திங்கள், 15 ஜூலை, 2024

மெக்சிகோ கடைவீதியும் மந்திர பீன்சும்

 

மெக்சிகோ கடை வீதி


மே 31 ஆம்  தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன். லாஸ் ஏஞ்சலஸ்  ஊரிலிருந்துகிளம்பி  மெக்சிகோ வரை பயணம்.






இதற்கு முந்திய பதிவுகள்.

இந்த பதிவில் மெக்சிகோ கடைத்தெரு படங்கள் இடம் பெறுகிறது.

மதியம் ஆகி விட்டதால் ஒரு இடத்திற்கு சாப்பிட அழைத்து போனார் .



மக்காச்சோள சிப்ஸ் , மற்றும்   பல சுவைகளில் சல்ஸாக்கள் 
அந்த மக்காச்சோள சிப்ஸை அந்த கலவையில் தொட்டு சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. எல்லா ஓட்டல்களிலும் உணவுக்கு முன் கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள்.


அதன் பின் ஒரு கையளவு சாதம், சீஸ் சப்பாத்தி.  கொண்டு வந்து கொடுத்தார்கள். சைவம் என்றால் இவ்வளவுதான் அந்த கடையில்.  இரண்டும் மிருதுவாக இருந்தது. சாப்பிட எளிதாக இருந்தது எனக்கு.


ஆரஞ்சு ஜூஸ்    குடித்து விட்டு கிளம்பினோம்.

சாப்பிடும் மேஜை அருகில் வந்து வாசித்து காசு பெற்று செல்கிறார்கள்.



இப்படி நிறைய பேர்  இசை கருவிகளுடன் அலைந்து கொண்டு இருக்கிறார்கள் ஊர் முழுவதும். கடைத் தெருவிலும் பார்த்தோம்,  இசை கருவிகளை தூக்கி கொண்டு நடந்து போவோரை.


நாங்கள் உணவு உண்ட உணவகத்தின் முன் கடற்கொள்ளையர்களின் கப்பல் மாதிரி செய்து வைத்து இருந்தார்கள். அதை பார்க்க டிக்கட் வாங்க வேண்டும். எங்கள் பயணத்திட்டத்தில் அது இல்லை அதனால் அவர் அங்கு அழைத்து செல்லவில்லை.



அங்கிருந்து வேறு பஸ்ஸில் அழைத்து சென்றார். முதலில் போன பஸ் ஏதோ தொந்திரவு. போன் செய்தவுடன் விரைவில் இந்த  பஸ் வந்து விட்டது. அதில் கடைத்தெரு அழைத்து போனார்.



பஸ் நிற்கும் இடத்திற்கு உணவகத்தின் பின் கட்டு வழியாக நடந்து போனோம். போகும் வழியில்  சினிமா தியேட்டர் இருந்தது.




புறாவும் சினிமா பார்க்க உள்ளே நிற்கிறது , எந்த சினிமா பார்க்கலாம் என்று யோசித்து கொண்டு நிற்கிறது.  11 படங்கள்   நடக்கிறது.




வீதியை கடந்து செல்பவர்கள் மேலே பாலம் வழியாக கடந்து போக வேண்டும்.




பாடகர்கள் வாத்திய கருவிகளுடன்  யாராவது கூப்பிடமாட்டார்களா என்ற பார்வையுடன் நடக்கிறார்கள்.



கும்பலாக அமர்ந்து இருப்பவர்கள் அருகில்  போய் நின்று பாடுகிறார்கள்.


இந்த குழந்தை பல தடவை வந்து கேட்டாள் வாங்கி கொள்ள சொல்லி

இந்த அம்மாவின் குழந்தை தான், முதுகில் ஒரு குழந்தையை தூக்கி கொண்டு  வியாபாரம். 




இது பெரிய மகள் போல






ஐஸ் வண்டியா  இது தெரியவில்லை, வண்டியில் ஐஸ் படங்கள் போடவில்லை.  குளிர்பானம் விற்கிறார் என்று நினைக்கிறேன்.

அவர் பக்கத்தில் இருக்கும் பை இடம் பிடிக்க ஒருவர் போட்டு போய் இருக்கிறார். சிறிது நேரத்தில் அங்கு கடை போட்டார்.

அந்த பை இரண்டு அட்டைகளுக்கு நடுவில் இருக்கிறது பாருங்கள். கடைகள் திறக்கும் முன் கடை முன் இடம் பிடிக்க போடுவார்கள் போல இப்படி.


இந்த இரண்டு பெண்களும் நம் ஊர் பெரிய கண்  முள்ளு முறுக்கு அச்சில் வத்தல் போடுவோம் அல்லவா, அது போல செய்த வத்தலை  விற்கிறார்கள்.

நம்மூர் பவானி ஜமுக்காளம் போல உடை



குதிக்கும் பீன்ஸ் என்று போட்டு இருக்கு சின்ன டப்பாவில்  ஐந்து பீன்ஸ் விதைகள் போல சின்னதாக இருந்தது. அது டப் டப் என்று குதிக்கிறது. கொலுவுக்கு வைத்து கொடுக்கும் மஞ்சள், குங்கும டப்பாபோல இருந்தது .  அதை பார்த்தவுடன் எனக்கு 

 மந்திர பீன்ஸ் கதை. நினைவுக்கு வந்தது.  "ஜாக் பீன்ஸ்டாக்" தெரியும் தானே உங்களுக்கு , தெரியவில்லை என்றால் இந்த கதையை படிக்கலாம்.  குழந்தைகள் கதைகள் மகனுக்கு சிறு வயதில் வாங்கி கொடுத்து இருக்கிறேன். அந்த கதை புத்தகத்தில்   படங்கள் அழகாய் இருக்கும்.  அதை தேடினேன் கிடைக்கவில்லை, வேறு இணையத்தில் படக்கதையாக இருக்கிறது அதன் சுட்டி கொடுத்து இருக்கிறேன் .  அது ஒவ்வொரு பக்கமாக புரட்டி படிக்க வேண்டும்.
கீழே உள்ள படத்தில் மொத்த கதையும் இருக்கிறது.


ஒரு காலத்தில் ஜாக் என்று ஒரு பையன் இருந்தான். அவன் அம்மாவுடன்  வாழ்ந்தான்.

.அவர்கள் மிகவும் ஏழைகளாக இருந்தனர். அவர்களிடம் இருந்ததெல்லாம் ஒரு மாடு மட்டுமே. மாட்டின் பாலை விற்று பிழைத்து வந்தனர். மாடு பால் கொடுக்கவில்லை அதனால் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள் 

ஒரு நாள் காலை, ஜாக்கின் தாய் ஜாக்கிடம் தங்கள் பசுவை சந்தைக்கு அழைத்துச் சென்று  விற்று காசு பெற்று வரும்படி  கூறினார்.

 வழியில், ஜாக் ஒரு வயதான பெரிய  மனிதனை சந்தித்தான். அவர் ஜாக்கிற்கு பசுவை பெற்றுக் கொண்டு   ஐந்து மந்திர பீன்ஸ்விதைகளை கொடுத்தார்.

ஜாக் பீன்ஸ் விதைகளை  எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். ஜாக்கின் தாய் பீன்ஸ்விதைகளைப் பார்த்ததும் மிகவும் கோபமடைந்தார். ஜன்னலுக்கு வெளியே பீன்ஸ் விதைளை  எறிந்தார்.

ஜாக் மறுநாள் காலை ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். ஒரு பெரிய பீன்ஸ்கொடியாக   இருந்தது. அவன் வெளியே சென்று
பீன்ஸ்டாக்கில் ஏற ஆரம்பித்தான்.

மேகங்கள் வழியாக வானத்தை நோக்கி ஏறினான். ஜாக் ஒரு அழகான கோட்டையைப் பார்த்தான். உள்ளே போனான்.
ஜாக்.

ஒரு குரல் கேட்டது. ‘ஃபீ, ஃபை, ஃபோ, ஃபம்!’ ஜாக் பயந்து  ஒரு அலமாரிக்குள் ஒளிந்து கொண்டான்.

ஒரு பெரிய ராட்சதர் அறைக்குள் வந்து அமர்ந்தார். மேஜையில் ஒரு கோழி மற்றும் ஒரு தங்க "யாழ் " இருந்தது

‘லே!’ என்றான் ராட்சதர். கோழி முட்டையிட்டது. அது தங்கத்தால் ஆனது. யாழைப் பார்த்து  ‘பாடு!’ என்றான்  யாழ் இசைக்க  ஆரம்பித்தது.சிறிது நேரத்தில் அந்த ராட்சதன் தூங்கிவிட்டான்.

ஜாக் அலமாரியில் இருந்து குதித்து. கோழியை மற்றும் யாழையும் எடுத்தான். திடீரென்று, யாழ் பாடியது, 'உதவி,
குரு!' என்றது.

ராட்சதன் விழித்துக்கொண்டு, ‘ஃபீ, ஃபை, ஃபோ, ஃபம்!’ என்று கத்தினான், ஜாக் ஓடி வந்து பீன்ஸ்டாக்கில் ஏற ஆரம்பித்தான்.

அவரைப் பின்தொடர்ந்து அந்த ராட்சதன் இறங்கி வந்தான்.
ஜாக் கத்தினான், ‘அம்மா! உதவுங்கள்!’ ஜாக்கின் தாய் ஒரு கோடாரியை எடுத்து பீன்ஸ்டாக்கை வெட்டினார். மாபெரும் ராட்சதன்.கீழே விழுந்து நொறுங்கிபோனான். யாரும் ராட்சதனை  மீண்டும் பார்க்கவில்லை.

தங்க முட்டைகள் மற்றும் மந்திர யாழுடன், ஜாக் மற்றும்  தயாரும் பல காலம்  மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்..





நம் நாட்டு கதை சொல்லிகள் சொல்லும் கதையாக இந்த காணொளியில் இருக்கிறது. உங்கள், பேரன், பேத்திகளுக்கு சொல்லலாம். நான் மேலே சுருக்கமாக சொல்லி இருக்கிறேன், காணொளியில் கொஞ்சம் விரிவாக இருக்கிறது.

இவர் கடையில் தான் அந்த குதிக்கும் பீன்ஸ் இருக்கிறது


அவர் கடையில் இந்த மெக்சிகன் தொப்பி வாங்கினான் பேரன் கவின்.  தன்னுடன் எப்போதும் பயணிக்கும் மோவுக்கு. அதுவும் கப்பல் பயணத்தில்  எங்கள் அறை ஜன்னலில் அமர்ந்து இருக்கிறது.

சின்ன வளாகத்தில் நிறைய கடைகள் இருக்கிறது

நம்மை பார்த்து இந்தியில் பேசுகிறார்கள்





சிப்பிகள் தொங்க விட்டு இருக்கிறார்கள்.



நம் ஊர் சென்னை பெண் ஒருவர் தலை அலங்காரம் செய்து கொள்கிறார். அவர்கள் பேசியதை கேட்டேன் அதனால் சென்னை என்று தெரிந்தது.


 அவர் மகன் அந்த ஊர் ஆடையை கடையில் வாங்கி அணிந்து இருக்கிறார்.


கடைவீதியில் மாடல் மாடலாக தலை அலங்காரம் செய்த ஆல்பத்தோடு சுற்றி வருகிறார்கள் நிறைய பெண்கள் தலை அலங்காரம் செய்து விடுகிறோம் என்று.  


நானும் சம்பந்தியும் கடைவீதியில் சிமெண்ட் பெஞ்ச் போட்டு இருந்ததில் அமர்ந்து கொண்டு மகன், மருமகள் கடைவீதியில் பொருட்கள் வாங்கி வரும் வரை வேடிக்கைப்பார்த்தோம், அப்போது எடுத்த படங்கள்  இவை எல்லாம். நாங்கள் சுற்றிப்பார்த்து விட்டு வந்து மற்றவர்கள் வரும் வரை வேடிக்கைப்பார்த்தோம். கால்களில் பலம் அவ்வள்வுதான்.

கடைவீதியை சுற்றிக் காட்டி விட்டு எங்கள் கப்பல் நிற்கும் இடம் வந்தோம்.

மீதி அடுத்தபதிவில்.  கப்பல் பயணத்தின் நிறைவு பதிவாக இருக்கும் .

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
---------------------------------------------------------------------------------------------------

37 கருத்துகள்:

  1. டயட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் அளவான சாப்பாடு போல... போதாதென்றால் இன்னும் ஒன்று வாங்கி கொள்ள வேண்டியதுதான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //டயட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் அளவான சாப்பாடு போல... போதாதென்றால் இன்னும் ஒன்று வாங்கி கொள்ள வேண்டியதுதான்!!//

      பயணத்தில் நிறைய சாப்பிட முடியாது. போதுமானதாக இருந்தது.

      நீக்கு
  2. சாப்பிடும் இடத்தின் அருகே வந்து வாத்தியம் வாசிப்பார்களா? இம்சையாக இருக்காது?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சாப்பிடும் இடத்தின் அருகே வந்து வாத்தியம் வாசிப்பார்களா? இம்சையாக இருக்காது?!!//

      இலங்கை போன போது இப்படி பெரிய ஓட்டலில் சாப்பிடும் போது பக்கத்தில் வந்து வாசித்தார்கள். சிலர் இசையை ரசித்து கொண்டு சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? இவர்களுக்கும் வயிற்றுப்பாட்டுக்கு உதவுகிறது.

      நீக்கு
  3. அங்கு நடக்கும் 7 படங்களில் )உண்மையில் 6 என்றுதான் சொல்ல வேண்டும்.  ஒரு படம் இரண்டு தியேட்டர்களில் நடக்கிறது!) ஒன்று கூட அறிமுகமில்லை!  நம்மூர் படங்கள் அங்கு கிடையாதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அங்கு நடக்கும் 7 படங்களில் )உண்மையில் 6 என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு படம் இரண்டு தியேட்டர்களில் நடக்கிறது!) ஒன்று கூட அறிமுகமில்லை! நம்மூர் படங்கள் அங்கு கிடையாதோ!//

      நானும் இப்போதுதான் பார்த்தேன், ஒரே படம் இரண்டு தியேட்டரில் நடக்கிறது. நம் மூர்படங்கள் அங்கு இல்லை. போடுவார்களா தெரியவில்லை. இங்கு மகன் ஊரில் , எல்லா மொழி படங்களும் நடக்கிறது, போன முறை "வாரிசு" படம் அழைத்து சென்றான்.

      நீக்கு
  4. கடைபோட இடம்பிடிப்பது புன்னகைக்க வைக்கிறது.  'பா' 'மா' வாகி இருக்கிறது ஒரு வரியில்!  குளிர்பானம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கடைபோட இடம்பிடிப்பது புன்னகைக்க வைக்கிறது. 'பா' 'மா' வாகி இருக்கிறது ஒரு வரியில்! குளிர்பானம்!//

      சரி செய்து விட்டேன், நன்றி.
      நம்மூரிலும் இடம் பிடிப்பார்கள் , மதுரையில் அம்மன் சன்னதியில் கடைகளுக்கு முன் கடை போடுபவர்கள்.

      நீக்கு
  5. படங்கள் யாவும் சுவாரஸ்யம். அவரவர் மொழியில் பேசி கவர நினைக்கும் வியாபாரிகள் யாவரும் சாமர்தியசாலிகள்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் யாவும் சுவாரஸ்யம். அவரவர் மொழியில் பேசி கவர நினைக்கும் வியாபாரிகள் யாவரும் சாமர்தியசாலிகள்தான்!//

      அப்போதுதான் வியாபாரம் செய்ய முடியும். உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்

      //தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....//

      உங்கள் நூல் சிறப்பாக வெளிவந்து இருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துகள்

      நீக்கு
  7. படங்கள் அருமை. கதை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் அருமை. கதை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்தானே?//

      ஆமாம்.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. கடை வீதி படங்கள் அனைத்தும் நன்று. பீன்ஸ் கதை - ஆஹா...

    தொடரட்டும் தங்கள் பயணமும் பதிவுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //கடை வீதி படங்கள் அனைத்தும் நன்று. பீன்ஸ் கதை - ஆஹா...

      தொடரட்டும் தங்கள் பயணமும் பதிவுகளும்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  9. கடைகள் வீதிகளில் இருந்தாலும் அழகாக இருக்கிறது.

    குழந்தைகள் கதை சிறப்பு.
    படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //கடைகள் வீதிகளில் இருந்தாலும் அழகாக இருக்கிறது.

      குழந்தைகள் கதை சிறப்பு.
      படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஜி.

      நீக்கு
  10. கடை வீதி படங்கள் சூப்பர் கோமதிக்கா...வரேன் ஒவ்வொன்றாகப் பார்த்து...

    ஆஹா கார்ன் சிப்ஸ். நல்லாருக்கும். ஆமா கார்ன் சிப்ஸும் சல்ஸா வெவ்வேறு சுவைகளில் தொட்டுச் சாப்பிட நல்லாருக்கும். சல்சா வீட்டில் செய்ததுண்டு ஆனால் அவர்கள் செய்யும் எல்லா ஃப்ளேவரிலும் அல்ல...ஒரு சில நம்மூருக்கு ஏற்றாற் போல. அது போல மக்காச் சோள மாவில் சிப்ஸும்.

    இங்கு நம்மூரில் கைதி கிச்சன், இங்கு ஜெயில் கிச்சன் என்று நடக்கும் உணவகத்தில் சைவ உணவு மெக்சிக்கன் உணவு ரெட் பீன்ஸ் கிரேவி கறி, சாதம் என்று கிடைப்பதுண்டு.

    நான் சமீபத்தில் அவகெடோ பழத்தில் செய்யும் மெக்சிக்கன் guatemalan (இதையும் கார்ன் சிப்ஸில் தொட்டுச் சாப்பிடலாம் நல்லாருக்கும்) செய்தேன் ரொம்ப எளிது செய்வதற்கு. படங்கள் எடுத்திருக்கிறேன். பார்ப்போம் தொகுத்துப் போட வேண்டுமே!!!! காணொளிகளும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      கடை வீதி படங்கள் சூப்பர் கோமதிக்கா...வரேன் ஒவ்வொன்றாகப் பார்த்து...

      //ஆஹா கார்ன் சிப்ஸ். நல்லாருக்கும். ஆமா கார்ன் சிப்ஸும் சல்ஸா வெவ்வேறு சுவைகளில் தொட்டுச் சாப்பிட நல்லாருக்கும். சல்சா வீட்டில் செய்ததுண்டு ஆனால் அவர்கள் செய்யும் எல்லா ஃப்ளேவரிலும் அல்ல...ஒரு சில நம்மூருக்கு ஏற்றாற் போல. அது போல மக்காச் சோள மாவில் சிப்ஸும்.//

      நீங்கள் தான் எல்லாம் செய்து பார்த்து விடுவீர்களே!

      //இங்கு நம்மூரில் கைதி கிச்சன், இங்கு ஜெயில் கிச்சன் என்று நடக்கும் உணவகத்தில் சைவ உணவு மெக்சிக்கன் உணவு ரெட் பீன்ஸ் கிரேவி கறி, சாதம் என்று கிடைப்பதுண்டு.//

      கைதி கிச்சன்! எப்படி எல்லாம் பேர் வைக்கிறார்கள்.

      //நான் சமீபத்தில் அவகெடோ பழத்தில் செய்யும் மெக்சிக்கன் guatemalan (இதையும் கார்ன் சிப்ஸில் தொட்டுச் சாப்பிடலாம் நல்லாருக்கும்) செய்தேன் ரொம்ப எளிது செய்வதற்கு. படங்கள் எடுத்திருக்கிறேன். பார்ப்போம் தொகுத்துப் போட வேண்டுமே!!!! காணொளிகளும்.//

      மருமகளும் அவகெடாவில் நிறைய செய்வாள்.
      நீங்களும் படங்களை தொகுத்து போடுங்கள்.

      நீக்கு
  11. பெரிய வயலின்....

    நம் ஊரிலும் இப்படி இசைக்கருவிகள் வாசித்து காசு வாங்குவது உண்டே பாருங்க உலகம் முழுவதும் இருக்கு இது.

    கடற் கொள்ளையர்கள் கப்பல் அழகுதான்! பாய்மரக் கப்பல் போல!! அதைப் பார்க்கவும் டிக்கெட்டாஆஆஆஆஆ!!! பாருங்க எதுக்கெல்லாம் அங்க இப்படி அழகா சுற்றுலா தலமா மாற்றி நல்ல வருமானம் நாட்டிற்கு.

    இங்கு நம்ம நாட்டில் எவ்வளவு வளம் இருக்கு எவ்வளவு அழகழகான இயற்கை இடங்களும் பல கலை நுட்ப அந்தக்கால ஹெரிட்டேஜ் ஆன இடங்களும் இருக்கு. சுற்றுலாத் துறை இன்னும் செய்யலாம்,

    இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி யான சுதா மூர்த்தி அவர்கள் லோக்சபால அழகா பேசினாங்க. அரசியல் எம் பிக்கள் கூட இதெல்லாம் பேச மாட்டாங்க ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுப்பாங்க. சுதா மூர்த்தி அவங்க இரண்டு விஷயங்கள் மிக முக்கியமான து பேசினாங்க. சுற்றுலாத்துறை பற்றியும், பெண்குழந்தைகளுக்கு செர்விக்கல் கான்சர் வாக்சினேஷன் பற்றியும்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெரிய வயலின்....

      நம் ஊரிலும் இப்படி இசைக்கருவிகள் வாசித்து காசு வாங்குவது உண்டே பாருங்க உலகம் முழுவதும் இருக்கு இது.//

      ஆமாம்.

      //கடற் கொள்ளையர்கள் கப்பல் அழகுதான்! பாய்மரக் கப்பல் போல!! அதைப் பார்க்கவும் டிக்கெட்டாஆஆஆஆஆ!!! பாருங்க எதுக்கெல்லாம் அங்க இப்படி அழகா சுற்றுலா தலமா மாற்றி நல்ல வருமானம் நாட்டிற்கு.//

      ஆமாம். சுற்றுலா செல்ல மக்களை கவர நிறைய இடங்கள் இருக்காம் மெக்சிகோவில்.

      //இங்கு நம்ம நாட்டில் எவ்வளவு வளம் இருக்கு எவ்வளவு அழகழகான இயற்கை இடங்களும் பல கலை நுட்ப அந்தக்கால ஹெரிட்டேஜ் ஆன இடங்களும் இருக்கு. சுற்றுலாத் துறை இன்னும் செய்யலாம்,//

      ஆமாம், நிறைய இருக்கிறது நம் நாட்டில்.

      //சுதா மூர்த்தி அவங்க இரண்டு விஷயங்கள் மிக முக்கியமான து பேசினாங்க. சுற்றுலாத்துறை பற்றியும், பெண்குழந்தைகளுக்கு செர்விக்கல் கான்சர் வாக்சினேஷன் பற்றியும்.//

      ஆமாம், நிறைய நல்ல விஷயங்களை பேசுகிறார்.

      நீக்கு
  12. இங்கும் சினிபோலிஸ் என்று பெயரில் தியேட்டர்கள் இருக்கின்றன...அங்கு பார்த்துதான் இங்கும் பெயர் வைப்பாங்க இப்பதான் உலகமயமாக்கல் ஆகிவிட்டதே!!

    //புறாவும் சினிமா பார்க்க உள்ளே நிற்கிறது , எந்த சினிமா பார்க்கலாம் என்று யோசித்து கொண்டு நிற்கிறது. 11 படங்கள் நடக்கிறது.//

    ஹாஹாஹா புறாக்கு குழப்பமா இருந்திருக்கும்!!

    //இந்த குழந்தை பல தடவை வந்து கேட்டாள் வாங்கி கொள்ள சொல்லி//

    உலகமயமாக்கல் தான் இப்ப என்றால் இதுவும் எல்லா நாடுகளிலும் இருக்கும் போல! நம் ஊருக்கும் மெக்சிகோவுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை போன்று தெரிகிறது. கீழே அக்குழந்தையின் அம்மா...இப்படித்தானே இங்கும் வியாபாரம் செய்து பிழைக்கிறார்கள் இல்லையா...இந்தப் பெண்மணியைப் பார்க்கிறப்ப நம்ம ஊர் வடகிழக்கு மாநில மக்கள் போன்று கொஞ்சம் தெரிகிறார்.

    என்ன அவங்க ஜீன்ஸ் பான்ட் காலில் ஷூ என்று இங்கு நம்ம ஊர்ல இன்னும் ஏழ்மை தெரியும் சிலரிடம்....சிலர் இங்கும் ஃபேஷனாக டிரஸ் செய்து கொண்டு இப்படி விற்கிறார்கள்தான் குறிப்பா இங்கு பெங்களூரில்.

    அவர் பக்கத்தில் இருக்கும் பை இடம் பிடிக்க ஒருவர் போட்டு போய் இருக்கிறார். சிறிது நேரத்தில் அங்கு கடை போட்டார்.//

    ஹாஹாஹாஹா அப்ப நம்ம ஊரேதான்!!!!!! இங்கும் இப்படி நடப்பதைப் பார்க்கிறேன்!!

    வத்தல் போல - கிட்டத்தட்ட மெக்சிக்கன் உணவும் நம்மூர் வகைகளும் கொஞ்சம் ஒற்றுமைகளைப் பார்க்கலாம் கோமதிக்கா என் சின்ன அறிவுக்கு எட்டிய வரையில். அவங்க ஒரு சூப் செய்வாங்க நம்மூர் ரசம் போல செய்து அதில் கொஞ்சம் சாதமும் கலந்து .....பாருங்க அடுத்தாப்ல பவானி ஜமுக்காளம் போல....நிறைய ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.

    ஜாக் கதை வாசித்த நினைவு வந்தது, கோமதிக்கா, ஆமாம் இப்படியான கதைகள் மகனுக்கு முன்பு வாசித்ததுண்டு.

    கீதா





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கும் சினிபோலிஸ் என்று பெயரில் தியேட்டர்கள் இருக்கின்றன...அங்கு பார்த்துதான் இங்கும் பெயர் வைப்பாங்க இப்பதான் உலகமயமாக்கல் ஆகிவிட்டதே!!//

      சினிபோலிஸ் அங்கும் இருக்கா!

      //உலகமயமாக்கல் தான் இப்ப என்றால் இதுவும் எல்லா நாடுகளிலும் இருக்கும் போல! நம் ஊருக்கும் மெக்சிகோவுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை போன்று தெரிகிறது. கீழே அக்குழந்தையின் அம்மா...இப்படித்தானே இங்கும் வியாபாரம் செய்து பிழைக்கிறார்கள் இல்லையா...இந்தப் பெண்மணியைப் பார்க்கிறப்ப நம்ம ஊர் வடகிழக்கு மாநில மக்கள் போன்று கொஞ்சம் தெரிகிறார்.

      தன் குழந்தைகளை காப்பாற்ற உழைக்கும் பெண்கள் எல்லா நாடுகளிலும் உண்டு.


      //ஹாஹாஹா புறாக்கு குழப்பமா இருந்திருக்கும்!!//

      நம்முடன் நெருக்கமாக வாழ்வதால் நம் குழப்பம் அதற்கும் தொற்றிக் கொண்டு வந்து இருக்கும்.

      //என்ன அவங்க ஜீன்ஸ் பான்ட் காலில் ஷூ என்று இங்கு நம்ம ஊர்ல இன்னும் ஏழ்மை தெரியும் சிலரிடம்....சிலர் இங்கும் ஃபேஷனாக டிரஸ் செய்து கொண்டு இப்படி விற்கிறார்கள்தான் குறிப்பா இங்கு பெங்களூரில்.//

      எல்லாம் வாழும் ஊரைப் பொறுத்து மாறும் அவ்வளவுதான்.

      //ஹாஹாஹாஹா அப்ப நம்ம ஊரேதான்!!!!!! இங்கும் இப்படி நடப்பதைப் பார்க்கிறேன்!!//

      ஆமாம், கதை எழுதுபவர்கள் அவரக்ளை உற்று கவனித்தால் கதை எழுதி விடலாம்.

      //வத்தல் போல - கிட்டத்தட்ட மெக்சிக்கன் உணவும் நம்மூர் வகைகளும் கொஞ்சம் ஒற்றுமைகளைப் பார்க்கலாம் கோமதிக்கா //

      ஆமாம்.

      //என் சின்ன அறிவுக்கு எட்டிய வரையில். அவங்க ஒரு சூப் செய்வாங்க நம்மூர் ரசம் போல செய்து அதில் கொஞ்சம் சாதமும் கலந்து .....பாருங்க அடுத்தாப்ல பவானி ஜமுக்காளம் போல....நிறைய ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.//

      ஆமாம், கொரியன் உணவு அப்படித்தான். நூடுல்ஸ் , காய்கறிகள், சூப் போன்றதில் போட்டு சாப்பிடுவார்கள். முன்னோர்களுக்கு பிடித்த உணவை வைத்து வணங்குவது எல்லாம் நம் ஊர் போலதான்.

      நீக்கு
  13. மெக்சிக்கன் தொப்பி சூப்பரா இருக்கு. கவினின் தோழன் மோ மிக அழகு!!!! அதுவும் அந்தத் தொப்பியுடன்!!! என் மகனும் முன்பு இப்படித்தான் குரங்கு பொம்மை பூனை பொம்மை, நாய் பொம்மை என்று நிஜமாக இருப்பது போன்ற பொம்மைகளை வைத்துக் கொண்டு பயணிப்பான். கல்லூரி சென்ற பிறகும் கூட அந்த பொம்மைகளை வைத்துக் கொண்டதுண்டு. அதன் பின் வீட்டில் செல்லங்கள் வளர்க்கத் தொடங்கினோம்.

    கடைகள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கின்றன. படங்கள் அனைத்தும் ரசித்தேன் அக்கா விவரங்களும், அந்த தலை அலங்கார விவரங்கள் அந்தப் பையன் அணிந்திருக்கும் அந்த ஊர் ஆடை உட்பட விவரங்கள் அனைத்தும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மெக்சிக்கன் தொப்பி சூப்பரா இருக்கு. கவினின் தோழன் மோ மிக அழகு!!!! அதுவும் அந்தத் தொப்பியுடன்!!!//

      ஆமாம்.

      //என் மகனும் முன்பு இப்படித்தான் குரங்கு பொம்மை பூனை பொம்மை, நாய் பொம்மை என்று நிஜமாக இருப்பது போன்ற பொம்மைகளை வைத்துக் கொண்டு பயணிப்பான்.//

      கவினும் நிறைய பொம்மைகள் வைத்து இருக்கிறான்.

      //கல்லூரி சென்ற பிறகும் கூட அந்த பொம்மைகளை வைத்துக் கொண்டதுண்டு. அதன் பின் வீட்டில் செல்லங்கள் வளர்க்கத் தொடங்கினோம்.//

      இப்போது அவருக்கு பிடித்த தொழில் வேறு கிடைத்து விட்டது. அவைகளிடம் அன்பும் கருணையுமாக நடந்து கொள்வார்.

      //கடைகள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கின்றன. படங்கள் அனைத்தும் ரசித்தேன் அக்கா விவரங்களும், அந்த தலை அலங்கார விவரங்கள் அந்தப் பையன் அணிந்திருக்கும் அந்த ஊர் ஆடை உட்பட விவரங்கள் அனைத்தும்//

      அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் விரிவாக அளித்தமைக்கு நன்றி கீதா.

      நீக்கு
  14. படங்கள் ஒவ்வொன்றும் அழகு. பதிவு சிறப்பு. நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. அழகான காட்சிகளை அற்புதமாக படமாக்கி எங்கள் பார்வைக்கு பார்வைக்கு தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரபாவதி, வாழ்க வளமுடன்

      //அழகான காட்சிகளை அற்புதமாக படமாக்கி எங்கள் பார்வைக்கு பார்வைக்கு தந்தமைக்கு நன்றி//

      உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. தெருப் பாடகர்கள், சிறு வியாபாரிகள், கடைகள் உட்பட அருமையான street photography! பகிர்வுக்கு நன்றி. சிறுவர் சிறுமியரை வியாபாரத்தில் ஈடுபடுத்துவது வருத்தத்திற்குரியது. ஜாக்கும் அவரைக் கொடியும் கதையைத் தங்கள் வரிகளிலும் காணொளியிலும் மீண்டும் வாசிக்க பார்க்க அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //தெருப் பாடகர்கள், சிறு வியாபாரிகள், கடைகள் உட்பட அருமையான street photography! பகிர்வுக்கு நன்றி.//

      உங்கள் ரசிப்புக்கு நன்றி.

      //சிறுவர் சிறுமியரை வியாபாரத்தில் ஈடுபடுத்துவது வருத்தத்திற்குரியது.//

      ஆமாம்.

      //ஜாக்கும் அவரைக் கொடியும் கதையைத் தங்கள் வரிகளிலும் காணொளியிலும் மீண்டும் வாசிக்க பார்க்க அருமை.//

      ஆமாம், முன்பே வாசித்து இருப்பீர்கள் மீண்டும் வாசித்து , காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  17. மெக்சிகோ பற்றி சில கார்ட்டூன் படங்களிலும் ஆங்கிலப் படங்களிலும் பார்த்திருக்கிறேன். எதற்கெடுத்தாலும் இசைதான். அந்தத் தொப்பியும் போர்வை போர்த்தியது போன்ற உடையும் அவர்களது கலாச்சார அடையாளம் போலும். மோவின் தொப்பி சூப்பர். கார்ன் சிப்ஸ் இங்கேயும் கிடைக்கும். அவகாடோ வைத்து செய்யும் dip அல்லது சல்சாவுடன் பிள்ளைகள் சாப்பிடுவார்கள்.

    குழந்தைகளை விற்பனைக்குப் பயன்படுத்துவது நம்மூரைப் போலத்தான் இருக்கிறது. இசைக்கலைஞர்கள் நிலையும் பரிதாபத்தை உண்டுபண்ணுகிறது.

    கிடைத்த கொஞ்ச நேரத்திலேயே இவ்வளவு புகைப்படங்கள் எடுத்திருக்கிறீர்களே... மெக்சிகோ பற்றித் தெரிந்துகொள்ள வசதியாக உள்ளது. பீன்ஸ் கொடிக் கதையை நினைவுபடுத்தியதற்கு நன்றி. மிகவும் ரசனையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்

      //மெக்சிகோ பற்றி சில கார்ட்டூன் படங்களிலும் ஆங்கிலப் படங்களிலும் பார்த்திருக்கிறேன். எதற்கெடுத்தாலும் இசைதான். அந்தத் தொப்பியும் போர்வை போர்த்தியது போன்ற உடையும் அவர்களது கலாச்சார அடையாளம் போலும்.//

      ஆமாம். நானும் சினிமாக்களில் பார்த்தது தான். இப்போதுதான் அவர்கள் வாழ்க்கை முறையை நேரில் பார்த்தேன்.

      //மோவின் தொப்பி சூப்பர். கார்ன் சிப்ஸ் இங்கேயும் கிடைக்கும். அவகாடோ வைத்து செய்யும் dip அல்லது சல்சாவுடன் பிள்ளைகள் சாப்பிடுவார்கள்.//

      ஆமாம், மெக்சிகோவில் எல்லா உணவு விடுதிகளிலும் இவை உண்டு.


      //குழந்தைகளை விற்பனைக்குப் பயன்படுத்துவது நம்மூரைப் போலத்தான் இருக்கிறது. இசைக்கலைஞர்கள் நிலையும் பரிதாபத்தை உண்டுபண்ணுகிறது.//

      ஆமாம், பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

      //கிடைத்த கொஞ்ச நேரத்திலேயே இவ்வளவு புகைப்படங்கள் எடுத்திருக்கிறீர்களே...//

      இன்னும் கடைவீதி படங்கள், வீடுகள், எல்லாம் எடுத்தேன். பதிவு நீண்டு கொண்டே போகிறது.

      //மெக்சிகோ பற்றித் தெரிந்துகொள்ள வசதியாக உள்ளது.//

      நன்றி.

      //பீன்ஸ் கொடிக் கதையை நினைவுபடுத்தியதற்கு நன்றி. மிகவும் ரசனையான பதிவு.//

      ரசித்துப்படித்து அழகான கருத்து சொன்னதற்கு நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. மெக்ஸிகோ கடைவீதி படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நீங்கள் எடுத்துக் கொண்ட மதிய உணவு மிகவும் சிம்பிளாக உள்ளது. பாட்டுப் பாடும் கலைஞர்கள் வந்து சாப்பிடும் போது அருகில் நின்று இசையமைப்பது செவிக்கும் உணவாக ரசிக்கலாம். ஆனால், அவர்கள் எந்த மொழியில் பாடுவார்களோ ?

    கமல் படத்திலும், மாதவன் நடித்த நளதமயந்தி படத்திலும், இந்த மாதிரி வெளிநாட்டில் நம்முடனே வந்து பல இசை கருவிகளை வைத்துக் கொண்டு இசையமைத்து பாடும் கலைஞர்களை காட்டுவார்கள். பார்த்திருக்கிறேன். கமல் கூட சிங்காரவேலன் படத்தில் பல வித இசை கருவிகளோடுஅந்த மாதிரி ஒரு காட்சியை அமைத்திருப்பார்.

    கடைவீதி சுத்தமாக அனைக சாமான்களோடு நன்றாக உள்ளது. தங்கள் பேரன் வாங்கிய தொப்பியும் அருமை. வியாபாரம் செய்யும், பெண்மணிகளும் , அவர்களோடு குழந்தைகளும் பாவம் அவர்கள் குடும்பத்திற்காக இப்படி அலைந்து திரிந்து பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.

    ஜமுக்காளம் போன்ற உடை வித்தியாசமாக இருக்கிறது. குதிக்கும் பீன்ஸ் பற்றிய தகவல்களும் வியப்பை தருகிறது. அதன் தொடர்பான கதையையும் படித்தேன். சுவாரஸ்யமாக உள்ளது. அதன் காணொளியையும் கண்டு கதை கேட்டேன்.

    உங்கள் இந்த கப்பல் பதிவுகளுக்கு முறையாக வர இயலவில்லை. இல்லை இந்த மாதிரி தாமதமாக வருகிறேன். இந்த வார சனி, ஞாயிறு வெளியில் சென்றோம். அதனாலும், பின் வீட்டு வேலைகளினாலும் உடல் அலுப்பாக வேறு உள்ளது. இன்னும் வரும் இருபதாம் தேதிகளிலிருந்து உறவுகளின் வருகை நேரங்கள் நெருக்கடியாக கழியும். என்னால் முடிந்த அளவுக்கு பதிவுகளுக்கு வரப்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
    இந்தப்பதிவுக்கு தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. மெக்ஸிகோ கடைவீதி படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நீங்கள் எடுத்துக் கொண்ட மதிய உணவு மிகவும் சிம்பிளாக உள்ளது. பாட்டுப் பாடும் கலைஞர்கள் வந்து சாப்பிடும் போது அருகில் நின்று இசையமைப்பது செவிக்கும் உணவாக ரசிக்கலாம். ஆனால், அவர்கள் எந்த மொழியில் பாடுவார்களோ ?//

      அவர்கள் ஸ்பானீஸ் மொழியில் பாடுவார்கள், பேசுவார்கள். ஆங்கிலம் சிலருக்கு மட்டுமே தெரியும்.மாயன் மொழி என்று ஒன்று பேசும் மக்கள் இருக்கிறார்கள்.

      //கமல் படத்திலும், மாதவன் நடித்த நளதமயந்தி படத்திலும், இந்த மாதிரி வெளிநாட்டில் நம்முடனே வந்து பல இசை கருவிகளை வைத்துக் கொண்டு இசையமைத்து பாடும் கலைஞர்களை காட்டுவார்கள். பார்த்திருக்கிறேன். கமல் கூட சிங்காரவேலன் படத்தில் பல வித இசை கருவிகளோடுஅந்த மாதிரி ஒரு காட்சியை அமைத்திருப்பார்.//

      முன்பு ஜெயசங்கர் நடித்த படங்களில் கெளபாய் தொப்பி, மெகசிஸ்கோ மக்கள் போல உடை, விடுதிகளில் இப்படி பாடுபவர்கள், ஆடுபவர்களை காட்டுவார்கள்.

      //கடைவீதி சுத்தமாக அனைக சாமான்களோடு நன்றாக உள்ளது. தங்கள் பேரன் வாங்கிய தொப்பியும் அருமை. வியாபாரம் செய்யும், பெண்மணிகளும் , அவர்களோடு குழந்தைகளும் பாவம் அவர்கள் குடும்பத்திற்காக இப்படி அலைந்து திரிந்து பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.//

      ஆமாம், குடும்பம் முழுவதும் பாடு பட்டால் தான் வாழ முடியும் எனும் நிலை என்றால் இப்படி உழைத்து தானே ஆக வேண்டும்.

      //ஜமுக்காளம் போன்ற உடை வித்தியாசமாக இருக்கிறது. குதிக்கும் பீன்ஸ் பற்றிய தகவல்களும் வியப்பை தருகிறது. அதன் தொடர்பான கதையையும் படித்தேன். சுவாரஸ்யமாக உள்ளது. அதன் காணொளியையும் கண்டு கதை கேட்டேன்.//

      பதிவில் அனைத்தையும் ரசித்துப்பார்த்து விரிவான அழகான கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.

      நேரம் கிடைக்கும் போது வாருங்கள் கமலா. குடும்பம் தான் எல்லோருக்கும் முக்கியம். குழந்தைகளுடன் சமயம் கிடைக்கும் போது எல்லாம் வெளியே போய் மகிழ்ச்சியாக இருங்கள்.

      பதிவு இங்கு தானே இருக்கும் ஓய்வு நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொல்லுங்கள் போதும்.

      நன்றி.

      நீக்கு
  19. கடை பொருட்கள் அலங்காரமாக இருக்கிறது.பேரன் வாங்கிய தொப்பி அழகு.

    ஜாக் பீன்ஸ் கதை சிறுவர்களுக்கு நன்றாக பிடிக்கும் எனது பேரனும் முன்பு இக் கதை விரும்பி கேட்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு