வெள்ளி, 27 ஜூலை, 2018

ஆடி மாதம் அம்மனுக்குத் திருவிழா

சங்கரன் கோவில் திருவிழா 17 ஆம் தேதி (17.7.2018) தொடங்கியது.  நாங்கள் அடுத்த நாள் 18ம் தேதி புதன் கிழமை சென்று வந்தோம்.  என் தங்கைகள் அண்ணி எல்லோரும் ஆடித்தபசு சமயம் வருடா வருடம் செல்வார்கள் ஒவ்வொரு வருடமும் அழைப்பார்கள். இந்த முறை வாய்ப்பு கிடைத்தது அன்னையின் அருளால்.


Image may contain: tree, sky and outdoor
ரயில் வசதியாக இருக்கிறது அதில் போகலாம் என்று ரயிலில் பயணம். செங்கோட்டை பாஸஞ்சர் காலை 7.20க்குக் கிளம்பியது மதுரையிலிருந்து.  10 மணிக்குப் போய்ச் சேர்ந்தது சங்கரன்கோயில். ரயிலில் கூட்டம் இல்லை.  வசதியாக இருந்தது. உறவுகளுடன் பேசி மகிழ்ந்து போனதில் வெகு சீக்கிரம் கோவில் வந்துவிட்ட உணர்வு.

ரயில் நிலையத்தில் இருந்த ஒரு அழகான விழுதுகள் தாங்கும் ஆலமரம்

கோவில் கோபுரத்தை எடுக்கமுடியாதபடி விழாப் பந்தல் மறைத்து விட்டது, மேலே இருக்கும் கோபுரப் படம் கோவில் உட்புறம் எடுத்தது. அதனல்  உள் நுழைந்தவுடன் இடது பக்கம் பிள்ளையார், வலது புறம் முருகன் இவர்களையும்  கடைகளையும் தாண்டி உள்ளே போனோம்.  என் கணவரின் சின்னமாமாவுடைய மருமகள் கோவிலில் எங்களைப் பார்த்துவிட்டு எங்களை அழைத்துச் சென்றார். அவர் பிறந்தது - வளர்ந்தது எல்லாம் சங்கரன்கோவில் தான். அதனால் கோவில் வரலாறு, விழாவிபரம் எல்லாம் சொல்லிக் கோண்டே  உடன் வந்தார். 
அம்மன் அலங்காரப் பந்தலில் இருந்தார். தூரத்தில் வரும் போதே அடுக்கு தீபாராதனை பார்த்துக் கொண்டே தான் வந்தோம். அம்மனுக்கு நேரே நடுவில் அவ்வளவு பக்தர்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அரசமரத்தின் கீழ் கோமதி அம்மனின் தபசுக்காட்சி

சங்கன், பதுமன் என்று இரண்டு நாகமன்னர்கள் இருந்தார்கள். ஹரனே(சிவன்) உயர்ந்தவன் என்று சங்கனும்,ஹரியே உயர்ந்தவன் என்று பதுமனும் கூறிச் சண்டையிட்டனர். இது பற்றி அவர்கள் கோமதி அம்மனிடம்  முறையிட்டனர்.  அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கோமதி அம்மன் ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த  தவம் செய்ததால்  ஆடிப் பெளர்ணமி உத்திராட நட்சத்திர தினத்தில் சிவபெருமானும், திருமாலும் ஸ்ரீ சங்கர நாராயண தரிசனம் தந்தார்கள்.கடவுளர் இருவரும் சமம், அன்பினாலும், தியாகத்தாலும் தான் இவர்களை அடைய முடியும் எனும் தத்துவத்தை உணர்த்தும் அவதாரம்தான் சங்கரநாராயண தோற்றம்.

நாக அரசர்கள் அம்மனுடன் இத்தலத்தில் தங்கினர். அதனால் ராகு, கேது தோஷங்கள் விலகும், நாக தோஷங்கள் விலகும்.  இந்த மரத்திற்கு பக்கத்தில் நாகர் சிலை இருக்கிறது அதற்கு மக்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு தோஷம் நீங்கிப் போவதாய் மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள்.

இத் தலம்  சக்தி பீடங்களில் ஒன்று. தங்கப் பாவாடைக் காட்சி ஓவியம்
அம்மன் சன்னதி போகும் வழியில் இருந்தது. அம்மன் அழகாய் இடையை ச்சாய்த்து  ஒரு கையில் மலர்ச்செண்டு ஏந்தி இருக்கிறார். செவ்வாய்க்கிழமை வெள்ளிப்பாவாடையும், வெள்ளிக்கிழமை தங்கப்பாவாடையும் அணிகிறார்கள்.
தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.

திருவாவடுதுறையின் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் மேலகரம் வேலப்ப தேசிகராவார்.  வேலப்ப தேசிக மூர்த்திகள் கோமதியம்மையின் திருமுன்பு ஒரு மந்திரச் சக்கரத்தைப் பதித்தருளினார். அதில் அமர்ந்து நம் வேண்டுதல்களை சொல்லி அம்மனைப் பார்த்து வேண்டினால்  நம் எண்ணம் பலிதமாகும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை. மன நோய், உடல் நோய் மற்றும் பல வேண்டுதல்கள் நிறைவேறி இருப்பதாய் புராணம் சொல்கிறது. உ.ம்:- நெற்கட்டுஞ்செவலின் குறுநில மன்னராகிய சிவஞானப் பூலித்தேவர், குருமூர்த்தியைக் கண்டு பணிந்து அவர் திருவருளால் தமக்கிருந்த குன்ம நோய் நீங்கப் பெற்று ஞானதேசிகருக்கு விளைநிலம் முதலானவற்றைச் சிவபூஜை, குருபூஜை, மாகேசுர பூஜைகளின் பொருட்டுச் சாசனம் செய்து கொடுத்தார்.

கோவிலில் வைக்கப்பட்டு இருந்த சங்கரநாராயணர் ஓவியம். இத போல் தனிச் சன்னதியில் இவர் அழகாய்க் காட்சி தருகிறார். ஆடை அலங்காரம் இருவருக்கும் மிக அற்புதமாய்ச் செய்து இருந்தார்கள். பாதி முகம் சந்தனம் அது சங்கரர், கறுப்பு முகமாய்  அப்படியே நாமம் மட்டும் போட்ட பாதி முகம் நாராயணர். உற்சவரும் வெளிப்பக்கத்தில் அழகாய் இருக்கிறது.

திருநாவுக்கரசு நாயனார் திருவலிவலம் தேவாரத் திருப்பதிகத்தில் (எட்டாவது பாடல் -ஆறாம்திருமுறை)
"மின்னவன்காண் உருமவன்காண், திருமால் பாகம் வேண்டினன் காண்"
என்று பாடி அருளி உள்ளார். இதில், சிவபெருமானிடத்தில் திருமால்  இடப்பாகத்தை  வேண்டிப் பெற்ற வரலாறு கூறப்படுகிறது.
கோவிலின் உள்ளே சங்கரலிங்கப்பெருமான் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் பாம்புப் புற்று அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. அங்குள்ள சுவாமியின் பெயர் வன்மீக நாதர் என்று அழைக்கப்படுகிறது. கோபுரம் முழுவதும் பாம்புகளின் சிலை வடிவங்கள் உள்ளன.
                       தேசியக்கவி பாரதி பாடிய 'கோமதி மஹிமை' பாடல்.

 சங்கர நயினார் கோவில் ஆவுடையம்மையின் புகழ்  பாடும் பாடல்.
சிவபிரான் தானும் திருமாலும்  ஒன்று என்று  ஒரு வடிவங்காட்டிய சரித்திரத்தை சொல்லும் கோமதி மஹிமை பாடல்.  இந்த பாடல் முற்றுப்பெறவில்லை இந்த பாடலை எழுதி நிறைவு செய்ய  பாரதி  மீண்டும் அவதரிப்பான்(ர்) என்று முடிவில் இருக்கிறது. படம் கைபேசியில் அவசரமாய் எடுத்தது  அம்மன் சன்னதி வாசலில் சுவரில் இருக்கிறது
அம்மன் சன்னதி செல்லும்  பாதை
திருமணங்கள்  நடைபெறுமாம் இந்த இடத்தில். பக்கத்தில் மணமக்கள்  உடை மாற்றும் அறை இருக்கிறது. திருமணங்களுக்கு இப்படித்தான் மணவறை அமைப்பார்கள் .
திருமாலின் தாமரைக் கண்கள்  நாம் எந்தப் பக்கம் போனாலும் நம்மை பார்ப்பது போலவே உள்ளது கம்பித் தடுப்புக்குள் இருக்கிறார் அப்படி இல்லையென்றால் பக்கத்தில் சூடன் வைத்துப் பாழ் செய்து விடுவார்கள் நம் அன்பர்கள்.
புற்றுமண் மருந்து இங்கு அனைத்து நோய்களுக்கும் மருந்து. இரண்டு கல் பாத்திரத்தில் வைத்து இருக்கிறார்கள் ஒன்றில் நீர் விட்டுக் கரைத்து வைத்து இருக்கிறது மக்கள் நெற்றியிலும் நோய் உள்ள இடங்களிலும் பூசிக் கொள்கிறார்கள்.  (என் நிழல் விழுந்து இருக்கிறது. மக்கள் போய் கொண்டே இருந்தார்கள். எங்கேயும் ஒதுங்கி எடுக்க வழியில்லை.)

இந்தக் கோவில் யானை கோமதி பெருங்காட்டூர் திருக்கோட்டி அய்யனார் கோவிலில் இருந்து எடுத்து வரும் புற்று மண், பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

அம்மன் அபிஷேகத் தொட்டிக்கு  எதிரில்  ஒரு அறையில் சேமிக்கப்படுகிறது.
பக்தர்களும் இந்தப் புற்று மண்ணை வெள்ளி, செவ்வாய்க்கிழமையில் நேர்த்திக்கடனாக  ஓலைப்பெட்டியில் சுமந்துவந்து கொட்டுவார்களாம்.
கண்ணாடியில் பார்த்து நெற்றியில் அணிந்து விட்டு அப்படியே கண்ணாடியில் கையைத் தேய்த்துவிட்டுப் போவதால் இப்படி அறிவிப்பு.
கோவில் சுவர்களில் அழகிய சிலைகள்
கொற்றவை

நடராஜா தனிச் சன்னதியில் அழகிய அலங்காரத்தில்
பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாதரும்

திருவிழாவில் ஸ்வாமி அம்மன் உலா வரும் வாகனங்கள்
அழகிய பல்லாக்கு
வெள்ளிச் சப்பரம்
காமதேனு
பூத வாகனம்

வியாக்கிரபாதர்  வீணை மீட்டும் வாகனம்
No automatic alt text available.
தங்கம், வெள்ளி, விளைபொருட்கள் காணிக்கையாகப் போடும் இடம்.
தேள், பாம்பு, மனித உருவங்கள் வெள்ளியில் விற்கப்படுகிறது.
No automatic alt text available.
வெண்கலப் பாத்திரங்களும் காணிக்கையாக அளிக்கப்படுகிறது.
கோழி, சேவல், ஆடு, மாடும் காணிக்கை

சேலைகள்  விற்றுக்கொண்டு இருந்தார்கள், மூன்று சேலை 100 ரூபாய் என்று. காணிக்கைப் பொருட்கள் ஏலம்விடப்படுமாம்.
                                               Image may contain: sky, cloud and outdoor
                           சங்கரநயினார் கோவில் கோபுரம்
                                               Image may contain: outdoor
                                                     கோவில் யானை கோமதி.
                                           Image may contain: outdoor

ஆடி வெள்ளிக்கிழமை மாவிளக்கு மிகவும் முக்கியம் அம்மனுக்கு. அதுவும் இங்கு வேண்டிக் கொண்டு மாவிளக்கு பார்ப்பது மிகவும் விசேஷம். முன்பு கோவில் வாசலில் கடைகளில் மாவிளக்கு மாவு கிடைக்கும். வெளியூரிலிருந்து வரும் மக்கள் அங்கே வாங்கி மாவுவிளக்கு பார்த்துவிட்டு செல்வார்கள்.
இப்போது கிடைக்குதா என்று தெரியவில்லை.  பூஜை ஆகிறது என்று வேகமாய் உள்ளே வந்து விட்டோம், பூஜையைப் பார்க்க . வரும்போது வேறு வாசல் வழியாக ஆட்டோவில் உறவினருடன் திருவாவடுதுறை மடத்திற்குப் போய் விட்டோம்.
                                                    
வெளிப்புற கோபுரம் எடுக்க முடியவில்லை என்னால். அதனால் கூகுள்  படம்.
நன்றி கூகுளுக்கு.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செவ்வாய் தோஷம் நீங்க வழிபடுவார்கள்.
அது போல் இங்கும் செவ்வாய் தோஷம் நீங்க வழிபடும் தலமாய் விளங்குகிறது. திருமணத் தடை நீங்க , ராகு, கேது பரிகாரத் தலம், சர்ப்பதோஷம் நீங்க வழிபடும் தலம்.

எங்கள் பக்கம் (திருநெல்வேலி) பாம்பு, தேள், பூரான் கண்ணில் பட்டால் "அம்மா! கோமதி அம்மா! இவைகள் கண்ணில் படாமல் இருக்கவேண்டும்"  என்று வேண்டிக் கொள்வார்கள். தேள்,பூரான் கடித்தால் அம்மனை வேண்டி புற்று மண்ணைக் குழைத்துப் பூசிவிடுவார்கள், கொஞ்சம் அதைச் சாப்பிடுவார்கள். சரியாகி விடும் என்றும் சொல்வார்கள்.

                           

ஆடித் தபசு காலத்தில் அம்மனை  108 சுற்று சுற்றுவார்களாம். அதற்கு கோயில் வாளாகத்தில் ஒரு அட்டை கொடுக்கிறார்கள். தினம் எவ்வளவு சுற்றினோம் என்று குறித்துக் கொள்வார்களாம். மறுநாள் மறுபடியும் மீதியைத் தொடர்ந்து சுற்றுவார்களாம்.பத்து நாட்களில் சுற்றி  நிறைவு செய்வார்கள்.

கோவில்  பிரகாரத்தில் மக்கள்  சுற்றுவதால் அம்மன், சன்னதி, சுவாமி சன்னதி, சங்கரநாராயணர்  சன்னதியில் கூட்டம் இல்லை. 10 டிக்கட்   வாங்கி உள்ளே போனால் நன்றாக யாரும் விரட்டாமல் கண்குளிர தரிசனம் செய்தோம்.
இப்படி எல்லாக் கோவிலும் இருந்தால் எப்படி இருக்கும் என்று மனம் நினைத்தது.

பி.சுசீலா பாடிய  பாடல்  சங்கரன் கோவில் அம்மன் பாடல். கேட்க ஆசைப் பட்டால் கேட்கலாம். மிக நன்றாக இருக்கும்.

                                                                  வாழ்க வளமுடன்.

57 கருத்துகள்:

 1. ஆடி பௌர்ணமி, உத்திராட நட்சத்திரமான இன்று உங்கள் தயவால் ஸ்ரீ சங்கர நாராயணரை தரிசிக்க முடிந்ததில் சந்தோஷம். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நான் இந்தக் கோவில் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு பெரிய கோவில் என்பது தெரியாது . என் மகன் இந்தக் கோயில் மண் பிரசாதம் என்று கொண்டு வந்த பிரசாதம் எங்கள் வீட்டில் வைத்திருக்கிறேன் , விவரமாக விலக்கியதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. அழகிய படங்களும், தல வரலாறு சொல்லிய விதமும் அருமை சகோ

  பதிலளிநீக்கு
 5. Padikka aarambitha bothe manadukkul mumunutha paadal!!
  Thanks for sharing the details

  பதிலளிநீக்கு
 6. ஆவ்வ்வ் கோமதி அக்கா, இந்த சங்கரன்கோவில் என்பது எனக்கு எதனாலேயோ மிகவும் பரிச்சயமான ஒரு பெயர், ஆனா எதனால அது மனதில் பதிவாச்சு என நினைக்க நினைக்க வருகுதில்லை.

  அந்த ஸ்டேசன் போர்ட் பார்க்க ஊர் நினைவெல்லாம் வருது ஆசையா இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. ஆஹா என்ன அழகான விழுதுகளோடு ஆலமரம், நான் இப்படிப் பார்த்ததில்லை, ஊரில் ஒரே ஒரு ஆலமரம் நான் ஒரு4,5 வயதாக இருந்தபோது இப்படி விழுதுகளோடு இருந்து பார்த்த நினைவு பின்பு அதுவும் காத்துக்கு சரிந்து தறித்து விட்டார்கள்.. அதன் பின் ஆலமரம் பார்த்தாலும் இப்படி விழுதுகளோடு பார்த்த நினைவு இல்லை.

  பதிலளிநீக்கு
 8. கோயில் மண்டபத்துக்குள்ளேயே கடைகளோ? ஏன் அப்படி அனுமதித்தார்களோ... அதென்ன தபசுக்காட்சி என்றால்? அம்மன் கோபிச்சுக் கொண்டு போய் இருப்பதோ?

  //செவ்வாய்க்கிழமை வெள்ளிப்பாவாடையும், வெள்ளிக்கிழமை தங்கப்பாவாடையும் அணிகிறார்கள்.
  தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.//

  ஓ உண்மையான தங்கத்தில் பாவாடையோ?

  பதிலளிநீக்கு
 9. இது முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில்போல இருக்கே.. அதனால்தான் பெயிண்ட் ஏதும் இல்லை.

  //இந்தக் கோவில் யானை கோமதி பெருங்காட்டூர் திருக்கோட்டி அய்யனார் கோவிலில் இருந்து எடுத்து வரும் புற்று மண், பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.//

  ஓ புதுமையான தகவல்.

  பதிலளிநீக்கு
 10. இது ஒரு பழமை பேணும் கோயில்போல இருக்கு. ஆடம்பரமே இல்லாமல் அனைத்தும் கலர்ஃபுல்லாக்காமல்,, பழையன பேணப்படுவதுபோல தோணுது.

  ஓ கோமதி அக்கா, கோமதி யானை அக்காவைப் பார்த்திட்டா ஹா ஹா ஹா .. பெயருக்கேற்ப யானையாரும் அமைதியாக இருக்கிறா.

  //ஆடி வெள்ளிக்கிழமை மாவிளக்கு மிகவும் முக்கியம் அம்மனுக்கு//

  ஓ.. முருகனுக்கெல்லோ மாவிளக்கு முக்கியம் எனக் கேள்விப்பட்டேன்... அப்போ இன்னும் 2 ஆடி வெள்ளி இருக்கே.. ஒன்றுக்கு மாவிளக்கு.. ஒன்றுக்கு கொழுக்கட்டை செய்திடோணும் ..

  பதிலளிநீக்கு
 11. //பத்து நாட்களில் சுற்றி நிறைவு செய்வார்கள்.//ஓ எனக்கும் இப்படியான விசயங்கள் செய்ய விருப்பம். நவக்கிரகத்தை எகோயிலில் கண்டாலும் எண்ணி 9 தடவை சுற்றி விட்டுத்தான் வருவேன்:)).. என்னோடிருப்பவர்களுக்கு பொறுமை அதிகம் தேவை ஹா ஹா ஹா.

  அழகான ஆடி அம்மன் தரிசனம்.. அனைவரைவரையும் கோமதி அம்மன் காத்தருள வேண்டி விடை பெறுகிறேன்.. அதிராவையும்தேன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் அபயா அருணா, வாழ்க வளமுடன்.

  //நான் இந்தக் கோவில் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு பெரிய கோவில் என்பது தெரியாது . என் மகன் இந்தக் கோயில் மண் பிரசாதம் என்று கொண்டு வந்த பிரசாதம் எங்கள் வீட்டில் வைத்திருக்கிறேன் , விவரமாக விலக்கியதற்கு நன்றி //

  ஆமாம் அருணா, பெரிய கோவில், வரலாறு பெரிது நான் கொஞ்சம் தான் கொடுத்து இருக்கிறேன். கோவில் தோன்றிய வரலாறு, கட்டியமன்னர், கோமதி அம்மனுக்கு ஆவுடைஅம்மன் என்ற பேரும் உண்டு அதற்கு காரணம் என்று நெடிய வரலாறு உண்டு.
  புற்றுமண்ணுக்கு வரலாறு, கோவில் குளம் பார்க்க நேரம் இல்லை நாகசுனை அதன் வரலாறு என்று பெரிய கோவில் தான்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  வரலாறு அதிகமாய் இருக்கிறது.
  நான் கொஞ்சம் தான் கொடுத்து இருக்கிறேன்.
  இரண்டு, மூன்று பதிவு போடலாம்.
  அந்த கோவிலுக்கு போய் பலன் அனுபவித்த அனுபவ பகிர்வுகள் எண்ணற்றவை.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
  நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் போது
  முனு முனுத்த பாடலை நான் பகிர்ந்தது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
  எனக்கு பிடித்த பாடல்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

  //ஆவ்வ்வ் கோமதி அக்கா, இந்த சங்கரன்கோவில் என்பது எனக்கு எதனாலேயோ மிகவும் பரிச்சயமான ஒரு பெயர், ஆனா எதனால அது மனதில் பதிவாச்சு என நினைக்க நினைக்க வருகுதில்லை.//

  நம்மவர்கள் இங்கு வந்து போய் கொண்டுதானே இருக்கிறார்கள், தாத்தா, பாட்டி யாராவது போய் வந்து சொல்லி இருக்கலாம், படங்களை காட்டி இருக்கலாம்.


  //அந்த ஸ்டேசன் போர்ட் பார்க்க ஊர் நினைவெல்லாம் வருது ஆசையா இருக்கு.//

  ஊர் நினைவு வந்தது மகிழ்ச்சி.

  எனக்கும் ரயில் பயணம் செய்யும் போது விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் எல்லாம் கடந்து போகும் போது என் சிறு வயது நினைவுகள் வந்து உறவினர்களிடம் என் நினைவுகளை பகிர்ந்து கொண்டே வந்தேன்.
  சிவகாசியில் மூன்று வருடம் இருந்தோம், அப்போது பக்கத்தில் உள்ள ஊர்களுக்கும் போவோம். சிவகாசியில் கோவில்கள் அங்கு நடந்த விழாக்கள் எல்லாம் பற்றி பேசினேன்.

  பதிலளிநீக்கு
 16. //ஆஹா என்ன அழகான விழுதுகளோடு ஆலமரம், நான் இப்படிப் பார்த்ததில்லை, ஊரில் ஒரே ஒரு ஆலமரம் நான் ஒரு4,5 வயதாக இருந்தபோது இப்படி விழுதுகளோடு இருந்து பார்த்த நினைவு பின்பு அதுவும் காத்துக்கு சரிந்து தறித்து விட்டார்கள்.. அதன் பின் ஆலமரம் பார்த்தாலும் இப்படி விழுதுகளோடு பார்த்த நினைவு இல்லை.//

  அதிரா, விழுதுகள் தொங்கும் ஆலமரத்தை நிறைய பார்க்கலாம், இது போல விழுதுகள் பூமியில் கால் ஊன்றி நடுமரத்தை சுற்றி நின்று காப்பதை சில இடங்களில் தான் பார்க்கலாம்.

  குடும்பதலைவனை அன்பால் தாங்கும் குழந்தைகளை பெற்றவர்களை ஆலமரம் போன்ற தலைவன் விழுதுகள் போள் குழந்தைகள் என்று எடுத்துக் காட்டுக்கு சொல்வார்கள்.

  பாதை ஒரத்தில் உள்ள விழுதுகளை வெட்டிவிடுவார்கள். இது யாருக்கு இடைஞல் இல்லாத இடத்தில் இருக்கிறது.
  அடையார் ஆலமரம் மிக பிரபலம்.

  பதிலளிநீக்கு
 17. //கோயில் மண்டபத்துக்குள்ளேயே கடைகளோ? ஏன் அப்படி அனுமதித்தார்களோ...//

  அதிரா, கோயில் மண்டபத்துக்குள் கடை வைத்தால் கோவிலுக்கு வருமானம் வரும்.
  மக்களுக்கும் கோவில் சாமியை கும்பிட்டு விட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் வாங்கி போவது மகிழ்ச்சி.

  மதுரையில் கடைகளுக்கு தீ விபத்து நடந்தவுடன் கடையை வேண்டாம் என்று எடுத்தார்கள் இப்போது மீண்டும் சில கடைகளை திறந்து விட்டார்கள்.
  புது மண்டபம் என்ற இடத்தில் கடைகள் இருக்கும் இங்கே , அதில் கிடைக்காத பொருட்களே இல்லை அனைத்தும் கிடைக்கும். எல்லா ஊர்களில் இருந்து வருவோரும் அங்கு பொருட்கள் வாங்கி போவார்கள். அந்த கடைகளை அடைத்த போது மக்கள் அடைந்த ஏமாற்றம் அதிகம். இப்போது மீண்டும் திறந்து இருக்கிறார்கள்.

  //அதென்ன தபசுக்காட்சி என்றால்? அம்மன் கோபிச்சுக் கொண்டு போய் இருப்பதோ?//

  அதிரா, கோபித்துக் கொண்டு போகவில்லை இங்கு அம்மன்.
  அம்மா தன் குழந்தைகளின் சண்டையை தீர்த்து வைக்க தகப்பனிடம் முறையிட்டு நல்ல தீர்ப்பு வாங்கி தந்த கதை போல!

  தபசு என்றால் தவம் . தவம் செய்து நாம் வேண்டியதை பெறுவது போல் அம்மன் சிவனும், விஷ்ணுவும் சங்கரநாராயணராக காட்சி தர ஒற்றை காலை ஊன்றி தவம் செய்தார் இருவரும் ஒன்றாய் அம்மனுக்கு காட்சி தந்தார்கள்.

  பதிலளிநீக்கு
 18. //இது முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில்போல இருக்கே.. அதனால்தான் பெயிண்ட் ஏதும் இல்லை.//

  சாதரணமனிதன் கட்டிய கோவில் இல்லையே! மன்னர் உக்கிரபாண்டியர் கட்டிய கோவில்.
  அந்தக் காலத்து மன்னர்கள் இறைவனுக்கு கோவில் கட்டி அதை பராமரிக்க ஊர்கள், பொருட்கள் என்று கொடுத்து இருக்கிறார்கள். கட்டியவர்களும் நன்றாக ஏமாற்றாமல் கட்டி இருக்கிறார்கள். காலத்தால் அழியாமல் பாதுகாக்க படுகிறது இப்படி சில கோவில்கள்.

  //இது ஒரு பழமை பேணும் கோயில்போல இருக்கு. ஆடம்பரமே இல்லாமல் அனைத்தும் கலர்ஃபுல்லாக்காமல்,, பழையன பேணப்படுவதுபோல தோணுது.//

  ஆமாம் , பழமை மாறாமல் இருக்கிறது.
  உங்கள் கவனிப்பு அருமை.

  பதிலளிநீக்கு
 19. //ஓ கோமதி அக்கா, கோமதி யானை அக்காவைப் பார்த்திட்டா ஹா ஹா ஹா .. பெயருக்கேற்ப யானையாரும் அமைதியாக இருக்கிறா.//

  கோமதி அம்மன் சண்டை போட்டு காட்சி வாங்காமல் தவம் இருந்து பெற்று இருக்கிறார் அவர் போல அவர் யானையும் அமதி காக்க வேண்டமோ?

  ஓ! அமைதி நன்றி.

  //ஆடி வெள்ளிக்கிழமை மாவிளக்கு மிகவும் முக்கியம் அம்மனுக்கு//

  ஓ.. முருகனுக்கெல்லோ மாவிளக்கு முக்கியம் எனக் கேள்விப்பட்டேன்... அப்போ இன்னும் 2 ஆடி வெள்ளி இருக்கே.. ஒன்றுக்கு மாவிளக்கு.. ஒன்றுக்கு கொழுக்கட்டை செய்திடோணும் ..

  முருகனுக்கு சோமவார கார்த்திகை, சஷ்டி போன்ற நாட்களில் மாவிளக்கு பார்ப்பார்கள். அம்மனுக்கு ஆடி மாதம் மிக விஷேசம். வேண்டிக்கொண்டும் வேண்டுதல் நிறைவேறியபின் நன்றி தெரிவிக்கவும் மாவிளக்கு பார்ப்பார்கள்.

  ஆடி செவ்வாய் ஒளயையார் அம்மனுக்கு கொழுக்கட்டை செய்து கும்பிடுவார்கள்.
  மாவிளக்கு செய்து பதிவு செய்யுங்கள். நானும் பார்த்துக் கொள்கிறேன்.

  அத்தை இறந்து விட்டதால் நான் அடுத்த வருடம் தான் மாவிளக்கு பார்க்க முடியும்.

  பதிலளிநீக்கு
 20. /பத்து நாட்களில் சுற்றி நிறைவு செய்வார்கள்.//ஓ எனக்கும் இப்படியான விசயங்கள் செய்ய விருப்பம். நவக்கிரகத்தை எகோயிலில் கண்டாலும் எண்ணி 9 தடவை சுற்றி விட்டுத்தான் வருவேன்:)).. என்னோடிருப்பவர்களுக்கு பொறுமை அதிகம் தேவை ஹா ஹா ஹா.

  நானும் நவக்கிரகத்தை 9முறை சுற்றி வருவேன். என்னுடன் வருபவர்களுக்கும் பொறுமை வேண்டும்.

  அழகான ஆடி அம்மன் தரிசனம்.. அனைவரைவரையும் கோமதி அம்மன் காத்தருள வேண்டி விடை பெறுகிறேன்.. அதிராவையும்தேன்ன்ன்:))//

  அனைவருக்கும் என்று சொல்லும் போதே அதிராவும் அதில் உண்டு.
  கோமதி அம்மன் அனைவரையும் காத்தருள வேண்டி வந்தேன் கோவிலில், இங்கும் வேண்டிக் கொள்கிறேன்.

  அருமையான பின்னுட்டங்கள் போட்டு உற்சாகபடுத்திய அதிராவுக்கு நன்றி நன்றி.

  பதிலளிநீக்கு
 21. உறவுகளுடன் ரயிலில் செல்வது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்திருக்கும். அதுவும் கூட்டம் இல்லாத ரயில்!

  பதிலளிநீக்கு
 22. புராணக்கதை சுவாரஸ்யம். படங்கள் அழகு. செல் படங்களா? கேமிரா படங்களா? சில படங்களை முக நூலிலும் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 23. //கோயில் மண்டபத்துக்குள்ளேயே கடைகளோ? ஏன் அப்படி அனுமதித்தார்களோ... அதென்ன தபசுக்காட்சி என்றால்? அம்மன் கோபிச்சுக் கொண்டு போய் இருப்பதோ?//

  அதிரா.. தமிழகக் கோவில்களில் இரு ரொம்ப சகஜம்.

  பதிலளிநீக்கு
 24. அருமையான பதிவுடன் , அழகிய படங்கள்..

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  கூட்டம் இல்லாத ரயில் எதிர் எதிராக உட்கார்ந்து கொண்டு
  உறவுகளுடன் கதை பேசி வந்தது நன்றாக இருந்தது.
  கையில் எடுத்து வந்த உணவை சாப்பிடும் போது மேலும் ருசியாக
  இருப்பதாய் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 26. //புராணக்கதை சுவாரஸ்யம். படங்கள் அழகு. செல் படங்களா? கேமிரா படங்களா? சில படங்களை முக நூலிலும் பார்த்தேன்.//

  ஸ்ரீராம், செல் படங்கள் தான் காமிரா எடுக்க பயம். அங்கு ஒன்று போடவில்லை (எடுக்கவேண்டாம் என்று)இருந்தாலும் காமிராவில் எடுக்கவில்லை. கண்காணிப்பு காமிரா வைத்து உள்ளார்கள் எல்லா இடத்திலும்.

  பதிலளிநீக்கு
 27. //அதிரா.. தமிழகக் கோவில்களில் இரு ரொம்ப சகஜம்.//

  ஸ்ரீராம், தமிழகக் கோவில்களில் மட்டும் இல்லை, வெளி நாட்டிலும் கோவில் வளாகத்தில் கடைகள் வைத்து இருக்கிறார்கள். நம் கோவில்களில்.

  சுற்றுலா தளங்களிலும் கடை வழியாக போய் பார்க்கவேண்டும் அல்லது வரும் போது கடை வழியாக வரும்படி வாசல் வைத்து இருபார்கள்,
  அப்போதுதான் பொருட்கள் விற்பனையாகும் என்று.
  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் Ajai Sunilkar Joseph, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. இப்பதான் சங்கரநாராயணன் கோவில் பத்தி பதிவு போட்டுட்டு வந்தேன். படங்கள் அருமை

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
  பவானி காலை தான் படித்து கருத்து போட்டேன்.
  அதற்குள் சங்கர நாராயணன் பதிவு போட்டு விட்டீர்களா?
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. கோவிலுக்குள் உங்கள் கூடவே வந்தது போன்ற உணர்வு. நல்ல படங்கள். தல வரலாற்றுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 32. கோவில் பெயரில் வியாபாரம்பெருகும் வாய்ப்பு அதிகமல்லவா வியாபாரம் இல்லாதகோவில்களேஇல்லை எனலாம்

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  கடைகள் இல்லாத கோவில்களே கிடையாதுதான்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 35. சிறப்பான தகவல்கள் மா....

  படங்களும் நிறையவே இருப்பதால் கோவிலுக்குள் வந்த உணர்வு. நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 36. ஶ்ரீராம், கோமதி அக்கா...
  கோயில் வளவுக்குள் திருவிழா நேரம் கடைகள் போட விடுவார்கள் எங்கும், ஆனா இது கோயில் மண்டபத்துக்குள்ளேயே கடைகள் அதுதான் ஆச்சரியம்!

  மண்டபத்தில், சுவாமி கும்பிட்டு விட்டு வந்திருந்து ஆற அமர இளைப்பாறலாமெல்லோ..

  பதிலளிநீக்கு
 37. படங்கள் அத்தனையும் அழகாக இருக்கின்றன. விவரங்களும் அறிந்து கொண்டோம். கதையும். கோபுர படங்கள் வெகு அருமை சகோதரி.

  துளசிதரன்

  கோமதிக்கா முதல் படமே அட்டகாசம் என்றால் கடைசி கோபுரப் படமும் செம அழகு.

  ஆமாம் உறவுகளுடன் பயணம் என்றால் சந்தோஷமாகத்தான் இருக்கும். ரயில் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த ரயில் நிலையத்து ஆலமர விழுது செம அழகு!!

  புற்றுமண் நோய் தீர்க்கும் ஆஹா! அதுவும் // இந்தக் கோவில் யானை கோமதி பெருங்காட்டூர் திருக்கோட்டி அய்யனார் கோவிலில் இருந்து எடுத்து வரும் புற்று மண், பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.// ஹை உங்கள் பெயர் கோயில் யானைக்கு!! சூப்பர் அதான் எங்கள் கோமதிக்காவுக்கும் அந்த கோயில் யானையைப் போன்ற நல்ல மனசு

  கண்ணாடியில் எழுதப்பட்டிருக்கும் வரிகள் நல்லாருக்கு...எழுத வேண்டியதுதான் மக்கள் கோயில் தூண்களில் துடைப்பது என்று ரொம்பவே அழுக்காக்குகிறார்கள்தான்...

  கோயில் சுவர்கள் சிலைகள் ரொம்ப அழகா இருக்கு...கொஞ்சம் ஆங்காங்கே சிதைந்திருந்தாலும்....

  கோயில் மண்டபத்துள் கடைகள் என்பது பல கோயில்களிலும் இருப்பதுதான் இப்போது. ஒரு வகையில் கலர்ஃபுல்லா இருந்தாலும் மற்றொரு வகையில் கோயில் அழகு கெடுவது போல இருக்கும். யானை ரொம்ப அழகு அக்கா!!!

  விவரங்கள் அனைத்தும் அறிந்தோம் அக்கா...அழகான கோயில்

  கீதா


  பதிலளிநீக்கு
 38. தெய்வீக உணர்வு மனத்திற்கு மருந்து. அழகிய தத்ரூபமான படங்கள். மிக்க நன்றி.
  உங்கள் பெயர் கொண்ந்த்டு நீங்கள் சங்கரன் கோயில் ஊரில் பிறந்திருப்பீர்கள் என்று நான் எண்ணியதுண்டு.

  பதிலளிநீக்கு
 39. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

  //கோயில் வளவுக்குள் திருவிழா நேரம் கடைகள் போட விடுவார்கள் எங்கும், ஆனா இது கோயில் மண்டபத்துக்குள்ளேயே கடைகள் அதுதான் ஆச்சரியம்!

  மண்டபத்தில், சுவாமி கும்பிட்டு விட்டு வந்திருந்து ஆற அமர இளைப்பாறலாமெல்லோ..//

  கோவிலுக்கு போய் சாமி கும்பிடும் மக்களுக்கு கடைகளை சுற்றிப்பார்த்து மனதுக்கு பிடித்த பொருட்களை வாங்குவதே இன்பம். (அதுவும் குறிப்பாக சுற்றுலா வரும் மக்களுக்கு)

  ஆற அமர இளைப்பாற கோவில் வளாகத்தில் நிறைய இடங்கள் இருக்கிறது.திருவிழா கடைகள் இல்லை இது எப்போதும் உள்ள கடைகள்.

  உங்கள் மீள் வருகைக்கு நன்றி.


  பதிலளிநீக்கு
 40. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.

  துளசிதரன், உங்கள் பணிகளுக்கு இடையில் பதிவை படித்து கருத்து சொல்வதற்கு நன்றி.

  கோபுரம் உடபக்கம் இருந்து எடுத்தேன் கீதா.உறவுகளுடன் பயணம் என்றும் மகிழ்வுதான்.

  ஆலமரம் அவசரத்தில் எடுத்தது, எல்லோரும் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார்கள் அவர்களை பிடிக்கவேண்டும் என்ற நிலையில் எடுத்த படம். அடுத்த தடவை போக சந்தர்ப்பம் கிடைத்தால் விழுதுகளை பிடித்து கொண்டு நன்றி சொல்லி ஒரு படம் எடுக்க வேண்டும்.

  கோவில் யானைக்கு அன்னை கோமதியின் பெயர். எனக்கு அம்மாவின் அம்மா(பாட்டி) பெயர்.
  கண்ணாடிக்கு மேல் எழுதபட்ட வாசகத்தை ரசிப்பீர்கள் என்றுதான் பகிர்ந்தேன் கீதா.
  மண்டபத்தில் உள்ள சிற்பங்களை ரசிக்க முடியாமல் கடைகள் இருப்பது வருத்தம் தான், ஆனால் இவை தவிர்க்க முடியாதவை ஆகி விட்டது. தீவிபத்துக்கு பின் கடை கிடையாது என்றார்கள் மதுரை மீனாட்சி கோயிலில், இப்போது மீண்டும் திறந்து விட்டார்கள்.

  பதிவில் அனைத்தையும் படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 41. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
  நலமா சார்?

  //தெய்வீக உணர்வு மனத்திற்கு மருந்து. அழகிய தத்ரூபமான படங்கள். மிக்க நன்றி.
  உங்கள் பெயர் கொண்ந்த்டு நீங்கள் சங்கரன் கோயில் ஊரில் பிறந்திருப்பீர்கள் என்று நான் எண்ணியதுண்டு//

  தெய்வீக உணர்வு மனதிற்கு மருந்துதான் , நீங்கள் சொல்வது உண்மை.
  படங்களை ரசித்தமைக்கு நன்றி.
  எங்கள் பக்கம் வீட்டுக்கு ஒரு கோமதி, சங்கர கோமதி, கோமதி சங்கரி, ஆவுடையம்மாள் இருப்பார்கள் இவை எல்லாம் சங்க்கரன் கோவில் அன்னையின் பெயர்.
  எனக்கு என் பாட்டியின் பெயர். எங்கள் குடும்பத்தில் முதல் பிறந்த குழந்தைக்கு அப்பாவின் அம்மா பேர் பெண் குழந்தை என்றால், ஆண் குழந்தை என்றால் அப்பாவின் அப்பா பேர்.
  அடுத்து பிறக்கும் குழந்தைக்கு அம்மாவின் அம்மா, அப்பா பேர் வைப்பார்கள் அப்படி வந்த பேர் எனக்கு.
  பெயர் காரணம் பதிவு போட்டு இருக்கிறேன் முன்பு.

  //உங்கள் பெயர் பார்த்து நானும் அப்படித் தான் நினைத்திருந்தேன். //
  அதற்கு நீங்கள் போட்ட பின்னூட்டம்.

  http://mathysblog.blogspot.com/2011/03/blog-post.html

  மீண்டும் படித்துப் பார்க்கலாம் சார்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 42. //உங்கள் பெயர் பார்த்து நானும் அப்படித் தான் நினைத்திருந்தேன்.
  அதற்கு நீங்கள் போட்ட பின்னூட்டம்.//

  எத்தனை வருஷங்கள் ஆனாலும் சில எண்ணங்கள் மறக்க முடியாதவை. ஏறத்தாழ ஏழு வருஷங்களுக்கு முன்னும் இதே சிந்தனையில் இருந்திருக்கிறேன், பாருங்வள்.

  ஜீஎம்பீ ஐயா பல சமயங்களில் பழைய பதிவுகளையே மீண்டும் மீண்டும் போட்டாலும், என்றைக்கோ அவரின் பழைய பதிவுக்கு நான் போட்ட பின்னூட்டம் மீண்டும் பலசமயங்களில் அதே எண்ணத்துடன் வரும். நம் மனத்தில் பதிந்து போன சில எண்ணங்கள் தாம் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

  நலமே. தற்போது யூ.எஸ்.ஸில் இருக்கிறேன் கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 43. வணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 44. நெல்லைச் சீமையில் சுற்றி வந்தாலும் இன்னும் கோமதி அம்பிகையைத் தரிசிக்க வில்லை எனும் குறை உள்ளது...

  தங்களது பதிவைக் கண்டு மகிழ்ந்தாலும்
  நாம் செல்வது என்றைக்கு என, ஏங்குகின்றது மனம்...

  அனைவருக்கும்
  நலம் அருள்வாளாக - அன்னை கோமதி..

  பதிலளிநீக்கு
 45. நல்ல தரிசனம், மதுரையில் இருந்தப்போ நிறையப் போயிருக்கோம். அதன் பின்னர் திருநெல்வேலிச் சுற்றுலாவின் போது ஒரு முறை இரண்டு பேருமாகப் போனோம். அங்கே தான் சந்நிதிக்கு அருகே பூலித் தேவன் மறைந்த சுரங்கப்பாதை என்றும் ஓர் இடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும். நாங்க போனப்போ டிஜிடல் காமிரா அப்போ எங்களிடம் இல்லை. ஃபில்ம் மாற்றும் காமிரா தான்! அதுவும் தீர்ந்துவிட்டிருந்ததால் வாங்கிப் போடலை! கானன் காமிராவுக்கு அங்கே கிடைக்கலை!

  பதிலளிநீக்கு
 46. சங்கரன் கோயில் நாயகர் பற்றிய ஓர் உண்மைச் சம்பவம் முன்னர் பகிர்ந்திருந்தேன் அதன் சுட்டி இங்கே! தமிழ்த்தாத்தாவின் நினைவு மஞ்சரியில் இருந்து
  https://aanmiga-payanam.blogspot.com/2010/01/blog-post_08.html

  https://aanmiga-payanam.blogspot.com/2010/01/blog-post_4733.html

  https://aanmiga-payanam.blogspot.com/2010/01/blog-post_09.html

  https://aanmiga-payanam.blogspot.com/2010/01/blog-post_11.html

  பதிலளிநீக்கு
 47. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
  நீங்கள் யூ.எஸ்.ஸில் இருப்பது தெரியும் சார்.
  நீங்கள் நலமாய் பேரன் பேத்திகளுடன் மகிழ்ந்து இருங்கள்.

  //ஜீஎம்பீ ஐயா பல சமயங்களில் பழைய பதிவுகளையே மீண்டும் மீண்டும் போட்டாலும், என்றைக்கோ அவரின் பழைய பதிவுக்கு நான் போட்ட பின்னூட்டம் மீண்டும் பலசமயங்களில் அதே எண்ணத்துடன் வரும். நம் மனத்தில் பதிந்து போன சில எண்ணங்கள் தாம் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.//

  ஆமாம் சார், நீங்கள் சொல்வது உண்மை.
  மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி சார்.


  பதிலளிநீக்கு
 48. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  வேலை பளு குறைந்து இருக்கா?
  பழைய இரண்டு பதிவுகளுக்கு உங்களை காணோம் .

  //நெல்லைச் சீமையில் சுற்றி வந்தாலும் இன்னும் கோமதி அம்பிகையைத் தரிசிக்க வில்லை எனும் குறை உள்ளது...//

  மீண்டும் ஒரு ஆன்மீக பயணம் போட்டு வாருங்கள்.

  //நாம் செல்வது என்றைக்கு என, ஏங்குகின்றது மனம்...//

  அம்மை நினைத்தால் அழைத்து விடுவாள்.

  //அனைவருக்கும்
  நலம் அருள்வாளாக - அன்னை கோமதி..//

  அனைவருக்கும் நலம் அருள்வாள் அன்னை.

  உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 49. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
  கோவிலில் படங்கள் எடுக்கலமோ கூடாதோ என்று பயந்து கொண்டு செல் போனில் எடுத்த படங்கள். கோவிலில் கூட்டம் இல்லாத நேரம் போய் ஆற அமர படங்கள் எடுக்க வேண்டும்.

  //சங்கரன் கோயில் நாயகர் பற்றிய ஓர் உண்மைச் சம்பவம் முன்னர் பகிர்ந்திருந்தேன் அதன் சுட்டி இங்கே! தமிழ்த்தாத்தாவின் நினைவு மஞ்சரியில் இருந்து//

  படிக்கிறேன் கீதா.

  உங்கள் கருத்துக்கு நன்றி.  பதிலளிநீக்கு
 50. கணினியைத் திறந்தே சில நாட்கள் ஆகின்றன..

  நுண்ணலைபேசி வழியாக Blogger திறந்தால் சமயத்தில் மூடுவது சிரமமாகின்றது...

  திருப்பரங்குன்றத்துடன் மறக்கவே இயலாத நிகழ்வுகளை பின்னிக் கிடக்கின்றன...

  நாளை வருகின்றேன்...

  பதிலளிநீக்கு
 51. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.


  //திருப்பரங்குன்றத்துடன் மறக்கவே இயலாத நிகழ்வுகளை பின்னிக் கிடக்கின்றன...//

  ஓ! நிகழவுகளை பதிவாக்குங்கள். இனிமையான நிகழ்வுகள்தானே?

  மறுமொழிக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 52. புகைப்படங்களும் அரிய தகவல்களும் அருமை! அந்த பூத கணமும் காமதேனுவும் மிகவும் அழகு!

  பதிலளிநீக்கு
 53. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
  பதிவையும் படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 54. அருமையான கோவில்...

  மறுபடியும் இன்று தரிசனம்... நன்றி அம்மா...

  பதிலளிநீக்கு
 55. வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 56. அருமையான பக்திப் பதிவு
  கோவிலைத் தரிசித்த நிறைவு

  பதிலளிநீக்கு