சனி, 16 ஏப்ரல், 2016

வடக்கு மாசி வீதியிலே!




 சித்திரைத் திருவிழாவைப் பார்க்கக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள் என் தங்கை.  அவள் வீடு வடக்கு மாசி வீதியில் இருக்கிறது,அங்கு தான்  மீனாட்சி கோவில் சித்திரைத் திருவிழாப் பார்க்க எப்போதும் போவோம். இம்முறை நான் போகவில்லை ஐந்து நாளாய். நேற்று வீட்டுக்கு வந்து கையோடு கூட்டி சென்று விட்டாள். ”இன்று ரிஷபவாகனத்தில் சுவாமியும் பிரியாவிடையும், ரிஷபவாகனத்தில் மீனாட்சி வருவதை பார்ப்பது நல்லது” என்று சொன்னாள். போய் தரிசனம் செய்து வந்தோம்.  தினமும் என் தங்கை வீடு,  உறவினர், நண்பர்கள் வருகையால்  விழாக் கோலம் பூண்டு இருக்கும் மகிழ்ச்சி அலைகளைப் பரப்பிக் கொண்டு.

 உள்ளூர் தொலைக்காட்சியில் நேரலையாக  சுவாமி கோவிலைவிட்டு கிளம்பி வருவது முதல்  எந்த இடத்தில் வந்து கொண்டு இருக்கிறது என்றும் காட்டிக் கொண்டு இருந்தார்கள். எங்கள் தங்கை வீட்டுக்கு வரும் நேரம் அறிந்து 8.30க்கு நல்ல இடம் பார்த்து அமர்ந்து கொண்டோம்.(நடை  மேடையில்) நிறைய பேர்  நடு ரோட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள். மாலையில் வீதி முழுவதும் தண்ணீர் லாரி பூ மாதிரி நீரைப் பொழிந்து கொண்டு போனது.

குழந்தைகள் வித விதமாய் அலங்காரம் செய்து கொண்டும் கோலாட்டம் செய்து கொண்டும் வந்தார்கள். மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்றவைகளும் இருந்தன. மீனாட்சி வேடத்தில்  பெண்கள் நிறைய பேர் பவனி வந்தார்கள், கேரள பாணி உடை அணிந்து ஆடி வந்தார்கள்.சிவன், பார்வதி உடையில், கருப்பண்ணசாமி  மாதிரி வந்து கையில் அரிவாளுடன் அருமையாக ஆடினார்கள். அஷ்டபுஜ துர்க்கை வேடம் அணிந்து வந்தாள் ஒரு பெண்.

முதலில் வந்த கோவில்யானை ’பார்வதி’.

மின் விசிறி விளம்பரமும் ஆச்சு, வந்து இருக்கும் பக்தர்களுக்கு  நல்ல காற்று வீசியது போலவும் ஆச்சு.  
மீனாட்சி அம்மன் கோவில் அம்மனைத் தரிசிக்க வரும் பக்கதர்களுக்கு  பல வருடங்களாய்  விசிறி சேவை செய்து வந்தவர் வீதியில் காத்து இருக்கும் பக்தர்களுக்கு விசிறி சேவை செய்தார்.

அவர் மகன் என்று சொன்னார்கள். அவர்களும்  இருமருங்கில் இருக்கும் பக்தர்களுக்கு விசிறி சேவை செய்தார்.
நாராயணா என்று விசிறியால் வீசிச் சென்றார்கள் 
ரமணா தையல் மிஷின் விளம்பரம் செய்த விசிறியால் பக்தர்களுக்கு வீசி சென்றார்கள்.

பக்தர்களுக்கு விசிறிகள் இருப்பது சிறப்புதானே!

சுவாமியும் , அம்மனும் தங்க ரிஷபத்தில்
தங்க ரிஷபத்தில்

அழகிய வேலைப்பாடு நிறைந்த ரிஷபம்.

மீனாட்சி அம்மன் 
வெள்ளி ரிஷபத்தின்  பின்புறம்

பெரிய தொலைக்காட்சி பெட்டியில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டு  போய்க்கொண்டு இருந்தார்கள்>(மினி வேனில்.)


ஜவ்வு மிட்டாய் மூன்று ருசிகளில் --சுக்கு கலந்த மிட்டாய்,  கமர்கட் போன்ற மிட்டாய், ஜவ்வாய் இருக்கும் ஜவ்வு மிட்டாய்(ரோஸ்கலர்)
திருவிழாவில் உள்ள அனைத்தும் அங்கு இருந்தது. ஜவ்வு மிட்டாய், பஞ்சு மிட்டாய், சூடான நிலக்கடலை, பட்டாணிசுண்டல், குல்பி ஐஸ்கீரீம்  எல்லாம் விற்றார்கள்.  எல்லாரும் வாங்கிக் கொண்டு இருக்கும்போது காவல்துறையினர் விற்பவர்களை  அந்த இடத்தில் நிற்கவிடாமல் விரட்டிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் பாவம் ஓடிக் கொண்டே இருந்தார்கள். தங்கை பெண் வாங்கி தந்தாள்  ஜவ்வு மிட்டாய்கள்.

                                                             
                                                                     பஞ்சு மிட்டாய்

அலங்காரக் குடைகள்
கோலாட்டங்கள் 
பொய்க்கால் குதிரை போல் பொய்க்கால் மாடு --அப்பாவின் தோளின் மேல் இருந்து பார்க்கும் குழந்தை பின்புறம்.

அஷ்டபுஜ துர்க்கை அலங்காரம்

சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு வந்தார்கள் இரண்டு சிறுவர்கள்.

               
கோலாட்டம் ஆடிக் களைத்துப் போய் அப்பாவின் தோள் மீது இளைப்பாறும் குழந்தை.

உயரமாய்    கட்டைக்காலை வைத்துக் கொண்டு ஆடிய இருவர். நான் படம் எடுக்கும் போது ஒருவர்  யாரிடமோ பேச குனிந்து  விட்டார்.

                                                
                           கடைசியில் தேவாரம் பாடிக் கொண்டு போனார்கள்.

                                                       
காவல்துறை வாகனத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டு வந்தார்கள் ’பெண்கள் அணிந்து இருக்கும் நகைகள் பெயர் சொல்லி பத்திரம், பத்திரம்! கவனம்! கவனம்!’ என்று.

ஊர்கூடி திருவிழாவைச் சிறப்பாய் நடத்தி மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

                                                                 வாழ்க வளமுடன்.
                                                                        -----------------------

39 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு.
    அசத்தலான படங்கள்.
    வியப்பூட்டும் செய்திகள்.
    பாராட்டுகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    விசிறிகள், வெள்ளி ரிஷபம் முதலியன சூப்பர் !

    பதிலளிநீக்கு
  2. அருமை. முன்னெல்லாம் வேஷம் கட்டிக் கொண்டு வந்து பார்க்கலை. இப்போ வராங்க போல. கிட்ட இருந்து தரிசனம் பார்த்த சந்தோஷம்! சித்திரைத் திருவிழா பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டன! :(

    பதிலளிநீக்கு
  3. நாங்களும் வடக்கு மாசி வீதியிலே தான் பார்ப்போம். எப்போவானும் சின்னக்கடையில் பூக்கள் கொட்டும் இடத்துக்குப் போவது உண்டு.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
    படங்கள் இருட்டில் இவ்வளவுதான் எடுக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    வடக்கு மாசி வீதி அழைத்து வந்து விட்டதா?
    முன்பு எல்லாம் நீங்கள் சொன்னது போல் வேஷம் கட்டி வருவது இல்லை.
    தேவார பாடல் பாடும் ஓதுவார்களும், நடனமாடுபவர்களும் மட்டும் இருப்பார்கள். இப்போது குழந்தைகளை ஒப்பனையாளர்களை வைத்து ஒப்பனை செய்து ஆட வைத்து மகிழும் பெற்றோர்கள், குடும்பத்தினர் இருப்பதால் இப்போது நடக்கிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. விழாவில் நேரடியாகக் கலந்துகொண்ட உணர்வு ஏற்பட்டது. இறைவன், இறைவி, காண வரும் பக்தர்கள், சூழல் என்ற அனைத்து நிலையிலும் புகைப்படங்கள் அருமை. ரிஷப வாகனத்தில் நம்மூர் இறைவனும், இறைவியும் வரும் காட்சியைக் காணக் கொடுத்துவைத்திருக்கவேண்டும். அவ்வகையில் நான் கும்பகோணத்தில் அதிகம் பார்த்துள்ளேன். ரிஷப வாகன அழகு தனியேதான். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //மின் விசிறி விளம்பரமும் ஆச்சு, வந்து இருக்கும் பக்தர்களுக்கு நல்ல காற்று வீசியது போலவும் ஆச்சு//

    ஹாஹாஹா ஏதோ கம்பெனிகளுக்கு ஊமைக்குத்து மாதிரி இருக்கின்றதே...
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  8. மதுரை சித்திரைத் திருவிழா பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன. நாங்கள் ரேஸ் கோர்ஸ் காலனியில் இருந்தபோது அழகர் ஆற்றில் இறங்க வரும்போதும்,திரும்பும்போதும் கூடும் கூட்டம்...அவர்கள் சாப்பிடக் கொண்டு வரும் பண்டங்கள்...சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவாகனத்தில் வரும் சாமி வேறு வேறு நலங்களை வழங்குகிறார் என்று நம்ப படுகிறது. ரிஷப காட்சி அனுக்கிரக மூர்த்தியாம்.
    இறைவன் அனுகிரகம் நல்லது தானே!
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் ஊமைக்குத்து எல்லாம் இல்லை உண்மையை சொன்னேன்.
    உங்கள் கருத்துக்கும் தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  11. @ மதுரைச் சித்திரைத் திருவிழாவை ஒரு வித்தியாசமான கோணத்தில் வாசிப்பது மகிழ்ச்சி தருகிறது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    அழகர் ஆற்றில் இறங்குவதைப்பார்க்க வரும் கிராமத்து மக்கள் மாட்டு வண்டிகளில்
    வருவார்கள் சமைத்து சாப்பிட அவர்கள் கொண்டு வரும் உணவு பொருளை வண்டியில் தோரணமாய் கட்டி கொண்டு வருவதையும் பார்த்து இருக்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. சித்திரைத் திருவிழாவிற்கு மதுரைக்கு வந்தது போல் ஒரு அனுபவம்...
    அருமையான படங்கள்.... அழகு அம்மா...

    பதிலளிநீக்கு
  15. எப்படியோ...
    தங்களால் நானும் தரிசனம் கண்டேன்.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  16. கீத மஞ்சரி has left a new comment on your post "வடக்கு மாசி வீதியிலே!":

    கோவில் திருவிழாக்களைப் பற்றி பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேனே தவிர எந்தத் திருவிழாவிலும் கலந்துகொண்டு காட்சிகளை நேரில் ரசித்ததில்லை. அந்தக் குறையைப் போக்கிவிட்டது உங்கள் பதிவும் படங்களும். நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    அடுத்தமுறை திருவிழா சமயம் வந்துவிடுங்கள் இந்தியாவிற்கு.
    திருவிழா பார்க்கலாம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. ஒரு காலத்தில் மதுரையில் வாழ்ந்த நினைவுகள் மனசில் உலா வந்து உவகை கொள்ள வைத்தன.

    பதிலளிநீக்கு
  21. நல்ல கோர்வையான தகவல்கள். படங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  22. சகோதரர் தமிழ் இளங்கோ வணக்கம் , வாழ்க வளமுடன்.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. அருமையான பதிவு
    அழகியப் படங்கள்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஜீவி சார் , வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. சகோதரர் கரந்தைஜெயக்குமார் வணக்கம், வாழ்க வளமுடன்.உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. உங்களின் அருமையான விளக்கங்களும் அழகிய புகைப்படங்களும் நிஜமாகவே ஒரு திருவிழாவில் கலந்து கொள்கிற உணர்வினை ஏற்படுத்தி விட்டது!

    பதிலளிநீக்கு
  27. எல்லாமே எங்க ஊர் திருவிழா பார்த்தமாதிரி இருக்கு அக்கா. அங்கும் இப்படி மிட்டாய் கள் வாங்கி சாப்பிட்ட பழைய ஞாபகங்கள் வந்தன. நன்றிகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் மனோசாமிநாதன் , வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன். உங்கள் ஊர் நினைவு வந்து விட்டதா? உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. படங்களும் பகிர்வும் அருமை. திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வு!

    பதிலளிநீக்கு
  31. என் கணவர் சிறிய வயதில் மதுரையின் இருந்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவிழாவின் போது பழைய நினைவுகளை அசைபோட ஆரம்பித்துவிடுவார். அவர் விவரிப்பதை உங்களின் புகைப்படங்கள் காட்டின.
    நான் மதுரை சித்திரத் திருவிழா சேவித்தது இல்லை இதுவரை. அதற்கும் கொடுப்பினை வேண்டுமே!

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
    இப்போது அழகர் திருவிழா நடக்கிறது. இப்போது வந்தால் திருவிழா பார்க்கலாம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. பதிவிற்கு என் தாமதமான வருகைக்கு
    சின்ன வருத்தம்தான்....
    தங்களின் பின்னூட்டங்களை பிற
    தளங்களில் பார்க்கும் போதே
    நினைப்பேன் தங்கள் தளத்தை
    தொடர வேண்டும் என்று....
    ஆனால் இன்றைக்கு அது நிறைவேறியது.

    திருவிழாவை நேரில் பார்த்த உணர்வுகள்
    இந்த பதிவால்....

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் Ajai Sunilkar Joseph, வாழ்க வளமுடன்.
    என் தளத்தை தொடர நினைத்தமைக்கு நன்றி.
    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. ஆகா. ஐந்து வருடங்கள் மதுரையில் இருந்தேன். வாரம் ஒருமுறை மீனாட்சி சொக்கரையும் தினமும் கோபுரதரிசனமும் செய்துவிடுவேன். ஏங்குகிறது மனம் இப்போது. இந்தப் பதிவு ஆறுதல் தருகிறது. நன்றி

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் சிவகுமாரன் , வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. மதுரை எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்த ஊர். துளசி படித்த ஊர், தேனியின் அருகில் பிறந்து வளர்ந்த ஊர். துளசி திருவிழா கண்டதுண்டு. கீதாவின் உறவினர்கள் இப்போதும் இருப்பதால் பல முறை வருகை தந்த ஊர். ஆனால் திருவிழா பார்த்தது இல்லை என்றாலும் சொக்கனைக் கண்டுச் சொக்கித் தரிசித்த தருணங்கள் பல. அம்மையையும் தான்!

    அருமையான படங்கள். திருவிழா கண்ட நிறைவு தாமதமாக வந்தாலும்!!!

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் துளசிதரன், கீதா, வாழக வளமுடன்.
    தேனி பக்கமா? நாங்கள் தேனியில் ஒருவருடம் இருந்து இருக்கிறோம். என் அப்பா அங்கு வேலை பார்த்தார்கள்.
    நல்ல ஊர். கொடைக்கானல் அடிவாரம் என்பதால் இயற்கைஎழில் சூழ்ந்த ஊர்.

    உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு