ஞாயிறு, 9 மே, 2021

அம்மாவின் பொக்கிஷங்கள் 

திங்கள், 8 பிப்ரவரி, 2010

அம்மாவின் பொக்கிஷங்கள் முன்பு எழுதிய பதிவு மீள்பதிவாக  இன்று இடம் பெறுகிறது.


என் அம்மா பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்து இருந்த நிறைய பாடல்கள்,கடவுள் பாடல்,தேசபக்தி பாடல்கள் எல்லாம் அவர்கள் கைப்பட எழுதிய நோட்டு மூலம் கிடைத்தது.
கிழிந்து போய் இருக்கிறது. தீபா கோவிந்த் ஒரு முறை என்னிடம் //அம்மா நீங்கள் ஸ்கூல்லே படிச்ச காலத்திலே நோட்டுப் புத்தகத்திலே கிறுக்கினதை,இனிமேல் வலைப் பதிவுகள் மூலமாக பதியுங்கள் இது கிழியாது,செதிலரிக்காது எப்பவுமே பர்மனெணட்//
என்றார்கள். நான் என் அம்மா எழுதி வைத்து இருந்ததை பதிவு செய்கிறேன். யார் எழுதிய பாடல்கள் என்று தெரியவில்லை நன்றாக இருந்தது,அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் கணவர் வரைந்த ஓவியம்
இந்த பதிவுக்கு வரைந்து தரவில்லை , சும்மா வரைந்து வைத்து இருந்த படம்.

எனக்கு அப்போது படங்கள் சரியாக எடுக்கவராது.  சரியாக அம்மாவின் கையெழுத்தை படம் எடுக்கவில்லை. அப்புறம் மீண்டும் எடுத்து போட நினைத்து போடநேரம் வரவில்லை. இப்போது பகிரலாம் என்றால் ஊரில் இருக்கிறது அம்மாவின் பாடல்கள்.


தாயே
-------
என்னைப் பெற்ற என் தாயே
இனிய பண்டம் தருவாயே
சொன்ன தெல்லாம் கேட்பேனே
சோம்பலின்றிக் கற்பேனே
கற்றதெல்லாம் சொல்வேனே
கடவுள் பாதம் பணிவேனே
குற்றம் ஒன்றும் செய்யேனே
கொஞ்சி முத்தம் தருவாயே

தாயைப்பற்றி குழந்தை பாடும் பாடலை கற்பனை செய்து பாருங்களேன்,அம்மாவை கொஞ்சி
அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் கேட்கும் உங்கள் குழந்தையின் முகம் தெரியவில்லை!!


அமெரிக்காவில் கடையில் பார்த்த விளையாட்டு அலங்கார சைக்கிள்.
                        டெல்லியில் பேரனுக்கு வாங்கிய  விளையாட்டு சைக்கிள்.

சைக்கிள் பாட்டு
---------------
தங்கையே பார் தங்கையே பார்
சைக்கிள் வண்டி இதுவே பார்
சிங்காரமான வண்டி
சீமையிலே செய்தவண்டி
இரும்பாலே செய்த வண்டி
எங்கெங்கும் ஓடும் வண்டி
மாடில்லை குதிரையில்லை
மாய மதாய்ப் பறந்திடும் பார்
தீயுமில்லை புகையுமில்லை
தீவிரமாய்ச் சென்றிடும் பார்
காலாலே மிதிப்பதால்
கடும் விசையில் போயிடும்பார்
ஒன்றன் பின் ஒன்றாக
உருளும் பைதாக்களை பார்
அக்காளும் தங்கையும் போல்
அவை போகும் அழகை பார்.

முதல் முதலில் சைக்கிள் புதிதாக வாங்கி அதை ஆசை தீரப் பார்த்து, தன் தங்கையிடம் அதைப் பற்றி சொல்லி, நம் இருவரைப் போல் ஒற்றுமையாய் போகும் அழகைப் பார் என்று
சொல்லும் அக்காள் தெரிகிறாள்,இந்த பாடலில்.
முதற் சிகிட்சை
-----------------
வா வா முருகா! ஓடிவா-நம்
வகுப்பாசிரியரை அழைத்துவா
அப்துல் மயங்கி விழுந்திட்டான் -அவன்
அண்ணன் தம்பி நாம் தாண்டா
தண்ணீர் மொண்டு வா தாசு!
தம்பி மோசை!நீ வீசு
சுற்றும் வளைத்து நில்லாதீர்-இங்கே
தூய காற்றைத் தடையாதீர்
முகத்தில் நீரை தெளித் தங்கம்!-குடிக்க
முடியுமானால் கொடு கொஞ்சம்
ஆகா!அப்துல் பிழைத்திட்டான்
அதோ பார் கண்ணை விழித்திட்டான்
ஆசிரியர் பதறி வருகின்றார்-அவர்
அச்சம் அகற்றி மகிழ்வோம் நாம்.

பள்ளிக் கூடத்தில் முதல் உதவி செய்யும் முறை,முருகா,அப்துல்,மோசை,தாசு,என்று எல்லாமத குழ்ந்தை பெயர்களை கூப்பிட்டு ,அண்ணன் தம்பி நாம் தாண்டா என்று மத ஒற்றுமை பற்றியும்,விளக்கப் படுகிறது.பொறுப்புடன் செயல் படுவது பெண் தான் என்பதை விளக்க தங்கம் என்ற பெண்ணை அழைத்து முகத்தில் நீரை தெளி,குடிக்க கொடு என்று சொல்வது பேணுவது பெண் தான் என்பதையும்,அச்சத்துடன் வரும் ஆசிரியரை நாங்களே முதல் உதவி செய்து விட்டோம் என்று மகிழ்விக்கும் மகிழ்ச்சி பொரு ந்திய மாணவர்கள் முகத்தையும் இந்தபாடல் நம் கண் முன்னே கொண்டு வருகிறது.


கப்பல்
------
கப்பல் துறையில் வந்தது
கடலில் நாளை சென்றிடும்
அப்பா கூட ஏறவே
ஆசை கொண்டு நிற்கிறேன்
அறைகள் அதிலே உண்டுமாம்
அழகுப் பண்டம் கிடைக்குமாம்
நிறையக் கூட்டம் இருக்குமாம்
நினைத்த இடங்கள் செல்லவே
பட்டணம் போல இருக்குமாம்
பல இனத்து மக்களும்
இட்டமாயிதில் சென்று தான்
ஏனை நாட்டின் சரக்கினை
அந்த நாட்டின் பொருளெல்லாம்
அதிகம் இங்கே இறக்குமாம்
ஊர்கள் யாவும் பார்க்கலாம்
பாரில் இந்தக் கப்பல்கள்
பயனைப் பெருக்க வந்ததாம்.

கப்பலைப் பற்றி அப்பா சொன்னதை நமக்கு சொல்லி,கப்பலில் வாணிபம் செய்வதை விளக்கி
கப்பல் ஓட்டிய வ.உ. சிதம்பரனாரை நம்மை நினைக்க வைக்கிறது இந்த பாடல்.//அடி மேலைக் கடல் முழுதுங் கப்பல்விடுவோம்.// என்ற பாரதியார் பாடல் நினைவுக்கு வரும்.
எனக்கு என் அப்பாவுடன் தூத்துக்குடியில் ’சார்லஸ்’ என்ற பெரிய கப்பலைப் பார்த்த நினைவு வருகிறது.பின் என் மனத்திரையில் அண்ணனுடன் ராமேஸ்வரத்தில் கப்பலை என் குழந்தைகளுடன் பார்த்தது ,மலரும் நினைவுகளாய் மலருகிறது.

அலை
--------
கடலுடுத்த நிலமகளின்
காற் சிலம்பாம் அலையே!
படமெடுத்து வருவதற்கு
படபடப்பதேனோ?
முத்தெறிந்து விளையாடி
முட்டியோடும் அலையே
பித்தனை போல் பின்னும் பின்னும்
பிதற்றி நிற்ப தேனோ?
ஞாயிறு கடலில்- நின்று
நன்றாய் எழுவது பார்
தாமரை கங்கை உளம்-மகிழ்ந்து
தண்ணெனும் தேன் சுமந்து
காமரப் பாடகரின் -இன்னிசை
கண்டு விருந்திடல் பார்
முற்றம் தெளித்திடலாம் -அதை
கற்ற பல கோலம்- வரைந்து
கண்டு களித்திடலாம்
காலைக் கடன் முடித்தே-இறைவன்
காலைப் பணிந்திடலாம்
வேலைகளிற் புகலாம் உறக்கம்
விட்டே எழுந்திரம்மா!

அலையின் அழகையும்,கடலில் தோன்றும் கதிரவனின் அழகையும்,காலையில் இறைவனை பணிந்து கடமையை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இப் பாடல் அழகாய் விளக்குகிறது.

தேச பக்தி பாடல்அம்மா எழுதிய பாடல்கள் இப்போதும் படிக்க படிக்க இனிக்கிறது.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
------------------------------------------------------------------------------------------------------------------------

41 கருத்துகள்:

 1. கோமதிக்கா இனிய அன்னையர்தின வாழ்த்துகள்!

  அக்கா அம்மாவின் பொக்கிஷங்கள் அருமை!!!! என்ன அழகாக எழுதி பாதுகாத்திருக்காங்க!

  மாமாவின் ஓவியம் அழகு!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
   வாழ்த்துக்களுக்கு நன்றி.
   அம்மா படித்தவற்றில் பிடித்தவைகளை கைபட நிறைய எழுதி வைத்து இருப்பார்கள் .
   பத்திரிக்கை செய்திகளும், கதைகளும், சுவாமி பாடல்களும் நிறைய தொகுத்து வைத்து இருக்கிறார்கள் கீதா.

   ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.

   நீக்கு
 2. பாடல்கள் எல்லாமே அருமை. கப்பல் பாடல் நான் கப்பலில் பயணம் செய்ததை நினைவுபடுத்தியது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடல்கள் எல்லாம் எனக்கு பிடித்து இருந்தது உங்களுக்கும் பிடித்து இருக்கும் என்பதால்தான் மீள்பதிவு .

   நீக்கு
 3. பொக்கிஷங்கள் அருமை... உங்கள் பசங்களுக்கு, உங்கள் அம்மாவின் கையெழுத்தில் உள்ளவற்றை டிஜிடைஸ் செய்து கொடுத்தால் (இல்லை அவங்களே செய்துகொண்டால்) அது இன்னும் சில தலைமுறைகளுக்கு பத்திரமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது நல்ல யோசனை, அப்படியே பத்திரப்படுத்த சொல்கிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. உங்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

  உங்கள் அம்மாவின் பொக்கிஷங்களை பத்திரபடுத்தி பாதுகாத்து வருவதற்கு பாராட்டுக்கள். அவர்களின் கையெழுத்தும் அற்புதமாக உள்ளது. அவர்கள் எழுதி வைத்திருந்த கருத்துள்ள பாடல்களை இன்று பகிர்ந்து அவரை சிறந்த அன்னையாக்கி, நீங்களும்,அவரிடம் அன்பான வாழ்த்துகளை பெற்று விட்டீர்கள். ரொம்ப சந்தோஷமாக உள்ளது. .

  பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. தாயின் அன்பை வேண்டும் பாடல், சைக்கிள் பாடல், முதல் உதவி செய்து ஒரு உயிரை காப்பாற்றிய மகிழ்வில் பள்ளி மாணவர்கள் பாடும் பாடல், கப்பல் பாடல் என அனைத்துமே நன்றாக உள்ளது. நானும் குழந்தை பருவத்திற்கு சென்று அனைத்தையும் பாடி மகிழ்ந்தேன். அற்புதமான இதையெல்லாம் எழுதி வைத்திருந்த உங்கள் அம்மாவுக்கு என்னுடைய பணிவான நமஸ்காரங்கள். அதை பத்திரமாக பாதுகாத்து பொக்கிஷமாக கருதி வைத்திருந்து எங்களுக்கு பகிர்ந்தளித்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  காலையில் கடலின் இயல்புகள், கதிரவனின் கடமைகள் எனக்கூறி, நம் குழந்தைகளின் தினசரி கடமையையும் குறிப்பிட்டு அவர்களை எழுப்புவதாய் இருக்கும் பாடல் சிறப்பாக உள்ளது.

  தங்கள் மகள். மற்றும் மருமகள் குடும்பத்தினருக்கும் எனது இனிய அன்னையர் தின வாழ்த்துகளை கூறி விடுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

   அம்மாவின் எழுத்து மிகவும் அழகாய் இருக்கும். சரியாக படம் எடுக்கவில்லை.
   இன்னொரு தரம் அம்மாவின் எழுத்து பதிவு போடுகிறேன்.
   அம்மாவை போல என்னால் ஆக முடியாது. அவ்வளவு திறமையானவர்கள், அன்பானவர்கள்.அசைக்கமுடியாத இறை நம்பிக்கை உடையவர்கள். அம்மாவின் வாழ்த்து எப்போதும் வேண்டும்.

   ஒவ்வொரு பாடலையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.குழந்தை பருவத்திற்கு சென்றது மகிழ்ச்சி.

   //தங்கள் மகள். மற்றும் மருமகள் குடும்பத்தினருக்கும் எனது இனிய அன்னையர் தின வாழ்த்துகளை கூறி விடுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

   மகள், மருமகளுக்கு சொல்லி விடுகிறேன். மகள் என்னைப்பார்க்க வந்து இருக்கிறாள், அதுதான் பதில் கொடுக்க காலதாமதம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. அனைத்து பாடல் வரிகளும் அருமை...

  அன்னையர் தின வாழ்த்துகள் - என்றும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   என்றும் அன்னைக்கு வாழ்த்து சொல்லி கொண்டே இருக்கலாம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. அன்னையர் தினத்தை பெருமை படுத்தும் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. அன்னையர் தின வாழ்த்துகள்.  அம்மா எழுதி வைத்திருக்கும் பாடல்களில்தான் எவ்வளவு எளிமை, வசீகரம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   அம்மாவுக்கு பிடித்த பாடல்களை எழுதி வைத்து இருந்த பகிர்வு உங்களுக்கும் பிடித்தது மகிழ்ச்சி.எளிமையான வசீகரிக்கும் பாடல்கள்தான் .

   நீக்கு
 8. நீங்கள் சொல்லி இருப்பது போல அதிலேயே மத நல்லிணக்கம், கப்பல், சைக்கிள் போன்றவற்றைப் ப்பற்றிய செய்திகள் என்று கலந்து அன்பை போதிக்கும் பாடல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பை போதிக்கும் பாடல்கள், ஒற்றுமையாக மத நல்லிணக்கத்துடன்கூடிய பாடல்கள் தான்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 9. அருமையான பதிவு..
  அழகான பாடல்கள்.. ஐயா அவர்களது ஓவியம் சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   //அழகான பாடல்கள்.. ஐயா அவர்களது ஓவியம் சிறப்பு...//

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. அம்மா அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந்த கோலங்களை வரைந்து வாங்கி விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.. முடியாமல் போனது..

  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அம்மா அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந்த கோலங்களை வரைந்து வாங்கி விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.. முடியாமல் போனது..//

   வருத்தமாக இருக்கிறது.


   அம்மா பேத்திகளுக்கு கோலங்கள் சொல்லி கொடுத்து இருப்பார்களே!

   நீக்கு
 11. அன்னையர் தினம் அன்று உங்கள் அன்னை எழுதி வைத்திருந்த பாடல்களைப் பகிர்ந்து கொண்டது சிறப்பு. எத்தனை அர்த்தம் பொதிந்த பாடல்கள்.

  அன்னையர் தின நல்வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   உடல் நலமா? நல்ல ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.
   மெதுவாக ஊருக்கு போகலாம்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. இந்தப்பாடல்களை நான் கேட்டிருக்கிரேன். தமிழ் பாடப் புத்தகங்களிலும் வந்திருக்கிறது. குழந்தைகளுக்கு ராகத்துடன் சொல்லிக் கொடுப்பார்கள். நல்ல பாடல்கள். அருமையான பதிவு. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போதெல்லாம் தமிழாசிரியர்கள் தமிழ்ப் புத்தகங்களைத் தயாரித்து வழங்கினர்... 69 க்குப் பிறகு புத்தகங்களை வழன்குவது அரசினர் பாடநூல் நிறுவனம் என்றான பிறகு பற்பல மாற்றங்கள்... அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பனவற்றை எல்லாம் நீக்கப்பட்டதாக கவியரசர் கண்ணதாசன் அவர்களே சொல்லியிருக்கின்றார்... முழுக்க முழுக்க மிஷநரி/ ஆங்கில வழிக் கல்வி என்றானதும் பழந்தமிழ்ப் பாடல்கள் முற்றாக ஓரங்கட்டப்பட்டு விட்டன...

   பாட்டியின் வீட்டுப் பழம் பானை - எனும் நீதிக் கதைப் பாடல் யாருக்காவது தெரியுமா?...

   நீக்கு
  2. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்
   நீங்கள் இந்த பாடல்களை ராகத்துடன் பாடி இருக்கிறீர்களா! மகிழ்ச்சி.
   ஊங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  3. //அப்போதெல்லாம் தமிழாசிரியர்கள் தமிழ்ப் புத்தகங்களைத் தயாரித்து வழங்கினர்.//
   நீங்கல் சொல்வது சரிதான்.என் மாமனார் அவர்கள் பாடநூல் தயாரித்து இருக்கிறார்கள்.


   சகோ துரை செல்வராஜூ மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 13. சைகிள் பாடல் நான் ஆரம்பப் பள்ளியில் கற்றிருக்கிறேன். தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய பாடல். மற்றவையும் அவரே எழுதி இருக்கக் கூடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   சைக்கிள் பாடல் உங்களுக்கு பாடமாக வந்து இருக்கிரதா! மகிழ்ச்சி.
   யார் எழுதிய பாடல்கள் என்று தேட வேண்டும்.

   நீக்கு
 14. உண்மையிலேயே பொக்கிஷப் பகிர்வு தான். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மாவின் பகிர்வு பிடித்து இருந்தது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 15. அன்பின் கோமதிமா,
  வாழ்க வளமுடன்.
  அன்னையர் தின வாழ்த்துகள் ஒரு அன்பு அம்மாவுக்கு.

  இந்தப் பதிவை நான் படித்ததில்லை.
  அம்மா எழுதிய பாடல்களா இவை?
  பொக்கிஷம் தான். எத்தனை விவரங்கள் அம்மா இதில்!!!!
  மூச்சு விட மறந்தேன். அம்மா எப்படி இவ்வளவு தமிழ்
  அறிவைப் பெற்றாரோ.!!!!!!!
  படிக்கப் படிக்க இன்பம்.
  கழுத்தைக் கட்டிக் கொள்ளும் குழந்தையைக் கனிவுடன்
  பார்க்கும் அம்மா இதய தீபம்.

  தங்கச் சுரங்கமாக இந்தப் பதிவைப் பார்க்கிறேன்.
  நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நிறைய பேர் படிக்கவில்லை என்பதாலும், புது பதிவு போட நேரம் இல்லை என்பாதாலும் அன்னையர் தினத்திற்கு மீள்பதிவு.

   அம்மா எழுதவில்லை அக்கா. யாரோ எழுதியதை தன் கைபட எழுதி சேமித்து வைத்து இருந்த சேமிப்பு.

   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
  நாளை எல்லோருக்கும் பதில் தருகிறேன்.
  அம்மா எழுதி வைத்த பாடல்கள்தான் அனைத்தும். அம்மா எழுதியது இல்லை.
  படித்த விஷயங்களை பிடித்ததை எழுதி வைத்துக் கொள்வது போல் எழுதி வைத்து இருக்கிறார்கள். அதை தான் இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
  அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. அம்மா ரசித்துப் பொக்கிஷமாகப் பாதுகாத்தப் பாடல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. அனைத்தும் அருமை. மத நல்லிணக்கத்தை குழந்தைகள் மனதில் விதைக்கும் ‘முதற் சிகிட்சை’ எல்லாக் காலத்துக்கும் தேவையான ஒன்று, மிக நன்று.

  அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   அம்மா ரசித்து பொக்கிஷமாக பாதுகாத்த பாடல்கள்தான்.

   //மத நல்லிணக்கத்தை குழந்தைகள் மனதில் விதைக்கும் ‘முதற் சிகிட்சை’ எல்லாக் காலத்துக்கும் தேவையான ஒன்று, மிக நன்று.//

   எனக்கும் பிடித்த பாடல் ராமலக்ஷ்மி.
   உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 19. பதில்கள்
  1. வணக்கம் Paul Jeyaseelan, வாழ்க வளமுடன்

   உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 20. பாட்டியின் வீட்டுப் பழம்பானை அந்தப் பானையின் ஓர்புறம் ஓட்டையடா
  ஓட்டை வழி ஒரு சுண்டெலியும் அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா.
  துரை செல்வராஜு அவர்கலள் கேட்ட பாடலா? அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பாட்டியின் வீட்டுப் பழம்பானை அந்தப் பானையின் ஓர்புறம் ஓட்டையடா
   ஓட்டை வழி ஒரு சுண்டெலியும் அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா.//

   ஆமாம் அம்மா, அந்த பாடல்தான்.
   பாடலின் நிறைவில் இப்படி வரும்.
   கள்ள வழியினிற் செல்பவரை-எமன்
   காலடி பற்றித் தொடர்வானடா!
   உள்ள படியே நடப்பவர்க்குத்-தெய்வம்
   உற்ற துணையாக நிற்குமடா!

   நீதி போதனை பாடல். கவிமணி அவர்கள் எழுதிய பாடல்.

   76 ம் வருடத்தில் கூட கூட பாட புத்தகத்தில் இருந்தது இந்த பாட்டு.

   மீள் வருகைக்கு நன்றி.

   நீக்கு