திங்கள், 22 நவம்பர், 2021

போவோமா ஊர்கோலம் !




Lenora Park மகள் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது இந்த பூங்கா. சனிக்கிழமை குளிருக்கு இதமாக  காலை வெயிலில் கொஞ்சம் நடந்து வருவோம் என்று அழைத்து சென்றாள்.

குளிருக்கு  வேண்டிய ஆடைகள் அணிந்து சென்றேன்.முககவசம் அணிந்து குளிரில் நடக்கும் போது வெப்பம் கொடுக்கிறது. குளிர் காற்று இருந்தாலும்  இந்த அழகான ஏரியும் அதன் கரையோரம் இந்த வாத்துக்களைப் பார்த்தவுடன் குளிர் போய் விட்டது. அவைகள் கொடுத்த ஆனந்தம் எல்லையற்றது.

அட்லாண்டாவில் எங்கு பார்த்தாலும் ஏரிகளும், பூங்காவும் நிறைய இருக்கிறது.  நேரம் ஒதுக்கி  இவைகளுக்கு போனால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

பக்கத்தில் போய் படம் எடுக்க போன போது அவசர அவசரமாக நீரில் இறங்கி விட்டது.



மிக அழகாய் நீரில் இறங்கும் காட்சியை இந்த காணொளியில் பார்க்கலாம்.  காணொளி youtube 
வரிசையாக அவை நீந்தி போவதைபார்க்க அழகு

இந்த ஏரிக்கு மூன்று முறை போனோம், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காட்சிகள் ரம்மியமாக கிடைத்தது. முடிந்த போது இங்கு பகிர்கிறேன்.


வரிசையாக வாங்க

இந்த மரத்தில் இரண்டு சிட்டுக்கள் சத்தம் கொடுத்து கொண்டு இருந்தது. முதல் காணொளியில் இதன் சத்தம் கேட்கும். சிட்டுகளை எடுக்கலாம் படம் என்று காமிராவை  திருப்பிய போது ஒரு சிட்டு பறந்து விட்டது, ஒன்று மரக்கிளையில் இருக்கிறது. இலைகலரில் கொஞ்சம் பெரிதான இலை போல் இருக்கும் பாருங்கள்.
 

மகளை "நீ நடந்து விட்டு வா", நான் இவைகளை பார்த்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி விட்டு பார்த்து கொண்டு, காணொளி, படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தேன்.

மகள் தூரத்திலிருந்து நான் படம் எடுப்பதை அவள் அலைபேசியில் எடுத்த படம்.  கறுப்பு உருவம் தெரிகிறது அல்லவா ! அது நான் தான்.


அவைகளும் நீ நடக்க வேண்டும், நாங்களும் கரை ஏற போகிறோம் என்று சொல்லி விட்டு கரையேறி விட்டது.

இந்த காணொளியில் கரை ஏறும் காட்சி இருக்கிறது பாருங்கள். சின்ன சின்ன காணொளிதான் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள்.

காணொளியை இங்கும் பார்க்கலாம். youtube  ஆக்கி இருக்கிறேன் முதன் முதலில்.

ஏரியில் முன்பு போய் இருந்த போது வெள்ளை வாத்து  மற்றும் மூன்று பிரவுன், கறுப்பு கலந்த  வாத்துக்களின் நீர்(நீந்தி) நடைபயிற்சியை  எடுத்தேன், அவை ஒன்றன் பின் ஒன்றாக அழகாய் போனது. அப்போது மரங்களின் பசுமையும் நீரில் பிரதிபலித்து அழகாய் இருந்தது. அதையும் ஒரு நாள் பதிவு செய்கிறேன். முகநூலில் போட்டு இருந்தேன் முன்பு.

இலைகள் உதிர்ந்தாலும் அழகாய் காட்சி அளிக்கும் மரம்.



இந்த அழகான மரத்தின் இலைகள் நிறம் மாறியது போன முறை பார்த்த போது,  இப்போது இலைகளை உதிர்த்து நிற்கிறது. அதன் இலைகள் மரத்தின் கீழே இருக்கிறது.
இந்த மரத்தை பார்க்கும் போது பாடல் நினைவுக்கு வருகிறது.

 வருந்தாதே மனமே -நீயே
வருந்தாதே மனமே
ஒரு போதும் அவனன்றி ஒர் அணுவும் அசையாதே
வருந்தாதே மனமே

இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப்பார்
இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார்  நிலையை எண்ணிப்பார்
 
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே
வருந்தாதே மனமே - நீயே 
வருந்தாதே மனமே

இன்பம் துன்பம் யாவும் ஈசன் செயலே ஆகுமே
இகழ்ந்த வாயே புகழ்ந்து பேச காலம் மாறுமே
காலம் மாறுமே

ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே
வருந்தாதே மனமே - நீயே
வருந்தாதே மனமே

முன்பு ஒரு பதிவாக இந்த பாடலை போட்டு இருந்தேன் அதை தேடி பார்த்தால் கிடைக்க வில்லை.அதனால் சுட்டி கொடுத்து இருக்கிறேன் கேட்டு பாருங்கள். நன்றாக இருக்கும்.


பூங்காவின் பாதைகளில் ஒவ்வொரு முறையும் ஒருப்பக்கம் போய் இந்த ஏரியின் அழகை ரசித்தோம்.

நிறமாறிய மரங்கள்.

பூங்காவை  நடுவில் இருப்பது கழிவரை வசதி. 

காலையில் சைக்கிள் பந்தயம் வேறு நடக்கப் போகிறது. ஒரு குழுவினர்  .


பச்சை புற்கள் மேல் எல்லாம் உதிர்ந்த இலைகள் தான் இருக்கிறது. முன்பு பார்த்த பசுமை இப்போது இல்லை புற்களில். குளிர்காலம் முடியும் வரை செடிகள், மரங்கள் தோற்றத்தை மாற்றி கொண்டே இருக்கும். அந்த அந்த பருவங்களில் உள்ள இயற்கை அழகை  ரசித்து கொள்ள வேண்டும். இயற்கையை ஆராதிப்பதும் ஒரு வழிபாடுதானே!.


வாழ்க வையகம் வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

---------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. அழகிய பசுமை காட்சிகள் அழகு சகோ.
    இயற்கையோடு ஒன்றி வாழ்வதுதான் மனிதனுக்கு நல்லது அதை ஏனோ மறந்து கொண்டு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //இயற்கையோடு ஒன்றி வாழ்வதுதான் மனிதனுக்கு நல்லது அதை ஏனோ மறந்து கொண்டு இருக்கிறோம்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை. இயற்கையோடு ஒன்றி விட்டால் நல்லது நமக்கு.
      இயற்கையை ஆராதிப்பதும் ஒரு வழிபாடுதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. சகோ தேவகோட்டை ஜி முதன் முதலில் இன்று youtube காணொளி செய்து இருக்கிறேன் அதன் சுட்டி கொடுத்து இருக்கிறேன். முடிந்த போது பாருங்கள்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. ஏரியின் அழகும், அதில் நீந்திச் செல்லும் வாத்துகளின் அழகும், சுற்றிலும் உள்ள இயற்கை அழகும் மனதை ரம்யமாக்குகிறது. வாத்துகள் வரிசையாக தண்ணீரில் நீந்தும் போதும், அவை அனைத்தும் ஒரே முடிவாக போதுமென கரையேறும் போதும் என்னவொரு மன ஒற்றுமை.. படங்களை ரசித்தேன். நீங்கள் சொன்னபடி அந்த மரத்தில் இலைகளோடு ஒரு பெரிய இலையாக அந்த சிட்டும் அமர்ந்திருக்கிறது. அதையும் கண்டு ரசித்தேன். படங்கள் அனைத்தையும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள்.உங்கள் மகள் எடுத்த படமும் அழகாக உள்ளது. அவர்களுக்கும் என் பாராட்டுக்களை சொல்லுங்கள்.

    எல்லா காணொளிகளும் மிக அழகாக உள்ளன. நீங்கள் முதலில் யூடியூப் சேனல் ஆரம்பித்திருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வாத்துகள் கரையேறுவதை அதிலும் சென்று பார்த்தேன்.என் கைப்பேசியிலிருந்து அதில் கருத்திடுவதற்கு இப்போது இயலவில்லை. அதற்கு ஒரு வசதியை பிறகு ஏற்பாடு செய்து தருகிறேன் என மகள் கூறியுள்ளார்.

    மரங்கள் நிறம் மாறும் படங்களும், இலைகளை உதிர்த்து விட்டு அழகாக குச்சி, குச்சியாக நிமிர்ந்து நிற்கும் மரங்களும் கண்களுக்கு விருந்து. அந்த "மனம் வருந்தாதே" தத்துவ பாடலும் நன்றாக உள்ளது. நடப்பதும் அனைத்தும் ஈசன் செயல்தான். ஆனால் என்னவோ நம் மனித மனம் சமயங்களில் வருந்திக் கொண்டேதான் உள்ளது.

    அந்தப் பூங்காவிற்குள்ளேயே சைக்கிள் பந்தயமா ? கடைசியில் நீங்கள் பகிர்ந்துள்ள மரத்தின் படம் மிகவும் அழகாக உள்ளது. எல்லா பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //பதிவு அருமையாக உள்ளது. ஏரியின் அழகும், அதில் நீந்திச் செல்லும் வாத்துகளின் அழகும், சுற்றிலும் உள்ள இயற்கை அழகும் மனதை ரம்யமாக்குகிறது.//

      ஆமாம் , மனதுக்கு இதம் தரும் காட்சிகள்.

      //படங்கள் அனைத்தையும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள்.உங்கள் மகள் எடுத்த படமும் அழகாக உள்ளது. அவர்களுக்கும் என் பாராட்டுக்களை சொல்லுங்கள்.//

      நன்றி. மகளிடம் உங்கள் பாராட்டுக்களை சொல்லி விட்டேன்.

      //எல்லா காணொளிகளும் மிக அழகாக உள்ளன. நீங்கள் முதலில் யூடியூப் சேனல் ஆரம்பித்திருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.//

      நன்றி கமலா.


      //நடப்பதும் அனைத்தும் ஈசன் செயல்தான். ஆனால் என்னவோ நம் மனித மனம் சமயங்களில் வருந்திக் கொண்டேதான் உள்ளது.//

      ஆமாம், எனக்கு நானே ஆறுதல் சொல்லி கொள்வதற்கு கேட்கும் பாடல், இலைகளை உதிர்ந்து இருப்பதையும், நாள்தோறும் இலைகள் உதிர்வதை பார்க்கிறேன், சில மரங்கள் துளிர்ப்பதை பார்க்கிறேன். அதனால் இந்த பாடல் பொருத்தமாக இருக்கும் என்று போட்டேன். பனி கொட்டுவது போல இலைகள் உதிர்கிறது தினம்.

      அந்த பூங்காவில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடக்குமாம் அடிக்கடி. அன்று சைக்கிள் போட்டி.
      அதற்கு என்று தனியாக இடம் இருக்கிறது, கார் நிறுத்தும் இடத்தில் அவர்கள் படம் எடுத்து கொண்டு இருந்தார்கள், அவர்களை எடுத்தேன். மகள் அவர்களுக்கு படம் எடுத்து கொடுத்தாள்.

      கடைசி மரம் சூரிய பின்னனியில் மிகவும் அழகாய் காட்சி அளித்தது , நான் பார்த்தளவு வரவில்லை இருந்தாலும் எனக்கும் பிடித்தது இந்த படம்.

      நீங்கள் எப்போதும் போல படங்களை, செய்திகளை பார்த்து , படித்து விரிவான பின்னூட்டம் கொடுத்தற்கு நன்றி, நன்றி.









      நீக்கு
  3. அழகிய படங்கள், காணொளிகள்.  இஅயற்கை அழகு எப்போதுமே மனதுக்கு இதமானது.  இலை உதிர்த்த மரம் மறுபடி இலைகளால் நிறையும்போது மனமும் நிறைந்துபோகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அழகிய படங்கள், காணொளிகள். //
      நன்றி.

      //இயற்கை அழகு எப்போதுமே மனதுக்கு இதமானது. இலை உதிர்த்த மரம் மறுபடி இலைகளால் நிறையும்போது மனமும் நிறைந்துபோகும்.//

      ஆமாம், இயற்கை அழகு எப்போதும் மனதுக்கு இதமானதுதான், அதுவும் மனம் சோர்ந்து போகும் சமயங்களில் இதம் அளிப்பது உண்மை.

      இலைகளை அதன் வசதிக்கு உதிர்க்கிறது,பிறகு மீண்டும் துளிர்த்து கொள்கிறது இயற்கையின் படைப்பை பார்க்கும் போது மனம் நிறைந்து போவது உண்மை.

      நீக்கு
  4. சிட்டுக்குருவி முத்தம் தருது, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்று இரு பாடல்கள் நினைவுக்கு வந்தன. நம் காதுக்குள் கேட்கும் அளவா சத்தம் வரும்?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி சத்தத்தை முதல் காணொளியில் கேட்டு இருக்குமே!
      ணம் காதுகளில் குருவிகளின் சத்தம் கேட்டு கொண்டே இருக்கும் அதிகாலை முதல், அவை கூடு செல்லும் வரை.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. காணொளி அருமை அம்மா...

    பொருத்தமான பாடல்...

    மனதை ஆறுதல் படுத்தும் வரிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      காணொளிகளை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      பாடல் மனதை ஆறுதல் படுத்தும் வரிகள்தான் தனபாலன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. பகிர்வு அருமை. வாத்துக்கள் நீந்தும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். காணொளிகள் நன்று, குறிப்பாகக் கரையேறும் காட்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //வாத்துக்கள் நீந்தும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். காணொளிகள் நன்று, குறிப்பாகக் கரையேறும் காட்சி.//

      ஆமாம், வாத்துக்கள் நீந்தும் அழகு பார்த்து கொண்டே இருக்கலாம் தான்.
      கரையேறுவது உங்களுக்கு பிடித்து இருப்பது போல எனக்கும் பிடித்து இருந்தது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. இயற்கையோடு ஒன்றி வாழ்வதை விட்டு விலகிக் கொண்டே இருக்கிறோம் என்பது எனது இப்போதைய பயணத்தின் போது தெரிந்தது. ஆனாலும் இன்னும் கன்னியாகுமரியும் எங்கள் ஊர்ப்பகுதியும் பசுமை பசுமை பசுமை என்றும் நீர்நிலைகள் சூழ்ந்தும் அத்தனை அழகாக இருக்கின்றன.

    அதுபோலவே //அட்லாண்டாவில் எங்கு பார்த்தாலும் ஏரிகளும், பூங்காவும் நிறைய இருக்கிறது. நேரம் ஒதுக்கி இவைகளுக்கு போனால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.// நீங்களும் சொல்லியிருக்கீங்க

    படங்கல் செம அழகு....நானும் நிறைய வாத்துகள் கொக்குகள் மீன் கொத்திகள் நிறைய நிறைய இருக்கு....எடுக்க நினைத்தும் என் கேமராவில் கொஞ்சம் தூரம் என்றாலும் அத்தனை தெளிவாக வராது கோமதிக்கா. ஜூம் செய்தால் ரொம்ப மோசமாக வரும் என்பதால் பல பறவைகளை எடுக்க முடியவில்லை. வித விதமாகப் பார்க்கிறேன். கிட்ட போனால் ஓடி விடுகின்றன...

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      இயற்கையோடு வாழ்வது குறைந்து வருவது உண்மைதான்.
      உங்கள் ஊர் அப்படி இல்லை பசுமை கண்ணை நிறைக்கிறது.
      நீர் நிலைகள் பார்க்க அழகுதான்.


      அட்லாண்டா மக்கள் மரங்களை தங்கள் சுற்றமாக நினைக்கிறார்கள். மரங்கள் சூழ்ந்து இருக்க நடுவில் வீடு அமைத்து கொள்கிறார்கள்.
      அடுத்தவிட்டு மரம் தன் வீட்டை குப்பை செய்வதாக சண்டையிடும் மனோபாவம் நிறைத்து இருக்கிறார்கள் சிலர். எங்கள் வீட்டு முருங்ககை மரம், தென்னை மரம் அடுத்த வீட்டு இடைஞ்சல் என்று எங்களை வெட்ட வைத்தார்கள்.

      ஒவ்வொரு முறையும் சொல்வீர்கள் நீங்கள் சமயம் கிடைக்கும் போது எடுத்த படங்களை போடுங்கள்.

      நீக்கு
  8. சிட்டு தெரிகிறது கோமதிக்கா. வாத்துகள் என்ன அழகு!!! செமையா இருக்கு. பார்க்கவே மகிழ்வாக இருக்கிறது.

    நானும் கடம்போடுவாழ்வு குளத்தில் இப்படி நீந்தியவற்றை எடுத்திருக்கிறேன். கொஞ்சம் ஜூம் செய்து எடுக்க வேண்டுமாக இருந்தது. ஏனென்றால் குளம் மழையால் நிரம்பி நிறைய தூரம் வந்திருந்தது. வாத்துகளோ குளத்தின் நடுவில்!!! என்றாலும் எடுத்திருக்கிறேன். அப்பகுதிவரும் போது பகிர்கிறேன்,.

    எனக்கும் அப்படித்தான் மீன் கொத்தி மிகச் சிறியது அது சுவற்றில் அல்லது மின் கம்பியில் அமர்ந்திருக்கும். அதுவும் நிறைய....சரி எடுக்க முடிகிறதா பார்ப்போம் என்று ஃபோக்கஸ் செய்யும் போது எலலம் பறந்துவிடும். இல்லை என்றால் லைட்டிங்க் கம்மியாக இருக்கும் ஜூம் செய்தாலும் கறுப்பாக வந்ததே அல்லாமல் அது மீன் கொத்தி என்று சொல்ல முடியாத படமாக இருந்தது. எனவே அழித்துவிட்டேன்...

    படங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டு தெரிகிறது கோமதிக்கா. வாத்துகள் என்ன அழகு!!! செமையா இருக்கு. பார்க்கவே மகிழ்வாக இருக்கிறது//

      நன்றி.

      நானும் கடம்போடுவாழ்வு குளத்தில் இப்படி நீந்தியவற்றை எடுத்திருக்கிறேன். கொஞ்சம் ஜூம் செய்து எடுக்க வேண்டுமாக இருந்தது. //

      எடுத்த வற்றை போடுங்கள்.(நன்றாகஇருப்பதை)
      வெளிச்சம் குறைவாக இருந்தால் வெளிச்சம் செய்து போடுங்கள், அதற்கு ஏன் அழித்து விட்டீர்கள்?

      படங்கள் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  9. படம் எடுப்பது நீங்கள் என்று தெரிகிறது கோமதிக்கா!!! (பின்ன எங்கக்காவைத் தவிர அங்கு வேறு யாரு எடுக்கப் போறாங்க!!!! ஹாஹாஹா)

    பூங்காவும் என்ன அழகு! அந்தப் பாதைகள் படங்கள் எல்லாமும் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு.

    எல்லாம் கரை ஏறி கொஞ்சம் வெயில் குளியல் எடுக்கப் போகிறது போலும்!!!!!

    ஒவ்வொன்றாகக் கரை ஏறுவது அழகுக் காட்சி!!!!!

    இலைகள் உதிர்ந்தாலும் அழகு மரங்கள். எனக்கும் கூட இப்படியான மரங்களும் ரொம்பப் பிடிக்கும்.

    நிறம் மாறியவையும். கடைசிப் படம் அந்த ஆழ்ந்த ஆரஞ்சு வண்ண இலைகள் மரமும் செம செம அழகு!!!!

    அத்தனையும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படம் எடுப்பது நீங்கள் என்று தெரிகிறது கோமதிக்கா!!! (பின்ன எங்கக்காவைத் தவிர அங்கு வேறு யாரு எடுக்கப் போறாங்க!!!! ஹாஹாஹா)//
      அதானே! உங்க அக்காதான் இதை எல்லாம் ஆச்சிரியமாக எடுப்பாள்.


      //பூங்காவும் என்ன அழகு! அந்தப் பாதைகள் படங்கள் எல்லாமும் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு.//

      இலையுதிர் காலம் முன் இன்னும் அழகாய் இருக்கும் பாதைகள்.

      //எல்லாம் கரை ஏறி கொஞ்சம் வெயில் குளியல் எடுக்கப் போகிறது போலும்!!!!!//

      முதலில் வெயிலில் நின்றது நான் பக்கத்தில் போனதால் நீரில் இறங்கியது.
      அப்புறம் நீண்ட தூரம் நீந்தி சென்று எதிர்பக்கம் கரையேறியது.

      ஒவ்வொன்றாகக் கரை ஏறுவது அழகுக் காட்சி!!!!!//

      ஆமாம், ஒவ்வொன்றாக கரை ஏறியது பார்க்க அழகாய் இருந்தது கீதா.

      //இலைகள் உதிர்ந்தாலும் அழகு மரங்கள். எனக்கும் கூட இப்படியான மரங்களும் ரொம்பப் பிடிக்கும்.//

      ஆமாம். அவற்றிலும் பறவைகள் வந்து அமர்ந்து இருப்பது பார்க்க இன்னும் அழகாய் இருக்கும்.

      //நிறம் மாறியவையும். கடைசிப் படம் அந்த ஆழ்ந்த ஆரஞ்சு வண்ண இலைகள் மரமும் செம செம அழகு!!!!//

      ஆரஞ்சு வண்ணம் தான் அந்த இலைகளும் உதிரும் இலைகள் உதிர்ந்து ஒன்று இரண்டு இலைகள் மட்டும் காற்றில் ஆடி கொண்டு இருப்பதைப்பார்க்கும் போது மனதை ஏதோ செய்யும்.

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.







      நீக்கு
  10. // இயற்கையை ஆராதிப்பதும் வழிபாடு தானே!..//

    அழகான கவிதையாய் படங்கள்..
    இனிய பதிவு..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //அழகான கவிதையாய் படங்கள்..
      இனிய பதிவு..//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. ஆஹா, என்ன அழகு! இரண்டு காணொளிகளையும் பார்த்தேன். யூ ட்யூபில் போய்ப் பார்க்கவில்லை. எங்கே சென்றாலும் அங்கே இயற்கையைச் சிறைப் பிடித்து வருகிறீர்கள். இயற்கையும், பறவைகளும் கூட உங்களுக்கு ஒத்துழைக்கின்றன. வாத்துக் கூட்டங்களை ஹூஸ்டனிலும் பார்க்கலாம். அங்கேயும் நிறைய ஏரிகள், பூங்காக்கள் உண்டு. பையர் வீட்டுக்கு அருகேயே ஒரு பெரிய ஏரியும் அதை ஒட்டிய பெரிய பூங்காவும் உண்டு. பூங்காவைச் சுற்றி வர வேண்டுமெனில் ஒரு சுற்றுக்கு அரை மணி ஆகிறது. முன்னெல்லாம் போனோம். இப்போது இரண்டூ முறையாகப் போவதில்லை. குஞ்சுலு தினம் இங்கே வந்தூ வாத்துகளுக்கு உணவு அளிக்கும். அப்பா/அம்மா யாருடனாவது வரும். இல்லைனா அன்னிக்கு அது சாப்பிட மாட்டேன் என்று சொல்லும். அடுத்த மாதம் இந்தியா வரப்போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      காணொளிகள் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.

      //வாத்துக் கூட்டங்களை ஹூஸ்டனிலும் பார்க்கலாம். அங்கேயும் நிறைய ஏரிகள், பூங்காக்கள் உண்டு.//

      ஓ சரி. இந்த பூங்காவும் மிக பெரியது, ஒவ்வொரு முறை ஒவ்வொரு பக்கமாக நடந்து வரலாம்.

      இங்கு யாரும் உணவு அளிப்பது போல் தெரியவில்லை.
      சில பிறந்த நாள் விழாக்கள் பூங்காவில் நடந்து கொண்டு இருந்தது , வாத்துக்கள் புல்வெளியில் ஏதோ தேடி கொத்தி சாப்பிட்டு கொண்டு இருந்தது.
      என்னப்பார்த்தவுடன் தான் நீரில் இறங்கியது.
      துர்கா வரபோவது அறிந்து மகிழ்ச்சி.இனி உங்கள் உடல் நிலை விரைவில் சரியாகி விடும். பேத்தியின் வரவு பாட்டியை சுறு சுறுப்பாய் ஆக்கி விடும்.

      நீக்கு
  13. தூரத்தில் இருந்து எடுத்ததாலும் குளிருக்கான உடைகள் அணிந்திருப்பதாலும் அது நீங்கள் தான் என்பது தெரியவில்லை. உங்கள் பெண்ணும் உங்களைப் போல் மிக அழகான படங்கள் எடுப்பதில் வல்லவர் எனத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் பெண்ணும் உங்களைப் போல் மிக அழகான படங்கள் எடுப்பதில் வல்லவர் எனத் தெரிகிறது.//

      மகன், மகள் எல்லாம் மிக அழகாய் எடுப்பார்கள். நான் அந்த அளவு எடுப்பது இல்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. மிக அழகான புகைப்படங்கள்! நீரும் மரங்களும் வாத்துக்களும் பார்க்கப்பார்க்க மனதுக்கு இதத்தைத் தருகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சுவாமிநாதன், வாழ்க வளமுடன்

      //நீரும் மரங்களும் வாத்துக்களும் பார்க்கப்பார்க்க மனதுக்கு இதத்தைத் தருகின்றன!//

      ஆமாம், இந்த மாதிரி காட்சிகளை பார்த்து கொண்டே இருக்கலாம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  15. மிகவும் அழகான இடம் படங்களும் நன்று. காட்சிகள் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      மிகவும் அழகான இடம்தான்.
      ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  16. வணக்கம். அந்த பறவைகளின் பெயர் Canada goose.
    என்னுடைய வலைப்பூவில் பறவைகள் பற்றி எழுதி வருகிறேன். நன்றி.

    https://ivansatheesh.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சதீஸ் முத்து கோபால. வாழ்க வளமுடன்
      உங்கள் தகவலுக்கு நன்றி.

      நீக்கு
    2. //இந்த பூமி மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பது இயற்கைக்கு தெரியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.//

      உங்கள் பதிவுகள் பார்த்தேன் லைக் செய்தேன்.

      அருமையான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

      நீக்கு