வெள்ளி, 27 மார்ச், 2020

பெயர்க் காரணம்

என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்

பெயர்க் காரணம் சொல்லும் தொடர் பதிவுக்கு (சுயதம்பட்டம்) வல்லி அக்கா அழைத்து இருந்தார்கள். சரி என்று நானும் எழுதி விட்டேன். படியுங்கள் தொடர்ந்து.


இப்போது போல் நட்சத்திரப்படி ,எண் கணிதப்படி எல்லாம் அப்போது பெயர் வைப்பது இல்லை. முன்னோர்கள் பெயர், கடவுள் பெயர், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள்பெயர், என்று அப்போது வைப்பார்கள். இப்போது தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் பெயர், நடிகர், நடிகை பெயர்கள் எல்லாம் வைக்கிறார்கள். தமிழ்ப் பெயர் வேண்டுமா? சமஸ்கிருத பெயர் வேண்டுமா ? எல்லாவற்றிற்கும் இப்போது வசதி உள்ளது. எத்தனை எத்தனை பெயர்கள் அழகான, அறிவு பூர்வமான பெயர்கள் என்று தேடித் தேடி தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள்.

முன்னோர்கள் சிலர் இறைவன் பெயரையே குழந்தைகளுக்கு வைப்பார்கள், எப்போதும் இறைவனை நினைத்துக் கொள்ள. நடராஜன் என்று வைத்து விட்டு ,நட்டு என்றும், கிருஷ்ணசாமி என்று வைத்துவிட்டு, கிட்டு என்றும் பட்டாபிராமனை, பட்டா என்றும், சுப்பிரமணியனை, சுப்பா, சுப்பு என்றும், நாராயணாவை ,நாணா ஜானகியை ஜான் என்றும், பத்மாவை பத்து என்றும், மீனாட்சியை மீனுகுட்டி என்றும் காமாட்சி காமு என்றும் பார்வதி பாரு என்றும் - லட்சுமியை லட்சா என்றும் எதற்கு பேர் வைக்கப்பட்டதோ அந்த நோக்கம் அறியாமல் இப்படிக் கூப்பிடுவதால் பயனில்லாமல் போய் விடுகிறது என்று சொல்பவர்கள் உண்டு. சிலர் பெரியோர்கள் வைத்த பெயரை மாற்றுங்கள் அந்த பெயரினால் கஷ்டபடுகிறீர்கள் என்று பெயர் மாற்றம் செய்து தருகிறேன் அந்தப்புது பெயரை தினம் இத்தனை தடவை எழுதுங்கள் உங்கள் தலைஎழுத்தே மாறிவிடும் என்று சொல்லி பொருள் சம்பாதிக்கிறார்கள். பெயருக்கு அப்படி ஒரு மவுசு.

எங்கள் குடும்பங்களில் முதல் நான்கு குழந்தைகளுக்கு பேர் வைப்பதில் எந்த குழப்பமும் கஷ்டமும் இருக்காது. முதல் குழந்தை ஆணாக இருந்தால்
அப்பாவின் அப்பா பேர். பெண்ணாக இருந்தால் அப்பாவின் அம்மா பேர். இது வழக்கம். பிறகு மூன்றாவது குழந்தை ஆணாய் இருந்தால் அம்மாவின் அப்பா
பேர். பெண்ணாய் இருந்தால் அம்மாவின் அம்மா பேர். இது தான் வழக்கம். பெரும்பாலும் இதைத்தான் எங்கள் பக்கம் கடைப்பிடிப்பார்கள். அதற்கு மேல் பிறந்தால்தான் வேறு பெயர் வைப்பார்கள்.
இந்த பாட்டில் வருவது போல் என்ன பேரு வைக்கலாம் என்று குழம்பவில்லை.

’என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்? சின்ன சின்னக் கண்ணைக் காட்டிச் சிரிக்கும் எங்கள் பாப்பாவிற்கு ’என்று யாரும் குழம்பவில்லை, நான் பிறந்த போது.

நான் திருவனந்தபுரத்தில் என் தாத்தாவின் பெயர் கொண்ட ’மார்த்தாண்டபவனத்தில் ’ பிறந்தேன். தாத்தா தன் 16 வயதில் திருவனந்தபுரம் வந்து நகைக் கடை வைத்து, வீடு வாசல் வாங்கி இருந்தார்கள். ஆரியசாலையும் பழைய சாலையும் இணைக்கும் பெரிய வீட்டில்( ஆரியசாலை முன் பகுதி ; பழையசாலை பின் பகுதி) பின்பகுதியில் 40 தென்னைமரமும், நடுவில் வீடும், முன் பகுதியில் கார் செட்டும், மாட்டு வண்டிக் கொட்டகையும் இருக்கும் அப்போது . இப்போது ஆரிய சாலை முன் பகுதி இல்லை .பழையசாலை சிறிய பகுதி தாத்தா வீடு அழகாய் வேறு அவதாரம் எடுத்து இருக்கு. தென்னை மரங்கள் 40லிருந்து 20 ஆகி இருக்கிறது. சுயதம்பட்டம் அடிக்க வாருங்கள் என்று அழைத்தார்கள் வல்லி அக்கா, அப்புறம் தம்பட்டம் அடிக்க வில்லை என்றால் எப்படி?

இப்போது சின்ன மாமா அந்த வீட்டில் இருக்கிறார்கள்.

எனக்கு பெயர் வைக்க எந்த கஷ்டமும் இல்லை. எனக்கு முன் பிறந்த அக்காவிற்கு என் அப்பாவின் அம்மா பேர். அண்ணனுக்கு என் அப்பாவின் அப்பா பேர். அப்புறம் எனக்கு என்ன பேர் வைத்து இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும், முன் பத்தியை படித்தவர்களுக்கு. எனக்கு என் அம்மாவின் அம்மா பேர் - கோமதி - என்று வைக்கப்பட்டது. கோலாகலமாய் .

நல்ல சுருட்டை முடியும், நல்ல கரு வண்டு கண்ணுமாய் செக்க சேவேல் என்று இருந்தேனாம். இது கதைகள் ,சினிமாவிற்கு வசனங்கள் என்று எழுதும் என் சின்னமாமாவின் வருணிப்பு. அவர்களுக்கு தன் அம்மாவின் பெயரை வைத்து இருப்பதால் அலாதி பிரியம் என் மேல். தன் பெண்ணிற்கும் தன் அம்மாவின் பெயரை வைத்து இருக்கிறார்கள் அவள் பெயர் கோமதி பிரபா.

என் அம்மா ,அப்பா, வாய் நிறைய கோமு என்றும், என் ஆச்சி கோமா என்றும், என்றும் அழைப்பார்கள் . உறவினர்களும் கோமு என்று தான் அழைத்தார்கள். பள்ளியில், கல்லூரியில் எல்லாம் கோமதி என்று அழைத்தார்கள்.


திருமணத்திற்கு பின் என் பேர் என் கணவரின் வேலையைக் கருத்திற்கொண்டும் இனிஷியலைக்கருத்திற்கொண்டும் ‘ட்யூட்டர் சார் ஒய்ப்’,’A.T சார் ஒய்ப்’, ’புரபஸர் சார் ஒய்ப்’ என்று பல பேர்களில் அழைப்பார்கள் .

 கணவர் என்னைக் கோமதி, கோமு என்று எல்லாம் அழைக்க மாட்டேன், மதி என்று அழைப்பேன் என்றார்கள். அப்படி அவர்கள் என்னை அழைத்த நேரத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். பேர் சொல்லி அழைத்ததே இல்லை. அது எனக்கு பெரிய குறை தான்.

 ஒரு முறை வளைகாப்புக்கு என்னை ரயிலில் ஊருக்கு அழைத்து போகும் போது இருவருக்கும் ரயிலில் ஒரே பெட்டியில் இடம் கிடைக்கவில்லை. நான் மகளிர் பெட்டியில் இருந்தேன் கோவைக்குப் போக அதில் ஏறி இருந்தோம். ஈரோடு ரயில் நிலையத்தில் என் பெட்டியில் மிகவும் கூட்டம் இருந்ததால் நான் எங்கு இருக்கிறேன் எனத் தெரியாமல் ’ மதி மதி ’என்று இரண்டு முறை’ நீ எங்கு இருக்கிறாய் ’என்று கேட்டார்கள் அவர்கள் மதி என்று கூப்பிட்ட உடன் மகிழ்ச்சியில் தலை கால் தெரியவில்லை.உட்கார இடம் கிடைக்காமல் சூட்கேஸ் மேல் உட்கார்ந்து இருந்த நான் வேகமாய் எழுந்த போது பக்கத்தில் நின்றவர்கள் ,மெள்ள மெள்ள பிள்ளைதாச்சி இப்படியா அவசரமாய் எழுந்து கொள்வது ’என்று கடிந்து கொண்டார்கள். அநத அற்புத தருணத்தை என்னால் மறக்க முடியாது.


பின் என் மகள் பிறந்தபின் என் பெயர் ’கயல் அம்மா’ ஆயிற்று. பிறகு மகன் பிறந்தபின் சிலருக்கு ’காசி அம்மா’ ஆனேன். என் பெண் இருக்கும் ஊருக்கு போனால் என் பேத்தி, பேரன் நண்பர், தோழிகளுக்கு நான், நானிம்மா. மகனது ஊருக்கு போனால் அங்கு இருக்கும் என் பேரனிடம் உன் கிராண்ட்மா வந்து இருக்கிறார்களா என்பார்கள். இப்படிப் பல பல பெயர்கள்.

இது தான் என் பெயர் வரலாறு. எங்கள் அப்பாவிற்கு நெல்லை (பாளையங்கோட்டை) சொந்த ஊர் . எங்கள் பக்கம் கோமதி, கோமதி நாயகம் என்ற பெயர்கள் இருக்கும்.

சங்கரன் கோவில் அம்மன் பேர் கோமதி அம்மன். என் பெயரை வைத்து நிறைய பேர் நீங்கள் நெல்லையா? என்று கேட்ப்பார்கள் உங்களுக்கு அந்த அம்மன் பெயர் வைத்து இருக்கிறார்களா என்று கேட்பார்கள் . நான் எனக்கு என் ஆச்சியின் பெயர் என்று சொல்வேன்.

இப்போது பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல் வலைத் தளத்திற்கு அரசு என்ற பூவை கோமதி என்ற நாரில் கட்டிக் கொண்டேன். கணவர் பெயர் சேர்த்து கோமதிஅரசு என்று வைத்துக் கொண்டேன்.


பின் குறிப்பு :- வல்லி அக்கா தன் பெயர் காரணப் பதிவை மீள் பதிவு செய்தார்கள் அதை படித்தவுடன் நான் அவர்கள் அழைப்பை ஏற்று எழுதிய பதிவை  மீண்டும் போட ஆசை வந்து விட்டது.

                           வாழ்க வையகம் !  வாழ்க வையகம்   !  வாழ்க வளமுடன்.

ஞாயிறு, 22 மார்ச், 2020

தண்ணீர் தண்ணீர்!


உலக தண்ணீர் தினம் இன்று.

நீர் பாதுகாப்பு பற்றி  படித்த வாசகங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என்றாலும் மீண்டும் படிக்கலாம் ஒரு முறை.

 யூ-டியூப்பில் பகிர்ந்தவர்கள்;-

TNDTA PRIMARY SCHOOL PANDARAMPATTI THOOTHUKUDI -2

//நீரின்றி அமையாது உலகு
துளி துளி மழைத்துளி அது நம் உயிர்த்துளி
வான் தரும் மழை -அதை வீணாக்குவது நம்பிழை
மழை நீர்த் தொட்டி நம் வாழ்வுக்கு வட்டி
மழையால் ஆவது உலகு ஆகையால் மரம் வளர்த்து பழகு
நீரின்றி பசுமை இல்லை பசுமையின்றி நீர் இல்லை
நீர் வளம் பெருக்குவோம் நீர் வளம் காப்போம்
மனிதனுக்கு அழகு மனம் புவிக்கு அழகு மரம்
மரம் வளர்ப்போம் மனம் குளிர்வோம்
உயிர்களைக் காக்க தண்ணீரைக் காப்போம்
இன்று சேமிக்கப்படும் தண்ணீர் நாளை துடைக்கப்படும் கண்ணீர்
அவசியம் அவசியம் நீர் பாதுகாப்பு அவசியம்
சேகரிப்போம் சேகரிப்போம் மழை நீரை சேகரிப்போம்//

இப்போது உள்ள குழந்தைகளுக்கு இதைச் சொல்லித் தருவது பாராட்ட வேண்டிய விஷயம். பாராட்டுவோம். வாழ்த்துவோம்.

வெள்ளி, 20 மார்ச், 2020

சிங்காரச் சிட்டுக்கள்


இன்று உலக சிட்டுக்குருவி தினம்!

இந்த  தினத்தில் சிட்டுக்குருவி பற்றி ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடும் நான் போடவில்லை என்றால்  குருவி அதிராவின் மூலம் கேட்டு விட்டது.

//இன்றைய சிட்டுக்குருவிகளைக் கொண்டாட மறந்திட்டீங்களே கோமதி அக்கா:)//


அதிராவிற்கு  நான் அளித்த பதில் :- சிட்டுக்குருவி தினத்தை மறக்கவில்லை. முகநூலில் பகிர்ந்து இருக்கிறேன்.
நான் மறந்தாலும் மார்க் மறக்காமல் போன வருடம் போட்டதைக் காட்டியது அதைப் போட்டு விட்டேன்.


  அதிரா கேட்டதால் அதிரா படிக்காத  2014ல் பதிவு செய்த  "சிட்டுக்குருவியைத் தேடித் தேடி "என்ற பழைய பதிவை இங்கு மீள் பதிவாக்கி விட்டேன்.

நாங்கள் மயிலாடுதுறையில்  இருந்த போது போட்ட பதிவு.  அங்கு நான் இருந்த வீட்டில் பல பறவைகள் வரும். ஆனால் சிட்டுக்குருவி வரவில்லை.
ஆனால் இப்போது மதுரையில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நிறைய இருக்கிறது. அதனைப் படம் எடுத்து நிறைய பதிவுகள் போட்டு விட்டேன்.

வியாழன், 19 மார்ச், 2020

தினம் வரும் செய்தி

தினம் தினம் தொலைக்காட்சியைப் போட்டால் கொரானா வைரஸ் விழிப்புணர்வு செய்தி-பீதியைக் கொடுக்கும் செய்தி. உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரானா பற்றிய கணக்கெடுப்பு என்று செய்திகள் எல்லா செய்திச் சேனல்களிலும்.

பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை மார்ச் 31ம் தேதிவரை.


பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதி எல்லாம் குறைந்தும், வெளிநாட்டில்சில இடங்களில் முற்றிலுமாகவும்  வரத்து இல்லை என்பதால் இருக்கும்  கடைகளில் வரும் பொருட்கள் உடனே விற்றுப் போய் விடுகிறது  என்று கூறப்படுகிறது. எல்லாம்  எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன். அப்போது இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.


 அங்கு மார்கெட்டில் பால் இருக்கும் இடம் காலியாக இருக்கிறது. பால் உடனே உடனே காலியாகி விடுகிறது. மிக அத்தியாவசிய பொருட்கள் அடுத்தவர்களுக்கும் வேண்டும் என்று  எண்ணி எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ளும் நிலை வேண்டும்.

ஞாயிறு, 15 மார்ச், 2020

கண்ணில் கண்ட காட்சிகள்


கண்ணில்  பட்டதைப் படமாக்கினேன், அதை இங்கே பதிவாக்கி இருக்கிறேன்.

வெயில் காலம் வந்து விட்டால் இந்த பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை அதிகமாய் இருக்கும். இருசக்கர வாகனங்களில் எல்லா வயதினர்களும் இரண்டு, அல்லது நான்கு  குடங்களில் தண்ணீரை எங்கிருந்தோ எடுத்துச் செல்வார்கள்.

வெள்ளி, 6 மார்ச், 2020

கண்ணாமூச்சி ரே ரே!

மனக்கவலை போக்கும்  பறவைகள்,  குழந்தைகள்-  இந்தப் பதிவில்.

போன பதிவில் கொஞ்சம் மனபாரத்தை இறக்கி வைத்தேன் உங்களிடம் . .இந்தப் பதிவில் அதிலிருந்து விடுபட வைத்தவர்களின் பகிர்வு.

என்ன ஒய்யாரம்!