செவ்வாய், 15 நவம்பர், 2016

நிலவே ! நிலவே !

இரவு 9.30  க்கு மொட்டை மாடியில் எடுத்த  நிலா   நிலாவைச் சுற்றி பெரிதாகக் கோட்டை கட்டி இருந்தது

இதுவும் இரவு எடுத்த நிலா


காலையில்  ஜன்னல் வழியாக  எடுத்த  நிலா
காலை 5.30 க்கு எடுத்த படங்கள்  இனி வருபவை எல்லாம்.






 69 ஆண்டுகளுக்கு பின்  நேற்று வந்த  பெளர்ணமி  சிறப்பு வாய்ந்த பெளர்ணமியாம். எல்லோரும் அதைச் சிறப்பித்துப் பதிவு போடும் போது நானும்   நான்  எடுத்த நிலாக்களையும் போட நினைத்து போட்டு விட்டேன்.  அன்புப் பரிசாக  வந்த  கை அடக்க சின்ன காமிராவில் எடுத்த  நிலாப் படங்கள். நிலவைக் காட்டிச் சோறு ஊட்டிய அன்னைக்குக் குழந்தையின் பரிசு.

அடுத்து டிசம்பர் 14ல் தெரியும் என்கிறார்கள். இது போன்ற சிறப்பு பெளர்ணமியை 2034ல் தான் இனி  பார்க்க  முடியுமாம்.

கடற்கரை, மரங்கள் அருகே எடுத்தால்  நன்றாக  இருக்கும் . மொட்டைமாடியிலும், ஜன்னல் வழியாகவும்  இவ்வளவு தான் எடுக்க முடிந்தது.



திங்கள், 14 நவம்பர், 2016

அன்னாபிஷேகம்







ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அனைத்து சிவாலயங்களிலும்  நடைபெறும். கங்கை  கொண்ட சோழபுரத்தில் ஒருமுறை பார்த்து இருக்கிறேன். அங்கு கூடைகூடையாக சாதம் மலையாக  அபிஷேகம் செய்யப்படும்.  பக்கத்து ஊர்களுக்கு  எல்லாம்  சாதம் லாரியில் கொண்டு  போய் கொடுப்பார்கள்  முன்பு.   அங்கும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம்  நடைபெறும். அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க ஆறு, குளங்களிலும் கொஞ்சம் கலக்கப்படும். பறவைகள், எறும்புகளுக்கும் வழங்கப்படும்.

மாயவரத்தில் புனுகீஸ்வரர் கோவிலில்   இரவு நடைபெறும்,  பல வருடங்கள் பார்த்து இருக்கிறேன். இரவு அர்த்தசாம பூஜை   முடிந்தவுடன்  அலங்காரம்  கலைக்கப்பட்டு சாதத்தில் தயிர் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.  


இன்று எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஞானபிரசனாம்பிகை உடனுறை, காளகத்தீஸ்வரர்  கோவிலில்  நடை பெற்ற   அன்னாபிஷேக  விழாவில் கலந்து கொண்டேன். காலை பத்துமணிக்கு   மற்ற பால், தயிர், இளநீர் அபிஷேகங்கள்  முடிந்தவுடன் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்பே பக்தர்கள் அரிசி, மற்றும் காய்கனிகள் கொண்டு வந்து கொடுத்து  விட்டோம்.

அன்னாபிஷேகம்  செய்து பின் காய்கனிகளால் அலங்காரம் செய்த பின் பூஜையானது.

அதன்பின் அன்னதானம் நடந்தது.  அதன்பின் கடவுளுக்கு அலங்காரம் செய்த  காய்கனிகளை எல்லோருக்கும் வழங்கினார்கள். விழாவை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.

அபிசேக சமயத்தில் தேவார , திருவாசகம் படித்தோம் அனைவரும்.
உலக நன்மைக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது. இன்று மாலை அபிராமி அந்தாதி பாராயணம் நடக்கும்.


மற்ற தானங்களை விட அன்னதானம் தான் சிறப்பாக  சொல்லப்படுகிறது. இன்று அன்னாபிஷேகம் பார்த்து அந்த அன்னத்தை உண்டால் காலம் முழுவதும்   அன்னத்திற்குப்   பஞ்சம் இல்லாமல்  இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அனைத்து  உயிர்களுக்கும்  தாயாக  இருக்கும்   இறைவன்,  உயிர்கள்  வாழ மழையைக்கொடுத்து அதனால் பயிர் பச்சைகள் செழித்து    சுபிட்சமாய் வாழ  அருள்புரிய வேண்டும்!

                                                         வாழ்க வளமுடன்!
                                                                     ----------------

புதன், 9 நவம்பர், 2016

விஷம் நீக்கும் பிள்ளையார்கோயில், கொடிக்குளம்


விஷம் நீக்கும் பிள்ளையார். சிறிய சிவலிங்கம், இருபுறமும் நாகங்கள், மூஞ்சூறு எல்லாம் ஒரே வரிசையில் இருக்கிறார்கள்.
திருமணப் பத்திரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

                           பிள்ளையாருக்கு எதிரில் நந்தி  இருக்கிறது.

உயரமான மரங்களின் நிழலில் அழகாய் கொலுவிருக்கிறார் பிள்ளையார்

பிள்ளையாரின் எதிரில்  இரண்டு கல் தூண்களில்  வெண்கல மணிகள்  கட்டி  இருந்தது.

மண்டபக் கூரையிலும் மணிகள்.

பிள்ளையார் கோயிலின் வாசலில் அமர்ந்து இருந்த  ஒருவர்  எங்களைப் பார்த்து விஷம் சொல்ல வந்து  இருக்கிறீர்களா?  என்று கேட்டார்  எங்களுக்கு புரியவில்லை என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்ட போது  விஷப்பூச்சிகள் கடித்தால்  இங்கு வந்து வேண்டிக் கொள்வார்களாம் . குணமாகியதும் நேர்த்திக்கடனாய் மணிகளைக் கட்டுவார்களாம்.  அதுதான் விஷம் சொல்ல வந்தீர்களா? அல்லது பெருமாள் கோயிலுக்கு வந்தீர்களா என்று கேட்டேன் என்றார்.
இன்று பெருமாள் கோவிலில்நடக்கும் விழாவிற்கு பெரிய பெரிய சாமிகள் எல்லாம் வருவார்கள் என்றார்.  பிள்ளை லோகாச்சாரியார் வைபவத்திற்கு வருபவர்களை பற்றிச்  சொன்னார்.   7.11/,2016 ல் எழுதிய எனது பதிவைப் படித்து இருப்பீர்கள் அல்லவா?


வர்ணத்தில் இருந்தார்    முருகன்



அகலமாக இருந்த மரத்தைச் சுற்றி மணிகள்.

பிள்ளையார் கோவில் அருகிலிருந்த  எல்லா மரங்களிலும் மணிகள்

வேப்பமரத்தின் அடியில்  மேடை கட்டி அதைச் சுற்றி நாகங்கள்.
பிள்ளையார் கோவில் பின் புறம் அரசமரம் அங்கிருந்த மேடையில்  நாகங்கள்  வேப்பமரமும் புதிதாக வைத்து அதுவும் நன்கு வளர்ந்து கொண்டு  இருக்கிறது.
 கால்நடைகளுக்குத் தண்ணீர் வைக்கும் கல்தொட்டி


காராம்பசுக்கள், கொக்குகள்
மாடுகள் நடக்கும் போது கூடவே கொக்குகள் நடப்பது பார்க்க அவ்வளவு அழகு
குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு, சீஸாபலகை   உள்ளன
கிராமக்  கோவிலாம் இங்கு பெண்கள் சுற்றி வரக்கூடாது என்றார்  ஒரு பெரியவர் வெளியில் நின்று கும்பிடலாம் என்றார்.
தாமரைக்குளத்திற்கு வலது பக்கம் பிள்ளை லோகாச்சாரியார் திருவரசு, இடது பக்கம்  விஷம் நீக்கும் பிள்ளையார் கோவில்
ஆனைமலையில் தேனீ கூடு


கொடிக்குளத்தில் உள்ள ஜோதிஷ்குடி போகும் பாதையின் ஆரம்பத்தில் இந்த பிள்ளையார்  இருக்கிறார். அழகான குடில்
ஊருக்குள் நுழையும் போதே விஷம் சொல்ல வருபவர்கள் செருப்பு அணிந்து வரக்கூடது என்று  அறிவுப்பு  பலகை வைத்து இருக்கிறார்கள்.  பிள்ளையார் பார்க்க வருபவர்கள் பிள்ளை லோகாச்சாரியார் கோயில்  போகலாம்,   பிள்ளை லோகாச்சாரியாரை   தரிசிக்க போகிறவர்கள்   பிள்ளையாரையும்  தரிசிக்கலாம்,  நிறைய பேர்களுடன்   சாப்பாடு கட்டிக் கொண்டு போய்  நகரத்தின் சந்தடி இல்லாமல் அமைதியாக  இயற்கையை  களித்து வரலாம்..  இயற்கையைப் பாழ்  செய்யாமல் வரலாம்.
குப்பைகள்  இல்லாமல் சுத்தமாய்  இருக்கிறது  அப்படியே பராமரித்து வரலாம்.  மரங்கள் எல்லாவற்றிற்கும் மண் அனைத்தும் வைத்து  இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

கோயில் இருப்பிடம்;-

மதுரையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரையிலிருந்து ஒத்தக்கடையைக் கடந்து மேலூர்   செல்லும் வழியில் இடது புறம் திரும்பி கொடிக்குளம்  செல்லும் பாதையில் 2 கி.மீ செல்ல வேண்டும்.

                                                           வாழ்க வளமுடன்
                                                                 -------------------

திங்கள், 7 நவம்பர், 2016

பிள்ளை லோகாச்சாரியார் வைபவம்




இன்று (7.11.2016 ஐப்பசி திருவோணம்) பிள்ளைலோகாச்சாரியார் திருவரசு எய்திய நாள்.  அதை முன்னிட்டு அவர்  திருவரசு எய்திய  ஜ்யோதிஷ்குடிக்கு இன்று சென்றிருந்தோம்.

செல்லும் வழி;-

மதுரையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
மதுரையிலிருந்து ஒத்தக்கடையைக் கடந்து மேலூர்   செல்லும் வழியில் இடது புறம் திரும்பி கொடிக்குளம்  செல்லும் பாதையில் 2 கி.மீ செல்ல வேண்டும்.

ஆச்சாரியாரின் வரலாறு;-

பிள்ளைலோகாச்சாரியார், ஸ்ரீ இராமானுஜருக்குப் பின்  வந்தவர். இவர் வடக்குத்திருவீதிப்பிள்ளையின் புதல்வர், கி.பி  1205 இல் ஸ்ரீரங்கத்தில் அவதரித்தார்.  கி.பி 1311 ல் ஜோதிஷ்குடியில் திருவரசு எய்தினார்.

இராமானுஜருக்குப் பின்  வைணவத்தில்  தென்கலைத் தத்துவத்தை பிள்ளைலோகாச்சாரியார் அறிமுகப்படுத்தினார். வடகலை தத்துவத்தை  வேதாந்த தேசிகர் அறிமுகப்படுத்தினார்.

தென்னிந்தியாவில் அவதரித்த ஆழ்வார்கள் அருளிய திவ்வியபிரபந்தங்களைச் சிறப்பித்துக் கூறுவது   தென்கலை என்பார்கள்.

வடமொழி சாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது வடகலை என்பார்கள்.  

இறைவனுக்கும் அடியார்களுக்கும் இடையிலே உள்ள தொடர்பை இரண்டு வகையாகச் சொல்கிறார்கள்.  மர்க்கட நியாயம், மார்ச்சால  நியாயம்  என்று  சொல்வார்கள். 

குரங்கின் குட்டியானது தன்னுடைய  முயற்சியால் தாயின் வயிற்றைப் பற்றிக் கொள்கிறது, அதுபோல பக்தன் தன்னுடைய முயற்சியால் இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைச் சொல்வது மர்க்கட நியாயம்   என்பார்கள்.

பூனையானது  தன்னுடைய குட்டிகளைத்  தன்னுடைய  முயற்சியால் - வாயால்   கவ்விக் கொண்டு எடுத்துச்  சென்று  காப்பாற்றுகிறது.  அதுபோல   இறைவன்   தன்னுடைய முயற்சியால் பக்தர்களைக்  காப்பாற்றுவான் என்பது மார்ச்சால   நியாயம்  என்பார்கள்.

மர்க்கட  நியாயத்தை  வேதாந்த  தேசிகர் வலியுறுத்தினார், மார்ச்சால  நியாயத்தைப் பிள்ளை லோகாச்சாரியார் வலியுறுத்தினார்.

இவர் முமுட்சுப்படி,   தனித்வயம் , ஸ்ரீவசன பூஷணம் போன்ற பல நூல்களை அருளியுள்ளார்.

முகமதியர் படையெடுப்பின் போது   ஸ்ரீரங்கத்திலிருந்து  நம்பெருமா
ளின்  உற்சவ விக்கிரகத்தைப் பாதுகாக்க எடுத்து   வந்து மதுரைக்கு அருகில்  உள்ள ஒத்தக்கடை எனும்  இடத்தில் ஆனைமலை அடிவாரத்தில்  ஒரு குகையில்   மறைத்து  வைத்து  வழிபட்டு வந்தார். இவ்விடத்தில்  அவருக்கு  உடல் நலம்  குறைந்து  இறுதியில் திருவரசு எய்தினார். திருவரசு எய்தும்  போது  தன் அருகே இருந்த சிறு பூச்சிகள், சிறு செடி கொடி முதலியவற்றைத்  தன் கரங்களால்  தொட்டு  அவற்றுக்கும்   மோட்சம்  அளித்ததாக  வரலாறு. 

இந்த  இடத்திற்கு ஜோதிஷ்குடி என்று பெயர். ஆச்சாரியார் நம்பெருமாள் விக்கிரகத்தை   எங்கு வைக்க வேண்டும்  என்று நினைத்த  போது இந்த  இடத்தில் ஒரு ஒளி  தோன்றியதால்  இந்த இடத்திற்கு  ஜோதிஷ்குடி என்ற பெயர்  வந்தது  என்கிறார்கள்.

 நன்றி:- இப்படம்  இணையதளத்தில் இருந்து எடுத்தது-(yel-low blogsot.in)

நம்பெருமாளின் திருமேனி  இருந்த குகையின் வாயிலை தற்காலத்தில் பெரும்  பாறை  விழுந்து   மூடி  விட்டது.  அங்கே இருந்த சிறிய  மண்டபம்  இடிந்து  விட்டது.   அவ்விடத்தை   இப்போதும் காணலாம். 
துளசிமாலை சார்த்தியிருக்கும்  இடத்தில்தான் குகை இருந்தது
இங்கு சில அடியார்கள் திருவாய்மொழிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.


                                              குகைக்குச் செல்லும் வழி
இங்கே   ஸ்ரீ வேதநாராயணப்  பெருமாள்  சிறிய  வடிவில் இருக்கிறார். இடதுபக்கத்தில் அமர்ந்த கோலத்தில்  கைகளைக் கூப்பியபடி பிரம்மா  இருக்கிறார். பட்டர், துளசி அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார்.பிரம்மாவிற்கு நான்கு தலை கிடையாது, இங்கு ஒரு தலை தான் என்றும் பெருமாள் வேதநாராயணனாக  இருப்பதால்  பிரம்மாவிற்கு  ஒருதலைதான்  என்றும்  சொன்னார்.


சன்னதிக்கு அடுத்து,  பாதங்கள் ஒரு பீடத்தின் மேல் இருந்தது அதுவும் ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்றார்.  முன்பு குகைகுக்குள் தான்  இருந்தது என்றும்  சொன்னார். 

 கோவிலுக்கு எதிரில் தாமரைப் பொய்கை சதுர வடிவில் இருக்கிறது.  ஒன்று இரண்டு தாமரைப்பூக்கள் உள்ளது. பக்கத்தில் போய்ப் படம் எடுக்க முடியவில்லை , அதில்  யாரும் இறங்கக் கூடாது  என்று சொன்னார்கள் , மீறி இறங்கினால் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள  மரத்தில் உள்ள தேனிக்கள்   கொட்டி விடுமாம்.





   தூரத்திலிருந்து  அங்கு அமர்ந்து இருந்த கருப்பு  நாரையைப்  படம் எடுத்தேன்.

பெருமாள் கோயில் அருகே  சற்று உயரத்தில் பிள்ளைலோகாச்சாரியாருக்கு  சிறிய  விமானத்துடன் ஒரு சன்னதி உள்ளது.   கை கூப்பிய வண்ணம் அமர்ந்த  நிலையில்  இருக்கிறார் ஆச்சாரியார்..

சிவப்புத் துணியால் நடை பாவாடை விரித்து  இருந்தார்கள் 

 பிள்ளை லோகாச்சாரியார்  சன்னதி முன் அமர்ந்து அனைவரும் ராமனுஜரைப்பற்றி பாடிக்கொண்டு இருந்தார்கள். பிள்ளை லோகாச்சாரியார்  பற்றிய வரலாறு கல்வெட்டில்  இருந்தது. அவர்கள் எல்லோரும் அமர்ந்து இருந்ததால் அதைப் போட்டோ எடுக்க முடியவில்லை.   .



போகும் பாதையில் கிணறு ஒன்று  இருக்கிறது.   ஊர்  மக்கள் தண்ணீர்  எடுத்துச்  செல்கிறார்கள்  தண்ணீர்  அமிர்தமாய் இருக்கிறது.    எப்போதும் வற்றாதாம்.  ஊறிக்  கொண்டே இருக்குமாம். அந்த ஊர்  மக்கள்  மட்டும்  தான்  எடுக்க  வேண்டும் என்பது கட்டுப்பாடாம்.  

அழகர் கோவில்  கங்கை நீர் போல அவ்வளவு ருசி.  தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தவரிடம் வாங்கிக் கொஞ்சம்  பருகித்  தலையில்  தெளித்துக் கண்களில்   ஒத்திக்  கொண்டோம்.

அவர் ஒரு செய்தி சொன்னார் பழமையான கல்வெட்டு உள்ளது  என்று இடத்தைக் காட்டினார்.  கிணறு இருக்கும்  அதே  சாரியில்  உள்ளது.
                                               கோடியில் கல்வெட்டு உள்ளது.
                                                                கல்வெட்டு


                                                           செல்லும் பாதை



இயற்கை எழில் கொஞ்சும்  இடம், அமைதியான ஆரவாரம் இல்லாத இடம்.  இந்த நாளில் தான் திறந்து வைத்து இருப்பார்கள் மற்ற நாளில் பார்க்க வேண்டும் என்றால் ஆனமலை நரசிம்மர் கோவிலில் இருக்கும் பட்டரை அழைத்து வந்து பார்க்கலாம்   என்று பட்டர் சொன்னார்.
வாழ்க வளமுடன்
-----------