ஞாயிறு, 15 அக்டோபர், 2023

சிறுவர் பூங்காவும், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறும்


பேரன் ஜூன் மாதம் (25ம் தேதி) மதுரை  வந்து இருந்த போது வீட்டுக்கு அருகில் உள்ள சிறுவர் பூங்கா போய் இருந்தோம்.

அங்கு முதலில் பார்த்தது நம் முன்னாள் குடியரசு தலைவர்  பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின்  வாழ்கை வரலாற்றை படங்களுடன்  அழகாய் சொல்லும்     அரங்கம் இருந்தது.

இன்று அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் . அவருக்கு நம் வணக்கத்தை தெரிவித்து கொள்வோம்..

அவர் பிறந்த நாளில்  சிறுவர் பூங்காவில் எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.



பூங்காவில் உள்ளே போனதும் முதலில் திரு அப்துல் கலாம் அரங்கம் தான்.

இராமேஸ்வரத்தில்  அவர் பிறந்த வீடு

தாய் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள்

மாணவர்களை   மிகவும் பிடிக்குமே அவருக்கு ! மாணவர்களை கனவு காண சொன்னவர் , கனவுகளின் நாயகர் என்று பட்டம் பெற்றவருடன் பேரன்.
இந்தியாவின் தலைசிறந்த  விஞ்ஞானி தொழில் நுட்ப வல்லுனர், இந்திய ஏவுகணை நாயகர்


ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் மேல்நிலைபள்ளியில்  இடை நிலை படிப்பை முடித்தார்

இராமேஸ்வரத்தில் பள்ளி படிப்பை முடித்து திருச்சிராபள்ளியில் உள்ள ஜோசப் கல்லூரியில்  இயற்பியலில் டிப்ளமோ பட்டம் பெற்றார்,   அடுத்து சென்னை சென்று வானூர்தி பொறியியல்  டிபள்மோ படித்தார்.

1969 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முதல் செயற்கை கோள் ஏவுதல்  வாகனத்தின் திட்டத் தலைவராக  இருந்தார்.
1980 இல் ரோகிணி செயற்கைக்கோளை  ஓப்பீட்டளவில் அருகிலுள்ள சுற்றுபாதையில்  வெற்றிகரமாக செலுத்தியது
இந்தியாவின் 11 வது  ஜனாதிபதி 
அவர் பெற்ற பட்டங்களும், விருதுகளும்  எண்ணற்றவை

இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, மக்கள் ஜனாதிபதி,  பத்மபூஷ்ன், பத்மவீபூஷன் , வீர் சாவர்க்கர் விருது, ராமானுஜன் விருது,  கிங் சார்லஸ் பதக்கம்,  2009 ல் "ஹூவர் மெடல்" எண்ணற்ற விருதுகள் பெற்ற சாதனையாளர்

 சிறந்த ஆசிரியர் வருங்கால இளைஞர்களின் முன் மாதிரியாக திகழ்ந்தார் நிறைய புத்தங்கள் எழுதி இருக்கிறார்.
அற்புத பேச்சாளர் இறுதி மூச்சு உள்ளவரை  பேசி இருக்கிறார்.
இறுதியாக கலந்து கொண்ட  நிகழ்ச்சி.
அவர் புன்னகை முகம்   என்றும் நம் மனதில் 
அடுத்து போன அரங்கம்  மடகாஸ்கர் படத்தில் வரும் கார்டூன் பாத்திரங்கள் . வனவிலங்கு பூங்காவில் இருக்கும் மிருகங்கள் மக்களை மகிழ்ச்சி படுத்தும் படம் 2005ல் வெளி வந்த படத்தின்  காட்சிகள் கொஞ்சம் இருக்கும். நான்கு  வனவிலங்குகள் பூங்காவை விட்டு காட்டுக்கு போகும் காட்சிகள் சித்தரிப்பு.














இருண்ட கானகம் என்பதால் உள்ளே கொஞ்சம் இருட்டு  தரை மேடுபள்ளம் அதற்கு மேல் பச்சை துணியால் விரிப்பு போட்டு இருக்கிறார்கள் எனக்கு நடந்து போவது கொஞ்சம் சிரமாக இருந்தது. 

வெளியே சில கடைகள். தரையை பாருங்கள்  எப்படி இருக்கிறது என்று தரையை சரி செய்யலாம்.
பச்சை தடுப்புகுள் அதிசயம்  ஏதோ காட்டுவார்கள் போல நாங்கள் போன போது ஆரம்பிக்கவில்லை.
குழந்தைகளுக்கு ரிமோட்டில் இயக்கும் கார்
பின்னால் ஒருவர் இயக்கி கொண்டு வருகிறார் பூங்கா பணியாளர்
அதிர்ஷ்ட வளையம் எறிதல், துப்பாக்கி சுடுதல்

யானை வாயிலிருந்து நீர் வருவது போல  அமைத்து இருந்தார்கள்
குதித்து விளையாடுதல்
படகு சவாரி

சறுக்கு 

நிறைய  விளையாட்டுக்கள் உண்டு


கருமேகம் திரண்டு மழை பொழிய காத்து இருந்தது






சிறு தூறல் போட ஆரம்பித்து விட்டது ஒதுங்க சரியான இடம் இல்லை அதனால் வீட்டுக்கு  கிளம்பி விட்டோம்.

சிறுவர் பூங்கா சுற்றிப்பார்த்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்.

 

வெளியே பஞ்சு மிட்டாய் , பலூன் விற்பவர்கள்.
 மழை பெய்தால் இவர்கள் வியாபாரம் கொஞ்சம் கடினம். அவர்கள் கண்ணில்"யாராவது வாங்க மாட்டார்களா" என்ற  எதிர்பார்ப்பு தெரிந்தது. உள்ளே இருக்கும் குழந்தைகள் வெளியே வந்து வாங்க வேண்டும் . இவர்கள் அடிப்படை தேவைகள் நிறைவேற நவராத்திரி நாளில் வேண்டிக் கொள்வோம்.

இன்று நவராத்திரி முதல் நாள். அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை வாழ்த்துகள்.

எல்லோருக்கும் நல்ல ஆரோக்கியம், தேகபலம் மனபலம்  கிடைக்க வேண்டிக் கொள்வோம் மூன்று தேவியர்களிடம். பண்டிகைகளை  எல்லாம் சிலர் இப்போது  மனபலத்தில் தான் நடந்தி கொண்டு இருக்கிறார்கள் .

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

28 கருத்துகள்:

  1. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொருத்தமான பதிவிட்டது மகிழ்ச்சி. இன்று எங்கள் பழைய அலுவலகத்தில் ஒரு சிற்றூழியர் திரு கலாம் படத்தை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி, பூமாலை சார்த்தி வைத்திருந்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொருத்தமான பதிவிட்டது மகிழ்ச்சி.//

      நன்றி.

      //இன்று எங்கள் பழைய அலுவலகத்தில் ஒரு சிற்றூழியர் திரு கலாம் படத்தை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி, பூமாலை சார்த்தி வைத்திருந்திருப்பார்.//

      கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அவர் கலாம் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

      ஒரு தடவை அவர் பிறந்த நாள் பொழுது கோவையிலிருந்து வந்து கொண்டு இருந்தோம், அப்போது மதுரையில் வழி எங்கும் அவர் படம் வைத்து மாலைகள் போட்டு பூக்களால் அர்ச்சனை செய்து இருந்தார்கள்.

      மரியாதை செய்ய தகுதியான மாமனிதர்.

      நீக்கு
  2. இவர்போன்ற ஒரு எளிமையான மனிதரை, எளிமையான ஜனாதிபதியை நாடு கண்டிருக்குமா? இவர் எழுதிய அக்னிச்சிறகுகள் புத்தகம் படிக்காதோர் மிக மிகக்குறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்போன்ற ஒரு எளிமையான மனிதரை, எளிமையான ஜனாதிபதியை நாடு கண்டிருக்குமா?//
      ஆமாம். எளிமையான மனிதர்.

      //இவர் எழுதிய அக்னிச்சிறகுகள் புத்தகம் படிக்காதோர் மிக மிகக்குறைவு.//

      நானும் படித்து கொண்டு இருக்கிறேன். இன்னும் முடித்தபாடு இல்லை.
      விரைவில் படித்து முடிக்க வேண்டும் என்ற உறுதி மொழியை இன்று எடுத்து கொள்கிறேன்.

      நீக்கு
  3. சிறு குறைகள் இருந்தாலும் பூங்காவை கண்கவரும் வகையில் அமைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. தமுக்கம் மைதானத்தில் நடக்கும் கண்காட்சி போல சிறப்பாக அமைத்திருக்கிறார்கள் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிறு குறைகள் இருந்தாலும் பூங்காவை கண்கவரும் வகையில் அமைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.//

      ஆமாம். குறைந்த கட்டணத்தில் ஒரு பொழுது போக்கு இடம்.

      //தமுக்கம் மைதானத்தில் நடக்கும் கண்காட்சி போல சிறப்பாக அமைத்திருக்கிறார்கள் போல.//

      தமுக்கத்தில் நடக்கும் சித்திரை பொருட்க்காட்சி போல எல்லா நாளும் இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  4. நவராத்திரி முதல் நாள் வாழ்த்துகள். உங்கள் உடல்நலம் தேவலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நவராத்திரி முதல் நாள் வாழ்த்துகள். உங்கள் உடல்நலம் தேவலாமா?//

      இன்னும் முழுமையாக சரியாகவில்லை.
      வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவிலில் நவராத்திரி விழா பத்திரிக்கை வந்து விட்டது.
      இன்று முதல் நாள் "சக்தியே முதல்வி" என்ற தலைப்பில் திருமதி சாவித்திரி பாலசுப்பிரமணியன் அவர்கள் பேசுகிறார்.
      போக முடியவில்லை. போன வருடம் போய் கேட்டேன்.
      இப்போது வெகு நேரம் உட்காரவோ, நிற்கவோ , நடக்கவோ முடியவில்லை அதனால் போக வில்லை. ஏதாவது ஒருநாள் போய் முழுமையாக கேட்க சக்தி தருவாள் அன்னை.
      உங்கள் அக்கறையான விசாரிப்புக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. சிறுவர் பூங்கா படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இன்று நம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் என நானும் காலண்டரில் பார்த்தேன். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தாங்கள் அழகான பதிவை போட்டு விட்டீர்கள்.அவருக்கு நம் பணிவான வணக்கத்தை கூறிக் கொள்வோம்.🙏.

    பூங்காவின் நுழைவு வாயில் முதல் படம் மிக அழகாக இருக்கிறது. கலாம் அவர்களின் வாழ்வை தொகுத்தளித்த படங்களும் விபரங்களும் நன்றாக உள்ளது ரசித்துப் படித்தேன்.

    பூங்காவின் விளையாட்டு பகுதிகள் அனைத்தும் அருமை. தங்கள் பேரனுக்கு நன்றாக பொழுது போயிருக்கும். நீங்களும் நன்றாக அவருடன் சேர்ந்து சுற்றிப் பார்த்திருப்பீர்கள். உங்கள் கால் வலிகள்தான் எப்போதும் போல் தொந்தரவுகளைத் தந்திருக்கும். ஆனாலும் உங்கள் பேரனுக்காக அவற்றை பொறுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் பதிவின் வாயிலாக நானும் அழகான பூங்காவை சுற்றிப் பார்த்தேன்.

    ஆம்.. மழை வந்தால் சிறு தொழில் செய்வோருக்கு கஸ்டமாகத்தான் இருக்கும். அன்று அவர்கள் வியாபாரம் கெட்டு விடுமே..!!! பாவம் அவர்களையும் நாலு காசு பார்க்க வைப்பது இந்த வியாபாரங்கள்தானே...!

    நவராத்திரி நாட்களுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதற்கு மிக்க நன்றி. தங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. //

      நன்றி.

      //சிறுவர் பூங்கா படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இன்று நம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் என நானும் காலண்டரில் பார்த்தேன். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தாங்கள் அழகான பதிவை போட்டு விட்டீர்கள்.அவருக்கு நம் பணிவான வணக்கத்தை கூறிக் கொள்வோம்.🙏.//

      சிறுவர் பூங்காவை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு
      நன்றி.
      கலாம் அவர்களுக்கு நம் பணிவான வணக்கம் .

      ஜூன் மாதம் பார்த்த இடம்.
      நானும் படங்களை வலையேற்றி வைத்து வெகு நாட்கள் ஆகி விட்டது, இன்று காலண்டர் பார்த்த உடன் இன்று சரியான தருணம் என்று பதிவு செய்தேன்.

      //பூங்காவின் நுழைவு வாயில் முதல் படம் மிக அழகாக இருக்கிறது. கலாம் அவர்களின் வாழ்வை தொகுத்தளித்த படங்களும் விபரங்களும் நன்றாக உள்ளது ரசித்துப் படித்தேன்.//

      ஆமாம் நுழைவு வாயில் கருடன் அழகுதான். கலாம் அவர்களின் வாழ்க்கை தொகுப்பை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //ஆம்.. மழை வந்தால் சிறு தொழில் செய்வோருக்கு கஸ்டமாகத்தான் இருக்கும். அன்று அவர்கள் வியாபாரம் கெட்டு விடுமே..!!! பாவம் அவர்களையும் நாலு காசு பார்க்க வைப்பது இந்த வியாபாரங்கள்தானே...!//
      அதுவும் மாலை வேளை மட்டும் தான் பூங்கா நடக்கிறது. அப்போது மட்டும் தான் வியாபாரம் செய்ய முடியும். அதில் மழை வந்தால் கஷ்டம். வீட்டில் குழந்தைகளிய விட்டு வியாபாரம் செய்ய வந்து இருப்பார் இந்த பெண்மணி .

      தங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.//

      .உங்கள் விரிவான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

      நீக்கு
  6. அப்துல் கலாம் அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைப் படங்களுடன் சித்தரித்திருந்தது சிறப்பு.

    ஜனநாயக நாட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவரும் உயர்ந்த இடத்துக்கு வரமுடியும் என்று நினைவுபடுத்திய தருணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //அப்துல் கலாம் அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைப் படங்களுடன் சித்தரித்திருந்தது சிறப்பு.//

      ஆமாம், குழந்தைகளுக்கு அவரைப்பற்றி தெரிந்து கொள்வார்கள்.

      //ஜனநாயக நாட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவரும் உயர்ந்த இடத்துக்கு வரமுடியும் என்று நினைவுபடுத்திய தருணம்.//

      ஆமாம், அவர் உழைப்பு உயர்வை தந்தது. எல்லோருக்கும் அவர் எடுத்து காட்டாய் வாழ்ந்தார்.



      நீக்கு
  7. பூங்காவின் மற்ற படங்களும் சிறப்பாக இருந்தன.

    நம் ஊரின் பக்கங்களையும் பெயரனுக்குக் காண்பிப்பது நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பூங்காவின் மற்ற படங்களும் சிறப்பாக இருந்தன.//

      நன்றி.

      //நம் ஊரின் பக்கங்களையும் பெயரனுக்குக் காண்பிப்பது நன்று//

      ஆமாம், கீழடி அழைத்து போனோம். மிகவும் ரசித்துப்பார்த்தான்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  8. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் பகிர்வு சிறப்பு. அவரின் சேவைகள் இந்தியாவுக்கு கிடைத்த கொடை.
    சிறுவர் பூங்கா காட்சிகள் படங்கள் நன்று. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த விதத்தில் அமைத்துளார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் பகிர்வு சிறப்பு.//

      நன்றி.

      //அவரின் சேவைகள் இந்தியாவுக்கு கிடைத்த கொடை.//

      ஆமாம்.

      //சிறுவர் பூங்கா காட்சிகள் படங்கள் நன்று. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த விதத்தில் அமைத்துளார்கள்.//
      ஆமாம், சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  9. நேற்று கலாம் அவர்களின் பிறந்த நாள் பொருத்தமான பதிவு நீங்கள் சொல்லியிருபப்து போல்....

    படங்கள் எல்லாம் மிக அருமை. கலாம் பற்றிய அரங்கு தற்காலிகமா இல்லை எப்போதும் இருப்பதா கோமதிக்கா?

    மிக நன்றாக வடிவமைச்சிருக்காங்க. வெளிநாட்டில் பார்ப்பது போன்று.

    ஒவ்வொன்றும் மிக அழகு. கலாம் அவர்களை நினைத்தாலே மனம் சந்தோஷப்படும். கடைசி ஃபோட்டோ பார்த்ததும் கண்ணில் நீர் வந்துவிட்டது. பேசிக் கொண்டிருந்த போது கார்டியாக் அரெஸ்ட் வந்த படம் பார்த்ததும்

    குழந்தைகளுக்கு மிக நல்ல வழிகாட்டியாய் இருந்தார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //நேற்று கலாம் அவர்களின் பிறந்த நாள் பொருத்தமான பதிவு நீங்கள் சொல்லியிருபப்து போல்....//
      ஜூன் மாதம் போய் வந்த இடம் போட இவ்வள்வு நாள் ஆகி இருக்கிறது. அவர் பிறந்த நாளை அறிந்து கொண்டவுடன் இதுதான் சரியான தருணம் என போட்டு விட்டு தான் மதியம் சாப்பிட்டேன்.

      //படங்கள் எல்லாம் மிக அருமை. கலாம் பற்றிய அரங்கு தற்காலிகமா இல்லை எப்போதும் இருப்பதா கோமதிக்கா?//
      நிரந்தரமாக எப்போதும் இருப்பது போல அரங்கம் அமைத்து இருக்கிறார்கள்.

      //மிக நன்றாக வடிவமைச்சிருக்காங்க. வெளிநாட்டில் பார்ப்பது போன்று.//

      தமுக்கம் மைதானத்தில் சித்திரை பொருட்காட்சி போடுவார்கள் அப்போது இப்படி நிறைய அரங்கம் இருக்கும். விளக்க படங்களுடன்.


      //ஒவ்வொன்றும் மிக அழகு. கலாம் அவர்களை நினைத்தாலே மனம் சந்தோஷப்படும். கடைசி ஃபோட்டோ பார்த்ததும் கண்ணில் நீர் வந்துவிட்டது. பேசிக் கொண்டிருந்த போது கார்டியாக் அரெஸ்ட் வந்த படம் பார்த்ததும்//

      ஆமாம், பார்க்க கஷ்டமாக இருந்தாலும் நல்ல புகழோடு மறைந்து இருக்கிறார். கஷ்டபடுத்தாமல் இறைவன் கொண்டு போய் விட்டார் என்ற ஆறுதலும் வருகிறது.என்றும் எல்லோர் மனதிலும் நிறைந்து இருப்பார். என நினைக்க வைக்கிறது.

      //குழந்தைகளுக்கு மிக நல்ல வழிகாட்டியாய் இருந்தார்.//

      ஆமாம், இன்னும் இருந்தால் குழந்தைகளுக்கு நல்ல வழி காட்டியாக தான் இருப்பார்.

      நீக்கு
  10. கடற்கரையில் இருக்கும் ஒரு சாதாரண கிராமம் மிகவும் சாதாரண ஒரு குடும்பத்திலிருந்து வாழ்வில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறார் என்பது உதாரணத்தோடு மன உறுதி வியப்பான விஷயம்.
    எழுத்தாளர் சுஜாதாவும் இவர் படித்த கல்லூரியில் தான் படித்தார்

    கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இப்படி அழகாக வடிவமைத்திருப்பது மிகவும் சிறப்பு,

    எளிய மனிதர் எளிமையான மனிதர். இப்படியான ஒரு மனிதரை அதுவும் ஜனாதிபதியாக இருந்தவரை இனியும் காண முடியுமா என்பது அரிது. ஜனாதிபதியாக இருந்த போதும் எளிமையாக இருந்தவர்.

    ஒரு பூங்காவில் இப்படிக் கண்கவரும் வகையில் அமைச்சிருக்காங்களே பாராட்டுவோம். ஆமாம் தரையில் மேடு பள்ளங்களை இப்படி மறைக்கும் போது எங்கு பள்ளம் இருக்குனு சட்டென்று தெரியாது. அப்ப கால் பிரச்சனை இருக்கறவங்களுக்குக் கஷ்டமா இருக்கும்.

    வெளியில் சிறுவர்கள் களிக்கும் வகையில் அனைத்தும் ரொம்ப அழகா வடிவமைச்சிருக்காங்க. இப்படித் தற்காலிக குளங்கள் எல்லாம் இப்ப சர்வ சாதாரணமாக அமைக்கறாங்க. இங்கு முன்பு இருந்த ஏரியாவில் அமைச்சிருந்தாங்க. நீச்சல் குளம். படகு சவாரி, சறுக்கு சறுக்கி வந்து தண்ணீரில் விழுதல் என்று அமைச்சிருந்தாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடற்கரையில் இருக்கும் ஒரு சாதாரண கிராமம் மிகவும் சாதாரண ஒரு குடும்பத்திலிருந்து வாழ்வில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறார் என்பது உதாரணத்தோடு மன உறுதி வியப்பான விஷயம்.//

      ஆமாம். அவர் தான் நினைத்த காரியத்தை மன உறுதியோடு வெற்றி பெற்று இருக்கிறார்.

      //கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இப்படி அழகாக வடிவமைத்திருப்பது மிகவும் சிறப்பு,//

      ஆமாம்.

      //எளிய மனிதர் எளிமையான மனிதர். இப்படியான ஒரு மனிதரை அதுவும் ஜனாதிபதியாக இருந்தவரை இனியும் காண முடியுமா என்பது அரிது. ஜனாதிபதியாக இருந்த போதும் எளிமையாக இருந்தவர்.//

      ஆமாம், எளிமையான மனித நேயம் கொண்ட மனிதர்.

      //ஒரு பூங்காவில் இப்படிக் கண்கவரும் வகையில் அமைச்சிருக்காங்களே பாராட்டுவோம்.//

      பாராட்டுவோம்.

      //ஆமாம் தரையில் மேடு பள்ளங்களை இப்படி மறைக்கும் போது எங்கு பள்ளம் இருக்குனு சட்டென்று தெரியாது. அப்ப கால் பிரச்சனை இருக்கறவங்களுக்குக் கஷ்டமா இருக்கும்.//

      வெண்வெளியில் நடப்பது போல இருந்தது காலை தூக்கி தூக்கி வைத்து கவனமாக நடக்க வேண்டும்.


      //வெளியில் சிறுவர்கள் களிக்கும் வகையில் அனைத்தும் ரொம்ப அழகா வடிவமைச்சிருக்காங்க. இப்படித் தற்காலிக குளங்கள் எல்லாம் இப்ப சர்வ சாதாரணமாக அமைக்கறாங்க. இங்கு முன்பு இருந்த ஏரியாவில் அமைச்சிருந்தாங்க. நீச்சல் குளம். படகு சவாரி, சறுக்கு சறுக்கி வந்து தண்ணீரில் விழுதல் என்று அமைச்சிருந்தாங்க.//

      குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி விளையாட நிறைய இருந்தால் தானே குழந்தைகளிய கவர முடியும்.

      நீக்கு
  11. மடகாஸ்கர் படத்தில் வரும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவமைத்த அரங்கமும் செமையா இருக்கு. குழந்தைகள் ரொம்ப மகிழ்ச்சியுடன் வலம் வந்திருபபங்க. இப்படியானவை பெரியோருக்கும் சிறியோருக்கும் மிகச் சிறந்த ஒரு பொழுதுபோக்கு....மகிழ்ச்சி தரும் விஷயம். மன அழுத்தம் எல்லாம் தள்ளி வைக்கும் விஷயங்கள்.
    பேரனும் இதைக் கண்டு மகிழ்ந்து புகைப்படம் எல்லாம் எடுத்துக் கொண்டிருக்கிறார் நன்றாக இருக்கின்றன கோமதிக்கா.

    கூடவே கடைகள் பஞ்சுமிட்டாய் என்று எல்லாமே சுவாரசியம். எனக்கும் இப்படியானவை பார்க்க பிடிக்கும். வாய்ப்புதான் குறைந்துவிட்டது.

    எல்லாமே ரசித்துபார்த்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மடகாஸ்கர் படத்தில் வரும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவமைத்த அரங்கமும் செமையா இருக்கு. குழந்தைகள் ரொம்ப மகிழ்ச்சியுடன் வலம் வந்திருபபங்க//
      ஆமாம். மகிழ்ச்சியாக வலம் வந்தார்கள்.

      .// இப்படியானவை பெரியோருக்கும் சிறியோருக்கும் மிகச் சிறந்த ஒரு பொழுதுபோக்கு....மகிழ்ச்சி தரும் விஷயம். மன அழுத்தம் எல்லாம் தள்ளி வைக்கும் விஷயங்கள்.//

      ஆமாம் , நல்ல பொழுது போக்கும் இடம் தான். மன அழுத்தம் எல்லாம் தள்ளி வைக்கும் என்பது உண்மைதான்.

      //பேரனும் இதைக் கண்டு மகிழ்ந்து புகைப்படம் எல்லாம் எடுத்துக் கொண்டிருக்கிறார் நன்றாக இருக்கின்றன கோமதிக்கா.//

      ஆமாம் ,அவனுக்கு பிடித்து இருந்தது.

      //கூடவே கடைகள் பஞ்சுமிட்டாய் என்று எல்லாமே சுவாரசியம். எனக்கும் இப்படியானவை பார்க்க பிடிக்கும். வாய்ப்புதான் குறைந்துவிட்டது.//

      இங்கு வர வாய்ப்பு இருந்தால் வாங்க கீதா . வீட்டுக்கு அருகில் தான் போய் வருவோம்.

      //எல்லாமே ரசித்துபார்த்தேன் கோமதிக்கா//

      ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.


      நீக்கு
  12. படங்களும், விவரணங்களும் அருமை.

    கலாம் அவர்களை நினைவு கூர்ந்தது சிறப்பு.


    உங்கள் பெயரனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்களும், விவரணங்களும் அருமை.

      கலாம் அவர்களை நினைவு கூர்ந்தது சிறப்பு.//

      உங்கள் பெயரனுக்கு வாழ்த்துகள்.//

      உங்கள் கருத்துக்கும். வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  13. மாமனிதர்... படங்கள் அனைத்தும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //மாமனிதர்... படங்கள் அனைத்தும் சிறப்பு...//

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்

      நீக்கு
  14. சிறப்பான செய்திகளுடன் அழகான படங்கள்..


    முன்மாதிரியான பதிவு..

    சிறப்பு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //சிறப்பான செய்திகளுடன் அழகான படங்கள்..


      முன்மாதிரியான பதிவு..

      சிறப்பு..
      வாழ்க நலம்..//

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு