திங்கள், 6 ஆகஸ்ட், 2018

ஆடிப்பெருக்கும் கோவில் விழாக்களும்

மாடக்குள அய்யனார் கோவில்  பிள்ளையார், துணைவிகளுடன் அய்யனார் , முருகன்

ஆடிப்பெருக்கு அன்று காலை எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவில் போனோம். பூக்கார அம்மாவிடம் இந்த  ஊரில் ஆடிப்பெருக்கு சமயம் ஆற்றுக்குப்  போகமாட்டீர்களா என்று கேட்டேன் இங்கு பழக்கம் இல்லை  என்றார் .மாடக்குள கண்மாயில் தண்ணீர் இருக்கா என்று கேட்டேன் இல்லைம்மா ஆனால்  மாடக்குள அய்யனாரைப்  பார்த்து வாருங்கள் அம்மா இன்று நன்றாக இருக்கும் அலங்காரம். கோவிலில் கூட்டம் இருக்கும் என்றார். வெகு நாட்களாக போக வேண்டும் என்று நினைத்து இருந்த கோயில்.


திரு. துரைசெல்வராஜூ அவர்கள் இங்கு நடக்கும் புரவி எடுப்பு விழாபற்றி  சொல்லி இருந்தார்கள், மதுரை கதம்பம் என்ற என் பதிவில்.(இந்த கோவிலுக்கு செல்லும் பெட்டி ஊர்வல காணொளிப்பகிர்வில்). நான் ஒரு நாள் இந்தக் கோவிலுக்குப் போய்ப்பார்த்துவிட்டுப் பதிவு போடுகிறேன் என்றேன். ஆடிப்பெருக்கு அன்று  அழைத்து விட்டார் அய்யனார்.

கோயிலுக்கு எதிரில் வருடா வருடம் புரவி எடுப்பு விழாவில் எடுத்த  புரவிகள்

 கோவில் மதில் சுவரில் ஒரு பக்கம் மீனாட்சி கல்யாணம், அஷ்ட லட்சுமி உருவங்கள்
மறு பக்கத்தில் அஷ்ட லட்சுமிகள் , சிவகுடும்பம் 


உட்புறம் அய்யனார்  உள்ள குதிரைகள்,  மாடு
உட்புற வாசல். புலி மேல் வரும் ஐயப்பன்
பெரிய கருப்பசாமி  

குதிரையின் கால்கள் இருக்கும் இரு குண்டோதரர்களுக்கு நடுவில் பச்சைக்காளி  அம்மன் இருக்கிறார்.


யானைகளில் முத்துக்கருப்பசாமி, சங்கிலிக் கருப்பசாமி இருக்கிறார்கள்.

ஊரைக் காக்கப் போகும்போது வேட்டை நாயும் வழித்துணையாக 
முத்துக் கருப்பணசாமி, இருளப்ப சாமி, சோணைச்சாமி,  ஸ்ரீநாகலிங்கம்
ஸ்ரீ ஆண்டி சாமி, சப்த கன்னியர், லாட சன்னாசி
பெரியகருப்பண்ணசாமி
சின்ன கருப்பண்ணசாமி
பெரிய கருப்பண்ணசாமி, சின்ன கருப்பண்ண சாமி இருவருக்கும் நடுவில் தெரியும் அய்யனார் சன்னதி.  பூரணகலை, புஷ்கலை ஆகிய இருமனைவிகளுடன் அழகாய் வீற்று இருக்கிறார் அய்யனார். முகம் மட்டுமே தெரிகிறது அவ்வளவு பூ மாலைகள் அவரை மறைத்து இருக்கிறது.அய்யனார் சன்னதி வாசலில் பிள்ளையார், முருகனுக்குத் தனிச் சன்னதி உள்ளது. அய்யனாரைச் சுற்றி வர பிரகாரம் உண்டு.
அய்யனார் கருவரையின் வெளிப்புற சுவரில் படங்கள் வரையப்பட்டு இருக்கிறது
பிரகாரச் சுவர் முழுவதும் ஓவியங்கள் வரைந்து இருக்கிறார்கள் ஆனால் அவை அழிந்து இருக்கிறது. அதனால் எடுக்கவில்லை.
அய்யனார் முன் புறம் ஈஸ்வரியும், ஈஸ்வரனும்  வேடனும் வேடச்சியாகவும் காட்சி அளிக்கிறார்கள்.
சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி உள்ள சன்னதி. சின்ன சாமியே பெரிதாக இருக்கிறார், அவரை விடப் பெரியவர் இன்னும் பெரிதாக இருக்கிறார்..


கேடயம், வாள் உடை வாள், அவர்கள் ஆடைகளின் மடிப்புகள், 
குதிரைத் தலை மீது பச்சைக்கிளி,  கிரீடம் எல்லாம் அழகு.
தூணில் ஏதோ பழத்தை கடிக்கும் குரங்கார்.
வெளியில் கபாலீஸ்வரி அம்மன் இருந்தார். இவரே கொஞ்ச தூரத்தில்  ஒரு மலையில் இருக்கிறார். நீங்கள் சீக்கீரம் வந்து இருந்தால் பார்க்கலாம், இப்போது வெயில் வந்துவிட்டது உங்களால் படி ஏறமுடியாது,  நீங்கள் போகும் போது பூட்டிவிடுவார்கள் இவர்களைக் கும்பிட்டுவிட்டுப் போங்கள் போதும் என்று ஒரு அம்மா கூறினார்கள்.

அவர்கள் எல்லாம் அய்யனாருக்கு குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்து விட்டு  கருப்பண்ணசாமிக்கு ஆடு பலி கொடுத்து இருப்பார்கள் போலும். ஒரு மரத்தில் ஆடு தலை கீழாகத் தொங்கவிடப்பட்டு இருந்தது . ஆண்கள்  ஆடுகளை வெட்டிக் கொண்டு இருந்தார்கள்.  

இந்தப் பக்கம் உள்ளவர்கள் ஆடி 18 க்கு குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கமாய் உள்ளது.

மாடக்குளக் கண்மாயைப் பார்த்துவிட்டு வரலாம் என்று  அப்படியே  போனபோது  கண்மாயின் நிலை,  வழியில் கண்ட விழாக்  கோலாகலம் , கபாலீஸ்வரி கோவில், மலையடிவாரத்தில் உள்ள கோயில் ஆகியவை அடுத்த பதிவில்.
                                                       வாழ்க வளமுடன்.

53 கருத்துகள்:

  1. நேரில் சென்றால் கூட இவ்வளவு கவனிப்போமா என்பது சந்தேகேமே... படங்கள் அவ்வளவு அருமையாக உள்ளன அம்மா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. எல்லாவற்றையும் நுணுக்கமாகக் கவனித்துப் படம் பிடித்துச் சொல்லி இருக்கிறீர்கள். அருமையா வந்திருக்கு படங்களும். அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன். எப்போவோச் சின்ன வயசில் இந்தக் கோயிலுக்குப் போனது. முன்னெல்லாம் மதுரையில் மாடக்குளம் கம்மாய்க் கத்திரிக்காய் ரொம்பவே பிரபலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      //மதுரையில் மாடக்குளம் கம்மாய்க் கத்திரிக்காய் ரொம்பவே பிரபலம்.//
      இப்போது அங்கு ஒன்றும் இல்லை, ஒரு சொட்டு தண்ணீர் இல்லை மாடக்குள கண்மாயில்.

      நீக்கு
  3. நான் பள்ளியில் படிக்கும்போதெல்லாம் புட்டுத் தோப்பில் ஆடிப்பெருக்குச் சாதங்கள் எடுத்துக் கொண்டு செல்வார்கள். பள்ளிகளெல்லாம் அரை நாள் லீவு விடுவார்கள். இப்போல்லாம் அது இல்லை போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா முன்பு சொல்லி இருக்கிறார்கள் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு பக்கத்து வீட்டாருடன் ஆடிப்பெருக்கு விழாவிற்கு போய் இருக்கிறேன் என்று.
      இப்போது அங்கும் தண்ணீர் இல்லை. எல்லோரும் வீட்டில் பைப் அடியில் பூஜை செய்து இருக்கிறார்கள். புட்டுத்தோப்பு கேள்விபடவில்லை. புட்டுத்தோப்பு பக்கம் வகை ஆறு இருப்பதால் அப்போது அங்கு போய் இருப்பார்கள் போலும்.
      தண்ணீர் இருந்து இருக்கும் போல! அப்போது.
      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  4. ஒவ்வொரு அய்யனாருக்கு ஒரு கதை இருக்குமே கேரள மக்கள்வழிபடும் சாஸ்தாதான் இங்கு அய்யனார் போல் இருக்கிறது ஆனால் அங்கெல்லாம் அய்யப்பன் சைவமாக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது போல் சாஸ்தா தான் இங்கு அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.
      எங்களுக்கும் குலதெய்வம் சாஸ்தா தான்.
      அவர் சைவம் தான், இங்கு ஆடு வெட்டபடுவது கருப்பண்ணசாமிக்கு, சாஸ்தாவிற்கு இல்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. எங்களுக்கும் குலதெய்வம் சாஸ்தாதான். பாலசாஸ்தா.

      நீக்கு
    3. எங்கள் சாஸ்தா பேர் களக்கோடி சாஸ்தா

      நீக்கு
  5. படங்கள், இடங்களை நேரில் பார்ப்பதுபோல் அருமையாக வந்திருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. இந்தக் கோவில் கேள்விப்பட்டதில்லை, சென்றதில்லை. டிடியும், கீதாக்காவும் சொல்லி இருப்பது போல நுணுக்கமாகக் கவனித்து ஒரு இடத்தையும் விடாமல் எல்லா இடங்களையும் படம் பிடித்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். மூலவர் சாஸ்தா, பெரிய கருப்பண்ண சாமி, சின்ன கருப்பண்ணசாமியை படம் எடுக்கவில்லை.

      நீக்கு
  7. நீங்கள் சொல்லி இருப்பது போல சின்னக் கருப்பசாமி, பெரிய கருப்பசாமி சிற்பங்கள் மிகவும் கலைநயத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில்தான் புதுப்புத்திருப்பார்கள் போலும். வெளுத்துப்போயிருக்காமல் புதுமெருகுடன் காணப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். கோவில் புதுபிக்க பட்டு இருக்கிறது என்று நினைக்கிறேன். மலையதுவச பாண்டியன் கட்டியது என்று வரலாறு சொல்லுது.

      மூலவர் சாஸ்தா கோவில் மட்டும் அவர் கட்டியாதாக இருக்கும் என்று நினைக்கிறேன், மற்றவை அப்புறம் கட்டியதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. எங்கெல்லாம் சப்தகன்னியரும் , ஜ்யேஷ்டா தேவியும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றனரோ அவை எல்லாமே பழமை வாய்ந்த கோயில்கள்.

      நீக்கு
    3. வாங்க கீதா, சப்தகன்னியர் , ஜ்யேஷ்டா தேவி பிரதிஷ்டை செய்யபட்ட கோவில் எல்லாம் பழமை வாய்ந்த கோவில்கள்தான். எங்கள் சாஸ்தா கோவிலும் சப்தகன்னியர் உண்டு.
      இங்கு சுற்று சுவர்கள், புதுபிக்க பட்டு இருக்கிறது.
      உங்கள் மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. **சின்னக்கருப்பண்ண சாமி, பெரிய கருப்பண்ண சாமி என்று படிக்கவும். தவறாக டைப்பி விட்டேன்!

    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னக்கருப்பசாமி, பெரிய கருப்பண்ணசாமி என்றும் அழைக்கிறார்கள். அப்படியே நானும் சில இடத்தில் பதிவில் போட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. துல்லியமான படங்கள்!! பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    ஒவ்வொரு படங்களும் மிக அருமையாக உள்ளன. நல்ல விபரமாக கோவிலைப் பற்றி தொகுத்து கூறியுள்ளீர்கள். பழமை வாய்ந்த கோவிலாக இருந்தாலும், எல்லாம் புது வண்ணத்துடன் பார்வைக்கு புதுசாகவே இருக்கின்றன. கோவில் நன்றாக பெரிதாக இருக்கிறது. அய்யனார் கோவில் பெரிதாக இருப்பதே ஒரு சந்தோஸந்தான். தங்கள் பதிவின் மூலம். நானும் அய்யனார் அருள் பெற்று கோவிலை தரிசித்த புண்ணியம் கிடைக்கப் பெற்றேன். அடுத்த பதிவையும்,
    படிக்க ஆவலாய் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      ஆண்டு விழா, மற்றும் விழாக்களில் புது வண்ணம் அடிப்பார்கள் கோவிலில். இந்த கோவிலை குலதெய்வமாய் கொண்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்வதால் கோயில் நன்றாக இருக்கிறது.
      கோவில் பக்கத்தில் உணவு சமைக்கவும் அமர்ந்து சாப்பிடவும் இடம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
      அய்யனார் கேட்கும் வரங்களை மகிழ்ந்து கொடுப்பவராம். அய்யனார் நிறைஞ்ச வாழ்வு தருவார் அனைவருக்கும்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. புகைப்படங்கள் அனைத்தும் அருமை, நல்ல தெளிவு. பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. இரு குண்டோதரர்களுக்கிடையே தெரியும் பச்சைக்கிளி அம்மன் படம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
      பச்சைக்காளி அம்மன் ராஜி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. படங்கள் கோயிலுக்கே அழைத்துச் சென்று விட்டன. மாடக்குளம் பிள்ளையார், அய்யனாருக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் தொடர் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  15. புகைப்படங்கள் மூலம் நாங்களும் கோவிலுக்கு வந்த உணர்வு. நன்றிம்மா....

    ஆடு பலி - பாவம் அந்த ஆடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் , வாழ்க வளமுடன்.
      இந்த கிராம மக்களுக்கு ஆடு, கோழி இவை இறைவனுக்கு பலி கொடுக்கும் வழக்கம் இருக்கே!
      என்ன செய்வது? பாவம்தான் ஆடுகள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. மாடக்குள அய்யனார் கோவிலை அழகிய படங்களுடன் தெரிந்துக் கொண்டேன் மா..


    படங்கள் எல்லாம் பளிச் பளிச்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. அருமையான கோயில் உலா. புதிய செய்திகள் பல தெரிந்துகொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் சார், வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. Jeevalingam Yarlpavanan Kasirajalingam "ஆடி மாதம் அம்மனுக்குத் திருவிழா" என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

      அருமையான பக்திப் பதிவு
      கோவிலைத் தரிசித்த நிறைவு

      நீக்கு
    3. வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam, வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  18. அருமையான பதிவு.

    அய்யனார், குதிரைகள், கருப்பசாமி சிலைகள் அனைத்தும் அழகாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. அன்பு கோமதி,
      எத்தனை படங்கள். ஆஹா. அத்தனையும் அழகும் அதற்கான
      விளக்கங்களும் கண்மாயில் நீர் வர் ஐய்யனாரே
      அருள வேண்டும்.
      குதிரைகளும் யானையும் தத்ரூபம்.
      குதிரைகளை செய்து ஒரு கோவிலுக்குக் கொண்டு வருவார்கள் நேர்த்திக் கடனாக. எப்பொழுதோ படித்திருக்கிறேன்.
      நம் நாட்டு பாரம்பர்யத்தை அழகாக விளக்கி வருகிறீர்கள்.
      மிக மிக நன்றி கோமதி.

      நீக்கு
  19. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    கண்மாயில் நீர்வர அய்யனாரே அருளவேண்டும் என்பது உண்மை.
    கிராமங்களில் பாரம்பர்யத்தை கடைபிடிக்கிறார்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  20. நாட்டார் தெய்வங்கள் வெகு அழகு. அவ்வப்போது குலதெய்வம் கோவிலுக்குச் செல்வோம். எனர்ஜியை புதுப்பித்தது போல் இருக்கும். பகிர்வுக்கு நன்றி கோமதி மேம்.

    பதிலளிநீக்கு
  21. மாடக்குளத்து ஐயனாரைத் தரிசிக்க இன்னும் நேரம் வாய்க்கவில்லை...

    அழகான படங்கள்..
    இனிதான பதிவு....

    ஐயனார் அனைவருக்கும்
    நிறைந்த வாழ்வைக் கொடுப்பாராக...

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.

    //குலதெய்வம் கோவிலுக்குச் செல்வோம். எனர்ஜியை புதுப்பித்தது போல் இருக்கும். //

    ஆமாம் தேனு, அடிக்கடி போக முடியவில்லை என்றாலும் பங்குனி உத்திரத்திற்கு எங்கள் பக்கம் குலதெய்வவழிபாடு உண்டு.
    நீங்கள் சொல்வது போல், புது இரத்தம் உடலில் பாய்ந்தது போல் தெம்பு கிடைக்கும், குலதெய்வவழிபாடு, உறவினர் சந்திப்பு இந்த இரண்டால் நலமாய் இருக்கலாம்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.

    //ஐயனார் அனைவருக்கும்
    நிறைந்த வாழ்வைக் கொடுப்பாராக...//

    நீங்கள் சொல்வது போல் ஐயனார் அனைவருக்கும் நிறைந்த வாழ்வு தரட்டும்.

    அடுத்தமுறை ஊருக்கு வரும் போது வாருங்கள் தரிசிக்கலாம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  24. மாடக்குளத்து ஐயனார் கோவிலுக்கு சென்றது இல்லை. மதுரைக்கு போகும் சமயம் பார்க்க வேண்டும் அம்மா.உங்கள் படங்களின் வாயிலாக தரிசித்து விட்டோம். ஐயானார் கோவில் உலா கண்டு களிப்புற்றேன். நன்றி

    பதிலளிநீக்கு
  25. இந்தப் போஸ்ட் ஐத்தான் நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் கோமதி அக்கா...

    படங்கள் அத்தனையும் அழகு.
    பத்திரகாளி அம்மன், கோபத்திலும் சாந்தமாகத் தெரிகிறா.

    அந்த வெள்ளை யானையாரின் தும்பிக்கை அவ்ளோ நீளமாக இருக்கே.

    அது என் கிரேட் குருவோ[கு.ரங்கார்:)].. பார்த்தால் தெரியவில்லை, சொன்னதாலதான் கண்டு பிடிச்சேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  26. வணக்கம் கே.பி.ஜனா சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ரொம்ப அழகான படங்கள் மிக மிகத் தெளிவாக இருக்கின்றன. எத்தனை கோயில்கள். ஊரைக் காத்த தெய்வங்கள் இல்லையா. நிறைய தகவல்கள்.

    கீதா: துளசியின் அக்கருத்துடன், அக்கா அந்த யானை ரொம்ப அழகாக இருக்கிறது கருப்பண்ணச்சாமி குதிரை எல்லாம் பார்க்கும் போது ஒவ்வொரு ஊரிலும் இப்படி கருப்பண்ணச்சாமி இருந்திருப்பார் ஊர் எல்லை காவலாக மக்களுக்கு நல்லது செய்து எனவெ காவல் தெய்வமாக...வழிபடப்பட்டு.. என்று. அவர் தவறு செய்பவர்களைத் தண்டிப்பார் என்பதால் தான் வாள் அல்லது ஏதேனும் ஓர் ஆயுதத்துடன்...கருப்பண்ணச்சாமி படத்தைப் பார்த்ததும் விடாது கருப்பு சீரியலில் வரும் அந்த சாமி நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.

    துளசிதரன் நிறைய ஊரைகாத்த காவல் தெய்வங்கள் இருக்கிரார்கள். எல்லைசாமி என்பார்கள்.

    கீதா , யானை, குதிரை இரண்டும் ஐய்யனாருக்கு உண்டு.
    கருப்பண்ணசாமி இந்த கோவிலில் யானை மேல் வருகிறார்.
    காவல்தெய்வங்களாக இருந்து ஊர் மக்களை காக்கிறார்.

    இந்திரா செளந்திரராஜன் விடாது கருப்பு கதையை மறக்க முடியாது.
    உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு