திங்கள், 21 ஜனவரி, 2019

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

இன்று தைப் பூசம் எல்லோரும் பதிவு போடுகிறார்கள் முருகனை நினைந்து.


நான் ஜனவரி 1ம் தேதி பழமுதிர்சோலை போய் வந்தேன்.  அங்கு எடுத்த படங்களை இந்தப் பதிவில்  போட்டு மனத் திருப்தி அடைகிறேன்.


எதிர்ப் பக்கம் போனால் நன்றாக எடுக்கலாம் கோபுரத்தை ஆனால் கோபுர வாசலில் வரிசையில் நின்று இருந்தேன். உள்ளே செல்ல . அங்கு இருந்தே எடுத்த படம்.



                                          அழகான  மலர் அலங்காரம்
  இதுவரை ஜனவரி 1 ம் தேதி போனது இல்லை. கூட்டம் கூட்டம்! எங்கும் அரோகரா என்ற சத்தமும் கோவிலில் நிறைந்து இருந்தது. எப்படி முருகனைத் தரிசனம் செய்யப்போகிறோம் என்று மலைத்து நின்றபோது விளக்குகள் விற்கும் பையன் 200 ரூபாய் கொடுங்கள்  100ரூ டிக்கட் இரண்டு நான் எடுத்துத் தருகிறேன் அங்கு கூட்டம் இல்லை போங்கள் என்று சொல்லி டிக்கட் வாங்கித் தந்தார்.


அவருக்கு நன்றி சொல்லி விரைந்தோம், 100 ரூபாய்  டிக்கட் எடுத்தவர்கள் வரிசையை நோக்கி. அங்கு 15 பேர் நின்றார்கள். சிறிது நேரத்தில் உள்ளே போனதும் முன்னால் அமரவைத்தார்கள் ,கண் நிறைய, மனம் நிறைய முருகனைத் தரிசனம் செய்தோம். பூஜை காட்டினார்கள் , விபூதி பிரசாதம், பூ கொடுத்தார்கள்; போங்கள் அடுத்தவர்களுக்கு வழி விடுங்கள் என்றார்கள்.

அவ்வளவு அழகான அலங்காரம், தங்கக்கவசம், மற்றும் மலர் அலங்காரம் மிக அழகாய் இருந்தது.

பிரகாரம் சுற்ற முடியாத படி கூட்டம் நின்றார்கள்.

விழா மண்டபத்தில் உற்சவர்கள் இருக்கும் இடம் போனோம். அங்கு சிலர் நின்றார்கள் . சிறிது நேரத்தில் உற்சவரைத் தூக்கிச் செல்லும் பல்லக்கில் அமரவைத்தார்கள். அலங்காரம் செய்து பூஜை காட்டப்பட்டதும்  தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

அப்போது அங்கு ஒருவர் வேலவன் டிரேடர்ஸ் என்று போட்ட  மலேஷிய முருகன் படம் போட்ட தினக்காலண்டர் கொடுத்தார் . நன்றி சொல்லி வாங்கி சிறிது தூரம் முருகனுடன் சென்று  இந்த ஆண்டு நலமாக இருக்க அருள வேண்டும் என்று வேண்டி வந்தோம்.





அறுபடை முருகரும் இந்த மதில் சுவரில் இருக்கிறார்கள். வணங்கிக் கொள்ளுங்கள் அறுபடை வீட்டை வணங்கியமாதிரி இருக்கும், தைப்பூச நாளில்.

தைப்பூச நாளில் காலையில் போக முடியவில்லை கோவிலுக்கு. மாலையில் போய் வந்தோம். ஜெயநகர் பிள்ளையார் கோவிலில்  போய்முருகனைத்  தரிசனம் செய்து வந்தோம்.

சிவனும் சக்தியும் இணைந்து ஆடிய நாள் தைப் பூசம் என்கிறார்கள்.
                                              முருகன் வள்ளி தெய்வானையுடன்.

காலை 10 மணிக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்து விட்டார்களாம். பால் கொண்டு வந்தவர்களிடம் வாங்கி வேலுக்கும், சேவல் கொடிக்கும் அபிஷேகம் செய்தார். அதனால் இந்தப் படத்தில் வேலும், சேவல் கொடியும் இல்லை.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

                                                              வாழ்க வளமுடன்.

38 கருத்துகள்:

  1. அந்த முருகனே விளக்கு விற்கும் சிறுவன் வடிவில் வந்து தரிசனத்துக்கு அருள் செய்தாரோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொன்னது போல் மலைத்து நின்ற எங்களுக்கு முருகன் மாதிரி வழிகாட்டினார் விளக்கும் விற்கும் பையன் என்று தான் நினைத்தோம் ஸ்ரீராம்.
      அதை இங்கே குறிப்பிட கஷ்டபட்டேன் உங்கள் மூலம் முருகன் சொல்ல சொல்கிறான்.

      நீக்கு
  2. நான் அங்கு வந்திருந்தபோது எதிர்திசையில் நின்று முழு வடிவமும் வருமாறு படம் எடுக்க முஅயற்சி செய்தேன். பல வருடங்களுக்கு முன்னால் இருந்த கோவிலுக்கும் இப்போது இருக்கும் கோவிலுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் , எதிர்திசையிலிருந்து படங்கள் எடுத்து இருக்கிறேன். அவை இருக்கிறது . புதுபடங்கள் போடவேண்டும் என்பதால் அதை போடவில்லை.
      நிறைய மாற்றங்கள் இப்போது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. கோமதி அரசு மேடம்... இந்த மாதிரி சமயங்களில்தான் (இந்த மாதிரி பக்தர்களுக்கும்) 100 ரூ, 50 ரூ டிக்கெட் மிக உபயோகமா இருக்கும். சில சமயம் ரொம்ப நேரம் நிற்க முடியாது.


    அறுமுகனின் தரிசனம் அருமை. உங்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது. இந்த வருடம் சிறப்பாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.

      மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 100 டிக்கட் வாங்கி மார்கழி திருவாதிரைக்கு போய் விட்டு சொக்கனை தரிசனம் செய்து வந்தோம். மீனாட்சியை தரிசனம் செய்யமுடியவில்லை கூட்டம் அப்படி.

      நடராஜரை முக்கியமாய் அன்று தரிசனம் செய்யவேண்டும் செய்து விட்டோம் வா என்று அழைத்து வந்து விட்டார்கள்.நீங்கள் சொல்வது போல் ரொம்ப நேரம் நிற்க முடியாத காரணத்தால்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. நானும் தரிசித்தேன்
    முருகனுக்கு அரோகரா
    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. அழகான படங்கள் மா....

    சிறு வயதில் பழமுதிர்ச்சோலை சென்ற நினைவு.

    தைப்பூச நாளில் சிறப்பான தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
      நேரம் கிடைக்கும் போது குடும்பத்துடன் வாங்க முருகனை தரிசனம் செய்ய .
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  6. பழமுதிர்ச்சோலை உள்பக்கம் இன்றுதான் பார்க்கிறேன் அழகாக இருக்கிறது.. மற்றக் கோயில்கள்போல பெரிதாக இல்லைப்போல தெரியுது.

    வள்ளி தெய்வானை சமேதரராய் வீற்றிருக்கும் காட்சி மிக அழகு.. வள்ளியின் கழுத்தில் வைர அட்டியலைக் காணம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      பழமுதிர்ச்சோலை சின்ன கோவில்தான், பல வருடங்களுக்கு முன் மிகவும் சின்னதாக இருந்தது. இப்போது பரவாயில்லை பெரிது படுத்தி இருக்கிறார்கள். கூட்டம் தாங்காது.

      அன்று நாங்கள் போன போது பழனிக்கு பாதயாத்திரை போகும் கூட்டம், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் , புத்தாண்டுக்கு வழக்கமாய் வரும் கூட்டம் என்று நிறைய இருந்தார்கள்.

      நாங்கள் காலை சீக்கீரமாய் போனதால் கூட்டம் குறைச்சல், நேரம் ஆக ஆக கூட்டம் தாங்காது என்றார்கள் குருக்கள். எல்லோரும் மூலவரை பார்க்கத்தான் கூட்டம் உற்சவர் இருக்கும் பக்கம் கூட்டம் இல்லை. அமர்ந்து முருகன் பாடல்களை பாடி வந்தோம். கூட்டம் சமயத்தில் வைர அட்டிகை போட மாட்டார்கள் போலும்.
      மூலவர்களுக்கு நகைகள் நிறைய போட்டு இருந்தார்கள். வள்ளி அதிராவை வைர அட்டிகை கேட்டுவிட போகிறார்.

      நீக்கு
  7. //அறுபடை முருகரும் இந்த மதில் சுவரில் இருக்கிறார்கள். வணங்கிக் கொள்ளுங்கள் அறுபடை வீட்டை வணங்கியமாதிரி இருக்கும், தைப்பூச நாளில்.//

    இன்று மிகவும் ரயேட்டாக இருந்துது, தலைப்பை மட்டும் பார்த்து விட்டு நாளைக்கு வந்து கொமெண்ட்ஸ் போடலாம் என எண்ணி விட்டு ஒரு ரீ குடிச்சேன்ன்.. அந்த உசாரில ஏதோ ஒரு உந்துதல் , இல்லை இப்பவே கொமெண்ட்ஸ் போட்டிடுவொம் என.. வந்தால் இப்படி போட்டிருக்கிறீங்க.. முருகனின் அருள்தானோ என நினைச்சேன்ன்.. இல்லை எனில் தைப்பூச நாளில் பார்த்திருக்க மாட்டேனெல்லோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      உங்களை புத்துணர்ச்சி ஆக்கி பார்க்க வைத்தது முருகனின் அருள்தான்.
      தைபூசநாளில் பார்த்து விட்டீர்கள். கீழ் இருக்கும் இரண்டு படங்களும் தைபூசநாளில் உள்ள அலங்கார படம் தான் நேற்று எடுத்த படங்கள்.

      நீக்கு
  8. tஹைப்பூசம் என்பது முருகனுக்கானதுதானே..

    //வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!//

    அரோகரா.. அரோகரா... அழகிய தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தைபூசம் முருகனுக்கானதுதான் ஆனால் அவரை எந்த நோக்கத்திற்கு அவதரிக்க வைத்தார்களோ அதற்கு அச்சராம் போட்ட நாள் என்கிறார்கள்..
      தைபூச நாளில் வேலை வணங்குவது மிகவும் சிறந்தது. அந்த வேல்தான் வினைகளை தீர்க்க பார்வதியால் முருகனுக்கு வழங்கப்பட்டது.
      சிவன்,பார்வதிக்கும் மிகவும் உகந்த நாள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  9. நானும் நேற்று உங்கள் பதிவின் மூலம் பழமுதிர்ச்சோலை வந்து தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.படங்கள் மூலம் தரிசித்தாலும் மனதிற்கு மிக்க ஸந்தோஷமாக இருந்தது. நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்.
      நீங்கள் வந்து தரிசனம் செய்தது மகிழ்ச்சி.
      அன்பான கருத்துக்கு நன்றி.
      நீங்கள் வந்து கருத்து சொன்னால் உற்சாகம் எனக்கு.

      நீக்கு
  10. மால் மருகனைப் பற்றி மயக்கும் பதிவு. உங்கள் பக்திப் பரவசம் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது.. நன்றி, கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
      கூட்டு வழிபாட்டின் நோக்கமே அதுதானே!
      ஓருவரின் பக்தி அனைவரையும் ஒன்று சேர்க்கும் அப்புறம் எல்லோரும் பக்தி பரவசம் என்ற ஜோதியில் கலந்து இறைவனை வேண்டுவார்கள்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சார்.

      நீக்கு
  11. அருமையான தரிசனம் சகோதரி. மதுரையில் இருந்த போது பழமுதிர்ச்சோலை போயிருக்கிறேன் பல வருடங்கள் முன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. தைப்பூச தரிசனம் அருமை. படங்கள் வெகு அழகு. எத்தனையோ வருடங்களுக்கு முன் சென்றதுண்டு. முருகன் என்றுமே அழகுதானே!

    கோபுரம் நன்றாகத்தான் இருக்கிறது கோமதிக்கா...நான் பார்த்ததற்கும் இப்போதைய உங்கள் படங்கள் பார்த்தால் நிறைய இத்தியாச இருப்பது போல் இருக்கு.

    அறுபடைவீடுகளையும் கண்டோம்! தரிசனம் மனதார செய்து கொண்டாயிற்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. புதுவருடப் பிறப்பின் போது நல்ல தரிசனம் கிடைக்கப் பெற்றிருக்கிறீர்கள். எங்களுக்கும் காணத் தந்தமைக்கு நன்றி. ஜெயநகர் கோவிலில் அலங்காரம் அருமை. வேலும், சேவற்கொடியும் இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      புதுவருடப் பிறப்புக்கு மாயவரத்தில் இருக்கும் போது கங்கைகொண்ட சோழபுரம்.கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்து விடுவோம், பழமுதிர்சோலையில் கூட்டம் பார்த்து மலைத்தாலும் முருகன் கருணை காட்டி தரிசனம் தந்தது மகிழ்ச்சி.

      வேலும், சேவற் கொடியும் இருந்தால் மிக அழகாய் இருந்து இருக்கும், அதை அபிஷேகம் செய்ய வாளிக்குள் வைத்து இருந்தார். அதனால் எடுக்க முடியவில்லை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. ஒவ்வொரு படமும் அழகோ அழகு...

    நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    நலமா? தங்கள் பதிவின் மூலம் முருகனின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நானும் நிறைய ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலத்தில் இருக்கும் போது பழமுதிர் சோலைக்கு இரு தடவைகள் சென்றிருக்கிறேன். இப்போது நீண்ட இடைவெளியினால் அவ்வளவாக இடங்களும் நினைவிலில்லை. ஆனால் நான் சென்ற போது இருந்ததை விட இப்போது கோவிலில் மாற்றங்கள் நிறைய வந்திருக்கும். நீங்கள் நல்ல தரிசனம் செய்து வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களின் சிரமத்தை குறைக்க அவனருள் தங்களுக்கு கிடைத்திருக்கிறது. அழகான படங்கள் கண்ணுக்கு நிறைவாய் இருந்தது. தங்களால் நானும் தரிசித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் கமலா, வாழ்க வளமுடன்.
    நலம். போன பதிவில் உங்களை பார்க்கவில்லை, நலம்தானே?
    முன்பு போல் இல்லை மாற்றங்கள் நிறைய இருக்கிறது.
    ஆமாம் ,அவன் அருளால் அவனை வணங்கி வந்தோம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நலந்தான். ஒரு வாரம் என்னால் வலைப் பக்கமே வர இயலவில்லை. நேற்றும் இன்றுமாகத்தான் அனைவரது பதிவுகளை பார்த்து படித்து கருத்துக்கள் தருகிறேன். இனியும் தொடர ஆண்டவன் அருள் வேண்டும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வணக்கம் கமலா, வாழ்க வளமுடன்.
      நலம் அறிந்து மகிழ்ச்சி.
      ஆண்டவன் அருள் புரிவார்.
      மீண்டும் வந்து பேசியதற்கு நன்றி.

      நீக்கு
  17. அழகான படங்களுடன் ...

    அருமையான தரிசனம் மா..

    அழகன் முருகன் படங்கள் வெகு அழகு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா, பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. வணக்கம் முனைவர் சார். வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  19. நாங்கள் கடைசியாகப் போனது 2009 ஆம் ஆண்டில். அதன் பின்னர் பழமுதிர்சோலையோ, திருப்பரங்குன்றமோ போகலை! நிறைய மாற்றங்கள் இருக்கும். முருகன் அழகோ அழகு! வள்ளி, தெய்வானையரோடு காட்சி அளிப்பதைப் பார்க்கப் பார்க்க மனதில் பரவசம். தைப்பூசத்துக்கு நாங்க எங்கேயும் போகலை! வீட்டிலேயே தொலைக்காட்சி மூலம் தரிசனம் செய்து கொண்டோம். முதல் நாள் தான் பரவாக்கரை, கருவிலி போய்விட்டு வந்ததால் முடியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

      //முதல் நாள் தான் பரவாக்கரை, கருவிலி போய்விட்டு வந்ததால் முடியலை!//

      அதனால் தான் நீங்கள் வடுக பைரவர் பதிவை படிக்கவில்லை.
      ஊருக்கு போய் வந்தால் ஓய்ச்சலாக இருக்கும்தான். ஓய்வு எடுங்க. இன்னும் எங்கோ போக போகிறீர்கள் போலவே ! மூன்று நாள் விடுமுறை கேட்டு இருக்கிறீர்கள்.

      பழமுதிர்சோலை நிறைய மாற்றங்கள் அடைந்து இருக்கிறது. நாங்களும் பக்கத்தில் உள்ள கோவில்தான் போய் வந்தோம், பழமுதிர்சோலை ஜனவரி 1 ம் தேதி போனதுதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. புதிய இடத்தில் வேலை... கொஞ்சம் அதிகம் தான்...

    எனவே உடனடியாக பதிவினைக் காண இயலவில்லை...

    கல்யாணம் ஆகி ஒரு மாதம் கழித்து சித்திரைத் திருவிழா காண்பதற்காக மதுரைக்குச் சென்றபோது - அழகர்கோயிலும் பழமுதிர்சோலையும் ராக்காயி அம்மன் சுனையும் தரிசனம் செய்தோம்...

    எத்தனையோ வருடங்கள் ஆகி விட்டன..
    பேத்தியும் பிறந்து அவளும் பாலர் பள்ளியில் சேர்ந்து விட்டாள்...

    மறுபடி சோலைமலை அழகனைக் காண வாய்ப்பு அமையவில்லை...

    இத்தனை ஆண்ட்யுகளில் எத்தனை எத்தனையோ புதிய கோயிகளைத் தரிசனம் செய்தாயிற்று..

    மனதில் இதுவும் ஒரு பாரம் தான்.. இதைச் சொல்லும் போது நெஞ்சம் விம்முகின்றது..

    அப்போது சின்னஞ்சிறிய சந்நிதி மட்டும் தான்..

    ஆறாவது படை வீடாகிய இத்தலத்தை ஒதுக்கி விட்டுத் தான்
    தெய்வம் என்று முருகன் புகழ் பரப்புதற்கு திரைப்படத்தை எடுத்தார்கள்..

    அப்புறமாக மருத மலையைச் சேர்த்து ஏழாவது படை வீடு என்றார்கள்..

    அது போகட்டும்...

    தங்கள் பதிவு கண்டு மலரும் நினைவுகள்.. ஆனாலும் முழுதாக மகிழ இயலவில்லை...

    உன்னையும் மறப்பதுண்டோ - முருகா.. - என்று மனம் உருகுகின்றது..

    அவனருள் அல்லாமல் ஆவதொன்றும் இல்லை!..

    வேலும் மயிலும் துணையாகும்.
    வினைப் பகை எல்லாம் தூளாகும்..
    நாளும் பொழுதும் நலமாகும்..
    நாயகன் பெயரே அமுதாகும்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      புதிய வேலைக்கு வாழ்த்துக்கள். வேலை அதிகம் என்றால் என்ன செய்யமுடியும்?
      பதிவு எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது வந்து படித்தால் ஆச்சு.

      //கல்யாணம் ஆகி ஒரு மாதம் கழித்து சித்திரைத் திருவிழா காண்பதற்காக மதுரைக்குச் சென்றபோது - அழகர்கோயிலும் பழமுதிர்சோலையும் ராக்காயி அம்மன் சுனையும் தரிசனம் செய்தோம்...//

      இனிமையான நினைவுகள இருக்கும் அப்படி யென்றால்.

      நாங்களும் முதன் முதலில் பழமுதிர்சோலைதான் போனோம், ஆனால் என்ன செய்வது நேரம் முடிந்து விட்டது என்று மேலே அனுப்ப முடியாது என்று சொல்லி விட்டார்கள். அப்போது படி ஏறிதான் மலை பாதையில் செல்ல முடியும். பஸ் போக்குவரத்து கார் போகாது.

      ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்.

      குடும்பத்துடன் ஒரு முறை வாருங்கள் கோவிலுக்கு. அவனை மறக்காமல் இருக்கும் பக்தரை காண அவரும் ஆவ்லுடன் இருப்பார்.

      //அவனருள் அல்லாமல் ஆவதொன்றும் இல்லை!..//

      அவனருள் இல்லாமல் என்ன நடக்கும் எல்லாம் அவன் செயல்.
      பாடல் அருமை.
      வேலும் மயிலும் தூணையாக வரும.
      வாழ்த்துக்கள்.
      கருத்துக்கு நன்றி.




      நீக்கு