Monday, February 8, 2010

அம்மாவின் பொக்கிஷங்கள்


என் அம்மா பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்து இருந்த நிறைய பாடல்கள்,கடவுள் பாடல்,தேசபக்தி பாடல்கள் எல்லாம் அவர்கள் கைப்பட எழுதிய நோட்டு மூலம் கிடைத்தது.
கிழிந்து போய் இருக்கிறது. தீபா கோவிந்த் ஒரு முறை என்னிடம் //அம்மா நீங்கள் ஸ்கூல்லே படிச்ச காலத்திலே நோட்டுப் புத்தகத்திலே கிறுக்கினதை,இனிமேல் வலைப் பதிவுகள் மூலமாக பதியுங்கள் இது கிழியாது,செதிலரிக்காது எப்பவுமே பர்மனெணட்//
என்றார்கள். நான் என் அம்மா எழுதி வைத்து இருந்ததை பதிவு செய்கிறேன். யார் எழுதிய பாடல்கள் என்று தெரியவில்லை நன்றாக இருந்தது,அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


தாயே
-------
என்னைப் பெற்ற என் தாயே
இனிய பண்டம் தருவாயே
சொன்ன தெல்லாம் கேட்பேனே
சோம்பலின்றிக் கற்பேனே
கற்றதெல்லாம் சொல்வேனே
கடவுள் பாதம் பணிவேனே
குற்றம் ஒன்றும் செய்யேனே
கொஞ்சி முத்தம் தருவாயே

தாயைப்பற்றி குழந்தை பாடும் பாடலை கற்பனை செய்து பாருங்களேன்,அம்மாவை கொஞ்சி
அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் கேட்கும் உங்கள் குழந்தையின் முகம் தெரியவில்லை!!

சைக்கிள் பாட்டு
---------------
தங்கையே பார் தங்கையே பார்
சைக்கிள் வண்டி இதுவே பார்
சிங்காரமான வண்டி
சீமையிலே செய்தவண்டி
இரும்பாலே செய்த வண்டி
எங்கெங்கும் ஓடும் வண்டி
மாடில்லை குதிரையில்லை
மாய மதாய்ப் பறந்திடும் பார்
தீயுமில்லை புகையுமில்லை
தீவிரமாய்ச் சென்றிடும் பார்
காலாலே மிதிப்பதால்
கடும் விசையில் போயிடும்பார்
ஒன்றன் பின் ஒன்றாக
உருளும் பைதாக்களை பார்
அக்காளும் தங்கையும் போல்
அவை போகும் அழகை பார்.

முதல் முதலில் சைக்கிள் புதிதாக வாங்கி அதை ஆசை தீரப் பார்த்து, தன் தங்கையிடம் அதைப் பற்றி சொல்லி, நம் இருவரைப் போல் ஒற்றுமையாய் போகும் அழகைப் பார் என்று
சொல்லும் அக்காள் தெரிகிறாள்,இந்த பாடலில்.

முதற் சிகிட்சை
-----------------
வா வா முருகா! ஓடிவா-நம்
வகுப்பாசிரியரை அழைத்துவா
அப்துல் மயங்கி விழுந்திட்டான் -அவன்
அண்ணன் தம்பி நாம் தாண்டா
தண்ணீர் மொண்டு வா தாசு!
தம்பி மோசை!நீ வீசு
சுற்றும் வளைத்து நில்லாதீர்-இங்கே
தூய காற்றைத் தடையாதீர்
முகத்தில் நீரை தெளித் தங்கம்!-குடிக்க
முடியுமானால் கொடு கொஞ்சம்
ஆகா!அப்துல் பிழைத்திட்டான்
அதோ பார் கண்ணை விழித்திட்டான்
ஆசிரியர் பதறி வருகின்றார்-அவர்
அச்சம் அகற்றி மகிழ்வோம் நாம்.

பள்ளிக் கூடத்தில் முதல் உதவி செய்யும் முறை,முருகா,அப்துல்,மோசை,தாசு,என்று எல்லாமத குழ்ந்தை பெயர்களை கூப்பிட்டு ,அண்ணன் தம்பி நாம் தாண்டா என்று மத ஒற்றுமை பற்றியும்,விளக்கப் படுகிறது.பொறுப்புடன் செயல் படுவது பெண் தான் என்பதை விளக்க தங்கம் என்ற பெண்ணை அழைத்து முகத்தில் நீரை தெளி,குடிக்க கொடு என்று சொல்வது பேணுவது பெண் தான் என்பதையும்,அச்சத்துடன் வரும் ஆசிரியரை நாங்களே முதல் உதவி செய்து விட்டோம் என்று மகிழ்விக்கும் மகிழ்ச்சி பொரு ந்திய மாணவர்கள் முகத்தையும் இந்தபாடல் நம் கண் முன்னே கொண்டு வருகிறது.

கப்பல்
------
கப்பல் துறையில் வந்தது
கடலில் நாளை சென்றிடும்
அப்பா கூட ஏறவே
ஆசை கொண்டு நிற்கிறேன்
அறைகள் அதிலே உண்டுமாம்
அழகுப் பண்டம் கிடைக்குமாம்
நிறையக் கூட்டம் இருக்குமாம்
நினைத்த இடங்கள் செல்லவே
பட்டணம் போல இருக்குமாம்
பல இனத்து மக்களும்
இட்டமாயிதில் சென்று தான்
ஏனை நாட்டின் சரக்கினை
அந்த நாட்டின் பொருளெல்லாம்
அதிகம் இங்கே இறக்குமாம்
ஊர்கள் யாவும் பார்க்கலாம்
பாரில் இந்தக் கப்பல்கள்
பயனைப் பெருக்க வந்ததாம்.

கப்பலைப் பற்றி அப்பா சொன்னதை நமக்கு சொல்லி,கப்பலில் வாணிபம் செய்வதை விளக்கி
கப்பல் ஓட்டிய வ.உ. சிதம்பரனாரை நம்மை நினைக்க வைக்கிறது இந்த பாடல்.//அடி மேலைக் கடல் முழுதுங் கப்பல்விடுவோம்.// என்ற பாரதியார் பாடல் நினைவுக்கு வரும்.
எனக்கு என் அப்பாவுடன் தூத்துக்குடியில் ’சார்லஸ்’ என்ற பெரிய கப்பலைப் பார்த்த நினைவு வருகிறது.பின் என் மனத்திரையில் அண்ணனுடன் ராமேஸ்வரத்தில் கப்பலை என் குழந்தைகளுடன் பார்த்தது ,மலரும் நினைவுகளாய் மலருகிறது.

அலை
--------
கடலுடுத்த நிலமகளின்
காற் சிலம்பாம் அலையே!
படமெடுத்து வருவதற்கு
படபடப்பதேனோ?
முத்தெறிந்து விளையாடி
முட்டியோடும் அலையே
பித்தனை போல் பின்னும் பின்னும்
பிதற்றி நிற்ப தேனோ?
ஞாயிறு கடலில்- நின்று
நன்றாய் எழுவது பார்
தாமரை கங்கை உளம்-மகிழ்ந்து
தண்ணெனும் தேன் சுமந்து
காமரப் பாடகரின் -இன்னிசை
கண்டு விருந்திடல் பார்
முற்றம் தெளித்திடலாம் -அதை
கற்ற பல கோலம்- வரைந்து
கண்டு களித்திடலாம்
காலைக் கடன் முடித்தே-இறைவன்
காலைப் பணிந்திடலாம்
வேலைகளிற் புகலாம் உறக்கம்
விட்டே எழுந்திரம்மா!

அலையின் அழகையும்,கடலில் தோன்றும் கதிரவனின் அழகையும்,காலையில் இறைவனை
பணிந்து கடமையை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இப் பாடல் அழகாய் விளக்குகிறது.

அம்மா எழுதிய பாடல்கள் இப்போதும் படிக்க படிக்க இனிக்கிறது.

29 comments:

goma said...

அம்மாவே ஒரு பொக்கிஷம் அந்த பொக்கிஷம் போற்றிக் காத்தப் பொக்கிஷங்களைப் பற்ரிக் கேட்கணுமா...அருமை

சென்ஷி said...

அருமை அம்மா!

அண்ணாமலையான் said...

மெய்யாலுமே பொக்கிஷம்தான்

Anonymous said...

//Blogger அண்ணாமலையான் said...

மெய்யாலுமே பொக்கிஷம்தான்//

ரிப்பீட்டு கோமா அம்மா

சந்தனமுல்லை said...

வாவ்..மிகவும் அருமை.இத்தனை வருடங்கள் காத்து வைத்திருப்பதற்கே சல்யூட்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல விசயம்.. இதை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது :)

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர்மா. அருமையான குழந்தைகள் பாடல்கள்.

கோமதி அரசு said...

//அம்மாவே ஒரு பொக்கிஷம்//

ஆம் கோமா,அம்மா பொக்கிஷம் தான் .அம்மா ஏதாவது எழுதிக்கொண்டு,படித்துக்கொண்டு,
பின்னிக்கொண்டு பொழுதை நல்ல முறையில் செலவிடுவார்கள்.

கோமதி அரசு said...

நன்றி,சென்ஷி.

கோமதி அரசு said...

அண்ணாமலையான்,
நன்றி.

கோமதி அரசு said...

சின்ன அம்மிணி,
நன்றி.

கோமதி அரசு said...

சின்ன அம்மிணி,
நன்றி.

கோமதி அரசு said...

முல்லை,
உங்கள் சல்யூட்டைப் பெற்றுக் கொண்டேன்,நன்றி.

கோமதி அரசு said...

ஆதவன், குழந்தை பாடலை ரசிக்க குழந்தை மனம் வேண்டும் .உங்களிடம்
உள்ளது,மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

ஆம் முத்துலெட்சுமி,

அடுத்த தலை முறையும் படிக்கும்.

நன்றி.

ஹுஸைனம்மா said...

இப்ப உள்ள செயல்வழிக் கற்றல் மாதிரி அப்ப “பாடல் வழி அறிதல்”தானே அதிகம். அருமையான பாடல்கள் அக்கா.

வல்லிசிம்ஹன் said...

இப்போதுதான் பார்த்தேன் கோமதி..
என்ன ஒரு ஆச்சரியம். உண்மையாகவே இருவரும் ஒரே மாதிரி நினைத்திருக்கிறோம்.
என்னிடமும் அம்மா பின்னிய க்ரோஷா துணிகள், போட்டு வைத்த கோலங்கள்,
ஸ்வெட்டர்,எழுதிவைத்த கதைகள்
எல்லாமே என்னிடமும் தம்பியிடமும் இருக்கின்றன.
உங்கள் அம்மாவின் பாடல்கள் அனைத்தும் வெகு அருமையாக இருக்கின்றன.
எளிமையாகவும் இருக்கின்றன , இப்பொழுதுள்ள குழந்தைகளும் இவைகளைக் கற்றால் நன்றாக இருக்கும்.

கோமதி அரசு said...

கருத்து சொன்னதற்கும்,அம்மாவின் பாடல்களை ரசித்தமைக்கும் நன்றி, வல்லி அக்கா.

R.Gopi said...

நீங்கள் சொல்வது சரிதான்...

எல்லா பாடல்களுமே படிக்க படிக்க புதியதாக இருக்கிறது, கூடவே இனிமையாகவும்...

ஓல்ட் ஈஸ் கோல்ட்-னு சும்மாவா சொன்னாங்க...

ஆனா, எனக்கென்னவோ “ஓல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட்”னு தோணுது...

மிகவும் ரசித்தேன்... இதை இங்கே பகிர்ந்த கோமதி மேடம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.......

கோமதி அரசு said...

வாங்க கோபி,
வேலை அதிகமோ? இதற்கு முந்திய பதிவில் உங்களை காணவில்லை!

//ஒல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட்//னு தோனுது.

உண்மை,உண்மை.

எல்லாப்பாடல்களையும் ரசித்தமைக்கு நன்றி.

இன்னும் இருக்கிறது,கடவுள் பாடல்கள்,தேசபக்தி பாடல்கள், பாண்டி விளயாட்டு பாடல் நடைப்பாட்டு என்று.
வேறு ஒரு சமயத்தில் பதிவு போடவேண்டும்.
நன்றி.

ராமலக்ஷ்மி said...

அம்மாவின் நினைவாக நீங்கள் போற்றி வந்தவை எல்லோருக்குமே பொக்கிஷம். அத்தனை அருமையான பாடல்கள். இதுவரை கேட்டிராதவை. ரசித்தேன். கூடவெ தந்திருக்கிறீர்கள் அழகான விளக்கங்கள். முதற்சிகிட்சை பாட்டு வெகு நன்று. நல்ல பகிர்வும்மா!

கோமதி அரசு said...

ராமலக்ஷ்மி,எனக்கும் முதற்சிகிட்சை
பாட்டு மிகவும் பிடித்தது.

உங்கள் கருத்துகள் என்னை உற்சாகப் படுத்துகிறது.

நன்றி ராமலக்ஷ்மி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அம்மாவின் பொக்கிஷத்தை பாதுகாத்து அதை எங்களுக்கு படிக்க தந்தமைக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா,

உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும்
பிடிக்கும்.

உங்கள் வருகைக்கு நன்றி.

எம்.ஏ.சுசீலா said...

நல்ல அற்புதமான செயல்.
நானும் கூட என் தாய் எழுதிவைத்துள்ள டயரிக் குறிப்புக்களை இவ்வாறு பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
அவற்றைப் பலருக்கும் கொண்டு செல்ல உங்கள் பதிவு தூண்டுகோலாக அமைந்தது.
வாழ்த்துக்கள்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

மனதைத் தொட்டது..

நெகிழ்ச்சியான பதிவு..

நன்றி..

கோமதி அரசு said...

சுசீலா, வாழ்க வளமுடன்.

உங்கள் முதல் வரவுக்கு நன்றி.

உங்கள் அம்மாவின் டைரி குறிப்புகளை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

கோமதி அரசு said...

பிரகாஷ்,உங்கள் முதல் வரவுக்கும் ,உங்கள் கருத்துக்கும் நன்றி.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in