செவ்வாய், 3 ஜூலை, 2018

சொல்லுங்கள் பார்ப்போம்- பதிவு இரண்டு


நேற்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று  ஒரு பதிவு போட்டுக் கேட்டு இருந்தேன் ஒரு கேள்வி . இன்று சொல்வதாய்ச் சொல்லி இருந்தேன். அதன் விடை  - அஞ்சறைப் பெட்டி.

வாழ்க்கைக்குத் தேவையான பெட்டி முன்பு  என்றேன்  ஏன் என்றால் இப்போது யாரும் இந்தப் பெட்டியில் வைத்துக் கொள்வது இல்லையே! அதுதான்.


Image may contain: indoor
இது என்ன பெட்டி என்று தெரிந்தவர் சொல்லுங்கள்.
விடை நாளை  என்று சொல்லி யிருந்தேன்
No automatic alt text available.


அஞ்சறைப் பெட்டிதான் விடை
ஐந்து அறைகள் இருக்கிறது 
என் மாமியார் வீட்டு அஞ்சறைப் பெட்டி இது.   அஞ்சு பிரிவு உள்ளதற்கு மூடி உண்டு. 

ஆரம்ப காலத்தில் அதில் மிளகு , சீரகம், மல்லி, கடுகு, உளுத்தம்பருப்பு இருந்தது . அந்த பக்கத்தில் மூன்று பெட்டிகள் உண்டு. 10 கிலோ வரை சாமான்கள் கொட்டி வைத்துக்கொள்ளலாம். அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய்   போன்றவைகள் இருக்கும்.

அந்தப் பெட்டிகளை வேறு உபயோகப் பொருட்களாக மாற்றி விட்டார்கள்.

அந்தக் காலத்தில் புதிதாக திருமணம் ஆகிப் போகும் பெண்வீட்டில் "அஞ்சும் மூன்றும் அடுக்கா இருந்தால் அறியாப்பெண்ணும் சமைப்பாள்" என்பார்கள்.

இந்த அஞ்சறைப் பெட்டியைத்தான் சொல்லி இருக்கிறார்கள். 

 அவள் உக்கிராண அறைக்குப் போய்விட்டால் அஞ்சறைப் பெட்டியில் சமைக்கும் பொருட்கள்  மற்றும் சமையல் சாமான்கள், எண்ணெய் ஜாடிகள் , ஊறுகாய் வகைகள் நெய், என்று எல்லாம் ஒரே இடத்தில் இருக்கும். அவள் கணவன் வீட்டாரிடம் அது எங்கே, இது எங்கே என்று கேட்க வேண்டாம் என்று அப்படிச் சொல்லி இருக்கிறார்கள்.

முன்பு தொலைக்காட்சியில் விளம்பரம் வரும்- அழகான நகைப்பெட்டி போல் பாட்டி பேத்திக்குச் சீர் கொடுப்பார்கள், அதைப் பேத்தி திறந்து பார்ப்பாள் அதில் பல அறைகள்- அதில்  பொடி வகைகள் இருக்கும். ஏதோ சாம்பார்ப் பொடி விளம்பரம். முதலில் கணவர், கணவர் குடும்பத்தினரிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று சொல்வார்கள் பாட்டி. விளம்பரம் பார்த்தவர்கள் சொல்லுங்கள் பாட்டியா, அம்மாவா கொடுப்பார்கள் என்று மறந்து விட்டது. பல வருடங்களுக்கு முன் வந்த விளம்பரம்.
                                    
                          என் கணவர்  வரைந்து தந்த கணினி ஓவியம்.
 பழங்காலத்து ஆச்சி படம். என் அம்மாவின் அம்மா காது வளர்த்து பாம்படம் போட்டு இருப்பார்கள். என் அப்பா ஆச்சி  காது வளர்க்கவில்லை.

இந்த அஞ்சறைப் பெட்டி பல தலைமுறை தாண்டி அத்தையிடம் வந்து இருக்கிறது. மூன்று பெரிய பெட்டிகளை அத்தை வெளியில் எடுத்து வைத்து விட்டு அதில் பழைய பாத்திரங்கள்  வைத்து இருந்தார்கள் ஒரு காலத்தில், அப்புறம் பழைய போட்டோக்கள் இருந்தன.  அதன் மேல்  துணியைப் போட்டு மூடி. பெட்டி என்பது தெரியாமல்  செய்து அதில் தொலைக்காட்சிப் பெட்டி வைத்து இருந்தார்கள் அத்தை.

அத்தையின் இறப்புக்குப் பின் அடுக்களை மூலைக்கு வந்து இருக்கிறது. அதை இந்தக் காலத்துப் பேரன் பேத்திகளுக்குத் திறந்து காட்டப்பட்டது. ஒரு பேத்தி மட்டும்  என் கணவரின் அண்ணன் மருமகள் ஆசைப்பட்டு," நான் எடுத்துக் கொள்கிறேன்" என்றாள்.  "அதை என்ன செய்வாய்?" என்று எல்லோரும் கேலி செய்துகொண்டு இருந்தார்கள்.

 முன்பு கூட்டுக் குடும்பமாய் இருந்த பெரிய குடும்பங்களில்   அஞ்சறைப் பெட்டி இருக்கும். என் தாத்தா வீட்டிலும் இதைவிடப் பெரிய  அஞ்சறைப் பெட்டி உண்டு.  அப்போது உள்ளவர்கள் வீட்டில் குழந்தைகள் 10 பேர் 12 பேர் என்று இருப்பார்கள். ஆட்கள் அதிகம் சாமான்கள் சேகரிப்பும் அதிகம். "அறைவீடு" என்று இருக்கும், அதை உக்கிராண அறை . ஸ்டோர் ரூம் என்பார்கள்.  அதில் உணவுப் பொருட்கள் இருக்கும் . சிலர் வீட்டில் அதற்கு பூட்டுப் போட்டுப் பூட்டி இருப்பார்கள். தவசிப்பிள்ளை சமைக்க வந்தால் எடுத்துக் கொடுப்பார்கள் அப்புறம் மூடிப் பூட்டி வைத்துக் கொள்வார்கள். பாளையம்கோட்டையில் என் அப்பாவின் வீட்டில் அப்படி இருந்தது.  சித்தப்பா, பெரியப்பா, அத்தைகள் என்று பெரிய கூட்டம் இருக்கும், தாத்தா வீட்டில். ஆச்சி சமைத்துப் பார்த்ததே இல்லை நான். எல்லோரும் வளர்ந்து அரசாங்க உத்தியோகம். யாரும் ஆச்சியுடன் (பாட்டியுடன் )இல்லை, தனித் தனியாக வேறு வேறு ஊரில்.  அத்தைகளும் திருமணம் ஆகிப் போனவுடன் அஞ்சறைப் பெட்டி எல்லாம் பயனில்லாமல் போய் விட்டது.

காலம் மாற மாற சின்னச்சின்னதாய் அஞ்சறைப்பெட்டிகள், பித்தளை, அனுமினியம், எவர்சில்வர்,  வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மசாலா ஜாடிகள் என்று கண்ணாடிபாட்டில்கள். வந்து விட்டது.   ஆனால் அந்த கால அஞ்சறைப் பெட்டி என்றால் ஐந்து  அல்லது ஏழு  இருக்கும். கண்ணாடி ஜாடியில் நிறைய இருக்கிறது. மசாலாச் சாமான்களும் இடம் பிடிக்கிறது.

மருமகள் வாங்கித் தந்ததும், அம்மா வாங்கித் தந்ததும்
இவைகள் எல்லாம் இருந்தாலும் எனக்கு எடுக்க வசதி என்று சின்ன பாட்டில்களில் வைத்து இருக்கிறேன் கடுகு, மிளகு , சீரகத்தை.
என் அடுக்களைக்கு யார் வந்தாலும் சமைக்கக் கஷ்டப்படவேண்டாம் பொருட்களைத் தேடி. 

 முன்பு அம்மா கொடுத்த அஞ்சறை டப்பாவில் பொருட்களை வைத்து விட்டு அவசரத்தில்  எடுக்கும் போது கொட்டி ஒன்றோடு ஒன்று கலந்த பொருட்களை சாம்பார் பொடி அரைக்கும் போது பயன்படுத்திய அனுபவம் உண்டு.

என் கணவர், திருமணத்திற்கு முன் திருவெண்காட்டில் இருந்தபோது  நல்ல ஓட்டல்கள் கிடையாது  என்பதால் அவர்களே  சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள் , அப்போது  அலுமினியத்தில் அஞ்சறை டப்பா வைத்து இருந்தார்கள். எனக்கு அம்மா எவர்சில்வர் டப்பா வாங்கித் தந்தார்கள்.  நான் கணவர் வைத்து இருந்த அலுமினிய டப்பாவை கலர் கோலப்பொடி போட்டு வைத்துக் கொண்டேன், மார்கழி மாதம் கோலம் போட. அதுபோக  இன்னொரு  பிளாஸ்டிக் அஞ்சறைப் பெட்டி ஒன்றும் மாயவரம் ஐப்பசி முழுக்குக் கடையில் வாங்கினேன். இரண்டு டப்பாக்களிலும் கலர்ப் பொடி கலந்து வைத்துக் கொண்டு  கோலம் போடுவேன்.

பலசரக்குச் சாமான்கள் வருடத்திற்கு வாங்குவது குறைந்தபின் பெட்டிக்கு  அதன் உபயோகம் இல்லாமல் போய்விட்டது. அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்துகொண்டு அரிசிக் கடையில் வாங்கி சாப்பிட ஆரம்பித்தவுடன் நெற்குதிர் இல்லை வீடுகளில். வயல் வைத்து இருப்பவர்களின் வீடுகளிலும், கோவில்களிலும் மட்டும் தான் பத்தாயம் இருக்கிறது இப்போது. கோவிலில் கூட இப்போது மூட்டை மூட்டையாக அப்படியே வைத்து இருக்கிறார்கள். யார் பத்தாயத்தில் கொட்டி பின் எடுத்து, அதைச் சுத்தம் செயவது பெரிய வேலை .

தூத்துக்குடியில் நான் சிறுவயதில் இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு அறையே நெற்குதிராக  வைத்து இருந்தார்கள். அதில் பக்கத்தில் சின்ன ஏணி இருக்கும் அதன் வழியாக உள்ளே இறங்கலாம்.  மொட்டைமாடியில் நெல்காயவைத்தால் அதைத் தூக்கி வர வேண்டாம் கீழே,

மேலிருந்து அப்படியே நெற் குதிருக்குள் தள்ளி விடலாம், மூடி போட்டுப் பூட்டி  வைத்து இருப்பார்கள். அப்புறம் திருடர் பயம் வந்து அதை மூடி விட்டார்கள்.



படித்ததில் பிடித்தது.


மிளகாய், தனியா, சீரகம்....என்று ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத பொருட்கள் அஞ்சறைப் பெட்டியில் இருந்தாலும், அவை எல்லாம் சேரும் பொழுது குழம்போ, ரசமோ கிடைப்பது போல், என் மனதிலும்( எல்லோர்) மனதிலும் ஒன்றொடொன்று சம்பந்தமில்லாத ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்து, மனதை பல  நேரங்களில் குழம்பு போல் கலக்குகிறது.  சில் நேரங்களில் ரசம் போல் தெளிவாக இருக்கிறது.  அவ்வாறு தோன்றிய சம்பந்தமில்லா எண்ணங்களின் தொகுப்பு இது.




அஞ்சறைப்பெட்டி வைத்தியம் - மிளகு, சீரகம்,மல்லி வைத்து நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு வைத்தியம் பார்த்துக் கொள்வதை அஞ்சறைப் பெட்டி வைத்தியம் என்கிறார்கள்.
பாட்டி வைத்தியத்திலும் இந்த அஞ்சறைப் பெட்டி உதவும்.

தொலைக்காட்சியில் சமையல் குறிப்புகள் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியை "அஞ்சறைப் பெட்டி" என்கிறார்கள்.
                                          

பித்தளையால் நான்கு மூலைகளும்  அழகு படுத்தப்பட்ட பணப்பெட்டி.  அந்தக் காலத்தில் செட்டிநாட்டில் வேலைபார்த்தார்களாம் மாமனார் அப்போது வாங்கிய பணப்பெட்டி.

                                              
உள்ளே இப்படி இருக்கும். பணம், சில்லரைக் காசு, பத்திரங்கள் வைத்துக் கொள்ளலாம். ரகசிய அறை எல்லாம் அதிகப்படி என்று எளிமையான பணப்பெட்டி வாங்கினார்களாம். அப்புறம் கோத்ரேஜ் பீரோ வாங்கிய பின் பூஜை அறையில் தஞ்சம் அடைந்து விட்டது இந்தப் பெட்டி.


தேவகோட்டை ஜி, சகோ துரைசெல்வராஜூ எல்லாம்   போன பதிவில் பணம்வைத்துக் கொள்ளும் பெட்டி என்றார்கள். அதனால் மாமா வைத்து இருந்த பணப்பெட்டியும் இடம் பிடித்து விட்டது பதிவில்.

KILLERGEE Devakottai said...
//இது முன்பு எல்லோரது வீட்டிலும் குறிப்பாக செல்வந்தர் வீடுகளில் இருக்கும் பணப்பெட்டி. இதனுள் வீட்டுப் பத்திரங்கள் மற்றும் முக்கிய கடிதங்கள் வைத்து இருப்பார்கள்.

இதனுள் ரகசிய அறைகளும் உண்டு இதைத் திறப்பது சிறுவர்கள் அறியாதவாறு இருக்கும். அதை டெக்னிக்கலாக தட்டினால் திறந்து விடும்.//

//துரை செல்வராஜூ said...
இந்த அளவுக்குப் பெரிதாக இல்லாவிட்டாலும் 
சிறியதாக ஒரு சாதிக்காய் பெட்டி இருந்தது..

அதனுள் தான் எங்கள் அப்பாயி அரிசி விற்ற பணத்தை வைத்திருப்பார்கள்..
பெட்டியின் உள்ளே சிறு சிறு தடுப்பறைகள் இருக்கும்...//

இந்த இரண்டு பெட்டிகளும் நமக்குத் தேவையான ஒன்று தான் வாழ்க்கைக்கு. இரண்டுமே அளவு மீறாமல் இருந்தால் எல்லாம் நலமே.
இருப்பதைக் கொண்டு சிறப்பாய்ச் சமைக்கும் பெண்,  இருப்பதைக் கொண்டு நிறைவாய் வாழும் மனம் இரண்டும் இருந்தால் போதும்தானே!
                                                             வாழ்க வளமுடன்.
                                                                  ----------------------

60 கருத்துகள்:

  1. பொக்கிசம்...

    படித்ததில் பிடித்தது :- மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
  2. பெட்டியைக் குறித்த விளக்கம் சுவாரஸ்யம்.
    இன்று இவைகளை பாதுகாக்கவே தனியறை தேவை. அடுக்குமாடி வீட்டில் சாத்தியமில்லையே...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    என் அத்தை வீட்டு பொக்கிஷம் தான்.
    படித்ததில் பிடித்தது மகிழ்ச்சி.

    கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

    //இன்று இவைகளை பாதுகாக்கவே தனியறை தேவை. அடுக்குமாடி வீட்டில் சாத்தியமில்லையே...//

    ஆமாம் ஜி, நீங்கள் சொல்வது சரிதான் இதற்கு தனியறை தேவைதான்.
    அடுக்குமாடி வீட்டில் சாத்தியமில்லை தான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  5. எவ்வளவு பெரிய அஞ்சறை பெட்டி...ஆஹா...

    ரொம்ப வியப்பு எனக்கு இப்போ தான் பார்க்கிறேன் இப்படி...


    எங்க வீட்டில் சில்வர் அஞ்சறை பெட்டி தான்..

    உங்க மருமகள் குடுத்த பெட்டியும் ரொம்ப அழகு ...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    இப்போது உள்ளவர்கள் பார்த்து இருக்கமாட்டீர்கள் என்றுதான் இந்த பகிர்வு.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அஞ்சறைப் பெட்டி இவ்வளவு பெரிதாக இப்போதுதான் பார்க்கிறேன்.... கணவரின் கைவண்ணதிற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் மதுரைத் தமிழன், வாழ்க வளமுடன்.
    //அஞ்சறைப் பெட்டி இவ்வளவு பெரிதாக இப்போதுதான் பார்க்கிறேன்//
    அதனால் தான் இந்த பதிவே! அந்தக் கால வாழ்க்கைமுறையை இப்போது உள்ளவர்கள் தெரிந்து கொள்ளதான்.

    உங்களின் கருத்துக்கு நன்றி.
    கணவரிடம் சொன்னேன் உங்கள் பாராட்டை மகிழ்ந்தார்கள்.
    கணவருக்கு பாராட்டு தெரிவித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இவ்வளவு பெரிய அஞ்சறைப் பெட்டியை இப்போது தான் பார்க்கிறேன். அந்த காலத்துல நல்லா யோசித்து தான் செய்து இருக்காங்க...

    அப்போ அப்படி இருந்த நான் இப்போங்ற மாதிரி அதன் வடிவம் ஆகி விட்டது.

    நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  10. அஞ்சறைப் பெட்டியாகப் பார்த்ததில்லை. ஆனால் சுவாமி பெட்டி என இம்மாதிரித் தாத்தா வீட்டில் (அம்மாவின் அப்பா) பார்த்திருக்கேன். தினம் வேல் வைத்து பூஜை செய்வார். பஞ்சாயதன பூஜைகளும் உண்டு. ஆகவே தனித்தனியாக விக்ரஹம் அதற்கேற்ற பொருட்கள் அந்தப் பெட்டியில் இருக்கும்.மற்றபடி சமையலில் நான் பார்த்த அஞ்சறைப்பெட்டி எல்லாம் இப்போ இருக்கும் மாதிரியில் தான். அம்மாவிடம் பித்தளையில் இருந்தது. புனாப் பித்தளை என்பார்கள். எவர்சில்வர் கோட்டிங் கொடுத்து வைத்திருந்தார்கள். பின்னால் விலைக்குப் போட்டாச்சு! நல்ல விலை போச்சு!

    பதிலளிநீக்கு
  11. உக்கிராண உள் எனத் தனியாகத்தான் இருக்கும். நானும் பார்த்திருக்கேன். அப்போல்லாம் வருஷாந்திர சாமான்கள் எனத் தானே வாங்கி வைப்பார்கள்! சமையலுக்கு ஆள் இருந்தால் யாரானும் எடுத்துக் கொடுப்பார்கள். என் சித்தி வீட்டில் (சின்னமனூர்) உக்கிராண உள்ளை அங்கே போனப்போ எல்லாம் நான் நிர்வகித்திருக்கேன். :) அதே போல் மொட்டை மாடியில் நெல்லைக் காயப் போட்டுவிட்டு அங்கே இருக்கும் சின்னக் கலசத்தின் மூடியை எடுத்துட்டு அது வழியா நெல்லைக் கொட்டுவாங்க. குதிருக்குள் போயிடும். குதிரின் கீழே ஒரு மூடி இருக்கும். தாள் போட்டிருப்பாங்க! நெல் வேண்டும் எனும்போது தாழைத் திறந்து விட்டால் நெல் உள்ளிருந்து வெளியே கொட்டும். நெல்லை அரைக்க எடுத்துச் செல்வாங்க. என் மாமனார் வீட்டில் பத்தாயம் மரத்தால் கட்டியது! ஓர் அறை போலவே இருக்கும். ஏணி வைத்து ஏறி உள்ளே போய் ஆட்கள் சுத்தம் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  12. iஇப்படியான அஞ்சறை பெட்டி இப்போதான் பார்க்கிறேன். எங்க அம்மம்மா வீட்டில் ஒன்று இருந்தது. அதில் 2 பிரிவுதான். முன்பு எதர்கு பாவித்தார்கள் எனத்தெரியவில்லை. ஆனா நான் பார்த்தபோது துணிகளும்,பாத்திரங்களும் வைத்திருந்தார்கள். இங்கு நான் எவர்சில்வரில் வைத்திருக்கேன்.
    பழைய காலத்தில் பாவனையிலிருந்த பல பொருட்கள் காணாமல் போகின்றன.
    பலவிதங்கலில் அஞ்சறை பெட்டி வந்துவிட்டது.
    சார் அழகாக வரைந்திருக்கிறார். வாழ்த்துக்கள். அதுதான் கவின்குட்டியும் தாத்தாவைப்போல வரைகிறார்.
    உங்க மருமகள் கொடுத்ததும் அழகா இருக்கு.
    படித்ததில் பிடித்தது அருமை. நாங்க பார்க்காத இப்பொகிஷத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் உமையாள் , வாழ்க வளமுடன்.
    அந்தக் காலத்து கால மக்கள் யோசித்து தான் செய்து இருக்கிறார்கள்.


    //அப்போ அப்படி இருந்த நான் இப்போங்ற மாதிரி அதன் வடிவம் ஆகி விட்டது.//

    ஆமாம், அப்படித்தான் ஆகிவிட்டது.

    யாருக்கும் முன் போல் 10 பேருக்கு சமைக்க முடியவில்லை, கடையில் ஆர்டர் செய்கிறார்கள்.

    முன்பு வசதி இல்லா வீடாக இருந்தாலும் அதில் உறவினர்களுடன் எல்லாவிழாக்களையும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

    உறவினர்களே சமைப்பார்கள் வீட்டில் சகலசாமான்களும் இருக்கும்.
    மழைக் காலத்துக்கு வேண்டியதை முன்பே வாங்கி காய வைத்து வைத்துக் கொள்வார்கள்.

    மொத்த சாமான்களை வெயில் அடிக்கும் போது காய வைத்து எடுத்து வைப்பார்கள்.
    இப்படி வாழ்ந்த காலங்கள்.

    அக்கம் பக்கத்திற்கு, உறவினர்களுக்கு நம் வீட்டுக்கு அவர்கள் சேமிப்பு இருக்கும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

    //அஞ்சறைப் பெட்டியாகப் பார்த்ததில்லை. ஆனால் சுவாமி பெட்டி என இம்மாதிரித் தாத்தா வீட்டில் (அம்மாவின் அப்பா) பார்த்திருக்கேன்//

    ஓ சாமி பெட்டியாக இருந்து இருக்கா !

    // தினம் வேல் வைத்து பூஜை செய்வார். பஞ்சாயதன பூஜைகளும் உண்டு. ஆகவே தனித்தனியாக விக்ரஹம் அதற்கேற்ற பொருட்கள் அந்தப் பெட்டியில் இருக்கும்.//

    இப்போது அந்த வேல் பூஜை யார் செய்கிறார்கள்?

    //அம்மாவிடம் பித்தளையில் இருந்தது. புனாப் பித்தளை என்பார்கள். எவர்சில்வர் கோட்டிங் கொடுத்து வைத்திருந்தார்கள். பின்னால் விலைக்குப் போட்டாச்சு! நல்ல விலை போச்சு!//

    நன்றாக இருக்கும் புனாப் பித்தளை .

    உங்கள் கருத்துக்கு நன்றி.




    பதிலளிநீக்கு
  15. //உக்கிராண உள் எனத் தனியாகத்தான் இருக்கும். நானும் பார்த்திருக்கேன். அப்போல்லாம் வருஷாந்திர சாமான்கள் எனத் தானே வாங்கி வைப்பார்கள்! சமையலுக்கு ஆள் இருந்தால் யாரானும் எடுத்துக் கொடுப்பார்கள். என் சித்தி வீட்டில் (சின்னமனூர்) உக்கிராண உள்ளை அங்கே போனப்போ எல்லாம் நான் நிர்வகித்திருக்கேன். :)//

    ஆமாம் கீதா.

    //அதே போல் மொட்டை மாடியில் நெல்லைக் காயப் போட்டுவிட்டு அங்கே இருக்கும் சின்னக் கலசத்தின் மூடியை எடுத்துட்டு அது வழியா நெல்லைக் கொட்டுவாங்க. குதிருக்குள் போயிடும். குதிரின் கீழே ஒரு மூடி இருக்கும். தாள் போட்டிருப்பாங்க! நெல் வேண்டும் எனும்போது தாழைத் திறந்து விட்டால் நெல் உள்ளிருந்து வெளியே கொட்டும். நெல்லை அரைக்க எடுத்துச் செல்வாங்க. என் மாமனார் வீட்டில் பத்தாயம் மரத்தால் கட்டியது! ஓர் அறை போலவே இருக்கும். ஏணி வைத்து ஏறி உள்ளே போய் ஆட்கள் சுத்தம் செய்வார்கள்.//

    அதை நானும் பார்த்து சொல்லி இருக்கிறேன் பதிவில்.
    இப்போது உள்ளவர்கள் பார்த்தது இல்லை என்பதால் இந்த பகிர்வு.
    நாம் கொஞ்சம் பழமையான விஷயங்களை கிராமத்துக்கு உறவினர் வீடுகளுக்கு போய் பார்த்து இருப்போம், இப்போது உள்ள குழந்தைகளுக்கு இவை எல்லாம் தெரியாது.
    மாயவரத்தில் எடுத்த பத்தாயம் படம் இருக்கிறது என்னிடம் இப்போது தேடும் போது கிடைக்கவில்லை. கிடைக்கும் போது போட வேண்டும்.

    நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் பிரியசகி வாழ்க வளமுடன்.
    //இப்படியான அஞ்சறை பெட்டி இப்போதான் பார்க்கிறேன். எங்க அம்மம்மா வீட்டில் ஒன்று இருந்தது. அதில் 2 பிரிவுதான். முன்பு எதர்கு பாவித்தார்கள் எனத்தெரியவில்லை. //

    ஆமாம் , இப்போது பழைய கால சில பொருட்களைப்ற்றி அதை எதற்கு எப்படி பாவித்தார்கள் என்று தெரியவில்லைதான்.

    //பழைய காலத்தில் பாவனையிலிருந்த பல பொருட்கள் காணாமல் போகின்றன//

    புதிது புதிதாக நவீன சாதனங்கள் வந்து விட்டதால் பழைய காலத்தில் உபயோகத்தில் இருந்தவை மறைந்து விட்டது.

    தாத்தா, பேரனை பாராட்டியமைக்கு நன்றி அம்மு.

    பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அம்மு.



    பதிலளிநீக்கு
  17. அஞ்சறைப் பெட்டியின் உபயோகமறிந்து காலத்துக்கேற்றவாறு வந்து விட்டன சிறிய அளவில் உலோகத்தில்

    பதிலளிநீக்கு
  18. அரிதான அஞ்சறைப் பெட்டியைப் பதிவில் அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி..

    ஒரு புராதன பொருளைக் காட்டியதும்
    எத்தனை எத்தனை அழகழகான கருத்துரைகள்.. அருமை!..

    நானும் அப்போதே யோசித்தேன்..

    எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்பது மாதிரி
    இந்த கேள்விக்குள் ஏதோ இருக்கிறது என்று மனதுக்குள் ஒரு மின்னல்..

    ஆனாலும் நாம் அதிரடி ஞானானந்தி (!) இல்லையே..
    சட்டென - ஞான திருஷ்டியில் விடையைச் சொல்வதற்கு!..

    எனது கருத்துரையும் பதிவில் காட்டியமைக்கு மகிழ்ச்சி... வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  19. எங்க வீட்டு பெட்டியிலும் இருந்ததுக்கா மூன்று குட்டி இடைவெளி விட்ட அறை போன்ற அமைப்பு.அதை தனியே எடுத்து வச்சிருந்தாங்க .

    கணவரின் ஓவியம் அழகு .இப்படி லைன் டிராயிங் ஆசை எனக்கு .பாம்படமும் கோடாலி கொண்டையும் தத்ரூபம் .
    பித்தளைப்பூண் போட்ட குட்டி பெட்டி எங்க வீட்டில் இருந்தது .அதில் பாட்டி கம்மல்கள் பணம் மருந்து எல்லாம் வைப்பாங்க பிறகு ஒரு முறை அது அத்தை கைக்கு போனது பிறகு என்னாச்சோ தெரில

    பதிலளிநீக்கு
  20. அழகு அஞ்சறைப் பெட்டி!! நல்ல முதிர்ந்த போட்டி!!

    பதிலளிநீக்கு
  21. அருமையான பதிவு.. ஆனாலும் ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்.. உள்ளே இருக்கும் அஞ்சு அறை கொண்ட பெட்டிதானே அஞ்சறைப்பெட்டி, அது இருப்பது பெட்டகத்துள்ளே:) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஊஊ:)).. ஹா ஹா ஹா இல்ல கோமதி அக்கா இந்த அஞ்சறைப்பெட்டி என்பது நான் கேள்விப்பட்டதே நம் இந்திய நண்பர்களிடம் இருந்துதான்,

    இலங்கையில் இருக்கோ தெரியாது ஆனா நான் அங்கு அறியவில்லை.

    மிகுதிக்கு கொஞ்சம் லேட்டா வருகிறேன்ன்.. எங்கள் புளொக்கில் உடனுக்குடன் கொமெண்ட் போடோணும் இல்லை எனில் நாளை மாறி விடும் என்பதால், அங்கு ஒரு மூச்சில் போட்டு முடிச்சேன்ன்.. உங்களிடம் திரும்ப வருகிறேன்:).

    பதிலளிநீக்கு
  22. முகநூலிலேயே பார்த்தேன். பெட்டியின் உள்ளே நேற்றே படம் பிடித்துப் போட்டிருந்தால் நாங்களும் சொல்லியிருப்போம்! ஆனால் எவ்வளவு பெரிய அஞ்சறைப்பெட்டி....!

    பதிலளிநீக்கு
  23. ஸாரின் ஓவியத்தை அங்கும், இங்கும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  24. நாங்களும் முன்பு எவர்சில்வர் அஞ்சறைப்பெட்டி வைத்திருந்தோம்... இப்போது பிளாஸ்டிக்! நான் சமைக்கலாம் என்று இறங்கும்போது அதில் சில கிண்ணங்கள் காலியாக இருக்கும். அதுதான் நமக்கு தேவையாகவும் இருக்கும். கோபம் வரும்!!!!

    பதிலளிநீக்கு
  25. பத்தாயம், குதிர் எல்லாம் இப்போது கிராமத்து வீடுகளில் கூட இருக்குமா என்பது சந்தேகம்தான்! ஸ்ரீரங்கம் கோவில் குதிர் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  26. படித்ததில் பிடித்தது ரசிக்க வைத்தது. சுஜாதா என்பவரா? பிரபல சுஜாதா இல்லையா?

    பதிலளிநீக்கு
  27. இவ்வளவு பெரிய பணப்பெட்டி வைத்துக்கொண்டு என்ன செய்ய? இந்தஅபார்ட்மென்ட்டில் இருப்பவர்கள் பணம் எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    காலத்துக்கு ஏற்றவாறு மாறிவிட்டது அஞ்சறைபெட்டி.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ வாழ்க வளமுடன்.

    //ஒரு புராதன பொருளைக் காட்டியதும்
    எத்தனை எத்தனை அழகழகான கருத்துரைகள்.. அருமை!//

    நீங்கள் சொல்வது உண்மை.எத்தனை விதமான கருத்துக்கள் கிடைத்தன!


    //எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்பது மாதிரி
    இந்த கேள்விக்குள் ஏதோ இருக்கிறது என்று மனதுக்குள் ஒரு மின்னல்../

    ஆனாலும் நாம் அதிரடி ஞானானந்தி (!) இல்லையே..
    சட்டென - ஞான திருஷ்டியில் விடையைச் சொல்வதற்கு!.//

    ஆமாம், எல்லோரும் அதிரா போல் ஞானியாக முடியுமா?

    உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்கும் நன்றி.
    .

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.

    //எங்க வீட்டு பெட்டியிலும் இருந்ததுக்கா மூன்று குட்டி இடைவெளி விட்ட அறை போன்ற அமைப்பு.அதை தனியே எடுத்து வச்சிருந்தாங்க //

    ஓ! அப்படியென்றால் அதுவும் அந்தக்கால அஞ்சறைபெட்டியாகத்தான் இருக்கும்.

    //கணவரின் ஓவியம் அழகு .இப்படி லைன் டிராயிங் ஆசை எனக்கு .பாம்படமும் கோடாலி கொண்டையும் தத்ரூபம் .//

    கணவரின் ஓவியத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    நீங்களும் வரையலாம் கணினி ஓவியம் அந்த கால கோடாலி கொண்டையைப் பார்த்து எப்படிதான் கீழே அவுந்து விழாமல் இருக்கிறது என்று வியந்து இருக்கிறேன்.

    //பித்தளைப்பூண் போட்ட குட்டி பெட்டி எங்க வீட்டில் இருந்தது .அதில் பாட்டி கம்மல்கள் பணம் மருந்து எல்லாம் வைப்பாங்க பிறகு ஒரு முறை அது அத்தை கைக்கு போனது பிறகு என்னாச்சோ தெரில//

    யாரிடமாவது இருக்கும். அதன் பழமையின் மதிப்பு தெரிந்தவர்களிடம் இருந்தால் நல்லது.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல். டாகடரிடம் போய் வந்தேன் . அதுதான் பின்னூட்டங்களை தாமதமாய் படித்தேன்.


    பதிலளிநீக்கு
  31. வணக்கம் மாதவி. வாழ்க வளமுடன்.

    //அழகு அஞ்சறைப் பெட்டி!! நல்ல முதிர்ந்த போட்டி!!//

    கருத்து அருமை.
    நன்றி.


    பதிலளிநீக்கு
  32. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //அருமையான பதிவு.. ஆனாலும் ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்.. உள்ளே இருக்கும் அஞ்சு அறை கொண்ட பெட்டிதானே அஞ்சறைப்பெட்டி, அது இருப்பது பெட்டகத்துள்ளே:) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஊஊ:)).. ஹா ஹா ஹா இல்ல கோமதி அக்கா இந்த அஞ்சறைப்பெட்டி என்பது நான் கேள்விப்பட்டதே நம் இந்திய நண்பர்களிடம் இருந்துதான், //

    நீங்கள் சொன்னது சரிதான் இந்த பெட்டகம் என்றும் சொல்லலாம்.
    மிகவும் தேவையான ஓன்றை பத்திரபடுத்தி வைப்பதும் பெட்டகம் தானே!

    //மிகுதிக்கு கொஞ்சம் லேட்டா வருகிறேன்ன்.. எங்கள் புளொக்கில் உடனுக்குடன் கொமெண்ட் போடோணும் இல்லை எனில் நாளை மாறி விடும் என்பதால், அங்கு ஒரு மூச்சில் போட்டு முடிச்சேன்ன்.. உங்களிடம் திரும்ப வருகிறேன்:).//

    வாங்க வாங்க எங்கள் ப்ளாக் போய் வாருங்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.
    மீண்டும் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //முகநூலிலேயே பார்த்தேன். பெட்டியின் உள்ளே நேற்றே படம் பிடித்துப் போட்டிருந்தால் நாங்களும் சொல்லியிருப்போம்! ஆனால் எவ்வளவு பெரிய அஞ்சறைப்பெட்டி.//

    மூடிய கையில் என்ன இருக்கிறது இந்த கையில் என்பது தான் திரில்.
    திறந்து வைத்துக் கொண்டு கையில் என்ன இருக்கு என்றா கேட்பார்கள்?
    ஆதில் என்ன சுவரஸ்யம் இருக்கு?

    மொத்தமாய் வைக்கதான் அந்தக் காலத்தில் இதை பயன்படுத்தி இருப்பார்கள். தினப்படி தேவைக்கு கொஞ்சமாய் வேறு எதிலாவது எடுத்து வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.



    பதிலளிநீக்கு
  34. //ஸாரின் ஓவியத்தை அங்கும், இங்கும் ரசித்தேன்//

    ஸ்ரீராம், வெகு நாட்கள் ஆகி விட்டது என் பதிவுக்கு படம் வரைந்து என்றேன் சாரிடம்.
    அவர்கள் ஆச்சியை நினைவு வைத்துக் கொண்டு வரைந்து தந்து விட்டார்கள்.
    ரசித்ததை சொன்னேன் அவர்களுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  35. நாங்களும் முன்பு எவர்சில்வர் அஞ்சறைப்பெட்டி வைத்திருந்தோம்... இப்போது பிளாஸ்டிக்! நான் சமைக்கலாம் என்று இறங்கும்போது அதில் சில கிண்ணங்கள் காலியாக இருக்கும். அதுதான் நமக்கு தேவையாகவும் இருக்கும். கோபம் வரும்!!!!//

    ஸ்ரீராம், கிண்ணங்களில் காலியாக காலியாக எடுத்து கொட்டி நினைவாய் வைக்க வேண்டும் தேவைபடும் போது இல்லையென்றால் கோபம் தான் வரும்.

    பதிலளிநீக்கு
  36. //பத்தாயம், குதிர் எல்லாம் இப்போது கிராமத்து வீடுகளில் கூட இருக்குமா என்பது சந்தேகம்தான்! ஸ்ரீரங்கம் கோவில் குதிர் நினைவுக்கு வருகிறது.//

    மாயவரத்தில் நிறைய பேர் வீடுகளில் பத்தாயம் இருக்கும். போட்டோ எடுத்து இருக்கிறேன் தேட முடியவில்லை. முன்பு ஒரு பதிவில் போட்டேன் என்று நினைக்கிறேன். தேட வேண்டும்.
    பழனியில் நிறைய இருக்கும். கிராமத்து ஜனங்கள் அருவடை ஆனதும் காணிக்கையாக தானியங்க்களை கொண்டு வந்து கொட்டுவார்கள்.

    பதிலளிநீக்கு
  37. ///படித்ததில் பிடித்தது ரசிக்க வைத்தது. சுஜாதா என்பவரா? பிரபல சுஜாதா இல்லையா?//

    ஸ்ரீராம் இவர் பிரபல சுஜாதா இல்லை, அமெரிக்காவில் வாழ்பவர் போலும். சுட்டி கொடுத்து இருக்கிறேன் பார்க்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  38. இவ்வளவு பெரிய பணப்பெட்டி வைத்துக்கொண்டு என்ன செய்ய? இந்தஅபார்ட்மென்ட்டில் இருப்பவர்கள் பணம் எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்!//

    ஸ்ரீராம்,அபார்ட்மென்ட்டில் உள்ள்வர்கள் புன்னகை செய்யவே தயக்கம் காட்டுகிறார்கள்.

    பணம் எல்லாவற்றையும் நம்மிடம் தருவார்களா? புன்னகையே பொன் நகை அதை கொடுத்தால் போதும்.

    பதிலளிநீக்கு
  39. //என் கணவர் வரைந்து தந்த கணினி ஓவியம்.//

    ஓ மிக அழகாக இருக்கிறது கோமதி அக்கா.. இதற்கு ஏதும் சொவ்ட்வெயார் பாவிக்கிறாரோ? இல்லை பெயிண்ட்டில் வரைவாரோ?

    பதிலளிநீக்கு
  40. //முன்பு கூட்டுக் குடும்பமாய் இருந்த பெரிய குடும்பங்களில் அஞ்சறைப் பெட்டி இருக்கும். என் தாத்தா வீட்டிலும் இதைவிடப் பெரிய அஞ்சறைப் பெட்டி உண்டு. //

    கூட்டுக் குடும்பத்துக்கு இது மிக உபயோகமானது, அத்தோடு அக்காலத்தில் பணத்தையும் இப்படிப் பெட்டிகளில்தானே வைப்பார்கள். அதுவும் பத்திரமாக இருக்குமாம்.

    பதிலளிநீக்கு
  41. //மருமகள் வாங்கித் தந்ததும், அம்மா வாங்கித் தந்ததும்///

    அந்த எவர்சில்வர் செட் என்னிடமும் இருக்கு.. மாமா வாங்கித்தந்தார்ர்.. கணவரின் அப்பா. ஆனா அது முட்ட போட்டு வைப்பேன்ன் ஸ்பைஷஸ்.. முடியவே முடியாதே:) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  42. ///இவைகள் எல்லாம் இருந்தாலும் எனக்கு எடுக்க வசதி என்று சின்ன பாட்டில்களில் வைத்து இருக்கிறேன் கடுகு, மிளகு , சீரகத்தை.
    என் அடுக்களைக்கு யார் வந்தாலும் சமைக்கக் கஷ்டப்படவேண்டாம் பொருட்களைத் தேடி. //

    எனக்கென்னமோ போத்தல்களை விட எவர்சில்வர்தான் ஈசிபோல இருக்குது:)

    பதிலளிநீக்கு
  43. //தூத்துக்குடியில் நான் சிறுவயதில் இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு அறையே நெற்குதிராக வைத்து இருந்தார்கள். அதில் பக்கத்தில் சின்ன ஏணி இருக்கும் அதன் வழியாக உள்ளே இறங்கலாம். //

    இங்கு ஸ்கொட்லாந்தில் இப்படி இருக்குது கோமதி அக்கா.. ஒரு வீட்டளவு உயரத்தில், அதில் வைக்கோல் நிரப்பி விடுவார்கள், குளிர்காலத்தில் செம்மறி, மாடுகள் சாப்பிடுவதற்காக.. ஃபாம்களில் இதைக் காணலாம்.

    கீழால சாப்பிட சாப்பிட இறங்கி இறங்கி வருமாம் வைக்கோல்.

    பதிலளிநீக்கு
  44. //பித்தளையால் நான்கு மூலைகளும் அழகு படுத்தப்பட்ட பணப்பெட்டி. அந்தக் காலத்தில் செட்டிநாட்டில் வேலைபார்த்தார்களாம் மாமனார் அப்போது வாங்கிய பணப்பெட்டி//

    ஓ அக்காலப் பணப்பெட்டி, நான் பார்த்ததில்லை. அழகா இருக்கு.. பழமை என்றும் புதுமை.

    பதிலளிநீக்கு
  45. அஞ்சறைப்பெட்டியோடு அதிரசம் கலந்த கலவையாகிவிட்டது இன்றைய கதம்பப் பதிவு:).

    பதிலளிநீக்கு
  46. //கூட்டுக் குடும்பத்துக்கு இது மிக உபயோகமானது, அத்தோடு அக்காலத்தில் பணத்தையும் இப்படிப் பெட்டிகளில்தானே வைப்பார்கள். அதுவும் பத்திரமாக இருக்குமாம்.//

    ஆமாம் அதிரா, கூட்டுக்குடும்பத்திற்கு மிக உபயோகமானது தான். அந்தக் காலத்தில் உண்மையாக வேலை செய்ய ஆட்களும் இருப்பார்கள். சுத்தம் செய்ய காய வைத்து எடுத்து வைக்க என்று.

    தனியாக எல்லாம் நாமே செய்ய வேண்டும் என்றால் இந்த பெட்டியை பாதுகாப்பது கஷ்டம்.

    பணம் அரிசி பானை, பெருங்காய டப்பா என்று தாய்மார்கள் வைப்பார்கள் என்று கதைகளில் படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  47. //அந்த எவர்சில்வர் செட் என்னிடமும் இருக்கு.. மாமா வாங்கித்தந்தார்ர்.. கணவரின் அப்பா. ஆனா அது முட்ட போட்டு வைப்பேன்ன் ஸ்பைஷஸ்.. முடியவே முடியாதே:) ஹா ஹா ஹா//

    அதிரா, முட்ட போட்டு வைத்தாலும் காலி காலியாக மீண்டும் முட்ட போட்டு வைக்க வேண்டும் தானே!

    பதிலளிநீக்கு
  48. //எனக்கென்னமோ போத்தல்களை விட எவர்சில்வர்தான் ஈசிபோல இருக்குது:)//

    அதிரா , அது சமையல் மேடை மேலேயே இருந்தால் வசதியாக இருக்கும். நாம் வேறு எங்காவது வைத்து விட்டு எடுக்கும் போது சில நேரம் கொட்டி விடும், அதுவும் உங்க்களை போல் முட்ட முட்ட போட்டு வைத்தால் கொட்டி எல்லாம் கலக்க வாய்ப்பு இருக்கிறது.

    மேடை மேல் வைத்து ஸ்பூனில் எடுப்பது எளிதாக இருக்கும் தான்.

    பதிலளிநீக்கு
  49. இங்கு ஸ்கொட்லாந்தில் இப்படி இருக்குது கோமதி அக்கா.. ஒரு வீட்டளவு உயரத்தில், அதில் வைக்கோல் நிரப்பி விடுவார்கள், குளிர்காலத்தில் செம்மறி, மாடுகள் சாப்பிடுவதற்காக.. ஃபாம்களில் இதைக் காணலாம்.

    கீழால சாப்பிட சாப்பிட இறங்கி இறங்கி வருமாம் வைக்கோல்//

    சோவியத் ரஷியா கதைகளில் படமாய் பார்த்து இருக்கிறேன் நீங்கள் சொல்வதை.

    பதிலளிநீக்கு
  50. தாத்தாவுக்குப் பின்னர் வேல் பூஜை மாமாக்களால் செய்ய முடியாமல் தடைப்பட்டிருந்தது. பின்னர் ஒரு மாமா பெண்ணின் திருமண ஏற்பாடுகளின் போது அந்தப் பெண்ணின் அம்மாவான என் கடைசி மாமிக்குத் திடீரென முருகன் அருள் வந்து அனைவரும் வேல் பூஜை செய்ய ஆரம்பித்தால் இனி வரும் சந்ததிகளுக்கு நல்லது என வாக்கு வந்து இருக்கு! இத்தனைக்கும் அந்த மாமி இதை எல்லாம் நம்பாதவர்! அதிகம் ஆசாரம், மடி எனப் பார்க்க முடியாது என்னும் காரணத்தாலேயே வேல் பூஜையைச் செய்ய யோசித்தார்கள். பின்னர் அனைவரும் ராமநாதபுரம் அருகிலுள்ள தென்னவராயன் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள அவங்க குல தெய்வம் ஆன முருகன் கோயிலுக்குப் போய்க் கேட்டிருக்காங்க. அங்குள்ள குருக்கள் உங்களால் செய்ய முடியவில்லை எனில் ஆள் வைத்துச் செய்யுங்க எனச் சொன்னாராம். ஆகவே அனைவரும் தனித்தனியாக வேல் வாங்கி அவரவர் வீட்டில் தனித் தனியாக வேல் பூஜை ஆரம்பித்திருக்கின்றனர். இப்போது மாமாவின் பிள்ளைகள் ஆள் நியமித்துச் செய்து வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  51. //ஓ அக்காலப் பணப்பெட்டி, நான் பார்த்ததில்லை. அழகா இருக்கு.. பழமை என்றும் புதுமை.//

    அதிரா, பழைய பணப்பெட்டியை ஒரு ஓட்டலில் அலங்காரமாய் வைத்து இருந்தார்கள் திருநெல்வேலியில். அதை படம் எடுத்தேன் தேட முடியவில்லை. சும்ம இருக்கும் நேரங்க்களில் படங்க்களை பிரித்து போல்டர்களில் போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.அப்புறம் மறந்து விடும்.

    நினைவுகளில் தேடி போட்டுக் கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  52. //அஞ்சறைப்பெட்டியோடு அதிரசம் கலந்த கலவையாகிவிட்டது இன்றைய கதம்பப் பதிவு:).//

    அதிரா, அதிரசம் தேவகோட்டைஜி பதிவில் அல்லவா வருகிறது.
    உங்கள் இனிமையான பேச்சால் அதிரசமாய் மாறி விட்டதோ என் பதிவு.

    பதிலளிநீக்கு
  53. வாங்க கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

    //மாமிக்குத் திடீரென முருகன் அருள் வந்து அனைவரும் வேல் பூஜை செய்ய ஆரம்பித்தால் இனி வரும் சந்ததிகளுக்கு நல்லது என வாக்கு வந்து இருக்கு!//

    ஆகவே அனைவரும் தனித்தனியாக வேல் வாங்கி அவரவர் வீட்டில் தனித் தனியாக வேல் பூஜை ஆரம்பித்திருக்கின்றனர். இப்போது மாமாவின் பிள்ளைகள் ஆள் நியமித்துச் செய்து வருகிறார்கள்.//

    அருளில் வந்து வேல் பூஜையை வாங்கி கொண்டார் முருகன்.

    மாமாவிற்கு பிறகு வேல் பூஜை பிள்ளைகள் எல்லோரும் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    அவர்கள் குடும்பம் முருகன் அருளால் நன்றாக இருக்கட்டும்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  54. ஓ மிக அழகாக இருக்கிறது கோமதி அக்கா.. இதற்கு ஏதும் சொவ்ட்வெயார் பாவிக்கிறாரோ? இல்லை பெயிண்ட்டில் வரைவாரோ?

    அதிரா,பெயிண்ட்டில் வரைகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  55. அஞ்சறைப் பெட்டி உள்ளே எப்படி இருக்கும் என்பதை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். ஓவியம் மிக அருமை.

    உங்கள் பகிர்வு பல நினைவுகளை மலரச் செய்தது. மாடியில் ஒரு அறையே நெற்குதிராக இருந்தது. நீங்கள் சொல்வது போல் கீழிருந்து நெல் எடுத்துக் கொள்ள வழி செய்யப் பட்டிருந்தது. ஆனால் பின்னாளில் அதை மூடி விட்டு, அறைக்கு சென்றே எடுத்தார்கள். பணம் வைக்க தாத்தா இரும்புப் பெட்டி பயன்படுத்தினார்கள்.

    சுவாரஸ்யமான புதிரும் அதற்கான பதில் பதிவும் அருமை.

    பதிலளிநீக்கு
  56. கோமதிக்கா உங்கள் கணவர் மிக அழாகா வரைந்திருக்கிறார். ரசித்தோம். பெயிண்டிலா வரைகிறார் ஆஹா! நானும் வரைந்து பார்த்த்துண்டு ஆனால் எனக்குச் சரியாக வரவில்லை. கையால் வரைவேன். ஆனால் கம்ப்யூட்டரில் வரைய இயலவில்லை...அருமை அருமை.

    ஆஹா பெட்டி அஞ்சறைப்பெட்டியா தோன்றவே இல்லை. பெரிய பெய்ர்ய குடும்பங்களில் இப்படியான பெட்டி மிகவும் பயனுள்ளதாக இருகும். எங்கள் வீட்ட்லும் பத்தாயம்/ நெற்குதிர் பெரிய தொட்டி போல இருந்தது. அதற்கு மூடி எல்லாம் இருக்கும். அதில்தான் நெல் குவித்து வைச்சிருப்பாங்க. நாங்க ஒளிஞ்சு விளையாடவும் பயன்படுத்தியதுண்டு. இப்படியான மரப்பெட்டிகள் உண்டு அதில்தான் பாத்திரங்கள் எல்லாம் வைப்பார்கள். ஆனால் என்ன எல்லாம் வெயிட்டாக இருக்கும். நகர்த்தவே முடியாது. அப்புறம் வீட்டில் ஷெல்ஃப் எல்லாம் மரப்பலகையால் தான் இருக்கும் அதில்தான் பாத்திரம் கவிழ்த்தி, அப்புறம் பருப்பு டப்பாஅ எல்லாம் வைப்பது என்று அருமையா இருக்கும்

    என்னிடமும் அஞ்சறைபெட்டி மரத்திலும் இருந்தது. சிறியதாக. அம்மா வீட்டிலிருந்து வந்ததுதன. அப்புறம் அதை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். எவர்சில்வரில் அம்மா கொடுத்தார். ப்ளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. இப்போது கடுகு எல்லாமெ உங்களைப் போல பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டுள்ளேன் கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
  57. பணப்பெட்டியும் அழகாக இருக்கிறது. எங்கள் வீட்டில் கூட அதில் சிறிய ட்ரா எல்லாம் வைத்து அதில் சிறிய சிறிய குழிகள் இருக்கும் அதில் சில்லரை போட்டுக் கொள்ள 10 பைசா 5 பைசா 20 பைசா எல்லாம் போட்டு வைச்சுருப்பாங்க. அப்புறம் நீளமாக இருக்கும் ட்ராவில் நோட்டுகள் இருக்கும். இப்படி இப்பொது ப்ளாஸ்டிக்இல் டரா போல சின்னதாக ஷெல்ஃப் வந்திருக்கெ அப்படி மரத்தில். அதை நான் கொண்டு வர நினைத்தேன் ஆனால் காணாமல் போயிடுச்சு.

    படித்ததில் பிடித்தது மிக மிக அருமை ரசித்தோம் கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
  58. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    அஞ்சறை பெட்டியை , ஒவியத்தை ரசித்தமைக்கு நன்றி.

    உங்கள் வீட்டிலும் நெற்குதிர் இருந்ததா? மகிழ்ச்சி.
    எங்கள் தாத்தாவீட்டிலும் இரும்பு பெட்டி தான். உபயோகபடுத்தினார்கள்.
    மாமா பெட்டியை ஆசைபட்டு வாங்கினார்களாம்.
    புதிர் போட்டதால் நீங்கள் எல்லோரும் வந்து உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள்.

    உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  59. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    //கோமதிக்கா உங்கள் கணவர் மிக அழாகா வரைந்திருக்கிறார். ரசித்தோம். பெயிண்டிலா வரைகிறார் ஆஹா! நானும் வரைந்து பார்த்த்துண்டு ஆனால் எனக்குச் சரியாக வரவில்லை. கையால் வரைவேன். ஆனால் கம்ப்யூட்டரில் வரைய இயலவில்லை...அருமை அருமை.//

    ஆமாம், பெயிண்டிலே தான் வரைகிறார்கள்.கையாலும் அழகாய் வரைவார்கள்.

    //அதில்தான் நெல் குவித்து வைச்சிருப்பாங்க. நாங்க ஒளிஞ்சு விளையாடவும் பயன்படுத்தியதுண்டு//

    நாங்களும் குதிருக்குள் ஒளிந்து விளையாடி இருக்கோம்.உடம்பு எல்லாம் அரிக்கும் அம்மாவிடம் சொன்னால் விபூதி பூசிவிடுவார்கள், கூடாவே திட்டும் கிடைக்கும்.
    முன்பு எல்லோர் வீடுகளிலும் இது போன்ற பெட்டிகள் நிறைய உண்டு.
    திருவெண்காட்டில் இதைவிட மூன்று மடங்க்கு பெரிதான பெட்டியில் 10008 சங்குகள் வைத்து இருப்பார்கள். கார்த்திகை சோமாவாரத்திற்கு எடுப்பார்கள்.

    திருவனந்தபுர ஆச்சி வீட்டில் மர அஞ்சறைபெட்டி தனி தனியாக ஒவ்வொன்றுக்கும் மூடியுடன் இருக்கும். புளிக்கு, உப்புக்கு எல்லாம் மரவைகள் மூடி போட்டு இருக்கும்.

    பதிலளிநீக்கு
  60. //பணப்பெட்டியும் அழகாக இருக்கிறது. எங்கள் வீட்டில் கூட அதில் சிறிய ட்ரா எல்லாம் வைத்து அதில் சிறிய சிறிய குழிகள் இருக்கும் அதில் சில்லரை போட்டுக் கொள்ள 10 பைசா 5 பைசா 20 பைசா எல்லாம் போட்டு வைச்சுருப்பாங்க. அப்புறம் நீளமாக இருக்கும் ட்ராவில் நோட்டுகள் இருக்கும்.//

    ஆமாம் கீதா, அப்போது எல்லாம் மர பணப்பெட்டிகள் வித விதமாய் இருக்கும்.

    //இப்பொது ப்ளாஸ்டிக்இல் டரா போல சின்னதாக ஷெல்ஃப் வந்திருக்கெ அப்படி மரத்தில். அதை நான் கொண்டு வர நினைத்தேன் ஆனால் காணாமல் போயிடுச்சு.//

    இப்போது ப்ளாஸ்டிகில் டரா போல் சின்னது பெரிது என்று நிறைய என் கண்வர் வாங்க்கி வைத்து இருக்கிறார்கள். அவர்கள் அதில் அவர்கள் சாமாங்களை போட்டு வைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு டிரா மேலும் அதன் உள்ளே என்ன இருக்கு என்பதை பேர் எழுதி வைத்து இருக்கிறார்கள்.


    //படித்ததில் பிடித்தது மிக மிக அருமை ரசித்தோம் கோமதிக்கா...//
    உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் என்றுதான் பகிர்ந்தேன்.

    பதிவை படித்து அழகாய் கருத்து தெரிவித்த உங்களுக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு