வியாழன், 5 டிசம்பர், 2019

அன்புள்ள அப்பா

அப்பாவின் நினைவுகள் 

நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கிக் கொடுத்த ஃபாரின்
வாட்சைப்பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.


அப்பாவிற்கு நாங்கள் எல்லோரும் செல்லக் குழந்தைகள்தான்.  இருந்தாலும் என் தங்கைகள் சிறுமியாக இருந்ததால் என் அக்காவிற்கும், எனக்கும் வாட்ச் வாங்கித் தந்தார்கள்.  என் அக்கா பியூசி படித்துக் கொண்டு இருந்தார்கள்.  அப்பா வாங்கி வந்த  இரண்டு வாட்சில்  ஒன்று  வட்டம், மற்றொன்று சதுரம்.  அந்த காலக்கட்டத்தில்  சதுரம் தான் பேஷன்.  என் அக்கா சதுர வாட்சை எடுத்துக் கொண்டார்கள்.
அக்காவின் வாட்ச் கறுப்பு ஸ்ட்ராப், என் வாட்ச் தங்ககலர் ஸ்ட்ராப்.


  எனக்கு வட்ட வாட்ச் வந்தது .ஆனால் எனக்கு வட்டம்  பிடிக்கவில்லை.  அப்பாவிடம் எனக்கும்  சதுரமே வேண்டும் என்று கேட்டேன்.  இப்போது ஃபாரின் சாமான்கள் எளிதாகக் கிடைப்பதுபோல் அப்போது கிடைக்காது. அப்பாவின் நண்பர்- ஃபாரினுக்குப் போனவரிடம் சொல்லி வைத்து வாங்கிக் கொடுத்தார்கள். அதை மாற்ற முடியாது என்பதால் அதற்கு அப்பா. என் மனம் நோகாமல்  அந்த வாட்சை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுமாறு  எனக்கு நிறைய ஐஸ் வைத்து என்னிடம் கொடுத்து விட்டார்கள்.  அது என்னவென்றால் உன் கைக்கு இந்த வட்டம் தான் நன்றாக இருக்கும்,  அக்கா கைக்கு அந்த சதுரம் தான் நன்றாக இருக்கும்,  உன் வாட்ச் எல்லா  காலங்களிலும் போட்டுக் கொள்ளலாம், அக்கா வாட்ச் இந்த சதுர பேஷன்  இருக்கும் போது மட்டும் தான் போட முடியும்.  அப்புறம் வேறு மாடல் பேஷனாகி  விட்டால் இது பழைய பேஷனாகி விடும். வட்டம் அன்றும், இன்றும், என்றும் நீ போட்டுக் கொள்ளலாம் என்று எல்லாம் சொல்லி என்னைச் சமாதானப்படுத்திவிட்டார்கள்.

அம்மாவின் சிங்கப்பூர் வாட்ச் சில்வர் கலரில் வெள்ளைக்கல் சுற்றிப் பதித்த , மூடி போட்டது. ஓவல் வடிவம் (முட்டை வடிவம்) அந்த வாட்சை பெரும்பாலும் நான் தான் கட்டிச் செல்வேன்.
பள்ளியில் தோழிகள் மணி கேட்டால் பெருமையாக அதைத் திறந்து மணி சொல்வேன். எல்லோரும் அதைத் திறந்து மூட ஆசைப்பட்டு மணி கேட்பார்கள்.

ஒரு நாள் பொருட்காட்சிக்குச் சென்றிருந்த போது அந்த வாட்ச், கூட்டத்தில் எங்கோ விழுந்துவிட்டது.  பொருட்காட்சி முழுவதும்  நானும் என் அண்ணனும் தேடினோம்.போகிறவர்,  வருகிறவர்கள் மிதித்து ,மூடி உடைந்து வாட்ச் மட்டும் கிடைத்தது.  அம்மாவிடம் திட்டு வாங்கினேன். வாட்சை பத்திரமாக வைக்கத் தெரியாதவளுக்கு எதற்கு வாட்ச் என்று  அம்மா வேறு அப்பாவிடம் சொல்லிக்  கொண்டு இருந்தார்கள்.  அது ஒரு காரணம் அப்பா வாங்கி கொடுத்த வட்ட வாட்சை நான் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டதற்கு.

இரண்டு முறை அப்பா வாங்கித் தந்த வாட்ச் ரிப்பேர் செய்யப்பட்டது. ஒருமுறை வாட்ச் கடைக்காரரின் மகன்," இது மிகவும் பழைய மாடலாய் இருக்கே . இதை ரிப்பேர் செய்ய முடியாது" என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த  அவருடைய  அப்பா,  கொடுங்கள் . என்ன வாட்ச்? டிட்டோனியா ?நல்ல வாட்ச் அல்லவா ! என்று சொல்லி, நான் ரிப்பேர் செய்து தருகிறேன் என்று ரிப்பேர் செய்து தந்தார், பழைய ஆட்களுக்குத் தான் பழமையின் மதிப்பு தெரியும். இப்போது குழந்தைகள் இத்தனை வருடம் உழைத்து விட்டதா? ரிப்பேர் எல்லாம் செய்ய வேண்டாம் வேறு வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.

இந்த கதை எல்லாம் எதற்கு என்று கேட்டால் இன்று என் அப்பாவின் நினைவு தினம் இன்று. அப்பாவைப்பற்றிய நினைவுகள் என் மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதை உங்களிடம் பகிர ஆசை. ஆனால் இன்று எனோ புதிதாக எழுத நேரமே இல்லை.  அதனால்  இங்கே,ஆசியாவின் தொடர் அழைப்புக்கு எழுதிய "டிக் டிக் கடிகாரம் அன்பைக் கூறும் கடிகாரம்" பதிவில் இருந்து.

ஆசியா அவர்கள் தொடர் பதிவுக்கு  அழைப்பு விட்டு இருந்தார்கள்.
-நீங்கள் வெகு காலமாய்ப் பாதுகாத்து வைத்து இருக்கும்  பொருளைப்பற்றி -என்று கூறியிருந்தார்கள்.  அந்தப் பொருளின் படமும் போடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள். என் அப்பாவைப் பற்றிக்கூற எனக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய ஆசியாவிற்கு நன்றி.அப்பாவின் அன்பும், ஆசீர்வாதமும் என்றும் வழி நடத்தி செல்லும் எங்களை.

கர்நாடக இசைப் பிரியர். எம்.எஸ் அம்மா பாட்டு மிகவும் பிடிக்கும்.
கிராம போனில் அவர்களின் இசைத் தட்டுக்களைப் போட்டுக் கேட்பார்கள்.
1968 ம் வருடம் என்று நினைக்கிறேன்  டேப் ரிக்கார்டர்  வாங்கினார்கள். அதில் முதலில் பதிந்த பாடல் "ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே" என்பது தான்.
                                                             
அப்பாவின் அன்பைச் சொல்ல ஒரு நாள் போதாது.
அப்பாவிற்கு பிடித்த பாடல்,  'ஒரு நாள் போதுமா 'என்று பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய பாடல் . நாங்கள் பாலையா போல் பாடி நடித்துக் காட்டினால் உடல் குலுங்க, கண்ணின் ஓரம் கண்ணீர் வருவது போல் சிரிப்பார்கள். அவர்களுக்கு எல்லோரும் மகிழ்ச்சியாக எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


வாழ்க வளமுடன்.

38 கருத்துகள்:

 1. அம்மா, அப்பா இரண்டு பதிவுகளும் மனதை நெகிழவைத்தவை.

  இடுகைக்கு சாரின் படமும் கூடுதல் மதிப்பைச் சேர்க்கிறது.

  அப்பாவின் அன்புபோல் வராது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
   சாரின் படத்துக்கு கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி.
   நான் அப்பாவின் செல்லம், அப்பாவின் அன்புபோல் வராதுதான்.

   நீக்கு
 2. ஒரு நல்ல பாடலின் காணொளியைக் கண்டேன். எப்படிப்பட்ட செட், உங்கள் பாடல் தோல்வியடையும் என்று சொல்லியும் பாட ஒப்புக்கொண்ட பாலமுரளி கிருஷ்ணா அவர்கள், தானே பாடுவதுபோல நடித்திருப்பவர்... மிக அருமை...இத்தகைய பாடல்களெல்லாம் இனி எப்போதும் வராது.

  மேடையில் பக்கத்தில் இருப்பவர் உசிலை மணியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரையும் கவர்ந்த பாடல். இந்த பாடலில் ஒவ்வொருவரையும் ரசிக்கலாம். அத்தனை பேரின் முகபாவங்கள் அவ்வளவு அழகாய் இருக்கும். பாலையாவின் கம்பீரம், ஆணவம் , உசிலை மணியின் தலையாட்டல் எல்லாம் ரசித்து பார்க்கலாம்.
   பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு புகழ் சேர்த்த பாடல்.
   பாலையா பக்கத்தில் ஒரு பக்கம் உசிலை மணி ஒரு பக்கம் குண்டு கல்யாணம் அப்பா, குண்டு கருப்பையா.
   உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. அப்பாவின் நினைவலைகளை எங்களோடும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ.

  பழைய பொருட்களின் மதிப்பு நான் இன்றுவரை கட்டி இருப்பது ஒரே வாட்சுதான் எனது வாழ்வின் ஒரே வாட்சும் இதுவே இதற்கு ரிப்பேருக்காக செலவு செய்த பணத்தில் ஐம்பது வாட்சு வாங்கி இருக்கலாம் ஆனாலும் செலவு செய்கிறேன் பல நேரங்களில் வாட்சு ஓடாமலேயே கட்டி இருக்கிறேன். இதோ மூன்று தினங்கள் முன்புகூட செயின் அறுந்து விட்டது. இந்த வாட்சைக் குறித்து பதிவும் போட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்
   பழைய வாட்சை பேணி பாதுகாப்பது மகிழ்ச்சி.
   உங்கள் பதிவின் சுட்டி கொடுங்கள் பார்க்கிறேன்.
   செயின் அறுந்து விட்டதை சரி செய்யவில்லையா?உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கும் பதிவை பற்றி கருத்து சொன்னதற்கும் நன்றி ஜி.

   நீக்கு
 4. ஏற்கெனவே போட்டிருப்பதாகச் சொல்லியும் நானெல்லாம் இப்போத் தான் முதலில் படிக்கிறேன். அருமையான நினைவலைகள். உங்கள் கைக்கடிகாரம் பற்றிப் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். எதிலுமே முதல் முதல் தான். அதற்கு ஈடு, இணை இல்லை. உங்கள் அப்பாவின் குணங்களைப் பற்றியும், அவர் உங்கள் அனைவரையும் செல்லமாக வளர்த்தது பற்றியும் ஏற்கெனவே நிறையப் படித்திருக்கிறேன். இப்போது இன்னமும் அறிந்து கொள்ள முடிந்தது. நல்லதொரு பகிர்வுக்கும் உங்கள் அப்பாவின் நினைவைப் போற்றி வருவதற்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //ஏற்கெனவே போட்டிருப்பதாகச் சொல்லியும் நானெல்லாம் இப்போத் தான் முதலில் படிக்கிறேன்.//

   அதனால்தான் இதையே பகிர்ந்து விட்டேன். இன்று காலை முதல் போன், ஸ்கைப் என்று உறவினர்கள், பேரன், பேத்தி இவர்களுடன் பேசியதில் நேரமே இல்லை பதிவு புதிதாக எழுத.

   அப்பாவின் ஆன்மீகம், அப்பாவின் புகைப்படக்கலை ஆர்வம், அப்பாவின் விளையாட்டு, அப்பாவின் விருப்புகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

   ஆமாம் கீதா, அப்பா எங்களை எல்லாம் செல்லமாய் அவ்வளவு அன்பாய் பார்த்துக் கொண்டார்கள் எங்களுக்கு தான் கொடுத்து வைக்கவில்லை.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. தங்கள் தந்தையின் நினைவைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி .

   நீக்கு
 6. நெகிழ்ச்சி தந்த பதிவு. அப்பா கொடுத்த கடிகாரம், சார் வரைந்த படம், இனிய நினைவுகள் என பதிவு நன்று!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. அதென்னமோ தெரியேலை கோமதி அக்கா, உங்கள் கதை படிக்க படிக்க எனக்கு என் நினைவுகளேஎ ஓடுது:)

  எனக்கும் முதன்முதலாக வாங்கித்தந்த வோச் எலக்ட்ரோனிக், லைட் எல்லாம் பத்துமே அது... அப்பா கிட்டக் கூப்பிட்டு லைட் ஓன் பண்ணிக் காட்டி, அடிக்கடி லைட் போடாதே பற்றரி போய்விடும் கெதியில என்றார்.

  அதேபோல, அம்மாவுடையதும் உங்கள் அம்மாவினுடையதைப்போல ஓவல்சேப் கோல் வோச், அதுக்கு தங்கத்திலேயே செயின் இருந்தது, மிக அழகு, வோச் பழுதாகியதும், நான் அந்த செயினை எடுத்து கையில் ரிஸ்லெட் செயினாக கட்டியிருந்தேன், சூப்பர் பற்றன். ஆனா உங்களைப்போல சைக்கிளில் போகும்போது ஒருநாள் ரோட்டில் கழண்டு விழுந்துவிட்டது, கிடைக்கவே இல்லை. பின்பு புதுசு செய்து தந்தா அம்மா, ஆனா அது எனக்குப் பிடிக்கவில்லை:(.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அன்னக்கிளி அதிரா, வாழ்க வளமுடன்.
   அக்காவை போல் தங்கைக்கும் நினைவுகள் இருக்கே!

   //எனக்கும் முதன்முதலாக வாங்கித்தந்த வோச் எலக்ட்ரோனிக், லைட் எல்லாம் பத்துமே அது... அப்பா கிட்டக் கூப்பிட்டு லைட் ஓன் பண்ணிக் காட்டி, அடிக்கடி லைட் போடாதே பற்றரி போய்விடும் கெதியில என்றார்.//
   புதிதாக லைட் எரிவதை பார்க்கும் போது இப்படித்தான் செய்ய சொல்லும் குழந்தை மனது.

   சிறு வயது நினைவுகள் அருமை.

   //சைக்கிளில் போகும்போது ஒருநாள் ரோட்டில் கழண்டு விழுந்துவிட்டது, கிடைக்கவே இல்லை. பின்பு புதுசு செய்து தந்தா அம்மா, ஆனா அது எனக்குப் பிடிக்கவில்லை:(.//

   சின்ன வயதில் எவ்வளவு வருத்தமான விஷயமாக இருந்து இருக்கும் என்பதை உணர முடிகிறது.


   நீக்கு
 8. லிங்கில் போய்ப் பார்க்கிறேன். அப்பா அம்மாவின் ஆசிகள் உங்களுக்கு எப்பவும் இருக்கும்.

  அழகிய பாடல் பகிர்வு. எப்பவும் ஒருவர் இருக்கும்போது நாம் அவரில் காட்டும் அன்பை விட, இல்லை என்றானபின்னர், மனம் ஏனோ அதிகம் வருந்தும், நாம் அவர்களை நன்கு கவனிச்சிருந்தால் கூட, எங்கள் அப்பாவின் நினைவும் எனக்குள் அப்படித்தான்.. இருக்கும்போது இருந்ததை விட, இல்லாதபோது அதிகம் மிஸ்ஸிங்காக இருக்கு...

  “சாவே உனக்கு ஒரு சாவு வராதோ”?:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //லிங்கில் போய்ப் பார்க்கிறேன். அப்பா அம்மாவின் ஆசிகள் உங்களுக்கு எப்பவும் இருக்கும்.//

   அது போதும் அதிரா வேறு என்ன வேண்டும்?

   அப்பாவின் அன்பை நான் அனுபவித்து இருக்கிறேன். என் தம்பி, தங்கைகள் அனுபவிக்கவில்லை.நான் என் அப்பாவின் நினைவுகளை சொல்ல சொல்ல அவர்கள் கண்கள் விரியும் அப்பா இருந்து இருந்தால் எப்படி இருக்கும்! என்று அவர்களின் பெருமூச்சும் மனதை வருத்தும்.
   அப்பாவைபற்றி நினைவுகளில் எப்போதும் மகிழ்ச்சி தரும் விஷயத்தை மட்டும் மீண்டும், மீண்டும் நினைத்துக் கொள்வேன்.

   //“சாவே உனக்கு ஒரு சாவு வராதோ”?:)..//

   வரலாம் , ஆனால் எப்போது வர வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் காலதேவன். சிறு வயதில் வேரடோடு பிடிங்கி எறிய கூடாது.

   படைத்தவன் கணக்கை யார் அறிவார்!

   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அதிரா.


   நீக்கு
 9. தந்தையைப்பற்றிய பதிவு அருமை! இப்படிப்பட்ட இனிய நினைவுகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் கணவரின் ஓவியம் மிக அழகாக இந்தப்பதிவிற்கு பெருமை சேர்க்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு கிடைத்த நினைவுகள் எனக்கு பின்னால் பிறந்த உடன்பிறப்புகளுக்கு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். அந்த விதத்தில் நான் கொடுத்து வைத்தவள்தான்.

   என் கணவர் நான் சொன்ன காட்சியை தன் ஓவியத்தில் கொண்டு வந்தது மகிழ்ச்சியே !
   உங்கள் ஆறுதலான கருத்துக்கு நன்றி .

   நீக்கு
 10. //அவர்களுக்கு எல்லோரும் மகிழ்ச்சியாக எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.//

  எவ்வளவு அருமையான மனிதர்....    இந்த வரிகள் நெகிழ்ச்சியைக்கொடுக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   மிக அருமையான மனிதர் என் அப்பா. எங்கே போனாலும் குழந்தைகளுக்கு என்று பரிசு பொருட்கள் தின்பண்டங்கள் வாங்கி வருவார்கள். வித விதமான மணி மாலைகள் வாங்கி வருவார்கள். "காசை ஏன் இப்படி மணிமாலைகளில் போடுகிறீர்கள் தங்க நகையை வாங்கினால் குழந்தைகளுக்கு பின்னால் உபயோகபடும்" என்பார்கள் அம்மா.

   அவர்கள் நினைத்தே பார்த்து இருக்கமாட்டார்கள் இப்படி எல்லோரையும் அழவைத்துவிட்டு போக போகிறோம் என்று.

   நீக்கு
 11. அப்பாவின் நினைவுகள் அபாரம்.  உங்களுக்கு மனதில் பாரம்.  இன்று அவர் நினைவு நாளா?  அவர் உங்கள் நினைவிலேயே இருக்கிறார் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம், என் மனதில் பாரம் தான். நேற்று நினைவு நாள்.
   என்றும் நினைவுகளில் இருப்பார்கள் , இருக்கவேண்டும் அதுதான் என் எண்ணமும்.

   நீக்கு
 12. திருவிழாவில் வாட்ச் தொலைத்த சின்னவயசு கோமதி அக்காவை ஸார் கற்பனை நயத்துடன் அழகாக ஓவியம் வரைந்திருக்கிறார்.  ஒரு ராட்டினம் போட்டவுடனேயே திருவிழா ஃபீலிங் வந்து விடுகிறது இல்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு ராட்டினம் போட்டாலே திருவிழா களை கட்டி விடும்.என் அண்ணன் நினைவுகளில்
   இந்த படம் பல நினைவுகளை தந்தபடம். நேற்று சாரிடம் இதை எல்லாம் பேசி கொண்டு இருந்தேன். என் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொண்டேன் நினைவுகளின் சுமையை.

   நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை என்ற பாடல் போல் நினைவு பறவை பறந்து கொண்டே இருக்கும்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரி

  முதலில் நான் தாமதமாக இந்த பதிவுக்கு வந்ததற்கு வருந்துகிறேன்.
  தங்கள் தந்தையை பற்றிய செய்திகள் நெகிழ வைக்கின்றன. தங்களுக்கெல்லாம் ஒரு நல்ல பாசமான தகப்பனாராக இருந்திருக்கிறார். தங்கள் தந்தையின்பால் நீங்கள் கொண்டிருந்த அளவு கடந்த பாசம் பதிவில் தெரிகிறது. உங்கள தந்தைக்கு என்னுடைய வணக்கங்களும்.

  தங்கள் வட்ட வடிவ வாட்சும், அதை நீங்கள் பத்திரமாக வைத்திருப்பது பற்றியும் கூறிய போது, எங்கள் அப்பா எனக்கு திருமணம் ஆன பிறகு எனக்கு ஒரு வாட்ச் வாங்கி தந்ததும் என்னிடம் அது இருப்பதும் (ஆனால் ஓடாமல்) நினைவுக்கு வருகிறது.
  நீங்கள் அந்த வாட்சை பத்திரமாக பார்த்து வைத்துக் கொண்டிருந்தது மகிழ்வான விஷயம்.
  அப்பாக்களின் அன்பு அளப்பரியது. நம் நலன்களுக்காக தினமும் பார்த்துப் பார்த்து உழைப்பவர்.அருமையான தங்கள் தந்தையைப் பற்றி அறிந்து கொண்டேன்.

  தங்கள் அப்பாவுக்கு பிடித்தமான அந்த திருவிளையாடல் பாட்டு மிக நன்றாக இருக்கும். டி. எஸ் பாலையா அவர்களின் நடிப்பும் தத்ரூபமாக அந்த ஹேமநாத பாகவதரை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும்.

  தங்கள் கணவர் வெகு பொருத்தமாய் பொருட்காட்சி படம் வரைந்துள்ளார்.படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. அவரின் திறமைக்கு என் வந்தனங்கள்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
  என் தந்தைக்கு வணக்கங்கள் சொன்னது மகிழ்ச்சி.
  அப்பாக்களின் அன்பு அளப்பரியது தான் நீங்கள் சொல்வது போல் குடும்பநலனுக்கு நாளும் உழைப்பவர், எண்ணமும் குடும்பத்தை சுற்றியே இருக்கும்.

  //டி. எஸ் பாலையா அவர்களின் நடிப்பும் தத்ரூபமாக அந்த ஹேமநாத பாகவதரை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும்.//
  பாலையா அவர்கள் எந்த பாத்திரமாக இருந்தாலும் நன்றாக நடிப்பார், இந்த படத்தில் அவரின் நடிப்பு அற்புதம்.

  சாருக்கு வந்தனங்கள் சொன்னதற்கு நன்றி.
  பதிவை படித்து அன்பான கருத்தை சொன்னதற்கு நன்றி.
  பதிலளிநீக்கு
 16. நல்ல பாடல்களோடு அப்பாவின், நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். கடிகாரத்தை பற்றிய நினைவுகள் அப்பாவின் நினைவுகளுக்கு இழுத்துச் சென்று விட்டது இல்லையா? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   ஆசியா போற்றி பாதுகாக்கும் பொருளும் அதன் காரணமும் கேட்டு இருந்தார்கள். அதில் அப்பா வாங்கி கொடுத்த வாட்சும், அதன் காரணமும் எழுதினேன்.
   நினைவு நாளில் அதையே மீள் பதிவாக்கி விட்டேன்.
   அப்பாவின் நினைவுகள் ஒவ்வொரு நாளும் இருக்கிறது. சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் அம்மா அம்மா என்பார்கள். நான் அப்பா அப்பா என்பேன் நினைவுகளில் என்றும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி .

   நீக்கு
 17. வாட்ச் பற்றிய என் நினைவுகளையும் பதிவில் கொண்டுவர வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
   உங்கள் நினைவுகளையும் பதிவு செய்யுங்கள்.
   கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 18. அந்நாளில் வாட்ச் கட்டிக் கொள்வது ஒரு ஆனந்தம். அது குறித்த நினைவலைகள் அருமை. sir வரைந்த ஓவியம் சிறப்பு. தங்கள் அப்பாவைப் பற்றிய நினைவுகளும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   அந்நாளில் சிறுமியாக இருக்கும் போது ஜவ் மிட்டாய்க்காரரிடம் மிட்டாய் வாட்ச் கட்டி மகிழ்வோம். அப்புறம் பொருட்காட்சிகளில் விளையாட்டு வாட்ச், அப்புறம் நிஜ வாட்ச் கட்டும் மோகம். இப்போது மணி அலைபேசியில் பார்த்துக் கொள்கிறோம்.
   இப்போது வாட்ச் தேவையில்லாமல் போய் விட்டது.

   மீள் பதிவுதான் ராமலக்ஷ்மி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. ஆம், ‘டிக் டிக் கடிகாரம்’ பதிவையும் முன்னர் வாசித்துக் கருத்திட்டிருக்கிறேன் :).

   வழக்கம் காரணமாக நான் இப்போதும் வாட்ச் இல்லாமல் வெளியே செல்வதில்லை. அதே போல விதம் விதமாக வாட்ச் வைத்துக் கொள்ளும் வழக்கமும் உள்ளது :).

   நீக்கு
  3. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   நானும் வித விதமாய் வாட்ச் வாங்கினேன் ஆசைப்பட்டு, இப்போது கட்டுவதே இல்லை.
   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 19. தாங்கள் சொன்னதற்குப் பிறகே கவனித்தேன்..

  மாலையில் அறைக்குத் திரும்பும்போது இணையம் கிடைக்காது...

  அலுவலக கணினியில் தமிழ் எழுத்துரு இயங்காது...

  கையிலுள்ள சாம்சங்கில் கட்டை விரலால் தட்டுவதற்குள் பற்பல எழுத்துப் பிழைகள்..

  அப்பா.. யாருடைய அப்பாவாக இருந்தாலும் நினைவுகள் சுமையானவை...

  மார்கழி வருவதற்குள் பதிவில் தருவதற்கு முயற்சிக்கிறேன்...

  தந்தையைத் தாங்கள் நினைவு கூர்ந்திருக்கும் விதம் கண்கள் கசியச் செய்கின்றது...

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
  நினைத்தேன் இணையம் சரிவர வேலை செய்யவில்லை என்று.
  நாம் ஒன்று அடித்தால் அது வேறு ஒன்று அடிக்கும் முந்திரி கொட்டையாக.(அலைபேசி)
  அப்பாவின் நினைவுகள் மகிழ்ச்சியும், துன்பமும் கலந்தது.

  மார்கழி வருவதற்குள் உங்கள் அப்பாவின் நினைவுகளை பதிவு செய்ய போகிறீர்களா? மகிழ்ச்சி.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு