சனி, 23 செப்டம்பர், 2023

பேரன் செய்த லெகோ பிள்ளையார்



லெகோ விளையாட்டுப்பொருட்களை கொண்டு பேரன் செய்த பிள்ளையார்.

சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடுவார்கள்.


அருள் புரிவாய் ஆனைமுகா!  போன பதிவில் பேரன் செய்த களிமண் பிள்ளையார் இடம்பெற்றார்.

பேரனிடம் நிறைய லெகோ விளையாட்டுப் பொருட்கள் இருக்கிறது, அதை வைத்து பிள்ளையார் செய்து இருக்கிறான்.

இந்த பதிவில் மகன் வீட்டு பிள்ளையார்கள், தங்கை வீட்டு பிள்ளையார் கொலு, மற்றும் எங்கள் வீட்டுப்பிள்ளையார், எங்கள் குடியிருப்பு வளாகப்பிள்ளையார்  படங்கள் இடம்பெறுகிறது. 



பேரன் வாட்ஸ் அப்பில் அனுப்பிய படங்கள்.

நடுவில் இருக்கும் வெள்ளை பிள்ளையார் இந்த முறை பேரன் செய்த  களிமண் பிள்ளையார்

மருமகள் செய்த பிரசாதங்கள். காலை வேலைக்கு போய் வந்து மாலை தான் பூஜை.  விடுமுறை கிடையாது அல்லவா அங்கு.

மகன் செய்த பிள்ளையார் மற்றும் மண்டபம்

3d printing
செய்யும் காணொளி மிக சிறிய காணொளிதான்

வர்ணம் அடிக்கிறது








தங்கை வீட்டுபிள்ளையார் கொலு அவள்வீட்டில் 10 நாட்கள் இடபெறும்


 

எங்கள் வளாக வரசித்தி விநாயகர்


எங்கள் வீட்டுப்பிள்ளையார்

என் கணவர்  இருக்கும் வரை காலையில் களிமண் பிள்ளையார் வாங்கி வந்து  அதற்கு அலங்காரம் செய்வது , வீட்டில் இருக்கும் உலோக பிள்ளையார்களுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்வது அவர்கள்தான். பூஜை அறையை சுத்தம் செய்து கொடுத்துவிடுவேன், அப்புறம் பிரசாதங்கள்  செய்வேன். வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது, சாமி படங்களை துடைத்து பொட்டு வைப்பது எல்லாம்  என் கணவர்தான்.  

மகன் அவன் அப்பாவுடன் சிறு வயதில் பிள்ளையார் வாங்க போனபோது ரோஸ் வண்ணத்தில் உள்ள கொலு பொம்மை ஒன்று வாங்கி வந்தான் அவன் பூஜை செய்து விளையாட . அந்த பிள்ளையார் தான் இப்போது நான் அலங்காரம் செய்து வைத்து இருக்கும் பிள்ளையார். இப்போது களிமண் பிள்ளையார் வாங்குவது இல்லை .

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் என்று 2012 ல் போட்ட பதிவு  என் சிறு வயது  மலரும் நினைவுகளும் மற்றும் . கணவர் செய்த அபிஷேகம், அலங்கார படங்கள் இருக்கும்.  நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.

மகன் வைத்து  வணங்கிய  பிள்ளையார் முன் இன்னொரு சிறு பிள்ளையார் ரோஸ் வண்ணத்தில் உள்ளது, அது என் கணவர்  சிறு வயதில் வாங்கியது.

முதன் முதலில் நான் கொலுவிற்கு வாங்கிய பெரிய பிள்ளையாரும் ரோஸ் வண்ணம்தான். முதலில் இருக்கும் பிள்ளையார்.மற்ற பிள்ளையார்களும் கொலுவில் வைப்பது. இப்போது கொலு வைப்பது இல்லை என்பதால் பிள்ளையார் சதுர்த்திக்கு எடுத்து வைத்து வணங்கி விட்டேன்.
குட்டி குட்டி பிள்ளையார்கள். உறவுகள், நட்புகள் வாங்கி கொடுத்தவை .
பிள்ளையார் சதுர்த்திக்கு கோவில் போய் எத்தனை பிள்ளையார் பார்த்தோம் என்று சிறு வயதில்  பேசிக் கொள்வோம். இப்போது  நிறைய பிள்ளையார்களை வீட்டில் இருந்தே பார்த்தேன்.

வீட்டில் இருந்த படியே ஜோதி தொலைக்காட்சி சேனலில் நிறைய கோவில் பிள்ளையார்கள் பார்த்து விட்டேன்.



பிள்ளையார் சதுர்த்தி  விழா படங்கள் உடனே போட முடியவில்லை,  பதிவு  போடலாம் என்றால் கால்வலி, உடல் ஒத்துழைக்கவில்லை பண்டிகைக்கு வேலை செய்தது ஒய்வு கேட்டது  உடல்.

தினம் கொஞ்சம் படங்கள் வலையேற்றி எழுதி என்று இன்று இடம்பெறுகிறது.

மோதகம், சுண்டல், எள்ளுருண்டை, இட்லி மட்டும் செய்தேன்.பொட்டுக்கடலை உருண்டை, பொரி உருண்டை கடையில் வாங்கினேன். 

மாலை தங்கை அப்பம், பிடிகொழுக்கட்டை (இனிப்பு) கொண்டு வந்தாள், அவளும் நானுமாய் அம்மணி கொழுக்கட்டை செய்து மாலை பிள்ளையாரை வழிபட்டோம்.

பிள்ளையார் சதுர்த்திக்கு எங்கள் வளாகப்பிள்ளையார் கோவில் பிரசாதம்.. சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு சாத்துகுடி, பிள்ளையார் படம் வெற்றிலை பாக்கு தேங்காய் விபூதி பிரசாதம்.

உடல் பலத்தை, மனபலத்தை பிள்ளையார் தரவேண்டும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

-------------------------------------------------------------------------------------------------

48 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ
    விநாயகர் படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது .

    தங்களது பெயரன் கவினுக்கு வாழ்த்துகள்.

    காணொளிகள் கண்டேன் பழைய சுட்டிக்கு செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      வணக்கம் சகோ
      விநாயகர் படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது .//

      நன்றி.

      //தங்களது பெயரன் கவினுக்கு வாழ்த்துகள்.//

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.


      //காணொளிகள் கண்டேன் பழைய சுட்டிக்கு செல்கிறேன்.//

      காணொளிகளை பார்த்து , பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.



      நீக்கு
  2. விநாயகர் படங்களை ரசித்தேன், வணங்கிக்கொண்டேன்.

    பேரன் செய்த பிள்ளையாரும் உங்கள் மகன் செய்த விநாயகரும் அருமை.

    பிரசாதங்களைக் கண்ணால் கண்டு களித்தேன், பிடி கொழுக்கட்டை, பிள்ளையார் கொழுக்கட்டை, அம்மினிக் கொழுக்கட்டை என பிரசாதங்கள் அருமை.

    வீட்டில் உள்ள, மகன் சிறு வயதில் வாங்கிய பிள்ளையாரையும், சார், அவர் சிறு வயதில் வாங்கிய பிள்ளையாரையும் வணங்கிக்கொண்டேன். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //விநாயகர் படங்களை ரசித்தேன், வணங்கிக்கொண்டேன்.//
      நன்றி ,மகிழ்ச்சி.

      //பேரன் செய்த பிள்ளையாரும் உங்கள் மகன் செய்த விநாயகரும் அருமை.//

      நன்றி.

      //பிரசாதங்களைக் கண்ணால் கண்டு களித்தேன், பிடி கொழுக்கட்டை, பிள்ளையார் கொழுக்கட்டை, அம்மினிக் கொழுக்கட்டை என பிரசாதங்கள் அருமை.//

      ஆமாம், கண்ணால்தான் கண்டு களிக்கமுடியும்.

      //வீட்டில் உள்ள, மகன் சிறு வயதில் வாங்கிய பிள்ளையாரையும், சார், அவர் சிறு வயதில் வாங்கிய பிள்ளையாரையும் வணங்கிக்கொண்டேன். அருமை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. நுட்பமான வேலை... பேரனுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

      //நுட்பமான வேலை... பேரனுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்..//

      உங்கள் கருத்துக்கும், பேரனுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள் சொன்னதற்கும் நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. லெகோ பிள்ளையார் அழகு. பிள்ளையார் மாத்திரம் தான் பல பொருட்கள் பல வடிவங்கள், என்று விதம் விதமாக செய்து வணங்கலாம். படங்கள் அழகாக வந்துள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //லெகோ பிள்ளையார் அழகு//

      நன்றி.

      . //பிள்ளையார் மாத்திரம் தான் பல பொருட்கள் பல வடிவங்கள், என்று விதம் விதமாக செய்து வணங்கலாம்.//

      ஆமாம்.

      //படங்கள் அழகாக வந்துள்ளன.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அருமை.
    தங்களின் அன்புப் பெயரனுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //அருமை.
      தங்களின் அன்புப் பெயரனுக்கு வாழ்த்துகள்//

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  6. அனைத்துப் பிள்ளயார்களூம் அருமை. உங்கள் மகனும் பேரனும் செய்தது அசத்தல். என் மாமனார் வயலில் இருந்து களீமண் கொண்டு வந்து கையால் பிடிப்பார். பின்னர் அரிசிலாறீல் கரைப்பார்கள். நாங்கல்லாம் கிணற்றீல் போடுவோம். அதுக்குப் போட்டி இருக்கும். இப்போல்லாம் வாங்குவதே இல்லை. வீட்டுப் பிள்ளயார் தான். என்ன ஒரு 300 வருடங்கள் இருக்கும் அவருக்கு. என் மாமனாரின் கொ.தா. காலத்தில் இருந்து வழிபட்டு வராங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //அனைத்துப் பிள்ளயார்களூம் அருமை. உங்கள் மகனும் பேரனும் செய்தது அசத்தல். //

      நன்றி.

      //என் மாமனார் வயலில் இருந்து களீமண் கொண்டு வந்து கையால் பிடிப்பார். பின்னர் அரிசிலாறீல் கரைப்பார்கள்.
      நாங்கல்லாம் கிணற்றீல் போடுவோம். அதுக்குப் போட்டி இருக்கும். இப்போல்லாம் வாங்குவதே இல்லை. வீட்டுப் பிள்ளயார் தான். என்ன ஒரு 300 வருடங்கள் இருக்கும் அவருக்கு. என் மாமனாரின் கொ.தா. காலத்தில் இருந்து வழிபட்டு வராங்க.//

      திருவெண்காட்டில் இருக்கும் போது கிணற்றில் கரைப்போம், மாயவரம் வந்தவுடன் ஆறுகளில் தண்ணீர் இருந்த போது ஆறுகளில் கரைத்தோம். ஒரு வருடம் லாரியில் பெரிய பிள்ளையாருடன் வந்து ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளையாரை வாங்கி போய் பூம்புகார் கடலில் கரைத்தார்கள்.

      அப்புறம் வீட்டில் கரைத்து அதை தொட்டி செடிகளில் ஊற்றி வந்தோம். இப்போது இரண்டு வருடமாக களிமண் பிள்ளையார் வாங்கவில்லை.


      நீக்கு
  7. எங்கள் வளாகத்தில் பி. சதுர்த்தி கொண்டாட்டமே இல்லை. ஒரே ஒரு தரம் விஜயதசமி பூஜை நடந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்கள் வளாகத்தில் பி. சதுர்த்தி கொண்டாட்டமே இல்லை. ஒரே ஒரு தரம் விஜயதசமி பூஜை நடந்தது.//

      புதிதாக பிள்ளையார் கோவில் கட்டி இருப்பதால் சதுர்த்தி கொண்டாட்டம். விஜய தசமி கொண்டாட்டம் எல்லாம் இல்லை.

      மாதா மாதம் சங்கடஹர சதுர்த்தி சிறப்பாக செய்கிறார்கள், எனக்கு இப்போது ஏற்பட்டு இருக்கும் இடுப்பு, கால்வலிக்கு வளாகத்தில் பிள்ளையார் இருப்பது வசதியாக இருக்கிறது இங்கே வணங்கி கொள்கிறேன் எங்கும் போகாமல்.

      ஜனவரி 1, பொங்கல் விழாவில் கோலபோட்டி வைப்பார்கள் போலும் நான் கலந்து கொள்வது இல்லை. சுதந்திர தினம் கொண்டாடுவார்கள். இந்த வருடம் மரம் நடும் விழா இருந்தது சுதந்திர தினத்தில். 11 மரகன்றுகள் நட்டார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. அனைத்துப்பிள்ளையார்களும் மிக அழகு. அதுவும் அந்த வெள்ளைப்பிள்ளையார் அழகும் கம்பீரமாகவும் ஜொலிக்கிறார். உங்கள் மகனுக்கும் பேரனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //அனைத்துப்பிள்ளையார்களும் மிக அழகு. அதுவும் அந்த வெள்ளைப்பிள்ளையார் அழகும் கம்பீரமாகவும் ஜொலிக்கிறார். உங்கள் மகனுக்கும் பேரனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!//

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      பேரனை மனமார வாழ்த்தியதற்கு நன்றி.

      நீக்கு
  9. தெய்வீகமான பதிவு..

    அழகான படங்கள்..
    காணொளியும் அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      தெய்வீகமான பதிவு..

      அழகான படங்கள்..
      காணொளியும் அருமை..

      வாழ்க நலம்..//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. மலரும் நினைவுகளுடன் அருமையான பதிவு..

    உடல் நலத்திற்கு பிரார்த்தனை செய்து கொள்வோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலரும் நினைவுகளுடன் அருமையான பதிவு..//

      நினைக்காத நேரம் இல்லை, பண்டிகை காலங்களில் அதிகம் வருகிறது.

      //உடல் நலத்திற்கு பிரார்த்தனை செய்து கொள்வோம்..//

      உடல் நலக் குறைவு ஏற்படும் போது மனம் சோர்வு அடைந்து விடுகிறது , அதனால் உடல் நலமும் மன நலமும் இறைவனிடம் கேட்டு பிரார்த்தனை செய்து கொள்வோம்.

      நீக்கு
  11. எனக்கும் இங்கு பல பிரச்னைகள்..

    மருத்துவமனை அனுபவத்தையே பல பதிவுகளாக எழுதலாம்..

    யாரையும் குறை சொல்ல இயலாது.

    அம்பிகையே துணை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கும் இங்கு பல பிரச்னைகள்..//

      இறைவன் அருளால் எல்லாம் சரியாக பிரார்த்திக்கிறேன்.

      //மருத்துவமனை அனுபவத்தையே பல பதிவுகளாக எழுதலாம்..

      யாரையும் குறை சொல்ல இயலாது.//

      ஆமாம், மருத்துவர்கள் நாம் சொல்வதை வைத்து தான் மருந்து தருகிறார்கள். சரியாக புரிந்து , நோயை கண்டு பிடித்து மருந்து கொடுக்க வேண்டும்.
      நாம் அந்த மருந்தை சரியாக எடுத்து கொண்டால் நோயிலிருந்து விடுபடலாம்.

      //அம்பிகையே துணை..//

      அம்பிகை துணை வருவாள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. விநாயகர் வடிவங்கள் எப்போதுமே மனதுக்குள் ஒரு நெருக்கத்தையும், மகிழ்ச்சியையும் தருபவை.  லெகோ பிள்ளையார் நல்ல கற்பனை, நல்ல வேலைப்பாடு.  அதே போல சாய் பிள்ளையாரும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //விநாயகர் வடிவங்கள் எப்போதுமே மனதுக்குள் ஒரு நெருக்கத்தையும், மகிழ்ச்சியையும் தருபவை. லெகோ பிள்ளையார் நல்ல கற்பனை, நல்ல வேலைப்பாடு. அதே போல சாய் பிள்ளையாரும். //
      ஆமாம், விநாயகர்வடிவங்கள் மனது நெருக்கத்தையும் , மகிழ்ச்சியையும் தருபவைதான்.
      லெகோ பிள்ளையார் அவனின் கற்பனைதான். லெகோ பொருட்களை வைத்து அவன் மனதில் தோன்றுவதை சிறு வயது முதலே செய்து விளையாடுவான். . சாய் பிள்ளையார் மகன் செய்தது.

      நீக்கு
  13. பேரன் கற்பனை வளம் மிகுந்தவர் என்பதும் தெரிந்த விஷயம்தான்.. பாராட்டுகள். இதற்கெல்லாம் ஒரு கதை கூட கற்பனை செய்து வைத்திருப்பார்! 3D பிரின்டிங் காணொளி கண்டேன். விரைவாக செய்து முடிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரன் கற்பனை வளம் மிகுந்தவர் என்பதும் தெரிந்த விஷயம்தான்.. பாராட்டுகள். இதற்கெல்லாம் ஒரு கதை கூட கற்பனை செய்து வைத்திருப்பார்! 3D பிரின்டிங் காணொளி கண்டேன். விரைவாக செய்து முடிக்கிறது.//

      கவினுக்கு பாராட்டுகள் சொன்னது மகிழ்ச்சி, அவனிடம் சொல்கிறேன் உங்கள் எல்லோர் பாராட்டுகளை வாழ்த்துகளை.

      3D பிரின்டிங் காணொளி விரைவாக காட்டி இருக்கிறான்.
      போதுமான நேரம் எடுத்து கொள்ளும்.

      நீக்கு
  14. பழைய பிள்ளையார்களையும் பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்.  சிறப்பு.  மகன் வாங்கியது, ஸார் வாங்கியது என எல்லாம் நினைவில், எதிரில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பழைய பிள்ளையார்களையும் பத்திரமாக வைத்திருக்கிறீர்கள். சிறப்பு. மகன் வாங்கியது, ஸார் வாங்கியது என எல்லாம் நினைவில், எதிரில்!//

      ஆமாம், கொலுபெட்டியில் வைக்கோல் சுற்றி வைத்து பல வருடங்கள் பாதுகாக்கப்பட்டது. ஸார் வாங்கியது மாமா புத்தகம் வைக்க அலமாரியை ஊரிலிருந்து அனுப்பிய போது அதுவாக வந்தது.

      மாமா அந்த அலமாரியில் கொலு பொம்மைகளை வைத்து இருப்பார்கள். குட்டி பிள்ளையாரை அவர்கள் எடுத்து வைக்கவில்லை, அவர்கள் கண்ணில் தட்டுப்படாமல் இங்கு வந்து சேர்ந்து விட்டது.

      ஸார் அதை பார்த்து விட்டு மிகவும் மகிழ்ந்து இந்த பிள்ளையார் நான் வாங்கியது, என்று எடுத்து வைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு முறை எல்லா பொம்மைகளுக்கும் தங்க கலர் கொடுத்தார்கள். புதிது போல ஆகி விட்டது.

      இப்போது நினைவுகள் தான் என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.

      நீக்கு
  15. என்னுடைய கமெண்ட் பழைய பதிவில் காணப்படவில்லை.  இந்தப் பதிவை மிஸ் செய்திருக்கிறேனா, அல்லது இதற்குப் பின்தான் உங்கள் தளத்துக்கு வந்தேனா என்று நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னுடைய கமெண்ட் பழைய பதிவில் காணப்படவில்லை. இந்தப் பதிவை மிஸ் செய்திருக்கிறேனா, அல்லது இதற்குப் பின்தான் உங்கள் தளத்துக்கு வந்தேனா என்று நினைவில்லை.//

      என் இலங்கை பதிவிலிருந்து தான் நீங்கள் தொடர்ந்து வந்தீர்கள்.2009 ஜூன் 1 பதிவு ஆரம்பித்தேன்.

      நீக்கு
    2. இலங்கைப் பதிவு எந்த வருடம்?

      நீக்கு
    3. இலங்கை பதிவு 2011 அப்போது வந்து விட்டு பிறகு வரவில்லை.
      2012க்கு பின் தான் தொடர் வருகை.

      நீக்கு
  16. உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். திருமணமானதும் நான்தான் மார்க்கெட் சென்று பிள்ளையார் வாங்கி வந்து பூஜை செய்து மறுநாள் அதை அடையாற்றில் கரைப்பது வழக்கம். இப்போதெல்லாம் சில வருடங்களாய் மகன்கள் பார்த்துக் கொள்கிறார்கள். பிள்ளையார் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை நாள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.//
      கவனித்து கொள்கிறேன் வலியை போக்க என்ன என்ன செய்யமுடியுமோ செய்து வருகிறேன், சில உடற்பயிற்சிகள், தைலங்கள் தேய்ப்பு என்று , உணவு முறை மாற்றம் என்று கடைபிடித்து வருகிறேன்.

      //திருமணமானதும் நான்தான் மார்க்கெட் சென்று பிள்ளையார் வாங்கி வந்து பூஜை செய்து மறுநாள் அதை அடையாற்றில் கரைப்பது வழக்கம்.//
      குழந்தைகள் வருமுன் குடும்பதலைவனின் பொறுப்பு.

      //இப்போதெல்லாம் சில வருடங்களாய் மகன்கள் பார்த்துக் கொள்கிறார்கள். //

      மகிழ்ச்சி.
      மகன் வேலைக்கு வெளியூர் போகும் வரை அப்பாவுடன் போய் வாங்கி வருவான் பிள்ளையாரை.


      //பிள்ளையார் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை நாள்!//

      நீங்கள் கொழுக்கட்டை நாள் என்று சொல்கிறீர்கள் என் மகன் எள்ளுருண்டை நாள் என்பான். அவனுக்கு பிடித்தது எள்ளுருண்டை.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. நானும் எள்ளுருண்டையின் ரசிகன் ஆயினும் கொழுக்கட்டைகளுக்கு முதலிடம்!

      நீக்கு
    3. எள்ளுருண்டை சதுர்த்தி முடிந்தவுடனும் சப்பிட்டு கொண்டு இருக்க வரும். கொழுகட்டை அன்று மட்டும் தான். என்று அவன் சொல்வான். அப்பம், மற்றும் இனிப்பு பிடி கொழுகட்டை இரண்டு மூன்று நாள் சாப்பிடலாம். கிருஷ்ணஜெயந்தி யில் இனிபு சீடை பிடிக்கும் மகனுக்கு.
      மருமகளும் செய்து தருகிறாள்.

      நீக்கு
  17. கவினின் லெகோ பிள்ளையார் செம...அழகு. கவினுக்கு வாழ்த்துகள் கோமதிக்கா..

    பிள்ளையார் பிரணவம் சுவரூபம் என்று சொல்வதுண்டு இல்லையா . என் மனதில் உள்ள கருத்து சிறு வயதில் வந்த ஓர் எண்ணம்...அதாவது பிரணவம் என்பது எல்லாம் அடங்கிய (முமூர்த்திகளும்) மாபெரும் சக்தி அதில் மிகப் பெரிய தத்துவம் இல்லையா? அந்த சக்திய எந்த ரூபத்திலும் வடிவமைத்து அவரவர்க்கு மனதில் தோன்றும் வகையில் வழிபடலாம்...பிள்ளையாரைக் கூட அப்படித்தான் பாருங்க வித விதமான வடிவங்களில் வடிவமைத்து...வழிபடுதல்.

    சக்தி எனும் போது அதற்கு எந்த வித பேதமும் கிடையாதுதானே இப்படித்தான் என் மனம் எண்ணும் கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கவினின் லெகோ பிள்ளையார் செம...அழகு. கவினுக்கு வாழ்த்துகள் கோமதிக்கா..//

      நன்றி கீதா.

      //பிள்ளையார் பிரணவம் சுவரூபம் என்று சொல்வதுண்டு இல்லையா . என் மனதில் உள்ள கருத்து சிறு வயதில் வந்த ஓர் எண்ணம்...அதாவது பிரணவம் என்பது எல்லாம் அடங்கிய (முமூர்த்திகளும்) மாபெரும் சக்தி அதில் மிகப் பெரிய தத்துவம் இல்லையா? அந்த சக்திய எந்த ரூபத்திலும் வடிவமைத்து அவரவர்க்கு மனதில் தோன்றும் வகையில் வழிபடலாம்...பிள்ளையாரைக் கூட அப்படித்தான் பாருங்க வித விதமான வடிவங்களில் வடிவமைத்து...வழிபடுதல்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.

      //சக்தி எனும் போது அதற்கு எந்த வித பேதமும் கிடையாதுதானே இப்படித்தான் என் மனம் எண்ணும் கோமதிக்கா...//

      பிள்ளையார் எளிமையாக வழிபாடு செய்யலாம், அச்சு வெல்லத்தை பிள்ளையாராக வணங்குவார்கள். மனதில் உள்ள பக்திக்கு எல்லா இறைவனையும் வணங்கலாம் பேதம் கிடையாது. நம்பிக்கைதான் முக்கியம்.




      நீக்கு
  18. 3 டி ப்ரின்டிங்க் அட!!! அழகாக வடிவமைக்கிறதே...வர்ணம் அடித்து ஆச்சரியமாக இருக்கு. அப்படி என்றால் நாம் கொடுக்கும் வடிவத்தை அது செய்து தருமோ? அப்படித்தான் தோன்றுகிறது. தொழில்நுட்பம் எப்படி நன்மையாக இருக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //3 டி ப்ரின்டிங்க் அட!!! அழகாக வடிவமைக்கிறதே...வர்ணம் அடித்து ஆச்சரியமாக இருக்கு. அப்படி என்றால் நாம் கொடுக்கும் வடிவத்தை அது செய்து தருமோ? //
      ஆமாம் , முன்பு சாய் சிலை, இரண்டு யானை , சாவி மாட்டி வைக்க பிள்ளையார் தலை உள்ளது எல்லாம் அனுப்பினான் என்று முன்பு பதிவு போட்டு இருக்கிறேன். நவராத்திரி சமயம்.

      //அப்படித்தான் தோன்றுகிறது. தொழில்நுட்பம் எப்படி நன்மையாக இருக்கு!//

      ஆமாம், தொழில்நுட்பம் அறிந்து இருந்தால் எல்லாம் செய்யலாம் தான்.

      நீக்கு
  19. பிள்ளையார் பொம்மைகள் அனைத்தும் அழகு. மகன் சிறு வயதில் வாங்கி வந்த அந்த ரோஸ் பிள்ளையார் இப்ப நீங்க பூஜை செய்வது வரை சிறப்பு கோமதிக்கா...

    பழைய பதிவும் பார்க்கிறேன் கோ௳திக்கா....பணிகள் தொடர்ந்து வருதா...இதோ இன்றும் வந்தாச்சு இனிதான் தொடங்கனும் அதற்குள் ஓட்டமாக ஓடி...ஒரே நாளில் இத்தனை கோயில்கள் இடங்கள் என்பது போல் ஒரு மணி நேரத்தில் வலைப்பூ சுற்றி விட்டு ஓட்டம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிள்ளையார் பொம்மைகள் அனைத்தும் அழகு. மகன் சிறு வயதில் வாங்கி வந்த அந்த ரோஸ் பிள்ளையார் இப்ப நீங்க பூஜை செய்வது வரை சிறப்பு கோமதிக்கா...//

      நன்றி கீதா.

      //பழைய பதிவும் பார்க்கிறேன் கோ௳திக்கா....பணிகள் தொடர்ந்து வருதா...இதோ இன்றும் வந்தாச்சு இனிதான் தொடங்கனும் அதற்குள் ஓட்டமாக ஓடி...ஒரே நாளில் இத்தனை கோயில்கள் இடங்கள் என்பது போல் ஒரு மணி நேரத்தில் வலைப்பூ சுற்றி விட்டு ஓட்டம்...//

      நேரம் கிடைக்கும் போது படித்து பார்க்கலாம் கீதா.
      வேலை முக்கியம். வலைப்பூக்களை சுற்றி ஓட்டமாக ஓடி வந்தாலும் நிறைய பின்னூட்டங்கள் கொடுத்து மகிழ்ச்சி படுத்தி விட்டீர்கள்.



      நீக்கு
  20. மாமா சிறு வயதில் வாங்கிய பிள்ளையார் தொடர்வதும் சிறப்பு.

    மருமகள் செய்த பிரசாதங்கள் ஆஹா!!! எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாமா சிறு வயதில் வாங்கிய பிள்ளையார் தொடர்வதும் சிறப்பு.

      மருமகள் செய்த பிரசாதங்கள் ஆஹா!!! எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா//

      அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  21. அருமையாக தொகுத்தளித்துள்ளீர்கள். அசாத்திய கற்பனை திறனுடன் பேரன் செய்திருக்கும் லெகோ பிள்ளையார் அசத்தல். அழகிய வெள்ளைப் பிள்ளையாருடன் அவரும் பூஜையில் இடம் பெற்று விட்டார்.

    வளாகத்து வரசித்தி விநாயகர் கம்பீரம்.

    காணொளிகளுக்கு நன்றி.

    சாரும் மகனும் சிறுவயதில் வாங்கிய பிள்ளையார்களைப் பாதுகாத்து வழிபட்டு வருவது சிறப்பு. விசேஷம்.

    யு.எஸ்ஸில் இருக்கும் தங்கை இந்த முறை யூடியூப் பார்த்து மை தா கலந்த மஞ்சள் பிள்ளையார் செய்திருந்தாள். அவரது கைகளில் குட்டியாக நிஜ கொழுக்கட்டை வைத்திருந்தது ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  22. விநாயக சதுர்த்தி கொண்டாட்ட படங்கள் சூப்பர்.

    பேரனின் கை வண்ணங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. விநாயக சதுர்த்தி கொண்டாட்ட படங்கள் சூப்பர்.

    பேரனின் கை வண்ணங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      //விநாயக சதுர்த்தி கொண்டாட்ட படங்கள் சூப்பர்.

      பேரனின் கை வண்ணங்களுக்கு வாழ்த்துகள்.//

      அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கும், வாழ்த்துகள் சொன்னதற்கும் நன்றி மாதேவி.

      நீக்கு