந்த விரதமும் இல்லை. சாப்பிடும் விரதம் தவிர்த்து! :)
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//ஹூஸ்டனிலும் சாய்பாபா கோயில் புதிதாகக் கட்டி இருந்தார்கள். நாங்களும் போய் இருக்கோம்.//
மகிழ்ச்சி.
//வியாழன் அன்று சாய்பாபாவுக்கு நேர்ந்து கொண்டு விரதம் இருந்திருக்கேன். சாய் சரித்திரம் வாசித்திருக்கேன்//
நானும் 9 நாள் விரதம் சாய் சரிதை வாசித்து இருக்கிறேன்.
அப்புறம் தினம் ஒரு பக்கம் படிக்கும் பழக்கம் வைத்து இருந்தேன்.சோனி தொலைக்காட்சியில் பாபா தொடர் பார்க்க ஆரம்பித்தவுடன் அதை மட்டும் பார்த்து வருகிறேன் தினம் மனது ஆறுதல் அளிக்கும் தொடர்.
உடல் நலம்தான் இப்போது முக்கியம், அவரும் விரதம் இருப்பதை விரும்புவது இல்லை.
உங்கள் மூலம் சிறப்பான தரிசனம் கிடைத்தது. எல்லாப் படங்களும் அழகு எனில் சாய்பாபா கோயிலின் நுழைவாயில் படம் சிறப்பு. ஶ்ரீராம் சொன்னதும் மறுபடி போய்ப் பார்த்துட்டு வந்தேன்.
பதிலளிநீக்குசாய்பாபா நுழைவாயில் படம் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி, நன்றி.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அன்பின் கோமதி
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
பிரச்சினை என்று ஒன்று மனதில் பட்டதும்
உடனே சொல்வது ஸாயீ நாமம் தான்.
அவரது அருள் இல்லாமல் எதையும் கடக்கவில்லை.
நான் முதன் முதலில் ஸாயீ தரிசனம் செய்தது
கோவையில் 1970இல் மார்ச் மாதம்.
அங்கே உப்பும் மிளகும் இடச் சொன்னார்கள்.
உடலில் இருந்த அரிப்பு விலகியது.
உள்ளே இருந்த சின்னவனும் சேதம் இல்லாமல் வந்தான்.
மகள் ,மருமக எல்லோரும் ஸாயி நம்பிக்கை கொண்டவர்கள்.
வணக்கம் வல்லி அக்கா,வாழ்க வளமுடன்
நீக்கு//பிரச்சினை என்று ஒன்று மனதில் பட்டதும்
உடனே சொல்வது ஸாயீ நாமம் தான்.
அவரது அருள் இல்லாமல் எதையும் கடக்கவில்லை.//
அந்த நம்பிக்கைதான் வாழ வைக்கிறது என்பது உண்மை.
பாபா பாம்பு உருவாக வந்தார் என்று நம்ப படும் இடத்தில் பால் ஊற்றி, உப்பு, மிளகு போடுவார்கள். அரிப்பு நீங்கையது அற்புதம்.
சின்னவரை நால்லபடியாக் பெற்று எடுத்தீர்களா! அருமை.
மகள், மருமகன் எல்லோரும் சாயி நம்பிக்கை உடையவர்கள் என்றும் அங்கு இருக்கும் சாய் மந்திர் போய் வருவதைப்பற்றியும் சொல்லி இருக்கிறீர்கள்.
அரிசோனா சாயிராம் எல்லோரையும் காத்து வருகிறார்.
பதிலளிநீக்குகோவில் முகப்பு மிக அருமை.
எல்லாப் படங்களும், சாயியுடன் ஆன பாடலும்
மிக அருமை.
முன்பே எழுதி இருந்தேன்.
ஒரு ஒண்ணேகால் ரூபாய் எப்படி
நம்மைத் துரத்திலிருந்து விடுவிக்கிறது என்று.
இப்பொழுதும்
சில்லறைகள் சேர்ந்து விட்டன.
எத்தனையோ வேண்டுதல்கள்.
நாம் இருக்கும் அரோரா கோவிலுக்குச் சென்று
உண்டியலில் சேர்க்கவேண்டும்.
நேற்று பேரன் 5 டாலர் வைத்திருக்கிறார்,
என்னடா என்றால் ரயில் சென்று வரும் பயம் நீங்க ஸாயியிடம் வேண்டிக்கொண்டதாகச் சொன்னான்.
சிகாகோவில் தொற்று
அதிகரித்து வருகிறது. இருந்தும் அலுவலகத்துக்கு நேரே
போக வேண்டி இருக்கிறது.
ஸாயிதான் துணை.
உங்கள் பதிவே நம்பிக்கை ஊட்டுகிறதுப்பா.
சாயிராம் பிரசாதம் அருமை. தங்கள் மருமகளுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
//அரிசோனா சாயிராம் எல்லோரையும் காத்து வருகிறார்.
நீக்குகோவில் முகப்பு மிக அருமை.
எல்லாப் படங்களும், சாயியுடன் ஆன பாடலும்
மிக அருமை.//
நன்றி அக்கா.
//முன்பே எழுதி இருந்தேன்.
ஒரு ஒண்ணேகால் ரூபாய் எப்படி
நம்மைத் துரத்திலிருந்து விடுவிக்கிறது என்று.
இப்பொழுதும்//
முன்பே சொல்லி இருக்கிறீர்கள் என்று ஸ்ரீராமிடம் சொன்னேன், இப்போது நீங்களும் சொல்லி விட்டீர்கள்.
//நேற்று பேரன் 5 டாலர் வைத்திருக்கிறார்,
என்னடா என்றால் ரயில் சென்று வரும் பயம் நீங்க ஸாயியிடம் வேண்டிக்கொண்டதாகச் சொன்னான்.//
நல்ல நம்பிக்கை. நம்பிக்கையும் பொறுமையும் பேரனை நல்லபடியாக வாழ வைக்கும்.
//சிகாகோவில் தொற்று
அதிகரித்து வருகிறது. இருந்தும் அலுவலகத்துக்கு நேரே
போக வேண்டி இருக்கிறது.
ஸாயிதான் துணை.//
காலரா நோயை ஒரு காலத்தில் தடுத்தார் அது போல் இந்த கொடிய நோயை தடுக்க வேண்டும். உலக மக்கள் எல்லோரும் நோய் பயம் இல்லாமல் இருக்க வேண்டும்.
//உங்கள் பதிவே நம்பிக்கை ஊட்டுகிறதுப்பா.
சாயிராம் பிரசாதம் அருமை. தங்கள் மருமகளுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.//
நம்பிக்கையோடு பொறுமையாக காத்து இருப்போம், நல்லதே நடக்கும்.
மருமகளை வாழ்த்தியதற்கு நன்றி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. நான்தான் தாமதமாக வந்திருக்கிறேன். காலையில் உங்கள் பதிவை பார்த்தேன். கருத்துடன் மனம் ஒன்றி படிக்க முடியவில்லை. ஏதேதோ வேலைகள் வந்து விட்டன வருந்துகிறேன்.
அரிசோனா கோவில் படங்கள், குரு சாய்ராம் படங்கள் அனைத்தும் அருமை. "கோவில் முகப்பு படம் வானமும், மேகமும் இயற்கையும் எங்களில் யார் அழகு எனக் கேட்கிறது. படம் எடுத்தவர்தான் அழகான உங்களை அவ்வளவு அழகாக எடுத்துள்ளார் என மானசீகமாக சொன்னேன்." பாராட்டுக்கள் சகோதரி.
இப்போது சாய் பக்தர்கள், சாய்பாபா கோவில்கள் என நிறைய வந்து விட்டன. நாங்கள் சென்னையிலிருக்கும் போது (மைலாப்பூர்) 1985ல் ராஜா அண்ணாமலைபுரத்திலிருக்கும் சாய்பாபா கோவிலுக்கு வாரந்தோறும் செல்வோம். அப்போது அவ்வளவாக கூட்டம் இராது. இப்போது சில வருடங்களுக்கு முன் அம்பத்தூரில் சாய்பாபா கோவில்தான் எத்தனை கூட்டம்..! வாரத்தின் எந்த நாளில் போனாலும் கூட்டம். இங்கு நான்கைந்து முறை சென்றுள்ளேன்.
ஷீரடி போக வேண்டுமென நினைந்திருந்தோம். ஆனால் இது வரை சமயம் வாய்க்கவில்லை. அவரை வழிபடும் சமயம் வந்தால், அவரே வழியும் வகுத்துத் தந்து அழைத்து விடுவார். பார்க்கலாம்..
குரு ராகவேந்தர் தான் சமாதி ஆன பின் முன்னூறு ஆண்டுகளுக்குப் பினதான் தன்னை அறிந்து கொண்டு, வழிபடுபவர்கள் அதிகமாவர்கள் எனக் கூறியதாக செய்தி அறிந்துள்ளேன். அதுபோல் ஷிர்டி சாய்பாபாவிற்கும் இருக்கிறதோ என்னவோ.. இப்போது நாற்பது, ஐம்பது வருடங்களாகத்தான் நான் கேள்விப்பட்டு சாயின் புகழ் அதிகரித்து உள்ளது. சாயிபாபா தன் பக்தர்களை என்றுமே அரவணைத்து வருகிறார். உங்கள் பதிவில் அத்தனை படங்களிலும் அவரைப் பார்த்து வணங்கி கொண்டேன். மிகவும் நிம்மதியாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குவேலைகள் முடித்து விட்டால் நிம்மதியாக படிக்கலாம் . இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? அனைத்தையும் ஆழ்ந்து ரசித்து படித்து கருத்து சொல்ல நேரம் கிடைத்தால்தானே முடியும்! (நீங்கள் அப்படி படித்து கருத்து சொல்பவர்கள், குடும்ப பொறுப்புகள் நிறைய இருக்கிறது உங்களுக்கு)
//அரிசோனா கோவில் படங்கள், குரு சாய்ராம் படங்கள் அனைத்தும் அருமை.//
நன்றி.
// "கோவில் முகப்பு படம் வானமும், மேகமும் இயற்கையும் எங்களில் யார் அழகு எனக்
கேட்கிறது. படம் எடுத்தவர்தான் அழகான உங்களை அவ்வளவு அழகாக எடுத்துள்ளார் என மானசீகமாக சொன்னேன்." பாராட்டுக்கள் சகோதரி.//
நல்ல கற்பனை உரையாடல்! உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
குரு பீடமோ, இறைவன் குடியிருக்கும் கோவிலோ எல்லாவற்றுக்கும் நேரம் ஒன்று இருக்கிறது போலும்! இப்போது நிறைய இடங்களில் சாய் கோயில்கள் அமைத்து வருகிறார்கள்.
இங்கு புதன் கிழமை மாலை நேரம் கூட்டம் இருக்காது இரவு ஆரத்திக்கு கூட்டம் இருக்குமாம். வேலை முடித்து வருவோர் கூட்டம் அதிகமாக இருக்காம்.
//ஷீரடி போக வேண்டுமென நினைந்திருந்தோம். ஆனால் இது வரை சமயம் வாய்க்கவில்லை. அவரை வழிபடும் சமயம் வந்தால், அவரே வழியும் வகுத்துத் தந்து அழைத்து விடுவார். பார்க்கலாம்..//
நாங்களும் மகன் வரும் போது ஷீரடி போகலாம் என்று நினைத்து இருந்தோம். அதற்குள் நிலை மாறி விட்டது. எப்போது நாம் வர வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது அழைப்பார்.
//குரு ராகவேந்தர் தான் சமாதி ஆன பின் முன்னூறு ஆண்டுகளுக்குப் பினதான் தன்னை அறிந்து கொண்டு, வழிபடுபவர்கள் அதிகமாவர்கள் எனக் கூறியதாக செய்தி அறிந்துள்ளேன்.//
700 ஆண்டுகள் பிருந்தாவனத்தில் சூட்சுமாய்த் இருந்து அருள்புரிவேன் என்று படித்து இருக்கிறேன்.
அவர் பிறந்த ஊர் சிதம்பரம் பக்கத்தில் உள்ள புவனகிரி அங்கு அவர் வசித்த வீட்டை அவர் வாழும் பிருந்தவனமாக அமைத்து இருப்பதை மாயவரத்தில் இருக்கும் போது என் தோழியோடு போய் வணங்கி வந்து இருக்கிறேன்.
பகதர்கள் குறைகளை நீக்கி விட்டால் அவர்கள் இறைவனை எப்போதும் நிம்மதியாக வணங்க்குவார்கள் என்பதுதான் அவர் சொன்னது. அவர் சொன்ன இறைவனை விட்டு விட்டு அவரை மட்டும் வணங்கி கொண்டு இருக்கிறோம்.
நம்பிக்கையோடு இறைவனை வணங்கு , பொறுமையுடன் காத்து இருக்க சொன்னார்.
//படங்களிலும் அவரைப் பார்த்து வணங்கி கொண்டேன். மிகவும் நிம்மதியாக உள்ளது//
மனதுக்கு நிம்மதி அளிக்கும் மகான்கள் தரிசனம்.
உங்கள் விரிவான அன்பான கருத்துக்கு நன்றி கமலா.