ஞாயிறு, 25 ஜூலை, 2021

ஏரிக்கரை பூங்காற்றே!

ஏரிக் கரையோரம்

வடக்கு அரிசோனாவின் கைபாப் தேசிய வனத்தில் இந்த ஏரி அமைந்து இருக்கிறது. இந்த இடத்திற்கு புதன் கிழமை காலையில்  மகன் அழைத்து போனான். இந்த ஏரிக்கு  " cataract   Lake " என்று பேர். "கண்புரை ஏரி" என்று ஏன் பேர் வந்தது தெரியவில்லை.  சூரிய ஒளியை வரவிடாமல் மரங்கள் மறைத்து இருப்பதால் இந்த பேர் வந்து இருக்கும் போல !

ஓங்கி வளர்ந்த பைன் மரங்கள் இந்த பகுதியை அழகு படுத்துகிறது. எல்லா நாளும் இங்கு காலை முதல் மாலை வரை  பார்க்கலாம். மகன் வீட்டிலிருந்து  2  மணி  நேரம் பயணம் செய்தால் இந்த அழகிய இடம் வரும்.

இந்த மரங்கள் உள்ள பகுதி  குழந்தைகளுக்கு ஒடி பிடித்து விளையாட பிடித்த இடம்.

பேரன் சொன்னான் நண்பர்களுடன் வந்து இருந்தால் ஓடி பிடித்து விளையாடலாம் என்று.  எங்கு  சுற்றுலா சென்றாலும் இரண்டு மூன்று  நண்பர்கள் குடும்பத்துடன்   வருவார்களாம் .  போன சுற்றுலாவில் மருமகளின் தோழி குடும்பம் இருந்தது நன்றாக இருந்தது.


ஏரிக்கு பக்கத்தில் உள்ள வில்லியம்ஸ் என்ற ஊர் சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்ற இடம் . ஆர்.வி மற்றும் மோட்டர் ஹோம்  முகாம்கள்  உள்ளன. விடுமுறையை  கழிக்க  ஏற்ற இடம். அரிசோனாவின் கடுமையான கோடை காலத்தில் இங்கு வந்தால் முற்றிலும் மாறுபட்ட ஒரு சீதோஷண நிலை. நல்ல காற்று மிதமான குளிர் எல்லாம்  நம் குற்றாலம் போல் இருக்கிறது.  ஏரிக்கரை பூங்காற்று  பொதிகை தென்றல் காற்று போல்  நம்மை தழுவி செல்கிறது.

இந்த ஏரி கொலரடோ பீட பூமியில் 6,800 உயரத்தில் அமைந்து இருக்கிறது. கோடையில் வெப்ப நிலை  இரவில் 50 டிகிரி, இரவு 80 முதல் 90 டிகிரி வரை இருக்குமாம்.

ஜூலை முதல், ஆகஸ்ட் வரை  பலத்த இடி மின்னலுடன் மழை இருக்குமாம் . அதனால் நாங்கள் குடை,  மற்றும் மழைக்கு ஏற்ற உடை, குளிருக்கு ஏற்ற போர்வைகள் எடுத்து போனோம்.

டிசம்பர் முதல் மார்ச் வரை பனி இருக்குமாம்.

இங்கு மீன்பிடிக்கிறார்கள்,  பகலில் மட்டுமே அனுமதி. இரவில் முகாம் அமைத்து தங்க முடியாது. சுத்தமாக பராமரிக்கிறார்கள். கழிப்பறை வசதி இருக்கிறது. இங்கு எங்கு சுற்றுலா சென்றாலும் கழிப்பறை வசதி இருக்கிறது.  குப்பைத்தொட்டிகள் பெரிதாக ஒவ்வொரு இடங்களிலும் வைத்து இருக்கிறார்கள். சுற்றுப்புறத் தூய்மை கடை பிடிக்க படுகிறது. அது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.

வெகு தூரத்தில் (அக்கரையில்) ஒருவர் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்.

ஆர்.வியில் வந்தவர் முகாம் போட்டு இருந்தார்.  இரவு வில்லியம்ஸ் போய் விடுவார் என்று நினைக்கிறேன். இரவு இங்கு தங்க அனுமதி இல்லை. (அலைபேசியில் எடுத்தேன்)

விடுமுறை நாள் என்றால் கூட்டம் இருக்கும் என்பதால் வேலை நாளில் போனோம். கூட்டம் இல்லை. 

கானகப் பணியாளர்கள் மட்டும் தூரத்தில் சுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.


பக்கத்தில் இருக்கும்  ரயில் பாதையில் நீண்ட தூரம் போகும் ரயில்கள் போய் கொண்டு இருந்தது. நிறைய பெட்டிகளுடன் சரக்கு ரயிலும் போய் கொண்டே இருந்தது.

காரை விட்டு இறங்கியவுடன் கவின்  "ஆச்சி அங்கே பாருங்கள் கொக்கு"என்று ஏரியில் நின்று கொண்டு இருந்த கொக்கை காட்டினான்.

பறந்து விட போகிறதோ என்று தூரத்திலிருந்து ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.

ஏரிக் கரைக்கு வந்தாலும்  கொக்கு தூரத்தில் தான் இருந்தது ஓரளவு எடுக்க முடிந்தது. ஒற்றைக் கால் தவம் போல் இருந்தது.

இந்த படத்தில் இரண்டு காலும் தெரிந்தது.  கடல் அலை போல் ஏரியின் நீரும் பார்க்க அழகாய் இருந்தது. 

தூரத்தில் முக்குளிப்பான்கள்  சென்று கொண்டு இருந்தது கூட்டமாய் ஒன்று மட்டும் முங்கி  குளித்து கொண்டு இருக்கு
தனிமையில் இனிமை காண்கிறது போலும் இந்த முக்குளிப்பான்

ஏரிக்கரை முழுவதும் இந்த மஞ்சள் பூ பூத்து அழகாய் இருக்கிறது.

காய்ந்த நாணல் புல், மஞ்சள் காட்டுப் பூக்களுக்கு இடையே  அன்பு பேரன் கவின். 

எதிர் கரையில் ஒருவர் மீன் பிடிக்கிறார், இக்கரையில் நாங்கள் நால்வர் மட்டுமே  இருந்தோம்.  

வானத்தில் கழுகு வட்டமிட்டுக் கொண்டு இருந்தது. மீன் மேலே வரும் போது கொத்தி செல்ல.

பிரியாணி, தயிர் வெங்காயம், உருளை சிப்ஸ்.

காலை உணவை வீட்டில் சாப்பிட்டோம்(இட்லி, சட்னி) மதியம் உணவை  கையில் எடுத்துக் கொண்டோம்.

இரண்டு நாட்களுக்கு வேண்டிய சமையல் சாமான்கள் எடுத்துக் கொண்டோம். தங்கும் இடத்தில் சமைத்து சாப்பிட.

மதிய வேளை ஆனதும் நாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு விட்டு  அங்கிருந்து வில்லியம்ஸ்  போனோம்.

அடுத்து அங்கு  எங்கு தங்கினோம் அங்கு கால நிலை எப்படி இருந்தது என்பது எல்லாம் அடுத்த பதிவில்.

வாழ்க வையகம்  ! வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன் !

----------------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

 1. ஏரிக்கரையும் அதன் அழகும் அருமை. முற்றிலும் புதிய இடங்கள். தேர்ந்தெடுத்துக் கூட்டிச் செல்கிறார் உங்கள் மகன். கொக்குகளைப் பார்த்தே நாட்கள் ஆகிவிட்டன. இங்கே படத்திலாவது பார்த்தேன். படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. இங்கே உள்ள சீதோஷ்ணம் விசித்திரமாக இருக்கும் போல! அடுத்து வரும் பதிவுக்குக் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //ஏரிக்கரையும் அதன் அழகும் அருமை. முற்றிலும் புதிய இடங்கள். தேர்ந்தெடுத்துக் கூட்டிச் செல்கிறார் உங்கள் மகன். கொக்குகளைப் பார்த்தே நாட்கள் ஆகிவிட்டன.//

   ஆமாம், அருமையான இடம் , அமைதியான இடம். கொக்குகள் நிறைய இல்லை ஒன்று நின்றது.

   முக்குளிப்பான்தான் நிறைய இருந்தது.

   //இங்கே உள்ள சீதோஷ்ணம் விசித்திரமாக இருக்கும் போல! அடுத்து வரும் பதிவுக்குக் காத்திருக்கேன்.//
   மகன் வீட்டிலிருந்து இரண்டு மணி தூரத்தில் சீதோஷ்ண நிலை மாறுபடுவது வியப்புதான்.
   நீங்கள் பதிவை எதிர்ப்பார்க்கிறேன் என்று சொன்னதால் இன்று ஒரு பதிவு போட்டு விட்டேன். காத்து இருக்கிறேன் என்று இப்போது சொல்லிவிட்டீர்கள் விரைவில் அருத்த பதிவு போடப் பார்க்கிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. அழகான படங்கள் பெயரன் கவினுடன் மகிழ்வாக இருங்கள். இதுதான் இறைவனின் பாக்கியம்.

  முக்குளிப்பான்கள் என்று குறிப்பிடுவது தாராவுதானே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //அழகான படங்கள் பெயரன் கவினுடன் மகிழ்வாக இருங்கள். இதுதான் இறைவனின் பாக்கியம்.//

   நன்றி. நீங்கள் சொல்வது போல் கவினுடன் மகிழ்ந்து இருக்கிறேன். அடுத்த மாதம் அவனுக்கு பள்ளி திரக்கிரது. நானும் மகள் வீட்டுக்கு போகிறேன்.

   //முக்குளிப்பான்கள் என்று குறிப்பிடுவது தாராவுதானே ?//

   அப்படியும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த முக்குளிப்பான்கள் முன்பு வீராணம் ஏரி பதிவில் குளிப்பதை போட்டு இருக்கிறேன்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   அழகான, அமைதியான இடம்தான்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. புகைப்படங்கள் மிக அழகு! பேரன் கவின் நன்றாக ரசித்துப் பார்க்கிறார்! எப்போதும் ஓவியர்களுக்கு ரசனை அதிகமாக இருக்கும்!
  சுவையான சுற்றுலா அனுபவங்கள் மனதுக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

   //புகைப்படங்கள் மிக அழகு! பேரன் கவின் நன்றாக ரசித்துப் பார்க்கிறார்! எப்போதும் ஓவியர்களுக்கு ரசனை அதிகமாக இருக்கும்!//

   புகைப்படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு.

   கவைனைப்பற்றி சொன்னதை கவினிடம் சொன்னேன் அவனிடம், அவன் உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னான்.

   //சுவையான சுற்றுலா அனுபவங்கள் மனதுக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்!//

   ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை.
   மனதுக்கு அமைதி ஆனந்தம் கிடைத்தது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 5. படங்கள் அழகாக இருக்கின்றன. கவின் என் பேரனுடைய சாயலாக இருக்கிறான்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
   படங்கள் அழகாக இருக்கின்றன.//
   நன்றி.

   உங்கள் பேரனும் கவின் சாயலா! மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   ஆமாம், அழகான இடம்தான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. அழகிய இடம். படங்களும் பகிர்வும் அருமை. ஏரியின் பெயருக்குத் தாங்கள் சொல்கியிருக்கும் காரணம் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //அழகிய இடம். படங்களும் பகிர்வும் அருமை//

   நன்றி ராமலக்ஷ்மி.

   //ஏரியின் பெயருக்குத் தாங்கள் சொல்கியிருக்கும் காரணம் சுவாரஸ்யம்.//
   பெயர் காரணத்தை ரசித்தமைக்கு நன்றி.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. ஏரியும் அதன் சுற்று வட்டாரமும் அவற்றுக்கான விரிவுரைகளும் அருமை..
  அழகான படங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //ஏரியும் அதன் சுற்று வட்டாரமும் அவற்றுக்கான விரிவுரைகளும் அருமை..
   அழகான படங்கள்...//

   நன்றி.

   நீக்கு
 9. இந்த அழகிய பதிவுக்காக!.. -

  கவினார் சோலை வெளி அழகு
  கவின் விளையாடல் தனி அழகு..
  கதிரும் மலரும் கலை அழகு
  குளிரும் நீரில் அலை அழகு..

  ஓங்கிடும் சிகரம் ஓரழகு
  உருகிடும் பனியும் பேரழகு..
  வாங்கிடும் வையகம் தான் அழகு..
  வையகம் தந்திடும் வாழ்வழகு..

  அமைதியில் தவழும் அலை அழகு
  அலையினில் ஆதவன் ஒளி அழகு..
  கரையினில் நாரை தவம் அழகு
  நுரையினில் தேடும் இரை அழகு..

  இரையுடன் கூடும் நிறை அழகு..
  நிறைதரு நித்திலத் தமிழ் அழகு..
  தமிழே தான் தரும் தவம் அழகு..
  தவமே தலையாய் குறள் அழகு..
  ஃஃஃ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கவினார் சோலை வெளி அழகு
   கவின் விளையாடல் தனி அழகு..
   கதிரும் மலரும் கலை அழகு
   குளிரும் நீரில் அலை அழகு..//

   அருமையான கவிதை.
   நன்றி. கவினுக்கு படித்து காட்டுகிறேன்(கவினை படிக்க சொல்கிறேன்)

   நீக்கு
  2. கவின் படித்து விட்டு நன்றாக இருப்பதாய் சொன்னான்.
   உங்களுக்கு தன் நன்றியை, வணக்கத்தை தெரிவித்தான்.

   நீக்கு
 10. தங்களது பதிவினைப் படிக்கும் போதே இந்தக் கவிதை நெஞ்சில் வரவாகி விட்டது...

  அலுவலக வேலை முடிந்து பேருந்தில் திரும்பும் நேரம்.. எனவே அப்போது பதிவு செய்ய இயலவில்லை..

  அறைக்கு வந்ததும் ஒழுங்கு செய்து இங்கே பதிவு செய்திருக்கின்றேன்...

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரகவி நீங்கள். சார் சொல்வர்கள் உடனே கவிதை எழுதுவது வரம் என்று.
   அது உங்களுக்கு வாய்க்கப்பெற்று இருக்கிறது.
   பேரன், பேத்திகளுக்கு கவிதை எழுதி அனுப்பி வைப்பீர்களா?
   தாத்தாவின் கவிதையை பொக்கிஷமாக பாதுகாப்பார்கள்.

   அலுவலக வேலைகளை முடித்து வந்தாலும் உங்களுக்கு வீட்டில் வேலைகள் இருக்கும் இதற்கு இடையில் கவிதை எழுதி அனுப்பியது மகிழ்ச்சி.
   நன்றி. கவின் தூங்குகிறான், எழுந்தவுடன் படிக்கச் சொல்லி கேட்டு அவன் கருத்தை பதிவு செய்கிறேன் சகோ.
   நன்றி நன்றி.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. இயற்கை எழில் சூழ்ந்த படங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஏரிக்கு தாங்கள் வைத்திருக்கும் பெயர் காரணத்தை ரசித்தேன். "ஏரிக்கரை பூங்காற்றே" தலைப்பை பார்த்ததும், தூறல் நின்னு போச்சு படப்பாடல் நினைவுக்கு வந்தது.

  அமைதியான அழகான இயற்கை சூழ்ந்த இடங்கள். மன அமைதிக்கு ஏரியின் அழகையும், அதில் வாழும் உயிரினங்களையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல உள்ளது.

  நம்மூரில் கொக்கு வெள்ளைக் கலரில் இருக்குமே... இது நாரைப் பறவையோ..? முக்குளிப்பான்கள் வரிசையாக செல்வது அழகாக உள்ளது. தங்கள் பேரனும் உங்களுக்குப் போட்டியாக எல்லாவற்றையும் கண்டு களிக்கிறார். நல்ல ரசிப்புத் தன்மை.. எல்லாபடங்களும் உணவு படமும் நன்றாக உள்ளது. அடுத்து சென்ற இடங்களை குறித்த பதிவுக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹ்ரிஹரன், வாழ்க வளமுடன்

   //பதிவு அருமை. இயற்கை எழில் சூழ்ந்த படங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஏரிக்கு தாங்கள் வைத்திருக்கும் பெயர் காரணத்தை ரசித்தேன்.//

   நன்றி .

   //"ஏரிக்கரை பூங்காற்றே" தலைப்பை பார்த்ததும், தூறல் நின்னு போச்சு படப்பாடல் நினைவுக்கு வந்தது.//

   எனக்கும் அந்த பாடல் நினைவுக்கு வந்தது.

   //அமைதியான அழகான இயற்கை சூழ்ந்த இடங்கள். மன அமைதிக்கு ஏரியின் அழகையும், அதில் வாழும் உயிரினங்களையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல உள்ளது.//

   நாங்களும் அப்படித்தான் பேசிக் கொண்டே வந்தோம். ஏரிக்கரையோரம் வீடு கட்டி வாழ்பவர்களுக்கு அருமையான இடம் ரசிக்க என்று.

   //நம்மூரில் கொக்கு வெள்ளைக் கலரில் இருக்குமே... இது நாரைப் பறவையோ..? முக்குளிப்பான்கள் வரிசையாக செல்வது அழகாக உள்ளது. //

   நம் ஊரிலும் கொக்கு எல்லா கலரிலும் இருக்கே கமலா . நாரை தான் கொக்கு. நாரைக்கு முக்தி கொடுத்தது என்ற திருவிழா மதுரையில் நடைபெறும் அல்லவா இந்த கொக்கைதான் காட்டுவார்கள். "நாராய் நாராய் செங்கால் நாராய் "என்று பாட்டு படித்து இருப்பீர்கள் பலவகை நாரைகள் இருக்கிறது.


   //நல்ல ரசிப்புத் தன்மை.. எல்லாபடங்களும் உணவு படமும் நன்றாக உள்ளது. அடுத்து சென்ற இடங்களை குறித்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.//

   பேரன் எனக்கு பிடிக்குமே என்று போகும் இடங்களில் எங்கு பறவையைப் பார்த்தாலும் சொல்லி விடுவான். முன்பே போன இடங்களை எனக்கு காட்ட கூட்டி போவாதால் அங்கு என்ன பறவையை முன்பு பார்த்தோம் என்பதையும் சொல்வான்.
   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
   நீக்கு
 12. அன்பின் கோமதி மா,
  அழகான பயணம். ஏரிக்கரை என்னும் போதே
  மர நிழலும், காற்றும்,நீல வானமும்
  ஒன்றாகக் கண் முன் விரிகிறது.

  குழந்தை கவின் என்னும் சொல் கனிவின் என்று சேர்ந்து வருகிறது.

  அன்புடன் மகன் அழைத்துச் சென்ற இடம்
  ,கொண்டு வந்த சாப்பாடு எல்லாமே
  நல்ல ரசனையுடன்
  அமைந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

   //அழகான பயணம். ஏரிக்கரை என்னும் போதே
   மர நிழலும், காற்றும்,நீல வானமும்
   ஒன்றாகக் கண் முன் விரிகிறது.//

   ஆமாம் அக்கா.

   //குழந்தை கவின் என்னும் சொல் கனிவின் என்று சேர்ந்து வருகிறது.//
   ஆமாம் அக்கா, வெளி இடங்களுக்கு போனால் என்னை பத்திரமாக பார்த்துக் கொள்வான்.
   நன்றி அக்கா.

   //அன்புடன் மகன் அழைத்துச் சென்ற இடம்
   ,கொண்டு வந்த சாப்பாடு எல்லாமே
   நல்ல ரசனையுடன்
   அமைந்திருக்கிறது.//

   ஊரில் இருக்கும் போது அவன் போய் வந்த இடங்களை நாங்கள் ரசிக்க என்று அனுப்புவான். மருமகள் செய்த உணவு படங்களை அனுப்புவான்.
   அவன் பார்க்கும் இடங்களை நாங்கள் பார்க்க வேண்டும் என்று விருப்பம் உடையவன்.


   நீக்கு
 13. நின்று தவம் செய்யும் கொக்கும்,
  வானில் வட்டமிடும் கழுகும்,
  குடும்பத்தோடு நீந்தும் வாத்துகளும்

  இயற்கையின் மோன தவத்தை மெய்ப்பிக்கின்றன.
  மிக நன்றி மா.
  அடுத்த பகுதிக்குக் காத்திருக்கலாம்.
  என்றும் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நின்று தவம் செய்யும் கொக்கும்,
   வானில் வட்டமிடும் கழுகும்,
   குடும்பத்தோடு நீந்தும் வாத்துகளும்//

   மிக அருமையான தருணம்

   //இயற்கையின் மோன தவத்தை மெய்ப்பிக்கின்றன.
   மிக நன்றி மா.//

   ஆமாம் அக்கா அதை கலைக்காமல் ரசித்து வந்தோம். பேரன் சத்தமாக பேசுபோதும் கூட மகன், மருமள் சத்தம் போட்டு பேசாதே என்றார்கள். அவ்வளவு அமைதியான இடம்.

   உங்கள் ரசனையான கருத்துக்களுக்கு நன்றி.


   நீக்கு
 14. பதிவின் தலைப்பு ஜேசுதாஸ் குரலில் மனதில் கேட்கிறது!  'சில்லென்று காற்று வந்ததோ' என்றும் கேட்கத் தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   //பதிவின் தலைப்பு ஜேசுதாஸ் குரலில் மனதில் கேட்கிறது! 'சில்லென்று காற்று வந்ததோ' என்றும் கேட்கத் தோன்றுகிறது!//
   பாட்டு ரசிகருக்கு பல பாடல்கள் நினைவுக்கு வருவதில் வியப்பு இல்லை.

   நீக்கு
 15. கவினின் முழங்கை சற்றே வளைந்து இருக்கிறதோ..  என் பாஸுக்கும் கை அப்படி இருக்கும்!  கொக்கின் படங்களும், முக்குளிப்பான்கள் படமும் அருமை.  உயரத்தில் பறக்கும் கழுகின் படமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவினின் முழங்கை சற்றே வளைந்து இருக்கிறதோ//
   இல்லை அவன் கையை அப்படி வளைத்து வைத்து இருக்கிறான்.

   //கொக்கின் படங்களும், முக்குளிப்பான்கள் படமும் அருமை. உயரத்தில் பறக்கும் கழுகின் படமும் அருமை.//

   நன்றி.


   நீக்கு
 16. ஓ..  மூன்று நாள் பயணத்திட்டமா?  அடுத்து எங்கே என்று அறிய ஆவலாய்க் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அடுத்து எங்கே என்று அறிய ஆவலாய்க் காத்திருக்கிறேன்.//
   இனி அடுத்த பதிவு போட கொஞ்ச படங்கள் வலை ஏற்றினேன். அதற்குள் என் பாஸ்போர்ட் (படசேமிப்பு செய்து வைத்து இருப்பது) கீழே விழ்ந்து விட்டதால் படம் காண்பிக்க மாட்டேன் என்கிறது. சேமிப்புகள் நிறைய இறைவன் அருள் இருந்தால் அவை மீண்டும் கிடைக்கும் பதிவு போடலாம்.

   மகன் கடையில் கொடுத்து ரிப்பேர் செய்ய முடியுமா என்று பார்ப்பதாக சொன்னான்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 17. அழகான படங்கள். தகவல்களும் சிறப்பு.

  அவ்வப்போது சிறு பயணங்கள் செல்ல முடிவது நல்ல விஷயம். தொடரட்டும் உங்கள் பயணங்கள். இங்கே பயணங்கள் செய்ய முடியாத சூழல் தான் இன்னும் தொடர்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   //அழகான படங்கள். தகவல்களும் சிறப்பு.//

   நன்றி.

   //அவ்வப்போது சிறு பயணங்கள் செல்ல முடிவது நல்ல விஷயம். தொடரட்டும் உங்கள் பயணங்கள்//

   ஆமாம், அதுதான் இந்த பயணம். பேரனும் இரண்டு டோஸ் ஊசி போட்டு விட்டான். இருந்தாலும் கூட்டம் இல்லா இடமாக பார்த்து வேலை நாளில் போய் வந்தோம்.
   நீங்கள் பயணங்கள் செய்ய ஏற்ற சூழ்நிலை விரைவில் அமைய வாழ்த்துக்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 18. அழகான ஏரி. உங்கள் பேரனுக்கு உங்களைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கிறது காரை விட்டு இறங்கியதும் கொக்கை உங்களுக்கு காட்டியிருக்கிறானே. முக்குளிப்பான் என்பது வாத்தின் ஒரு வகையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   பேரனுக்கு என் விருப்பன் தெரியும் அதுதான் எங்கு போனாலும் பறவையை கண்டால் எனக்கு காட்டி விடுவான்.
   முக்குளிப்பான் வாத்தை விட அதிகமாக பறக்கும் எல்லாம் அந்த வகையை சேர்ந்ததாகத்தான் இருக்கும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு