செவ்வாய், 17 டிசம்பர், 2019

மார்கழி மாத நிகழ்வுகள்


படம் கூகுள்

 மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கு உள்ள  மாதம்

படம் கூகுள்

மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டு கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் எடுத்து வருவேன்.  படம் கூகுள் - நன்றி

அடியார்கள் பஜனை பாடிக்கொண்டு தெருவில் வருவார்கள். வீடுகள் தோறும் விளக்கேற்றி அவர்களை வரவேற்பார்கள். பாடத் தெரியாதவர்களையும் பாட வைக்கும் பஜனைப் பாடல்.இப்படி இளமைக் கால மார்கழி மாதம் அருமையானது. இப்போதும் காலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகிறேன். அம்மாவுடன் போன மாதிரி  இல்லை.


மார்கழி என்றால் இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். இசையால் பாடகர்கள் வேள்வி செய்வார்கள்.மனித வாழ்வில் இசை நிறைய அற்புதங்களை செய்கிறது.

இசை வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மனிதனின் உடலில் , மனதில் காணும் வலிகளை நீக்குவதற்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

                                                                       
மார்கழி மாதம் பஜனை பாடல்களை கையைத் தட்டி பாடும் போது குளிர் நம்மை விட்டு போய் விடும். இரத்த ஓட்டம் நன்கு நடை பெறும்.உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் ஏற்படும்.  சிவானந்த விஜயலட்சுமி அவர்கள் தன் சொற்பொழிவைத் தொடங்கும் முன் ஒரு பாட்டு பாடுவார்கள். ’கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா ’எனப் பாட்டு பாடுவார்கள் அதில் ”பாடக்கிடைத்த வாய் ஒன்று,தாளம் போடக்கிடைத்த கை ரெண்டு,”இரு கையாலே தாளங்கள் போடு;” என்று  ஐந்து புலன்கள் செய்யும் வேலைகளைச் சொல்லிப் பாடுவார்கள்.  இந்தப் பிறவியில் பாட வாய் கிடைத்திருக்கும்போது, பாடாமல் இருக்கலாமா ? என அர்த்தம் தோன்றும் பாடலைப் பாடுவார்கள். அந்த பாட்டு முழுமையாய் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நான் சிறுமியாய் இருக்கும் போது கேட்டது. அந்த பாடல் வலைத்தளத்தில் தேடியும் கிடைக்க வில்லை.
                                           
பால் தினகரன் அவர்கள் ’ காலையில் நீ எழுந்து கடவுளைத் துதி நன்று, காலதாமதம் நன்றன்று, என் மனமே!’ என்று பாடுவார்.

                                     
கிறிஸ்துமஸ் கீதங்களை  அலங்கரிக்கப்பட்ட   வண்டிகளில் இரவு  பாட ஆரம்பித்து  காலை வரை பனியில் பாடிவருவார்கள்.
கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்தவர் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பார்.
               
                                               நான் வரைந்த கோலம்
எல்லா மதமும் காலையில் இறைவனைத் துதிப்பது நன்று என்று சொல்கிறது. பள்ளி வாசலில் 4.30க்கு பாங்கின் ஒலி இறைவனைத் தொழ வாருங்கள் என அழைக்கிறது.
                               
                                                                              படம் கூகுள்
ஐயப்ப பகதர்கள் காலையில் இந்த மார்கழிக் குளிரிலும் பச்சைத்தண்ணீரில் குளித்து ஐயப்பனை வேண்டிப் பாடுவார்கள்.

                              
                                                              படம் கூகுள் -நன்றி
 எல்லாக் கோவில்களிலும் காலை வழிபாடு மிகவும் சிறப்பாய் நடைபெறும்.

               
                                                               படம் கூகுள்- நன்றி
                           
                                                               படம் கூகுள்- நன்றி
மார்கழியில் இசை , நாட்டிய  விழா சிறப்பாய் நடைபெறும்.  தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மார்கழி மகா உற்சவம் நடத்துகிறார்கள். வானொலியும் இசை , நாட்டிய விருந்துகள் அளிக்கிறது.

கோலங்கள்:-

நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள், கோலத்தை அழிக்கும் கண்ணனைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட* வீதிவாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்றன்மேல்*
உள்ள மோடி யுருகல் அல்லால் உரோடம் ஒன்றுமிலோங் கண்டாய்*
கள்ளமாதவா! கேசவா! உன்முகத்தன கண்க ளல்லவே

’குடும்ப விளக்கில்’ கோலமிடும் பெண்ணைப் பற்றி பாரதிதாசன் இப்படிக் கூறுகிறார்:

//சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!//

விடியல்காலையில் கோலம் போட்டு முடித்தபின் அவளுக்கு பரிசு அளிப்பது போல்  சூரியன் தன் பொன்னொளியை தருகிறார் என்று தன் பாடலில் சொல்கிறார்.

ஆனால் இன்று விடியல் காலையில் போட முடிவதில்லை சிலரால், இரவே போட்டு விடுகிறார்கள். சிலர் வீட்டு வாசல் தெருப்பக்கம் இருந்தால் வாசலில் அதிகாலையில்  திருடர் பயத்தால் கோலம் போடுவது   முடிவதில்லை. நன்கு விடிந்தபோது போடுகிறார்கள்.

மார்கழி மாதம் கோலம் போட  ஒரு மாதம் முன்பே   மண்தரையை  , கல் நீக்கி வாசலை சீர்  செய்து சமப்படுத்தி வைப்பேன் .  பசுஞ் சாணம் தெளித்து கோலம் போடுவேன். ஆனால்  இன்று  அப்படி சீர் செய்யும் வேலை இல்லை. வாசலில்   சிமெண்ட் போட்டு விட்டார்கள்  எல்லோர் வீடுகளும் அப்படித்தான். அடுக்கு மாடி குடியிருப்பாக வேறு ஆகி விட்டது..


அடுக்கு மாடி குடியிருப்பு கோலம்

நான் கோவிலுக்கு போகும் வழியில் இரு வீடுகளுக்கு முன் போட்டு இருக்கும் கோலத்தையும் ,  நான் போகும் கோவில் படங்களையும் பகிர்ந்து இருக்கிறேன்.
 மண் தரை சிமெண்ட் தரை ஆனது, பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து பூ வைப்பது இப்போது இல்லை பூ மட்டும் வைக்கப்பட்டு இருக்கிறது.
                                       
கோவிலில் அதிகாலையில் 4.30 லிருந்து 5 மணிக்குள்  பூஜை ஆகி கொண்டு இருந்தது. எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் இப்போது 7 மணிக்கு நடக்கிறது.  பல கோவிலுக்கு ஒரே அர்ச்சகர் .  மக்களுக்கும் இப்போது வசதியாக இருக்கிறது.              

நடுவில் பிள்ளையார் 
பிள்ளையாரின் வலது புறம் அனுமன்
இடது புறம் முருகன் - வள்ளிதெய்வானையுடன்

பால் அபிஷேகம் ஆகிறது துர்க்கைக்கு
அலங்காரத்தில் துர்க்கை

நவகிரகங்கள்.

இந்த மார்கழி மாதத்தில், பக்தியோடு இறைவனை வணங்கியும்,இசையைக் கேட்டு மகிழ்ந்தும்,கோலங்கள் இட்டுக் கொண்டாடியும் மகிழ்வோம்.
                                                     வாழ்க வளமுடன்!
                                                      --------------------------

32 கருத்துகள்:

 1. //காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம்// - நானும் திருவாடானையில் இருந்தபோது (4 வயசு இருக்கலாமா?), பெருமாள் மற்றும் சிவன் கோவிலுக்குச் சென்று சேவித்துவிட்டு பிரசாதம் வாங்கிவருவேன். (நான் மட்டும்தான்). வீட்டுக்கு வந்து பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் கொடுத்த நினைவு. இப்போ நினைக்கும்போது, எது என்னை அதிகாலையில் கோவிலுக்குப் போகுமாறு தூண்டிவிட்டது என்று நினைவில்லை.

  ஆனால் எப்போதிருந்தாலும் கூடாரை வெல்லும்சீர் பாசுர நாளன்று ஆஜராகிவிடுவேன். அன்று சர்க்கரைப் பொங்கலல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   சிறு வயதில் அக்கம் பக்கத்து நண்பர்கள் கோவிலுக்கு போன போது அவர்களுடன் செல்ல மனம் வந்து போய் இருப்பீர்கள். நாலு வயதில் என்றது இன்னும் சிறப்பு.

   இங்கு பக்கத்து அய்யனார் கோவிலில் தினம் புளியோதரை, சர்க்கரை பொங்கல் உண்டு.
   இன்று வாங்கி வந்தேன். வெண்பொங்கல் , எலுமிச்சை சாதம், கொண்டை கடல் சுண்டல் என்று சில நாள் மாறும்.

   கூடாரை வெல்லும் சீர் பாசுரத்தில் வருவது போல் முழுங்கை வழி வருவது போல் கோவையில் என் ஓர்ப்படி வீட்டுக்கு பக்கத்து கோவிலில் எல்லோரையும் உட்கார வைத்து சர்க்கரைப்பொங்கலை கையில் கொடுத்து நெய் ஊற்றுவார்களாம் சொன்னாள்.

   நீக்கு
 2. மார்கழி மாத ஆரம்பப் பதிவு மிகவும் நன்று. கோலங்கள், ப்ரபந்தங்கள் என்று விரிவாக அலசுகிறது. ரசித்தேன்.

  இந்த மாதம் நம் எல்லோருக்கும் இறை உணர்வைக் கொண்டுவருவதாகுக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 2014 ல் போட்ட பதிவு.
   இதை நிறைய பேர் விரும்பி படித்து இருந்தார்கள்.

   மீள் பதிவுதான். புதிதாக எழுத வேண்டும்.

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 3. மங்கலகரமான மார்கழித் தொடக்கம்...

  எல்லாரும் எல்லா நலன்களையும் எய்துதல் வேண்டும்....

  பதிவு மிக மிக நன்று...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. இனிய தரிசனமும் ....அழகிய நினைவுகளும் மா ...

  திருமணதிற்கு முன்பு வரை பெரிய கோலங்கள் போட்ட நினைவுகள் தான் ...இப்பொழுது அப்பார்ட்மெண்ட் வாசத்தில் சிறு கோலம் அதுவும் விசேச நாட்களில் மட்டும் ...


  ஆனால் இன்றும் அத்தை ஊரில் பெரிய கோலம் போடுகிறார்கள் ...


  எப்படியும் இன்று கோவில் செல்ல வேண்டும் என்று எட்டு மணிக்கு சென்று ஆண்டாளே சேவித்து ...சர்க்கரை பொங்கல் பெற்று வந்தேன் மகிழ்ச்சியாக ...  ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

   திருமணத்திற்கு முன்பு அண்ணன், தம்பி, தங்கை, அக்கா என்று எல்லோரும் கலர் கொடுப்போம், பெரிய கோலங்கள் போடுவோம். அக்கம் பக்கத்து வீடுகளுக்கு போய் அவர்களுக்கு உதவி செய்வோம் கோலம் போட . அப்புறம் கோவில் போய் வருவோம். இப்போது சின்ன கோலம் போடவே முடியவில்லை.

   கிராமங்களில் இன்னும் புள்ளிக் கோலம் பெரிய கோலம் போடுகிறார்கள்.

   ஏதோ பழைய நினைப்புகள் எங்களை போன்ற வயதானவர்களை இயங்க வைத்து கொண்டு இருக்கிறது, இயங்குகிறோம். இறைவன் அருளால் முடிந்தவரை செய்வோம்.

   நீங்கள் காலை ஆண்டாளை சேவித்து சர்க்கரை பொங்கல் பெற்று வந்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. அருமை...

  மனதிற்கும் உடம்பிற்கும் உற்சாக புத்துணர்வு தரும் மாதம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   ஆமாம், உண்மை.
   மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு தரும் மாதம் தான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. அதிகாலை நான் கோவில்களுக்கு சென்றதில்லை.   ஆறுமணிக்குப் பின்னரே சென்றிருக்கிறேன்!  எனவே அந்த அனுபவங்கள் எனக்கு இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   சிறு வயதில் 4.30க்கு கோவிலுக்கு போவோம் அம்மாவுடன்.
   அப்புறம் மாயவரத்தில் ஏழு மணிக்கு தான் ஆகும் பக்கத்து கோவில்களில்.இங்கு (வீட்டுக்கு பக்கத்து கோவிலில்) 6.30க்கு ஆகி விடுகிறது.
   தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கறவை மாடு வந்து பால் கறந்து பல்லாண்டு பாடி கதவு திறக்கும் போது போய் விடுவோம். இனிமையான காலங்கள்.
   ஆண்டாள் போல அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் அழைப்பது போல அழைத்து செல்வோம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன். பேசி சிரித்து விளையாடி போவோம்.

   நீக்கு
 7. ஆமாம்.  இப்போதெல்லாம் கோலங்கள் போட தெருக்களே கிடையாது.  அதனாலேயே கோலம் போடும் சுவாரஸ்யமும் குறைந்து விட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், கோலம் போட தெருக்களே இல்லைதான் , அப்படியும் மக்கள் கலர் கோலம் சில வீடுகளில் போட்டு இருப்பார்கள். போகும் வண்டிகள் அதன் மேல் தடம் பதித்து போகும்.

   நீக்கு
 8. இன்று எங்கள் வீட்டில்பாஸ் வெண்பொங்கலும், சர்க்கரைப்பொங்கலும் செய்திருந்தார்.  
  கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா பாடலை நானும் பல நாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  கிடைத்த பாடில்லை.

  பாடக் கிடைத்த நா ஒன்று
  தாளம்போடக் கிடைத்த கை இரண்டு
  இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
  வேதம் கோடி எனப்படும் நான்கு
  வேதம் நான்கு
  இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால்
  கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
   
  இதை இணையத்திலிருந்து எடுத்தேன்! 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெண்பொங்கலும், சர்க்கரைப்பொங்கலும் செய்திருந்தார்.//

   முதல் நாள் நானும் சர்க்கரை பொங்கல் செய்வேன். இந்த முறை செய்யமுடியவில்லை.
   இரண்டு நாளாக உடல் நிலை சரியில்லை இருமல், தும்மல், அதனால் வீட்டில் ஸ்வாமிக்கு மாதுளை பழம். ஓட்டலில் வெண்பொங்கல் வாங்கி வந்தார்கள், கோவிலில் சர்க்கரை பொங்கல், புளியோதரை . எல்லாம் வைத்து காலை பொழுது போச்சு.

   இறைவனுக்கு செய்யும் பிரசாதம் சார் கல்லூரிக்கு போகும் போது கொண்டு போவார்கள்.

   நன்றி பாடல் பகிர்வுக்கு.

   69 ம் வருடம் என் அக்காவுக்கு கல்யாணம் ஆச்சு அப்போது இந்த பாடல் ரிக்காடு தான் ஓடியது கல்யாண மண்டபத்தில்.என் அப்பாவிற்கு பிடித்த பாடல்.
   திருநாவுக்கரசர் பாடிய திருவங்கமாலையில் அங்கத்தின் பயன்களை பாடி இருக்கிறார்.
   இருந்தாலும் சிவானந்த விஜயலட்சுமி பாடல் பிடித்த பாடல் எனக்கு.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 9. மார்கழியின் நிகழ்வுகள் அனைவருக்கும் மங்கலம் உண்டாகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு
 10. மார்கழியில் பல புள்ளிகள் வைத்து அதை இணைத்து அழகான கோலம் வரைவதைப் போல பல விஷயங்களைத் தொட்டு அழகான பதிவை எழுதியுள்ளீர்கள். மீள் பதிவாக இருந்தால் என்ன? சுவாரஸ்யமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   மிக அழகாய் சொன்னீர்கள் உங்கள் கருத்தை

   நீக்கு
 11. சிவானந்த விஜயலட்சுமியின் பேத்தி கதை சொல்கிறார். பெயர் சுசித்ரா என்று நினைக்கிறேன். விக்கிப்பீடியாவில் தேடினால் கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா.. பாடல் கிடைக்கலாம். நீங்கள் கூறியதும் கேட்ட நினைவு வருகிறது. நல்ல பாடல். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சிவானந்த விஜயலட்சுமியின் பேத்தி கதை சொல்கிறார். பெயர் சுசித்ரா என்று நினைக்கிறேன். //

   புதிய செய்தி எனக்கு . விக்கிப்பீடியாவில் தேடினேன் கிடைக்கவில்லை.
   முன்பு வானொலியில் வைப்பார்கள். இந்த பாடலை.
   68, 69 , 70 வருடம் எல்லாம் அவர் தொடர் சொற்பொழிவுகளை கேட்க போவேன் சின்ன வயதில் அம்மா, அக்காவுடன். அப்போது கேட்டது.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 12. சிவானந்த விஜயலக்ஷ்மி பல மதுரை நினைவுகளைக் கிளப்பி விட்டார். இந்தப் பாடலை நானும் கேட்டிருக்கேன். ஆனால் நினைவில் இல்லை. மார்கழி மாத நினைவுகளை அருமையாகக் கொண்டாடி இருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து பல பழைய கோயில்களில் சுமார் ஐந்து மணிக்காவது கோயிலைத் திறந்து தனுர் மாத வழிபாட்டைச் செய்கின்றனர். எங்க ஊர்ப்பக்கம் (பராக்கரை) செல்லும்போதெல்லாம் கோயில் நடை பதினொன்றரைக்கே சார்த்தி விடுவார்கள். காலை சீக்கிரம் திறப்பதால்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   காலை கோவில் 5 மணிக்கு திறந்தாலும் பூஜை இப்போது ஆறு மணிக்கு மேல் தான். மார்கழி மாதம் சீக்கீரம் காலை திறந்து விடுவதால் உச்சிகாலம் சீக்கீரம் ஆகி நடை சார்த்தி விடுவார்கள். எல்லாம் கோவில்களிலும் அப்படித்தான்.
   மதுரை நினைவுகளை சிவானந்த விஜயலக்ஷ்மி கிளப்பி விட்டாரா? வல்லி அக்கா பதிவிலும் மார்கழி நினைவுகள் பகிர்ந்து இருந்தீர்கள் படித்தேன்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரி

  தங்களின் மார்கழிப் பதிவு அருமையாக உள்ளது. கோவிலுக்கு மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் சென்று வருவீர்களா? மார்கழி கோவில்களை/ நினைவுகளை தங்களுடன் சேர்ந்து நானும் தரிசித்தேன்.

  நான் சென்னையில் இருக்கும் போது குடியிருந்த மேல் வீட்டு சினேகிதியுடன் ஒரு வருடம் தினந்தோறும் கோவில்களுக்கு சென்று வந்த நினைவு வந்தது. இருவருமாக வாசலில் காலை நான்கு மணிக்கே எழுந்து பெரிய பெரிய கலர் கோலங்கள் போட்ட பின் கோவில்கள் சென்று வருவோம். இப்போதும் அந்த நினைவு தப்பாமல் வந்து கொண்டே இருக்கிறது. அந்த மாதம் முழுவதும் காலையில் கோவிலுக்குச் சென்றது அந்த வருடம் ஒரு உற்சாகத்தை தந்தது.

  தங்கள் பதிவிலிருந்த கோலங்கள் மிக அழகாக உள்ளது. தாங்கள் வரைந்த கோபுர கோலங்களும் மிக அழகாக உள்ளது. ரசித்தேன்.
  எங்கள் அம்மா வீட்டில் இருந்த வரை வாசல் பெரிதாகையால், பெரிய கோலங்கள் போட்டு தினமும் பசுஞ்சாணியில் பூசணிப்பூக்களை வைப்போம். நாளடைவில் திருமணமாகி சென்ற இடங்களில் தாங்கள் சொல்வது போல் கோலங்கள் சிறிதாகி விட்டது.

  இசை பற்றியும் அழகாக விளக்கியுள்ளீர்கள்.மார்கழி காலைப் பனியும், கோலங்களும் கோவில் தரிசனங்களும் பிரசாதமும் ஒரு அருமையான உணர்வுகள்தான். அதை மிகவும் அழகாக விளக்கிய தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள். நான் தாமதமாக வைத்து கருத்துக்கள் கூறியமைக்கு மன்னிக்கவும். கொஞ்சம் வேலைகள் உடனுக்குடன் வர விடாமல் செய்து விட்டன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்
   மார்கழி மாதம் முழுவதும் போய்வருவேன். இறைவன் அருளால் கோவில் மிக அருகில் இருந்தது மாயவரத்தில். இங்கும் பக்கம் தான் ஆனால் பூஜை சீக்கீரம் முடிந்து விடுகிறது. இன்று அத்தையின் நினைவு நாள் (மாமியார்) திதி கொடுக்க வேறு கோவில் போய் இருந்தோம்.(இம்மையில் நன்மை தருவார் கோவில்)

   அஷ்டமி சப்பரம் இன்று. அதையும் பார்த்து வந்தோம்.

   உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.
   மார்கழி இறைவழிபாடு மனதுக்கு மகிழ்ச்சி தரும் , உடலுக்கு உற்சாகம் தரும் தான்.

   பதிவை ஒவ்வொன்றையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 14. எனக்கு ஒரு சந்தேகம் அது ஏன் திருப்பாவை திருபெம்பாவை எனறு இரண்டுமே கூறுகிறார்கள்சைவ வைணவ சித்தாத்தங்கள் கூடவே இருக்வா அல்லது எந்த ஒரு சாராருக்கும் இடையே வேறுபாடுகூடாது என்பதற்கா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்

   ஆழ்வார்களும், நாயன்மார்களும் சமயமறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. அழகிய போஸ்ட்... ஒவ்வொரு கொண்டாட்டங்களும் ஒவ்வொரு நினைவைத் தூண்டிவிடும்.

  இது கொப்பி பேஸ்ட் பண்ணினனீங்களோ கோமதி அக்கா...?. அலைமண்ட் செட்டிங்கில் ஏதோ தவறு. போஸ்ட் எழுத்துக்கள் படங்கள் எல்லை தாண்டி நிக்குது.
  மொபைலில் பாதிதான் தெரியுது, கஸ்டப்பட்டுப் படிச்சேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

   //ஒவ்வொரு கொண்டாட்டங்களும் ஒவ்வொரு நினைவைத் தூண்டிவிடும்.//

   உண்மை. நினைவுகள் நிறைய இருக்கிறது.
   நீங்கள் பழைய போஸ்டில் உங்கள் ஊர் கோவில்களில் பாட்டு அதிகாலை கேட்கும் போது இந்த கோவிலில் இருந்து வருகிறது அது அந்த கோவிலிலிருந்து வருகிறது என்று பழக்கமாகி போனதை பகிர்ந்து இருந்தீர்கள்.

   நான் முன்பு எழுதிய பதிவை காப்பி, செய்து பேஸ்ட் செய்தேன், படங்கள் சிலது சேர்த்தேன். அதனால் வந்த வம்புதான்.
   அக்கா போஸ்டை தங்கை எப்படியோ கஷ்டப்பட்டு படித்து விட்டீர்கள்.
   நல்லது, மகிழ்ச்சி.
   கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. நலம் தானே?...

  கையுல் காயம் என்றறிந்தேன் - எபியின் மூலமாக...

  கவனமாக இருக்கவும்...

  தெய்வம் துணையுண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   இப்போது நலம்.
   கவனமாய் இருக்கிறேன்.
   தெயவம் தான் காப்பாற்றி கொண்டு இருக்கிறது.
   உங்களை போன்றவர்களின் அன்பும் வாழ்த்தும் இறைவனின் அருளும் துணை இருக்கும் போது கவலை இல்லை.
   விசாரிப்புக்கு நன்றி.

   நீக்கு