ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

சிறு தேர் உருட்டல்


சிறு தேர்  உருட்டல்

ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு  சிறுதேரை உருட்டி கொண்டு போய்  விளையாடியவர்களுக்கு  நினைவுகள்  வரலாம்.

இன்று ஆடிப் பெருக்கு!  வருடா வருடம் மக்கள் எல்லோரும் கோலாகலமாகக் கொண்டாடும் பண்டிகை. இந்த முறை மக்களிடம் உற்சாகமாய்க் கொண்டாட முடியாத சூழல்.

ஆடிப் பெருக்கு அன்று குழந்தைகள் சிறு தேர் செய்து ஆற்றுக்கு எடுத்துச் சென்று விளையாடி மகிழ்வார்கள். மாயவரத்தில் இருந்த போது பார்த்த காட்சிகள். 


ஆடம்பரம் இல்லாமல் எளிமையான  சிறு தேர் சக்கரங்கள் நன்றாக உருளுது

தான் செய்த தேரின் அழகை கண்டு ரசித்து கொண்டே இழுத்து செல்லும் சிறுவன்

கொஞ்சம் வளர்ந்த சிறுவர்களின் பெரிய  தேர் தயார் ஆகிறது. குழந்தைகளின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிதான் எவ்வளவு! தங்கள் சேமிப்புக் காசில் வண்ணக் காகிதங்கள் வாங்கிச் செய்யும் போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி சொல்லி முடியாதுதான்.

வீடுகளில் மாக்கோலம் போட்டு,  புத்தாடை கட்டி அதிகாலை  ஆற்றுக்குப் போய் உற்சாகமாய் இருக்கும்- மாயவரத்தில் . உறவினர் வந்தால் கலவை சாதங்கள் செய்து கொண்டு கடற்கரை போய் வருவோம்.

அருவி, கடல், ஆறு, குளம் என்று  நீர்நிலைகளில் நடக்கும் ஆடிப் பெருக்கு கொண்டாட்டத்தை நிறைய பதிவுகள் போட்டு இருக்கிறேன்.


 ஆறு குளங்களில் மண் எடுத்துப்  பிள்ளையார் பிடித்துக் காவிரி அம்மனாகப் பாவித்து வணங்குவார்கள். வீட்டில் மஞ்சள் பிள்ளையார்.

 வீட்டில் காலையில் பானகம் , வைத்து வணங்கி விட்டேன் காவிரி அம்மனை.  மதியம் ஏதாவது கலவை சாதம் செய்து வணங்க வேண்டும்.

மகனிடம் மாயவரம் ஆடிப்பெருக்கு நினைவுகளைப் பேசி கொண்டு இருந்தேன் .அக்கம்  பக்கம் வீட்டாருடன் ஆற்றுக்குப் போய் வணங்கி வரும் நினைவுகளைப் பகிர்ந்து  கொண்டோம்.  அவன் மாயவரம்  நண்பர்கள் வாட்சப்  குழு அனுப்பிய படத்தை அனுப்பினான் 
மாயவரத்தில் துலாக் கட்டத்தில்  இப்போது  தண்ணீர் இருக்கிறது. ஆனால் ஆடிப்பெருக்கு கும்பிடத் தடை. இந்த மரத்தைச் சுற்றி மஞ்சள் நூல் கட்டி வழிபடுவார்கள்.
படித்துறை முழுவதும் பெண்கள் காவிரி ஆற்றில் மண் எடுத்துப் பிள்ளையார் பிடித்து வைத்து, காதோலை, காப்பரிசி, மாவிளக்கு, பழங்கள், புதுப் புடவை ரவிக்கைத் துணி எல்லாம் வைத்து வழிபடுவார்கள். இப்போது எல்லோரும் வீடுகளில் வணங்கி இருப்பார்கள்.

மாயவரத்தில் பேரிக்காய், கொய்யாப்பழம், சீதாப்பழம், மாம்பழம் எல்லாம்  வீட்டு வாசலுக்கே விற்பனைக்கு  வந்துவிடும். இறைவன் கொடுத்த வளங்களை இறைவனுக்குப் படைத்து, "இந்த வளங்கள் என்றும் எப்போதும் இருக்க வேண்டும்.  நீர்வளம், நிலவளம் எல்லாம் செழிப்பாக இருக்க வேண்டும்.
நாடும், வீடும் நலம் பெற வேண்டும். தாயே!'' என வேண்டுவார்கள். 

இப்போது உலகம் முழுவதும் நன்றாக இருக்கவேண்டும் என வேண்டுதல் சேர்ந்து இருக்கிறது. அன்னையிடம் அதை வேண்டிக் கொண்டேன்.

கொரோனாவால் எங்கும் துன்பம். பொருளாதார வீழ்ச்சி,
பஞ்சபூதங்களின் சீற்றம்.  என்று மக்கள் அவதிப்படுகிறார்கள். அனைத்தும் சரியாகி இயல்பு வாழ்க்கை அனைவரும் வாழ அருள்புரிய வேண்டிக் கொள்வோம்.

//மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெற காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடினர்.//

நன்றி - தினமலர்

மகனின் நண்பர் அதிகாலையில் படம் எடுத்து அனுப்பி இருக்கிறார் மக்கள் கூட்டம் இல்லை. நேரம் கழித்து வந்து இருப்பார்கள் போலும் .

வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன். !


====================================================

46 கருத்துகள்:

  1. வறண்டு கிடக்கும் காவிரி படத்துடன் ஒரு பதிவு வெளியாகி இருந்ததே...

    நான் அப்போதே சொல்ல வேண்டும் என்று இருந்தேன்...

    இந்த வருடம் காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது..

    மயிலாடுதுறைக்கு வராமல் இருக்க வாய்ப்பே இல்லை...

    வரும் நீரை வரவேற்க - குடி மராமத்து எனும் பணி முன்பெல்லாம் அந்தந்த ஊர் மக்களின் கைகளில் இருந்தது...

    கோடை காலத்தில் தஞ்சை மக்களின் தலையாய வேலை இதுவாகத்தான் இருந்தது... வெள்ளம் மிகுத்து வரும் காலத்திலும் வீட்டுக்கு ஒரு ஆள் என்று இப்படித்தான்... இதற்கு மதுரை உதாரணம்...

    கிராமங்களில் கூட மக்கட்பணியை மறந்து விட்டால் என்ன செய்வது?..

    அவரவர் வீட்டைத் துப்புரவாக வைத்துக் கொள்வதற்குக் கூட அரசிடம் ஆள் கேட்கக் கூடிய காலம் இனிமேல் வரலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.

      //வறண்டு கிடக்கும் காவிரி படத்துடன் ஒரு பதிவு வெளியாகி இருந்ததே...//

      பழைய பதிவுகளை பார்த்துக் கொண்டு இருக்கும் போது எப்படியோ அந்த பதிவு வெளியாகி இருக்கிறது.

      இபோது நல்ல மழை பெய்து தண்ணீரும் திறந்து விட பட்டதால் மயிலாதுறைக்கு தண்ணீர் வந்து இருக்கிறது ஆனால் துலா கட்டத்தில் ஆடி கொண்டாட அனுமதி இல்லை என்று என் மகனின் நண்பர்கள் சொன்னார்கள்.

      //வீட்டுக்கு ஒரு ஆள் என்று இப்படித்தான்... இதற்கு மதுரை உதாரணம்...//

      வீட்டுக்கு ஒரு ஆள் வந்து சுத்தம் செய்வது இருக்கட்டும் அந்த காலம் போல், வீட்டு குப்பைகளை, கழிவுகளை ஆற்றில் கலக்காமல் இருக்கலாம்.

      //அவரவர் வீட்டைத் துப்புரவாக வைத்துக் கொள்வதற்குக் கூட அரசிடம் ஆள் கேட்கக் கூடிய காலம் இனிமேல் வரலாம்..//

      வீட்டு வாசல் குப்பையை முறத்தில் அள்ளி குப்பை கூடையில் போட்டு வைக்க மாட்டேன் என்கிறார்கள். கூட்டுபவர்கள் வந்து கூட்ட வேண்டும் என்று ஒதுக்கி வைக்கிறார்கள்.



      நீக்கு
  2. நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
    பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்...

    அனைவருக்கும் ஆடித் திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
      பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்...//

      ஆமாம், அதுதான் இப்போது மிக அவசியம்.
      உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  3. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் சகோதரி. எல்லோரும் நலமுடன் வாழ பிரார்த்தனைகள்
    துளசிதரன்

    பதிலளிநீக்கு

  4. கரந்தை ஜெயக்குமார் commented on "நடந்தாய் வாழி காவேரி"

    4 hours ago
    காவிரியில் தண்ணீர் இருக்கிறதே ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. திருச்சியில் இருந்தபொது ஒரு முறை அம்மாமண்டபதுக்கு ஆடிப்பெருக்கன்று குதிரை வண்டியில் அம்மாமண்டபத்துக்கு குதிரை வண்டியில் போனது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
      உங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  6. தேர் உருட்டல் காட்சிகள் அருமை.
    கொரோனா கொடுமையிலிருந்து மக்களை காக்க இறையருள் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      தேர் உருட்டல் காட்சிகளை கண்டு ரசித்தமைக்கு நன்றி.

      //கொரோனா கொடுமையிலிருந்து மக்களை காக்க இறையருள் கிடைக்கட்டும்.//

      ஆமாம், இறையருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  7. தடைகளைக் கடந்து மக்களும் மயிலாடுதுறை காவிரிப் படித்துறையில் புனித நீராடி வழிபாடுகளைச் செய்ததாக தினமலர் இணைய இதழில் செய்தி வந்துள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நானும் தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன் மாலைதான்.
      கீதா சாம்பசிவம் அவர்களும் தவறாக வெளியான ஆடிப்பெருக்கு பதிவின் பின்னூட்டத்தில் நீயூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சானலில். மாயவரம் காவிரியில் மக்கள் கூட்டம். என்று சொன்னாரகள்.

      தினமலரைப் பார்க்கிறேன் மகனின் நண்பர் அதிகாலையில் போய் பார்த்து படம் எடுத்து இருப்பார் போலும்.

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
    2. தினமலர் செய்தியை இணைத்து விட்டேன்.

      நீக்கு
  8. சிறு தேர் உருட்டல் அழகு...

    அனைத்தும் சரியாக வேண்டும் என்றே வேண்டுதல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      சிறு தேர் உருட்டல் அழகுதான்.

      //அனைத்தும் சரியாக வேண்டும் என்றே வேண்டுதல்...//

      அனைத்தும் சரியாக வேண்டும் என்பதே எல்லோர் வேண்டுதலும் இறைவன் அருள வேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. சிறு தேர் உருட்டல் குறித்து நேற்றுத் தான் என் கணவர் என்னோடு பேசிக் கொண்டிருந்தார். வீட்டிலேயே பட்டறை இருந்ததால் ஆசாரி ஒரு வாரம் முன்னரே தேர் செய்து கொடுத்துவிடுவார் என்றும் அதற்கு அலங்காரங்களை அவர் அம்மா இரவு விழித்திருந்து செய்து கொடுப்பார் என்றும் சொன்னார். லீவுக்கு மாமா வீட்டிற்கு வரும் அத்தை பெண்ணோடு காவிரிக்கரையில் (அங்கே அரிசிலாறு) விளையாடிய நாட்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். மற்றத் தங்கைகள், தம்பிகளோடு அவர் சேர்ந்து இருந்ததில்லை . வயதும் வித்தியாசம். படிப்புக்கென வெளியூரும் போய்விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      சார் சிறு தேர் உருட்டி விளையாடி இருக்கிறார்களா?
      நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
      அரிசிலாறு பொன்னியின் செல்வன் கதையில் வரும்.
      விடுமுறைக்கு வரும் மாமா பெண்ணோடு விளையாடிய நாட்கள் பசுமையாக இருக்குமே!

      உங்கள் கணவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி
      நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்.

    ஆடிப்பெருக்கு படங்கள் நன்றாக உள்ளன. சிறு தேர் உருட்டல் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அந்தப் படங்களும் அழகாக உள்ளது. காவிரி நதிக்கரையில் நீராடி பூஜைகள் செய்வதை அறிந்துள்ளேன்.எல்லா நதிதீரங்களிலும் இன்று சிறப்பான பூஜைகள் செய்து கலவன் சாதங்கள் அம்மனுக்கு படைத்து தாங்களும் உண்டு மகிழ்வோடு இந்தப் பெருக்கை கொண்டாடுவார்கள்.

    /மாயவரத்தில் பேரிக்காய், கொய்யாப்பழம், சீதாப்பழம், மாம்பழம் எல்லாம் வீட்டு வாசலுக்கே விற்பனைக்கு வந்துவிடும். இறைவன் கொடுத்த வளங்களை இறைவனுக்குப் படைத்து, "இந்த வளங்கள் என்றும் எப்போதும் இருக்க வேண்டும். நீர்வளம், நிலவளம் எல்லாம் செழிப்பாக இருக்க வேண்டும்.
    நாடும், வீடும் நலம் பெற வேண்டும். தாயே!'' என வேண்டுவார்கள். /

    சிறப்பான வேண்டுதல். இந்த வருடம் தொற்றினால் சற்று அனைத்துமே முடக்கந்தான். என்ன செய்வது?

    தங்கள் ஊரிலும் இன்று நல்லபடியாக கொண்டாடியிருப்பதாக தினமலர் செய்தி மூலம் தாங்கள் சொல்லியிருப்பது மகிழ்வான விஷயம்.

    தங்கள் வீட்டு பூஜையறை அலங்காரம் நன்றாக உள்ளது. நானும் மனதாற வழிபட்டு வேண்டிக் கொண்டேன். எங்களுக்கு இந்த வருடம் பண்டிகைகள் உண்டெனபதால் எனக்கு கொஞ்சம் நேரம் சரியாக இருக்கிறது. அதுவும் தொடர்ச்சியாக வரும் விரதங்கள் பூஜைகள் என நேரம் பறக்கிறது. இன்று கலவன் சாதங்கள் செய்து அம்மனை வழிபட்டோம். நாளை ஆவணி அவிட்டம், மறுநாள் காயத்ரி ஜபம் என விஷேடங்கள் வருகிறது. குழந்தைகளுடன் வேறு நேரம் பறக்கிறது. அதனால் பதிவுகளுக்கு வரத் தாமதமாகிறது. பொறுத்துக் கொள்ளவும்.

    இந்த தடவை என் பதிவுக்கு வந்தவர்களுக்கு பொதுவாக ஒரு கருத்துரை இட்டேன். நேரம் இல்லாததால் தனியாக இட இயலவில்லை. ஆனால் எப்படியும் இட்டு விடுவேன்.அதையும் அனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, வாழ்க வளமுடன்

      ஆடிப்பெருக்கு வாழ்த்துக்களுக்கு நன்றி.

      எங்கள் வீடுகளிலும் வடை, பாயாசம், கலவை சாதங்கள் செய்து வழி படுவோம்.
      மாயவரத்தில் பல வருடங்கள் இருந்து விட்டதால் அது சொந்த ஊர் மாதிரி ஆகி விட்டது. அங்கு உள்ள மக்களின் பழக்க வழக்கங்களை சிலவற்றை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டேன். நீங்கள் தங்கள் ஊர் என்று சொன்னது மகிழ்ச்சி.
      எங்கள் ஊர் பாளையம்கோட்டை. சொந்தஊர் என்றால் திருநெல்வேலிதான் அவ்வளவுதான் அதனுடன் உறவு. அடிக்கடி மாயவரம் பற்றி பேசி மாயவரம் சொந்தஊர் ஆகி விட்டது.

      //நாளை ஆவணி அவிட்டம், மறுநாள் காயத்ரி ஜபம் என விஷேடங்கள் வருகிறது.//

      இத்தனை வேலைகளுக்கு இடையில் நட்புக்கு நேரம் ஒதுக்கி பதிவுக்கு கருத்து போடுவது பெரிய விஷயம்.
      பின்னூட்டங்களுக்கு பதில் நேரம் கிடைக்கும் போது போடுங்கள் யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள் உங்களை.


      உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி கமலா.

      நீக்கு
  11. இனிமையான நினைவுகள்.  எங்கள் குடும்பக் குழுமத்தில் கூட சிறு தேர் உருட்டிய நினைவுகள் பெரிஐவர்களால் பகிரப்பட்டிருந்தன.  எனக்கு அந்த அனுபவம் எல்லாம் இல்லை.  கலந்த சாதம் மட்டுமே அனுபவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      இனிமையான நினைவுகள் தான் ஸ்ரீராம்.
      உங்கள் குடும்ப பெரியவர்கள் சிறு தேர் உருட்டிய நினைவுகளை பகிர்ந்து கொண்டது அவர்களுக்கு மகிழ்ச்சி.

      கலந்த சாதம் அனுபவம் அதுவும் ""அம்மாவின் கை பக்குவம்" என்றும் நினைவுகளில் இருக்கும்.

      நீக்கு
  12. மாயவரம் ஊர்ப்படம் மிக அழகு.  ஊருக்கு நடுவே நீர் நிலை.  அனைவரும் எங்கோ கிளம்பித் தேடிச்செல்ல வேண்டாம்.  மிக அழகாய் இருக்கிறது அந்தப் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மாயவரத்தில்தான் நல்ல வீடு வாங்கிக்கொண்டு போகணும் என்று ரொம்ப வருஷமாச் சொல்லிக்கிட்டிருக்கேன். (1-1 1/2 கி.மி தூரத்தில் நல்ல மருத்துவமனை இருக்கணும்). மாயவரத்தில் இருந்தால் ஏகப்பட்ட கோவில்கள் தரிசனம் கிடைக்கும் என்பது காரணம்.

      ஆசை இருக்கு தாசில் பண்ண. அதிருஷ்டம் இருக்கு....

      நீக்கு
    2. வணக்கம் நெல்லைத்தமிழன் , வாழ்க வளமுடன்
      நீங்கள் சொன்னது போல் தான் குழந்தைகளுக்கு மருத்துவமனை வசதிக்கு என்று திருவெண்காட்டிலிருந்து மாயவரம் வந்தோம். நிறைய நல்ல மருத்துவமனைகள் மாயவரத்தில் வந்து விட்டது.இருந்தாலும் மாயவரம் மக்கள் தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் என்று போவார்கள்.

      அங்கு இருந்தால் கோவில்கள் போய் கொண்டே இருப்போம் மதுரை வந்த பிறகு அவ்வளவாக கோவில் போக முடியவில்லை.

      இந்த ஊரில் இவ்வளவு நாள் என்று இறைவன் வகுத்து இருக்கிறான். நாம் என்ன ஆசை பட்டாலும் அவன் நினைப்பதுதான் நடக்கும் என்று தெரிகிறது.

      நீக்கு
  13. இந்த சப்பரத்திற்காக சண்டை போட்டுக்கொள்வதும், போட்டி போட்டுக்கொண்டு யார் முதலில் செல்வது என்பது, எந்த படத்தை ஒட்டுகிறார்கள் என்பதும், ஓட்டும்போது குறுக்கே வந்து பிறிதொருவர் சப்பரத்தைவிட்டு விளையாடுவதும், கும்பகோணத்தில் நாங்கள் இருந்த சம்பிரதி வைத்தியநாதன் தெருவிலிருந்து காவிரியாற்றுக்குப் போவதற்குள்......அப்பப்பா...நினைத்தாலே இனிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      நீங்கள் சப்பரம் செய்து ஆற்றுக்கு ஓட்டிச் செல்வீர்களா!
      மகிழ்ச்சி. சிறு வயது நினைவுகள் இனிமையானதுதான்.
      பொன்னியின் செல்வன் கதையில் ஆடிப்பெருக்கு விழா காட்சியை வந்திய தேவன் பார்ப்பது போல் இருக்கும், அதில் இந்த சிறு தேரை குழந்தைகள் இழுத்து வரும் காட்சி இருக்கும்.

      உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .

      நீக்கு
  14. கோமதிக்கா அப்போ அந்தப் பதிவு வேறா? அதில் தண்ணீர் இல்லை என்று இருந்தது. இன்றைய படத்தில் தண்ணீர் இருக்கிறதே....தவறுதலாகப் படம் இணைந்துவிட்டதா?

    அக்கா இன்று தண்ணீர் பார்க்கும் போது ஆஹா என்று இருக்கு இப்போது தொற்று என்பதால் யாரையும் அனுமதிக்க வில்லை இல்லையா?

    அக்கா எங்க ஊர்ல நாங்க சப்பரம் இழுத்தல் னு இழுப்போம். நாங்களே செய்து. கொச்சங்காய்ன்னு சொல்லுவோமே தென்னை மரத்திலிருந்து விழும் திறு குரும்பை அதைச் சக்கரமாக வைத்து தென்னை ஈர்க்குச்சி செருகி அதில் அட்டை எல்லாம் வைத்து, சின்ன சாக்பீஸை சிவலிங்கம் போல் அலங்கரித்து நடுவில் வைத்து, கோதுமை அல்லது மைதா மாவில் பிள்ளையார் செய்து வைத்து என்று சப்பரத்தை அலங்காரம் செய்து இழுத்த நினைவுகள். இதற்காகவே டூத் பேஸ்ட் மூடிகள், சின்ன இஞ்செக்ஷன் பாட்டில்கள், ரப்பர் மூடிகள் தீப்பெட்டிகள் என்று பலதும் சேகரித்து வைத்து செய்வோம்.

    நிறைய நினைவுகள் கோமதிக்கா.

    ஆனால் நாங்கள் எங்கள் ஊர்த்திருவிழாவின் போதும் செய்வதுண்டு தேர் திருநாள் முன்னர்.

    வருஷம் முழுவதும் அந்தந்தன பண்டிக்கைக்கு ஏற்றாற் போல் இறைவன் மாறுவார். இதற்காகவே சாமி படங்களும் சேர்ப்பதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. இப்படி விளையாடியதில்லை சகோதரி.

    ஆனால் ஊரில் பையன்கள் செய்வார்கள் நான் சும்மா வேடிக்கை பார்த்ததுண்டு.

    படங்கள் அழகாக இருக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. ஆடிப் பெருக்கு நினைவுகளை பகிர்ந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி.

    மாலையில் ஆற்றங்கரையில் அல்லது ஆறு இல்லாத இடங்களில் குளக்கரையில் கலவை சாதங்களோடு அனைவரும் கூடி உண்பது என்பது சமூக உறவைப் பேணும் வழக்கம்.

    பேரிக்காய் - பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டன. பெரும்பாலும் வெளிநாட்டு வகைகள்தாம் அவ்வப்போது கிடைக்கின்றன.

    தேர் இழுப்பது. நாங்க சிறுவர்களாக இருந்தபோது எங்களில் கோவில் சம்பந்தப்பட்ட வேலை பார்ப்பவன், தன் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்து தேரில் உள்ள கடவுளுக்கு நிவேதனம் செய்வோம் (பசங்க செய்யும் நிவேதனம்தான்).

    கிராம வாழ்க்கையில் பார்த்து அனுபவித்து ரசித்தவைகளை படங்களாகப் பார்ப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடிப்பெருக்கு நினைவுகள் நிறைய இருக்கிறது நெல்லைத்தமிழன்,

      சிறு வயது முதல் இப்போது வரைக்கும்.

      //மாலையில் ஆற்றங்கரையில் அல்லது ஆறு இல்லாத இடங்களில் குளக்கரையில் கலவை சாதங்களோடு அனைவரும் கூடி உண்பது என்பது சமூக உறவைப் பேணும்
      வழக்கம்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒவ்வொரு கிருத்திகைக்கும் போவோம் பிரகாரத்தில் உடகார்ந்து கட்டி கொண்டு வந்த உணவை முருகனை வணங்கி விட்டு சாப்பிடும் மக்கள் நாம் தாண்டி போகும் போது சாப்பிட வாங்க என்று கூப்பிடுவார்கள்.(நமக்கு பழக்கம் இல்லாதவர்கள்) அளவாய் அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் கொண்டு வர மாட்டார்கள். அடுத்தவர்களுக்கும் கொடுக்க என்றே கொண்டு வருவார்கள்.


      பேரிக்காய் கிடைக்க மாட்டேன் என்கிறது கிடைத்தாலும் உள்ளே நன்றாக இல்லை.


      //நாங்க சிறுவர்களாக இருந்தபோது எங்களில் கோவில் சம்பந்தப்பட்ட வேலை பார்ப்பவன், தன் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்து தேரில் உள்ள கடவுளுக்கு நிவேதனம் செய்வோம் (பசங்க செய்யும் நிவேதனம்தான்).//

      இவை எல்லாம் இனிமையான நினைவுகள் என் மகன் அப்படி செய்து விளையாடி இருக்கிறான் பிள்ளையார் சதுர்த்திக்கு அக்கம் பக்கத்து குழந்தைகளுடன்.

      பழைய பதிவுகளைப் பார்த்தீர்களா? அதில் நிறைய காட்சிகள் ரசிப்பதற்கு இருக்கும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. நலமா கோமதி அக்கா .
    அழகான காட்சிகள் காணக்கிடைக்காது அக்கா இது போன்ற காட்சிகள் .வெளிநாட்டில் பேட்டரி போட்ட எத்தனையோ குட்டி வாகனங்கள் விலை கொடுத்து வாங்கினாலும் இது போல் மனதுக்கு திருப்தி அளிக்காது .அந்த குழந்தைங்க முகத்தில் இருக்கும் ஆனந்தத்திற்கு ஈடில்லை . என் தோழியின் அண்ணன் ஒரு குட்டி தேர் 5 பைசா நாணயங்களில் செய்தார் அவள் பெருமையுடன் ஸ்கூலுக்கு கொண்டுவந்து காட்டினா .எதுவும் நமது சொந்த படைப்பில் உருவாகும்போது மகிழ்ச்சிதான் .
    நாங்களும் தினமும் நோய் நொடியற்ற நிம்மதியான நாட்களை விரைவில் காண நல்ல சூழல் அமைய பிரார்த்திக்கிறோம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      நீங்கள் நலமா? நாங்கள் நலம். வேலைகள் எப்படி இருக்கிறது?
      பெண்ணுக்கு கல்லூரி இணையத்தில் வகுப்பு நடக்கிறதா?
      பேரனுக்கு நாளை முதல் பள்ளி ஆன்லைனில்.

      அவர்களே செய்யும் போது கிடைக்கும் ஆனந்தம் சொல்லி முடியாது ஏஞ்சல்.
      என் அக்காவும், அம்மாவும், ஐந்து பைசா, ஊசி மருந்து பாட்டிலில் எல்லாம் தேர் செய்தார்கள். ஊர் ஊராக மாற்றல் ஆனதில் கண்ணாடி பாட்டில் தேர் உடைந்து விட்டது.

      நமது சொந்த படைப்பு என்றால் ஆனந்தம் தான்.


      //நாங்களும் தினமும் நோய் நொடியற்ற நிம்மதியான நாட்களை விரைவில் காண நல்ல சூழல் அமைய பிரார்த்திக்கிறோம் .//

      பிரார்த்தனை செய்வது மகிழ்ச்சி. தினம் இரவு படுக்க போகும் முன் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை கீதம் பாடுவீர்கள் அல்லவா? அந்த நாளை நல்லபடியாக நடத்தி சென்ற ஆண்டவனுக்கு நன்றிச்சொல்லி தானே படுப்பீர்கள்!

      ஊலக நன்மைக்காக இயல்பு வாழ்க்கை வாழ பிரார்த்திபோம். இறைவன் அருள்வார் என்று நம்புவோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.
      அம்மு, அதிரா எல்லாம் நன்றாக இருக்கிறார்களா? அதிரா பேசினார்களா?
      பேசினால் கேட்டதாகச் சொல்லுங்கள்.

      நீக்கு
  18. சிறு வயது நினைவுகள் மனதில் வலம் வருகின்றன
    சிறு தேரை சப்பரம் என்றும் சொல்லுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      சிறு வயது நினைவுகள் மனதில் வந்தது மகிழ்ச்சி.

      சப்பரத்திற்கு சக்கரம் கிடையாது அல்லவா?
      தேருக்குதானே சப்பரம் உண்டு இல்லையா
      ஓலைச்சசப்பரத்திற்கும் தெருவடைச்சான் என்று வருவதற்கு சக்கரம் உண்டு .

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. சிறு தேர் ஓட்டல் பற்றி மத்யமரில் பூவராகமூர்த்தி அவர்கள்(ஒய்.ஜி.பி. நாடகக் குழுவைச் சேர்ந்தவர்) எழுதியிருந்தார்கள். எனக்கு அப்படி எதுவும் நினைவில் இல்லை, ஆனால்  முன்பெல்லாம் ஸ்ரீரெங்கத்தில் சிறுவர்கள் ஸ்ரீஜெயந்திக்கு இப்படி சப்பரம் செய்வார்கள். சிறு வயதில் ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக பதினெட்டம் பெருக்கிற்கு காவிரிக்குச் செல்வோம். வயதாக வயதாக அந்த ஆசைகள் குறைந்து விட்டன. இந்த வருடம் காவிரியில் தண்ணீர் இருந்ததும், மக்கள் காவேரிக்குச் செல்ல தடை. பார்க்கலாம் அடுத்த வருடமாவது நிலைமை சீரடைகிறதா என்று. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்க்டேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //ஸ்ரீரெங்கத்தில் சிறுவர்கள் ஸ்ரீஜெயந்திக்கு இப்படி சப்பரம் செய்வார்கள்.//

      ஸ்ரீ ஜெயந்திக்கும் சப்பரம் செய்வார்களா?
      ஆற்றுக்கு சிறு வயதில் சென்றது இல்லை நான், மாயவரம் வந்த பின் தான் ஆற்றுக்கு போகும் பழக்கம் .தொலைக்காட்சியில் காட்டினார்கள் அம்மா மண்டபத்தை, யாருமே இல்லை வெறிச்சோடி இருந்தது. அடுத்தவருடம் நிலைமை சீராகி விடும் நம்புவோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி பானு.

      நீக்கு
  20. அன்பு கோமதி மா.
    பதிவும் பின்னூட்டங்களும் அருமை.
    மயிலையில் கபாலீஸ்வர உத்சவத்தில் தேர்கள் விறபனைக்கு வரும்.
    நாங்கள் இருந்த ஊர்களிலும்
    ஆறுகள் இருந்தால் அப்பா செய்து கொடுத்த தேர்களை உருட்டி
    ஆற்றிர்கோ,குளத்திற்கோ சென்றிருக்கிறோம்.
    நீங்கள் பதிவிட்டிருக்கும் படங்கள் மிக இனிமை.
    மாயவரம் செல்ல முடியாததின் ஏக்கம் உங்கள்
    பதிவுகளில் கண்டிருக்கிறேன்.
    நானும் நீங்களும் நினைவு ஒரு புறமும் நிஜம் ஒரு புறமுமாக

    கடந்து கொண்டிருக்கிறோம்.
    மகன் அனுப்பிய படங்கள் அருமை.

    நீங்கள் சொல்வது போல நதியை அழுக்கு ஆக்காமல் இருந்தால்
    போதும்.
    காவிரி வாழ்க. காவிரி வணங்கும் கடவுள்கள் நிலைத்திருந்து நம்மைக் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

      //மயிலையில் கபாலீஸ்வர உத்சவத்தில் தேர்கள் விறபனைக்கு வரும்.//

      இது போல சிறு தேர்கள் விற்பனைக்கு வருமா? செய்ய முடியாதவர்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கலாம்.

      //ஆறுகள் இருந்தால் அப்பா செய்து கொடுத்த தேர்களை உருட்டி
      ஆற்றிர்கோ,குளத்திற்கோ சென்றிருக்கிறோம்.//

      நீங்கள் உருட்டி சென்று இருக்கிறீர்களா தம்பிகளுடன் இனிமையான நினைவுகள் இல்லையா!


      ஒரு கல்யாணம் மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர் வீட்டுக் கல்யாணம் சீர்காழியில் நடப்பதாக இருந்தது இந்த கொரனோவால் தள்ளி வைத்து விட்டார்கள். அப்படியாவது மாயவர்ம் போய் வரலாம் நட்புகளை பார்க்கலாம் என்று இருந்தோம்.

      நினைவும், நிஜமும் வந்து மனதை அலைகழிக்கத்தான் செய்கிறது. கடந்து தான் வாழ வேண்டி இருக்கிறது.

      ஆமாம் அக்கா, நதியை அழுக்கு ஆக்காமல் இருக்கலாம் மக்கள்.
      காவிரி அம்மனும் இறைவனும் அனைவரையும் காக்க வேண்டும்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  21. சிறு தேர் அந்நாளைய நினைவுகளை மீட்டது. தேரை திரும்பிப் பார்த்து ரசித்தபடி செல்லும் சிறுவனும், தேர் செய்யும் சிறுவனைச் சுற்றி நிற்கும் சிறுவர்களின் முகங்களில் இருக்கும் பூரிப்பும் ரசிக்க வைக்கின்றன.

    ஆடிப் பெருக்கு வழிபாடு நன்று. அன்றைய தினத்தில் கூட்டமில்லா நதிக்கரை மக்களின் இக்கட்டான சூழலையே பிரதிபலிக்கிறது. நதி அன்னை அருளால் எல்லாம் விரைவில் சரியாகட்டும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      பதிவு உங்கள் அந்நாளைய் நினைவுகளை மீட்டது மகிழ்ச்சி.

      //தேரை திரும்பிப் பார்த்து ரசித்தபடி செல்லும் சிறுவனும், தேர் செய்யும் சிறுவனைச் சுற்றி நிற்கும் சிறுவர்களின் முகங்களில் இருக்கும் பூரிப்பும் ரசிக்க வைக்கின்றன.//

      சிறுவர்களின் மகிழ்ச்சியை ரசித்தமைக்கு நன்றி.

      //ஆடிப் பெருக்கு வழிபாடு நன்று. அன்றைய தினத்தில் கூட்டமில்லா நதிக்கரை மக்களின் இக்கட்டான சூழலையே பிரதிபலிக்கிறது.//

      தடையை மீறி அடி தடியுடன் ஆடிப்பெருக்கை கொண்டாடி இருக்கிறார்கள் மபிலாடுதுறையில்.

      அன்னையின் அருளால் எல்லாம் விரைவில் சரியாக வேண்டும் நீங்கள் சொல்வது போல்
      வேண்டுவோம் அன்னையிடம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. நாங்களும் 2010ல் ஆடிபெருக்கு நேரம் இந்தியாவில் நின்றிருக்கிறோம். இந்த மாதிரி தேரை நாங்க சின்னபிள்ளையில் குரும்பட்டி, தென்னம் ஈர்க்கு கொண்டு செய்து உருட்டிய ஞாபகம் வருது அக்கா.
    வண்ணக்காகிதங்கள் கொண்டு செய்த தேர் அழகா இருக்கு. நாங்களாக செய்து அதனை மற்றவர்கள் ரசித்து பாராட்டும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேஇல்லை.
    உறவுகளோடு சேர்ந்து இப்படி கொண்ட்டாட்டங்கள் கொண்டாடும்போது மிக்க சந்தோஷமாக இருக்கும்.
    உங்க வீட்டு சாமியறையில் பிரசாதத்தில் தேங்காய் பார்க்க அழகாக இருக்கு. இந்த மாதிரி தேங்கா எப்பவாவது கிடைக்கும். சிலநேரம் கொடுத்த பணம் வீணாகிவிடும். அழகான நினைவினை மீட்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி , வாழ்க வளமுடன்
      2010 ல் ஆடிபெருக்கு சமயம் எந்த ஊரில் இருந்நீர்கள்?
      நாங்கள் அப்போது மயவரத்தில் இருந்தோம்.

      //இந்த மாதிரி தேரை நாங்க சின்னபிள்ளையில் குரும்பட்டி, தென்னம் ஈர்க்கு கொண்டு செய்து உருட்டிய ஞாபகம் வருது அக்கா.//

      //உங்கள் பழைய நினைவுகள் வந்து சென்றதா நினைவில்! மகிழ்ச்சி.
      வண்ணக்காகிதங்கள் கொண்டு செய்த தேர் அழகா இருக்கு. நாங்களாக செய்து அதனை மற்றவர்கள் ரசித்து பாராட்டும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேஇல்லை.//

      ஆமாம், அம்மு.

      //உறவுகளோடு சேர்ந்து இப்படி கொண்ட்டாட்டங்கள் கொண்டாடும்போது மிக்க சந்தோஷமாக இருக்கும்.//

      ஆடிப்பெருக்கு விழாவை உறவுகளை விட அக்கம் பக்கம் உறவுகளுடன் தான் கொண்டாடி வந்து இருக்கிறேன்.

      //உங்க வீட்டு சாமியறையில் பிரசாதத்தில் தேங்காய் பார்க்க அழகாக இருக்கு. இந்த மாதிரி தேங்கா எப்பவாவது கிடைக்கும்.//

      மகன் ஊரிலும் தேங்காய் வாங்க முடியாது வாங்கினால் வீணாகி விடும்.

      தேங்காய்பூ, தேங்காய்பால் தான் வாங்குவான்.

      //அழகான நினைவினை மீட்டிய பதிவு.//

      உங்கள் நினைவுகளை பதிவு மீட்டியது அறிந்து மகிழ்ச்சி அம்மு.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அம்மு.










      நீக்கு
  23. சிறு தேர் உருட்டல்....இப்பொழுது வாசிப்பில் தான் இந்த நிகழ்வுகளை அறிந்துக் கொண்டேன் மா.,,,

    இந்த வருடம் காவேரியில் நீர் இருந்தும் கொண்டாட முடியாத சூழல் ..அனைத்தும் சரியாக வேண்டும் என அனைவரும் நம்பிக்கையோடு பிரார்த்திப்போம் ,,,நிச்சயம் அனைத்தும் விரைவில் நலமாக நடக்கும் ...

    மாயவரம் நீர் நிலை காட்சிகள் மிக அருமை மா ..

    பதிலளிநீக்கு