வெள்ளி, 13 ஜனவரி, 2023

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்



எங்கள் குலதெய்வ கோவிலை சுற்றிலும் வயல்களும் ஏரியும் உள்ளது.

 மடவார் விளாகம், பாப்பாங்குளம் கிராமம் ஆலங்குளம் வட்டம், தென்காசி மாவட்டம். என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ களக்கோட்டீஸ்வரர் தர்ம சாஸ்தா" எங்கள் குலதெய்வம்.

களங்கள் இருக்கும் கோடியில் இருக்கிறது. கதிர் அடிக்கும் பெரிய களம்  இருக்கிறது.  அதனால் தான் இங்குள்ள ஐயனாருக்கு களக்கோடிஸ்வரர் என்று பேர்.

அறுவடை சமயத்தில் ஒரு முறை போய் இருக்கிறோம்  பார்க்கவே அழகாய் இருக்கும். 

டிசம்பர் 4 ம் தேதி போய் இருந்தோம் , இப்போது நாற்று நடும் காலமாக இருந்தது.

இந்த பதிவில் நானும், மகனும் எடுத்த படங்கள் இடம்பெறுகிறது.


குலதெய்வ வழிபாடு இதற்கு முந்தின பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

அடுத்த பதிவில் வயலும், ஏரியும் இடம்பெறும்என்று சொல்லி இருந்தேன்.




உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.

நாற்றுநடும்  காணொளி இருக்கிறது


                                       நாற்று நடுகிறார்கள்

நாற்று நட்ட வயல்

உழுது விட்ட வயலில் நாரைகள்




ஐயனார் குடி கொண்டுள்ள இடத்தில் விளைச்சல் எப்போதும் நன்றாக இருக்கும். இங்குள்ள மக்களை காத்து  கால்நடைகளை காப்பாற்றி வருகிறார் ஐயனார். ஏரியில் கால்நடைகள் பறவைகளும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஏரிக்கரையோரம்  என்ற பழைய படத்தில் மாடுகள் நீர் அருந்தி குளித்து கரையேறும் காட்சிகளை பதிவு செய்து இருக்கிறேன்.


ஆற்றில் தண்ணீர் போகிறது. ( மழை பெய்தால் காட்டாறு வரும்) அதில் துணிகளை துவைத்து குளிக்க  மக்கள் துணி மூட்டைகளை சுமந்து வருகிறார்கள், ஆடு, மாடுகளுக்கு நல்ல மேய்ச்சல், நீர் அருந்த இடம் இருப்பதால் அவைகளையும் ஓட்டி வருகிறார்கள்.


 
நாற்று நடுகிறார்கள் காலை நேரம் மணி 11 இருக்கும்
நடுவதற்கு இன்னும் காத்து இருக்கும் நாற்றுக்கள்
நட்ட நாற்றுக்கள் காற்றுக்கு தலைசாய்ந்து நிற்கிறது
உழவு நடக்கிறது , தூரத்தில் தெரிவது வன்னியப்பர் கோயில் (ஆழ்வார்குறிச்சி)
வரப்பில் நடந்து வருவது பார்க்க அழகு

ஏரியின் அழகு
கடல் போல காட்சி அளிக்கும் ஏரி மழை நன்றகாக பெய்து இருப்பதால் ஏரியில் நீர் நிறைய இருக்கிறது
ஏரியில்  அல்லி மொட்டுக்கள். ஏரியில் அல்லிகள் உள்ள படங்கள் மகன் எடுத்த படங்கள் ஏரிக்கரை மேல் ஏறி எடுத்து வந்த படங்கள்


அல்லி இலைகள் ஓரத்தில் அரும்பு அரும்பாக  பார்க்கவே அழகு! இலை மேல் நந்தைகள் இருக்கிறது பாருங்கள். 
 


சந்திரன் வரவு சமயம்தான் மலரும் அல்லி


அதிகாலை சந்திரனை கண்டு சிறிது மலர்ந்து இருக்கு போல! 


மழைத்தூறல் தெரிகிறதா? ஏரியின் நீர்பரப்பின் மேல் சிறு வட்டம் போட்டு இருக்கே தூறல்!

 

முக்குளிப்பான்
நீர் அலைகள்  பார்க்க அழகாய் இருக்கா? 





தை பொங்கல் உழவர்களுக்கு நன்றி சொல்லும் நாள், சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள், மற்றும் இயற்கை வழிபாடும்  இல்லையா? அதனால் இந்த பதிவு .

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை"

உழவு தொழில் சிறப்பாக நடந்தால்தான் எல்லோரும் நலமாக இருக்க முடியும்.
 ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை என்ற பாடல்



விவசாயம் செய்ய முடியாமல் வேறு தொழில் நாடி செல்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள். இந்த மாதிரி சமயத்தில் விவசாயம் செய்து வருபவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். 

விவசாயம் காப்போம் என்ற கவிதை படித்தேன். கவிதை பெரிது சுட்டி வழி சென்று படிக்கலாம்.
அதில் சில இங்கு :-

//விவசாயம் நம் இதயம்
விவசாயிகள் நம் தெய்வம்..
சிற்பங்கள் அழிந்து விட்டால்
கோவிலுக்கு சிறப்பில்லை..
சிற்பிகளே அழிந்து விட்டால்
கோவிலுக்கு பிறப்பில்லை..
விவசாயம் அழிந்து விட்டால்
உண்ண கூட வழியில்லை..
விவசாயி அழிந்து விட்டால்
வருந்தி பின் பயனில்லை.


படித்தால் தான் வேலை,
கை நிறைய சம்பளம் என்று
சொல்லித்தரும் சமூகம்
விதைத்தால் தான் சோறு என்று
சொல்லித்தர மறந்து விட்டது..
அதனால் தான் விவசாயம்
அழிந்து கொண்டிருக்கிறது..
விவசாயம் காப்போம்.!


உழைக்கும் எண்ணமோ உயர்வு தரும்..
உழவன் எண்ணம்
நமக்கு உணவு தரும்..
விவசாயம் காப்போம்.!

பசியை நீக்கியவள் தாய் என்றால்..
என் விவசாயியும் தாயே
விவசாயத்தை காப்போம்,
எதிர்காலத்தை மீட்போம்.

விவசாயத்தை காப்போம்..
விவசாயிகளை மதிப்போம்.!//
கவிதை எழுதியவருக்கு நன்றி. 


விவாசயி குட்டிக் கவிதை  என்ற கவிதை படித்தேன் அதில் பிடித்த வரிகள் மட்டும் இங்கே:-

விளையாட்டு சாதனைக்கு 
கோடிக்கணக்கில் பரிசு
விவசாய சாதனைக்கு என்னையா இருக்கு
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

இந்தியாவின் முதுகெலும்பு
கூன் விழுந்து போய்விட்டது,
ஆமாம், விவசாய நிலங்களில்
இன்று கட்டிடங்கள் அல்லவோ
விளைந்து கிடக்கு!

எருவும், நீரும், சேறும், விதையும்
கலந்த இடத்தில்
இன்று கம்பியும் , கலவையும் , கான்கிருட்டும்
அல்லவா கலந்து கிடக்கு!//

கவிதை எழுதியவருக்கு நன்றி.


இந்த ஆண்டு விவசாயம் செழிக்க வேண்டும். நீர்வளம், நிலவளம் செழிக்க வேண்டும். விவசாயி நிலை உயரவேண்டும்.



ஏரி,குளம், கிணறு, ஆறு
எல்லாம் நிரம்பி வழிய,
மாரி அளவாய் பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க!"


அனைவருக்கும் போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகை வாழ்த்துகள் ! 
மாட்டுபொங்கல் , மற்றும் திருவள்ளுவர் தின வாழ்த்துகள்!


வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------
=========================================================

30 கருத்துகள்:

  1. படங்கள் அழகு.  அல்லி மலர்கள் அழகுக்கு அழகூட்டுகின்றன.  காணொளியில் நாற்று நம் காட்சி ரொம்ப தூரத்தில் தெரிகிறது.  பொருத்தமான பாடலை இணைத்திருக்கிறீர்கள்.

    நாரையா?  நாறையா?

    நீர் நிலைகள் நிறைந்து சிறு தூறல் இன்னமும் போட்டுக்கொண்டு, அல்லி மலர்கள் கண்ணில் பட மக்கள் துணிகள் துவைத்துக்கொண்டு, நாற்று நட்டுக்கொண்டு...  மிக அருமையான, ரசிக்கத்தக்க காட்சிகள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      படங்கள் அழகு. அல்லி மலர்கள் அழகுக்கு அழகூட்டுகின்றன.//

      நன்றி.

      //காணொளியில் நாற்று நம் காட்சி ரொம்ப தூரத்தில் தெரிகிறது.//

      ஆமாம், காமிராவை காருக்குள் வைத்து விட்டேன், அப்புறம்தான் பார்த்தேன் நாற்று நடுவதை அலைபேசியில் எடுத்தேன்.

      நாரையா? நாறையா?//

      நாரைதான் சில நேரம் இப்படி டைப் செய்து விடுகிறது.
      திருத்தி விட்டேன், நன்றி.

      //நீர் நிலைகள் நிறைந்து சிறு தூறல் இன்னமும் போட்டுக்கொண்டு, அல்லி மலர்கள் கண்ணில் பட மக்கள் துணிகள் துவைத்துக்கொண்டு, நாற்று நட்டுக்கொண்டு... மிக அருமையான, ரசிக்கத்தக்க காட்சிகள்//

      நாம் எல்லாம் பட்டணவாசியாகி விட்டோம் அதனால்தான் அந்த காட்சிகளை பதிவு செய்தேன்.
      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.,

      நீக்கு
  2. படங்கள் மிக அழகு. சமீபத்தைய நெல்லைப் பயணத்தை நினைவுகூர்ந்தேன். மயில்கள் மாத்திரம் மிஸ்ஸிங்.

    இந்த மாதிரி இடங்களின் அருகேயே வாழ்ந்துடலாம் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      போனதடவை போன போது மயில்கள் பார்த்தோம், இந்த முறை மயில்கள் கண்ணில் படவில்லை. இருந்து இருந்தால் கருமேகம் கண்டு தோகைவிரித்து ஆடியிருக்கும்.

      //இந்த மாதிரி இடங்களின் அருகேயே வாழ்ந்துடலாம் எனத் தோன்றுகிறது.//

      ஆமாம், எனக்கும் தோன்றும். இந்த இடம் இறைவன் அருளால் இப்படியே இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

      நீக்கு
  3. பொங்கல் வாழ்த்தில், திருநாவுக்கரசு மற்றும் கோமதி எனப் போட்டிருப்பதைக் கண்டேன். என்னென்னவோ நினைவுகள் வருகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்து தயார் செய்து தருவார்கள். 2012ல் நான் போட்ட கோலத்தை வைத்து பொங்கல் வாழ்த்து தயார் செய்து தந்தார்கள். அவர்கள் நினைவாக அந்த வாழ்த்தை பகிர்ந்தேன்.
      மகன் தயார் செய்வான் அதை அப்புறம் பகிர்கிறேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. விவசாய நிலங்கள் எல்லாம் அழிந்து வரும் நிலையில் தங்களது பதிவின் பசுமைக்காட்சிகள். ஆறுதலாக இருக்கிறது.

    படங்கள் எல்லாமே அருமை, காணொளி கண்டேன்.

    விவசாயத்தை மீட்பது அரசின் கையில் உள்ளது.

    தங்களுக்கும் எமது பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //விவசாய நிலங்கள் எல்லாம் அழிந்து வரும் நிலையில் தங்களது பதிவின் பசுமைக்காட்சிகள். ஆறுதலாக இருக்கிறது.//

      ஆமாம், அதுதான் எனக்கும் நினைப்பு. பசுமைகளை பார்க்கும் போது கண்களுக்கு குளிர்ச்சி மனதுக்கு நிறைவு. இப்படியே இருக்க வேண்டும் என்ற நினைப்பு.

      //படங்கள் எல்லாமே அருமை, காணொளி கண்டேன்.//
      நன்றி.

      //விவசாயத்தை மீட்பது அரசின் கையில் உள்ளது.//

      விளை நிலங்களை காக்க வேண்டும்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.


      நீக்கு
  5. தைப் பொங்கல் சமயத்தில் சிறப்பான பதிவு..

    நீரும் குளமும் வயலும் வரப்பும் நாரையும் ஆரையும் - எழில் கொஞ்சும் படங்கள்..

    தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜு, வாழ்க வளமுடன்
      //தைப் பொங்கல் சமயத்தில் சிறப்பான பதிவு..

      நீரும் குளமும் வயலும் வரப்பும் நாரையும் ஆரையும் - எழில் கொஞ்சும் படங்கள்..//

      நன்றி.

      உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. அட்டகாசமான படங்கள்...


    ஆகா...! சிறப்பான பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      அட்டகாசமான படங்கள்...


      ஆகா...! சிறப்பான பாடல்...//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்னு ஒரு வயல் படம் பஇருக்கே கோமதிக்கா....செம அழகு. ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க அக்கா. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      கோயிலில் குருக்கள் காத்து இருந்தார், அதனால் படங்கள் எல்லாம் அவசரம் அவசரமாக எடுத்தது.
      உங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற அமர இருந்து ஒவ்வொன்றையும் எடுக்க ஆசை ஆனால் கோயில் வழிபாடு முடிந்தவுடன் கிளம்ப வேண்டிய நிர்பந்தம், மழை வேறு வரப்போகிறேன் என்று சொல்லி கொண்டு இருந்தது.
      ஆற்றை கடக்க வேண்டும் அதனால் வேகமாக எடுத்து விட்டு திரும்பி விட்டோம்.

      நீக்கு
  8. கொக்குகளும் இருப்பது தெரிகிறது.

    நாற்று நடும் காட்சி ரசித்துப் பார்த்தேன்..

    கருந்தலை இபிஸ் கருங்க்லர் எக்ரெட்ஸ் கூட்டம் என்ன அழகு!!!! வயல் படங்கள் எல்லாமே செம.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொக்குகள் இருக்கிறது. பலவகையான வெளிநாட்டுப் பறவைகளும்
      வரும் கீதா.

      நாற்று நடும் காட்சி ரசித்துப் பார்த்தேன்..//

      நன்றி.

      நீக்கு
  9. ஐயனார் குடி கொண்டுள்ள இடத்தில் விளைச்சல் எப்போதும் நன்றாக இருக்கும். இங்குள்ள மக்களை காத்து கால்நடைகளை காப்பாற்றி வருகிறார் ஐயனார். ஏரியில் கால்நடைகள் பறவைகளும் மகிழ்ச்சியாக இருக்கிறது.//

    அருமையான மகிழ்வான விஷயம்.

    ஆறும் வயலும், இயற்கை சூழ் இடம் அழகு, மனதைக் கவர்கிறது.

    அடுத்த படம் நடுவதற்குக் காத்திருக்கும் நாற்றுக் கட்டுகள் நல்ல ஷாட் எடுத்திருக்கீங்க கோமதிக்கா...செம ஷாட்.

    ஏரி, வயல் தூரத்தில் தெரியும் வன்னியப்பர் கோயில், அல்லிப் பூக்கள் என்று கண்கொள்ளாக்காட்சி!!! மகன் எடுத்த படங்கள் செம ஷாட். அல்லி இலைகளும் அதன் ஓர அழகும் ஏதோ அல்லி தன் பாவாடையை விரித்து வைத்திருப்பதுபோல...அதன் நிழலும்....மொட்டுகளும் என்று...மலரத் தொடங்கும் அல்லி...சந்திரன் வரும் சமயம்....மலரும் அல்லியின் நீரில் தெரியும் அந்த பிம்பம்...ஹையோ...கைவிரல்களை விரித்து இருப்பது போல மலர்ந்திருக்கும் அல்லி...நீர் அலைகள் அழகு....என்ன சொல்ல? வார்த்தைகள் இல்லை கோமதிக்கா சொல்லிட....

    அத்தனை படங்களையும் பார்த்து பார்த்து ரசித்தேன் கோமதிக்கா...செம ஷாட்ஸ். மகன் எடுத்திருக்க்கும் படங்கள் தெள்ளத் தெளிவாக அவ்வளவு அழகாக இருக்கின்றன....

    ரசித்துப் பார்த்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏரி, வயல் தூரத்தில் தெரியும் வன்னியப்பர் கோயில், அல்லிப் பூக்கள் என்று கண்கொள்ளாக்காட்சி!!! மகன் எடுத்த படங்கள் செம ஷாட். அல்லி இலைகளும் அதன் ஓர அழகும் ஏதோ அல்லி தன் பாவாடையை விரித்து வைத்திருப்பதுபோல...அதன் நிழலும்....மொட்டுகளும் என்று...மலரத் தொடங்கும் அல்லி...சந்திரன் வரும் சமயம்....மலரும் அல்லியின் நீரில் தெரியும் அந்த பிம்பம்...ஹையோ...கைவிரல்களை விரித்து இருப்பது போல மலர்ந்திருக்கும் அல்லி...நீர் அலைகள் அழகு....என்ன சொல்ல? வார்த்தைகள் இல்லை கோமதிக்கா சொல்லிட....//

      அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      வயல் படங்கள் நான் எடுத்தேன், மகன் எடுத்து இருந்தால் இன்னும் நன்றாக எடுத்து இருப்பான்.

      ஏரிக்கரை முடியும் இடத்தில் இரண்டு அல்லி படங்கள் மட்டும் நான் எடுத்தேன், மற்ற அல்லி படங்கள் மகன் எடுத்தான். அவன் காமிரா கொண்டு வந்து இருந்தால் இன்னும் நன்றாக எடுத்து இருப்பான்.

      நீக்கு
  10. விவசாயம் காப்போம் கவிதைகள் எல்லாமே சிறப்பு. படமும். பொங்கல் வாழ்த்துகள் கோமதிக்கா. விவசாயம் காக்கப்பட வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விவசாயம் காப்போம் கவிதைகள் எல்லாமே சிறப்பு. படமும். பொங்கல் வாழ்த்துகள் கோமதிக்கா. விவசாயம் காக்கப்பட வேண்டும்//

      கவிதை பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      விவசாயம் காக்கப்பட வேண்டும். உணவு பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் விளை நிலங்களை, விவாசயிகளை காக்க வேண்டும்.
      உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் அழகாக எடுத்துள்ளீர்கள். வயல் வரப்பும், ஓடும் ஆறும், நாற்று நடும் படங்களும் மிக அருமையாக உள்ளது. நான் முன்பு தி. லிக்கு செல்லும் போது காலையில் ரயிலில் ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி இதைத்தான் ரசித்துக் கொண்டே செல்வேன் அந்த அனுபவம் தங்கள் பதிவில் இப்போது கிடைத்தது. மிக்க நன்றி சகோதரி.

    சகோதரி கீதாரெங்கன் அவர்களும் அவரின் பதிவில் இது போல் நம்மூர் பக்கமாக இயற்கை வனப்புமிக்க இடங்களை படமெடுத்து பதிவாக போடுவார்கள். அதையும் ஒன்று விடாமல் ரசித்துப் பார்ப்பேன்.

    அல்லிமலர்கள் படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக இருக்கிறது.முதல் நாளிரவு சந்திரனை கண்டு சற்று மலர்ந்திருந்த அல்லி மலரைக் கண்டதும், "சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா ? என்ற பழைய பாடல் நினைவுக்கு வந்தது.

    கவிதைகள் இரண்டும் நன்றாக உள்ளது." ஏர்முனைக்கு நேர் இங்கே" பாடலும் அருமை. எப்போதோ அது அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல். இப்போது கேட்க வைத்தமைக்கு நன்றி. விவசாயம் வளர வேண்டும். நாடும் வீடும் செழுமையாக வேண்டுமென நானும் வேண்டிக் கொள்கிறேன். விவசாயத்தை முதன்மையாக வைத்து இந்த பொங்கல் பதிவை சிறப்பாக தொகுத்துள்ளீர்கள் சகோதரி. பாராட்டுக்கள்.

    தங்களுக்கும், மற்றும் தங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும், நாளை வரும் போகி, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் அழகாக எடுத்துள்ளீர்கள். வயல் வரப்பும், ஓடும் ஆறும், நாற்று நடும் படங்களும் மிக அருமையாக உள்ளது//

      நன்றி.

      //நான் முன்பு தி. லிக்கு செல்லும் போது காலையில் ரயிலில் ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி இதைத்தான் ரசித்துக் கொண்டே செல்வேன் அந்த அனுபவம் தங்கள் பதிவில் இப்போது கிடைத்தது. மிக்க நன்றி சகோதரி.//

      எனக்கும் ஜன்னலோரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும்.

      //சகோதரி கீதாரெங்கன் அவர்களும் அவரின் பதிவில் இது போல் நம்மூர் பக்கமாக இயற்கை வனப்புமிக்க இடங்களை படமெடுத்து பதிவாக போடுவார்கள். அதையும் ஒன்று விடாமல் ரசித்துப் பார்ப்பேன்.//

      ஆமாம், கீதாவுக்கும் இயற்கை கட்சிகளை எடுப்பது மிகவும் பிடிக்கும்.

      //முதல் நாளிரவு சந்திரனை கண்டு சற்று மலர்ந்திருந்த அல்லி மலரைக் கண்டதும், "சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா ? என்ற பழைய பாடல் நினைவுக்கு வந்தது.//
      எனக்கும் இந்த பாடல் நினைவுக்கு வந்தது மிகவும் பிடித்த பாடல். முன்பு ஒரு பதிவில் இந்த பாடலை பகிர்ந்து இருக்கிறேன்.

      //கவிதைகள் இரண்டும் நன்றாக உள்ளது." ஏர்முனைக்கு நேர் இங்கே" பாடலும் அருமை. எப்போதோ அது அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல். இப்போது கேட்க வைத்தமைக்கு நன்றி.//

      முன்பு பழைய படங்களில் விவசாயம் சார்ந்த பாடல், விவசாயம் செய்யும் காட்சிகள் இடம்பெறும். பொங்கள் சமயம் வானொலியில் ஒலிக்கும் இந்த பாடல்கள்.

      //விவசாயம் வளர வேண்டும். நாடும் வீடும் செழுமையாக வேண்டுமென நானும் வேண்டிக் கொள்கிறேன். விவசாயத்தை முதன்மையாக வைத்து இந்த பொங்கல் பதிவை சிறப்பாக தொகுத்துள்ளீர்கள் சகோதரி. பாராட்டுக்கள்.//

      பொங்கல் திருநாள் சூரியனுக்கும், உழவர்களுக்கும் உழவுக்கு உதவும் காளைகளுக்கும் வீட்டில் வளர்க்கும் பசுவுக்கும் நன்றி சொல்லும் நாள்தானே அதுதான் இந்த பதிவு.
      ஊரில் பார்த்த காட்சிகளை அதுதான் பகிர்ந்தேன்.
      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

      //தங்களுக்கும், மற்றும் தங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும், நாளை வரும் போகி, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      உங்கள் கருத்துக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் சொன்ன வாழ்த்துகளுக்கும் நன்றி.






      நீக்கு
  12. பொங்கல் நேரத்தில் பொருத்தமான பதிவு. அழகிய காட்சிகள் அருமையான குறிப்புகளுடன். ரசித்துப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      பொங்கல் நேரத்தில் பொருத்தமான பதிவு. அழகிய காட்சிகள் அருமையான குறிப்புகளுடன். ரசித்துப் பார்த்தேன்.//

      ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  14. ஏரி, வயல் பரப்பு, நாற்று நடுகை, என காட்சிகள் பசுமை.கிராமத்து சூழல் அழகிய படங்களுடன் கண்டு களிப்புற்றோம்.
    வாழட்டும் கிராமங்கள்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்க மாதேவி, வாழ்க வளமுடன்

      //ஏரி, வயல் பரப்பு, நாற்று நடுகை, என காட்சிகள் பசுமை.கிராமத்து சூழல் அழகிய படங்களுடன் கண்டு களிப்புற்றோம்.//
      மனதுக்கு களிப்பு தரக்கூடிய காட்சிகள்தான் அதுதான் இந்த பகிர்வு.

      வாழட்டும் கிராமங்கள்.//

      ஆமாம். வாழட்டும் இன்று போல என்றும்.

      //உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.//

      நன்றி மாதேவி.


      நீக்கு
  15. எங்க நாத்தனார் மற்றும் சில உறவினர்களுக்குக் களக்கோடீஸ்வரர் தான் குலதெய்வம். இன்னும் சிலருக்குச் சடவுடையார். சடவுடையார் குலதெய்வம் எனில் அவங்க குடும்பத்துக்கு வேப்பிலை ஆகாது என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //எங்க நாத்தனார் மற்றும் சில உறவினர்களுக்குக் களக்கோடீஸ்வரர் தான் குலதெய்வம்.//
      ஓ! அப்படியா எந்த ஊர்?
      என் தங்கை வீட்டு குலதெய்வம் பேர் சடையப்பர் அவர்களுக்கு பிள்ளை பெற்ற மருந்து சாப்பிட கூடாது.
      நம்பிக்கை பலவிதமாக இருக்கிறது.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு