புதன், 7 ஜூலை, 2021

பண்ணை வீட்டில் பாம்பு


நாற்றுப் பண்ணை

போன மாதம் செடிகள் வளர்த்து  விற்கும் பண்ணைவீட்டுக்கு போய் இருந்தோம்.  பெரிய நாற்றுப் பண்ணை, மரம், செடி, கொடிகள்  கிடைக்கும் இங்கு.   சில செடிகள் மற்றும் உரம் கலந்த மண் மூட்டைகள் வாங்கி வந்தோம்.

 அந்த செடிப் பண்ணையில் என்ன பார்த்தோம்  தெரியுமா?
அதன் பேரைச் சொன்னாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் அல்லவா! அதைப்பார்த்து படம், மற்றும் காணொளி எடுத்தது இந்த பதிவில். (அது படம் எடுக்கவில்லை)


2017ல் நாங்கள் இருவரும் இங்கு வந்து இருந்த போதும் இந்த தோட்டம் போனோம்.  இந்த பதிவில் அப்போது எடுத்த படங்களும் இப்போது போனபோது எடுத்த படங்களும்  இருக்கிறது .

போன முறை வந்த போது   எடுத்த படங்கள்   சில நினைவுகளைத் தாங்கி வருகிறது.



தோட்டத்தில் அழகிற்காக வைத்துக் கொள்ளும் சிமெண்டில் செய்த மான் ,  வாத்துக்களை பற்றியும் மற்றும் இரும்பில் செய்து  வண்ணம் கொடுத்த மலர்களைப் பற்றியும்  தாத்தாவிற்கு சொல்கிறான் கவின். 







அலுவலக வாசலில் யானைகள் வரவேற்பு

ஒரு மர வீட்டை பண்ணை அலுவலகமாக வைத்து இருக்கிறார்கள்.  இந்த மாதிரி வீடுகளும் விற்கிறார்கள் தோட்டத்தில் வைத்துக் கொள்ள.








 பண்ணைவீட்டின் உரிமையாளர் குழந்தைக்கு  பிறந்தநாள்.
நான் படம் எடுப்பதும் தெரிகிறதா?


பிறந்தநாள் கொண்டாடும் குழந்தையை அழைத்துக் கொண்டு  வண்டியில் ஊர்வலம். குழந்தைகள் உற்சாக குரல் எழுப்பி பண்ணை வீட்டை வலம் வந்தார்கள்.


தகரத்தில்  செய்த கள்ளிகள்
செடி வைக்கும் வீடுகள்,   செடி வைக்கும் தொட்டிகள்.


ஹலோவின் பண்டிகைக்கு விளக்கு வைக்கும்   பூசணி பானை ,  காய்ந்தசோளக்கதிர்கள்
மூன்று குரங்குகள் சொல்லும் நீதியை தவளைகள் சொல்கிறது


தோட்டத்தில்  பறவைகளுக்கு தண்ணீர் வைக்க   தண்ணீர் தொட்டிகள்
2017 ம் வருடம் போன போது  தகரத்தில் செய்து வைத்து இருந்த பாம்பை பார்த்தேன் .

இனி வருபவை  இந்த தடவை  எடுத்த படங்கள்.

பாம்பின் தலைப்பகுதி மிக சின்னதாக இருந்தது.

2021 ம் வருடம் உயிருள்ள பாம்பை பார்த்து விட்டேன். இதன் பேர் Rattlesnakes . இந்த வகை பாம்பில்  17  ரகம்  இருக்கிறதாம்.   .

வால் பகுதியின்  நுனியில்  கறுப்பு, வெள்ளைப்பட்டையும் அப்புறம் வெள்ளையாக கண்ணாடி போலவும்  இருந்தது.

ஒரு புதர் செடியில் பறவை நின்றது அதை படம் எடுக்க போன போது கீழே ஏதோ நகர்வது போல் இருந்தது , பார்த்தால் பாம்பு ! சத்தம் போட்டு மகனை அழைத்தேன் அவன் ஓடி வந்தவன் "அம்மா அதன் வால் பகுதியை பார் , வீடியோ எடுங்கள் என்றான்" நான் காமிரா வைத்து படம் எடுத்துக் கொண்டு இருந்தேன், இந்த காமிராவில் ஜூம் செய்து எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதால் சொன்னான். நான் காமிராவில்  எடுத்தால் நேரமாகும், பாம்பு  ஓடி விடும் என்றேன். அவன் தன் அலைபேசியில்  வீடியோ எடுத்தான். நான் என் காமிராவில் அதன் வால் பகுதி, தலைப்பகுதியை எடுத்தேன்.

(இந்த பாம்பு அரிசோனா பாலைவன கட்டுவிரியன் . இந்த நிலத்தின் நிறத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது பாம்பின் உடல் நிறம்.)

கவின் "அய்யோ பாம்பு பாம்பு என்று என்னை பயமுறுத்திவிட்டீர்கள் ! "வாங்க இங்கே போதும் செடி வாங்கியது என்றான்."

மகன் அங்கு வேலைப்பார்ப்பவர்களிடம் சொன்னான் அவர்களுக்கு அது பெரிய விஷயமாக இல்லை  இப்படி அடிக்கடி வரும் என்று சொல்லி விட்டு வந்துப் பார்த்து விட்டு போய் விட்டார்கள்.

அது மட்டுமல்ல இங்கு பாம்பு, தேள் முதலியவற்றை கொல்லக்கூடாது . இந்த பாம்பு கடித்து இறப்பவர்கள் ஒரு சதவீதம் தான்.

மகன் இந்த பாம்பின் பெயர் கிலு கிலுப்பை கட்டுவிரியன்

இது வால் பகுதியை குழந்தைக்கு விளையாட்டு காட்டும் கிலு கிலுப்பை போல ஆட்டி ஒலி எழுப்பும் என்றான். உடனே  யூட்யூபில் போய் பார்த்தேன்.   அந்த  காணொளி . விருப்ப பட்டால் பார்க்கலாம். வாலை எப்படி ஆட்டுகிறது என்று பாருங்களேன்.

ஜெயா தொலைகாட்சி செய்தியில்  சொன்னது. அரிசோனா

வனப்பகுதியில் ஆமையின் முதுகில் சவாரி செய்கிறது  இந்த பாம்பு.  சிறிய காணொளிதான் பார்க்கலாம்.

எனக்கு அதன் கிலு கிலுப்பை ஒலி கேட்கவில்லை, மாலை நேரம்  கூடு திரும்பும் பறவைகளின் ஒலி கேட்டுக் கொண்டு இருந்தது , அப்புறம் பாம்பைப் பார்த்த கிலி வேறு. அதனால் அது நகர்ந்து போகும் போது வாலை ஆட்டி கொடுத்த ஒலியை கேட்கவில்லை. இப்போது எனக்கு  ஏரோபிளேன் ஒலி கேட்கிறது . காணொளியை பெரிது செய்து பாருங்கள் அதன் வால் பகுதி நன்றாகத் தெரியும்.


பசுமையான இயற்கை செடிகளுக்கு நடுவில் மஞ்சள் இரும்பு செயற்கை மலர்.


பிளமிங்கோ பறவை பழைய இரும்பில் செய்தது

மாயவரத்தில் மயூரநாதர் கோவிலில் நிறைய இந்த தங்க அரளி செடி  மஞ்சள் கலரில் இருக்கும், இது கொஞ்சம் ஆரஞ்சு கலரில் பார்க்க அழகாய் இருக்கிறது.

 அணிலை படம்  எடுக்க சொன்னான் கவின் . 

மருதாணி, துளசி,    கருவேப்பிலை வாங்க போனோம், ஆனால் துளசியும், கருவேப்பிலையும் கிடைக்கவில்லை,  மருதாணியும் சில குரோட்டன்ஸ் வகை செடிகள் வாங்கி வந்தோம்.

போன முறை மருதாணி, கருவேப்பிலை, முருங்கை, மாதுளை செம்பருத்தி , மல்லிகை எல்லாம் வாங்கி வந்தோம்.

இந்த "அல்ட்ரா வைல்ட் டார்ச் "மூலம் இரவு தேள்  பார்க்கலாம். தோட்டத்து புதரில் இரவு 10 மணிக்கு பார்த்தார்களாம்.  மகன் சொன்னான். இரவுதான் கரப்பான் பூச்சிகள் தோட்டத்தில் வருமாம், அதை பிடித்து உண்ண தேள் வெளியில் வருமாம்.

இனி இந்த பண்ணைத் தோட்டம் போக வேண்டுமென்றாலும் , எங்கள் வீட்டுத்தோட்டத்திற்கு போனாலும்  பாம்பு, தேள்  நினைவு கண்டிப்பாய் வரும் . கவனமாக இருக்கச் சொல்லும் மனம்.

வீட்டில் காலையில் அரளி பூ பறிக்கும் போது அனிச்சையாக கீழே பார்க்கிறேன்.  அப்புறம் "பாம்பு, தேள் போன்றவை இனி கண்ணில் படக்கூடாது கோமதி அம்மா" என்று சங்கரன் கோவில் அம்மனை வேண்டிக் கொள்கிறேன் தினம். எங்கள் ஊர் பக்கம் இப்படி வேண்டிக் கொள்வார்கள். புதர் பக்கத்தில் நின்றபோது அமைதியாக என்னை கடந்து போய் இருக்கிறதே!
இந்த அம்மாவிற்கு இன்னும் சில கடமைகள் இருக்கிறது  , அதை செய்து முடிக்கட்டும் என்று  போய் விட்டது போலும்.

இறைஅருளுக்கு நன்றி.

               வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்! 

----------------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

  1. அழகான படங்கள் இரும்பில் கள்ளிச்செடி அருமை.

    காணொளி கண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்
      இரும்பில் நிறைய கலைப்பொருட்கள் இருந்தன.

      //அழகான படங்கள் இரும்பில் கள்ளிச்செடி அருமை.//
      நன்றி உங்கள் கருத்துக்கு.
      காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  2. அழகிய படங்கள்.  அணில் சிலை அழகாய் இருக்கிறது.  யானைகளும்.    நிஜமாகவே பாம்பைப் பார்த்த அனுபவம் திகில்தான்.  சட்டென அதுவும் காலின் கீழ் இருந்தால் என்னத்துக்கு ஆகும்?  எனக்கும் முன்பொருமுறை அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.  எங்கள் அலுவலக வாயிலில் நானும் நண்பரும் பேசிக்கொண்டிருந்தபோது கீழே காலடியில் கொஞ்ச தூரத்தில் சுருண்டு கிடந்த கயிறைப்பார்த்தால் பாம்பு மாதிரியே இருக்கிறது இல்லை என்று அதன் அருகில் இருங்க, அது நீண்டு ஓடத்தொடங்கியதும்தான் அது பாம்பு என்றே தெரிந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அழகிய படங்கள். அணில் சிலை அழகாய் இருக்கிறது. யானைகளும். //
      நன்றி.

      //நிஜமாகவே பாம்பைப் பார்த்த அனுபவம் திகில்தான். சட்டென அதுவும் காலின் கீழ் இருந்தால் என்னத்துக்கு ஆகும்? எனக்கும் முன்பொருமுறை அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.//

      ஆமாம், கால் அருகில் பாம்பை பார்த்தது பயம் தான்.
      திருவெண்காட்டில் இருக்கும் போது எல்லோரும் பாம்பை பார்த்தேன் என்பார்கள். பாம்பு கடித்து இறந்தவர்களைப்பற்றி எல்லாம் கதை கதையாக சொல்வார்கள். பயந்து நடுங்குவேன். ஆனால் அங்கு இருந்தவரை கண்ணில் கண்டது இல்லை.

      நீங்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் முருங்கை மரத்து பக்கம் பாம்பு வந்த படங்கள் போட்டு செய்திகள் பகிர்ந்த நினைவு இருக்கிறது, ஆனால் அலுவலகத்தில் பாம்பு பார்த்த அனுபவம் எழுதி இருக்கிறீர்களா? படித்த நினைவு இல்லை.

      நீக்கு
  3. தேள் கரப்பான்களை சாப்பிடுமா?  அடடே...   வீட்டில் தேள் வளர்க்கலாம் போலுல்ளதே...!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! என ஒரு நினைப்பு !

      அமெரிக்காவில் கண்டதை வளர்ப்பு செல்லமாக வளர்க்கிறார்கள், அதில் தேளும் உண்டு.

      நீக்கு
  4. காணொளிகள் கண்டேன். இந்தப் பாம்பு பற்றி காணொளியில் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் முன்பே பார்த்து இருக்கிறீர்களா?
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. இரும்பில் செய்த கலைப்பொருட்கள் அருமை. அதுவும் கள்ளிச் செடிகளும், யானைகளும். அணிலும் நன்றாக உள்ளது. பண்ணைகளுக்கு நாங்களும் ஹூஸ்டனில் போவோம். ஆனால் நான் ஒரு மூலையாகப் பார்த்துக் குழந்தையோடு உட்கார்ந்து விடுவேன். :))) அதன் பின்னர் பையர் அழைத்துச் செல்வதில்லை. என்னையும், குழந்தையையும் விட்டுவிட்டுப் போவாங்க. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //இரும்பில் செய்த கலைப்பொருட்கள் அருமை. அதுவும் கள்ளிச் செடிகளும், யானைகளும். அணிலும் நன்றாக உள்ளது.//
      குடியிருப்பு வளாகத்தில் இந்த மாதிரி இரும்பில் செய்த கலைப்பொருட்களை வைத்து செய்த காத்தாடிகள், விளக்குகள், விலங்குகள் வைக்கிறார்கள்.

      ஆமாம், பண்ணை முழுவதும் பார்ப்பது என்றால் கால் வலி வரும்.
      நானும் என் கணவரும் முன்பு போன போது கொஞ்சம் நேரம் அமர்ந்து இருந்தோம்.
      இந்த முறை வெகு விரைவில் அங்கு இருந்து வந்து விட்டோம்.

      நீக்கு
  6. பாம்பெல்லாம் ஜூஜுபி என்றாகி விட்டது. அவ்வளவு பார்த்தாச்சு. ராஜஸ்தான், குஜராத் மட்டுமில்லை, அம்பத்தூர் வீட்டில் அது வராத நாளே இல்லை. கொல்லையில் துணி உலர்த்தினால் கூடவே நகர்ந்து கொண்டிருக்கும். மெம்பிஸில் பெண் இருந்தப்போத் தோட்டத்தில் வேலை செய்ய என் கணவர் போகும்போது நானும் கூடப் போவேன். மிக அரிய வகைப்பாம்புகள் சர்வசாதாரணமாய்ப் போகும். பயமாக இருக்கும். கந்த சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டே வேலைகள் செய்வார். அப்போதெல்லாம் காமிரா இல்லை. அதனால் படங்கள் எடுத்தது இல்லை. அதோடு அப்போ அவ்வளவா எழுதவும் ஆரம்பிக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அம்பத்தூர் வீட்டுக்கு அடிக்கடி வரும் அதற்கு சுப்புக்குட்டி என்று பெயர் வைத்து அதனுடன் வாழ்ந்த வீராங்கனை கீதா சாம்பசிவம் என்று பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அப்புறம் வேண்டாம் என்று எடுத்து விட்டேன்.

      திருவெண்காட்டில் பெரிய ஓட்டு வீடு, அப்புறம் பின்னால் ஓடை, தோட்டம் என்று இருந்த வீட்டில் 15 நாட்களுக்கு மேல் இருக்காமல் பயந்து மாடி வீட்டுக்கு குடிபுகுந்து விட்டேன். தண்ணீர் பாம்பு போகும், வீட்டுக்குள் பாம்பு வரும் என்று பக்கத்து வீட்டு மாமி சொன்னார்கள், அவர்கள் வீட்டுக்கு டியூசன் படிக்க வந்த பையன் பாம்பு கடித்து இறந்து விட்டான் என்றார்கள் அதனால் பயந்து விட்டேன்.

      கந்த சஷ்டி சொல்லி கொண்டு தோட்ட வேலை பார்த்தது நல்லதுதான்.
      காத்து இருக்கிறார் கந்தன்.


      நீக்கு
  7. இந்த ராட்டில் ஸ்நேக் பற்றி நிறையப் படிச்சிருக்கேன். அழகாய்ப் படங்கள் பொறுமையாய் எடுத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். தேள்கள் கரப்பானைச் சாப்பிடும் என்பது புதிய செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ராட்டில் ஸ்நேக் பற்றி நிறையப் படிச்சிருக்கேன்//

      நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். கோவை, மற்றும் அமெரிக்கா, வண்டலூர், கல்கத்தாவில் எல்லாம் பாம்புகளை மிருககாட்சி சாலையில் வித விதமாக பார்த்து இருக்கிறேன், அவைகள் கண்ணாடி கூண்டுக்குள் இருக்கும்.
      இப்போது கூட வண்ணத்துப்பூச்சி பூங்கா போனோம் , அங்கும் பலவகை பாம்பு பார்த்தோம்.

      இரவு தேள் கரப்பான் பூச்சி பக்கத்தில் நின்றதாம் அதை உண்ண வந்து இருக்கும் என்றான் மகன் ஆதாரபூர்வமாக தேள்கள் கரப்பானைச்சாப்பிடும் என்று செய்தி படிக்கவில்லை. கூகுளில் தேடி படிக்க வேண்டும் தேள்களின் உணவு என்ன என்று.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. பாயாசத்தில் முந்திரிப் பருப்புகளைப் போல் பதிவு முழுதும் படங்கள்... இந்த கிலுகிலுப்பைப் பாம்பை சிங்கப்பூர் உயிரியல் காட்சி சாலையில் பார்த்ததாக நினைவு...

    பாம்பு என்றால் அந்தப் பக்கமே போக மாட்டேன்... அவ்வளவு தகிரியம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //பாயாசத்தில் முந்திரிப் பருப்புகளைப் போல் பதிவு முழுதும் படங்கள்..//

      அதிகமாகி விட்டதோ!

      //இந்த கிலுகிலுப்பைப் பாம்பை சிங்கப்பூர் உயிரியல் காட்சி சாலையில் பார்த்ததாக நினைவு...//

      பார்த்து இருக்கலாம்.

      பாம்பு என்றால் பயம்தான்.
      இரவு அதன் பேரைக்கூட சொல்லமாட்டார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  9. வால் பகுதி காணொளியில் நன்றாக தெரிகிறது... படங்களும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      வால் பகுதி காணொளியில் நன்றாக தெரிந்தது அதுதான் அதை பகிர்ந்தேன். படங்களை, காணொளியை கண்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  10. கிலுகிலுப்பை பாம்பு காலடியில் - அதிர்ச்சி தான். நல்லதே நடக்கட்டும்.

    படங்களும் தகவல்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //கிலுகிலுப்பை பாம்பு காலடியில் - அதிர்ச்சி தான். நல்லதே நடக்கட்டும்.//

      ஆமாம், தூரத்தில் போனால் பயமில்லை, பக்கத்தில் பார்த்தது அதிர்ச்சிதான்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  11. பண்ணை வீடு என்றதும், பழைய கால ஊர் வீடோ என நினைச்சேன்.

    மலரும் நினைவுகள்.. மாமா இப்போ இல்லை என மனதுக்கு தோன்றவே இல்லை, அவர் உங்களோடுதான் அங்கு வந்து நிற்கிறார் என்றே மனம் சொல்கிறது...

    அழகிய படங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      நலமா? பண்ணைவீடு அழைத்து வந்து விட்டது உங்களை.
      நாற்றுப்பண்ணை வைத்து இருப்பவர்கள் வீடு பெரிதாக இருக்கிறது. நர்சரி தோட்டத்தை பண்ணைவீடு என்றுதானே சொல்வோம்.

      //மலரும் நினைவுகள்.. மாமா இப்போ இல்லை என மனதுக்கு தோன்றவே இல்லை, அவர் உங்களோடுதான் அங்கு வந்து நிற்கிறார் என்றே மனம் சொல்கிறது...//

      ஆமாம் அதிரா, அப்படித்தான் நினைத்து கொண்டு நடமாடி கொண்டு இருக்கிறேன்.
      படங்கள் பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  12. கனடா அமெரிக்காப் பக்கங்களில் பாம்பு இருக்குது ஆனா ஸ்கொட்லாந்தில் இல்லை. பாம்பு மட்டுமில்லை எந்த விஷப் பூச்சிகளும் இங்கில்லை என்றே ஆய்வுகள் சொல்கின்றன.. தேனி தவிர.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்கொட்லாந்தில் இல்லை. பாம்பு மட்டுமில்லை எந்த விஷப் பூச்சிகளும் இங்கில்லை என்றே ஆய்வுகள் சொல்கின்றன.. தேனி தவிர.//
      நல்ல செய்திதான்.
      தேனீயிடமும் கவனமாக இருக்க வேண்டும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      அடிக்கடி வாங்க, பதிவுகள் போடுங்கள்.

      யூட்யூபில் காணொளி போடுகிறீர்களா? எனக்கு காட்டவில்லையே!

      நீக்கு
  13. ராட்டில் ஸ்னேக் பற்றி நிறைய காணொளிகளும் அனிமல் ப்ளானட்டிலும் பார்த்திருக்கிறேன், திரைப்படங்களும் பார்த்திருக்கிறேன். என்ன இருந்தாலும்...பாம்பு என்றாலே பயம்தான்.

    உங்களுக்கு அது மனதில் இருந்துகொண்டே இருக்கும் இன்னும் சில நாட்களுக்கு. தரையையே பார்த்து நடக்கச் சொல்லும் மனது.

    சாரின் படங்கள், நினைவுகள் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சின்ன வயதிலேயே மறைவது உண்மையாகவே ரொம்பவே வருத்தம்.

    மற்ற படங்கள் அருமை. துளசி, இந்த மாதிரிச் செடிகள்லாம் எவ்வளவு பைசா என்று எழுதலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //ராட்டில் ஸ்னேக் பற்றி நிறைய காணொளிகளும் அனிமல் ப்ளானட்டிலும் பார்த்திருக்கிறேன், திரைப்படங்களும் பார்த்திருக்கிறேன். என்ன இருந்தாலும்...பாம்பு என்றாலே பயம்தான்.//

      ஆமாம், எத்தனைதான் பார்த்து இருந்தாலும் நேரில் பார்த்தால் பயம் தான்.

      //உங்களுக்கு அது மனதில் இருந்துகொண்டே இருக்கும் இன்னும் சில நாட்களுக்கு. தரையையே பார்த்து நடக்கச் சொல்லும் மனது.//

      ஆமாம், அப்படித்தான் இருக்கிறது மனது. தோட்டத்தில் இருக்கும் தொட்டிகளை அடிக்கடி நகர்த்தி வைப்பான் மகன்.அதன் அடியில் வந்து தேள் அமர்ந்து கொள்ளும் என்பான். எப்ப்டியோ குட்டி தேள்கள் வீட்டீற்குள் வந்து விடும். போனமுறை வந்த போது வீட்டு ஹால் சுவற்றில் குட்டித்தேள் போய் கொண்டு இருந்தது மகன் அடித்தான், அப்போது "கடவுள் காப்பாற்றினார் கண்ணில் காட்டினார்." என்று சொன்னேன், அதற்கு பேரன் "என் அப்பா காப்பாற்றினார் நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்கள்" என்று சிறு வயதில் கேட்டான்.

      //சாரின் படங்கள், நினைவுகள் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சின்ன வயதிலேயே மறைவது உண்மையாகவே ரொம்பவே வருத்தம்.//


      என்ன செய்வது இறைவனின் திருவுள்ளம் .நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


      //மற்ற படங்கள் அருமை. துளசி, இந்த மாதிரிச் செடிகள்லாம் எவ்வளவு பைசா என்று எழுதலையே//

      துளசி நம் ஊர் துளசி கிடைக்கவில்லை, அடுத்த முறை வரச் சொல்லி விட்டார்கள். தாய் துளசி என்று சமையலுக்கு மணம் ஊட்டும் துளசி. அதுதான் வாங்கி வந்தோம், மருதாணி விலை அதிகம் துளசி 5 டால்ர் என்று நினைக்கிறேன். பண்ணை வீடு அடைக்கும் நேரம் ஆகி விட்டது, கவின் வேறு வீட்டுக்கு போக வேண்டும் என்றான் அதனால் விலைகளை பார்க்கவில்லை நான்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  14. படங்கள் அழகு
    பாம்பு, தேள் கொல்லக் கூடாது- வியப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      பாம்பு , தேள் கொல்லக்கூடாது பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. அன்பின் கோமதி,
    எல்லா அழகும் நிறைந்த இடத்தில் இப்படி பெயர் சொல்லாதது வந்து விட்டதே. அதுவும் கொடூர விஷம் கொண்டது.
    அதன் வாலில் ராட்டில் இருப்பதால் தான் அந்தப்
    பெயர். அதையும் தைரியமாகப்
    படம் எடுத்திருக்கிறீர்கள். நான் காணொளியைக் காலையில் காண்கீறேன்
    அம்மா.

    இரும்பு, சிமெண்ட் ,தகரம் என்று பல கைவினைப் பொருட்கள்
    எல்லாமே நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //எல்லா அழகும் நிறைந்த இடத்தில் இப்படி பெயர் சொல்லாதது வந்து விட்டதே. அதுவும் கொடூர விஷம் கொண்டது.//

      அதை தொந்திரவு செய்தால்தான் அது கடிக்குமாம்.
      அது அரவம் கேட்டு வாலை ஆட்டி எச்சரிக்கை செய்யுமாம். நாம் நகர்ந்து விட்டால் துன்பம் தராது என்கிறார்கள்.

      ஜெயா தொலைக்காட்சி காணொளி பாருங்கள் ஆமை மேல் அமர்ந்து சவாரி செய்கிறது அவைகள் நட்பாக இருக்கிறது.

      //இரும்பு, சிமெண்ட் ,தகரம் என்று பல கைவினைப் பொருட்கள்
      எல்லாமே நன்றாக இருக்கின்றன.//

      ஆமாம், அக்கா எல்லமே நன்றாக இருக்கிறது.



      நீக்கு
  16. சாருடன் எடுத்த படங்கள் அருமை.
    பேரனுக்குத் தாத்தாவிடம் என்ன செல்லம் பாருங்கள்!!
    குழந்தை நன்றாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், தாத்தா முதுகில் சவாரி செய்வான், படுத்து இருந்தால் மேலே வந்து படுப்பான் , மடியில் உட்கார்ந்து கதைகள் சொல்வான். அவனுக்காக இன்னும் சில வருடங்கள் இருந்து இருக்கலாம் என்று நினைப்பேன். இரண்டு தாத்தாவும் இல்லை.

      //குழந்தை நன்றாக இருக்க வேண்டும்.//
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  17. எப்பொழுதுமே சங்கரன் கோவிலுக்கும் கோமதி அம்மனுக்கும் அம்மா வேண்டிக் கொள்வார்.
    பத்திரமாக இருங்கள் கோமதிமா.
    ஷூ போட்டுக் கொண்டு தோட்டம் செல்லுங்கள். அதுவும் இந்தக் கோடை வெய்யிலுக்கு
    நிறைய வெளியில் வரும்.

    கடி படுபவரளின் விகிதாசாரம் குறைவாக இருப்பது நிம்மதி.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எப்பொழுதுமே சங்கரன் கோவிலுக்கும் கோமதி அம்மனுக்கும் அம்மா வேண்டிக் கொள்வார்.//

      ஆமாம் அக்கா, நீங்கள் முன்பு சொல்லி இருக்கிறீர்கள்.

      //பத்திரமாக இருங்கள் கோமதிமா.
      ஷூ போட்டுக் கொண்டு தோட்டம் செல்லுங்கள். அதுவும் இந்தக் கோடை வெய்யிலுக்கு
      நிறைய வெளியில் வரும்.//

      கவனமாக இருக்கிறேன். அடசல் இல்லை தோட்டத்தில்.
      வெயில் காலம் தேள் வீட்டுக்குள் எப்படியாவது வந்து விடுமாம் நேற்று ஒன்று கண்ணில் பட்டது ஆனால் செத்து போய் இருந்தது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.




      நீக்கு
  18. காலடியில் பாம்பா..? அம்மாடியோ..!
    இரும்பில் செய்யப்பட்ட கள்ளி, ஃப்ளமிங்கோ பறவை எல்லாம் அழகாகவும், நிஜம் போலவும் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //காலடியில் பாம்பா..? அம்மாடியோ..!//

      இப்போது நினைத்தாலும் நம்பமுடியவில்லை.

      //இரும்பில் செய்யப்பட்ட கள்ளி, ஃப்ளமிங்கோ பறவை எல்லாம் அழகாகவும், நிஜம் போலவும் இருக்கின்றன.//

      ஆமாம், நிஜம் போலவே!


      நீக்கு
  19. //போன முறை வந்த போது எடுத்த படங்கள் சில நினைவுகளைத் தாங்கி வருகிறது.// சில சமயங்களில் நின
    நினைவுகள் சோகத்தை கிளறி விட்டு விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சில சமயங்களில் நின
      நினைவுகள் சோகத்தை கிளறி விட்டு விடும்.//

      ஆமாம், ஆனால் நினைக்காமல் இருக்க முடியவில்லையே

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பண்ணை வீடு படங்கள் நன்றாக உள்ளன. தகவல்களும் புதிது. 2017 ல் எடுத்த படங்களும், இப்போது எடுத்த படங்களும் நன்றாக உள்ளது.

    உயரமான கள்ளிச் செடிகள் படம் நன்றாக இருக்கிறது. ஒவ்வொன்றும் எவ்வளவு உயரம். பார்க்கும் போதே பிரமிப்பாக உள்ளது. உங்கள் கணவர் பேரனுடன் இருக்கும் படங்களும் பார்த்ததும் மனதுக்கு கஸ்டமாக உள்ளது.என்ன செய்வது? மனதை தேற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் அப்போது அதே இடத்தில் பாம்பு இருக்கும் என்பதறியாது நிறைய புகைப்படங்களுக்கு போஸ் தந்திருக்கிறார்களே .. அப்போது யாரும் பார்க்கவில்லை போலும்.

    சிமிண்டில் செய்த கலைப் பொருட்கள், தகரத்தில் செய்த கள்ளிச்செடி, செடி வைக்கும் தொட்டிகள் எல்லாமே நன்றாக உள்ளது. மூன்று தவளைகள் கண்,வாய், காது மூடி நம்மூர் குரங்கு பொம்மைகள் போல போஸ் தரும் படம் அழகாக உள்ளது.

    இரும்பில் செய்த பிளமிங்கோ பறவை கம்பீரமாக உள்ளது. அணில் பொம்மை மற்ற பொம்மைகள் அனைத்தும் அழகாக அம்சமாக உள்ளது.

    இப்போது அதே இடத்திற்கு செல்லும் போது எடுத்த படங்களும் நன்றாக உள்ளது. காணொளியும் கண்டேன். பாம்பு அருகில் இருப்பதை பார்க்காமல் அதனருகிலேயே பறவையை படம் எடுக்க சென்றுள்ளீர்களே.. நல்லவேளை...! அது ஒன்றும் பண்ணாமல், அது தன்னை வெளிக்காட்டிக் கொண்டு நகர்ந்து சென்றுள்ளது. அது ஊர்ந்து செல்லும் படம் அருமை. தேளும் பயந்தான்.. கவனமாக இருங்கள். வெளிச்சம் இருக்கும் பகல் பொழுதில் தோட்டத்துக்கு சென்று வாருங்கள். நான்தான் தாமதமாக வந்து கருத்து தெரிவித்துள்ளேன் மன்னிக்கவும். எல்லா படங்களும் நன்றாக எடுத்துள்ளீர்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. பண்ணை வீடு படங்கள் நன்றாக உள்ளன. தகவல்களும் புதிது. 2017 ல் எடுத்த படங்களும், இப்போது எடுத்த படங்களும் நன்றாக உள்ளது.//

      நன்றி.

      //பாம்பு இருக்கும் என்பதறியாது நிறைய புகைப்படங்களுக்கு போஸ் தந்திருக்கிறார்களே .. அப்போது யாரும் பார்க்கவில்லை போலும்.//

      அப்போது எனக்கு தெரியவில்லை.
      மகன் நடைபயிற்சிக்கு போகும் போது பாத்து இருப்பதாய் எங்களுக்கு படங்கள் அனுப்பி இருக்கிறான்.

      பதிவில் போட்ட படங்கள், காணொளிகள் அனைத்துயும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.

      //பாம்பு அருகில் இருப்பதை பார்க்காமல் அதனருகிலேயே பறவையை படம் எடுக்க சென்றுள்ளீர்களே.. நல்லவேளை...! அது ஒன்றும் பண்ணாமல், அது தன்னை வெளிக்காட்டிக் கொண்டு நகர்ந்து சென்றுள்ளது.//

      ஆமாம், இறைவன் திருவுள்ளம். கவனமாக இருக்கிறேன். காலை மட்டும் தான் தோட்டத்தில் பூ பறிப்பேன்.


      //நான்தான் தாமதமாக வந்து கருத்து தெரிவித்துள்ளேன் மன்னிக்கவும்.//

      நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொல்லுங்கள் போதும் மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம், நான் நிறைய தடவை சொல்லி விட்டேன்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கம்லா.












      நீக்கு