வியாழன், 21 ஜூலை, 2022

வண்டியூர் தெப்பக்குளமும் , வண்டியூர் மாரியம்மனும்


மாலை நேரம் வண்டியூர் தெப்பக்குளத்தின் காட்சி. மழை மேகம் சூழ்ந்து இருந்தது.


ஜூலை மாதம் 2 ம் தேதி வீட்டுக்கு வந்த உறவினர்களுடன் திருப்பரங்குன்றம் காலை போனோம். மாலை வண்டியூர்த் தெப்பக்குளம் ,வண்டியூர்  மாரியம்மன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் போனோம்.


காற்றுவீசியதால் குளத்து நீர்  கடல் அலை போல ஆடியது

 குளத்தின் நடுவில் இருக்கும் நீராழி மண்டபம் வண்ணவிளக்குகள் போட்டு  அழகாய் இருந்தது. காமிரா எடுத்து போக வில்லை, அனைத்து படங்களும் அலைபேசியில் எடுத்தவை.

மீனாட்சி அம்மன் கோவில் செல்வதால் காமிரா கொண்டு போகவில்லை. அங்கு செல்போன், காமிரா எதுவும் அனுமதி இல்லை. காரில் செல்போனை வைத்து விட்டு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து வந்தோம். கோவிலில் செருப்பு போடும் இடத்தில் செல்போன் லாக்கர் இருக்கிறது, அங்கும் வைக்கலாம்.தூரத்தில் (வலதுபுரம்) மாரியம்மன் கோவில் கோபுரம் தெரியும்.
இரண்டு பதிவுகளிலும் ”பசுமை நடை” இயக்கத்துடன் வண்டியூர் தெப்பக்குளம் சென்று வந்ததைப் பகிர்ந்து இருந்தேன். பின்னூட்டம் கொடுத்தவர்களைவிடப் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. பின்னூட்டம் கொடுத்தவர்கள்  எல்லாம் வண்டியூர்தெப்பக்குளத்திற்கு நீர் வரவேண்டும் முன்பு போல் இருக்க வேண்டும் என்று கருத்து கொடுத்து இருந்தார்கள், படித்தவர்கள் எண்ணமும்   அதுவாய்த் தான் இருந்து இருக்கும். இப்போது எண்ணம் பலிக்கும் நேரம் வந்து விட்டது அந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் எல்லோரிடமும்  சொல்லி நானும் மகிழ்கிறேன். நீங்களும் செய்தியைப் படித்து இருப்பீர்கள். என்று
எண்ணம் வாழ்க ! 2016 ல் போட்ட பதிவில் சொல்லி இருப்பேன்.

இந்த காணொளி  இப்போது எடுத்தது.(2022)
இப்போது நீர்நிறைந்து இருக்கும் தெப்பக்குளம் பார்க்க அழகு.


பழைய படம்(2020)
இந்த படம் 2020 ல் எடுத்த படம், ஞாயிறு படகு சவாரி உண்டு

இப்போது  எல்லோர் எண்ணம் போல தெப்பக்குளம்  நீர் நிறைந்து பார்க்கவே அழகாய் இருக்கிறது.  சுத்தமாக கம்பி தடுப்புக்குள் குளம் இருக்கிறது. 


மாலை நேரம்  நடைபயிற்சி  செய்கிறார்கள்.குடும்பத்துடன் ரசித்து அமர்ந்து உரையாடி போகும் இடமாக அமைந்து இருக்கிறது. சுண்டல், போளி, கொழுக்கட்டை, வடை, கடலை என்று  விற்பனையும்  உண்டு.

எப்போதும் இப்படி நீர் நிறைந்து இருக்க வேண்டும் தெப்பக்குளத்தில்

மாரியம்மன் கோவில்

தெப்பக்குளமும், மாரியம்மன் கோயிலும் பல வருடங்களுக்கு முன் எடுத்த படம் (2016)


வண்டியூர் தெப்பக்குளத்திற்கு பக்கத்தில் உள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் போனோம். மதுரையின் காவல்தெய்வமாக இருக்கும்  மாரியம்மன்.  
அரசமரத்தின் முன்பக்கம் பிள்ளையாரும், பின் பக்கம் நாகங்கள் இருக்கிறது. உடல் நலத்திற்கு வேண்டிக் கொண்டு  உருவ பொம்மைகள் வைத்து இருக்கிறார்கள். நானும் கால்வலிக்கு வைத்து இருக்கிறேன்.

 உப்பு, மிளகு போடும் இடமும் இங்கு இருக்கிறது.

அரசமரம் பக்கத்தில் பொங்கல் வைக்கிறார்கள்.
மாவு விளக்கு பிரசாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் எல்லாம் கிடைத்தது.
கோயில் , குளம் இரண்டின் பழைய புதிய படங்கள், தெப்பத்திருவிழா  தொகுப்பு.


மாரியம்மன் கோவிலில் இருந்த பழைய படம்

மேலே உள்ள படம் இந்த தூண் அருகில் இருக்கிறது.
வெளிபக்கம் மாவிளக்கு, பொங்கல் வைத்து கொண்டு இருந்தார்கள் அம்மன் சன்னதியில் கூட்டம் இல்லை அருமையான தரிசனம் . யாரும் "போங்க போங்க" என்று விரட்டவில்லை. நின்று நிதானமாக அம்மனை  வணங்கி வந்தோம்.

மாரி அம்மன் அனைவருக்கும்  எல்லா நலங்களையும் அருள வேண்டும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

17 கருத்துகள்:

 1. மதுரைக்கு வந்துவிட்டது போன்ற உணர்வு.  மிக அழகிய இடம்.  இந்த இடத்தை என்னாலும் பாஸாலும் மறக்க முடியாது!  தெப்பக்குளத்தை அழகை படங்களில் கொண்டுவந்து மனம் மகிழ்ச்சி செய்து விட்டீர்கள். காணொளியும் பார்த்து ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   மலரும் நினைவுகளை தந்து விட்டதா பதிவு.
   நான் சிறுவயதில் பெற்றோர்களுடன் தெப்பக்குளக்கரையில் அமர்ந்து படம் எடுத்துக் கொண்டது உள்ளது. முன்பு பகிர்ந்து இருக்கிறேன். தெப்பக்குளத்தை பார்க்கும் போதெல்லாம் அந்த படக்காட்சி கண்ணில் வரும்.
   அப்புறம் சாருடன் பசுமைநடை குழுவோடு தெப்பக்குளம் நடுவில் இருக்கும் மண்டபத்திற்கு போய் கோபுரத்தின் மேல்தளம் வரை ஏறி பார்த்த நினைவுகளை மறக்க முடியாது.

   நீக்கு
 2. எப்போதும் நீர் இருப்பது போல ஏற்பாடு செய்துவிட்டால் அழகாக, நிறைவாக இருக்கும்.  இங்கு சென்றிருக்கிறோமே தவிர, மாரியம்மன் கோவிலோ, காவல் தெய்வம் இருக்கும் இடமோ சென்றதில்லை.  படங்கள் ரொம்ப அழகாய் வந்திருக்கின்றன.  அதுவும் கோவிலுக்குள் எடுத்திருக்கும் படமும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், எப்போதும் நீர் இருப்பது போல ஏற்பாடு தான் என்றார்கள். வண்டியூர் தெப்பக்குளம் அருகில் முக்தீஸ்வரர் கோவில், பைரவர் கோவில், மாரியம்மன் கோவில் எல்லாம் இருக்கிறது. இரவு நேரம் எடுத்த படங்கள் .

   //படங்கள் ரொம்ப அழகாய் வந்திருக்கின்றன. அதுவும் கோவிலுக்குள் எடுத்திருக்கும் படமும் அழகு//

   நன்றி ஸ்ரீராம்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 3. பலமுறை பார்த்தது என்றாலும் தங்களது பதிவில் சிறப்பான படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

  இந்த இடம் இப்போது மாலையில் சுற்றுலா தளம் போலவேதான் இருக்கிறது.

  காணொளி கண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //பலமுறை பார்த்தது என்றாலும் தங்களது பதிவில் சிறப்பான படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.//

   நன்றி.

   ஆமாம், இப்போது காலை, மாலை நடைபயிற்சி செய்பவர்களுக்கும். மாலை நேர பொழுது போக்கு இடமாகவும் இருக்கிறது.

   முன்பு மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாக இருந்தது.
   பசங்களுக்கு கிரிக்கெட் விளையாடும் இடமாக இருந்தது.

   மண்டபத்தில் நிறைய பேர் படுத்துக்கிடப்பார்கள்.
   அவர்களுக்கு கஷ்டம். குளம், சுற்றுபுறம் எல்லாம் இப்போது பார்க்க
   நன்றாக இருக்கிறது. சுற்றுலா தளம் போல மக்கள் பார்வையிட்டு செல்கிறார்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 4. தூங்கா நகரம்... முதன்முதலில் வேலை பார்த்த ஊர்... ஒரு வருடம் போனதே தெரியவில்லை...

  படங்கள் பல நினைவுகளை மீட்டின...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   முதன் முதலில் வேலை பார்த்த ஊரா?
   உங்களுக்கும் பழைய நினைவுகளை தந்து இருக்கிறது பதிவு! மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. வண்டியூர் தெப்பக்குளத்தின் காட்சிகளும் , காணொளியும் மிக அருமை மா ...கண்டு , ரசித்து மகிழ்ந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
   படங்களை, காணொளியை ரசித்து பார்த்து மகிழ்ந்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. படங்கள் எப்போதும் போல் அனைத்தும் அழகாக உள்ளது. கைப்பேசியில் எடுத்த மாதிரியே தெரியவில்லை அவ்வளவு துல்லியமாகவே
  உள்ளது. வண்டியூர் தெப்பக்குளம் நீர் நிறைந்து கண்களுக்கு மிக அருமையாக இருக்கிறது. நீங்கள் கூறுவது போல் குளத்து நீரின் அசைவு படங்களும் கடல் அலை போல அழகாக உள்ளது. மதுரையில் இங்கெல்லாம் நாங்கள் போனதேயில்லை.
  காணொளியும் அழகாக இருந்தது. பார்த்து ரசித்தேன்.

  பெரிய அரசமரம் விருட்ஷமாக வளர்ந்துள்ளது. அந்த நாகரும் எவ்வளவு பெரியது.ஆடி மாதமாகையால் அடுத்த வாரம் நாக சதுர்த்தி விழா வருகிறது. இப்போதே தரிசனம் செய்து கொண்டேன். தூணில் இருக்கும் சிற்பங்களும் அழகு. எல்லா படங்களையும் பெரிதாக்கி பார்த்து ரசித்தேன். ஆடி முதல் வெள்ளிக்கிழமை அம்மனை தரிசிக்க வைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்


  //பதிவு அருமை. படங்கள் எப்போதும் போல் அனைத்தும் அழகாக உள்ளது. கைப்பேசியில் எடுத்த மாதிரியே தெரியவில்லை அவ்வளவு துல்லியமாகவே
  உள்ளது.//

  நன்றி .

  ஆடி மாதம் பிறந்து விட்டாலே பண்டிகைகள் தொடர்ந்து வந்து விடும்.
  நாக சதுர்த்தி தரிசனம் செய்து கொண்டேன் என்று சொன்னது மகிழ்ச்சி. தினம் தினம் சில படங்கள் வலையேற்றி வந்தேன். உடல் நலம் இன்னும் சரியாகவில்லை. தொடர்ந்து அமர்ந்து இருக்க முடியவில்லை.

  வியாழன் போட்டவுடன் தான் ஆடிவெள்ளிக்கிழமை போட்டு இருக்கலாம் என்று நினைத்தேன்.
  நீங்கள் வெள்ளிக்கிழமை பார்த்து தரிசனம் செய்து மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது. மேலும் பதிவுகள் போட உற்சாகம் தருகிறது.

  அனைத்து படங்களையும் ரசித்துப்பார்த்து விரிவான பின்னூட்டம் கொடுத்தது மேலும் மகிழ்ச்சி.

  மாரியம்மன் கோவில் பதிவு முன்பு போட்டது தேடினேன் கிடைக்கவில்லை. அந்த படங்கள் காலையில் எடுத்த படங்கள். இந்த தடவை போன போது மாலை நேரம் இருட்டி விட்டது.

  உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.

  பதிலளிநீக்கு
 8. வண்டியூர் தெப்பக் குளம் மாரியம்மன் கோவில் இரண்டுமே மிகுந்த அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி வாழ்க வளமுடன்
   உங்களை காணவில்லையே என்று நினைத்தேன்.
   புதிய பதிவையும், பழைய பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 9. மேலாவணி மூலவீதி வீட்டில் இருந்து நடந்தே போவோம் இந்தக் கோயிலுக்கு. தெப்பக்குளக்கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது பிடித்த விஷயம். அம்மா ஒவ்வொரு ஆடி/தை மாத வெள்ளிக்கிழமைகளிலும் இங்கே வந்து மாவு இடித்துத் தான் மாவிளக்குப் போடுவார். காலையிலேயே எழுந்து குளித்துச் சமைத்து ஆறுமணிக்கெல்லாம் கோயிலுக்குக் கிளம்பிடுவோம். அங்கே பூஜை.வழிபாடுகள் முடிஞ்சதும் அப்படியே அங்கிருந்தே நான் பள்ளிக்குப் போவேன். அப்பா, அண்ணா/தம்பி எல்லாம் சேதுபதி ஹைஸ்கூல் என்பதால் வீட்டுக்கு வந்துட்டுப் பின்னர் போவாங்க. அப்போதெல்லாம் இந்த மாதிரி எல்லாம் எப்படி முடிஞ்சதுனு இப்போ நினைச்சாலும் ஆச்சரியம் தான்.

  பதிலளிநீக்கு
 10. கல்யாணம் ஆனதும் ஓரிரு முறை போனோம். எதிரே உள்ள தியாகராஜா கல்லூரியில் என் கணவரின் நண்பர் இருந்ததால் அவரைப் பார்த்துப் பேசிவிட்டு வருவோம். அங்கேயே நாகலிங்க மரத்தடியில் அமர்ந்து நாகலிங்கப்பூக்களைப் பொறுக்கிக் கொண்டு வருவேன். அதன் மணமும் சுகந்தமும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலரும் நினைவுகள் அருமை. முன்பு பொழுது போக்க ரம்மியமான இடம் வண்டியூர் தெப்பகுளம்.நாலலிங்கப் பூக்கள் மணம் நாசியில் வந்து மோதுகிறது, நீங்கள் சொல்வதை படிக்கும் போது.
   அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.

   நான் இரவு 9 மணிக்கு தான் தங்கை வீட்டுக்கு போய் வரலக்ஷ்மியை தரிசனம் செய்து தம்பி வீட்டுக்கு போய் விட்டு வந்தேன்.

   நீக்கு