புதன், 25 ஜனவரி, 2023

தமிழ் திறன் போட்டி  அரிசோனாவில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் இருக்கிறது.சாண்டலர் பள்ளியில்  தமிழ் திறன் போட்டி- பேச்சுப்போட்டி சனி ,  ஞாயிறு இரண்டு தினங்களில்   நடந்தது.
 


அங்கு படிக்கும் மழலையிலிருந்து பெரிய குழந்தைகள் வரை அனைவரும் தமிழ் திறன் போட்டியில்  பங்கு பெற்றார்கள். ஒவ்வொரு வகுப்பிற்கும்   நேரம் கொடுக்கப்பட்டு  நடத்தினார்கள், அதற்கு  பீனிக்ஸ் தமிழ்பள்ளியிலிருந்து ஆசிரியர்களை  மற்றும் தமிழ்ச்சங்க நிருவாக குழு இயக்குனர்களை   தீர்ப்பு சொல்லும் நடுவர்களாக அழைத்து இருந்தார்கள்.

ஞாயிறு  மதியம் நடந்த அமர்வுக்கு என்  மகனையும்  திருமதி. பார்கவி அவர்களையும் அழைத்து இருந்தார்கள்.  இருவரும் தமிழ்சங்க நிர்வாக  குழு இயக்குனர்கள்.

மகன் என்னையும் அழைத்து போனான். மாலை பொழுதை இனிதாக்கினார்கள்  குழந்தைகள். அவர்கள் பேசியதை கேட்க செவிக்கு இன்பமாக இருந்தது. அவர்கள் என்ன பேசினார்கள், யாரைப் பற்றி பேசினார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நடுவராக வந்து இருக்கும் மகனை பற்றி சொல்கிறார் அங்கு பொறுப்பில் இருக்கும் ஆசிரியர். நடுவரின் தாத்தா தமிழ் ஆசிரியர், அப்பா தமிழ் பேராசிரியர் தமிழ்துறை தலைவர். அம்மாவும், சகோதரியும் வலைத்தளப்பதிவர்கள்  என்று சொன்னார்கள். நடுவர் காசி அருணாசலத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும், ஊட்டா தமிழ்ச் சங்க  பத்திரிக்கை "பனிமலர்"  சப் எடிட்டராக பணிபுரிந்து இருக்கிறார்,  அரிசோனா  தமிழ் பள்ளியின் 10 வது ஆண்டு சிறப்பு மலராக  "பாலைப்பூ"    பத்திரிக்கையை தயாரித்தவர். பல திறமைகள் கொண்டவர் . என்று புகழ்ந்து சொன்னார்கள். கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

                               மலர் கொடுத்து வரவேற்பு

பார்கவியும் பல திறமைகள் கொண்டவர் ஓவியம், பாட்டு, பட்டிமன்ற பேச்சாளர்   ஒரு அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவர் என்று சொன்னார்கள்.


இரண்டு நடுவர்கள், இன்னொருவர் நேரமேலண்மை செய்பவர், குறிப்பிட்ட நேரத்துக்கு மேலே பேசினால் அவர்களுக்கு மணி ஒலி எழுப்பி எச்சரிக்கை விடுபவர்.

முதலில் 6 ம் வகுப்பு  படிக்கும் மாணவ மாணவிகளின் பேச்சு திறன் போட்டி:- (பள்ளியில் வேறு வகுப்புகள் படிக்கலாம் தமிழ்ப்பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கிறார்கள்.) ஒவ்வொரு குழந்தைகள் பேசியதையும் கீழே கொடுத்து இருக்கிறேன்.

1.முதலில் பேசிய பெண்  "கப்பலோட்டிய தமிழன்" என்று பெருமையோடு அழைக்கப்படும். வ. உ . சிதம்பரம்பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாற்றை  குறிப்பிட்ட நேரத்தில்  அழகாய் சொன்னார் . வ.உ.சியின்  பன்முக திறமைகளை சொல்லி அவர் கப்பல் விட்டதால்  வழக்கறிஞர் வேலை பறிக்கப்பட்டது,  சிறையில் அடைக்கப்பட்டு  செக் இழுத்து துயரப்பட்டது,  அவர் குடும்பம் ஏழ்மையில் வாடியது பற்றி எல்லாம்   உருக்கமாக பேசினார்.


2. அடுத்து பேசியவர் இந்திரா நூயி அவர்களின் வாழ்க்கை வரலாறு சொன்னார்.சென்னையில் பிறந்து வளர்ந்து படித்து பெற்ற பட்டங்கள், முதுகலை பட்டபடிப்பை மேல் படிப்பை வெளிநாட்டில் முடித்து அமெரிக்க வணிகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணியாக   திகழ்வதை சொன்னார். 

3. அடுத்து பேசியவர் குடியரசு தலைவர்  டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம்  அவர்களைப்பற்றி நன்றாக பேசினார். "அவரின் கனவு காணுங்கள்"  அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள் வார்த்தையை சொல்லி நிறைவு செய்தார். 

4. அடுத்து பேசியவர் இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்  மற்றும் முன்னாள் உலக சதுரங்க வாகையாளர் விஸ்வநாத் ஆனந்த் அவர்களை பற்றி பேசினார். பேசியவர் ஆனந்த்  அவர் மயிலாடுதுறையில் பிறந்தவர் என்று சொன்னவுடன்  "மயிலாடுதுறையில்  உள்ள இன்னொரு செலிபிரிட்டி இங்கு இருக்கார் யார் தெரியுமா? என்று கேட்டு அது நான் தான்" என்று எல்லோரையும்  சிரிக்க வைத்தான் மகன்.5. தேசிய கவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பேசினார். பாரதியி இயற்பெயர் பாரதி என்ற  பெயர் காரணம், அவரின் பாடல்கள், அவர் உத்தியோகம் , அவரின் இறப்பு பற்றி பேசினார்.

6. ஏ. ஆர் .ரகுமான் பற்றி பேசிய பெண் "சின்ன சின்ன ஆசை" பாடலை இரண்டு வரி பாடினார் நன்றாக பாடினார். ரகுமான் சிறிய வயதில்    இசை உலகில் செய்த சாதனை, வாங்கிய விருதுகள் பற்றி சொன்னார். 

7.அடுத்து பேசிய பெண் முன்னாள் முதல்வர்  ஜெ .ஜெயலலிதா அவர்களைப்பற்றி பேசினார். புரட்சி தலைவி, அம்மா என்று தொண்டர்கள் அழைப்பார்கள் என்று  தன் பேச்சை நிறைவு செய்யும் வரை  சிரித்த முகத்தோடு அழகாய் பேசினார். நடுவர் பார்கவி அந்த குழந்தையை பாராட்டி ஜெயலலிதா அவர்களுக்கு "இன்னொரு பேர் இருக்கே தெரியுமா" என கேட்டு 'இரும்பு பெண்மணி என்றார்"

8.  அடுத்து பேசியவர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு ,  இசை ஞானி பட்டம் பெற்ற விவரம் , மேலும்  அவர் பெற்ற பட்டங்களை பற்றி பேசினார்.அவர்  அன்னக்கிளி படத்தில்   நாட்டுபுற பாடல்கள் மெட்டில் இசை அமைத்து  புகழ் பெற்றது   எல்லாம் பேசினார்.


அடுத்து  7 ம் வகுப்பு படிக்கும்  சில  குழந்தைகள்

 இராமயண  கதாபாத்திரங்கள் பற்றி பேசினார்கள்.
 .
ஒரு குழந்தை இராவணன் நல்ல சிவபக்தர் அவர் வீணை வாசிப்பதில் மிகவும் சிறந்தவர், இசையால் சிவனை மயங்கவைத்தவர், இராவணின்  பெற்றோர் பெயர் உடன்பிறந்தவர்கள் பெயர்கள், மனைவி பேர் எல்லாம் சரியாக நினைவு வைத்து சொன்னார். 


இந்த பெண் நான் தான் சீதை என்று  தானே  சீதாவாய் மாறி  பேசினார். ஜனகரின் மகளாக பிறந்தேன், இராமனின் மனைவியானேன், என்னை இராவணன்  கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான்,  அனுமன் என்னை சந்தித்து கணையாளி கொடுத்து ராமனிடம்  அழைத்து செல்வதாக சொன்னார்,நான் மறுத்து விட்டேன், என்னை இராமர் வந்து அழைத்து செல்வார் என்று சொன்னேன். அவன் பெற்ற சாபத்தால் இராவணன் என்னை நெருங்க முடியாது,  கவலைபடாமல் போ என்றேன்.

இராமர் வந்தார், என்னை "அக்னி பிரவேசம்" செய்ய சொன்னார் நானும் சரி என்று செய்தேன். ஊர் திரும்பிய பின் ஊர் மக்களில் ஒருவன் என்னை அவதூறாக பேசினான் என்று என்னை காட்டில்  கொண்டு போய் விடச் சொல்லி விட்டார், அதன் பிறகு  லவ , குசன் பிறந்த பின் என்னை அயோத்திக்கு அழைத்தார் நான் மறுத்து விட்டேன். என்று பேசினார். 
இவர் பேசியது என் மனதை விட்டு அகலவில்லை.

அடுத்து ஒரு பையன் பரதன் பற்றி பேசினார், இன்னொருவர் அனுமன் பற்றி பேசினார். 

எல்லா குழந்தைகளும் நன்றாக பேசினார்கள்.


அடுத்து பாரதியார் கவிதையை சொல்லி விளக்கம் சொன்னார்கள்  8ம் வகுப்பு குழந்தைகள்.

முதலில் பேசிய குழந்தை 

1. விதியே, விதியே, தமிழ்ச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்

தன்மையும் தனது தருமமும் மாயாது

இந்த பாட்டை பாடி அதற்கு விளக்கமும் கொடுத்தார்.

அடுத்த குழந்தை 

2. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் 

இனிதாவது எங்குங் காணோம் 

என்ற கவிதையை சொல்லி விளக்கம் கொடுத்தார்.

3.  அடுத்த குழந்தை

இது பொறுப்பதில்லை தம்பி!

எரிதழல் கொண்டுவா

கதிரை வைத்திழந்தான்- அண்ணன்

கியயை எரித்திடுவோம்.

 3. இது பொறுப்பதில்லை தம்பி!

எரிதழல் கொண்டு வா

கதிரை வைத்திழந்தான்-அண்ணன்

பாஞ்சாலி சபத பாட்டில் பீமன் சொல்லும் கவிதை இது, நான்  11வது படிக்கும் போது  பாடம்,  இதை 8வது படிக்கும்  குழந்தை தவறு இல்லாமல் மனப்பாடமாக சொல்லி அந்த பாடலுக்கு விளக்கமும் கொடுப்பதை  பாராட்ட வேண்டும்

சிறுமை கண்டு பொங்கிய பாரதியை கண்டேன்

அடுத்த குழந்தை

4. நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப்புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி பாடலை பாடி விளக்கம். நன்றாக சொன்னார்.

5. "ஓடி விளையாடு பாப்பா" பாடலை முழுவது பாடி அதற்கு விளக்கம் கொடுத்தார் ஒரு பையன். கடைசியில் முடிக்க நேரமில்லை. இருந்தாலும் சொல்லி விட்டார்.

பேச்சுத்திறன் போட்டியில் கலந்து கொண்டு பேசிய அத்தனை குழந்தைகளுக்கும் சான்றிதழ் கொடுத்தார்கள். நடுவர் தேர்ந்து எடுத்த  சிறப்பு பேச்சாளர்களுக்கு பதக்கம் அணிவித்து  இன்னொரு சான்றிதழும் கொடுக்கப்பட்டது.


\


மகன் குழந்தைகளை வாழ்த்தி பேசியது இந்த காணொளியில் இருக்கிறது சின்ன காணொளிதான், மறந்து விட்டு பின் அவசரமாக பதிவு செய்தேன். கொஞ்சம் தான் இருக்கும். அது தெரியவில்லை என்றால் மகன் பேசியது கீழே:-
  
இந்த குழந்தைகள் எல்லாம் நன்றாக பேசினார்கள் கேட்பதற்கே நன்றாக இருக்கிறது, பேச எடுத்து கொண்ட தலைப்புகள் அருமை. அமெரிக்காவில் வாழும் குழந்தைகள் போல் இல்லாமல் தமிழ்நாட்டு குழந்தைகள் போலவே பேசினார்கள் நல்ல உச்சரிப்பு.  

பாரதியார் கவிதைகளை நான் படித்து வந்தேன், குழந்தைகள் சொல்வதை சரிபார்க்க வேண்டும் என்றால் நான் அதைபற்றி தெரிந்து இருக்க வேண்டும். எல்லோரும் நன்றாக பேசினார்கள் மதிப்பெண் கொடுப்பதற்கே கஷ்டமாக இருந்தது.  நான் வெகுதூரத்திலிருந்து வருகிறேன்  வந்த எனக்கு தமிழ்நாட்டில் இருந்த உணர்வை கொடுத்தார்கள் பிள்ளைகள் என்றான்.

தான் பள்ளியில் படிக்கும் போது திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் தடுமாறியாது,  என்று தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டான்.

வாரம் ஒரு நாள் மட்டும் தமிழ் படிக்கிறார்கள் இவ்வளவு அருமையாக தமிழ் பள்ளியில் படிப்பது போலவே பேசுகிறார்கள் . பாரட்ட வேண்டும் என்று பேசினான்.


பார்கவி அவர்கள் பேசியது:- முன்பு நமக்கு   நீதி கதைகள் பாரதியார் கவிதைகள் எல்லாம் சொல்லி கொடுத்தார்கள் . இங்கு வளரும் குழந்தைகளுக்கு  வாய்ப்புகள் ரொம்ப கம்மி அப்படி இருக்கும் போதும் பாரதியாரின் கவிதைகளை, இதிகாசங்களில் உள்ள பாத்திரங்களின் பேர்களை நினைவு வைத்து இருந்து  கதைகளை உள்வாங்கி  பேசி இருக்கிறார்கள். மனப்பாடம் செய்து பேசியது போலவே இல்லை என்றார்.  குழந்தைகள் எல்லோரும் வெற்றியாளர்கள் தான். அவர்கள் கடின உழைப்பு, ஆசிரியர்களின் பக்கத்


துணை,  ஊக்கம் கொடுத்த பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்  என்று பேசினார். ஆசிரிய பெருமக்களை இயக்குனர்களை பாராட்டுவோம். தமிழ் பள்ளி மேலும் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துவோம்.நாமும் குழந்தைகளை, பெற்றோர்களை  வாழ்த்துவோம். 
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பேசும் போது மகிழ்ச்சி பொங்க காணொளி எடுத்தார்கள்.  சில குழந்தைகளின் தாத்தா , பாட்டி வந்து இருந்தார்கள் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தார்கள்.


விழா நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின் அனைவருக்கும் தேநீர், மற்றும் வெங்காய பக்கோடா வழங்கினார்கள்.


பேரன் இங்கு படிக்கிறான்

சனிக்கிழமை தமிழ் கற்று வரும் என் பேரன் மற்றும் குழந்தைகள். பெற்றோர்கள் . (இது பீனிக்ஸ் பள்ளி)


புத்தகபை
இந்த பள்ளியில் போன மாதம் பேச்சுப்போட்டி நடத்தி விட்டார்கள். பேரன் கவின்  பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு  வெற்றி பெற்று இருக்கிறான். என்ன தலைப்பில் பேசினான் என்பது பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களின்   கார்கள்.

 விடுமுறை நாளில் குழந்தைகளுக்கு நேரத்தை செலவிடுகிறார்கள் பெற்றோர்கள்.


வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------

22 கருத்துகள்:

 1. அழகான படங்கள், விளக்கம் அருமை. தங்களது மகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  உண்மையிலேயே அயல் தேசங்களில் தான் தமிழ் வாழ்கிறது. இது உலகம் அழியும் வரையில் தொடரும்...

  ஆனால் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் வடக்கர்களின் தொடர் ஆக்கிரமிப்பால் தமிழ் அழிந்து தமிழர்களுக்கு வாழ்விடமே... ஆபத்தாக போகும் சூழல் வருகிறது.

  அடுத்த இரண்டாவது தலைமுறைகளுக்கு கஷ்டமான நிலைதான்.

  சீமானுடைய பேச்சு ஆரம்பத்தில் எனக்கு வினோதமாக பட்டது. ஆனால் இன்றைய நிலையில் உண்மையாக போகுமோ என்றே மனம் நினைக்கிறது.

  நல்லதே நிகழட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //அழகான படங்கள், விளக்கம் அருமை. தங்களது மகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.//

   நன்றி.

   //உண்மையிலேயே அயல் தேசங்களில் தான் தமிழ் வாழ்கிறது. இது உலகம் அழியும் வரையில் தொடரும்.//

   அப்படியே தொடரட்டும் தமிழ் மொழி.
   எத்திசையும் புகழ் மணக்க இருக்கட்டும் தமிழ்.
   மனோன்மணியம் சுந்தரனார் சொன்னது போல
   என்றும் மாறாத சீரிய இளைமையோடு இருக்கட்டும் தமிழ் தாய்.
   அயல் நாட்டில் எல்லா மொழி பேசுபவர்களும் தமிழ் கற்கிறார்கள்.

   //நல்லதே நிகழட்டும்.//

   நல்லதே நினைப்போம். நல்லதே நிகழட்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 2. மிக அருமையான தொகுப்பு மா...

  நேரில் காண்பது போல அழகாக எழுதி உள்ளீர்கள் ...ரசித்து வாசித்தேன் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்க்ம் அனு பிரேம், வாழ்க வளமுடன்

   //மிக அருமையான தொகுப்பு மா...

   நேரில் காண்பது போல அழகாக எழுதி உள்ளீர்கள் ...ரசித்து வாசித்தேன் ...//

   அனு ரசித்து வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.   நீக்கு
 3. சிறப்பான பதிவு..

  விழாவின் படங்கள் அருமை..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //சிறப்பான பதிவு..

   விழாவின் படங்கள் அருமை..

   வாழ்க நலம்..//

   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. அயல் நாடுகளின்
  தங்கத் தமிழ் இனிமேல் தமிழகத்திலும் தழைத்தோங்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அயல் நாடுகளின்
   தங்கத் தமிழ் இனிமேல் தமிழகத்திலும் தழைத்தோங்கும்..//

   நல்லது. உங்கள் வாக்குபடி தழைத்தோங்கட்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது.
  படங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தேன். அரிசோனா தமிழ்ச் சங்க விழாவில் பேச்சுத்திறன் போட்டிக்கு நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  குழந்தைகள் தேர்ந்தெடுத்து பேசிய தலைப்புக்கள் ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது அவர்களின் பேச்சும் அருமை. நீங்கள் குழந்தைகள் பேசியது அனைத்தையும் தொகுத்து தந்தது எங்களுக்கும் அங்கு வந்து விழாவில் கலந்து கொண்ட நிறைவை தந்தது. தமிழ் வளரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //பதிவு அருமையாக உள்ளது.
   படங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தேன். அரிசோனா தமிழ்ச் சங்க விழாவில் பேச்சுத்திறன் போட்டிக்கு நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

   நன்றி.

   //குழந்தைகள் தேர்ந்தெடுத்து பேசிய தலைப்புக்கள் ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது அவர்களின் பேச்சும் அருமை. நீங்கள் குழந்தைகள் பேசியது அனைத்தையும் தொகுத்து தந்தது எங்களுக்கும் அங்கு வந்து விழாவில் கலந்து கொண்ட நிறைவை தந்தது. தமிழ் வளரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

   குழந்தைகள் தேர்ந்தெடுத்த தலைப்புகள் மிகவும் பிடித்து இருந்தது.
   எல்லோர் பேச்சையும் காணொளி ஆக்க முடியவில்லையே ! என்றுதான் வருத்தம். குழந்தைகளின் பெற்றோர் பதிவு செய்தார்கள்.தமிழ் வளரட்டும். படிப்பதுடன் நிறுத்தி விடாமல் வீட்டில் தமிழ் பேசினால் மேலும் தமிழ் வளரும்.
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.


   நீக்கு
 6. சிறப்பான நிகழ்வு.  அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்.  குழந்தைகளின் பேச்சு வியக்க வைத்தது.  உங்கள் மகனின் நகைச்சுவை ரசிக்க வைத்தது.  உங்கள் மகன் போட்டிருக்கும் சட்டை பிரமாதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   //சிறப்பான நிகழ்வு. அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். குழந்தைகளின் பேச்சு வியக்க வைத்தது. //

   ஆமாம், மகன் சொன்னது போல வாரம் இரண்டு மணி நேரம் படிக்கிறார்கள் பிள்ளைகள் அதற்கே இவ்வளவு நன்றாக பேசுகிறார்கள் அது வியப்புதான்.

   //உங்கள் மகனின் நகைச்சுவை ரசிக்க வைத்தது. உங்கள் மகன் போட்டிருக்கும் சட்டை பிரமாதம்.//

   மகனிடம் சொல்லி விட்டேன். நகைச்சுவையை காணொளி எடுத்தேன் வலை ஏற மறுக்கிறது.   நீக்கு
 7. தேவகோட்டை ஜி மற்றும் துரை செல்வராஜூ அண்ணா சொல்லி இருக்கிறபடி தமிழைக் கொண்டாடும் நிகழ்வுகள் வெளிநாட்டில் இருப்பவர்கள்தான் சிறப்பாக செய்கிறார்கள்.  நாம் உள்ளூரிலேயே இருப்பதால் சோம்பலாகி தொலைகாட்சி, தூக்கம் என்று ஆழ்ந்து விடுகிறோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தேவகோட்டை ஜி மற்றும் துரை செல்வராஜூ அண்ணா சொல்லி இருக்கிறபடி தமிழைக் கொண்டாடும் நிகழ்வுகள் வெளிநாட்டில் இருப்பவர்கள்தான் சிறப்பாக செய்கிறார்கள். //

   ஆமாம்.

   //நாம் உள்ளூரிலேயே இருப்பதால் சோம்பலாகி தொலைகாட்சி, தூக்கம் என்று ஆழ்ந்து விடுகிறோம்!//

   நீங்கள் தான் பதிவு மூலம் நிறைய சொல்லி வருகிறீர்கள். (வியாழன் பதிவு மூலம் .)

   உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. அங்கு இப்படித் தமிழ்ப்பள்ளி போட்டிகள் எல்லாம் மிகவும் சிறப்பு. படங்கள் விளக்கங்கள் எல்லாம் அழகா சொல்லியிருக்கீங்க கோமதிக்கா.

  குழந்தைகள் பேசியதை அழகா சுருக்கி அதே சமயம் நினைவும் வைத்திருந்து சொல்லியிருக்கீங்களே. ரெக்கார்ட் பண்ணினீங்களா அக்கா?

  அருமை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   //அங்கு இப்படித் தமிழ்ப்பள்ளி போட்டிகள் எல்லாம் மிகவும் சிறப்பு. //

   ஆமாம். ஊக்கமும், உற்சாகமும், சேவை மனபான்மையும் ஏதாவது செய்ய வேண்டும் சமுதாயத்திற்கு என்ற எண்ணமும் இருப்பதால் நிறைய செய்யலாம் சிறப்பாக.

   //படங்கள் விளக்கங்கள் எல்லாம் அழகா சொல்லியிருக்கீங்க கோமதிக்கா.//

   நன்றி.

   //குழந்தைகள் பேசியதை அழகா சுருக்கி அதே சமயம் நினைவும் வைத்திருந்து சொல்லியிருக்கீங்களே. ரெக்கார்ட் பண்ணினீங்களா அக்கா?//

   இல்லை. அவர்கள் பேசியதை நினைவில் உள்ளதை மட்டும் பகிர்ந்து இருக்கிறேன்.பாடல்களை பாரதியார் கவிதை புத்தகத்திலிருந்து எடுத்து போட்டு இருக்கிறேன்.

   நீக்கு
 9. குழந்தைகள் எல்லாம் ரொம்ப அழகா பேசியிருக்காங்க. உங்கள் மகனின் பேச்சும் கேட்டேன் நல்லா பேசுகிறார். பாராட்டுகளும் வாழ்த்துகளும் சொல்லிடுங்க அவருக்கு.

  எனக்கும் நான் சீதை என்று பேசியது பிடித்தது.

  அது போல பாரதி பற்றி கவிதை எல்லாம் சொல்லி பேசியதும் பிடித்திருக்கு.

  நல்ல நிகழ்வு. குழந்தைகளுக்கும் நல்ல விஷயம். பெற்றோர் சொல்படி குழந்தைகளூம் கற்றுக் கொள்வது சிறப்பான விஷயம்.

  எல்லாக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள். அது போல அதை நடத்தியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்

  உங்கள் பேரனுக்கும் பாராட்டுகள். வெற்றி பெற்றதற்கு.

  ரசித்து வாசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழந்தைகள் எல்லாம் ரொம்ப அழகா பேசியிருக்காங்க. உங்கள் மகனின் பேச்சும் கேட்டேன் நல்லா பேசுகிறார். பாராட்டுகளும் வாழ்த்துகளும் சொல்லிடுங்க அவருக்கு.//

   சொல்லி விடுகிறேன் கீதா.

   //எனக்கும் நான் சீதை என்று பேசியது பிடித்தது.//
   அந்த குழந்தை முகத்தில் சோகத்தை வைத்துகொண்டு பேசியது மனதை ஏதோ செய்து விட்டது.

   //அது போல பாரதி பற்றி கவிதை எல்லாம் சொல்லி பேசியதும் பிடித்திருக்கு.//
   பெரிய பாடல்களை மனபாடமாக தங்கு தடையின்றி சொன்னது சிறப்பு.

   //நல்ல நிகழ்வு. குழந்தைகளுக்கும் நல்ல விஷயம். பெற்றோர் சொல்படி குழந்தைகளூம் கற்றுக் கொள்வது சிறப்பான விஷயம்.//

   ஆமாம் கீதா, பெற்றோர்களையும், குழந்தைகளையும் பாராட்டவேண்டும்.

   //எல்லாக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள். அது போல அதை நடத்தியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்//நன்றி கீதா, பாராட்டுகளும் , வாழ்த்துகளும் மேலும் அவர்களை ஊக்கமுடன் செயல்லாற்ற உதவும்.

   //உங்கள் பேரனுக்கும் பாராட்டுகள். வெற்றி பெற்றதற்கு.//

   பேரனிடம் சொல்லி விட்டேன்.


   ரசித்து வாசித்தேன் கோமதிக்கா//

   ரசித்து வாசித்து சொன்ன கருத்துக்களுக்கு நன்றி கீதா.   நீக்கு
 10. சிறப்பான நிகழ்வு அம்மா... படங்கள் அனைத்தும் அழகு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   //சிறப்பான நிகழ்வு அம்மா... படங்கள் அனைத்தும் அழகு...//

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. குழந்தைகளின் தமிழ் தினம் அவர்களின் தமிழ் பற்று, பேச்சு திறமை, படிக்கும்போதே மகிழ்ச்சி தருகிறது.
  வாழ்க தமிழ் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

   //குழந்தைகளின் தமிழ் தினம் அவர்களின் தமிழ் பற்று, பேச்சு திறமை, படிக்கும்போதே மகிழ்ச்சி தருகிறது.
   வாழ்க தமிழ் .//

   ஆமாம், குழந்தைகளின் தமிழ் தினம் தான் நன்றாக சொன்னீர்கள்.
   கேட்க இன்பமாக பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு