வியாழன், 19 மார்ச், 2020

தினம் வரும் செய்தி

தினம் தினம் தொலைக்காட்சியைப் போட்டால் கொரானா வைரஸ் விழிப்புணர்வு செய்தி-பீதியைக் கொடுக்கும் செய்தி. உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரானா பற்றிய கணக்கெடுப்பு என்று செய்திகள் எல்லா செய்திச் சேனல்களிலும்.

பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை மார்ச் 31ம் தேதிவரை.


பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதி எல்லாம் குறைந்தும், வெளிநாட்டில்சில இடங்களில் முற்றிலுமாகவும்  வரத்து இல்லை என்பதால் இருக்கும்  கடைகளில் வரும் பொருட்கள் உடனே விற்றுப் போய் விடுகிறது  என்று கூறப்படுகிறது. எல்லாம்  எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன். அப்போது இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.


 அங்கு மார்கெட்டில் பால் இருக்கும் இடம் காலியாக இருக்கிறது. பால் உடனே உடனே காலியாகி விடுகிறது. மிக அத்தியாவசிய பொருட்கள் அடுத்தவர்களுக்கும் வேண்டும் என்று  எண்ணி எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ளும் நிலை வேண்டும்.
பள்ளிகள் நம் நாட்டில் 31ம் தேதி வரை விடுமுறை. வெளிநாட்டில் விடுமுறை இப்போது இரண்டு வாரம் விட்டு இருக்கிறார்கள். பேரனுக்கு  எப்போது பள்ளி திறப்பார்கள் என்று பின்னர் அறிவிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

 தமிழ்ப் பள்ளியும் விடுமுறை என்பதால் ஸ்கைப்பில் தமிழ்ப் பாடம் படிக்கிறான்

பொழுது போகப் படம் வரைகிறான் 
டைடானிக் கப்பலாம் அவன் வரைந்து இருப்பது
அப்புறம் கொஞ்சம் எங்களுடன் விளையாட்டு, ஸ்கைப்பில்.
விடுமுறை விட்டும் ஊருக்கு வர முடியவில்லை என்று ஆதங்கம் இருக்கிறது பேரனுக்கு.

கடைசி படத்தில் பேரன் சார்ட் பேப்பர், அட்டைப் பெட்டிகளைக் கொண்டு பெரிதாக செய்து இருக்கும்  டைடானிக் கப்பல் பின் புறம் உள்ளது.அதில் ஏறக் காத்து இருக்கும் ஆட்கள்.

கொரானா பற்றி தொலைக்காட்சியில் எல்லா சேனல்களிலும் கேட்கும் செய்திகளின் தொகுப்பு-

வர்த்தகம், போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. கொரானா தொற்று வந்தவர்களை மருத்துவ மனையில் தனிமைப் படுத்தி இருக்கிறார்கள்.
தனிமைப்படுத்தபட்டவர்கள் தப்பிப்   போகக் கூடாது என்று  அடையாளம்  குத்தப்பட்டு இருக்கிறது கைகளில். அப்படியும் சிலர் ஊருக்கு ரயிலில் பயணம் செய்து இருக்கிறார்கள்.

 தப்பி வந்தவர்களை அடையாளம் கண்டு ரயிலில் இருந்து இறக்கி அவர்களை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.

மருத்துவமனையில் தனிமை சிகிச்சைப் பிரிவில்    இருக்கிறார்கள்

மஹாராஷ்டிராவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த மனிதர்  தும்மி இருக்கிறார். அந்த மனிதரைப்  பொது மக்கள் அடிக்கிறார்கள்.  பயம் பயம்- மக்களிடம் உயிர் பயம் - அந்த அளவு கொரானா அரக்கன் பயமுறுத்தி வைத்து இருக்கிறான்.

பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் வழியாக மஹாராஷ்டிராவுக்கு வந்து இருக்கிறது  என்கிறார்கள். 

மருந்துகள், முகமூடிகளைப் பதுக்குபவர்கள் கடுமையாகத் தண்டிக்க ப்படுவார்கள் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

டப்பாவாலாக்கள் கொரனா வைரஸ் பாதிப்பால் தற்காலிகமாகப் பணியை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். 

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. கோவில்களும் அப்படித்தான்.

கோயம்பேட்டில் வியாபாரம் அதிகம் என்று சொல்கிறார்கள். எல்லாக் கடைகளிலும் கூட்டம்  என்கிறது தொலைக்காட்சி.சென்னையில் ரங்கநாதன் தெருக் கடைகள் மூடப்பட்டு இருக்கிறது

 .சில இடங்களில் கோவில்கள் மூடப்பட்டு உள்ளது. நித்திய பூஜைகள் மட்டும்  திறந்து செய்து விட்டு மூடிவிடுகிறார்கள் மக்கள் அனுமதி இல்லை.
கோவையில் பட்டீஸ்வரர் கோவிலில் கைகளைச் சுத்தம் செய்தபின்  அனுமதிக்கிறார்கள். 

அலைபேசியில், தொலைபேசியில்  கொரானாவைத் தடுத்துக்கொள்ளும் நடைமுறைகளைச் சொல்கிறார்கள். போக்குவரத்துக் காவலர்கள் சிக்னலில் கைகழுவது மற்றும் முறைகளைச் சொல்லித் தருகிறார்கள்.

65 வயதுக்கு மேல், 10 வயதுக்கு கீழே உள்ளவர்கள் வெளியில் போக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறார்கள்.

 மத்திய அரசுப் பணியில் உள்ளவர்கள் சிலர் வீட்டில் இருந்தும் சிலர்  குறிப்பிட்ட நேரங்களில்  குறிப்பிட்ட நாட்களில் சுழற்சி முறையிலும் வேலைக்கு வர வேண்டும்  என்றும் சொல்கிறது.


 சிறு பெரு வியாபாரிகளுக்கு வாழ்வாதாரம் கஷ்டமான சூழ்நிலைதான் . கொரானாவால் வேலை இழந்தவர்கள் நிறைய. நிலைமை சீர் ஆகி மக்கள் எல்லோரும் நலமாக இருக்கவேண்டும்.  பாதிக்கப்பட்டோர் விரைவில்  குணமாகப் பிரார்த்தனை செய்வோம்.  உலகம் முழுவதும்  கொரானா  ஒழியட்டும்-  மக்கள் நலமாக இருக்கட்டும்.

இந்த சமயத்தில் உலக முழுவதும் உள்ள  மருத்துவர்கள் மற்றும் சமூக சேவை செய்வோரின் பணி மகத்தானது.   மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
சீனாவில் மூலிகை மருந்து கண்டு பிடித்து விட்டார்கள் என்கிறார்கள்.
நம் நாட்டில் இஞ்சி, மிளகு, கருஞ்சீரகம், மஞ்சள், பூண்டு,வெந்தயம், எலுமிச்சை, கொய்யா எல்லாம் நாள்தோறும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

நமக்கு வராது என்ற அலட்சியமும் வேண்டாம், வந்துவிடும் என்று பயமும் வேண்டாம்.  மன தையரியத்துடன்  எதிர் கொள்வோம். 
அவசியம் இருந்தால் மட்டும் வெளியில் போவோம்.  

மார்ச் 22ம் தேதி காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வெளியே போகக் கூடாது என்று  நமது பிரதமர் சொல்லி இருக்கிறார்.

                            வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
------------------------------------------

34 கருத்துகள்:

  1. எங்கும்,எதிலும் கொரோனா செய்திகளும், அதன் தாக்கங்களும்தான். இப்ப எல்லா இடங்களும் பொருட்களை வாங்குவதில்தான் சனங்கள் இருக்கிறார்கள். இங்கும் சில பொருட்களை வரையறை செய்துதான் கொடுக்கிறார்கள். எல்லாருக்கும் கிடைக்கவேணும் என்பதால். இங்கு எல்லா நாட்டினுடைய எல்லைகளை மூடி விட்டது ஜேர்மனி. ஆனாலும் சில இடங்களில் மக்கள் சொல்லு கேட்கிறார்கள் இல்லை. ஓர் சிட்டியில் ஊரடங்கு சட்டம் போட்டிருக்கு 2ம் உலகப்போருக்கு பின்பு.

    பொருத்தமான பாட்டு. எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என யார் அக்கா நினைக்கிறாங்க. சுயநலம்தான் நிறைய்ய..

    அழகா வரைந்திருக்கார் கவின்குட்டி. டைடானிக் கப்பல் அருமையா செய்திருக்கிறார். வாழ்த்துக்கள். இங்கு எல்லாம் ஒன்லைன்ல பாடம் கொடுக்கிறாங்க. மற்றபடி இங்கு சாதாரணமாக இருந்தால் இப்ப பரீட்சை நேரம். பாடசாலை இல்லாததால் அவர்களுக்கு ஜாலி.
    இங்கும் அடிக்கடி வீட்டிலேயே இருங்க. தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாமென அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்., பொது நிகழ்ச்சிகள் மக்கள் கூடும் விழாக்கள் எல்லாம் தடை. கோவிலுக்கு கூட சனங்களை அனுமதிக்கவேண்டாமெனவும், மீறினால் கோவில் பூட்டப்பட்டுவிடும் என கவுன்சில் அறிவித்திருக்கு. எல்லா மதக்கோவிலுக்கும்தான்.
    தும்மின மனிதரை அடிக்கும் காட்சி நானும் பார்த்தேன். பொது இடத்தில் சாதா இருமல் வந்தாலும் இரும பயமா இருக்கு. கொரோனா அந்தளவுக்கு பூதாகாரமா இருக்கு. டிவி, பத்திகை,ரேடியோ எல்லாவற்றிலும் இதுவாக இருக்கு.
    எல்லாரும் பாதுகாப்பாகவும், நலத்தோடும் இருக்கவேண்டும். நீங்களும், சாரும் கவனமா இருங்க அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      எங்கும் , எதிலும் கொரோனா செய்திகள் தான்.

      //இங்கும் சில பொருட்களை வரையறை செய்துதான் கொடுக்கிறார்கள். எல்லாருக்கும் கிடைக்கவேணும் என்பதால்.//
      அதுவும் நல்லது தான்.

      //சில இடங்களில் மக்கள் சொல்லு கேட்கிறார்கள் இல்லை. ஓர் சிட்டியில் ஊரடங்கு சட்டம் போட்டிருக்கு 2ம் உலகப்போருக்கு பின்பு.//

      ஆமாம் , சில நேரங்களில் இப்படித்தான் செய்ய வேண்டி இருக்கிறது.

      நீக்கு
    2. பாட்டையும், கவின் ஒவியத்தை ரசித்தமைக்கு நன்றி.

      //ஒன்லைன்ல பாடம் கொடுக்கிறாங்க. மற்றபடி இங்கு சாதாரணமாக இருந்தால் இப்ப பரீட்சை நேரம்//

      சில இடங்களில் ஓன்லைனில் பரீட்சை நடைபெறுகிறதாம் .


      //இங்கும் அடிக்கடி வீட்டிலேயே இருங்க. தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாமென அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்//

      நல்லது தான் அவசியம் உள்ளவர்கள் (பணிக்கு போகிறவர்கள் மட்டும்) மட்டும் போய் வந்தால் போதும் மற்றவர்கள் வீட்டில் இருந்தால் நோய் தொற்றை தடுக்கலாம்.

      //தும்மின மனிதரை அடிக்கும் காட்சி நானும் பார்த்தேன். பொது இடத்தில் சாதா இருமல் வந்தாலும் இரும பயமா இருக்கு.//

      பார்த்தீர்களா? பொது இடத்தில் தும்ம, இரும பயம்தான்.

      //எல்லாரும் பாதுகாப்பாகவும், நலத்தோடும் இருக்கவேண்டும். நீங்களும், சாரும் கவனமா இருங்க அக்கா.//

      எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோரும் விரும்புவதும்.
      நாங்கள் பத்திரமாக இருக்கிறோம்.

      உங்கள் அன்புக்கு நன்றி அம்மு.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  2. எனது மருமகனும் அபுதாபியில் இருந்து இதையே சொன்னார்... வருகின்ற வாரத்தில் வெளியே அதிகம் செல்ல வேண்டாம் என்று...

    நமது பிரதமர் குறிப்பாக 22 என்று சொல்கிறார்...

    மீண்டும் காலையில்!..

    எதை வைத்து இப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் மருமகன் அவர்களும் இதை சொன்னார்களா மகன் , மகள் எல்லோரும் ஒரு மாதம் கொஞ்சம் கவனமாய் வெளியில் போகாமல் இருங்க என்று தான் சொல்கிறார்கள்.
      22 என்று சொல்வது ஞாயிறு என்பதால் என்று நினைக்கிறேன். விடுமுறை என்றால் நாம் வெளியில் நிறைய இடங்களுக்கு போவோம் என்பதால் இருக்கலாம். நோயில் படுத்து இருக்கும் உறவினரை பார்க்க ஆஸ்பத்திரி, உறவினர் வீடு, திரை அரங்கம்
      கடைகள் போவது என்று நிறைய அலுவல்களை ஞாயிறு வைத்துக் கொள்வோம் என்பதால் இருக்கலாம்.

      கூட்டமாக இருக்கும் பகுதிகள், கடைகள் எல்லாம் அடைக்க பட்டு வருகிறதே.

      பிரியசகியும் கூறி இருக்கிறார்கள் பாருங்கள் பொது இடங்களில் கூடுவதை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம். நம் ஊரில் திருவிழா நடந்தால் முன்பு ஊர் எங்கும் பிளீசிங்க் பொடி தூவுவார்கள், சில இடங்களில் ஊசி போடுவார்கள். தொற்று வியாதிகள் வராமல் தடுக்க.

      தினதந்தி தொலைக்காட்சியில் சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது. விஷஜூரம் தான் இது என்று மாயவரம் (மாப்படிகை) பட்டர் ஒருவர் மருந்து சொல்லி இருக்கிறார்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் அவர்கள் உண்மைகள் , வாழ்க வளமுடன்
      பாட்டு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. கொரானா தொகுப்பு செய்திகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      கொரானா செய்திகள் நாள்தோறும் கேட்டு கொண்டு இருப்பீர்கள் நான் புதிதாக சொல்லவில்லை. இருந்தாலும் நாம் எல்லோரும் கவனமாய் இருக்க வேண்டிய காலம் .

      நீக்கு
  5. பேரனின் கைவேலைப்பாடுகள் சூப்பர். விடுமுறையால் போர் அடிக்கிறது போலும். ஆனாலும் உபயோகமாக நேரத்தைச் செலவழிப்பது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரனின் வேலைப்பாட்டை பாராட்டியதற்கு நன்றி. நாள் முழுவதும் ஏதாவது செய்து கொண்டு இருக்கிறான். இவ்வளவு விடுமுறை விட்டு ஊருக்கு வர முடியவில்லையே என்று அவனுக்கு வருத்தம். இந்த வருடம் வருவதாய் இருந்தார்கள் வர முடியவில்லை.
      எல்லாம் கொரானாவின் விளைவு.


      நீக்கு
  6. எனக்கும் மிகவும் பிடித்த பாடல். சீர்காழி குரலில் அற்புதமான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இந்த பாட்டு பிடிக்காமல் இருக்குமா!
      சீர்காழியின் அற்புதமான் குரல்தான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

      நீக்கு
  7. என்னவொரு சிறப்பான பாடல் அம்மா...!

    பேரன் அசத்துகிறார்... பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சொல்லி விடுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு இந்த பாட்டு பிடிக்கும் என்று தெரியும்.
      பேரனிடம் உங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் சொல்லி விட்டேன் நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. சரியான நேரத்தில் பொருத்தமான பாடலை வெளியிட்டீர்கள்

    பெயரனின் திறமைகள் இன்னும் வெளிப்ட வாழ்த்துகள்

    உலக மக்கள் இனியெனும் நல்ல எண்ணங்களை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்

    கொரானோ எல்லா கடவுள்களையும் தள்ளி வைத்து விட்டது இதுவொரு பாடம் நமக்கு

    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      பாடலை ரசித்தமைக்கு நன்றி.
      பேரனை வாழ்த்தியதற்கு நன்றி.

      //உலக மக்கள் இனியெனும் நல்ல எண்ணங்களை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்//

      ஆமாம், நீங்கள் சொல்வது சரி.

      //கொரானோ எல்லா கடவுள்களையும் தள்ளி வைத்து விட்டது இதுவொரு பாடம் நமக்கு//

      கடவுள் கோவிலில் மட்டும் இல்லை நம் மனதிலும் இருக்கிறார் என்று கடவுள் பாடம் நடத்துகிறார். மக்கள் எல்லோரும் சுயநலமின்றி இருந்தால் நான் காட்சி தருவேன் என்கிறார் போலும்.

      வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. கை துடைத்துக் கொள்கிற கிருமி நாசினி பொருட்கள், துணி முகக் கவசம், சானிடரி சமாச்சாரன்ங்கள் இவை விலை ஏறாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான் . நீங்கள் சொன்னது போல் இந்த பொருட்கள் எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் குறைந்த விலையில்.
      உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

      நீக்கு
  10. கொரோனா அங்கிளால இன்றைய சிட்டுக்குருவிகளைக் கொண்டாட மறந்திட்டீங்களே கோமதி அக்கா:)... கொரோனா அவ்ளோ தூரம் எல்லோரையும் மிரட்டுகிறது...

    உலக நாடுகள் இப்போ காட்டும் அக்கறையையும் பாதுகாப்பையும் டிசம்பரிலேயே ஆரம்பித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்...

    இத்தாலியில் மட்டும் கடந்த 2 நாட்களில் 800 பேர்வரை மரணம்...:( வயதானோர்தான் கஸ்டப்படுகின்றனர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      சிட்டுக்குருவி தினத்தை மறக்கவில்லை. முகநூலில் பகிர்ந்து இருக்கிறேன்.
      நான் மறந்தாலும் மார்க் மறக்காமல் போன வருடம் போட்டதை காட்டியது அதை போட்டு விட்டேன்.

      சிட்டுக்குருவிகள் பதிவுகள் நிறைய போட்டாச்சு. அவைகள் தரும் இன்பம் அவைகளால் பயன்கள் எல்லாம் ஜன்னல் பகிர்வில் வரும்.
      ஒரு கணவனும் மனைவியும் குருவி கூடுகளை செய்து பள்ளி குழந்தைகளுக்கு கொடுப்பதை (தினமலரில் வந்தது) எடுத்து வைத்து இருந்தேன்.

      //கொரோனா அவ்ளோ தூரம் எல்லோரையும் மிரட்டுகிறது...//

      மிரட்டுவது மட்டும் அல்ல, மக்களை பீதி கொள்ள வைத்து மனதைரியம் அற்றவர்களாக மாற்றி வருகிறது. பயப்ப்டாமல் எதிர் கொள்ளுங்கள் ஒற்றுமையாக விரட்டுவோம்.
      என்று ஒருத்தரும் சொல்லமாட்டேன் என்கிறார்கள்.

      வந்து விட்ட நோயை இல்லை என்று கணக்கு சொல்வதில் பெருமை படுகிறது .
      இத்தாலியில் நிறைய மரணங்கள் கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது.

      //உலக நாடுகள் இப்போ காட்டும் அக்கறையையும் பாதுகாப்பையும் டிசம்பரிலேயே ஆரம்பித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்...//

      உண்மை உண்மை.



      நீக்கு
  11. பேரனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    இங்கும் இதே நிலைதான் .நாடு முழுவதும் இன்று மாலையில் இருந்து திங்கள் காலை வரை ஊரடங்கு சட்டம் போட்டுஉள்ளார்கள். உலகமே நடுங்கிக்கொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      பேரனை வாழ்த்தியதற்கும், பாராட்டியதற்கும் நன்றி.
      மக்களை சட்டம் போட்டு தான் வெளியில் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டி இருக்கிறது.
      உலகமே நடுங்கி தான் போய் இருக்கிறது. விரைவில் அனைத்தும் சரியாக வேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. எங்களுக்கு இன்றுடன், உணவுக்கடைகள், கொபி ஷொப் அனைத்தும் மூடப்படுகின்றன, take away மட்டும் இருக்குமாம். ஆனா இதனால வேலை இல்லாமல் போவோருக்கு அரசாங்கம் அவர்களுக்கான மாதச் சம்பளத்தில் 80 வீதத்தைக் குடுப்போம் என அறிவித்திருக்கிறார்கள், இல்லை எனில் இப்படி கடைகள், சூப்பமார்கட்டில் வேலை செய்வோர் என்ன பண்ண முடியும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அரசாங்கம் அவர்களுக்கான மாதச் சம்பளத்தில் 80 வீதத்தைக் குடுப்போம் என அறிவித்திருக்கிறார்கள், இல்லை எனில் இப்படி கடைகள், சூப்பமார்கட்டில் வேலை செய்வோர் என்ன பண்ண முடியும்..//

      நல்லது தான். இல்லை என்றால் அவர்களின் நிலை கஷ்டம் இல்லையா?

      நீக்கு
  13. //பள்ளிகள் நம் நாட்டில் 31ம் தேதி வரை விடுமுறை//

    இங்கு பெரும்பாலும் இனி செப்டெம்பர்தான் படிப்பு சம்பந்தமான அனைத்தும் திறக்கப்படும் என்கிறார்கள்.. அதாவது ஸ்கூல், யுனி கொலீச் எல்லாமே..... சரியாகச் சொல்லத் தெரியவில்லை..

    பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பதுதான் கஸ்டமாக இருக்கு, எங்கள் வீட்டிலும் சின்னவருக்கு முசுப்பாத்தியாக இருக்கு, வெளியே போகிறேன் ஃபிரெண்ட் வீட்டுக்குப் போகிறேன் என ஒரே அட்டகாசம்... பாவம்தான் அவர்களுக்கும் நெடுக வீட்டுக்குள் இருந்து என்ன பண்ணுவது.. பெரியவர்களுக்கு ஹப்பி, நமக்கு ஜாலியாக இருக்குது.. றிலாக்ஸ் ஆக இருக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளுக்கு கஷ்டம் தான். அவர்களை பிடித்து வைத்து கொள்வது.
      என் பேரனுக்கு வீட்டிலிருந்து விளையாடி பழகி விட்டான், அப்புறம் நண்பர்கள் வீட்டு குழந்தைகளுடன் விளையாடுவன். பள்ளி நண்பர்களின் பெற்றோர்கள் சில சமயம் இவன் வீட்டு தங்கள் பிள்ளைகளை கொடுண்டு வந்து விடுவார்கள். இனி கஷ்டம் கொரானா பயத்தால் அப்படி வரவுகள் இருக்காது.
      வீட்டில் எல்லோரும் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி என்று தொலைக்காட்சியில் சொல்கிறார்கள்.

      நீக்கு
  14. கோமதி அக்காவின் பேரன் வளர்ந்துவிட்டார் கொஞ்சம் குண்டாகிவிட்டதுபோலவும் தெரியுதே.. கோமதி அக்காவின் தலைமயிர்தான் அவருக்கும்.. துடைச்சுப் போடச் சொல்லுங்கோ மருமகளிடம்..

    இப்போ ஆரம்பம் நன்கு பொழுது போகும், இனித்தான் போறிங்காக வரும்.. கிட்டத்தட்ட 5 மாதங்கள் விடுமுறை என்கின்றனர்...

    //டைடானிக் கப்பலாம் அவன் வரைந்து இருப்பது//
    உண்மையில் சூப்பராக வரைந்திருக்கிறார், பின்னே தாத்தாவின் கைவண்ணம் வராமல் போய்விடுமோ.. ஆர்ட் கிளாஸ் க்கு அனுப்பலாம் அவரை.. இன்னும் நன்றாக வரைவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரன் வளர்ந்து விட்டார். ஆனால் குண்டாகவில்லை, அந்த குளிருக்கு போட்டு இருக்கும் உடையால் அப்படி தெரிகிறது.
      அவனுக்கும் சுருட்டைமுடிதான். முடியை கட் செய்ய சொல்கிறீர்களா? சொல்கிறேன்.

      ஆர்ட் கிளாஸ் போகிறான் . ஆனால் இப்போது எல்லாம் விடுமுறை. அவன் அறையில் அவன் வரைந்த ஓவியங்கள் நிறைய அலங்காரமாய் இருக்கிறது.
      அவன் மனதில் உள்ளதை வரைவான் தாத்தா மாதிரி, நீங்கள் சரியாக சொன்னீர்கள்.

      நீக்கு
  15. //மஹாராஷ்டிராவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த மனிதர் தும்மி இருக்கிறார். அந்த மனிதரைப் பொது மக்கள் அடிக்கிறார்கள்.//

    நம் மக்களைக் கொரொனா வந்து தாக்கினாலும் திருந்தவே மாட்டினம் போல, இப்படி அடிக்கலாமோ....

    ஓம் பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.. என் ஜிம், யோகா எல்லாமும் நிறுத்தியாச்சு கர்ர்:))..

    கொரொனா வந்தால் பயப்படத் தேவையில்ல, ஆனா இது டக்கு டக்கெனத் தொற்றுகிறதாம் அதுதான் பயம்.... நல்லதை நினைப்போம் எல்லாம் நல்லதாகவே நடக்கும்...

    பதிலளிநீக்கு
  16. //நம் மக்களைக் கொரொனா வந்து தாக்கினாலும் திருந்தவே மாட்டினம் போல, இப்படி அடிக்கலாமோ....//

    மூக்கை பொத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கலாம் இப்படி அடிப்பது தப்பு.
    மனிதர்கள் ஏன் இப்படி ஆனார்கள்! கஷ்டமான காலத்தை எப்படி ஒற்றுமையாக கடப்பது ஒருவருக்கு ஒருவர் அன்பு வார்த்தைகளை சொல்லி ஆற்றுப்படுத்த வேண்டும்.
    நல்லதை நினைப்போம், நல்லதே நடக்க இறைவன் அருள் புரிவார்.

    பதிலளிநீக்கு
  17. உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  18. நல்லதொரு தொகுப்பு. விழிப்புணர்வு பதிவு.

    பேரனின் கைவண்ணம் சிறப்பு.

    பாடல் நன்று.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      பதிவை, பேரனின் ஓவியம், பாடலை ரசித்து கருத்து சொன்னதற்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு