வியாழன், 8 செப்டம்பர், 2016

நூற்றாண்டு கடந்த தமிழ்ப்பாடப்புத்தகம்

எங்கள் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் உள்ள பழமையான புத்தகம் !
.
சென்னைப் பல்கலைக்கழக மெட்ரிகுலேஷன் வகுப்பிற்குரிய தமிழ்ப்பாடப் புத்தகம்.
1893 ஆம் வருஷம் வெளியிடப்பட்ட புத்தகம்.
(அச்சிட்டு 123 ஆண்டுகள் ஆகிவிட்டன)
என் கணவரின் உறவினரின் முன்னோர், திரு.ஐ.பி தெய்வநாயகம் அவர்கள் படித்த புத்தகம்.
விலை 12 அணா. மொத்தப் பக்கங்கள் 114.
மவுண்ட் ரோடு ,அடிசன் கம்பெனியில் அச்சிடப்பட்டுள்ளது
மகாபாரத விராடபருவம், (உரைநடை) ,
அரிச்சந்திர புராணம், (செய்யுள்) ஆகியவை அடங்கி உள்ளன. படிக்கலாம் என்றால் கிழிந்து விடுமோ என்று பயமாய் இருக்கிறது.
மின் விசிறியைப் போடாமல் பத்திரமாய் படம் எடுத்து இருக்கிறேன்.
காற்றில் அலை பாய்ந்தாலே கிழிந்து விடும் நிலையில் உள்ளது.

நிறைய பேர் இந்த புத்தகத்தை படித்து இருக்கிறார்கள்.  பக்கங்களில் அவர்கள் பெயரை எழுதி வைத்து இருக்கிறார்கள்.


 அரிச்சந்திர புராணம்
மஹாபாரதம் (விராடபர்வம்)


இந்த இரண்டு கதையிலும்  அரிச்சந்திரன்  நாட்டை இழந்து கஷ்டப்பட்டதும், பாண்டவர்கள் நாட்டை இழந்து கஷ்டப்பட்டதும்    இருக்கிறது.

இரண்டுமே சூதாட்டத்தால்  நாட்டை இழந்த கதை.    அரிச்சந்திரன் எத்தனை சோதனை வந்த போதும்   பொய்  சொல்லாமல் கடைசியில் வென்றதும், பாண்டவர்கள் ஐந்து பேர் 100 கெளரவர்களை வென்றதும்   படிப்பினை அனைவருக்கும்.

அரிச்சந்திர புராணத்தில்   கடைசியில்  வரும் ஒரு காட்சி”-

//அரிச்சந்திரனும், சந்திரமதியும் புடத்தால் மாற்றுயர்ந்த பொன்போல் விளங்கினார்கள். அப்பொழுது வஸிஷ்ட முனிவரும் கெளசிக முனிவரும் திருமூர்த்திகளும், விநாயகரும் முருகக்கடவுளும், இந்திரன் முதலிய தேவர்கள் யாவரும் அவ்விடம் வந்தார்கள். அரசன் அவ்ர்களெல்லாரையும் வணங்கித்துதித்தான். சந்திரமதி உமாதேவியை வந்தித்தாள். முருகக் கடவுளழைக்க தேவதாசனும், காசிராஜன் பிள்ளையும் துயிலுணர்ந்தவர்கள் போல் உயிர்பெற்றெழுந்தார்கள்.

பின்பு பரமசிவன் கெளசிகமுனிவரைப் பார்த்து “ உங்களில் வென்றோர் யாவர்  தோற்றோர் யாவர்” என்று கேட்பக் கெளசிக முனிவர் :-

”கோதிலாக் குணத்தோ னீதியு நெறியுங்
         குறியுமியா  னறிகிலா திகழ்ந்தேன்
ஆதலால்  வென்றோன் வசிட்டனே தோற்றோ
        னடியனே”

என்கிறார்.

பின்னர் பரமசிவன் அரிச்சந்திரனைப்பார்த்து நீ அயோத்தியையடைந்து அரசாட்சி செய்துவிட்டுப் பின்பு நமது பதவியை யடைவாய் என்று சொல்கிறார்.

பரமசிவன் இந்திரனைப் பார்த்து நீ  அரிச்சந்திரனோடு அயோத்தி சென்று அரிச்சந்திரனுக்கு முடிசூட்டிவிட்டு அப்பால் உன் நகரமடைக” என்று கட்டளையிட  

அரிச்சந்திர புராணம் சுபமாய் முற்றுப் பெறுகிறது.


அது போல்  மஹாபாரதக் கதையில்  இந்த விராடபர்வம்  கடைசியில்  வரும் சில காட்சி:-

 //வீமன்   கீசகனுடைய தம்பிகள் முதலான பந்துக்களை யெல்லாம் த்வம்சஞ் செய்து சுடுகாட்டை நிரப்பி கழுகு நரி பேய் முதலானவைகளுக்கு விருந்து செய்வித்துத் திரெளபதியைக்  கைகளாலணைத்துக் கொண்டு நகரத்திற்குத் திரும்பி வருமளவில் அவளுக்கு ஆறுதலாக சில கதைகளை சொல்லி, 
கேட்டாயோ பெண்ணே! நல்லவர்களுக்கு மகா ஸெளக்கியங்கள் வருவதற்கு முன் அடையாளமாக ஆபத்துக்கள் வரும்.    ஆதலால் நேரிட்டிருக்கிற கஷ்டங்களுக்கு நீ வ்யசனப் படாதே” என்று சொல்லிய வீமன் பேச்சைக் கேட்டுத் திரெளபதி  சந்தோஷமாய் கூடப்போனாள்.//

அந்தக்காலத்தில் அரிச்சந்திரன் நாடகம் பார்த்து பொய் சொல்வதை விட்டுவிட்டதாக  மகாத்மா காந்தி ’சத்தியசோதனை’யில் சொன்னார்.

நமக்கு கஷ்டங்கள் வரும் போது இறைவனை நிந்திக்கிறோம்.  அப்படி இல்லாமல் இறைவனை நம்பி சரணடைந்தால் நல்லது செய்வார்.
துன்பங்களை கண்டு துவண்டு போகாமல் தன்னம்பிகையுடன் எதிர் கொண்டால் துன்பங்களிலிருந்து மீளலாம்.  என்பதை சின்ன வயதில் பாடமாய் படித்தவர்கள் பாக்கியசாலிகள்.


                                                                    வாழ்க வளமுடன்.



===============================================================================


18 கருத்துகள்:

  1. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன் வாழ்கவளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. புகைப்படத்தில் உள்ள பக்கத்தினைப் படிக்குங்கால் வாக்கியம் முற்றுப்பெறாமல் போய்க்கொண்டேயிருப்பது போலத் தோன்றினாலும் பின்னால் வரும் பக்கங்களில் அந்த வரியானது எந்த இடத்திலாவது ஒரு முற்றுப்புள்ளியைச் சந்தித்திருக்கும் என்பதில் ஐயமில்லை என்று தோன்றினாலுங்கூட அதனைத் தொடர்ந்து அடுத்ததொரு நீண்ட வரியும் வரும் என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை என்பதுவும் தெரிகிறது!

    :)))

    பொக்கிஷம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் வாக்கியம் முற்றுபெறாமல் நீண்ட வசனமாய் போய் கொண்டு தான் இருக்கிறது ஆனால் படிக்க சுவராஸ்யம். அரிச்சந்திர புராணம் செய்யுள் கொஞ்சம் தான் உரைநடை.

    ஆனால் விராடபர்வம் படிக்க நன்றாக இருக்கிறது நிறைய கிளைக்கதைகள் வருகிறது.

    நீங்கள் சொல்வது போல் பொக்கிஷம் தான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அந்தக் காலத்தில் இருந்து சொல்லி வருவது சூதாட்டம் வாழ்க்கையை அழித்து விடும் என்கிற மாபெரும் உண்மையைத் தான். நம் பாடத்திட்டத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே அதைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது.

    இங்கே என்னால் ஒன்றை சொல்லாமல் இருக்க முடியவில்லை. டிவியில் வரும் ஒரு விளம்பரம் மிகுந்த வேதனைக்குரியது. 'ரம்மி ஆடுங்கள் நீங்கள் பணக்காரராகலாம்' என்று சொல்கிறது. நாம் எங்கே சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பது சற்றுக் குழப்பமே!

    பதிலளிநீக்கு
  5. பொக்கிஷமே தான். பாதுகாக்கப்பட வேண்டிய நூல்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ராஜலட்சுமி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் நானும் ரம்மி ஆடுங்கள் என்ற விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.


    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. புத்தகாங்களின் மீது உங்கள் குடும்பத்தினருக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் இருந்தால் இப்படி பதிப்பித்து நூறாண்டு கடந்த புத்தகத்தையும் பராமரித்துக் காத்து வருவீர்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. அதற்காக ஒரு சல்யூட்!

    நான் ஏழாவது வகுப்பு படிக்கும் பொழுது அரிச்சந்திர புராணத்தில் ஒரு பகுதி செய்யுள் வடிவில் படித்திருக்கிறேன். வாளைத் தூக்கி வெட்ட முற்படும் பொழுது அது பூமாலையாக கழுத்தில் விழும் காட்சி மறக்க முடியாதது. அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன்-- இந்தப் பெயர்களை மறக்கவே முடியாது!

    அரிச்சந்திர நாடகம் பார்த்து கலங்கிய உடன் தான் காந்திஜி 'உண்மையே பேசுவது' என்று விரதம் பூண்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ஸ்ரீராம் தன் பின்னூட்டத்தில் முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐந்து வரிகள் எழுத முயற்சித்திருப்பதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    சாரின் அத்தை வீட்டிலிருந்து எடுத்து வந்தார்கள் பலவருடங்களுக்கு முன்.
    நானும் பாடத்தில் படித்து இருக்கிறேன், சிவாஜி, வரலட்சுமி நடித்த அரிசந்திரன் நாடகம் பார்த்து இருக்கிறேன்.


    //அரிச்சந்திர நாடகம் பார்த்து கலங்கிய உடன் தான் காந்திஜி 'உண்மையே பேசுவது' என்று விரதம் பூண்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

    நானும் அதை குறிபிட்டு இருக்கிறேன்.

    காந்தி படிக்கும் போது கல்வி ஆய்வாளார் வந்து இருந்தார், ”கெட்டில்”என்று எழுத சொன்ன போது தப்பாய் காந்தி எழுதிய காந்திக்கு வகுப்பு ஆசிரியர் ஆய்வாள்ருக்கு தெரியாமல் சொல்லிக் கொடுத்த போதும் அவர் அதை எழுதவில்லை. உண்மையாக நடந்து கொண்டார் என்று படித்து இருக்கிறேன்.

    ஸ்ரீராம் முயற்சியை நானும் பார்த்தேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம் முற்றுப்புள்ளி வராமல் எழுதி இருப்பதும் ரசிக்க வைக்கிறது பழைய ஏடுகள் பொக்கிஷங்களே

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. >>> இந்தக் கதைகளை சின்ன வயதில் பாடமாய் படித்தவர்கள் பாக்கியசாலிகள்..<<<

    அத்துடன் படித்த கதைகளின் நீதியைக் கைக்கொண்டு -
    இந்தக் காலத்தில் முடிந்தவரைக்கும் நல்லவிதமாக வாழ்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்..

    அரிய பொக்கிஷத்தைப் பதிவில் வழங்கியமைக்கு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் துரைசெல்வராஜூசார், வாழ்க வளமுடன்.

    // படித்த கதைகளின் நீதியைக் கைக்கொண்டு -
    இந்தக் காலத்தில் முடிந்தவரைக்கும் நல்லவிதமாக வாழ்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்..//

    நீங்கள் சொல்வது சரிதான். படித்தவைகளை மனதில் கொண்டு முடிந்தவரை கடைப்பிடிப்பவர்கள் பாக்கியசாலிகள்தான்.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அற்புதமான பொக்கிஷம்!
    கூடவே இதன் மூலம் மாறிவிட்ட கல்வி முறையையும் அறிந்து கொள்ள முடிகிறது. மனிதனை உயர்த்தும் கல்வி முறை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மேற்கத்திய வணிக ரீதியான கல்விக்கு அடிமையாகிப் போன அவலத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.
    ///...துன்பங்களை கண்டு துவண்டு போகாமல் தன்னம்பிகையுடன் எதிர் கொண்டால் துன்பங்களிலிருந்து மீளலாம். என்பதை சின்ன வயதில் பாடமாய் படித்தவர்கள் பாக்கியசாலிகள். ////

    இப்போதெல்லாம் இவற்றை ஒரு கார்பொரேட் குரு மூலம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து கேட்டு கைதட்டி வருவதுதான் நாகரீகமாகக் கருதப்படுகிறது.
    ’”சின்ன வயதில் பாடமாய் படித்து....” மிகப் பொருத்தமாய் சொல்லியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் கபீர்ன்பன்
    , வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது சரிதான் பாடமுறை மாறியதும், வாழ்க்கைமுறை மாறியதும் இளம்தலைமுறையினர் வாழ்க்கையை தடம்புரட்டி
    போட்டு இருக்கிறது. வழி நடத்துபவர் சரியான வழி காட்டுவது இல்லை.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு