புதன், 27 செப்டம்பர், 2023

ஊட்டிக்கு ஒரு சமயச் சுற்றுலா





இன்று உலக சுற்றுலா தினமாம், காலண்டரில் போட்டு இருந்தார்கள். முன்பு சுற்றுலா பற்றி எழுதி இருந்த பதிவு மீள் பதிவாக இங்கு இடம் பெறுகிறது. 2011 ல் போட்ட பதிவு.

கோடை விடுமுறைக்காலம் இது. விடுமுறையில் 
வீட்டிலிருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டில்
கட்டி மேய்க்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கும் நேரம் .

விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு போகலாமா? அல்லது உறவினர்களைஅழைத்துக் கொண்டு எங்காவது மகிழ்ச்சியாய் சென்று வரலாமா?- என்று வீட்டில் எல்லோரும் கலந்து ஆலோசிக்கும் நேரம்.அவரவர் பட்ஜெட்டுக்க ஏற்றமாதிரி விடுமுறையை 
கழிக்க எங்கு போகலாம் என்று முடிவுசெய்துகொண்டு 
இருக்கும் காலம் இது. வெயிலுக்கு இதமாய் , கண்ணுக்கு 
குளிர்ச்சியாய் ,கருத்துக்கு மகிழ்ச்சியாய் செல்ல ஒரு இடம் மலைகளின ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி . மே மாதம் மலர்க்கண்காட்சி நடைபெறும். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும்.

வாழ்க்கை ஒரே மாதிரி ஓடிக் கொண்டு இருந்தால் (வீடு,வேலை,படிப்பு) 
சிலநேரம் அலுப்பு தட்டிவிடும்.நம் மனச்சோர்வை அகற்றி, 
நம்மை மீண்டும் புத்துண்ர்வு மிக்கவர்களாய் மாற்ற உதவுவது சுற்றுலா.எனக்கு சிறு வயதிலிருந்தே சுற்றுலாவில் மோகம் உண்டு. அப்பா எந்த ஊரில்வேலை பார்த்தாலும் அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போவதற்குள் அந்த ஊரின் சிறப்பான இடங்கள் என்னஎன்று தெரிந்து கொண்டு காட்டிவிடுவார்கள் 
எங்களுக்கு.

நான் பள்ளியில் அழைத்து செல்லும் சுற்றுலாவிற்கு முதல் 
ஆளாய் பெயர் கொடுத்து விட்டு ,பிறகு வந்து வீட்டிலே 
சொல்வேன். கெஞ்சி, கொஞ்சி அனுமதி
 பெற்றுவிடுவேன்.

பள்ளியில் நான்காவது படிக்கும் போது என் முதல் சுற்றுலா ! 
பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறுக்கு அழைத்து சென்றார்கள். 
அதற்கு அம்மா தனியாக அனுப்ப முடியாது என்று பள்ளியில் 
அனுமதி பெற்று என்னோடு வந்தார்கள் . அப்போது 
தூத்துக்குடியில் இருந்தோம். காலை அழைத்துப் போய் மாலை 
வந்து விடுவோம் அதற்கே அம்மா வந்தார்கள். 

5 ம் வகுப்பிலிருருந்து  நான் தனியாக  பள்ளியில்
சுற்றுலாபோவேன். ஒவ்வொரு ஆண்டும் அம்மா தனியாக
 அனுப்ப  பயப்படுவார்கள் அப்பா தான் அம்மவை
 சம்மதிக்க வைத்து அனுப்புவார்கள்.

திருமணம் ஆன புதுதில் தனியாக எல்லோரும் ஊட்டி 
போவார்கள். நாங்கள் அப்படி போகவில்லை. என் கணவரின்
இரு அண்ணன்களுடன் மலர்க் கண் காட்சிக்குப் போனோம். 
அடுத்த முறை மலர்க்கண்காட்சிக்கு மாமியார், மாமனார்,
கணவரின் அண்ணன், அண்ணி, குழந்தைகள் 
என்று கூட்டமாய்ப் போனோம்.

மூன்றாவது தடவை, என் மகன் சிறுவனாய் இருந்தபோது 
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் 
போனோம். அந்த சமயம் என் மகள் வரமுடியவில்லை. 
அவள் தனது பெரியப்பா வீட்டுக்குப் போய் இருந்தாள். 
என்னை ஊட்டி ரயிலில் கூட்டிப்போகவில்லை என்று 
வெகு நாட்கள் வரை சொல்லிக்கொண்டு இருந்தாள். மகன் ’ 
ஆமாம் ! என்னையும் எனக்கு விவரம் தெரியாத வயதில் 
அழைத்து போய் விட்டு வந்தீர்கள்’ என்பான்.

சென்ற ஆண்டு நாங்கள் இருவர் மட்டும் போனபோது குழந்தைகளையே நினைத்துக் கொண்டுஇருந்தோம். 
சிறு வயதில் போனபோது தனிமை கிடைக்கவில்லை, 
இப்போது   தனிமையை விரும்பவில்லை மனது.

 குழந்தைகள்,உறவினர் இல்லாமல் தனியாக போகிறோமே 
என்று புலம்பும் மனது இப்போது... இரண்டு நாட்கள் ஓட்டலில்
 தங்கி அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்த காரில் மலைகளின்
 ராணி உதகையின் அழகை காணச் சென்றோம்.


ஊட்டியில் குழந்தைகள் ரயிலில் ஏறி குதுகலித்தோம். படகு
 சவாரி போய் மகிழ்ந்தோம்.



 தொட்டபெட்டா, 



தாவரயியல் பூங்கா, 


குழந்தைகளின் ரயில் விளையாட்டு

குன்னூர் சிம்ஸன் பார்க்.

 டால்பின்நோஸ் போய் மலை அழகை பார்த்தோம்.

ஓட்டல்  முன்பு வைத்து இருக்கும் தோட்டத்து மலர்


ஊட்டியில் hotel safire garden view என்ற விடுதியில் தங்கினோம். ஓட்டல் அருகில் ரயில் நிலையம் உள்ளது.



இயற்கை அன்னையின் வழிபாடு முதல் நாள் , மறு நாள் எங்கள் ஊட்டி பயணம் ஆலய வழிபாடு ஆனது. . தங்கியிருந்த ஓட்டலில் பஸ்ஸில் போகலாம் பக்கத்தில் கோயில் இருக்கிறது என்றார்கள் .   நடக்கும் தூரத்தில் பேருந்து நிலையம்..நாங்கள் ஆட்டோவில் போனோம்.

நாங்கள் பார்த்த கோயில்கள்:

அருள்மிகு விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் திருக்கோயில்
(vissalakshi viswanathar temple,ooty)





இக்கோயில் ,ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள ”காந்தல் “(காந்தள்?) என்ற ஊரில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. சிவபெருமான் ,அம்மன், பாலதண்டபாணி, நடராசர் முதலிய சன்னதிகள் உள்ளன. இந்த கோவில் மன்னன் ’என்ற சினிமாவினால் புகழ் பெற்றது என்றார்கள். ரஜினிகாந்த் பண்டரிபாயை தூக்கிக் கொண்டு படியில் இறங்கிக் கொண்டே பாடுவாரே ’அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ’ என்று ,அந்தக் காட்சி இங்கு தான் எடுக்கப்பட்டதாம்.

நாங்கள் போனபோது ஒரு கல்யாணம் நடந்து கொண்டு இருந்தது. கல்யாணங்கள் அங்கு செய்கிறார்கள்.கோவை பேரூர் இளைய சன்னிதானம் திருமிகு மருதாசல அடிகளாரின் பொறுப்பில் உள்ளதாய் சொன்னார்கள். இதைத் தட்சிணாமூர்த்திமடம் என்றும் சொல்கிறார்கள். இங்கு அன்னதானங்கள் நடை பெறுமாம்.

நவகிரகங்களுக்கு அழகாய் ஒன்பது பெரிய விளக்கு வைத்து இருந்தார்கள்.பக்கத்தில் சின்ன பாட்டில்களில் எண்ணெய் வைத்து இருந்தார்கள். அதை காசை போட்டு விட்டு நாமே எடுத்துக்கொள்ளலாம். எடுத்து அந்த விளக்குகளில் ஊற்றி வழிபடுகிறார்கள். கோயிலின் பின்புறம் மலைக் காட்சி அழகாய் இருக்கிறது. முன் காலத்தில் குறிஞ்சி நிலத்தில் காந்தள் மலர்கள் பூக்கும் என்று சொல்வார்கள் காந்தள் என்ற சொல்லே காந்தல் என்று மாறி இருக்கலாம். இக்கோயிலின் அருகில் ஒரு சர்ச் உள்ளது.


அடுத்து ஆட்டோக்காரரிடம் என்ன கோயில் இருக்கு பார்க்க என்று கேட்டால் மாரி அம்மன் கோயில் இருக்கிறது என்றார்,மான்குன்றம் என்னும் முருகன் கோயிலும் உள்ளது என்றார். சரி என்று அவரது ஆட்டோவில் முதலில் மாரி அம்மன் கோயில்போனோம். உதகை நகர் உள்ளேயே உள்ளது குதிரைப் பந்தய மைதானத்திற்கு அருகில் உள்ளது. மிகவும் வரசித்தியாய் உள்ள கோயிலாம்.பெரிய கோபுரம் உள்ளது. அம்மன் மிகவும் அழகாய் அலங்கரிக்கப் பட்டு இருந்தார்.


மாரியம்மன் கோயில்
(mariamman koil,ooty)


அடுத்து நாங்கள் போனது எல்க்கில்(elc hill) மான் குன்றம். உதகையிலிருந்து 2 கி.மீ தூரத்தில் ஊரின் கடைசியில் 
மலைமீதுள்ள சிறு கோவில். ஆட்டோ மேலே செல்கிறது. பாதை செங்குத்தாய் இருக்கிறது.போகிறவழியில் ராகவேந்திரா மடம் இருக்கிறது. 





மலை மீது உள்ள கோயிலுக்கு போக பாதை வளைந்து 
வளைந்து போகிறது.குறுக்கே நடந்து செல்ல, படிகளும் உள்ளன. மேலே மலைப்பாறைகளுக்கு இடையே கோயில் அமைந்துள்ளது. அருள்மிகுபாலதண்டபாணி சந்நதி அங்கு உள்ளது. நாங்கள் போனபோது சஷ்டி. சென்னையிலிருந்து ஒரு குடும்பம் 
அபிஷேகம் செய்ய வந்து இருந்தார்கள். திரை போட்டு 
இருந்தது . பின் காத்திருந்து அபிஷேகம் அலங்காரம் எல்லாம் பார்த்தோம்.
 குருக்கள் சந்தனகாப்பு செய்து இருந்தார். முருகன் மிக 
அழகாய் இருந்தார்.

சுற்றுபுறம் அழகாய் அமைதியாய் இருக்கிறது.. கோவிலுக்கு ஒருஅழகிய சிறிய தேர் உள்ளது. சுவரில் சஷ்டிகவசம் எழுதி இருந்தார்கள். காத்து இருக்கும் நேரத்தில் அதைப் 
பார்த்துபடித்தோம்.

1972 ல் இக்கோயில் விரிவாக்கத்திற்காக அடிக்கல்
 நாட்டப்பட்டதாகஅங்குள்ள அறநிலையத்துறைக் கல்வெட்டு
 ஒன்று தெரிவிக்கிறது.
 
அடுத்த தடவை குழந்தைகளை அழைத்து வரவேண்டும் என்று
 சொல்லிக் கொண்டே வந்தோம்.





பள்ளியில் படிக்கும் போது தோழிகளுடன் சுற்றுலா  சென்று குதுகலித்தது ஒரு காலம் ,தாய் தந்தையுடன் போனது ஒருகாலம் , கணவர் உறவினர்களுடன் சென்றதுஒருகாலம், எங்கள் குழந்தைகளுடன் சென்றது ஒருகாலம், இப்போது நாங்கள்
 மட்டும் சென்றது என்ற காலம்.

ஒவ்வொரு சமயத்திலும் வித்தியாசமான உணர்வுகள் ,
அனுபவங்கள். . இப்படிப் பலரது பல வகையான உணர்ச்சிக் 
கலவைகளுக்குச் சாட்சியாய் இருக்கிறது உதகை.

பேரன்கள், பேத்தியுடன் எல்லோரும் சேர்ந்து மறுபடியும்போக வேண்டும் என்று பேசிக் கொண்டு வந்தோம்.மூணாறுக்கு
 ஒருதடவை இப்படி எல்லோரும் சேர்ந்து போனோம்.

குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள் அவர்களுக்கு தின்பண்டங்கள் குளிர்பானங்கள் எல்லாம் வாங்கி கொடுத்து
 விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு விடாமல் ஒருபை எடுத்துப்போய் அவற்றை சேகரித்து குப்பைத் தொட்டியில்
 போடும் நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்கலாம். நம்மைப் 
பார்த்து நம் குழந்தைகளும் அதை கடைப் பிடிப்பார்கள். 
சுற்றுப் புறம் சுத்தமாய் இருந்தால் இயற்கையை ரசிக்கலாம். கோயில்களும் ,இயற்கையும் நம் வருங்கால சந்ததிகளுக்கு 
 உரிய சொத்து.அதை சரியாகப் பாதுகாக்க வேண்டும்.

பழைய பதிவு  தங்கள் பின்னூட்டங்கள் இடம்பெற்று 
இருக்கிறதா என்று பார்க்கலாம். பார்வையாளர்கள் 5870
பின்னூட்டங்கள் குறைவு.

வாழ்க  வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------------------------------------------------

35 கருத்துகள்:

  1. அழகிய படங்கள் வழக்கம் போல் சிறப்பு.

    நான் ஊட்டி போய் இருக்கிறேன். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இரயிலில் செல்லவேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை.

    இப்பொழுதுதான் "ஊட்டி, ஊதாரி ஊமைத்துரை" என்றொரு பதிவு எழுதினேன். இங்கு வந்தால் தங்களது ஊட்டி பதிவு ஆச்சரியமாக இருக்கிறது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      அழகிய படங்கள் வழக்கம் போல் சிறப்பு.//

      நன்றி ஜி.

      //நான் ஊட்டி போய் இருக்கிறேன். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இரயிலில் செல்லவேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை//

      விரைவில் உங்கள் ஆசை நிறைவேற வேண்டும்.

      //இப்பொழுதுதான் "ஊட்டி, ஊதாரி ஊமைத்துரை" என்றொரு பதிவு எழுதினேன். இங்கு வந்தால் தங்களது ஊட்டி பதிவு ஆச்சரியமாக இருக்கிறது மகிழ்ச்சி.//

      ஓ! அப்படியா ஆச்சரியம்தான். ஊட்டி ஊதாரி ஊமைத்துரை பதிவை படிக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      .

      நீக்கு
  2. உங்கள் அப்பா அப்படி!  எங்கள் அப்பா தஞ்சாவூரில் அவ்வளவு வருடங்கள் இருந்தும் சரஸ்வதி மஹால், அரண்மனை போன்றவற்றை காட்டியதில்லை.  பெரிய கோவிலுக்கே சில முறைதான் அழைத்துச் சென்றிருக்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //உங்கள் அப்பா அப்படி! எங்கள் அப்பா தஞ்சாவூரில் அவ்வளவு வருடங்கள் இருந்தும் சரஸ்வதி மஹால், அரண்மனை போன்றவற்றை காட்டியதில்லை. பெரிய கோவிலுக்கே சில முறைதான் அழைத்துச் சென்றிருக்கிறார்!//
      உங்கள் அப்பாவைப்பற்றி முன்பு சொல்லி இருக்கிறீர்கள்.

      அப்பா எங்களை மட்டுமல்ல எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்கள், மற்றும் நட்புகளை (முதலில் இருந்த நட்புகள்) அழைத்து சென்று காட்டுவார்கள். அவர்கள் வர முடியவில்லை என்றால் வண்டி ஏற்பாடு செய்து எங்களை துணைக்கு போக சொல்வார்கள்.

      அப்பா போல் கணவர் கிடைத்தார், எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களை பல இடங்கள் அழைத்து சென்று இருக்கிறார்கள் எங்களையும் விடுமுறையில் அழைத்து செல்வார்கள்.

      மகனும் அது போல தான் அவனும் எல்லா இடங்களுக்கும் அழைத்து போவான்.


      நீக்கு
    2. ஶ்ரீராம் அப்பாவை விட எங்க அப்பா இன்னும் மோசம். மதுரை பெரியாஸ்பத்திரியில் நடந்த கண்காட்சிக்கே போகவிடலை. இத்தனைக்கும் டிக்கெட்டெல்லாம் கிடையாது. :(

      நீக்கு
  3. பள்ளியில் அழைத்துச் செல்லும் சுற்றுலாவுக்கு ஒருநாளும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டதில்லை.  வீட்டின் சூழலும் கொஞ்சம் சிரமம்தான்!

    பதிலளிநீக்கு
  4. நானும் எனது பதினாலாவது வயதில் ஊட்டி சென்று வந்திருக்கிறேன்.  இவ்வளவு இடங்கள் எல்லாம் பார்க்கவில்லை.  மிகக் குறைவான இடங்களே பார்த்தோம்.  அக்கா திருமணமாகி மாமா அங்கு வேலை பார்த்ததால் ஊட்டி விசிட் நிகழ்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானும் எனது பதினாலாவது வயதில் ஊட்டி சென்று வந்திருக்கிறேன். இவ்வளவு இடங்கள் எல்லாம் பார்க்கவில்லை. மிகக் குறைவான இடங்களே பார்த்தோம். //

      கோவையில் படித்த போது பள்ளியில் அழைத்து சென்ற போது நிறைய இடங்கள் பார்த்தேன்.

      உறவினர் வீட்டுக்கு அம்மா, அக்காவுடன் போன போது சில இடங்கள் பார்த்தோம்.

      கணவர் குடும்பத்துடன் நாங்களும் முன்பு போன போது எல்லாம் மலர் கண்காட்சி , தொட்டபெட்டா மட்டும் பார்த்து வந்து விடுவோம்.

      2011 ம் ஆண்டு மட்டும் இரண்டு நாள் தங்கியதால் சில இடங்களை கூடுதலாக பார்த்தோம்.


      //அக்கா திருமணமாகி மாமா அங்கு வேலை பார்த்ததால் ஊட்டி விசிட் நிகழ்ந்தது.//
      அப்படித்தான் போவோம். மகளை டெல்லியில் திருமணம் செய்து கொடுத்ததால் அங்கு பொய் சுற்றிப்பார்த்தோம், மகன் அமெரிக்கா போனதால் அங்கு போய் சுற்றிப்பார்த்தோம். இல்லையென்றால் நாம் எங்கு இவ்வளவு தூரம் போவோம்.



      நீக்கு
    2. நான் கல்யாணம் ஆகும்வரை சின்னமனூர், சென்னை தவிர்த்து எங்கேயும் போகலை,. இரண்டுமே சித்தி வீடு. சின்னமனூரில் எங்கேயுமே போகலை. சென்னையில் சித்தப்பாவுக்காக சில வேலைகள் செய்யத் தபால் அலுவலகம் போன்ற இடங்கள் போவேன். தனியாகத் தான் சித்தப்பா அனுப்புவார். என் அப்பா எனில் அனுப்பவே மாட்டார். படிக்கையில் சிநேகிதி வீட்டில் புத்தகம் வாங்கக் கூடத் தம்பி கூட வருவான்.

      நீக்கு
  5. அந்த வயதில் தனியாகப் போக முடியாததும், இந்த வயதில் தனியாகப் போக விரும்பாததும்...  உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த வயதில் தனியாகப் போக முடியாததும், இந்த வயதில் தனியாகப் போக விரும்பாததும்... உண்மைதான்.//

      ஆமாம், ஒவ்வொரு கால கட்டங்களில் மனஓட்டம் ஒவ்வொரு மாதிரி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //சிறப்பு//


      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      //அழகான படங்களும் விளக்கங்களும் அருமை...//

      உங்கள் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. 2011 ஆண்டு தான் வலைப்பூவிற்கு வந்தேன்... அந்தப் பதிவில் அடியேன் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      பழைய பதிவை படித்து உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  9. சிறப்பான பதிவை மீண்டும் வழங்கியதற்கு மகிழ்ச்சி..

    அழகிய படங்கள்..
    அருமையான விஷயங்கள்.. ஊட்டிக்கெல்லாம் நான் சென்றதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜு, வாழ்க வளமுடன்

      //சிறப்பான பதிவை மீண்டும் வழங்கியதற்கு மகிழ்ச்சி..//

      படிக்காத பதிவு அதுதான் இந்த பகிர்வு . சுற்றுலா தினத்தில் போன இடங்கல் நிறைய இருக்கிறது ஆனால் சுற்றுலா பற்றி இதில் எழுதியது நினைவுக்கு வந்தது அதனால் இந்த பகிர்வு.


      //அழகிய படங்கள்..

      அருமையான விஷயங்கள்//

      நன்றி
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. நேற்று சுற்றுலா தினமா....கோமதிக்கா உங்கள் நினைவுகள் சுமந்து ஊட்டி சுற்றிய பதிவு அருமை.

    ஊட்டியில் கோயில்கள் பற்றி தெரிந்துகொண்டேன்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //நேற்று சுற்றுலா தினமா....கோமதிக்கா உங்கள் நினைவுகள் சுமந்து ஊட்டி சுற்றிய பதிவு அருமை.//

      ஆமாம், நேற்று சுற்றுலா தினம். இன்று "இதய தினம்" தினம் ஒரு தினம் போடுகிறார்கள்.
      ஊட்டியில் நிறைய இடங்கள் இருக்கிறது. நாங்கள் சில கோவில்கள் போனோம்.


      நீக்கு
  11. நான் பள்ளியில் படித்தப்ப சுற்றுலா சென்றதில்லை கோமதிக்கா. வீட்டில் அனுமதித்ததில்லை. எல்லாம் பணம் என்ற ஒன்றுதான்.

    அதன் பின்னும் அப்படியே. சரி அது ஓகே என்றாலும் எங்கள் ஊரில் எவ்வளவு அழகான இடங்கள்! கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லாத இடங்களா? ஏன் எங்கள் கிராமத்தைச் சுற்றியிருக்கும் ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, முக்கூடல் அணைக்குக் கூட அழைத்துச் சென்றதில்லை. பேருந்திலேயே போய் வரலாம். எப்பவும் புத்தகம் புத்தகம் அதுவும் பாடப் புத்தகம். இப்போது நாங்கள் தங்கைகள் இதெல்லாம் பேசிக் கொள்வதுண்டு.

    திருமணம் ஆன பின்னும் சுற்றுலா என்று போனதில்லை. மகன் பிறந்த பிறகுதான் அவ்வப்போது சென்றதுண்டு.

    எனக்கு ரொம்பப் பிடிக்கும். பல ஊர்களுக்குச் சென்று பார்க்க வேண்டும்னு. கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி. இப்ப கூட போக முடியாத சூழல். ஒரு நாளில் அரை நாள் சென்று வர முடிந்த இடங்களுக்கு மட்டும்தான் போக முடியுது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கு ரொம்பப் பிடிக்கும். பல ஊர்களுக்குச் சென்று பார்க்க வேண்டும்னு. கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி. இப்ப கூட போக முடியாத சூழல். ஒரு நாளில் அரை நாள் சென்று வர முடிந்த இடங்களுக்கு மட்டும்தான் போக முடியுது.//

      சிறு வயது முதலே பொறுப்பும் கடமையும் உங்களை வழி நடத்தி சென்று இருக்கிறது கீதா.

      நாங்கள் விடுமுறைக்கு அவர்கள் அண்ணாக்கள் பணிபுரிந்த ஊருகளுக்கு செல்வோம். அப்போது அவர்கள் அங்கு உள்ள இடங்களை கூட்டிக் கொண்டு போய் காட்டுவார்கள்.
      நாங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் எங்கள் ஊர் முக்கிய இடங்களிய காட்டுவோம். பெரும்பாலும் கோவில்கள்தான்.
      அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கேட்பது, சினிமா போக மாட்டீர்களா இப்படி கோவில் குளம் தான் பார்ப்பீர்களா என்று.
      அத்தை, மாமா வந்தாலும் கோவில்கள்தான் .




      நீக்கு
  12. கோயம்புத்தூரில் மூன்று வருடங்கள் இருந்தும் ஊட்டி சென்றதில்லை. இப்ப சில வருடங்களுக்கு முன்னர் துளசியின் வீட்டுக்குப் போனப்ப அங்கிருனு 3 மணிநேரப் பயணம்தான்னு அவங்க போனப்ப போனேன். அதுவும் மலர்கண்காட்சி மட்டுமே வேறு எந்தப் பகுதிக்கும் போகும் போது பார்த்த காட்சிகள். ஒரு நாள் பயணம்... படங்கள் எடுத்தேன் எல்லாம் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் இருக்கு. பதிவு போட்டேனா என்ற நினைவும் இல்லை.

    ஊட்டியில் அவ்வளவாக யாரும் செல்லாத இடங்களுக்குச் செல்ல ஆசை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோயம்புத்தூரில் மூன்று வருடங்கள் இருந்தும் ஊட்டி சென்றதில்லை.//
      நமக்கு பக்கத்தில் இருக்கும் இடங்களை பார்க்க முடியாமல் போய் விடும். பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கும். நீங்கள் சொல்வது போல கிடைத்தவரை நாம் திருப்த்தி அடைந்து விடுகிறோம்.

      அப்பாவுடன் கோவையில் ஐந்து வருடம் இருந்தோம்.புகுந்தவீடும் கோவையாகி விட்டது.

      //இப்ப சில வருடங்களுக்கு முன்னர் துளசியின் வீட்டுக்குப் போனப்ப அங்கிருனு 3 மணிநேரப் பயணம்தான்னு அவங்க போனப்ப போனேன். அதுவும் மலர்கண்காட்சி மட்டுமே வேறு எந்தப் பகுதிக்கும் போகும் போது பார்த்த காட்சிகள். ஒரு நாள் பயணம்... படங்கள் எடுத்தேன் எல்லாம் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் இருக்கு. பதிவு போட்டேனா என்ற நினைவும் இல்லை.//

      நாங்கள் எடுத்த படமும் நிறைய அழிந்து விட்டது. பார்க்க வேண்டும் இருக்கா என்று. முன்பு பிலிம் ரோல் போடும் காமிரா . ஆல்பம் செய்து வைத்து இருக்கிறோம்.
      முதன் முதலில் டெல்லி போய் வந்த படங்கள் எல்லாம் இல்லவே இல்லை. பிலிமை கழற்றும் போது பழுது பட்டு விட்டது. நினைவுகள் மட்டும் உள்ளது.

      //ஊட்டியில் அவ்வளவாக யாரும் செல்லாத இடங்களுக்குச் செல்ல ஆசை.//

      போகலாம் குடும்பத்துடன் மகன், மருமகளுடன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு
  13. நான் கல்யாணம் ஆகி முதல் 3 வருடங்கள் சென்னை.கருவிலி/மதுரை தவிர்த்து எங்கேயும் போகலை. அதன் பின்னர் ராஜஸ்தான் போனதும் உதயப்பூர், மவுன்ட் அபு, புஷ்கர், அஜ்மேர் எனப் போக ஆரம்பித்துக் குழந்தைகளூக்கு விபரம் தெரிய ஆரம்பிச்சதுமே ஒவ்வொரு வருடமும் அரசு கொடுக்கும் எல்டிசியில் பல இடங்கள் போனோம். மைசூர், பெண்களூர், கோவா, கன்யாகுமர், ராமேஸ்வரம், தில்லி, ஜெய்ப்பூர் எனப் போனோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //ராஜஸ்தான் போனதும் உதயப்பூர், மவுன்ட் அபு, புஷ்கர், அஜ்மேர் எனப் போக ஆரம்பித்துக் குழந்தைகளூக்கு விபரம் தெரிய ஆரம்பிச்சதுமே ஒவ்வொரு வருடமும் அரசு கொடுக்கும் எல்டிசியில் பல இடங்கள் போனோம். மைசூர், பெண்களூர், கோவா, கன்யாகுமர், ராமேஸ்வரம், தில்லி, ஜெய்ப்பூர் எனப் போனோம்.//

      உங்கள் அப்பா சொன்னது போல உங்கள் கணவருடன் பல இடங்கள் பார்த்து விட்டீர்கள். அதுவும் அப்பாவின் ஆசி மொழிதான்.

      என் அப்பாவை 51 வயதில் இழந்து விட்டேன்.அப்பா இருந்து இருந்தால் என் தம்பி, தங்கைகளும் பள்ளி டூர் போய் இருப்பார்கள் ,
      அம்மா தங்கைகளை அனுப்ப சம்மதிக்கவில்லை பள்ளி டூர் போக,
      தங்கை என்னை அம்மாவிடம் சிபாரிசி செய்ய சொல்வாள். ஒருமுறை அனுமதித்தார்கள். அப்புறம் உங்கள் அப்பா மாதிரிதான் திருமணம் ஆனபின் போக சொன்னார்கள்.

      அப்பா மற்றும் பல கோவில்களுக்கு அழைத்து சென்று இருப்பார். ஆனால் அப்பாவின் ஆசியால் தங்கை கணவர்கள், அக்கா கணவர், எல்லாம் பல இடங்களுக்கும் கோவில்களுக்கும் அழைத்து சென்று விடுவார்கள்.

      தம்பிகளும் அப்படித்தான், ஒரு தம்பி கோவில்களுக்கு கைலைக்கும் தன் மனைவியை அழைத்து சென்று விட்டான். இப்போது மகள், மருமகனுடன் பல இடங்கள் போய் வருகிறான்.

      நீக்கு
  14. ஊட்டி அரவங்காட்டுக்கு இவருக்கு மாற்றல் வந்து சுமார் 2 வருஷங்கள் அங்கேயே அரவங்காடு குடியிருப்பில் வாசம். மேகங்கள்< குரங்குகள்< மலைகள் என வாசம். எங்க க்வார்டர்ஸீல் இருந்து கீழே பார்த்தால் அரவங்காடு ரயில் நிலையம். கீழே இறங்கிப் போய்ச் சுத்திப் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஊட்டி அரவங்காட்டுக்கு இவருக்கு மாற்றல் வந்து சுமார் 2 வருஷங்கள் அங்கேயே அரவங்காடு குடியிருப்பில் வாசம். மேகங்கள்< குரங்குகள்< மலைகள் என வாசம். எங்க க்வார்டர்ஸீல் இருந்து கீழே பார்த்தால் அரவங்காடு ரயில் நிலையம். கீழே இறங்கிப் போய்ச் சுத்திப் பார்ப்போம்.//

      ஆமாம், முன்பு நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். உறவினர் ஒருவர் அரவங்காட்டில் இருந்தார்கள் அடிக்கடி அழைப்பார்கள் போனது இல்லை. அழகான இயற்கை சூழ்ந்த இடம்.

      நீக்கு
  15. பையர், பெண் இருவரும் அப்போவே அம்பேரிக்கா வாசம் என்றாலும் அப்போ எங்க கிட்டே சின்னக் காமிரா தான் இருந்தது. அதிலே எடுத்த படங்கள் எங்கேனு தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பையர், பெண் இருவரும் அப்போவே அம்பேரிக்கா வாசம் என்றாலும் அப்போ எங்க கிட்டே சின்னக் காமிரா தான் இருந்தது. அதிலே எடுத்த படங்கள் எங்கேனு தெரியாது.//

      நாங்கள் எடுத்த படங்களும் பலதும் காணவில்லை, கணினி பழுது அடைந்து போனதில் பல படங்கள் போய் விட்டது.

      நீக்கு
  16. என் அப்பாவிடம் எங்காவது போகும்போது என்னையும்/அம்மாவையும் கூட்டிச் செல்லும்படி கேட்டால், என்னிடம் நீ கல்யாணம் ஆகிக் கணவனோடு போய்க்கோ, உன் அம்மா பிள்ளகளோடு போய்க்கட்டும் என்பார். அதே போல் நடந்தது. அம்மா போன சில இடங்கள் அண்ணா, தம்பி அழைத்துப் போனது. ராஜஸ்தான் வந்தப்போ நாங்க அழைத்துப் போயிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் அப்பாவிடம் எங்காவது போகும்போது என்னையும்/அம்மாவையும் கூட்டிச் செல்லும்படி கேட்டால், என்னிடம் நீ கல்யாணம் ஆகிக் கணவனோடு போய்க்கோ, உன் அம்மா பிள்ளகளோடு போய்க்கட்டும் என்பார். அதே போல் நடந்தது. அம்மா போன சில இடங்கள் அண்ணா, தம்பி அழைத்துப் போனது. ராஜஸ்தான் வந்தப்போ நாங்க அழைத்துப் போயிருக்கோம்.//

      உங்கள் அப்பா தீர்க்கதரிசி போல . அவர்கள் சொன்னது எல்லாம் அப்படியே நடந்து இருக்கிறது.

      என் அம்மாவை நாங்களும், என் மகன், மகளும் பல இடங்கள் கூட்டி போய் காட்டிய போது அம்மா சொல்வது" உங்கள் அப்பாவுக்கு இது எல்லாம் கிடைக்கவில்லையே! ஓய்வு பெற்று நிறைய இடங்கள் போக வேண்டும் என்று உன் அப்பாவுக்கு ஆசை" என்று சொல்லி கொண்டே சுற்றிப்பார்த்து எங்களை வாழ்த்துவார்கள். பேரன் பேத்திகளை வாழ்த்தி கொண்டே இருப்பார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி .

      நீக்கு
  17. நல்லபகிர்வு.

    அழகிய இடம் . முன்பும் படித்திருக்கிறேன். இப்பொழுது மாற்றங்கள் வந்திரூக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //நல்லபகிர்வு.//

      நன்றி

      //அழகிய இடம் . முன்பும் படித்திருக்கிறேன். இப்பொழுது மாற்றங்கள் வந்திரூக்கும்.//

      ஆமாம் அழகிய இடம். நீங்கள் முன்பும் படித்து இருக்கிறீர்கள்.
      இப்போதும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு