திங்கள், 8 ஜூலை, 2024

மெக்சிகோவில் உள்ள சாண்டோ ஒயின் ஆலை



1888  ம்ஆண்டு  இந்த ஓயின் ஆலை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது
கட்டிடம் படரும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது


மே 31 ஆம்  தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன். லாஸ் ஏஞ்சலஸ்  ஊரிலிருந்துகிளம்பி  மெக்சிகோ வரை பயணம்.

கப்பல் பயண அனுபவங்கள் தொடர் பதிவாக இங்கு இடம்பெறுகிறது.  மெக்சிகோவில் சில இடங்களை பார்த்தோம்  அவை இந்த பதிவில்.

எங்கள் வழிகாட்டி இசாபெல் "சாண்டோ தாமஸ் "என்கிற  பழமையான  ஓயின் ஆலைக்கு அழைத்து சென்றார் 





இதற்கு முந்திய பதிவுகள்.


மது உடம்புக்கு கேடுதரும். மதுவால் மக்கள் படும் துயர்கள் அறிவோம். அப்படி இருக்கும் போது மது தயாரிக்கும் இடத்திற்கு போய் வந்ததை பதிவு போட்டு இருக்கிறார்களே என்று நினைக்காதீர்கள். எங்கள் மெக்சிகோ வழிகாட்டி அவர் ஊர் பெருமையை காட்ட அழைத்து போனார்.

 மேலை நாட்டில் அமெரிக்காவில்  மதுவின் மிதமான பயன்பாட்டை அறிவுறுத்துகிறது.

//அமெரிக்க உணவுக்கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களில் ஒரு நாளைக்கு ஆண்கள் இரண்டு மதுபானங்களுக்கு மேலன்றியும், பெண்கள் ஒரு முறை மட்டுமே மதுபானத்தை அருந்தலாம் என்று உள்ளது.//

நன்றி விக்கிபீடியா.

இது அவர்கள் கலாச்சாரம்.  எந்த நாடாக இருந்தாலும்  மது, மற்றும் போதை பழக்கம்  ஒழிக்கப்பட வேண்டும். 



ஒயின் ஆலையாக இருந்த இடத்தில்  இப்போது ஒயின் கடை மட்டும் இருக்கிறது. வாசலில் ஒரு பையன் ஏதோ டப்பக்களில் வைத்து விற்று கொண்டு இருந்தான்  யாரும் எதுவும் வாங்க வில்லை.

சாண்டோ தாமஸ் என்ற பெயரில் பல கட்டிங்கள் இருந்தன அந்த வளாகத்தில்


வளாகத்தின் நடுவில்  இரும்பு தடுப்புக்குள் பழைய காலத்து  தள்ளு வண்டி

இந்த மாதிரி பெரிய மர  பீப்பாய் பழைய காலத்து  பீப்பாய் காட்சிக்கு வைத்து இருந்தார்கள் போகும் வழியில்


பீப்பாயை இறுக்கி பிடித்து இருக்கும் இரும்பு தகடுகள்  பயங்கர கனமாக இருக்கிறது. பீப்பாய்கள் ஓக் மரத்தில் செய்யப்பட்ட பலமான பீப்பாய்கள்.


இன்னொரு இடத்திலும் இருந்தது. மெக்சிகோ ஊரில் போதை பழக்கமும், குடிபழக்கமும் அதிகம்  என தெரிகிறது. போதைபொருள் கடத்தலுக்கு  கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது.

பழைய மர பீப்பாய், மற்றும் மரத்தொட்டியில்   செடிகள் வைத்து இருந்தார்கள்

தரை எல்லாம் இப்படி வரைந்து வைத்து இருக்கிறார்கள்.

பழைய இரும்பு தகடுகளால்   மரம் செய்து வைத்து இருக்கிறார்கள்






அமரும் சிமெண்ட் மேடைகள் நடுவில் வட்டமாக பெரிய இரும்பு தகடுகள் தடுப்பில் மரம், செடிகள். கட்டிடத்தின் மேலும் படரும் கொடிகள். அரசமரத்தை சுற்றி மேடை அமைத்து இருக்கும் நம் ஊரில் அது போல இருக்கிறது.

அங்கு அமர்ந்து இருப்பவர்கள் ருசிக்க ஐஸ்வண்டியில் பலவகை ஐஸ்  விற்கிறார்

பழைய காலத்து துருபிடித்த சைக்கிள்  இரும்பு கம்பியில் கட்டி வைத்து இருந்தார்கள். காட்சிக்கா? அல்லது பயன்படுத்துபவர் கட்டி வைத்து இருக்கிறார தெரியவில்லை.


எங்கு பார்த்தாலும் பழைய காலத்து  மெஷின்கள்  காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது


கட்டிடத்தின் சுவர் எல்லாம் ஓவியங்கள்

ஆலை இருந்த இடத்தில் இப்போது  கண்ணாடி அலமாரியில்  ஒயின் பாட்டில்கள் 





நம் வழிகாட்டி வாங்க விருப்பபட்டவர்களுக்கு  மதுவைப்பற்றி சொல்கிறார்.

எல்லோருக்கும் ரொட்டி துண்டுகள் சிறிதாக (ரஸ்க் அளவில் இருந்தது) கொடுக்கிறார்கள். ருசித்துப்பார்த்து வாங்க சிறு சிறு கிண்ணங்களில் கொடுக்கிறார்கள் மதுவை.









இந்த மாதிரி பீப்பாய்களை "அலிபாபாவும், நாற்பது திருடர்களும்" படத்தில் பார்த்து இருக்கிறோம்.  அலிபாபா வீட்டுக்கு 40 திருடர்களின்   தலைவன் எண்ணெய் வியாபாரியாக  வருவான் , மற்ற திருடர்கள்  இந்த மரப்பீப்பாயில் ஒளிந்து கொண்டு வருவார்கள்.  அலிபாபா மனைவி தந்திரமாக அனைவரையும் மலை அருவியில் தள்ளி கொன்று விடுவார். அந்த காட்சி நினைவுக்கு வந்தது. பானுமதியின் பாட்டும் நடனமும் நன்றாக இருக்கும்.பீப்பாய்களை   நீர் வீழ்ச்சியில் தள்ளும் காட்சியில்  எம்.என் ராஜம், சாரங்கபாணியின் நடிப்பு  நல்ல சிரிப்பு. பிடித்து இருந்தால் பாருங்கள்.


இப்போது இப்படி காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள்

ஒரு வகை மெஷின்

இதுவும் ஏதோ மிஷின் பழைய பொருட்களை  ஒவ்வொரு இடத்திலும் காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள்

கடைக்குள் இருந்த பழைய காலத்து மெஷின்

பேரன் சக்கரத்தை சுற்றிப்பார்க்கிறான்


   எல்லோரும்   வரும் வரை வாசலில் இருந்த இந்த குடை நாற்காலியில் அமர்ந்து நாங்கள் வேடிக்கைப்பார்த்தோம், அப்போது  இன்னொரு பஸ்ஸில் மக்களை அழைத்து வந்த வழிகாட்டி  கையில் மது பாட்டிலுடன் எங்களை  "ருசித்து பார்க்கிறீகளா" என்று கேட்டுக் கொண்டு    நிறைய பேருடன்  அங்கு   வந்து அமர்ந்தார். நாங்கள் "வேண்டாம்  கேட்டதற்கு நன்றி " என்று  சொல்லி அவ்விடத்தை விட்டு வேறு இடம் சென்று அமர்ந்து வேடிக்கைப்பார்த்தோம்.


மகன் அப்படியே "அந்த பக்கம் ஏதோ கடை தெரிகிறது என்ன என்று பார்த்து வருகிறேன்" என்று போய் பிளாஸ்டிக் டம்ளாரில் தோல் சீவப்பட்ட கிளிமூக்கு மாங்காய் துண்டுகள் லேசான காரம் தூவியது வாங்கி வந்தான். நன்றாக இருந்தது. (இனிப்பு, காரம், மிதமான புளிப்புமாக நன்றாக இருந்தது.)

அடுத்ததாக எங்கள் வழிகாட்டி  எங்கு அழைத்து போனார் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

46 கருத்துகள்:

  1. அவர்கள் ஊர் தட்பவெப்பத்துக்கு மது கொஞ்சமாவது அவர்களுக்கு,க்கு தேவையாய் இருக்கலாம்.  அவர்களை பார்த்து உடையிலும் உஙவிலும் காபி அடிக்கும் நம் மக்கள் இதையும் இறுக்கப் பிடித்துக் கொண்டு விட்டார்கள்!  போதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அவர்கள் ஊர் தட்பவெப்பத்துக்கு மது கொஞ்சமாவது அவர்களுக்கு,க்கு தேவையாய் இருக்கலாம்//
      இருக்கலாம். குளிருக்கு சூடு தரும். மருந்தாக பயன்படுத்தி இருக்கிறார்கள் நம் நாட்டில் மருத்துவர்கள். இருமல் மருந்துகளில் ஆல்ஹகால் இருக்கிறது என்கிறார்கள்.

      போதை மருந்துகளும் அளவோடு வலி மருந்துகளில் கலக்கப்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் போதை.


      . //அவர்களை பார்த்து உடையிலும் உஙவிலும் காபி அடிக்கும் நம் மக்கள் இதையும் இறுக்கப் பிடித்துக் கொண்டு விட்டார்கள்! போதை!//

      நல்லதை கற்றுக் கொள்ளலாம்.

      நீக்கு
    2. அவர்கள், அந்த ஊர் தட்பவெப்ப நிலைக்கு கோட் சூட் அணிகிறார்கள். அதைப் பார்த்து நம்ம ஊர் வெயிலிலும் ஆபீஸுக்கு கோட் சூட் போட்டால்தான் மதிப்பு என்று சொல்பவர்களை என்ன சொல்வது?

      அரபிக்கள், அவங்க பாரம்பர்ய உடைக்கு மேல் கோட்டை அணிகிறார்கள். பார்க்க சிரிப்பாக இருக்கும்

      நீக்கு
    3. ஆமாம், உடைகளை அந்த அந்த நாடுகளுக்கு ஏற்பதான் அணிகிறார்கள். நம் ஊருக்கு கோட் சூட் தேவை இல்லைதான்.
      கல்லூரிக்கு முன்பு கட்டாயம் கோட் அணிந்து வர வேண்டும் என்ற போது கஷ்டபட்டுக் கொண்டே என் கணவர் அணிந்து போனார்கள்.
      சில வருடங்களுக்கு பின் வேண்டாம் என்ற போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

      //அரபிக்கள், அவங்க பாரம்பர்ய உடைக்கு மேல் கோட்டை அணிகிறார்கள். //

      பாலைவனத்தில் மணல் புயல் வரும் போது அதிலிருந்து தற்காத்து கொள்ளவே அவர்கள் உடை தயார் செய்யப்பட்டது.
      அதற்கு மேல் கோட் என்பது கடினமாக இருக்கும்.

      நீக்கு
  2. பீப்பாய் நேரில் பசர்க்கும்போது இன்னும் பெரிதாக இருக்கும் என்று தோன்றுகிறது.  இரும்பு மரம் வினோதம்.  சூனியக்கிழவி போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பீப்பாய் நேரில் பசர்க்கும்போது இன்னும் பெரிதாக இருக்கும் என்று தோன்றுகிறது. //

      நேரில் பார்க்கும் போது பெரிதுதான்.

      //இரும்பு மரம் வினோதம். சூனியக்கிழவி போல இருக்கிறது!//

      மரத்தின் பின் பக்கம் அப்படித்தான் எனக்கும் தோன்றியது, வெள்ளைமுடியை விரித்து போட்டுக் கொண்ட சூனிய கிழவி போலதான் இருக்கிறது.

      நீக்கு
  3. அடடே... அந்த ஊரிலும் நம்மூர் போல தள்ளுவண்டி ஐஸ்....பத்து பைசா பால் ஐஸ் இருக்கான்னு பார்த்தீர்களா?!! சைக்கிள் சரி, அந்த இஷினில் என்ன செய்திருப்பார்கள் என்று யோசனை ஓடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடடே... அந்த ஊரிலும் நம்மூர் போல தள்ளுவண்டி ஐஸ்....பத்து பைசா பால் ஐஸ் இருக்கான்னு பார்த்தீர்களா?!!//

      பார்க்கவில்லை ஸ்ரீராம். பல இடங்களில் இந்த ஐஸ் தள்ளுவண்டியை பார்த்தேன்.

      //சைக்கிள் சரி, அந்த இஷினில் என்ன செய்திருப்பார்கள் என்று யோசனை ஓடுகிறது!//

      ஆமாம், நானும் மெஷினில் என்ன செய்து இருப்பார்கள் என்று நினைத்தேன்.

      நீக்கு
  4. பானுமதியின் நளினமில்லாத நடனம் பார்த்தேன்!!!  அதற்கப்புறம் என்ன ஆகி இருக்கும் என்று யு டியூப் சென்று பார்க்க வேண்டும்.  எள்ளும் கொள்ளும் வெடிக்கும் எம் ஜி ஆர் முகம் அழகு.  அந்தப் பாடல்  கேட்கும்போது ஒரு சமீப பாடல் நினைவுக்கு வருகிறது.  'ஆட்டமா தேரோட்டமா' எனும் பாடல்.  கொஞ்சமாய் காபி அடித்து விட்டார்களோ என்னவோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பானுமதியின் நளினமில்லாத நடனம் பார்த்தேன்!!! அதற்கப்புறம் என்ன ஆகி இருக்கும் என்று யு டியூப் சென்று பார்க்க வேண்டும்//

      படம் பார்த்தது இல்லையா நிறைய தடவை தொலைகாட்சியில் வைத்தார்களே!

      //எள்ளும் கொள்ளும் வெடிக்கும் எம் ஜி ஆர் முகம் அழகு.//
      தன் மனைவி அந்நியர் முன் நடனம் ஆடுவது அவருக்கு விருப்பம் இல்லை அதனால் வந்த கோபம். கெஞ்சி அனுமதி பெற்று ஆடுவார்.

      //அந்தப் பாடல் கேட்கும்போது ஒரு சமீப பாடல் நினைவுக்கு வருகிறது. 'ஆட்டமா தேரோட்டமா' எனும் பாடல். கொஞ்சமாய் காபி அடித்து விட்டார்களோ என்னவோ!//

      இரண்டும் என்ன ஒற்றுமை என்று கேட்டுப்பார்க்க வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. தப்புத்தப்பாய் எழுத்துப் பிழைகளுடன் கமெண்ட் போட்டாலும் புரிந்து கொண்டு பதில் சொல்லி விடுகிறீர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தப்புத்தப்பாய் எழுத்துப் பிழைகளுடன் கமெண்ட் போட்டாலும் புரிந்து கொண்டு பதில் சொல்லி விடுகிறீர்கள்! நன்றி!//

      வேகமாக தட்டச்சு செய்யும் போது சில நேரம் இப்படி ஆகும் தான்.

      நீக்கு
  6. படங்கள் வழக்கம் போல அருமை.

    தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது

    அலிபாபா காணொளி கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      /படங்கள் வழக்கம் போல அருமை.

      தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது//

      நன்றி.

      //அலிபாபா காணொளி கண்டேன்.//

      அலிபாபா காணொளி பார்த்தது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. எந்த நாடாக இருந்தாலும் மது, போதை இல்லாமல் வாழ முடியும் தான். அளவோடு என்பதற்கு அளவே இல்லை.

    அது அவங்க வழக்கம். நமக்குச் சரிப்பட்டு வராது. விலகி நிற்போம்.

    அவங்க கூட்டிக் கொண்டு போறப்ப போய் பார்ப்பதில் என்ன குறை, அதுவும் என்ன என்று தெரிந்து கொள்ளலாமே. நாம் சாப்பிடும் மருந்துகள் பலவற்றில் ஆல்கஹால் குறிப்பாக இருமல் மருந்துகளில் உண்டு. மருந்தாகக் கலப்பதுண்டுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //எந்த நாடாக இருந்தாலும் மது, போதை இல்லாமல் வாழ முடியும் தான். அளவோடு என்பதற்கு அளவே இல்லை.

      அது அவங்க வழக்கம். நமக்குச் சரிப்பட்டு வராது. விலகி நிற்போம்.//

      ஆமாம், எந்த நாடாக இருந்தாலும் மது, போதை இல்லாமல் வாழ முடியும்.

      //அவங்க கூட்டிக் கொண்டு போறப்ப போய் பார்ப்பதில் என்ன குறை, அதுவும் என்ன என்று தெரிந்து கொள்ளலாமே. நாம் சாப்பிடும் மருந்துகள் பலவற்றில் ஆல்கஹால் குறிப்பாக இருமல் மருந்துகளில் உண்டு. மருந்தாகக் கலப்பதுண்டுதான்.//

      இரவு எங்கள் கப்பல் கிளம்ப வேண்டும், அதற்குள் எங்கள் சிற்றுலா முடிய வேண்டும் அதற்கு ஏற்றார் போல பயணத்திட்டத்தை வகுத்து அழைத்து சென்ற இடங்கள்.

      மருந்தாக திரட்சை ரசம் கொடுக்கப்படும்.

      நீக்கு
  8. அவர்களது ஊரின் தட்பவெப்பத்திற்கு தேவையானதை செய்கிறார்கள். அதையே நம் ஊரிலும் செய்வது சரியல்ல.

    பயண அனுபவங்கள் அனைத்தும் நன்று. படங்கள் அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்

      //அவர்களது ஊரின் தட்பவெப்பத்திற்கு தேவையானதை செய்கிறார்கள். அதையே நம் ஊரிலும் செய்வது சரியல்ல.//

      ஆமாம்.

      //பயண அனுபவங்கள் அனைத்தும் நன்று. படங்கள் அனைத்தும் சிறப்பு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்

      நீக்கு
  9. தள்ளு வண்டி, பழையகாலத்து பீப்பாய், பார்க்க மிக அழகாகத்தான் இருக்கிறது. பெரித மத்தளம் போன்று இருக்கு.

    மெக்சிக்கோவில் குடி போதை அதிகம் தான். அங்குமட்டுமில்ல....உலகம் முழுவதுமே கூடியிருப்பதாகத்தான் தெரிகிறது.

    பழைய பீப்பாயில் செடிகள் வளர்ப்பது நல்ல ஐடியா. wealth from waste என்பது போல்.

    பழைய இரும்புத் தகடுகளில் மரம் செய்திருப்பது நல்ல ஐடியா அழகாவும் இருக்கு.

    இது போன்று குருகிராமத்தில் ஒரு விடுதியில் இப்படிப் பழைய சாமன்கள் எல்லாவற்றையும் அழகுப் பொருளாக செடி வைக்க என்று மாற்றியிருந்தாங்க. நான் புகைப்படம் எடுத்திருந்தேன் எல்லாம் போய்விட்டன! இருந்திருந்தாலும் நான் எங்க பகிரப் போகிறேன் உள்ளதையே கூட எழுத மனமில்லாமல் இருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தள்ளு வண்டி, பழையகாலத்து பீப்பாய், பார்க்க மிக அழகாகத்தான் இருக்கிறது. பெரித மத்தளம் போன்று இருக்கு.//

      ஆமாம்.

      //மெக்சிக்கோவில் குடி போதை அதிகம் தான். அங்குமட்டுமில்ல....உலகம் முழுவதுமே கூடியிருப்பதாகத்தான் தெரிகிறது.//

      ஆமாம், சினிமா, நாடகம் இவை எல்லாம் இப்போது அதிகமாக காட்டப்படுகிறது. மனசு சரியில்லை என்றால், மகிழ்ச்சியாக இருக்கும் போது என்று எப்போதும் குடிப்பதை காட்டுகிறார்கள்.

      //பழைய பீப்பாயில் செடிகள் வளர்ப்பது நல்ல ஐடியா. wealth from waste என்பது போல்.//

      ஆமாம்.

      //பழைய இரும்புத் தகடுகளில் மரம் செய்திருப்பது நல்ல ஐடியா அழகாவும் இருக்கு.//

      அமெரிக்கா முழுக்க இந்த மாதிரி இரும்பு தகடுளில் கலைப்பொருட்கள் செய்து வைப்பது அதிகம்.

      //இது போன்று குருகிராமத்தில் ஒரு விடுதியில் இப்படிப் பழைய சாமன்கள் எல்லாவற்றையும் அழகுப் பொருளாக செடி வைக்க என்று மாற்றியிருந்தாங்க. நான் புகைப்படம் எடுத்திருந்தேன் எல்லாம் போய்விட்டன!//

      அச்சோ! கவலை படாதீர்கள் மீண்டும் எங்காவது கண்ணில் படும் அப்போது படங்கள் எடுத்து பகிரலாம்

      //இருந்திருந்தாலும் நான் எங்க பகிரப் போகிறேன் உள்ளதையே கூட எழுத மனமில்லாமல் இருக்கிறேன்.//

      மனதை தளர விட வேண்டாம், உற்சாகத்தை வரவழைத்து கொண்டு பதிவு எழுதுங்கள் எழுதி வெகு நாள் ஆகி விட்டது கீதா. படங்களை பகிருங்கள். தினம் கொஞ்சம் கொஞ்சமாக வலைஏற்றுங்கள்.

      நீக்கு
  10. மரம் சுற்றி திண்ணை போன்று நீங்க சொல்லியிருப்பது போல் நம்ம ஊர் அரசமரத்தடி திண்ணை போல இருக்கு. இங்கும் அப்படிப் பல இடங்களில் செய்திருக்காங்க.

    மரங்கள் அடர்ந்த பகுதிகளாகத்தானே இருந்தது ஒரு காலத்தில் இப்ப பல மரங்களை அழித்து கட்டிடங்கள் வரப்ப, இப்படி பாதை அமைக்கும் பகுதியில் இருக்கும் மரங்களையும் கூட வேர் தெரியும்படி விட்டு வைக்காம, அதையும் சுற்றி இப்படித் திண்ணை அல்லது பாதை அமைத்து விடுகிறார்கள். மரம் இருக்காம்...வெட்டலையாம் ஆனா அது வளர இடம் அடியில் வேணுமே!!!? எப்படி வரளருமோ தெரியலை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மரம் சுற்றி திண்ணை போன்று நீங்க சொல்லியிருப்பது போல் நம்ம ஊர் அரசமரத்தடி திண்ணை போல இருக்கு. இங்கும் அப்படிப் பல இடங்களில் செய்திருக்காங்க.//

      நானும் பெங்களூர் வந்த போது பார்த்தேன், சிலர் மேடையை சுற்றி நாகர்களை வைத்து வழி படுகிறார்கள்.

      //மரங்கள் அடர்ந்த பகுதிகளாகத்தானே இருந்தது ஒரு காலத்தில் இப்ப பல மரங்களை அழித்து கட்டிடங்கள் வரப்ப, இப்படி பாதை அமைக்கும் பகுதியில் இருக்கும் மரங்களையும் கூட வேர் தெரியும்படி விட்டு வைக்காம, அதையும் சுற்றி இப்படித் திண்ணை அல்லது பாதை அமைத்து விடுகிறார்கள். மரம் இருக்காம்...வெட்டலையாம் ஆனா அது வளர இடம் அடியில் வேணுமே!!!? எப்படி வரளருமோ தெரியலை//

      அந்த மரம் கீழே இருக்கும் வேர்களின் மூலம் தண்ணீர் எடுத்து கொள்ளும் கீதா. சில இடங்களில் வேர்கள் அந்த திண்ணையை உடைத்து இருக்கும்.

      நீக்கு
  11. அட! அங்கும் ஐஸ் வண்டி.

    பழையகாலத்து சாமன்கள் காட்சிக்கு வைத்திருப்பது நல்லா இருக்கு. முன்பு எப்படி இருந்தது காலம் என்பது தெரியவரும்.

    முன்பு ஆலை இப்ப கடை. வித்தியாசம் எதுவும் இல்லை, இல்லையாக்கா?

    கீழே வரும் படத்தில் பீப்பாய் சின்ன மேசை போல அழகா வடிவமைச்சிட்டாங்க.

    நானும் இப்படி வீட்டில் இருப்பவற்றை ஏதாவது பயனுள்ளதா செய்ய முடியுமான்னு யோசிப்பதுண்டு. அப்படி முன்பு பைப் குழாய்களை வைத்து அதன் மேல் வீணாய் போன மைக்ரோவேவ் அவனின் உள்ளே இருந்த பெரிய கண்ணாடியை (சுற்றுமே அது) பைப் குழாயின் மேல் பொருத்தி சின்ன வட்ட மேசை போலச் செய்து பயன்படுத்தினேன். பைப்பின் கீழே அதைப் பொருத்த சதுரமான டைல் (வீட்டில் இருந்ததுதான் ) அதில் பொருத்தினேன். எல்லாம் ஏரால் டைட் இப்படியானவற்றைப் பொருத்தும் பசை கொண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அட! அங்கும் ஐஸ் வண்டி.//

      நமக்கு சின்ன வயது நினைவுகளை கொண்டு வந்தது ஐஸ் வண்டி.

      //பழையகாலத்து சாமன்கள் காட்சிக்கு வைத்திருப்பது நல்லா இருக்கு. முன்பு எப்படி இருந்தது காலம் என்பது தெரியவரும்.//

      ஆமாம்.

      //முன்பு ஆலை இப்ப கடை. வித்தியாசம் எதுவும் இல்லை, இல்லையாக்கா?//

      முன்பு அங்கே தயார் செய்து இருக்கிறார்கள். இப்போது விற்பனை மட்டும். செய்யும் இடம் வேறு எங்கோ இருக்கும் போல.

      //கீழே வரும் படத்தில் பீப்பாய் சின்ன மேசை போல அழகா வடிவமைச்சிட்டாங்க//

      ஆமாம்.

      //நானும் இப்படி வீட்டில் இருப்பவற்றை ஏதாவது பயனுள்ளதா செய்ய முடியுமான்னு யோசிப்பதுண்டு. அப்படி முன்பு பைப் குழாய்களை வைத்து அதன் மேல் வீணாய் போன மைக்ரோவேவ் அவனின் உள்ளே இருந்த பெரிய கண்ணாடியை (சுற்றுமே அது) பைப் குழாயின் மேல் பொருத்தி சின்ன வட்ட மேசை போலச் செய்து பயன்படுத்தினேன். பைப்பின் கீழே அதைப் பொருத்த சதுரமான டைல் (வீட்டில் இருந்ததுதான் ) அதில் பொருத்தினேன். எல்லாம் ஏரால் டைட் இப்படியானவற்றைப் பொருத்தும் பசை கொண்டு.//

      உங்கள் கை திறமையை படம் எடுத்து வைத்து கொள்ள வில்லையா கீதா? இப்படி வீணாகி போவதை கலைப்பொருட்களாக என் அம்மாவும் நிறைய செய்வார்கள்.

      நீக்கு
  12. அலிபாபா காணொளியில் பீப்பாய்கள் ஆமாம் நான் கருத்தில் சொல்ல வந்தேன் நீங்க சொல்லிட்டீங்க. காணொளியும் பார்த்தேன் அக்கா நடனம் சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அலிபாபா காணொளியில் பீப்பாய்கள் ஆமாம் நான் கருத்தில் சொல்ல வந்தேன் நீங்க சொல்லிட்டீங்க. காணொளியும் பார்த்தேன் அக்கா நடனம் சூப்பர்//

      காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி கீதா.
      அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  13. பாட்டில்களை செருகி காட்சிக்கு வைத்திக்கும் டிசைன் நல்லாருக்கு

    பழைய பழைய மெஷின் எல்லாம் பார்க்க அழகாக இருக்கு

    ஒரு வகை மெஷின்னு அந்தப் படம் ஏதோ கீழே அந்தப் பீப்பாயில் பழங்களை மசிப்பது போலான கருவி போல இருக்கு!! அலல்து அப்படியான ஒன்று.

    எங்கு பார்த்தாலும் பீப்பாய்கள்!

    அட! அங்கும் கீற்று மாங்காய்! பார்த்தவுடனே சாப்பிடணும் போல இருக்கு.

    படங்களும் தகவல்கள் எல்லாமே சூப்பர். நாங்களும் சுத்திப் பார்த்திட்டோம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாட்டில்களை செருகி காட்சிக்கு வைத்திக்கும் டிசைன் நல்லாருக்கு//
      இந்த படம் மட்டும் இணையத்தில் எடுத்தேன். இப்போது பீப்பாய்களை எப்படி பயன் படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ள கூகுள் செய்த போது கிடைத்த படம்.

      //பழைய பழைய மெஷின் எல்லாம் பார்க்க அழகாக இருக்கு//

      ஆமாம், அதுதான் படம் அதிகம் என்றாலும் பார்வைக்கு பகிர்ந்து விட்டேன்.


      //ஒரு வகை மெஷின்னு அந்தப் படம் ஏதோ கீழே அந்தப் பீப்பாயில் பழங்களை மசிப்பது போலான கருவி போல இருக்கு!! அலல்து அப்படியான ஒன்று.//

      ஆமாம், பழங்களை மசிக்கும் கை மிஷின் போல தான் உள்ளது, பழச்சாறு கீழே இருக்கும் பலகை வழியாக பாத்திரத்தில் விழுவது போல அமைத்து இருக்கிறார்கள்.

      //எங்கு பார்த்தாலும் பீப்பாய்கள்!//
      அந்த வளாகம் முழுவதும் பீப்பாய்கள் தான்.

      //அட! அங்கும் கீற்று மாங்காய்! பார்த்தவுடனே சாப்பிடணும் போல இருக்கு.//

      நாங்களும் வாங்கி வந்தவுடன் உடனே சாப்பிட்டு விட்டோம்.

      //படங்களும் தகவல்கள் எல்லாமே சூப்பர். நாங்களும் சுத்திப் பார்த்திட்டோம்!//

      என்னுடன் வந்து சுற்றிப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  14. ஓயின் ஆலையும் பீப்பாக்களும் சைக்கிளும் பழைய காலத்துக்கு இட்டுச் சென்றது.

    கப் கார மாங்காய் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி வாழ்க வளமுடன்

      //ஓயின் ஆலையும் பீப்பாக்களும் சைக்கிளும் பழைய காலத்துக்கு இட்டுச் சென்றது.

      கப் கார மாங்காய் சூப்பர்.//

      ஆமாம்.

      அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  15. படங்கள் எல்லாம் மிக அருமை. அங்கும் மாங்காய் கிடைக்கிறது என்பதும் அதுவும் இப்படி வெட்டி மிளகாய்த் தூள் தூவி தருகிறார்கள் என்பது ஆச்சரியம். மெக்சிகோ என்பதால் கிடைக்கும் இல்லையா? அமெரிக்காவில் கிடைப்பது சிரமம் என்று அறிந்ததுண்டு.

    அலிபாபாவும் நாற்பது திருடர்களும் அதில் பானுமதி அவர்களின் நடனம் பாடல் சிறப்பு.

    பதிவின் விவரங்கள் படங்கள் எல்லாமே அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //படங்கள் எல்லாம் மிக அருமை. அங்கும் மாங்காய் கிடைக்கிறது என்பதும் அதுவும் இப்படி வெட்டி மிளகாய்த் தூள் தூவி தருகிறார்கள் என்பது ஆச்சரியம். மெக்சிகோ என்பதால் கிடைக்கும் இல்லையா? அமெரிக்காவில் கிடைப்பது சிரமம் என்று அறிந்ததுண்டு.//

      மாங்காயை வெட்டி மிளகாய் தூள் தூவி தருவது மெக்சிகோ தான். ஆனால் அமெரிக்காவில் நம் நாட்டு காய்கறிகள் விற்பனை செய்யும் கடையில் மாங்காய் சீஸனில் மாங்காய் கிடைக்கும்.

      //அலிபாபாவும் நாற்பது திருடர்களும் அதில் பானுமதி அவர்களின் நடனம் பாடல் சிறப்பு.

      பதிவின் விவரங்கள் படங்கள் எல்லாமே அருமை.//

      பதிவை, பாடலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  16. இரும்பு பீப்பாய் (பெரியது), ஐஸ்வண்டி என்று பல படங்களும் மிக அருமை.

    பீப்பாய்கள் வைன் தயாரிப்பதற்காக உபயோகிப்பார்கள்.

    கவின், ஐஸ்வண்டியில் ஐஸ் வேணும் என்று கேட்கலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //இரும்பு பீப்பாய் (பெரியது), ஐஸ்வண்டி என்று பல படங்களும் மிக அருமை.//

      பெரிய மர பீப்பாய் , இரும்பு தகடுகளால் மரதுண்டுகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. நல்ல ஓக் மரத்தில் செய்த பீப்பாய்கள்.

      //பீப்பாய்கள் வைன் தயாரிப்பதற்காக உபயோகிப்பார்கள்.//

      தயாரித்த வைங்களை சேமித்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு போக பயன் படுத்தி இருக்கிறார்கள்.

      //கவின், ஐஸ்வண்டியில் ஐஸ் வேணும் என்று கேட்கலையா?//

      கவின், ஐஸ், கேக், சாக்லேட், மிட்டாய் எதுவும் சாப்பிட மாட்டான்.
      அதனால் கேட்கவில்லை.
      நம் ஊரில் என்றால் நான் வாங்கி சாப்பிட்டு இருப்பேன். பயணத்தில் இருப்பதால் வாங்கவில்லை.

      நீக்கு
  17. மாங்காய் துண்டங்கள் - ஆஹா....

    பலரும் கொஞ்சம் கொஞ்சம் வைன் ருசி பார்த்திருப்பார்களே....

    நான் ஒரு தடவை மெக்சிகோ சென்றிருந்தபோது, என்னுடன் வந்தவர், பாட்டில் பாட்டிலாக அங்கு மது வாங்கினார். குளிக்கவா இல்லை குடிக்கவா என்று சந்தேகம் வந்துவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாங்காய் துண்டங்கள் - ஆஹா....//

      ஆமாம், அருமையாக இருந்தது.

      //பலரும் கொஞ்சம் கொஞ்சம் வைன் ருசி பார்த்திருப்பார்களே....//

      பலர் இல்லை, சிலர்.

      //நான் ஒரு தடவை மெக்சிகோ சென்றிருந்தபோது, என்னுடன் வந்தவர், பாட்டில் பாட்டிலாக அங்கு மது வாங்கினார். குளிக்கவா இல்லை குடிக்கவா என்று சந்தேகம் வந்துவிட்டது//

      அவர் நட்புகளுக்கு கொடுக்க வாங்கி இருப்பார் போலும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //படங்களும் பகிர்வும் அருமை//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  19. அவர்களுக்கு இவையெல்லாம் அரிய பொருட்கள்...

    நம்ம ஊரில் கலைச் செல்வங்கள் பாதிக்கும் மேல் களவு போயின..

    கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //அவர்களுக்கு இவையெல்லாம் அரிய பொருட்கள்...//

      ஆமாம்.

      //நம்ம ஊரில் கலைச் செல்வங்கள் பாதிக்கும் மேல் களவு போயின..

      கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன..//

      ஆமாம், கலைச்செல்வங்களை பாதுகாக்கலாம்.

      நீக்கு
  20. எது எப்படி என்றாலும் படங்கள் அழகு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எது எப்படி என்றாலும் படங்கள் அழகு..

      நலம் வாழ்க..//

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  21. படங்களுடன் பகிர்வு அருமை. பழங்கால இயந்திரம் போல் சைக்கிளையும் காட்சிக்காக வைத்திருக்கக் கூடும். பிரமாண்ட பீப்பாய்கள். அலிபாபா படப் பாடல் மிகப் பொருத்தம் :). அந்த நாட்டிலும் சிறுவர்கள் இது போன்ற வியாபாரத்தில் ஈடுபடுவது ஆச்சரியம் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்களுடன் பகிர்வு அருமை. //

      நன்றி

      //பழங்கால இயந்திரம் போல் சைக்கிளையும் காட்சிக்காக வைத்திருக்கக் கூடும்.//

      இருக்கலாம், இரும்பு சங்கிலி போட்டு கட்டி வைத்து இருந்தது.

      //பிரமாண்ட பீப்பாய்கள். அலிபாபா படப் பாடல் மிகப் பொருத்தம் :). //

      பாடலை ரசித்தமைக்கு நன்றி.

      //அந்த நாட்டிலும் சிறுவர்கள் இது போன்ற வியாபாரத்தில் ஈடுபடுவது ஆச்சரியம் அளிக்கிறது.//

      கடைத்தெருவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் வியாபரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஒரு பெண் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு இன்னொரு குழந்தையை அழைத்து கொண்டு விற்றார்.
      நம்மை துரத்தி துரத்தி வாங்கி கொள்ளுங்கள் என்று கெஞ்சுவதை பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அடுத்த பதிவில் இடம்பெறும் அந்த காட்சிகள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை.சாண்டோ ஒயின் ஆலையின் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. முதல் படம் கொடிகள் சுற்றிப்படர்நத கட்டிடம் அழகாக உள்ளது. ஆனால் அந்த கொடிகளினால் கட்டிடத்திற்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்னவோ?

    குடை நாற்காலிகள் அழகாக உள்ளது. முன்பு அம்மா வீட்டில் இந்த மாதிரி ஒரு நாற்காலி (அப்போதைய பேஷன்) வாங்கினோம். அதில் அமர நான் நீயென போட்டிகள் நடக்கும். அது நினைவுக்கு வந்தது.

    அங்குள்ள மரங்கள் வளர்ந்த மேடைகள், பழைய மிஷின்கள் எல்லாம் பார்க்க நன்றாக உள்ளது. மது அதிகமாக உட்கொண்டு விட்டால் போதை தருவதுதான்..பழக்கபடுத்தி விட்டாலும் மனிதர்கள் அதற்கு அடிமையாகி விடுவார்கள். உடல்நலம் கெட்டு அதுதானே கஸ்டமாக போய் விடும். அவர்கள் கலாச்சாரத்திற்கு அது ஏற்றது. ஆனால், நமக்கு நம் நாட்டில் தீமையாக கருதி ஒதுக்கி வாழ்கிறோம் .அதற்கு அடிமையானவர்களை திருத்த பாடுபடுகிறோம்.

    அந்த அழகிய பீப்பாய்கள் படங்களை பார்த்து வரும் போது எனக்கும் அலாவுதீன் 40 திருடர்கள் படம் நினைவுக்கு வந்தது. நீங்களும் அதைக் குறிப்பிட்டு அந்தப் பாடலை இணைத்து விட்டீர்கள். பாட்டு கேட்டு காட்சியை ரசித்தேன். பானுமதி அவர்களின் நடிப்பு எனக்கும் மிகவும் பிடித்தமானது.

    அத்தனைப் படங்களும் நன்றாக உள்ளது. எப்படியோ இந்தப்பதிவு நீங்கள் போட்ட அன்றைய என் கண்களில் படவில்லை. இன்று வரை வராமல் தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். எ. பியில் என் பதிவுக்கு வேலைகளின் நடுவில் கருத்துக்கள் தந்ததிலேயே திங்கள் முழுவதும் நேரம் சரியாகி விட்டது. நேற்றும் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை.

    மேலும் உங்கள் பயணத்துடன் தொடர்கிறேன். சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை.சாண்டோ ஒயின் ஆலையின் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.//

      நன்றி

      //முதல் படம் கொடிகள் சுற்றிப்படர்நத கட்டிடம் அழகாக உள்ளது. ஆனால் அந்த கொடிகளினால் கட்டிடத்திற்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்னவோ?//

      கட்டிடத்திற்கு பாதிப்பு வராது என்றே நினைக்கிறேன். சிங்கப்பூரில் நிறைய இடங்களில் இப்படி கட்டிங்கள் மேல் கொடி வளர்த்து இருந்தார்கள்.

      //குடை நாற்காலிகள் அழகாக உள்ளது. முன்பு அம்மா வீட்டில் இந்த மாதிரி ஒரு நாற்காலி (அப்போதைய பேஷன்) வாங்கினோம். அதில் அமர நான் நீயென போட்டிகள் நடக்கும். அது நினைவுக்கு வந்தது.//

      ஆமாம், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது, புகைப்படம் எடுக்க ஸ்டியோ சென்றால் குழந்தைகளை உட்கார வைக்க இந்த குடை நாற்காலி தருவார்கள். என் பெண் அதில் அமர்ந்து இருப்பாள் மாமா, அத்தை என் மகனை மடியில் வைத்து கொண்டு இருப்பார்கள். நாங்கள் இருவரும் அத்தை, மாமா பின்னால் நிற்ப்போம்.
      அந்தக்கால நினைவுகள் வந்தன.

      //அங்குள்ள மரங்கள் வளர்ந்த மேடைகள், பழைய மிஷின்கள் எல்லாம் பார்க்க நன்றாக உள்ளது.//

      ஆமாம்.

      //மது அதிகமாக உட்கொண்டு விட்டால் போதை தருவதுதான்..பழக்கபடுத்தி விட்டாலும் மனிதர்கள் அதற்கு அடிமையாகி விடுவார்கள். உடல்நலம் கெட்டு அதுதானே கஸ்டமாக போய் விடும். அவர்கள் கலாச்சாரத்திற்கு அது ஏற்றது. ஆனால், நமக்கு நம் நாட்டில் தீமையாக கருதி ஒதுக்கி வாழ்கிறோம் .அதற்கு அடிமையானவர்களை திருத்த பாடுபடுகிறோம்.//

      தீமைகளை அறிந்து கொண்ட பின்னும் மக்கள் அதை நாடுவதுதான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அரசாங்கம் அதை தடை செய்தால் கள்ளசந்தை ஆரம்பிக்கும் என்கிறார்கள். அரசாங்கம் நடத்தும் கடையில் உள்ளதை விட கள்ளச்சாராயம் நன்றாக இருக்கும் என்று வாங்கி குடித்து உயிரை விடுகிறார்கள். அவர்கள் குடும்பத்தினர் நிலமையை நினைக்காமல் போய் விடுகிறார்கள்.போதை பழக்கத்தை தடுக்க மறுவாழ்வு மையம் எத்தனை திறந்து வைத்தாலும் மக்கள் இத்துழைத்தால் தான் தீர்வு கிடைக்கும்.

      //அந்த அழகிய பீப்பாய்கள் படங்களை பார்த்து வரும் போது எனக்கும் அலாவுதீன் 40 திருடர்கள் படம் நினைவுக்கு வந்தது. நீங்களும் அதைக் குறிப்பிட்டு அந்தப் பாடலை இணைத்து விட்டீர்கள். பாட்டு கேட்டு காட்சியை ரசித்தேன். பானுமதி அவர்களின் நடிப்பு எனக்கும் மிகவும் பிடித்தமானது.//

      நம் இருவருக்கும் நிறைய ரசனைகள் ஒத்தமாதிரிதான் இருக்கிறது.
      எனக்கும் பானுமதி அவர்களின் நடிப்பு பிடிக்கும்.

      //அத்தனைப் படங்களும் நன்றாக உள்ளது. எப்படியோ இந்தப்பதிவு நீங்கள் போட்ட அன்றைய என் கண்களில் படவில்லை. இன்று வரை வராமல் தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். எ. பியில் என் பதிவுக்கு வேலைகளின் நடுவில் கருத்துக்கள் தந்ததிலேயே திங்கள் முழுவதும் நேரம் சரியாகி விட்டது. நேற்றும் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை.//

      பதிவுக்கு கருத்து கொடுத்தவர்களுக்கு பதில் அளிப்பது முக்கியம். அங்கு அடுத்த பதிவு வந்து விடும்.

      என் பதிவை எப்போது வேண்டுமென்றாலும் படித்து கருத்து தெரிவிக்கலாம்.
      வீட்டுவேலைகளுக்கு இடையே வந்து விரிவான கருத்து கொடுத்தமைக்கும் பயணத்தை தொடர்வதுக்கும் நன்றி கமலா.











      நீக்கு