திங்கள், 4 ஏப்ரல், 2016

கோடையிலே நீர்தேடித் தவிக்கும் பறவைகள்







கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
           குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
             உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
             மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
            
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.  


வள்ளலார் சொன்னது போல் அனைத்து உயிர்களுக்கும் நீரும் நிழலும்  இறைவன் தரவேண்டும்.(நீரும் , நிழலுமாய் இறைவன் இருப்பார்)

கோடையில் எல்லா உயிர்களும் நிழலுக்கும், தண்ணீருக்கும் தவித்து வருகிறது .  நாங்கள் மாயவரத்தில் இருந்தவரை தண்ணீர் கஷ்டம் என்பதே இல்லை. மதுரைக்கு வந்தபின் மக்கள் தண்ணீருக்கு கஷ்டபடுவதை பார்க்கும் போது மனது மிகவும் வேதனை படுகிறது.


முன்பு ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் மண் போட்டு அந்த மண்மேல் ஒரு மண் பானை அதில் குளிர்ந்த தண்ணீர் இருக்கும். தெருவோரம் நடந்து போகிறவர்கள் எல்லோரும்  எடுத்து அருந்தி செல்வார்கள். (தவித்த வாய்க்கு தண்ணீர் என்று. )

  இப்போது மினரல் வாட்டர் என்று கையில் தண்ணீர் பாட்டிலுடன்  செல்கிறார்கள், மக்களுக்கு கண்ட இடத்தில் தண்ணீர் அருந்தக் கூடாது என்ற எண்ணம் வேறு இருக்கிறது. வீடுகளில் இப்போது திண்ணையும் இல்லை, தண்ணீர் வைப்பதும் குறைந்து விட்டது.

 ஒரு சில வீடுகளில் தண்ணீர் வைக்கும் வழக்குமும், வீட்டுக்கு வந்தவர்களுக்கு ஒரு வாய் தண்ணீராவது கொடுக்க வேண்டும் என்ற பழக்கத்தையும் கடைபிடிப்பதால்  இன்னும் சில இடங்களில் காணப்படுகிறது.

வீட்டு வாசலில் குளு குளு என்று நிழல் தரும் வேப்பமரமும் இருக்கும் எல்லோரும் கொஞ்சம் நேரம் நடந்து இளைப்பாறிச் செல்வர்.
 இப்போது மரமும் இல்லை, தண்ணீரும் இல்லை.

சித்திரை திருவிழா வரப்போகிறது. அப்போது எல்லோர் வீட்டு வாசலிலும் தண்ணீர் பந்தல், நீர் மோர் வைப்பார்கள். முன்பு இப்போதும் வைப்பார்கள் என்று நினைக்கிறேன். 
  என் கணவர் வரைந்த படம். (  சார் வரைந்து விட்டார்   உங்கள் வேண்டுகோள்படி  ஸ்ரீராம்)

நான் மாயவரத்தில் இரண்டு மண் பாத்திரங்களில் தண்ணீர் வைப்பேன் பறவைகளுக்கு. அவை தண்ணீர் குடிக்கும், குளிக்கும். மதுரை வந்தபின் எங்கு வைப்பது என்று இடம் தேடிக் கொண்டு இருந்தேன் மண் பாத்திரமும் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் இப்போதைக்கு வைப்போம் என்று வைத்தேன். உடனே வந்து குயில்கள் தண்ணீர் குடித்தன , மனதுக்கு நிம்மதி கிடைத்தது. கோடைகாலம் பறவைகளுக்கு தண்ணீர் எல்லோரும் வைக்கலாமே .








                                பெண் குயில்

கோடை வெயிலுக்கு இதமான குளியல். மைனாவிற்கு இடம் போதுமானதாய் இல்லை . 


பறவைகள் குளித்து மகிழ மண் தொட்டி வாங்க வேண்டும், வாங்கப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தேன், திருநாளைப்போவார் போல் !
அவர் எங்கே மண்தொட்டி வாங்க போக வேண்டும் என்று சொன்னார் என்று கேட்காதீர்கள். அவர் சிதம்பரம் போகவேண்டும் போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.

 என் மருமகள் வாங்கி அனுப்பி விட்டாள் . எங்கள் வீட்டு மதில்மேல் வைக்க வசதியாய் மண் தொட்டி.



ஆன்லைன் விற்பனையில் வாங்கி அனுப்பி விட்டாள் மருமகள் ,
 அத்தை வெயிலில் அலைந்து வாங்க வேண்டாம் என்று.
தண்ணீர் குடிக்கும் தவிட்டுக் குருவி

தண்ணீர் குடிக்கும் காக்கா


 கொடுத்து வைத்த பழனி கோவில் யானை.

 பாவம் இந்த காட்டு யானைகள்

இன்று வந்த தினமலரில்   மூணாறில் தேயிலை தோட்டத்தில் சுற்றி திரியும் காட்டு யானைகள் என்று போட்டு இருந்தது. நாம் மட்டுதான் வெயில் காலத்தில் கோடை வாசஸ்தலத்திற்கு போக வேண்டுமா? அதுகளும் போய் மகிழ்வாய் இருக்கட்டுமே!



மற்றும் ஒரு படம் குளுமையைத் தேடும் கொக்குகள் படம்.

கடும் வெயிலில் தாக்கத்தால் தகிக்கும் கண்களுக்கு குளுமையாக பச்சை புல்வெளியில் இரைதேடி மகிழ்ன்றவோ கொக்கு கூட்டம் ! என்று போட்டு இருந்தார்கள்  தகிக்கும் வெயிலுக்கு குளுமை, வயிற்று பாட்டுக்கு பஞ்சமில்லை.

தினமலர் பத்திரிக்கையில் இன்று வந்த இன்னொரு நல்ல  செய்தி:-

                                      
மனிதநேய நாயகர்கள்  பறவைகள் தண்ணீர் குடிப்பதற்காக மரத்தில் வைத்த மண்கலயம்.
கோடைகாலத்தில்  நீர் வழங்கும் சேவையை செய்து வருகிறார்கள்.

நற்பணி மன்ற இளைஞர்களை பாராட்டுவோம்.
எங்கள் வீட்டில் தொட்டி வாங்கும் முன்பு அவசரத்திற்கு தண்ணீர் வைத்த பிளாஸ்டிக் டப்பாவில் குளிக்கும் மைனா.




மெல்ல மெல்ல விடியும் வைகரை பொழுது என்ற பதிவில் பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் வைத்து இருப்பேன். என் கணவரின் ஓவியமும்  இருக்கும்

மாயவர வீட்டு மொட்டைமாடி மதிலில் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தது
எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான் இருந்தாலும்  எங்கள் வீட்டில் வந்து தண்ணீர் குடிக்கும் பறவைகளை பற்றி பகிர ஆசைதான் எனக்கு. படங்கள் சுமாராய்த் தான் இருக்கும். இரண்டாம் மாடியில் இருந்து கைபேசியில் ஜன்னல் வழியாக எடுத்த படங்கள்.  ஜூம் செய்ய முடியாமல் இருக்கிறது .காமிரா சரி செய்ய வேண்டும்.
வாழ்க வளமுடன்.

 ----------

27 கருத்துகள்:

  1. படங்களிலும் பதிவினிலும் தங்களின் ஈரமனம் தெரிகின்றது.

    இப்போதெல்லாம் பல கோயில்களில் யானையை குளிப்பாட்ட ஷவர் வசதிகள் நிறையவே வரிசையாக அமைத்து, நிற்கும் யானையின் தும்பிக்கை முதல் கால்கள் + வால் வரை சர்வாங்கமும் நனையுமாறு, அருவி போல கொட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எங்கள் ஊராம் திருச்சி மலைக்கோட்டை யானை கட்டுமிடத்தில் இந்த வசதி முன்பு எப்போதோ செய்து விட்டர்கள்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் பின்னூட்டம் அசத்தி விட்டது. "ஈரமான பதிவிற்கு நன்றி".. உண்மைதான். ஈரமான பதிவு.

    ஸாரின் ஓவியமும் அருமை. அரசு ஸார்.. வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு நன்றி. கோடை வெயிலில் சாலைகளில் அலையும்போது நமக்கே தண்ணீர் தவிக்கும் நேரம் எங்கு கிடைக்கும் என்று அலைகிறோம். பாவம் பறவைகளும், நாலுகால்களும்.

    எங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஒரு பேசினில் தண்ணீர் வைத்திருக்கிறோம்.

    நல்லதொரு பதிவு.

    பதிலளிநீக்கு
  3. அருமை! மிக அருமை!!
    நல்லதொரு யோசனை தந்து விட்டீர்கள்! தினமும் மொட்டை மாடி சென்று நடப்பதுண்டு. அதனால் உடனேயே இந்த யோசனையை செயல்படுத்தி விடுகிறேன்!!

    பதிலளிநீக்கு
  4. நானும் தொடர்ந்து இரண்டுமுறை
    கடந்த மூன்று மாதங்களாக ஒரு அகன்ற
    பாத்திரத்தில் வைத்து வருகிறேன்
    சிறு பறவைகள் குளிக்கையில்
    மனம் குளிரத்தான் செய்கிறது

    பதிலளிநீக்கு
  5. தானத்தில் சிறந்தது தண்ணீர் தானம் வாழ்க வளமுடன்

    அரசும் இந்த தானம் செய்கின்றது என்பது வேறு விடயம்.

    ஆன்லைன் புக்கிங்கில் மண் தொட்டி ஹாஹாஹா

    வைகறைப் பொழுது சென்று வந்தேன்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  6. தவித்த வாய்க்குத் தண்ணிர், பாட்டி உபயோகப் படுத்தும் விஷயம்.
    அருமையான மனம் கொண்ட தங்கை கோமதி
    உயிரினம் ஓம்ப எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மிக அழகு.
    மருமகளுக்குத் தனி வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    உங்கள் கருத்து அருமை.

    பதிலளிநீக்கு
  8. மிக மிக அருமையான மனதில் நிற்கும் பதிவு. ரசித்து ரசித்து வாசித்தோம்...ஆன்லைனில் தொட்டி ஆமாம் இப்போதெல்லாம் ஆன்லைனில் பலதும் கிடைக்கின்றன. மருமகளுக்கு வாழ்த்துகள்.

    உங்கள் மனது மிக மிக் நல்ல மனது! வாழ்த்துகள்! இறைவன் எல்லா நன்மைகளும் தந்தருள பிரார்த்திக்கின்றோம். எங்களுக்குப் பிடித்த வள்ளலாரின் பாடலுடன் சிறப்பான பதிவு. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது என்பதுதான் அன் கண்டிஷனல் அன்பு என்று சொல்லப்படுகிறது.

    அருமை அருமை..

    நாங்களும் பெரிய மண் சட்டிகளில் தண்ணீர் வைக்கின்றோம் எப்போதுமே பறவைகளுக்கு. உணவும்....பெரிய சட்டிகளில் அவை தங்கள் இறகை நனைத்து சிலிர்த்துக் கொள்ளும் காட்சி கண்கொள்ளா காட்சி. சிறப்பான மனதிற்கு நிறாய்வும் மகிழ்வும் தந்த பதிவு...மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    மலைக்கோட்டை யானைக்கும் ஷவர் வசதி அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    ஜம்புலிங்கம் சாரின் மறுமொழி அருமைதான்.
    உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டார் சார்.
    முன்பு விலங்குகளுக்கு வீட்டு வாசலில் தண்ணீர் தொட்டியும் உண்டு, சாப்பிடும் வாழை இலை, வீட்டில் வடிக்கும் சாத கஞ்சி, வீணாய் போகும் காய்கறி கழிவுகள், அரிசி, உளுந்து கழுவிய தன்ணீர் என்று அதில் ஊற்றப்படும் . மாடு வந்து குடிக்கும், அல்லது மாடு வைத்து இருப்பவர்கள் (பால் ஊற்றுபவர்கள் ) வந்து எடுத்து செல்வார்கள். இப்போது சுற்றுபுறம் மாசு படும், வீடுகள் எல்லாம் அலங்காரமாய் அடுக்குமாடி ஆகி விட்டது. நாலுகால் பிராணிகளும் கஷ்டபடுகிறது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் மனோசாமிநாதன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    நீங்களும் இரண்டு பாத்திரங்களில் பறவைகளுக்கு த்ண்ணீர் வைப்பது மகிழ்ச்சி.
    அவை குளித்து களிப்பதை பார்க்கும் போது மனக்கவலை பறந்து விடும்.
    நன்றி உங்கள் கருத்துக்கு.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    தண்ணீர் தானமா? இங்கு அப்படி பேசகூடாது, இந்த ஊரில் ஒரு குடம் 10 ரூபாய் என்று வீடுகளில் விற்கிறார்கள், தனக்கு மட்டும் என்று மோட்டார் போட்டு திட்டியில் நிறைத்துக் கொள்கிறார்கள். (மாநகராட்சி தரும் தண்ணீரை)

    அம்மா தண்ணீர் பந்தல் வைக்க சொல்லி சொன்னார்கள் உண்மைதான்.
    ஆன்லைனில் எல்லாம் வாங்கலாம் என்பது மகிழ்ச்சி தானே!
    பழைய பதிவு ”மெல்ல மெல்ல விடியும் வைகரை பொழுது” பதிவை படித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.
    தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. மனதுக்கு ஜில்லுன்னு இருக்கு !
    வாயில்லா ஜீவன்கள் பாவம் நாம் தான் உதவனும் இவங்களுக்கு .
    ப்ளூ க்ராஸ் சென்னையில் இலவச சிமெண்ட் பாத்திரம் தராங்களாம் பறவை நாய்கள் மாடுகளுக்கு நீர் வைக்க ..

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    ஆம், நீங்கள் சொல்வது சரிதான் அம்மா, பாட்டி எல்லாம் அடிக்கடி சொல்லும் வர்த்தைதான் இந்த தவிச்ச வாய்க்கு தண்ணீர் என்பது. வீட்டுக்கு வருபவர்களுக்கு சின்ன டம்ளரில் தண்ணீர் கொடுத்தால் என்ன கொடுக்கிறே? தொண்டை நனையாமல் என்பார்கள். தண்ணீர் கொடுக்கும் போது பெரிய செம்பில் கொடுக்க வேண்டும் என்பார்கள்.
    மருமகளுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
    போன பதிவுக்கு உங்களை எதிர்ப்பார்த்தேன். உங்கள் பதிவின் மூலம்
    ஸ்ரீராம் அப்பாபற்றி தெரிந்து கொண்டேன் என்று போட்டு இருந்தேன்.
    வள்ளலார் பாடல் எனக்கு 11ம் வகுப்பில் மனபாட பாட்டு. மிகவும் பிடிக்கும். கோடையைப்பற்றி போடும் போது அருட்பா பாடல் நினைவுக்கு வந்து விட்டது.
    உங்களுக்கும் பிடித்த பாடல் என்று கேட்கும் போது மகிழ்ச்சி.
    பெரிய தொட்டி என்றால் மகிழ்ச்சி எல்லா பறவைகளும் குளிக்க வசதி.
    உங்கள் பிரார்த்தனைகளுக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.

    //ப்ளூ க்ராஸ் சென்னையில் இலவச சிமெண்ட் பாத்திரம் தராங்களாம் பறவை நாய்கள் மாடுகளுக்கு நீர் வைக்க ..//

    நல்ல செயல், பாராட்ட வேண்டும் அவர்கள் செயலை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. எதை எழுதினாலும் மனதில் ஈரம் கசிவது மனசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உங்கள் எழுத்தின் இயல்பு. எந்தக் கோடை வெப்பத்திலும் அதற்கு வரடசியே இல்லை.

    நல்ல மனம் வாழ்க! நன்மையெல்லாம் சிறக்க!

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ஜீவி சார் , வாழ்கவளமுடன். உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  20. தவித்த வாய்க்கு தண்ணீர்.... நல்ல செயல். இப்போதெல்லாம் யார் வீட்டிலும் திண்ணை இல்லை! இருந்தாலும் தண்ணீர் இல்லை.....

    படங்களுடன் பகிர்வும் நன்று.

    பதிலளிநீக்கு
  21. எல்லாருக்கும் வாய்ப்பதில்லை இப்படியொரு பாக்கியம்..

    சிலர் - சிலர் என்ன சிலர்?..

    பலரும் கையில் உணவை வைத்துக் கொண்டு கா.. கா.. என்று கதறிக் கண்ணீர் வடித்தாலும்,

    போடா.. சக்கை!.. - என்று அருகிலேயே நெருங்காது..

    ஆனாலும் -

    உங்களுடைய மனது - பறவைகளுக்குத் தெரிந்திருக்கின்றது..

    அவைகளுக்கு வாயில்லாவிட்டாலும் - மனம் என்ற ஒன்று இருக்கின்றதே!..

    என்றென்றும் வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    எங்கள் அம்மா காகத்திற்கு மதியம் 12 மணிக்கு சாதம் வைத்துவிடுவார்கள், எவ்வளவு வெயிலாக இருந்தாலும் அவை வந்துவிடும். முன்பு மற்ற பறவைகளுக்கு சிறுதானியங்கள் தான் போட வேண்டும். பள்ளிவாசல் சென்று கம்பு, சோளம் எல்லாம் போடுவார்கள். ஆனால் இப்போது நாம் வாழும் இடங்களில் நம்முடன் பழக ஆரம்பித்தபின் நாம் சாப்பிடும் உணவுகளை அவைகளும் சாப்பிட பழகி விட்டது .
    உங்கள் அன்பான கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  23. குருவிகள் குடிக்க நீர் வைத்ததோடு நில்லாமல் அவை வசிக்க ஒரு கூடும் மரத்தில் தொங்க விட்டேன் ஒன்று கூட அதை உபயோகிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். நாம் வைக்கும் கூடுகள் அதற்கு பிடிப்பது இல்லை போலும். அவைகளே கட்டி கொள்ள வேண்டும் போலும்! உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. நல்லதொரு செயல். ஓவியமும், படங்களும் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு