சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்தேன் பின்னூட்டத்தில்.
நெல்லைத் தமிழன் அவர்கள், நீங்களும் பதிவு ஒன்றை வெளியிடுங்கள் , ஆதீனங்களைப் பற்றிய பதிவில் உங்கள் கணவரது கருத்துக்களும் இடம் பெறட்டும் என்றார்கள்.
கீதா சாம்பசிவம் அவர்களும் தருமைஆதீனத்துடன் உங்கள் கணவருக்கு தொடர்பு உண்டே ! என்று சொன்னார்கள். சார் அங்கு பணி புரிந்த நினைவு அவர்களுக்கு வந்து இருக்கிறது.
நான் என் கணவரிடம் சொன்னேன், நேற்று முழுவதும் அவரைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தார்கள். அதைப் பதிவாக்கச் சொன்னேன். முகநூலில் அவர்கள் பக்கத்தில் பதிவு செய்தார்கள்.
கீதா சாம்பசிவம் அவர்களும் தருமைஆதீனத்துடன் உங்கள் கணவருக்கு தொடர்பு உண்டே ! என்று சொன்னார்கள். சார் அங்கு பணி புரிந்த நினைவு அவர்களுக்கு வந்து இருக்கிறது.
நான் என் கணவரிடம் சொன்னேன், நேற்று முழுவதும் அவரைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தார்கள். அதைப் பதிவாக்கச் சொன்னேன். முகநூலில் அவர்கள் பக்கத்தில் பதிவு செய்தார்கள்.
அதை இங்கே உங்கள் பார்வைக்கு.
தருமபுர ஆதீனம் , 26ஆம் குருமகா சந்நிதானம் அவர்கள் சித்தியடைந்த நிலையில்
எனது நெஞ்சில் நிறைந்த நினைவுகள்
எனது பெரிய தந்தையார் திரு.இராமலிங்கஓதுவார் அவர்கள் சிதம்பரத்தில் தேவாரப்பாடசாலையில் தேவார ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவர்களிடம் 26ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் பயின்றுள்ளார்கள்.இதனைச் சந்நிதானம் அவர்கள் அவ்வப்போது நினைவு கூர்ந்து என்னிடம் உரையாடுவார்கள். எனது பெரிய தந்தையாரின் வமிசாவளியினர் இப்போது என்னசெய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவ்வப்போது என்னிடம். வினவுவார்கள்.
எனது தந்தையார் சிவபூசைச்செல்வர் ,தமிழ்வித்வான் திரு. எஸ் அருணாசலம் பிள்ளையவர்கள் கோவையில் தேவாரப்பாடசாலையில் ஆசிரியராக இருந்து ஆன்மிகப்பணிகளில் ஈடுபட்டு 105 வயது வரை வாழ்ந்தார்கள்.அவர்கள் பல திருமடங்களின் சிறப்புப் பெற்று விளங்கி அவர்களின் இறுதிக்கால கட்டத்தை அடைந்த நிலையில், “அவர்களுக்கு நமது திருமடத்தின் சார்பாகச் சிறப்புச்செய்ய விரும்புகிறேன். அவர்களை இங்கு அழைத்து வர இயலுமா?” என்று என்னிடம் மகாசந்நிதானம் வினவினார்கள். பயணம் மேற்கொள இயலாமை காரணமாக எனது தந்தையார் அச்சிறப்பினைப் பெறவியலாது போயிற்று.
பூம்புகார்க்கல்லூரியில் இருந்து பணி ஓய்வு பெற்றபின் தருமபுரம் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். இதனால் சந்நிதானம் அவர்களை அடிக்கடி தரிசிக்கும் வாய்ப்புக்கிட்டிற்று. கல்லூரியில் நடைபெறும் விழாக்களிலும், மடத்தில் நடைபெறும் விழாக்களிலும் என்னை உரையாற்றப் பணித்தருள் செய்தார்கள்..
ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று எதேனும் ஒருதலைப்பில் ஒருவரைத் திருமடத்தில் உரையாற்றப்பணிப்பார்கள். சன்னிதானம் எழுந்தருளுகின்ற அவ்வறையிலேயே ஏறக்குறைய பதினைந்து அன்பர்கள் கலந்து கொள்ளும் சிறிய கூட்டம் அது. உரைமுடிந்தபின் தனது ஆய்வுக்கருத்தினைக் கூறுவார்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உன்னிப்பாகக் கேட்டுச் சேர்க்க வேண்டிய கருத்தையும் விடுக்கவேண்டிய கருத்தையும் கூறித் திருத்துவார்கள். ‘திரிகடுகம்’ என்னும் தலைப்பில் ஒருமுறை அவர்களது முன்னிலையில் உரையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
சந்நிதானம் அவர்களைக் கண்டு ஆசிபெறவரும் அன்பர்கள் சற்றுக்காத்திருக்க நேர்ந்தாலும் உள்ளே சென்று உரையாடி மகிழ்ந்து ஆசி பெற்று மிகுந்த மனத்திருப்தியுடன்தான் வெளியே வருவார்கள். எவ்வளவு நேரம் கடந்தாலும் அன்பர்கள் உணவருந்தாமல் மடத்தை விட்டு வெளியே வரமுடியாது.
மதுரையில் 2008 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களில் தருமையாதீனம் அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் நிகழ்த்திய அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டின்போது ‘திருக்கோயில் வழிபாடு’ என்னும் கருத்தரங்க அமர்வுக்கு இணைப்பாளராக இருக்கும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஜூலைத்திங்கள் 6, 7, 8 ஆகிய நாட்களில் சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்தில் தருமபுர ஆதீனம் நிகழ்த்திய “பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்றுவிழா”வில் குருமகாசன்னிதானம் அவர்கள் வெளியிட்டு ஆசியுரை தந்தபோது ஐந்தாம் திருமுறை உரையினை அறிமுகப்படுத்தி உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
தருமபுர ஆதீனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீசுவர சுவாமி திருக்கோயிலிலும், ஸ்ரீ துர்க்காதேவி திருக்கோயிலிலும் ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழாவின்போது திருமுறைக் கருத்தரங்குகளில் பங்குபெறும்போது அவர்களிடம் ஆசிபெறும் வாய்ப்புக்கிட்டும். அவ்விழாக்காலங்களின்போது அவர்களிடம் இலைவிபூதி பெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.
தருமபுர ஆதீன வெளியீடான “ஞானசம்பந்தம்” என்னும் மாத இதழில் எனது கட்டுரை இடம்பெற அருளிச்செய்தார்கள்.அவ்விதழில் வரும் கட்டுரைகள் அவர்களால் ஆழ்ந்து படித்து ஒப்புதல் பெற்றபின்பே அச்சேறும்.
மதுரையில் மாநாடு நடைபெற்றபோது தருமபுரத்தில் இருந்து பூரணகும்ப மரியாதைகளோடு திருமடத்துவாயிலில் இருந்து ஊர்தியில் எழுந்தருளி குருமகாசந்நிதானம் அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது அங்கே பலரும் கூடியிருந்த நிலையில் அவர்கள்,” இவர் எப்போது வருகிறார்?” என்று என்னைச் சுட்டிக்காட்டி வினவினார்கள்.”நாளை வருகிறேன் சுவாமி!” என்றேன். என்னை ஒரு பொருட்டாகக் கருதி அவர்கள் இவ்வாறு வினவியமை என்னை மிகவும் நெகிழச் செய்தது.
குருமகா சந்நிதானம் அவர்கள் சித்தி அடைந்த இச்சமயத்தில் இந்நிகழ்வுகள் யாவும் எனது நெஞ்சில் வந்து நிறைக்கின்றன.
----------------------------------------------------------------------------------------------------------------------------- -----------------------------------------------------------------------
தில்லையில் பன்னிரு திருமுறை உரைவெளியிடு முன்பாகத் திருநாரையூருக்குச் சந்நிதானம் எழுந்தருளிய போது நான் எடுத்த படங்கள்.
இப்படி குருமகா சந்நிதானம் அவர்களின் நினைவுகளை போற்றி பாதுகாக்க நான் எடுத்த படங்கள் நிறைய இருக்கிறது.
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுணடாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
--திருஞானசம்பந்தர்
-------------------------------------------------
தருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்களோடு தங்களது கணவருக்கு இருந்த அனுபவங்களை படித்து அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
தருமபுரம் குருமகா சந்நிதானம் பற்றிய தகவல்களும் உங்களவரின் அனுபவங்களும் சிறப்பு. படங்களும் பதிவுக்கு இணையாக சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
எவ்வளவு சிறந்த அனுபவங்கள்... வணங்குகிறேன் அக்கா.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
தருமபுரம் குருமஹா சன்னிதானம் பற்றிய, அவர்களுடன் சாருக்கு இருந்த தொடர்பைப் பற்றிய இந்த இடுகை மிகவும் நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குசாரின் பரம்பரை 'ஓதுவார்கள்' அவதரித்த பரம்பரை என்பதே நெகிழ்ச்சி ஊட்டுவதாக இருந்தது.
'இலை விபூதி' என்றால் என்ன?
தருமபுரம் ஆதீனத்தைப் பற்றியும் இன்னொரு இடுகை வெளியிடலாம். அவர்களது சிறப்பை எல்லோரும் அறிந்துகொள்ள வழிவகை செய்யும்.
சிவநேசச் செல்வரைப் பற்றிக் குறிப்பிட்ட பகுதியைப் படிக்கும்போது முன்பு நீங்கள் எழுதிய இடுகை என் நினைவுக்கு வந்தது.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குமகா சன்னிதானம் அவர்கள் பற்றிய சாரின் கருத்தை பதிவு செய்ய சொன்னீர்கள் செய்து விட்டார்கள். நனறாக இருப்பதாக சொன்னதற்கு நன்றி.
https://dharmapurammadaalayam.blogspot.com/2012/06/blog-post_14.html
தருமபுரம் ஆதீனம் இயற்றி வரும் பணிகள் இந்த சுட்டியில் போய் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.
நான் திருநாரையூர் பொல்லாபிள்ளையார் கோவிலில் ஆதீனம் அவர்கள் வருகையை எடுத்த படங்கள், சிதம்பரம் கோவிலில் எடுத்த படங்கள் . மாயவரத்தில் கல்லூரி விழாவில் எடுத்தது என்று படங்களை ஏதாவது சந்தர்ப்பத்தில் வெளியிடலாம்.
ஆதீனத்திற்கு வரும் முக்கிய மனிதர்களுக்கு பன்னீர் இலையில் விபூதி கொடுப்பார்கள்.
திருச்செந்தூரில் கட்டளைக்கு கொடுக்கும் போது கொடுப்பார்கள் கட்டளைக்காரர்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கும் கொடுக்கபடும்.
சிவநேச செல்வர் என் மாமனார் பற்றி நான் எழுதியதை நினைவு வைத்துக் கொண்டு சொன்னது மகிழ்ச்சி.
உங்களால் தான் இந்த இடுகை, உங்களுக்கு நன்றி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தேவாரத் தலங்கள் தோறும் வழிபாடுகள் நிகழ்த்தி அவ்வத்தலத் தேவாரத்தைப் புராண வரலாறுகளுடன் அச்சிட்டு வழங்குவது.
நீக்கு. ஆலயங்கள் பலவற்றிலும் நிகழும் பெருவிழாக்களில் சமய விரிவுரைகள், மாநாடுகள் நிகழ்த்திச் சமய தத்துவங்களை மக்கட்கு உணர்த்துவது.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கலைக்கல்லூரி அமைத்து மாணவர்களுக்குக் கல்வி நலம் தருவது.
. அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி மையம் நிறுவி அதன் வாயிலாகக் கடல் கடந்த நாடுகளிலும் நம் நாட்டிலும் வாழும் சமயம் சார்ந்த மக்கட்குச் சைவசமயப் பெருமைகளை அறிவுறுத்துவதோடு சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மாலை நேரக் கல்லூரி நடத்தி வருவது.
இவை தருமை ஆதீனத்தின் முக்கிய பணிகள்.
சிறப்பான தகவல்கள்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி .
மிக அருமையான தகவல்கள். நானே உங்களைக் கேட்கலாம் என்றிருந்தபோது நெல்லைத்தமிழரும், துரையும் கேட்டிருந்தார்கள். உங்கள் இருவரின் அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நீங்க மாயவரத்தில் இருந்தப்போ வரணும்னு ரொம்ப முயற்சி செய்தும் முடியாமல் போய்விட்டது. உயர்ந்ததொரு மனிதரின் அறிமுகமும் அவரோடு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்களும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குநெல்லைத்தமிழர், சகோ துரைசெல்வாரஜூ அவர்களும் எழுதுங்கள் என்றார்கள்.
அதனால் எழுதி விட்டார் சாரும்.
பூம்புகார் கல்லூரியில் வேலை பார்த்த போதே ஆதீனத்தில் விழாக்களில் பேச அழைக்கும் போது போய் பேசுவார்கள்.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு போவார்கள்.
சார் தருமை ஆதீனத்தில் வேலை பார்த்த ஆறு வருடங்களில் அடிக்கடி பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சாருக்கு கிடைத்த நற்பேறாக கருதுவார்கள்.
மதுரை வந்த பின்னும் கோவில் விழாக்களில் பேச அழைத்து இருக்கிறார்கள்.சாரும் போய் பேசி வந்து இருக்கிறார்கள்.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு தமிழ் வருடப்பிறப்புக்கு போவோம் ஆசி பெற.
இவை எல்லாம் மாயவரத்தில் இருந்ததால் கிடைத்தது.
மாயவரத்தில் இருந்த போது கோவில்கள் பார்ப்பதும் அதிகம்.மாயவரத்தில் இருந்த காலங்கள் இறைவாழிப்பாட்டிலேயே காலம் போனது.
நீங்கள் கோவில்களுக்கு வந்த சமயம் பார்க்க முடியவில்லை.
மதுரைக்கு நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
உங்கள் மைத்துனர் நலமா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
மைத்துனர் நலமே. மருத்துவமனையில் இருந்து விடுவித்திருந்தாலும் மருத்துவர் வீட்டுக்கு வந்து பார்க்கிறார். கவனிக்க ஒரு ஆள் போட்டிருக்கிறது. அவரால் இன்னும் 30 நாட்களுக்குத் தானாக எந்த வேலையும் செய்து கொள்ள முடியாது. ஃபிசியோதெரபிக்குத் தனியாக ஒருத்தர் வருகிறார்.
நீக்குவாழ்க வளமுடன் கீதாசாம்பசிவம், உங்கள் மைத்துனர் வீட்டுக்கு வந்து விட்டது மகிழ்ச்சி.
நீக்குஃபிசியோதெரபி செய்வதால் விரைவில் நலம் பெறுவார்கள்.
வந்து பதில் சொன்னது மகிழ்ச்சி, நன்றி.
சாரின் அனுபவபகிர்வு மிக அருமை அக்கா.நெகிழ்ச்சியான பதிவும் கூட.
பதிலளிநீக்குவணக்கம் பிரிசகி அம்மு, வாழ்க வளமுடன்
நீக்குசாருக்கு தன் தந்தையை பார்த்தது போல் இருக்கும்.
அதனால் தன் நினைவுகளை சொல்லிக் கொண்டே இருந்தார்கள் அவர் சித்தி அடைந்த அன்று. அதனால் எழுத சொன்னேன். எழுதினார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.
ஆதீனகர்த்தாக்கள் தலையில் ஜடை வைப்பது தேவையா ஆரோக்கியத்துக்கு நல்லதா
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
நீக்குஜி.எம்.பி. சார்... இந்தக் கேள்வியை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இது தாங்கள் மதிக்கும் ஒரு ஆன்மீகப் பெரியவர், மறைந்த நேரத்தில், அவருடைய சீடர்கள், தங்கள் மனதில் ஓடுவதைப் பதிவு செய்யும் இடுகை. ஆதீனகர்த்தர்களின் தமிழ் மொழி நேசம், மொழிக்கும் புலவர்களுக்கும் அவர்களுடைய ஆதரவு, சைவ சமயத்தின்மீது பற்று தொடர்ந்து எல்லோருக்கும் இருக்க அவர்களது பங்கு, அதே சமயம் மடத்தை நிர்வாகம் செய்யும் பண்பு என்று எவ்வளவோ இருக்க...... மரபாக அமைந்த ஒரு பழக்கத்தைப் பற்றிக் கேள்வி கேட்டிருக்கிறீர்களே...
நீக்குநல்லவேளை... பெண்களும் ஏன் ஜடை வளர்க்கிறார்கள், அது அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு இடைஞ்சலாக இல்லையா என்றெல்லாம் உங்கள் ஆராய்ச்சி செல்லவில்லை. அதுவரையில் மகிழ்ச்சி.
மாமாவின் அனுபவங்களைப் படித்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குஅந்த கோயிலைப்போல கோபுரம் கட்டி ஊர்வலம் வரும், வான் அழகு.
வணக்கம் அதிரா, வாழ்கவளமுடன்
நீக்குஅந்த ஞானரதத்தில் தான் அவர் பயணம் செய்வார்.
உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.
அன்பின் வணக்கம்..
நீக்குஅப்போதே கணித்திருந்தேன்..
சரியாகத் தான் இருக்கிறது...
ஆனாலும் சில விஷயங்களைப் பொது வெளியில் சொல்ல முடியாது...
வைத்தீஸ்வரன் கோயில் மண்டலாபிஷேகக் கிருத்திகையின் போது குரு ஸ்வாமிகளை இரு முறை தரிசனம் செய்திருக்கிறேன்...
ஆயினும் ஸ்வாமிகளை திருமடத்தில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் நிறைவேறாமல் போய்விட்டது....
செப்டம்பரில் வைத்தீஸ்வரன் கோயில் திருப்பணியைத் தொடங்கி வைத்தபோது மிகவும் தளர்ந்திருந்தார்கள்..
ஸ்வாமிகளின் நல்லாசி அனைவரையும் வாழ்விப்பதாக....
பதிவில் என்னையும் சொல்லியது கண்டு மனம் நெகிழ்ந்தேன்..
நீக்குமகிழ்ச்சி... நன்றி...
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்
நீக்குசிலரின் கணிப்புகள் சில நேரம் சரியாக இருக்கும்.
உடல் நலம் குன்றி இருந்தார்கள். அதனுடன் இறை பணிகளை ஆற்றி வந்தார்.
நீங்கள் இரு முறை தரிசனம் செய்து இருப்பது மகிழ்ச்சியே.
ஸ்வாமிகளின் நல்லாசி அனைவரையும் வாழ்விக்கும் தான்.
எனது கணிப்பு தங்களது குடும்பத்தினரைப் பற்றியது...
நீக்குதங்களது எழுத்துக்களும் பண்பு சார்ந்த மரபு வழியும் சிற்றுயிர்களிடத்து மாறாத அன்பும் அவைகளாக அடைக்கலம் தேடி வருவதும் இவற்றுக்கு எல்லாம் பின்னணியில் தொன்மை சிவத் தொண்டு இருத்தல் வேண்டும்.. - என்று கணித்திருந்தேன்...
முன்னைத் தொல் வினையில் சிவ வழிபாடு செய்தவர்களுக்கே ஐயனார் குலதெய்வமாக அமைவார்....
அவ்விதமாக தங்களுக்கு அமைந்துள்ளது...
தங்களையெல்லாம் கண்டு அளவளாவுதற்கு ஆவல் உள்ளவனாக இருக்கிறேன்...
வாழ்க நலம்...
உங்கள் கணிப்பு எங்கள் குடும்பத்தை பற்றியா?
நீக்குஎங்கள் மாமனார், மாமியார் குடும்பம் சிவத்தொண்டு புரிந்தவர்கள்தான்.
மாமனார், அண்ணன் சிதம்பர கோவிலில் தேவாரம் பாடுவார்கள். தேவார பாடசாலையில் ஆசிரியராக இருந்தார்கள்.என் மாமனார் தேவார ஆசிரியர், பள்ளியில் தமிழ் வித்வான். தலமை ஆசிரியர்.
//முன்னைத் தொல் வினையில் சிவ வழிபாடு செய்தவர்களுக்கே ஐயனார் குலதெய்வமாக அமைவார்....//
அப்படியா! மகிழ்ச்சி.
//தங்களையெல்லாம் கண்டு அளவளாவுதற்கு ஆவல் உள்ளவனாக இருக்கிறேன்...//
அடுத்தமுறை ஊருக்கு வரும் போது வாருங்கள்.
உங்கள் மீள் வருகைக்கு நன்றி.
"அன்புள்ள அப்பா " பதிவில் உங்களை காணவில்லையே!
பதிலளிநீக்குவேலைகள் அதிகமாய் இருக்கிறதா?
நீங்களும், நெல்லைத் தமிழன் அவர்களும் கேட்டு கொண்டதால் இங்கு
குருமகா சந்நிதானம் அவர்களைப் பற்றி சொல்லமுடிந்தது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நல்ல பதிவு. உங்கள் குடும்பத்தில் எல்லோருமே தமிழ் தொண்டாற்றியவர்கள் என்பது அறிய மகிழ்ச்சி. குருமகா சன்னிதானம் அவர்களின் பண்புகளை அறிய நெகிழ்ச்சியாக இருந்தது.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநல்ல அருமையான பதிவு. தாங்கள் அனைவரும் இறை தொண்டுகள் செய்து சுவாமிஜியின் அருளை பெற்றிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தருமை ஆதீனத்தின் விபரங்களும்,குருமகா சன்னிதானம் அவர்களின் பண்புகள் பற்றியும் தங்கள் அருளால் அறிந்து கொண்டேன். மடத்தைப்பற்றிய செம்மைகளை அழகாக விளக்கி, தமிழ் தொண்டுடன், இறையுணர்வும்,மேலும் குருவிடம் பக்தி மார்க்கத்திலும் அதிகம் அனுபவங்கள்ப் பெற்ற தங்கள் கணவருக்கு என் பணிவான நமஸ்காரங்கள். பகிர்ந்த தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களின் இந்தப் பதிவுக்கு வர சற்று தாமதமாகி விட்டதற்கு வருந்துகிறேன். மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குநேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொல்லுங்கள் கமலா.
நாம் குடும்ப பொறுப்பில் இருக்கிறோம், முன்னே பின்னே ஆனால் பரவாயில்லை.
இறையருளால் மாயவரத்தில் இருந்ததால் கிடைத்த பேறு.
அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்று நாட்கள் போகிறது.
உங்கள் வணக்கத்தை என் கணவரிடம் தெரிவித்து விட்டேன்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
அனைவருக்கும் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது. இத்தகைய பேறு பெற்றவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
தருமபுரம் குருமகா சந்நிதானம் ஸ்வாமிகள் பற்றி அரிய , இனிய நினைவுகள் மா ...
பதிலளிநீக்குவணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.