Saturday, September 24, 2016

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்


காளமேகப் பெருமாள் கோவில் கோபுரம்

இன்று புரட்டாசி  இரண்டாவது சனிக்கிழமை  திருமோகூர் காளமேகப் பெருமாளைத் தரிசனம் செய்து வந்தோம். இது
103 வது திவ்ய தேசம்.  திருமங்கையாழ்வார் , நம்மாழ்வார் மங்களாசஸனம் செய்து இருக்கிறார்கள்.நம்மாழ்வாருக்கு மோட்சம் தந்த தலம்.மோகினி அவதாரம் எடுத்த தலம் அதனால் திருமோனவூர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் திருமோகூர் ஆயிற்று.


காலை எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி விட்டோம். காலையில் சிக்கீரம் போனால் கூட்டம் இருக்காது என்று  சொல்வார்கள். 


வாசலில் மாடு நின்று கொண்டு வருவோர் போவோர் என்ன கொடுப்பார்கள் என்று ஏங்கிப் பார்த்துக் கொண்டு இருந்தது.

ஓம் நமோ நாராயண என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தோம். கொடிமரம் வணங்கி உள்ளே சென்றால் உற்சவர் அழகாய் கொலுவிருந்தார். அவருக்குத்தான் அர்ச்சனை எல்லாம். மூலவரை பார்த்து விட்டு வந்து  விட வேண்டும்.. இரண்டு ரூபாய் கட்டணம் உள்ளே போக. முன்பு பலவருடங்களுக்கு முன் பார்த்த பெருமாள்  இவ்வளவு உயரமா? நினைவில் இல்லை. (இப்போது வளர்ந்து விட்டாரா என்ன எப்போதும் இதே உயரம் தான்)  

ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்துடன் அற்புதமாய் காட்சி அளித்தார். நன்கு கண்ணாரக் கண்டு மனதாரத் தொழுது வாங்கிச் சென்ற துளசி மாலையைக் கொடுத்து வணங்கி வந்தோம்.

சுவாமி சன்னதி வாசல் தூணில் மன்மதன் சிலை நல்ல பெரிதாக உடல் முழுவதும் சந்தனம் பூசி இருக்கிறது அழகாய், அதற்கு எதிர் தூணில் ரதி சிலை அழகாய் சந்தனம் பூசி இருக்கிறது.
                               
                           காளமேகப் பெருமாள் இருக்கும் சன்னதி விமானம்
தாயார் மோகனவல்லி  சன்னதி  விமானம்

பெயருக்கு ஏற்றார் போல் தாயார் மோகனமாய் இருக்கிறார். அவர் சன்னதி மண்டபத்தில் உற்சவர் சக்கரத்தாழ்வார், பின் புறம் நரசிம்மர் உள்ள உற்சவருக்கு அர்ச்சனை நடக்கிறது .

 தாயார் மோகனவல்லி. தாயார் சன்னதியில்   ஒரு பட்டர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து குங்குமம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்  

                                                   
                               சக்கரத்தாழ்வார் சன்னதி தங்கக்கோபுரம் 

நரசிம்ம சுதர்னம் என்று அழைக்கிறார்கள். சுதர்சனரும், நரசிம்மரும் தங்க கவசத்தில் ஜொலிக்கிறார்கள். இவரைப் பார்க்கவும் இரண்டு ரூபாய் கட்டணம்.  சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன்16 ஆயுதங்களுடன் அழகாய்க் காட்சி அளிக்கிறார். மந்திர எழுத்துக்களுடன் மிகவும் சகதி வாய்நதவராம். இவரை வேண்டிக் கொண்டால்  எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை.
                                                         
                    சிறு விமானம் தெரியும் சன்னதி- ஆண்டாள் சன்னதி                                          
சிறு முன் மண்டபத்தை கடந்து உள்ளே போனால் மலர்  உடை தரித்து வெகு அழகாய் காட்சி தருகிறார் ஆண்டாள். உற்சவ ஆண்டாளும் அழகிய அலங்காரத்தில் காட்சி தருகிறார். ஆரத்தி தட்டைக் காட்டி  நாமே ஆரத்தியைத் தொட்டு வணங்கிக் கொண்டு மஞ்சளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் பட்டர். 

அழகிய பிரகாரம் கால் சுடாமல் இருக்க வெள்ளை  வர்ணம் பூசி இருக்கிறார்கள் .அதில் நடந்தால் சுடவில்லை.

கோடியில் இருக்கும் பெரிய கிணறு  இரும்பு கம்பி போட்டு மூடி இருக்கிறார்கள். பாலீதீன், பூ, குப்பைகளைக் கிணற்றில் போடாதீர்கள் என்ற அறிவிப்பு வைத்து இருக்கிறார்கள். எட்டிப் பார்த்தேன் காசுகள் போட்டு இருக்கிறார்கள். மக்கள்.


சிலபடிகள் ஏறிச் சென்றால் நவநீதகிருஷ்ணர் சன்னதி. வெள்ளிஅங்கியில் அழகாய் இருக்கிறார். அவரைச் சுற்றி வணங்கி வர வசதி உள்ளது. 

உள் சன்னதியை வலம் வந்து வெளியில் வந்தால்  வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி வெள்ளி கவசம் தாங்கி துளசி மாலை அணித்து சிறிய மூர்த்தியாய் காட்சி தந்தார்.


 அவருக்கு அருகே மதியம் அன்னதானத்திற்கு சமைக்கும் இடம். ஒரு அம்மா ஐந்து ஆறு வெண்டைக்காயை ஒன்றாய் அடுக்கி வைத்துக் கொண்டு வெட்டிக் கொண்டு இருந்தார்கள். அடுத்து மடைப்பள்ளி அங்கு புளியோதரை, பொங்கல், மற்றும் பலகாரங்கள் தயார் ஆகி கொண்டு இருந்தது. அதை தயார் செய்ய அடுப்பிற்கு விறகுகள் மரத்தடியில் அடுக்கி வைத்து இருந்தார்கள். பாதாம், தென்னை, மாமரம் இருந்தன.


தென்னை மரங்களுக்கு இடையே சக்கரத்தாழ்வாரின் தங்க விமானம்

                      மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள்.

அதனை ஒட்டி ஒரு பெரிய பாழடைந்த  கிணறு
குப்பை கூளங்களுடன் தென்னை மர நிழலும் விழுந்து இருக்கிறது, மொட்டைத் தென்னைமரம்,  கீற்றுடன் தென்னைமரம்
                       
 அடுத்து சதுரக் கல்லில்  சுற்றிவர சின்ன சின்ன  உருவங்கள் நடுவில்  சக்கரத்தாழ்வார். விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.தரையிலும்  மேலேயும் பல கிளைகளை பரப்பிக் கொண்டு மரம் பச்சையாய்
அந்த மரத்தில் தங்கள் இதயங்களையும், பெயரையும்   வரைந்து வைத்து இருக்கிறார்கள்.

பிரகாரத்தின் முடிவில் சுவாமி இளைப்பாறும் மண்டபம்.


பிரகாரம் சுற்றி  கொடிமரம் தாண்டி வந்தால் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி இருக்கிறது. யாரும் மறைக்காமல்  பாம்பு படுக்கையில் ஸ்ரீதேவி, பூதேவி கால் அருகில் இருக்க வலது கையை படித்து மலர் கண்களை நன்கு மலர்த்தி நம்மை பார்க்கிறார். நல்ல வெளிச்சம் அவர் மேல் படுவதால் நன்கு கண்குளிரப் பார்க்க முடிகிறது.


சன்னதியை விட்டு வெளியில் வந்தால் அன்னதானத்திற்கு மேஜைகள் போட்டு இருக்கிறது ஒரு பக்கம், நடுவில் இருக்கும் மண்டபத்தில் மின்விசிறிகள் சுழல்வதால் மக்கள் பிரசாதங்களை வாங்கி வந்து அமர்ந்து சாப்பிட்டு இளைப்பாறிச் செல்கிறார்கள்.

அவர் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் கைகூப்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல்  உருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதைப் பார்த்தவுடன்  சீர்காழி கோவிந்தராஜன் பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.( பாடல் -குலசேகராழ்வார் )

 /செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!//
குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி.

அடியவர்களின்  பாதம் அந்த உருவங்களின் மேல்

உள்ளே தரிசனம் செய்து வெளியில் வந்தால் எதிரில் கருடன் மேல் திருமால் அமர்ந்து இருக்கும் மண்டபம் தெரிகிறது.

 நாம் முதலில் திருக்குளத்தில் கால்களை கழுவி, தலையில் தெளித்துக் கொண்டு  திருக்குளத்து அருகே இருக்கும் ஆலமரத்த்டியில் இருக்கும் தும்பிக்கை ஆழவாரைப் பணிந்து  பின்  உள்ளே காளமேகப் பெருமாளை வணங்கச் சென்று இருக்க வேண்டும். கூட்டம் வரும் முன்னே சேவிக்க வேண்டும் என்று முதலில் உள்ளே போய் விட்டு பின் ஆற அமர திருக்குள தரிசனம்.

இங்கு உள்ள திருக்குளம் திருப்பாற்கடல் என்று அழைக்கப்படுகிறது . அழகிய நீராழி மண்டபத்துடன்   திருக்குளம். நன்கு சுத்தமாய் இருக்கிறது.

சிறுவர்கள் நீச்சலடித்து குளித்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆலமரத்தின் நிழலும் திருக்குளத்தில் அலையடிப்பதும் பார்க்க அழகு.

ஆலமரத்தடியில் அகத்திக்கீரையும், அருகம்புல்லும் விற்கும் தாய்
  
அங்கு நிறைய பசுமாடுகள் இருக்கிறது அதற்கு அகத்தி கீரை விற்கிறார்கள், தும்பிக்கை ஆழவாருக்கு அருகம்புல் விற்கிறார்கள் அந்த அம்மா தன்  குழந்தையை கொஞ்சுவதைப் பாருங்கள்.
ஆலமரத்தில் தொட்டில் கட்டி தன் செல்லத்தை அதில் இட்டுக் கொஞ்சிப் பேசித் தாலாட்டும் தாய்.
ஆலமரக் காற்றும், திருக்குளக் காற்றும் உடலை வருட, தாயின் அன்பு குரல் மனதை வருட சுகமான தூக்கம் வராதோ குழந்தைக்கு!

இப்போது இடுப்பில் இருக்கும் குழந்தை சற்று முன் தொட்டில் ஊஞ்சலில் ஆடிய குழந்தை.


                                           ஆலமரத்தடியில் நாகர்கள்.
இந்த மண்டபத்தில் சூரியன் வரப்போகிறார் என்று நினைக்கிறேன். மேலே குதிரைகள் இருக்கே!
இப்போது ஆலமரத்தடியில் தகரக் கொட்டகையில் இருக்கும்  தும்பிக்கை ஆழவார் இங்கு வரப்போகிறார்.

குளத்து அருகே தாமரைக்குளம். தண்ணீர் இல்லை .சேறும் சகதியுமாய்,
 புற்களும் புதர்களுக்கு இடையே தாமரையும்  அழகாய் தலைதூக்கி சிரிக்கிறது. தூரத்தில் இருந்து எடுத்தேன். நிறைய மாடுகள் கூர்மையான கொம்புடன் அங்கு நின்றன.

கருப்பண்ணசாமி சன்னதியும் வெளியில் இருக்கிறது.

வாழ்க வளமுடன்.

----------

27 comments:

G.M Balasubramaniam said...

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குடும்பக் குழுவுடன் நாங்கள் பயணம் செய்த போது திரு மோகூர் சென்றிருக்கிறோம் பதிவும் எழுதி இருந்தேன் ஆனால் ஒரு சிலப் புகைப்படங்களே வெளியிட்டிருந்தேன் மிக விரிவான உங்கள் பதிவினை ரசித்தேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஏராளமான படங்களுடன் மிகவும் அருமையான பகிர்வு. புரட்டாசி சனிக்கிழமைக்கு ஏற்ற பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்களுடன் சிறப்பான தகவல்களும்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

ஸ்ரீராம். said...

ஏராளமான படங்கள். அருமை. அழகு. மறுபடியும் அங்கு சென்று வந்த உணர்வு.

கரந்தை ஜெயக்குமார் said...

ஏராளமான படங்கள்
அனைத்தும் அழகு
நன்றி சகோதரியாரே

துரை செல்வராஜூ said...

தங்களால் திருமோகூர் திவ்ய தேச தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்..

வாழ்க நலம்..

'நெல்லைத் தமிழன் said...

ஏராளமான படங்கள். நிறைய தகவல்கள். பெருமாளை நாங்களே தரிசித்த உணர்வு. அருமையாக குளத்தை வைத்திருக்கும் மக்கள், கிணற்றில் பிளாஸ்டிக் குப்பைகளைப் போட்டுள்ளதும், இருவேறு நிலையைப் பிரதிபலித்தது. 'பாதாம்' மரமல்ல. வாதாமரம். சிறுவயதில் இதன் பழங்களைச் சேகரித்து, உடைத்து அதில் இருக்கும் பருப்பைச் சாப்பிட்ட நினைவு வருகிறது. பதிவு அருமை.

Dr B Jambulingam said...

இதுவரை இக்கோயிலுக்குச் சென்றதில்லை. தங்கள் பதிவு அங்கு செல்லும் ஆவலைத் தூண்டிவிட்டது. அங்கு செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
வெகு நாட்கள் கழித்து என் வலைத்தளம் வந்து இருக்கிறீர்கள்
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தை ஜெயக்க்ய்மார் சார்,
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் நெல்லை தமிழன் வாழக வளமுடன்.
எங்கள் அத்தைவீட்டில் வாதா மரம் இருந்தது.
அந்த பழம் பழுத்து கீழே விழுவதை எடுத்து காய வைத்து தட்டி
உள் இருக்கும் பருப்பை சாப்பிடுவோம், சுவையாக் இருக்கும்.
பாதாம் பருப்பு, பாதம் மரம் என்று சொல்லியே பழக்கமாகி விட்டது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கள் சார், வாழக் வளமுடன்.
உங்கள் வரவுக்கு, கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

அழகான கோவில். திருக்குளம், சிற்பங்கள், மண்டபங்கள் அனைத்தும்.

படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அழகான கோயில் பற்றிய விளக்கங்களும், படங்களும் அருமை..

குளங்களும், கிணறுகளும் ம்ம் வேதனையளிக்கின்றது. பண்டு இவை எல்லாம் எதற்காக வெட்டப்பட்டு அதுவும் கோயில்களுடன் இருந்தன என்றால் கோயில்கள் தெய்வீகமான இடம் என்பதால் சுத்தமாகப்பராமரிக்கப்படும் என்றும் அதனால் இயற்கையையே அதாவது நதி, கடல், மலைகள் எல்லாவற்றையும் இறைவனுடன் இணைத்துச் சொல்லித்தானே வழக்கம்! புண்ணிய நீர் என்று ஆனால் இன்றைய நிலை!?

வாதாம் பருப்பு கொட்டையை உடைத்துச் சாப்பிட்ட நினைவு...இப்போதும் ஆங்காங்கே காண நேரிடுகிறது..எடுத்துச் சாப்பிடும் வழக்கமும் தொடர்கிறது..

பகிர்விற்கு மிக்க நன்றி சகோ/அக்கா

கோமதி அரசு said...

வணக்கம் ராமலஷ்மி
, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன் , கீதா , வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் திருக்குளங்கள் புனிதமாக கருதி அவற்றை பாழ் செய்ய மாட்டோம் முன்னோர் நினைத்தார்கள்.

வாதாம் பருப்பு மலரும் நினைவுகள் உங்களுக்கும் இருப்பது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
நன்றி.

Saratha J said...

படங்களும் விரிவான விளக்கமும் அருமை சகோ.

காமாட்சி said...

திருமோகூர் காளமேகப்பெருமாளை நிதானமாக இன்றுதான் சேவித்தேன். அவ்விடம் போகாத குறை தீர்ந்து விட்டது. நேரில் பார்த்த மாதிரி உங்களின் படங்கள் நின்று நிதானித்து தரிசனம் செய்யக் கொடுத்து வைக்க வேண்டும். மனதிற்கு மிகவும் திருப்தியாக இருந்தது. வாதாமரம் எங்கள் வீட்டிலில்லை. ஆனால் காலையில் தோட்டத்தில் நிறைய கொட்டைகள் வீழ்ந்திருக்கும். வௌவாலின் கைங்கரியம். அருகில் எங்கிருந்தோ கொண்டு போட்டிருக்கும் . இந்த ஸம்பவங்களும் ஞாபகம் வந்தது. நன்றி. அன்புடன்

கோமதி அரசு said...

வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்.
வெளவால்கள் கொண்டு போடும் எங்கள் அம்மா வீட்டிலும்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமையான புகைப்படங்களும் விரிவான வர்ணனையும் திருமோகூர் ஆலயத்தை நேரில் தரிசித்தது போல் உணர்ந்தேன்,

கோமதி அரசு said...

வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

Vimalan Perali said...

படங்களும் விளக்கமும் நேரில் பார்த்த அனுபவமாய்,,,,,/

கோமதி அரசு said...

வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.