வெள்ளி, 22 ஜூலை, 2022

நண்பர்கள் தினம்

என் அம்மாவும் சந்தன அத்தையும்

இன்று நண்பர்கள் தினம். நட்பின் ஆழத்தில் ஒவ்வொருவரும் திளைத்து இருப்பார்கள். பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

 என் அப்பாவுக்கு வேலை நிமித்தம் ஊர் ஊராய் செல்லும் போது, அந்த அந்த ஊரில் கிடைத்த நட்பைப் பிரிந்து வருவது பெரிய வருத்தமாய் இருக்கும். அப்படி தூத்துக்குடியிலிருந்த இரண்டு வருடங்களை மறக்க முடியாது. அதுவும் சந்தன அத்தையின் நட்பை விட்டு பிரிந்து வருவது பெரிய கடினமாய் இருந்தது.

 இப்போது சமீபத்தில் தூத்துக்குடிக்கு தங்கையின் பேரனைப் பார்க்க போனபோது அப்படியே சந்தன அத்தையைப் பார்த்து விட்டு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்தேன், என் கணவரிடம். மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியெல்லாம்(கோவில்பட்டி, வானரம்பட்டி,) சொந்தங்களை சந்தித்து பேசி மகிழ்ந்து, பின் எட்டையபுரம் பாரதியின் நினைவு மண்டபம், அவர் வாழ்ந்த வீடு எல்லாம் பார்த்தோம்.

 பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை பார்த்து வந்தோம் அப்போது அங்குள்ள மங்கம்மா கோவிலில் உள்ள பூசாரியிடம் பேசிக்கொண்டு இருந்தேன் ” நான் நான்காவது படிக்கும் போது வந்தேன். பிறகு இப்போதுதான் வருகிறேன்” என்று. என் முதல் சுற்றுலாவில் என் அம்மா,மற்றும் சந்தன அத்தையுடன் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தேன் ( பள்ளி சுற்றுலா தான். ஆனால் என்னைத் தனியாக விடமாட்டேன் என வகுப்பு ஆசிரியரிடம் கேட்டு எங்களுடன் வந்தார்கள் அவர்கள் இருவரும்.) மறுநாள் எனக்கு காய்ச்சல் வந்து பின் பெரிய அம்மை வந்தது. அப்போது அத்தை துடித்த துடிப்பு! தினம் வந்து பார்த்து செல்வார்கள்.

 எனக்கும் என் இரு தங்கைகளுக்கும் அம்மை போட்டு இருந்தது. அதில் ஒரு தங்கை 10 மாத குழந்தை. அந்த ஊரில் பிறந்ததால் ’பாகம்பிரியாள்’ என்று அந்த ஊர் அம்மன் பெயர் வைத்த குழந்தை. அவளை அந்த அம்மனே எடுத்துக் கொண்டாள். அப்போது அத்தை அடைந்த வேதனை சொல்லில் அடங்காது. அத்தையின் நட்பு கிடைத்தது பெரிய கதை.

 அத்தையின் அண்ணன் எங்கள் பக்கத்து வீடு அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். அப்படி ஒரு நாள் வந்த போது வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த என் தங்கையைக் காணவில்லை என்று நாங்கள் தேடிக்கொண்டு இருந்தோம்.அப்போது அவர்கள் எங்களுடன் சேர்ந்து தேடினார்கள். அப்போது அவர்கள் அழுத அழுகை நினைவை விட்டு அகலாது. பின் ஒரு கூடைக்கார அம்மா தன்கூடையில் வைத்து அவளைத்தூக்கிக் கொண்டு சென்றதை பார்த்துப் பிடித்து விட்டோம் அந்த அம்மாவிடம் ஏன் குழந்தையை தூக்கி சென்றாய் என்று கேட்டால் அவர்களுக்கு குழந்தை இல்லையாம் வெளியில் தனியாக விளையாடி கொண்டு இருந்தாள்.பார்த்தவுடன் ஆசை ஆகி விட்டது தூக்கி வந்தேன் என்றார், தரமாட்டேன் என்றார்.

காவல் நிலையம் போய்த்தான் மீட்டோம். அத்தை ”பெற்ற வயிறு எப்படி துடிக்கும்? நீ தூக்கி வந்து விட்டாயே” என்று திட்டினார்கள். பிறகு தான் எங்களுக்குத் தெரியும் அந்த அத்தைக்கும் குழந்தை இல்லை என்பது. பிறகு எங்களுடன் நல்ல நட்பாய் ஆகி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை எல்லாம் அவர்கள் வீட்டுக்குக் கூட்டி சென்று தின்பண்டங்கள் வாங்கித் தந்து , சடையில் பூ தைத்து விட்டு அலங்காரம் செய்து அனுப்புவார்கள்.

 எங்கள் வீட்டில் கொலு வைக்கும் போது தினம் ஒரு அலங்காரம் செய்து, வீடு வீடாய்க் கொலுவிற்கு நாங்கள் அழைக்கச் செல்லும்போது சின்ன குழந்தையின் குதுகலத்துடன் அவர்களும் உடன் வருவார்கள். அப்பாவை அண்ணச்சி என்றும் அம்மாவை மதினி என்று அழைப்பார்கள். எங்களை யார் என்று கேட்பவர்களுக்கு என் அண்ணாச்சி குழந்தைகள் என்பார்கள். 

பாசம்! பாசம்மட்டுமே காட்டத் தெரிந்த நல்ல உள்ளம். அவர்கள் வீடு கோகுலம் மாதிரி இருக்கும் நிறைய மாடுகள் தொழுவத்தில் உண்டு. அவர்கள் வீட்டைச் சுற்றி நிறைய வீடுகள். அதை வாடகைக்கு விட்டு இருந்தார்கள்.நாங்கள், அவர்கள் வீட்டு குழந்தைகள் என்று தினம் அத்தை வீடு கோலாகலமாய் இருக்கும்.

அத்தை வீட்டில் சீதை பொன் மானை ராமரிடம் கேட்கும் அழகிய படமிருக்கும்.ஐரோப்பாவில் அக்காலத்தில் அச்சடிக்கப்பட்ட வண்ணப்படம். கண்ணன் வெண்ணை உண்ணும் படம் இருக்கும் மிக அழகாய். அவர்கள் குழந்தைகளை அழைத்து வந்து கொஞ்சி அனுப்ப வேண்டியதாய் உள்ளதே வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ? தெரிந்தவர் வீட்டில் இருந்த ஒரு மனநிலை சரியில்லாத குழந்தையை வீட்டில் வைத்துச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள் .

 மனநிலை சரியில்லாத அந்தக் குழந்தையை அவளுடைய பெற்றோர் திரும்ப அழைத்து செல்ல- அந்தக் குழந்தையும் அத்தையை விட்டுப் பிரிந்த ஏக்கத்தில் இறந்து விட்டது. இதனால் அத்தை விரக்தியின் எல்லைக்குச் சென்று, தனக்கே தனக்கென்று குழந்தை வேண்டும் என்று முடிவு எடுத்து தன் கணவருக்கு மறுமணம் செய்து வைத்து அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை தன் குழந்தைகளாய் வளர்ந்த்தார்கள். 

பின் அந்த சின்ன அத்தையும் இறந்து விட முன்னிலும் அன்பாய்ப் பாசமாய் குழந்தைகளை வளர்த்து எல்லோரையும் நன்கு படிக்க வைத்து ஆளாக்கினார்கள். நாங்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊருக்கு அவர்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு விடுமுறைக்கு வந்து விடுவார்கள். வரும் போது கைமுறுக்கு, வத்தல், வடகம் எல்லாம் கொண்டு வருவார்கள்.

 என் அக்கா திருமணத்தில் ஆரம்பித்து என் கடைசித் தங்கை கல்யாணம் வரை வந்து வாழ்த்திய அன்பு உள்ளத்தை கொண்டவர். எங்கள் ஊர்ப்பக்கம் நான்கு முகம் விளக்கு(பெரிய வெண்கலக் குத்து விளக்கு ) திருமணத்திற்குக் கொடுப்பார்கள். அதை அம்மா, அவர்களைத் தான் வாங்கி வரச் சொல்வார்கள். அவர்கள் வாங்கி வந்த விளக்கை ஏற்றி நாங்கள் எல்லோரும் நலமாய் இருக்கிறோம். என் மகளுக்கும் அவர்கள் தான் வாங்கி வந்தார்கள். என் மகள் பிறந்த போது ஆஸ்பத்திரியில் வந்து உதவிக்கு இருந்தார்கள்.” ஜப்பசி முழுக்கு விழா” விற்கு வந்து இருந்தவர்களை பக்கத்தில் இருக்கும் கோவில் எல்லாம் அழைத்து போனேன். மகிழந்து வாழ்த்தினார்கள். என் மகன் திருமணத்தின் போது உடல் நலம் சரியில்லாமல் போனதால் வரவில்லை.

 தூத்துக்குடியில் சைவசித்தாந்த சபையில் என் கணவரைப் பேச அழைத்து இருந்தார்கள். அப்போது போனோம் அவர்கள் வீட்டுக்கு என் மருமகளின் கணவர் பேசுகிறார் என்று எல்லோரிடமும் பெருமையாய் பேசி உடல்நிலை சரியில்லாத போதும் பேச்சை கேட்டு என் கணவரை வாழ்த்தி சென்றார்கள்.

 இந்த முறை ஊருக்கு போனபோது அத்தையின் நினைவாய் அவர்களைப் பார்க்க குழந்தையின் குதுகலத்துடன் மலரும் நினைவுகளுடன் அத்தையின் வீட்டுக்குச் சென்றேன். என்றும் அடைக்காத கதவு அத்தையின் வீடு கதவு அடைத்து இருந்த்தே மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. 

"பக்கத்தில் கேள் என்றார்கள்"என் கணவர். அத்தைஇல்லையா எங்கு போய் இருக்கிறார்கள் என்று கேட்டேன். ”அவர்கள் இல்லை இறந்து போய் மூன்று மாதம் ஆகிவிட்டது” என்றார்கள். கேட்ட எனக்கு அதிர்ச்சி. மாமா எங்கு இருக்கிறார்கள் என்றோம் பெண் வீட்டுக்கு போய் இருக்கிறார்கள் என்றார்கள். செல்வம் எங்கே என்றேன் (மூத்தமகன்) மாடியில் இருக்கிறார்கள் என்றார்கள் மேலே போனால் அத்தை பெரிய படத்தில் நம்மை வரவேற்கிறார்கள் சிரித்தமுகமாய். ”என்ன செல்வம்? அத்தை இறந்ததை தெரிவிக்க வில்லை” என்று கேட்டதற்கு” அதிர்ச்சியில் சொல்ல மறந்து விட்டது” என்றார். ” தம்பி தங்கை என்று யாருக்காவது சொன்னால் அவர்கள் என்னிடம் சொல்லி இருப்பார்களே” என்றேன். எவ்வளவு ஆவலாய் வழி எங்கிலும் அவர்கள் பேச்சு தான் பேசி வந்தேன் இப்படி ஆகி விட்டதே என்று வருத்தப்பட்டு வந்தேன். 

படி இறங்கும் போது செல்வம், ”கோமக்கா! வத்தல்(கூழ்வடகம்) கொண்டு போங்கள்” என்று தன் மனைவியை எடுத்து வரச்சொல்லியபோது அந்த அன்பில் அத்தையின் முகம் தெரிந்தது.அத்தையின் அன்பு வளர்ப்பை காட்டியது. நட்பு என்பது இன்ப துன்பத்தில் பங்கு கொள்வது. எப்போதும் எங்கள் இன்ப துன்பத்தில் பங்கு கொண்ட என் அத்தையை மறக்க முடியாது. என்றும் என் நினைவில் வாழ்வார் சந்தன அத்தை.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

52 கருத்துகள்:

 1. நட்பின் நினைவுகள் நினைத்துப் பார்க்கையில் சுகம் தான்...

  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. மனதிலிருந்து நீங்கா நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நினைவுகள் நித்தியமானவை. பின்னால் நினைத்துப் பார்ப்பதற்கே நிகழ்பவை அலாதியானவை. ஆனால் அப்படி நினைத்துப் பார்ப்போம் என்று நிகழ்கையில் தெரியாது. அது தான் அதன் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. இனிமையான நினைவுகள்.. உங்க அத்தை என்னிக்கும் உங்க நினைவுகளில் வாழ்ந்துக்கிட்டுதான் இருப்பாங்க..

  பதிலளிநீக்கு
 6. வாங்க செளந்தர், உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வாங்க கலாநேசன், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வாங்க ஜீவி சார், நீங்கள் சொன்ன மாதிரி நினைவுகள் நித்தியமானது தான்.

  பதிலளிநீக்கு
 9. நண்பர்கள் தின வாழ்த்துக்கு நன்றி ஜீவி சார்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க அமைதிச்சாரல்,
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க கோபிநாத், ஆபில்யன் திருமணத்திற்கு வந்தவர்கள் வீட்டுக்கு வந்து இருக்கலாம்.

  நான் வரவேற்புக்கு தான் வந்தேன் உங்களை பார்க்க முடியவில்லை.

  உங்கள் கருத்துக்கு நன்றி கோபிநாத்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம், கோமதியம்மா. எப்படி இருக்கீங்க? நண்பர்கள் தின வாழ்த்தன்னிக்கு ஒரு சிறப்பு வாழ்துக்கள்! :)

  பதிலளிநீக்கு
 13. வாங்க தெகா, வணக்கம்.

  நலமாய் இருக்கிறேன்.

  நீங்கள் , உங்கள் மனைவி, குழந்தைகள் நலமா?

  உங்கள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. நண்பர்கள் தினத்திற்குப் பொருத்தமாய் ஒரு பகிர்வு. நட்பினைப் பற்றி நினைத்துப் பார்ப்பதிலே இருக்கும் சுகம் அலாதியானது.

  உங்களுக்கும் வாழ்த்துகள் அம்மா..

  பதிலளிநீக்கு
 15. வாங்க வெங்கட், ஊருக்கு போய் வந்ததிலிருந்து அத்தை நினைவாய் இருந்தேன் .

  அவர்களைப்பற்றி பகிர்ந்து கொள்ள இதைவிட சிறந்த சமயம் இல்லை என்று எழுதிவிட்டேன்.

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 16. இன்றைய தினத்துக்கு சந்தன ஆச்சியின் நினைவுகளின் பதிவு மிகப்பொருத்தமானது கோமதிம்மா.. எங்களுக்காக அழகாக நினைவுகளை இங்கே பதிஞ்சதுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. ஆம் முத்துலட்சுமி, இன்று உங்களுடன் சந்தன அத்தையை பற்றி பகிர்ந்து கொண்டது மனதுக்கு இதம் அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. நண்பர்கள் தினத்தில், உங்களைவிட பெரியவரான அத்தையை பாசத்துடன் நினைவுகூறுவதிலிருந்தே அவருடனான நெருக்கம் புரிகிறது. அவர் வாழ்வின் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் மனதை என்னவோ பண்ணுது.

  பதிலளிநீக்கு
 19. வாங்க ஹீஸைனம்மா, ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கு கிடைத்த நட்பு என்ற் உறவுகள் மிகவும் அற்புதமானவர்கள். நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள்.

  அதில் முதலில் சந்தன அத்தையை எழுதி இருக்கிறேன்.

  இன்னும் பேபி அக்கா (இவர்களும் வித்தியசமான தாய்) அவர்களைபற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

  நன்றி ஹீஸைனம்மா.

  பதிலளிநீக்கு
 20. நெகிழ்வான பகிர்வு. அத்தையின் அன்பு மகள் மூலமாகத் தொடர்வது அறிந்து மகிழ்ச்சி.

  //கூடைக்கார அம்மா தன்கூடையில் வைத்து அவளைத்தூக்கிக் கொண்டு சென்றதை பார்த்துப் பிடித்து விட்டோம்//

  சும்மா குழந்தைகளை மிரட்ட இப்படியெல்லாம் சொல்லுவார்கள் அந்தக் காலத்தில். நிஜமாகவே நடந்திருப்பது கேட்டுத் திகைப்பாய் உள்ளது.

  பதிலளிநீக்கு
 21. வாங்க ராமலக்ஷ்மி, அந்த காலத்தில் உள்ளவர்கள் நடந்ததை தான் அறிவுரையாக சொல்லி இருக்கிறார்கள்.

  வெளியில் போகதே ஒற்றை கண்ணன் பிடித்துக் கொள்வான் என்றெல்லாம் சொல்வார்கள்.

  பழைய படத்தில் எல்லாம் பிள்ளை பிடிக்கிறவன் பற்றி தான் கதை இருக்கும்.

  இப்போதும் அது தொடர்கதை ஆவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

  நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 22. தங்களின் இந்தப்பதிவு மிக அருமையாக மனதிற்கு மிகவும் ஹிதம் அளிப்பதாக உள்ளது.

  இதுபோல இன்றும், சுயநலம் பாராது, பிறர்மீது பாசத்தைப்பொழியும் உயர்ந்த உள்ளம் கொண்ட சில அபூர்வ மனிதர்கள் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

  அவர்களின் இழப்பு நம்மை துடிதுடிக்க வைத்துவிடும் என்பது உண்மையே.

  நல்லதொரு பதிவை பகிர்ந்து கொண்டதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

  [என் நகைச்சுவை சிறுகதையான பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா? முதல் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பின்னூட்டம் அளித்ததற்கு என் நன்றிகள். அடுத்த நிறைவுப்பகுதி இன்று வெளியிட்டுள்ளேன்.
  http://gopu1949.blogspot.com/2011/08/2-of-2.html தங்கள் தகவலுக்காக மட்டுமே]

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 23. வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. பாசமும்,நேசமும் மிளிர்ந்து நெகிழச்செய்தது பகிர்வு

  பதிலளிநீக்கு
 25. சந்தன அத்தையின் நினைவுகள் மனதைத் தொடுகிறது அம்மா.

  நல்ல பகிர்வு. தொடருங்கள். இந்த மாதிரி நல்ல உள்ளங்களைப் பற்றி.

  பதிலளிநீக்கு
 26. வாங்க ஸாதிகா, நீங்கள் திருமதி பக்கத்திற்கு வந்து பார்க்கிறேன் புது பதிவு இல்லையா எனறு கேட்டவுடன் எழுதி விட்டேன் இரண்டு பதிவு. நேற்று ஒன்று போட்டு இருக்கிறேன்.

  உங்கள் வரவுக்கு நன்றி ஸாதிகா.

  பதிலளிநீக்கு
 27. வாங்க ஸாதிகா, நீங்கள் திருமதி பக்கத்திற்கு வந்து பார்க்கிறேன் புது பதிவு இல்லையா எனறு கேட்டவுடன் எழுதி விட்டேன் இரண்டு பதிவு. நேற்று ஒன்று போட்டு இருக்கிறேன்.

  உங்கள் வரவுக்கு நன்றி ஸாதிகா.

  பதிலளிநீக்கு
 28. வாங்க ஆதி, நீங்கள் சொன்ன மாதிரி நேற்று இன்னொரு நல்ல உள்ளத்தின் நாட் குறிப்பை பதிவு செய்து இருக்கிறேன் பாருங்கள்.

  உங்கள் ஆதரவுக்கு நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
 29. வாங்க ஆதி, நீங்கள் சொன்ன மாதிரி நேற்று இன்னொரு நல்ல உள்ளத்தின் நாட் குறிப்பை பதிவு செய்து இருக்கிறேன் பாருங்கள்.

  உங்கள் ஆதரவுக்கு நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
 30. உங்கள் சந்தன அத்தை எங்கள் மனங்களிலும் இடம்பிடித்துவிட்டார்.

  பதிலளிநீக்கு
 31. வாங்க வாங்க மாதேவி, எங்கே ஊருக்கு போய் விட்டீர்களா?

  மகள் நலமா?

  சந்தன அத்தை மனது அப்படி. அன்பான உள்ளங்களில் இடம் பிடித்து விடுவார்.

  பதிலளிநீக்கு
 32. மீள்பதிவா?  கமெண்ட்ஸ் கூட எல்லாமே பதினோரு வருடங்களுக்கு முன்னதாக வந்தவை போல.  நான் இப்போதுதான்  வாசிக்கிறேன்.  என் கமெண்ட்டை காணோமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   நான் பழைய பதிவை படித்து கொண்டு இருந்தேன்.
   தவறுதலாக பதிவாகி விட்டது.
   நீங்கள் பின்னூட்டம் கொடுக்கவில்லை.
   இலங்கை பதிவிலிருந்துதான் வர ஆரம்பித்தீர்கள்.

   நீக்கு
 33. பழைய நண்பர்கள் பெயர்கள் எல்லாம் பார்க்கும்போது பதிவுலகின் அந்நாட்கள் நினைவுக்கு வருகின்றன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், பதிவுலகின் அந்நாட்கள் நட்புகள் நினைவுகள் வந்தது.
   அத்தையின் நினைவு இன்று வந்தது அதனால் எடுத்து படித்தேன் பதிவை அது பதிவாகி விட்டது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 34. அருமை அம்மா... அடியேன் வலைப்பூ வந்த ஆண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   நீங்கள் வலைத்தளம் ஆரம்பித்த வருடமா?
   வாழ்த்துக்கள்.
   வாழ்க வளமுடன்

   நீக்கு
 35. சிறப்பான நினைவலைகள் ஆம் நட்புகளை மறப்பது கடினமான விடயம்தான்.

  தலைப்பை பார்த்தவுடன் நண்பர்தள் தினம் ஆகஸ்ட் ஏழாம் தேதிதானே வரும் என்று இணையத்தில் தேடினேன்.

  பிறகுதான் தெரிந்தது மீள் பதிவு என்று....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   ஒவ்வொரு ஊரிலிருந்து மாற்றி வரும் போது நாங்கள் குழந்தைகள் எளிதாக மறந்து விடுவோம் புது நட்பு கிடைத்து விடும்.
   ஆனால் அம்மாவுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

   எனக்கும் மாயவரம் நட்புகளை பிரிந்து வந்தது வருத்தம் உண்டு.

   கைதவறி வந்த பதிவு. வண்டியூர் தெப்பக்குள பதிவு போட்டு ஒரு நாளில் அடுத்த பதிவு போட யோசிக்கவே இல்லை.

   அத்தையின் நினைவு வந்து பதிவை படித்து கொண்டு இருந்தேன். மீள்பதிவாக வந்து விட்டது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 36. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. நீங்கள் நட்பாக உங்கள் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த சந்தன அத்தையைப்பற்றி கூறியது மனதை நெகிழ வைத்தது. நல்ல அம்மா.. இப்படி சில பேர் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களை நாம் நம் வாழ்வில் காண்பதற்கும் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இதை விட வேறு என்ன சொல்ல? இறுதியில் பதிவு மனதை கலங்க வைத்தது.

  தங்கள் தங்கையை ஏமாற்றி ஒரு பெண் கூடையில் வைத்துச் சென்றது மனதை கலங்க அடிக்கும் விஷயம். தங்கள் பதிவை பார்த்ததும், நிஜமாகவே குழந்தைகள் திருட்டை நேரில் பார்த்த மாதிரி மனதுக்குள் ஒரு கலக்கம் உண்டாயிற்று. அந்த நேரத்தில் உங்கனைவருக்கும் எப்படி இருந்திருக்கும் என என்னால் உணர முடிந்தது. நல்லவேளை இறைவன் அருளால் தங்கள் தங்கை தங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அந்த தங்கைக்கு த்தான் தற்சமயம் மணிவிழா நடந்து தாங்கள் சென்று வந்தீர்களா ? அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  மீள் பதிவாக தங்கள் அனுபவங்களையும், நட்பின் பெருமையையும் நன்கு உணர முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //நல்ல அம்மா.. இப்படி சில பேர் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களை நாம் நம் வாழ்வில் காண்பதற்கும் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்//

   ஆமாம். சரியாக சொன்னீர்கள். தனக்காக வாழவே இல்லை. எப்போதும் பிறர் நலமே அவர்களுக்கு மனதில்.
   உழைக்க அலுத்துக் கொள்ளவே மாட்டார்கள்.

   //தங்கள் தங்கையை ஏமாற்றி ஒரு பெண் கூடையில் வைத்துச் சென்றது மனதை கலங்க அடிக்கும் விஷயம். தங்கள் பதிவை பார்த்ததும், நிஜமாகவே குழந்தைகள் திருட்டை நேரில் பார்த்த மாதிரி மனதுக்குள் ஒரு கலக்கம் உண்டாயிற்று//

   ஆமாம், பழைய சினிமாக்களில் குழந்தையை இப்படி கூடையில் வைத்து எடுத்து போவதை பார்த்து இருப்போம். எங்கள் வீட்டில் உண்மையாக நடந்தது.

   வாசலில் அமர்ந்து பொம்மையை வைத்து விளையாடி கொண்டு இருந்த குழந்தை இரண்டு அல்லது மூன்று வயது இருக்கும் அவளுக்கு.


   /அந்த தங்கைக்கு த்தான் தற்சமயம் மணிவிழா நடந்து தாங்கள் சென்று வந்தீர்களா ? அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

   இல்லை அவள் கடைசி தங்கை. இவள் இரண்டாவது தங்கை.உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.


   நீக்கு
  2. தூய நட்பு. நெகிழ்வான பகிர்வு. எழுத்து நடையும் முடித்த விதமும் ஒரு சிறுகதையை வாசித்த உணர்வை வழங்கியது.

   நீக்கு
  3. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   ஆமாம், அத்தையின் நட்பு தூய நட்புதான்.

   //எழுத்து நடையும் முடித்த விதமும் ஒரு சிறுகதையை வாசித்த உணர்வை வழங்கியது.//

   என் மனதில் உள்ளதை அப்படியே எழுதினேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 37. நெகிழ்ச்சியான பதிவு..

  நேற்றைக்கே படித்து விட்டேன்..

  அனைவரும் நன்றாக இருப்பதற்கு பிரார்த்தித்துக் கொள்கிறேன்..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.

   நீக்கு
 38. முன்னரும் வாசித்துக் கருத்தளித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், ராமலக்ஷ்மி நீங்கள் முன்னரும் கருந்து பகிர்ந்து இருக்கிறீர்கள்.
   நன்றி.

   நீக்கு
 39. நல் உள்ளம் உள்ள சந்தன அத்தை எல்லோர் மனங்களிலும் நிலைத்து விட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   பழைய பின்னூட்டம் பார்த்தீர்களா?
   அதிலும் அத்தை எல்லோர் மனங்களிலும் நிலைத்து விட்டார் என்று போட்டு இருந்தீர்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

   நீக்கு
 40. மீள் பதிவா? முன்னர் போட்டது தெரியாது. என்றாலும் இம்மாதிரி உறவுகள் எங்களுக்கும் அதிகம் இருந்தது ஒரு காலத்தில்! இப்போ இங்கே அப்படி எல்லாம் யாரும் பேசிப் பழகுவதில்லை. நாம் நாள், கிழமை என வெற்ரிலை பாக்குடன் ஏதேனும் கொடுத்தாலே முகம் மாறி விடுகிறது. :( சென்னை/அம்பத்தூரில் இருந்தவரை இதெல்லாம் தெரியலை. அக்கம்பக்கம் கொடுத்து வாங்கவே நிறையப் பண்ணணும். இங்கே வந்த பின்னர் கை, மனம் எல்லாமும் சுருங்கி விட்டது! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   ஆமாம், மீள்பதிவுதான்.
   பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல பார்க்கிறேன்.
   பேசவே யோசிக்கும் காலத்தில் இருக்கிறோம் போல! என்று நினைத்து கொண்டு பழைய நட்புகளை நினைத்து கொண்டு இருக்கிறேன்.

   யாருக்கும் பேச நாழி இல்லை. வேலைகள் அவர்களுக்கு நிறைய இருக்கிறது. பிள்ளைகளை கொண்டு விடுவது கூட்டி வருவது. ஆபிஸ் வேலை என்றும் இருக்கீரார்கள்.
   பெரியவர்கள் பேத்தி பேரனை வீட்டை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். காலம் மாறி விட்டது.

   //நாம் நாள், கிழமை என வெற்ரிலை பாக்குடன் ஏதேனும் கொடுத்தாலே முகம் மாறி விடுகிறது. :( சென்னை/அம்பத்தூரில் இருந்தவரை இதெல்லாம் தெரியலை. அக்கம்பக்கம் கொடுத்து வாங்கவே நிறையப் பண்ணணும். இங்கே வந்த பின்னர் கை, மனம் எல்லாமும் சுருங்கி விட்டது! :(//
   வேறு வழி நாமும் அப்படி பழக வேண்டியதாக இருக்கிறோம்.
   நாள் கிழமை என்றால் அக்கம் பக்கம் எல்லோரும் கூடி அன்பாய் இருந்த காலங்கள் பொற்காலம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு