மரக்கூடார நிழலில் மரப்பாலம்
இந்த நீரோடையில் நீர் அருந்த வந்த விலங்கு என்ன என்று யோசித்து வைத்து இருங்கள் என்றேன் போன பதிவில்.
நல்ல காற்றை சுவாசிக்க இயற்கையை ரசிக்க ஏற்ற இடம் இந்த தேசிய பூங்கா. மகள் ஊரிலிருந்து என்னைப்பார்க்க வந்து இருப்பதால் அவளையும் தன் ஊரில் சிறந்த இடத்திற்கு அழைத்து செல்ல எண்ணம் கொண்ட மகன், மருமகள் ஏற்பாடு செய்த பூங்கா அருமையாக இருந்தது.
கூட்டம் இல்லாத இடம். அமைதி தவழும் இடம். பறவைகளின் சத்தம் மட்டுமே கேட்கும் இடம். நாம் பேசுவதே மிக சத்தமாக கேட்கும் அப்படி ஒரு அமைதியான இடம்.
செடோனாவில் இந்த மாதிரி இடங்கள் 100 இருக்கிறதாம்.இந்த மலைகளில் மக்கள் மலையேற்ற பயிற்சிசெய்கிறார்கள் மலையேற்றத்தால் கிடைக்கும் நன்மைகளுக்காக இந்த மாதிரி இடங்களுக்கு போக விரும்புகிறார்கள். , நல்ல காற்றை சுவாசிக்கவும் உடல் பலம் பெறவும் இந்த மாதிரி இடங்களுக்கு போக விரும்புகிறார்கள்.
நம் நாட்டில் மலைமேல் உள்ள கோவில்களுக்கு படிகளில் ஏறியும், படி இல்லாமல் மலைபாதையில் நடந்து சென்றும் தரிசனம் செய்து வருவார்கள். மலைகளில் வளரும் மூலிகை தாவரங்களின் வாசமும், அங்கு கிடைக்கும் சுத்தமான காற்றும் நமக்கு மனபலம், உடல்பலம் தரும் என்ற நம்பிக்கை உண்டு நம் மக்களுக்கு. மலைபகுதியில் உள்ளமக்கள் நிறைய தூரம் மலைபாதையில் ஏறி, இறங்கி, நடந்தே பல இடங்களுக்கு போவதால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.