செவ்வாய், 11 ஜூலை, 2017

திடியன் மலை- பகுதி-2

கணவர் வரைந்த படம்

திடியன் மலை ஏற ஆரம்பித்தோம். இவ்வளவு வேகமாய் இல்லை  மெதுவாய்.

நேற்று இதன் முதல் பாகம் படிக்க  முந்திய பதிவில் சொன்னது போல் 
ஓ! எளிதாக இருக்கும் போல இருக்கே ! என்று எண்ணிய எண்ணம்  சரியா?

சிமெண்ட் படி முடிந்து விட்டது

வீடு கட்டும் கம்பியை வளைத்து ஒன்றுடன் ஒன்று கோர்த்து கைப்பிடிக்கு வைத்து இருந்தார்கள்.
பாறையில் செதுக்கிய படிகள். பத்துப் பத்து படிகள் ஊர்க்காரர்கள் உபயம்.
தொடர்ந்து போக முடியுமா இதில் என்று பயம் வந்து விட்டது, சிமெண்ட் படியில் ஓடி ஓடி இறங்கிக் கொண்டு இருந்த பையனிடம் கோவில் இன்னும் எவ்வளவு தூரம் என்றேன் அந்த பையன் சிரித்துக் கொண்டே ஒன்றும் சொல்லாமல் கீழே இறங்கி விட்டார்.

அவர் சொல்லி இருந்தால் நான் மேலே ஏறிப் போய் இருப்பேனா என்பது சந்தேகமே! படிகள் ஒழுங்கற்று இருந்தது. படியின் விளிம்பு   கீழ் நோக்கி சரிந்து இருந்தது.  என் கணவரிடம் என் கைப்பையைக் கொடுத்து விட்டு அலைபேசியை  போட்டோ எடுக்கும்போது மட்டும் வாங்கி எடுத்து விட்டு அவர்களிடம் கொடுத்து விடுவேன். 'ராம ராம' என்று சொல்லி ஏற ஆரம்பித்தோம். 7 மணிக்கு  ஏற ஆரம்பித்தோம். ஐயப்ப பக்தர்கள் சொல்வது போல் ஏற்றிவிடப்பா  ராமா ராமா என்று ஏற ஆரம்பித்தோம். இனி படிகளைப்பற்றி  தெரிந்து கொண்டுதான் மலை ஏற வேண்டும் என்று சொன்னேன்.

வாய் உலர்ந்து போனது. மலைக்கோவில் போகும்போது நெல்லிக்காய் கொண்டு போக வேண்டும் என்று தெரிந்து இருந்தது, ஆனால் இந்த மலைக் கோவில் திடீர் என்று அமைந்த பயணம்.(திடியன் மலைக்குத் திடீர்ப் பயணம்.) முன் ஏற்பாடு இல்லையே! அதனால் கொண்டு போகவில்லை. ஒரு பாட்டில் தண்ணீரைக்  கொஞ்சமாய்க் குடித்துக் கொண்டோம்.

வேறு சிந்தனை இல்லாமல் ராம நாமத்தை மட்டுமே சொல்லி ஏறினோம்.

உடைந்த கல் படியில் கொஞ்சம் சிமெண்ட் பூச்சு  , அடுத்து சின்ன சின்னதாய் வெட்டிய படிக்கட்டுக்கள்

மீண்டும் கொஞ்சம் சிமெண்ட் பூச்சுப் படிக்கட்டுக்கள்
அப்புறம்  செதுக்கிய படிக்கட்டுக்கள் கைப்பிடி மிகவும் தள்ளி இருந்ததால் கம்பி என்கைக்கு  எட்டவில்லை
 நான் இரண்டு கைகளால் தவழ்ந்தபடி 
 ஏற ஆரம்பித்தேன்.
மேலே இருந்து பார்த்தால் ஊர் தண்ணீர் இல்லாததால் காய்ந்து கிடக்கும் வயல்கள். காமிரா மறந்து விட்டதால் அலை பேசிதான். காமிரா கொண்டு போய் இருந்தாலும் எனக்கு எடுப்பது கஷ்டம் தான் காற்று வேறு தள்ளுகிறது.


படியில்லாமல் சிறிது தூரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கோவிலைப் பார்க்க முடியவில்லை.
கொஞ்சம் படிகள் தெரியுது
கோவில் தெரியுது வந்து விட்டது என்று   மகிழ்ந்தோம்
மீண்டும் கொஞ்சதூரம் சிமெண்ட்     நடை பாதை
என்னை முன்னாலே  போகவிட்டு அவர்கள் 'பின்னால் மெதுவாய் ஏறு கீழே பார்த்து வா' என்று சொல்லியே வந்வர்களைப் போட்டோ எடுப்பதற்காக முன்னாலே       போக வைத்தேன்.
இன்னும் சிறிது தூரம் தான் வந்து விட்டோம்  என்ற நிம்மதி

கோவிலும்  டவரும் தெரிகிறது 
வந்து விட்டோம் என்று நினைத்தால் இன்னும் போகிறது
நாங்கள் மேலே ஏறிப் போகும் வரை வெயில் வரவில்லை 
சூரியபகவான்  கருணை காட்டினார்.
கீழே இருக்கும் கைலாச நாதர் கோவில்  தீபத்திருநாள் அன்று கார்த்திகை மாதம்    ஏற்றும்  இடமும் கோவிலும் தெரிகிறது
கீழிருந்து   மேலே போக எங்களுக்கு  ஒன்றே   கால் மணி நேரம் ஆச்சு. நாங்கள் மேலே போகிறவரையில் யாரும் அங்கு வரவில்லை.

(மொத்தப்படிகள் 1100.அது தவிர படிகள் இல்லாமல் ஏற்றமான பாதையும் (ரேம்ப்) உண்டு.மேலே ஏறும்போது  படிகளை      எண்ணவில்லை. நாம ஜபம் மட்டும் தான். கீழே இறங்கும்போது தான் படிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டோம்.)

இவ்வளவு கஷ்டப்பட்டு  இறைவன் அருளால் ஏறி வந்தோம். நாமா ஏறினோம் என்ற மலைப்பு ! நாமா ஏறினோம் ! மலையப்பன்  அல்லவா ஏற்றிவிட்டார்.

 கீழ் இருந்து பார்த்த எனக்கு  பூட்டிய கதவு  அருகில் என் கணவர் நின்றதைப் பார்த்து   ஏமாற்றமாய் இருந்தது.

 வா வா சாமி தெரிகிறது  என்று கணவர்  அழைத்தை கேட்டு   எல்லையற்ற மகிழ்ச்சி . ராமர் மலை என்றார்கள். உள்ளே இருந்தது   என்ன சாமி? ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இருக்கிறமாதிரி இருக்கிறதே ! என்று  கேட்டுக்  கொண்டே  கணவரின் பக்கம் போய் பூட்டிய கதவு வழியாக பார்த்தேன்.

உள்ளே யார் இருந்தார்?  என்பதை அடுத்த பதிவில்.

                                                               வாழ்க வளமுடன்.

33 கருத்துகள்:

 1. அழகிய புகைப்படங்கள் வழிப்போக்கு செய்திகளோடு அருமை தொடர்கிறேன் சகோ
  த.ம.1

  பதிலளிநீக்கு
 2. கோமதி மேடம்.. உங்கள் சிரமம் எனக்குப் பல நினைவுகளை வரவழைத்துவிட்டது. எவ்வளவு படிகள், வழியில் தண்ணீர் அல்லது நிழலுக்கு ஒதுங்க இடம் இருக்கிறதா, ஏதேனும் திடீர் பிரச்சனை வருமா (சில இடங்களில், மலைப் பாதையில் வெறும் கால்வாயாக ஓடும் தண்ணீர் திடீரென்று எங்கோ மழை பெய்தால் காட்டுவெள்ளமாக வரும்) என்றெல்லாம் கேட்காமல் இந்த மாதிரி இடங்களுக்கு ஏறவே கூடாது. வழியில் பெரிய மழை பெய்தால் எங்கேயும் ஒதுங்கக்கூட முடியாது.

  நாங்கள், ஸ்ரீவில்லிபுத்தூரில், காட்டின் நடுவே ஆதி கோவில் இருக்கிறது என்று நடக்கச்சொன்னார்கள். 1 மணி நேரம் காட்டுப்பாதையில் கஷ்டப்பட்டு நடந்த பிறகு, டூவிலரில் வந்துகொண்டிருந்த அர்ச்சகர், இன்னும் கொஞ்ச தூரம்தான் என்று சொன்னார். நடந்தோம் நடந்தோம் ரொம்ப நேரம் நடந்தோம். கால்கள் உளைந்த பிறகு, 200-300 படிவேறு ஏறவேண்டும். ரொம்பக் கஷ்டப்பட்டோம் (என்னைவிட, நிறைய வயதானவர்கள் ரொம்பவும் சிரமப்பட்டார்கள்)

  கோவிலுக்குப் போய்விட்டு, பூட்டியிருந்தது என்று சொல்லிவிட்டீர்களே. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 4. படத்தைப் பார்த்த உடனேயே உங்கள் கணவர் வரைந்திருப்பாரோ என்று தோன்றியது (முன்னமேயே அவர் வரைந்த படங்களைப் பார்த்திருந்த ஞாபகம்). நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. ஒரு முறை சென்று வரத் தூண்டும் படங்கள்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
  அந்த ஊர்க்காரர் பேச்சை கேட்டுதான் போனோம்.
  அங்குள்ளவர்கள் சொல்லும் போது கஷ்டம் இருக்காது என்று நினைத்தோம்.
  போலீஸ் தகவல் தொடர்பு (சிக்னல்) டவர் இருக்கிறது. தினம் அத்தனைபடி மூன்று போலீஸ்காரர்கள் ஏறி வருகிறார்கள்.. நாங்கள் இறங்க்கி வரும் போது தான் அவர்களை பார்த்தோம் அவர்களைப்பற்றி அடுத்த பதிவில்.
  மலையில் உள்ள மஞ்சள் புல்லை எடுத்துப் போக ஒரு குடும்பமே மலை ஏருகிறது தினம்.
  எங்களுக்கு வயதாகி விட்டதால் சிரமம்.

  கோவில் திறந்து இருக்கவில்லையென்றாலும் கம்பி கதவு வழியாக பார்க்க வசதி இருந்தது. திரை போட்டு இருந்தால் இவ்வளவு கஷ்டபட்டு போய் இறைவனை பார்க்காமல் மனது வாடி போய் இருக்கும்.

  முதல் பதிவை படித்தீர்களா?

  சிறு வயதில் ஸ்ரீவில்லி புத்தூர் காட்டில் இருக்கும் கோவில் போனது நினைவு இருக்கிறது.
  நாங்கள் அப்போது சிவகாசியில் இருந்தோம், அப்பா அங்கு வேலை பார்த்தார்கள்.
  அடுத்த பதிவில் இறைவனை பார்க்கலாம் வாருங்கள் .

  என் கணவர் வரைந்த படம் தான்.
  போன பதிவிலும் வரைந்து இருந்தார்கள்.
  உங்கள் அக்கறையான யோசனைகளுக்கும், கருத்துக்கும், அனுபவ பகிர்வுக்கும் நன்றி.
  சாரிடம் சொல்லிவிட்டேன், சந்தோஷபட்டார்கள்.
  பதிலளிநீக்கு
 7. முந்தைய பதிவிலேயே நினைத்தேன்... நிறைய சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று...

  தரிசனம் பின் அனைத்தும் பறந்து போயிருக்கும்...

  பதிலளிநீக்கு

 8. ​இவ்வளவு வேகமாய் ஏறமுடிந்தால் நன்றாகத்தான் இருக்கும்! படம் அருமை.

  இதோ இதோ என்று படிகளே வந்து கொண்டிருப்பது படத்தில் பார்க்கும் எங்களுக்கே கஷ்டமாக இருக்கிறதே.. மலை ஏறும்போது நெல்லிக்காய் கொண்டு போகவேண்டும் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். நெல்லைத்தமிழன் சொல்வது போல ஒதுங்கக் கூட இடம் இல்லை.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. திடியன் மலை ஏற ஆரம்பித்தோம். இவ்வளவு வேகமாய் இல்லை மெதுவாய்.

  படம் பார்த்து இந்த ஆரம்ப வரியைப் படித்ததில் தேர்ந்த எழுத்துத் திறமை தெரிந்தது.

  இந்த இடம் எல்லாம் கேள்விப் பட்டதே இல்லை. உங்கள் இருவரின் இறை ஆர்வமும் அதற்கான பிடிப்பும் திகைக்க வைக்கிறது.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. திடியன் மலையின் உயரத்தைப் பார்த்த போதே ,ஏற வேண்டுமென்ற எண்ணம் எனக்கு காணாமல் போனது !உங்கள் மனோதைரியத்துக்கு பாராட்டுக்கள்:)

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  தரிசனம் ஆனபின் நீங்கள் சொன்னது போல் ஏறி வந்த களைப்பு போய் விட்டது.
  உங்கள் கருத்துக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  கீழே உள்ள படி போல் இருந்தால் சிறு வயது ஆட்கள் இப்படி வேகமாய் ஏறலாம். இந்த படியில் பார்த்து காலை வைக்க வேண்டும்.
  பெருமாள் மலை போன போது தான் எனக்கு தெரிந்தது ஒரு அம்மா நெல்லிக்காய் கொடுத்தார்கள் வாயில் போட்டுக் கொண்டு படியேறினால் களைப்பு இருக்காது என்று.
  நாங்கள் இறங்கி கொண்டு இருந்த போது அவர்கள் ஏறி கொண்டு இருந்தார்கள்.
  பதிவில் குறிபிட்டு இருக்கிறேண் ஸ்ரீராம்.

  சாரிடம் நமக்கு வயது ஆகி விட்டது இனி இது போல் கடினமான மலைப்பயணம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். ஆனால் நம கையில் என்ன இருக்கிறது?
  பார்ப்போம் முடிந்தவரை.
  உங்கள் கருத்துக்கும், சாரின் படத்தை ரசித்தமைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
  எழுத்து திறமையா!
  உங்கள் பெரிய மனதுக்கு நன்றி சார்.
  குருவைப் பார்க்க போனால் ரகுவம்ச தலைவன் மலையை பார்த்து வர சொல்லிவிட்டார்.
  முன் பதிவு படித்தீர்களா?

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
  உயரத்தைப் பார்த்ததும் நானும் மிரண்டேன்.
  பெரியவர் ஏறிவிடலாம் எளிதாக என்று சொன்னதால் ஏறி விட்டோம்.
  பெரியவர் கொடுத்த தைரியம் தான்.
  எங்கள் வண்டி மனோதைரியத்தில்தான் ஓடுது ஜி.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. முதல் பகுதியும் காலையில் படித்தேன். இப்போது இரண்டாம் பகுதியும்.

  ஓவியம் அழகு. 1100 படிகள்! எனக்கு ஐயர் மலை மற்று சிறுமலை சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள் நினைவுக்கு வந்தன.....

  அடுத்த பகுதி படிக்கும் ஆவலுடன்!

  பதிலளிநீக்கு
 16. கருத்துரை இடுவதற்கே மெய் சிலிர்க்கின்றது..

  திடியன் மலையைத் தாங்கள் காண வேண்டும் என்பதை விட வலைத் தள நண்பர்களும் காண வேண்டும் என்ற நல்லெண்ணம் தானே தங்களுடன் துணைக்கு வந்தது..

  நல்ல மனம் என்றும் வாழ்க..

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
  ஐயர் மலை நானும் ஏறி இருக்கிறேன்.
  1200 படியும் செம்மையான படி, இது போல் செதுக்கிய படிகள் இல்லை.
  அப்போது வயதும் குறைவு, அப்படியும் அப்போது கஷ்டமாய்தான் இருந்தது.
  ஐயர் மலை போலவே மலையின் உச்சியில் தான் கோவில்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  பதிவு எழுத ஆரம்பித்தவுடன், எங்கு சென்றாலும் தகவல் சேகரிப்பு,
  அதை பதிவிட எழும் எண்ணம் எல்லாம் உண்மையே!
  உங்களை போன்றவர்களின் அன்பான வாழ்த்தும் எங்களை வழி நடத்தி சென்றது.
  உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. உண்மையில் நீங்கள் ஏறவில்லை. அந்த ஆண்டவன் தான் ஏற்றி விட்டிருக்கிறார். அருமையான அனுபவம். நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. இன்னும் நீங்கள் சொன்ன சஸ்பென்ஸுக்குக் காத்திருக்கேன். :)

  பதிலளிநீக்கு
 20. இம்மாதிரி இடங்களுக்கெல்லாம் போகவேண்டும் என்று நினைத்தாலும் போகமுடியாது. கொடுத்து வைத்தவர்களே போகமுடியும். ராம நாமத்தை ஜபித்துக் கொண்டு போயுள்ளீர்கள். உங்கள் அக்கரை,ஆர்வம்,பக்தி இப்படி வெளிப்படுகிறது. திடியன் மலை உங்கள் நிஜ உரை மிக்க மகிழ்ச்சி. பக்தி வலையிற் படுவோன் காண்க. உங்களை் இருவரைப் பார்க்கிறேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் கீத சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
  நினைச்சுப் பார்க்காமல் கிடைத்த மலைக் கோவில் தரிசனம்.

  திடியன் பதிவு முடிந்தபின் வரும் பதிவில் சஸ்பென்ஸ் வரும்.

  காத்திருப்பு மகிழ்ச்சி தருகிறது. விநாயரின் விளையாட்டு பெரிய விளையாட்டு இல்லை
  சின்ன விளையாட்டு தான்.

  உங்கள் கருத்துக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.

  இறைவன் வாழும் இடங்களை புதிய இடங்களை பார்க்கும் ஆர்வம் உண்டு.
  முடிந்தவரை போவோம். வீட்டில் தொலைக்காட்சியில் ஆலய தரிசனம் காட்டுகிறார்கள்.
  எவ்வளவு கோவில்கள்! நம் ஆயுசு பத்தாது. அவ்வளவும் பார்க்கவும் முடியாது.
  இறைவன் பார்க்க அனுமதிக்கும் வரை பார்ப்போம் அக்கா.
  உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. படிகளைப் பார்த்த போதே அறிய முடிந்தது கடினமாகத்தான் இருக்குமோ என்று. மலையில் செதுக்கிய படிகள் இன்னும் கடினமாக இருந்திருக்கும் இல்லையா? கொஞ்சம் வழுக்கலாகவும் இருந்ததோ....என்றாலும் இறைவன் ஆணையிட்டுவிட்டால் அதை நாம்என்ன நினைத்தாலும் தவிர்க்க முடியாதே. ஆனால் நீங்கள் சென்றும் கோயில் பூட்டியிருப்பது கஷ்டமாக இருந்தது. திடியன் மலை தீடீர் பயணம்!!! இறைவனின் சித்தம் கிடைத்தது பேறு எனலாம்..

  ஸார் வரைந்த படம் அருமையாக இருக்கு...இரண்டு பதிவிலுமே...படத்தில் ஓடி ஓடி ஏறுவது போல இருக்கே வரைந்து விட்டு கிராஃபிக்ஸ் செய்ததோ? அருமை.. தொடர்கிறோம்...

  துளசி, கீதா

  பதிலளிநீக்கு
 24. படங்களைத் தொடர்ச்சியாய்
  பார்க்கவே உயரம் கண்ணைக் கட்டுது
  படங்களும் சொல்லிச் சென்றவிதமும்
  நிச்சயம் நானும் பார்க்கவேண்டும் எனும்
  எண்ணத்தை உண்டாக்கிப் போகிறது

  நெல்லிக்காய் விஷயம் புதியது
  'பயனுள்ளது.

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்..

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் கீதா, துளசிதரன், வாழ்க வளமுடன்.
  செதுக்கிய படி கொஞ்சம் சிரமம் தான். வழுக்கலாகவும் இருந்தது.
  எல்லாம் இறைவன் ஆணைப்படிதான் நடக்கும் என்று உணர்ந்த கணங்கள் இந்த பயணம்.
  சார் முதலில் படம் வரைந்து கிராஃபிக்ஸ் செய்தது தான்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்
  பாருங்கள் சார் .
  நெல்லிக்காய் விஷயம் எனக்கும் ஒருவர் சொன்னதுதான்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் பாராட்டுகள் மேம்

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும் , பாராட்டுகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

 29. மிகவும் கஷ்டப்பட்டு ஏறியுள்ளீர்கள் என்பது தாங்கள் காட்டியுள்ள படங்கள் + செய்திகள் மூலம் அறிய முடிகிறது. நான் சுமார் 30-35 ஆண்டுகளுக்கு முன்பு என் வயதான தாயாருடன் திருகழுங்குன்ற மலை ஏறினேன். படிகள் செங்குத்தாக சற்றே உயரமாக இருந்தன.

  சமீபத்தில் ஓர் பத்தாண்டுகள் முன்பு, ராணிபேட்டை அருகேயுள்ள சோளிங்கர் பெருமாள் கோயில் மலைக்கும் அதன் அருகே கொஞ்சம் தள்ளியிருந்த அனுமார் கோயில் மலைக்கும், என் நண்பர்கள் சிலருடன் தனித்தனியாக ஏறி இறங்கி வந்துள்ளேன். அதுவும் இதுபோல 1100*2 = 2200 + 600*2=1200 ஆகமொத்தம் போக வர 3400 படிகள். படிக்கு 10 குரங்குகள் வீதம் 34000 குரங்குகள் வேறு இருந்து தொல்லை கொடுத்தன. கையில் என்ன வைத்திருந்தாலும் அவற்றைப் பிடிங்கிக் கொண்டு போய் விடும். கீழேயுள்ள கடைகளில் நம் பொருட்களை வைத்து விட்டு, அவர்கள் வாடகைக்குத்தரும் (WALKING STICK) தடிக்குச்சி ஒன்றை வாங்கிக்கையில் வைத்துக்கொண்டு குரங்குகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொண்டு சென்றுவர வேண்டியதாக இருந்தது.

  சார் வரைந்துள்ள முதல் படம் அதுவும் அனிமேஷனில் ஜோர் ஜோர். பகிர்வுக்கு நன்றிகள்.

  >>>>>

  பதிலளிநீக்கு

 30. நெல்லைத்தமிழன் அவர்கள் சொல்லியிருப்பது போல இதுபோன்ற இடங்களுக்குச் செல்வது மிகவும் ரிஸ்க் ஆகும். கடும் வெயிலோ மழையோ இருந்தால் ஒதுங்கிக்கொள்ளக்கூட முடியாமல் போகுமே. எப்படியோ அதிக வெயிலும் இல்லாதது கேட்க மகிழ்ச்சியே. போதிய அளவு குடிநீரும் இல்லாமல் கஷ்டப்பட்டு மேலே ஏறியும்கூட கோயில் பூட்டியுள்ளது கேட்க வருத்தமாக உள்ளது. ராம நாம மஹிமை மட்டுமே தங்களை மேலே கூட்டிச்சென்றுள்ளது என்பதை என்னால் நன்கு உணரமுடிகிறது.

  பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  நாங்களும் திருகழுகுன்றம் போய் இருக்கிறோம்.
  அங்கு குரங்களிடமிருந்து தப்பிக்க குச்சியுடம் சென்றோம்

  சோளிங்கர் பெருமாள் கோயில் போனது இல்லை.
  உங்கள் நினைவுலகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

  நெல்லை தமிழன் அவர்கள் சொன்னது போல் மழை, கடும் வெயில் வந்தால் கஷ்டம் தான்.வெயிலுக்கு முன் போய் விட்டோம். இறங்கும் போது மட்டும் கொஞ்சம் வெயில்
  இறைவன் அருளால் நல்லபடியாக சேவித்து வந்து விட்டோம்.

  உங்கள் கருத்துக்கு நன்றி சார்.  பதிலளிநீக்கு
 32. ராமலக்ஷ்மி has left a new comment on your post "திடியன் மலை- பகுதி-2":

  சார் வரைந்த படமும், நீங்கள் எடுத்தப் படங்களும் பகிர்வும் அருமை. //

  வணக்கம் ராமலக்ஷ்மி , வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.
  நெட் சரியாக வேலை செய்யவில்லை என்றால் கருத்தை பதிவு செய்ய மாட்டேன் என்கிறது மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு