வியாழன், 13 மே, 2021

சிவப்பு பாறை தேசிய பூங்கா (Red Rock State Park)


அன்னையர் தினத்திற்கு  மகன் ரெட் ராக் ஸ்டேட் பார்க்கிற்கு அழைத்து சென்றான்.  அம்மாவுக்கு இயற்கையை ரசிக்க பிடிக்கும் என்று.

  இந்த அன்னையர் தினம்  மகிழ்ச்சியும் , வருத்தமும் ஒரு சேர கொடுத்த தினமாக அமைந்து விட்டது.  மகளும், மகனும் உடன் இருந்தனர்    அது மகிழ்ச்சி.  அவர்கள் அப்பாவும் இருந்து இருந்தால் இன்னும்  மகிழ்ச்சியாக இருந்து இருக்கும் என்ற நினைப்பு தந்த வருத்தம் ஒரு பக்கம். அவர்களுக்கு வருத்தம் வரக்கூடாது என்று மகிழ்ச்சியாக எல்லாவற்றையும் ரசித்து வலம் வந்தேன். ஞாயிற்றுக்கிழமை சென்று வந்த இடத்தின் பதிவு இங்கு இந்த பதிவில் இடம்பெறுகிறது.

இந்த ரெட் ராக ஸ்டேட் பார்க் அரிசோனாவில் இருக்கும் ஒரு மாநில பூங்கா. செடோனா என்ற நகருக்கு வெளியே  சிவப்பு மணற்கல் பள்ளத்தாக்கு . மகன் வீட்டிலிருந்து 1 மணி 30 நிமிட நேரம் ஆகிறது போய் சேர்வதற்கு.காரை கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு  உள்ளே போக டிக்கட் வாங்கி கொண்டு நடந்து போனோம்.

உள்ளே  நுழைந்தவுடன் நம்மை கவர்ந்த கள்ளி மலர்.
தேன் குடித்து மயங்கி கிடக்கும் வண்டு. தங்கபொடி மகரந்தம் நடுவில் பச்சை வண்ணம் சுற்றிலும் சிவப்பு வண்ணம்,  கத்தரிப்பூ வண்ணம் என்று கண்ணையும், கவனத்தையும் கவர்ந்து வரவேற்றது.
சல சலத்து கொண்டு சிற்றோடைகள்  அதை சுற்றி மலர்கள் மலர்ந்து இருக்கும் சிறு, சிறு  செடிகள் என்று இயற்கை நிறைந்த சுற்றுச்சூழல் இருப்பதால் பள்ளி குழந்தைகள் சுற்றுச்சூழல் கல்வி கற்கும் இடமாக இருக்கிறது. தனியார் மலையேறும் குழுவும்  இங்கு வருவார்களாம்.   இப்போது சிறு குழுவிற்கு மட்டுமே மலையேற அனுமதி.

இப்போதும் குறிப்பிட்ட நேரங்களுக்கு மேல் இங்கு இருக்க அனுமதி இல்லை. வனத்துறை பணியாளர்கள் கவனிப்பு இருக்கிறது  ஒவ்வொரு இடங்களிலும். சில இடங்கள் போக அனுமதி இல்லை.

மிகவும் சுத்தமாக பராமரிக்கப் படுகிறது.

முன்பு  நிறைய ஆங்கில திரைப்படங்கள் சண்டை படங்கள் இங்கு எடுக்கப்பட்டதாம்.


பழங்கால வாழ்விடங்களை பாதுகாத்து இப்போது உள்ளவர்கள் பார்வைக்கு  திறந்து வைத்து இருக்கிறார்கள்.
இங்கு வசித்த பழங்கால மக்கள் அரைத்த வித விதமான அம்மிகள்


உள்ளே எப்படி போய் எப்படி வருவது என்ற வரைபடம் உள்ளது.


இந்த பூங்கா முன்பு தனியார் வசம் இருந்த வரலாறை சொல்கிறது இந்த அறிவுப்பு பலகை.

மலை  மேல்  பழைய வீடு

             தரையில் இப்போது  இருக்கும் பண்ணை வீடு.


இந்த மலை காட்சிகளை பார்க்க போகும் பாதை

மூன்று சகோதரிகள் மலையாம்
இந்த  மலைக்கு 7போர் வீரர்கள் மலை என்கிறார்கள்.

நெப்போலியன் டூம் என்கிறார்கள்.

படத்தில் பார்ப்பதை விட இப்போது எங்கும் பசுமையாக காட்சி தருகிறது


 திரை அரங்கு, ஜூனீயர் ரேஞ்சர் நிகழ்ச்சிகள்,  பரிசு பொருட்கள் கடை, பூங்காவில் என்ன பார்க்க போகிறோம் என்பதை காட்டும் காணொளி காட்சி நடைபெறும் இடம்,   , மற்றும்  திருமணங்கள், விழாக்கள் நடத்த கூடாரங்கள் உள்ளன. நாங்கள் இங்கெல்லாம் செல்லவில்லை.

அடுத்த பதிவில் இந்த நீரோடையில்  தண்ணீர் அருந்த வந்த விலங்கைப் பற்றி பார்ப்போம். தூரத்தில் தெரிகிறது கண்டு பிடித்து வைத்து இருங்கள்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
----------------------------------------------------

55 கருத்துகள்:

 1. மகன் அருமையான அன்னையர்தினப் பரிசு வழங்கி இருக்கிறார்.  ஸார் உங்களுடனேயேதான் இருக்கிறார்.  அவரை நீங்கள் உணராமல் யார் உணரப்போகிறார்கள்..  அழகான, கண்ணைக்கவரும் இடம் என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம, வாழ்க வளமுடன்
   ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். சிறந்த பரிசுதான் இந்த இடத்திற்கு அழைத்து போனது.

   சார் சொல்வது காதில் ஒலித்து கொண்டே இருந்தது . "பாதையை பார்த்து நட" என்று.
   எங்காவது அழைத்து போனால் சொல்லும் வார்த்தை இது. காமிராவில் படம் எடுக்கும் போதும் கவனம் பத்திரமாய் நில்லு என்பது. அவர்களை ஒவ்வொரு கணமும் உணர்கிறேன் ஸ்ரீராம். தாத்தாவை போல இப்போது பேரன் சொல்கிறான் கவனம் என்று.

   நீக்கு
  2. ஆம்.  ஸாரின் உடனிருப்பை உங்களால் ஒவ்வொரு கணமும் உணரமுடியும்.  கவின் அதுபோலவே அக்கறை எடுத்துக்கொள்வது ஆச்சர்யம்.  ஜீன்.

   நீக்கு
  3. ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை.
   மேடான இடத்திலிருந்து இறங்கும் போது கை கொடுப்பான், செடி, கொடி பக்கத்தில் , ஏதாவது துளை இருக்கும் இடத்து அருகில் போக வேண்டாம் என்று எச்சரிக்கை செய்வான். வெளியே போனால் காரை நிறுத்தி விட்டு தெருவை தாண்டவேன்டும் என்றால் "ஆச்சி இருங்க " என்று இரண்டு பக்கமும் பார்த்து கையை பிடித்து அழைத்து செல்வான்.அப்போது எல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்வேன்.

   நீக்கு
 2. நாங்கள் வைத்திருந்த அம்மி பிளாட்டாக இருக்கும்.  இப்படி ஓரங்கள் வழியாமல் பாதுகாக்கபப்ட்டிருக்காது!    நாம்தான் அது கீழே வழியாமல் கையால் தள்ளித்தள்ளி விட்டுக்கொள்ள வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மி ஓரங்களை நாங்களும் சொல்லி கொண்டோம்.நம் அம்மிகள் கீழே வழியாமல் தள்ளித்தள்ளிதான் விட வேண்டும். நல்ல கவனமாய் பார்த்து இருக்கிறீர்கள்.

   நீக்கு
  2. என்ன செய்ய...!!   அம்மாவுக்கு நானே அரைத்துக் கொடுத்திருக்கிறேனே...  அம்மா மெதுவாக முடியாமல் அரைப்பார்.  அவர் அரைத்து முடித்ததும் குழவியை நிமிர்த்தி வழித்துக் கொடுக்க ஆரம்பித்தேன் முதலில்.  அப்புறம் பல சமயங்களில் நானே அரைத்தே கொடுத்து விடுவேன்!

   நீக்கு
  3. நல்லபிள்ளை நீங்கள். அம்மாவுக்கு உதவியதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.அப்போது உள்ள அம்மி குழவி கனமாக இருக்கும் இழுத்து அரைப்பது கடினம்.
   உடல் முடியாத போது அம்மா எப்படி அரைக்க முடியும்?

   நீக்கு
 3. பழைய வீடு என்றால் எவ்வளவு பழமை?  அதுவே புதிதாக இருக்கிறதே...!  படத்தில் கடைசியில் ஒரு விலங்கு சிறிகாகத் தெரிகிறதுதான்.  ஆனால் அது புலி என்று நினைத்தால் அதுமாதிரி இருக்கிறது.  நரி என்று நினைத்தால் அது மாதிரி இருக்கிறது!  ஓநாய் என்று நினைத்தால்....!!!!

  பதிலளிநீக்கு
 4. மிக பழமை வாய்ந்த கட்டிடம்தான். வெறும் கூடு மட்டுமே இருக்கிரது உள்ளே ஒன்றும் இல்லை.1942 வாக்கில் கட்டியது என்று நினைக்கிறேன். கற்பனையில் நிறைய விலங்கு பார்த்து விட்டீர்கள்.
  துள்ளி ஓடும் விலங்கு அடுத்த பதிவில் வரும்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே...   அப்போ சாதுவான மான்!

   நீக்கு
  2. ஆஹா! கண்டுபிடித்து விட்டீர்கள்.
   சாதுவான மான்தான். வித்தியசமான பெயருக்கு ஏற்றமாதிரி இருக்கும் இந்த மான்.

   நீக்கு
 5. செடோனா. மந்திரச் சொல் என்னைப் பொறுத்தவரையில் .
  2007இல் நாங்கள் சென்ற இடம்.
  நிறைய சிவப்பிந்தியர்களைப் பார்த்தோம். அந்த மலைகளின் வடிவங்களைச் சொல்லி முடியாது. அந்த சிவப்பையும் சொல்லி முடியாது.

  அழகான படங்கள் நல்ல விவரங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   நீங்கள் போய் வந்த பிடித்த இடமா மகிழ்ச்சி.
   நாங்கள் யாரையும் பார்க்கவில்லை. விற்பனை கூடம் சென்று இருந்தால் பார்த்து இருக்கலாம். நாங்கள் போகவில்லை. வனத்துறையில் வேலைப்பார்ப்பவர்களைத்தான் பார்த்தோம். வெகு சீக்கீரம் போய் வந்து விட்டோம் மக்கள் வரும் முன். வெளியே வரும் போதுதான் பத்து பேர் அடங்க்கிய குழு ஒன்று மலையேற வந்தார்கள்.
   கொஞ்சம் மேக மூட்டம் இருந்ததால் சிவப்பு வண்ணம் குறைவாக தெரிகிறது படத்தில்.

   நீக்கு
 6. அன்னையர் தினத்தன்று அழைத்துப் போன மகனுக்கு வாழ்த்துக்கள்.
  ஈடு செய்ய முடியாத இழப்பை, மீண்டும் நினைக்கத் தோன்றுவது
  இது போல தினங்களே..
  மகளும் சேர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.பேரன்
  தாத்தா போலவே உங்களைக் கவனித்துக் கொள்வதில்

  அவன் அன்பு தெரிகிறது.வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகனுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
   ஆமாம் , குடும்பங்கள் கூடும் போது அவர்கள் இல்லையென்றால் வருத்தமாக இருக்கிறது.

   //மகளும் சேர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.பேரன்
   தாத்தா போலவே உங்களைக் கவனித்துக் கொள்வதில்

   அவன் அன்பு தெரிகிறது//

   மகள் வந்தது மகிழ்ச்சி, பேரன் தாத்தா போல் கவனித்து கொள்வதில் மகிழ்ச்சிதான் அக்கா.
   வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு
 7. பழங்குடியினர் உபயோகித்த அம்மி,
  நல்லதாகப் பயன்பட்டிருக்கும். பார்த்தால் உட்கார்ந்து அரைக்கலாம்
  போல ஆசையாக இருக்கிறது.ஓரங்களில் வழிந்தோடாமல் என்ன அமைப்பாக இருக்கிறது!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மி உங்கள் மனத்தையும் கவர்ந்து விட்டது.
   உட்கார்ந்து அரைத்தால் இழுத்து அரைக்க முடியாது என்பார்கள் நம் அம்மியில். இந்த அம்மியில் நீங்கள் சொல்வது போல் உட்கார்ந்து அரைக்கலாம்.

   நீக்கு
 8. துள்ளி ஓடும் விலங்கு மானோ:)
  என்ன என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா , நீங்கள் சொல்வது சரிதான்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 9. பழங்கால அம்மிகள் இன்னும் பாதுகாத்து இருப்பது சிறப்பு.

  படங்கள் அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   பழங்கால அம்மிகள் பாதுகாத்து இருப்பது சிறப்புதான்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. படங்களும் பகிர்வும் அழகு
  நேரில் பார்த்த உணர்வு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. அழகான அருமையான இடம்... தேன் குடித்து மயங்கி கிடக்கும் வண்டு உள்ள மலர் மிகவும் அழகு... குழந்தைகளுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 12. கடைசி படத்தில் ஒரு மான் நிற்பது தெரிகிறது..

  பதிலளிநீக்கு
 13. சிறப்பான அன்னையர் தின பரிசு. படங்கள் மற்றும் தகவல்கள் சிறப்பாக இருக்கின்றன.

  கடைசி படத்தில் இருக்கும் விலங்கு - அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் அருகில் இருக்கும் தினம் சுபதினம். அதனால் சிறப்பான அன்னையர் தினம் வெங்கட்.

   உங்கள் கருத்துக்கும், காத்திருப்புக்கும் நன்றி.

   நீக்கு
 14. அன்னையர் தினத்திற்கு நல்ல பரிசு. அழகான, துல்லியமான புகைப்படங்கள்.
  //அவர்கள் அப்பாவும் இருந்து இருந்தால் இன்னும்  மகிழ்ச்சியாக இருந்து இருக்கும் என்ற நினைப்பு தந்த வருத்தம் ஒரு பக்கம்.// இது மாறுவதற்கு நிறைய நாட்களாகும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

   //இது மாறுவதற்கு நிறைய நாட்களாகும்//
   ஆமாம்.

   //அன்னையர் தினத்திற்கு நல்ல பரிசு. அழகான, துல்லியமான புகைப்படங்கள்.//

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 15. உங்களது மனநிலையில் தான் நானும் இருக்கின்றேன்.. திரு ஆரூரில் நெருங்கிய நண்பர், உறவுமுறையில் மாமன் ஒருவர்,
  பழக்க வழக்கதில் சிலர் - என, கொரானா அழித்து விட்டது...

  மனம் அமைதியுறவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வதை கேட்டு மனம் வேதனை அடைகிறது.
   நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை இறைவனிடம் எல்லோர் நலத்திற்கு தினம் வேண்டுகிறேன்.
   எங்கள் உறவுகளிலும் உடல் நிலை பாதிக்கபட்டவர்கள் உள்ளார்கள். கொரோனா இல்லாமல் மாரடைப்பு வந்து இறந்தவர்கள் என்றும், மாயவரம் நட்புகளை கொரோனா கொண்டு போய் இருக்கிறது.

   மனம் கனத்து போகிறது.
   என்ன செய்வது நம் கையில் இல்லை நடப்பது.

   நீக்கு
 16. சிவப்புப் பாறை பூங்கா, மலர்கள், படங்கள் கொள்ளை அழகு.

  இருந்தாலும் நம்மூரில் ஏகப்பட்ட நிஜமான சுற்றுலாத் தலமாக ஆகும் தகுதியில் இடங்கள் இருக்கின்றன. நாம்தான் அதனைத் திறமையாக காட்சிப்படுத்துவதில்லையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது போல் நம்மூரில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஏராளம் இருக்கிறது. வரலாற்றை சொல்லும் கலைநயத்தோடு கட்டப்பட்ட இடங்கள் இருக்கிறது.
   சரியான முறையில் காட்சிப்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும்.

   நான் போன இடங்களை என்னால் முடிந்தவரை படங்கள் எடுத்து இருக்கிறேன், காமிரா கையில் கிடைத்தபோது.

   நீக்கு
 17. நடு ஓடையில் நிற்பது மான் அல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடு ஓடையில் நிற்பது மான்தான்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 18. மகனின் அன்பும் பேரனின் பரிவும் உங்களுக்கு எப்போதும் மன அமைதியைக்கொடுக்க வேண்டுகிறேன். ஆனாலும் வாழ்நாள் துணை என்பது வேறல்லவா? அந்த இழப்பு கொடுக்கும் நினைவலைகளை ஜீரணிக்கும் மனத்திண்மையும் உங்களுக்கு எப்போதுமிருக்க வேண்டுகிறேன்.
  சகோதர் துரை செல்வராஜ் சொன்னது போல, நான் என் பதிவில் எழுதியிருந்த என் சகோதரி மகன் கொரோனாவால் சமீபத்தில் மறைந்து விட்டார். இன்னும் எங்கள் குடும்பம் அதிலிருந்து மீளவில்லை. ப்ளஸ் டூ படிக்கும் ஒரே மகன் சாதம் ஊட்டி விட, அழுது அரற்றியவாறு இருக்கிறார் என் மருமகள்! இந்த இழப்பிற்கு எப்படி ஆறுதல் சொல்லுவது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன் , வாழ்க வளமுடன்

   //மகனின் அன்பும் பேரனின் பரிவும் உங்களுக்கு எப்போதும் மன அமைதியைக்கொடுக்க வேண்டுகிறேன்.//

   உங்கள் வேண்டுதலுக்கு நன்றி.

   //ஆனாலும் வாழ்நாள் துணை என்பது வேறல்லவா? அந்த இழப்பு கொடுக்கும் நினைவலைகளை ஜீரணிக்கும் மனத்திண்மையும் உங்களுக்கு எப்போதுமிருக்க வேண்டுகிறேன்.//

   வாழ்க்கைதுணை இடத்தை யாரும் இட்டு நிரப்ப முடியாதுதான். ஜீரணிக்க முடியாமல் சில நேரங்களில் உடைந்து விடுகிறேன், சில நேரம் யாரிடமும் பேசாத மெளனியாகி விடுகிறேன். என்னை மீட்டு எடுப்பது இந்த இயற்கைதான்.
   இறையருள் என்ற படகில் ஏறி கடக்க முயல்கிறேன் சில நேரம்.


   //என் சகோதரி மகன் கொரோனாவால் சமீபத்தில் மறைந்து விட்டார்.//
   தாங்கவே முடியாத சோகம். மருமகளுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் தான் ஆறுதலும் தேறுதலும் தர முடியும் .வேறு யார் தேற்றுவது! ஆற்றுவது!
   காலம் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும்.

   நீக்கு
 19. முதல் சில வரிகளைப்படித்ததும் என் கருத்துக்களை எழுதி அனுப்பி விட்டேன். அப்புறம் தான் பதிவைப்படித்தேன். படங்களும் தகவல்களும் அருமை! ஆனால் நெடுந்தூரம் நடக்க வேண்டும் போல் அல்லவா இருக்கிறது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்தான். போகும் பாதை வெகு சுத்தமாக பாராமரிக்க படுகிறது என்பதால் அந்த படம் போட்டேன். காற்று இருந்தது அதனால் நடப்பதில் சிரமாம் இல்லை, நானும் இடுப்புக்கு பெல்ட் அணிந்து நடந்தேன்.இரவு கால்வலிக்கு மாத்திரை போட்டு கொண்டேன்.
   உங்கள் கருத்துக்களுக்கு ம் ஆறுதல் வார்த்தைக்கும் நன்றி.

   நீக்கு
 20. நல்லதொரு பரிசு அன்னையர் தினத்துக்கு. மலையும் மலை சூழ்ந்த இடங்களும் எப்போவுமே அழகு! நிறைய நடக்கணும் என்பதும் தெரிகிறது. சுத்தமான பராமரிப்பு எங்கேயுமே! அம்பேரிக்காவில் பழமையைப் போற்றிப் பாதுகாக்கிறார்கள். இது கொஞ்சமானும் நம்ம மக்களுக்கும் வரணுமேனு நினைப்பேன். நல்லதொரு பொழுதுபோக்கு இடம்! சாப்பாட்டுக்கெல்லாம் என்ன செய்தீர்கள்? கையில் கொண்டு போயிட்டீங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   நல்லதொரு பரிசுதான் அன்னையர் தினதிற்கு.

   நிறைய நடக்கனும் தான். கொஞ்ச இடங்கள் நாம் பார்க்க இருக்கிறது அதை மட்டும் பார்த்தோம். மற்றவை சைக்கிள், குதிரையில் போய் பார்க்க வசதியாக இருக்கிறது.

   ஆமாம், நம் நாட்டில் இதைவிட அழகான இடங்கள் நிறைய பாதுகாக்க படாமல் வீனாகி விட்டது.

   நேற்று அண்ணன் மகள் ஒரு காணொளி அனுப்பி இருந்தாள் மிகவும் அழகிய பூமிக்கடியில் நீரில் முழ்கி இருக்கும் அதிசய கோவில் என்று. "காஞ்சிபுரம் நடவாவி கிண்று" என்று பார்க்கவே அவ்வளவு அழகு. முன்னோர்களின் திறமையை வியக்காமல் இருக்க முடியாது. அது போல் நான்கு இருந்ததாம் ஒன்றை மட்டுமே காப்பாற்றி வைத்து இருக்கிறார்கள்.

   கையில் உணவு எடுத்து போய் விட்டேன், போட மறந்து விட்டேன், அடுத்த பதிவில் போடுகிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 21. படங்களும் விவரங்களும் அருமை சகோதரி. தங்கள் மகன் தங்களுக்கு அழகான பரிசைத் தந்திருக்கிறார்! உங்கள் கணவர் எங்கும் செல்லவில்லை உங்களுடனேயே தான் இருக்கிறார்.

  இறைவனுக்கு நன்றி உரைப்போம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
   மகன் , மருமகள் தந்த பரிசு அருமையான இடம்.

   //உங்கள் கணவர் எங்கும் செல்லவில்லை உங்களுடனேயே தான் இருக்கிறார்.//
   அந்த நினைப்பில்தான் வாழ்கிறேன்.

   இறைவனுக்கு என்றும் நன்றி சொல்ல் வேண்டும்
   எல்லோரையும் பாதுகாக்க அவரிடம் வேண்டிக் கொள்வோம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 22. கோமதிக்கா அட்டகாசமான இடம் எப்படி இந்தப் பதிவை விட்டேன்!!!? ச்சே...சரி விடுங்க புதிய பதிவைப் பார்த்ததும் தான் அட அக்கா போட்டிருக்காங்க அதோட தொடர்ச்சின்னு தெரிஞ்சுச்சு...

  படங்கள் என்ன அழகு!!!!! இடமும் தான். எப்படிப் பாதுகாக்கிறார்கள்!
  இங்கும் இப்படி எல்லா இடங்களும் பாதுகாக்கப்பட்டால் எத்தனை நன்றாக இருக்கும்!

  இடம் பார்க்க வறட்சி போல் இருந்தாலும் அழகாக இருக்கின்றன

  கீதா

  பதிலளிநீக்கு
 23. நிஜமாகவே அருமையான பரிசு அன்னையர் தினத்திற்கு அதுவும் கோமதிக்காவும் ரசித்து எங்களுக்காகப் படம் பிடிச்சு போட்டுருவாங்கன்னு பிள்ளைக்குத் தெரியாதா என்ன!!!?

  அக்கா மாமா உங்களுடனேயேதான் இருக்கிறார். உங்கள் மனதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மகனும் மகளும் மருமகளும் பேரனும் என்று எல்லோரும் உங்களுடன் இருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்!

  மலைகள் அதன் பெயர்கள் எல்லாம் அழகு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   //நிஜமாகவே அருமையான பரிசு அன்னையர் தினத்திற்கு அதுவும் கோமதிக்காவும் ரசித்து எங்களுக்காகப் படம் பிடிச்சு போட்டுருவாங்கன்னு பிள்ளைக்குத் தெரியாதா என்ன!!!?//

   அப்படித்தான் சொன்னான். அம்மாவுக்கு பிடித்த இடம், மனதுக்கு மகிழ்ச்சி தரும் இடம். உங்களிடம் காட்டி மகிழ்ச்சியாக இருங்கள் என்றான்.

   மகளும் வந்து போனது இன்னும் ஆறுதலான விஷயம்.   நீக்கு
 24. அக்கா கடைசி படத்தில் என்ன விலங்கு தூரத்தில்? சரியாகத் தெரியவில்லையே....சிறுத்தையா?!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அக்கா கடைசி படத்தில் என்ன விலங்கு தூரத்தில்? சரியாகத் தெரியவில்லையே....சிறுத்தையா?!!!//

   இல்லை கீதா.

   நீக்கு
 25. அல்லது மானோ? மானாகத்தான் இருக்கும்!

  சரியா என்று அடுத்த பதிவில் பார்க்கிறேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மான்தான் கீதா.
   வித்தியாசமான மானை பார்க்கலாம்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

   நீக்கு
 26. படங்களும் தகவல்களும் மிக நன்று. சாரைப் போல இப்போது பேரன் ‘கவனம்’ என கவனித்துக் கொள்வது நெகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   ஆமாம், பேரன் இப்போது கவனித்து கொள்கிறான், வெளி இடங்களுக்கு போகும் போது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு