சனி, 24 ஜனவரி, 2015

அருள்மிகு குக்கி சுப்பிரமணியர் திருக்கோவில்



நாங்கள் திருவருள் துணையுடன்  அண்மையில் மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.

என் கணவர் பல வருடங்களாய் பாடல் பெற்ற சிவத்தலங்கள் பார்த்து வருகிறார்கள். அதில் அவர்கள் பார்க்க வேண்டிய இன்னும் இரண்டு தலங்கள் தான். அதில் ஒன்று கோகர்ணம் என்பதால் தான் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு ரயில் நிலையத்தில் எங்களை அழைத்துச் செல்ல மனோகர் டிராவல்ஸ் கைடு   ராஜா அவர்கள்  வந்து இருந்தார்,  எங்களுடன் மேலும் இருவர் ஈரோட்டிலிருந்து வந்தார்கள். நாங்கள் ஐவரும்  ஈரோட்டிலிருந்து மாலை 5 மணிக்கு  வெஸ்ட்கோஸ்ட் ரயிலில் மங்களூர் புறப்பட்டோம்.  திருப்பூரில் 11 பேர் , கோவையில் நான்கு பேர்  சேர்ந்து கொண்டார்கள்  சென்னையிலிருந்து ஒருவர் ஆக 21 பேர்  ஆன்மீகச் சுற்றுலாவிற்கு ரயிலில் பயணித்தோம். காலை மூன்று மணிக்கு போய் சேர்ந்தோம் மங்களூர். அங்கு எங்களைத் தங்கும் விடுதிக்கு அழைத்துச்செல்ல   21 பேர் அமரும் மினி பஸ் ஏற்பாடு செய்து இருந்தது . அதில் ஏறி விடுதிக்கு வந்து சற்று ஓய்வு எடுத்தோம்.
இப்படி சுடவைக்கப்பட்ட தண்ணீர் வெந்நீராக குழாய் மூலம் அறைகளுக்கு  வருகிறது. எல்லா ஓட்டல்களிலும் இப்படித்தான்  வெந்நீர் தயார் ஆகிறது. 
என் கணவரும், எங்களை அழைத்துச் சென்ற கைடு திரு. ராஜாவும்
தங்கும் விடுதி வாசலில் மலர்ந்த ரோஜா



பாக்கு மரங்கள் சூழ  நாங்கள் தங்கி இருந்த விடுதி


சுப்பிரமணியாகோவில் போகும் வழியில் தர்மஸ்தலாவில் உள்ள மணிக் கூண்டு

ஓட்டலில் போய் காலை உணவை முடித்துக் கொண்டு  சுப்பிரமணியா கோவில் தரிசனம் செய்ய சென்றோம். கர்நாடக மாநிலத்தில் குக்கி சுப்பிரமணியா கோவில் மிக சிறப்பு வாய்ந்தது. ஐந்து தலை நாகருடன் சுப்பிரமணியர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்; இங்கு கால பைரவர் இருக்கிறார். ராகு, கேது தோஷநிவர்த்தி தலம் என்கிறார்கள்.
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 1.30 வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.



              தேருக்குப் பின் புறம் தெரியும் கட்டிடம் தான் அன்னதானக் கூடம்.
                                        கோவிலின் முகப்புத் தோற்றம்.
கோவில் வாசலில்  அழகிய தேர்கள் இருந்தன.  வரிசையில் காத்திருந்து முருகனை வணங்கினோம். நம்மை கோகி , கோகி என்று விரட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.   வணங்கி வந்த பின்  எல்லோருக்கும் உணவு உண்டு.  கூட்டம், வரிசை அதற்கும். நாங்கள் அங்கு சாப்பிடவில்லை.  ஓட்டலில் தயிர் சாதம் சாப்பிட்டோம்.

 நாக தோஷநிவர்த்தி கோவில் ,பிள்ளைப்பேறு வேண்டுவோர்க்கு வரமளிக்கும் சுவாமி. 

சகல பிரார்த்தனைகளும் நிறைவேறக் கட்டணம் கட்டி வழிபடுவோர்களுக்கே பிரசாதங்கள். மற்றவர்கள் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

தேங்காய், கல்கண்டு பிரசாதம்
                                          மூட்டை மூட்டையாகத் தேங்காய்கள்
                             குமாரதாரா நதியும், ஆதி சுப்பிரமணியா கோவிலும். 

ஆதி சுப்பிரமணியா என்று இந்த பெரிய கோவிலின் அருகில் குமாரதாரா எனும் நதி ஓடிக் கொண்டு இருக்க, அதன் அருகில் அழகான கேரள பாணியில் கோவில் இருக்கிற்து. கோவிலின் உட்பிரகாரத்தில்  ஒரு அழகிய கிணறு இருக்கிறது. கிணற்றைச் சுற்றி சுவர் எழுப்பி அதில் அழகான ஓவியங்கள் வரைந்து இருக்கிறார்கள்.


ஆதி சுப்பிரமணியா கோவில் வாசலில் இப்படி அறிவிப்பு பலகை வைத்து இருக்கிறார்கள்.

தலவரலாறு:-
சுப்பிரமணியருக்கு வாசுகி எனும் ஐந்து தலைப் பாம்பு  குடை பிடித்து இருப்பதற்கு சொல்லப்படும் கதை:- 
காசியப முனிவரின் மனைவிகளான  கத்ரு, வினதா ஆகிய இருவரும் குதிரைகளைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட , யார் கருத்து சரியானதோ அவர் வெற்றிபெற்றவர் என்றும்,  தோற்பவர் வெற்றிபெற்றவருக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அப்படி தோற்று  அடிமையான கத்ருவின் குழந்தைகளான  நாகங்களுக்கு, வினதாவின் பிள்ளையாகிய கருடனால் தொந்திரவு ஏற்பட்டது,  அதனால் வருந்திய  பாம்புகள் வாசுகி என்ற பாம்பின் தலைமையில்  குமாரதாரா நதியின் அருகில் இருந்த குகையில் தங்கி. சிவபெருமானிடம்  தங்களைக் காக்கும்படி வேண்டின.   சிவபெருமான் அவர்களுக்கு காட்சி அளித்து  மகன் சுப்பிரமணியம் உங்களை காப்பாற்றுவார் என்று சொன்னார், நாகங்கள் குமராதாரா நதியில் நீராடி  சுப்பிரமணியரை வழிபட, பாம்புகளை  அவர் காப்பாற்றியதால் நன்றிக் கடனாக  வாசுகி என்ற ஐந்து தலைப் பாம்பு அவருக்குக் குடைவிரித்து இருக்கிறது. 

நாங்கள் போன போது தங்க கவசத்தில் ஐந்து தலைப் பாம்பும், முருகனும் தந்த அழகான காட்சி கண்டு மகிழ்ந்தோம்.
            கோவிலுக்கு வந்த பக்தர்களை  ஆசீர்வதிக்கும் கோவில் யானை
இது போல் தான் உள்ளே சுப்பிரமணியா இருப்பார்.

வாழக வளமுடன்.
----------------

37 கருத்துகள்:

  1. பாடல் பெற்ற தலங்கள் அனைத்தையும் தரிசித்த சிவஸ்ரீ ஐயா அவர்களுக்கு அன்பின் வணக்கம்!..

    குக்கி ஸ்ரீ சுப்ரமணியர் திருக்கோயில் - அழகான படங்களுடன் இனிய தரிசனம்..

    அடுத்து கோகர்ணம். ஆவலுடன் காத்திருக்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
  2. கொல்லூர், சிருங்கேரி எல்லாம் சுற்றிவிட்டேன், குக்கி சுப்ரமண்யா மற்றும் சரவணா பெலகுளா மட்டும் நேரமின்மை காரணமாக விட்டுப்போனது... அடுத்து வாய்ப்பு கிடைக்கும்போது போகிறேன்....

    அழகான படங்கள்....

    பதிலளிநீக்கு

  3. வழக்கம்போலவே சிறப்பான விளக்கங்களுடன் அருமையான புகைப்படங்கள்....
    தாங்கள் வராவிடினும் தொடர்ந்து கொண்டுதான் இருப்பேன்.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  4. படங்கள், தகவல்களுடன் அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. அறியாத கோவில் குறித்த தகவல்களுடன் அழகான படங்களையும் பகிர்ந்து எங்களுக்கு அறியத் தந்தீர்கள் அம்மா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. சுப்பிரமணியா கோவில் சென்று வந்தது போலிருந்தது/ ஸ்தலப் புராணம் அறிந்தேன். பாக்கு மரம் சூழ இருக்கும் விடுதி மனதைக் கொள்ளையடித்தது . நன்றி கோமதி.

    பதிலளிநீக்கு
  7. அனைத்துப் படங்களும் ஆன்மிகப்பயணக்கட்டுரையும், ஒவ்வொரு இடத்தின் விளக்கங்களும் மிக அருமை. பாராட்டுக்கள் + வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    சார் உங்களுக்கு தன் வணக்கத்தை தெரிவிக்க சொன்னார்கள்.

    நாங்கள் சென்றவரிசைப் படி செய்திகள் தரலாம் என்று நினைத்து இருக்கிறேன்.
    அடுத்து தர்மஸ்தலா ஆலயம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் கார்த்திக் சரவணன், வாழ்க வளமுடன்.
    உங்கள் குறும்படம் பார்த்தேன் நன்றாக நடித்து இருக்கிறீர்கள்.

    அடுத்த வாய்ப்பு வரும் போது போய் தரிசனம் செய்து வாருங்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  10. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் குறும்படம் பார்த்து கருத்து சொல்லி இருக்கிறேன்.
    முடிந்த போது வந்து கருத்து சொல்லிவிடுகிறேன்.
    உங்கள் தொடர்வரவுக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்கவளமுடன்.
    பழைய உற்சாகத்துடன் உங்கள் பின்னூட்டம் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
    நன்றி ராஜலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்து, பாராட்டு, வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அற்புதமான படங்களுடம் சிறப்பான தரிசனம்...

    நன்றி அம்மா....

    பதிலளிநீக்கு
  16. நான் பார்க்க ஆசைப்பட்ட, இதுவரை பார்க்காத, கோயில்களைப் பற்றிய தங்களின் பதிவு அந்த கோயில்களுக்கு விரைவில் செல்லும் ஆசையினை மேம்படுத்தியுள்ளது. இறையருளுடன் அங்கு செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.

    இறையருளால் செல்லும் நாள் விரைவில் வரும்.

    உங்கள் தொடர் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  19. அழகான படங்களுடன் இனிய தரிசனம்..

    விளக்கங்களுடன் அருமை. பகிர்வுக்கு நன்றி

    Vetha.Langathiakam.

    பதிலளிநீக்கு
  20. அழகிய படங்கள்.

    சிவஸ்தலங்கள் கிட்டத்தட்ட எல்லா ஸ்தல தரிசனமும் செய்திருக்கிறார் ஸார் எனபது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  21. அருமையான தகவல்கள். எனக்கும் அங்கெல்லாம் ஒரு ட்ரிப் போக ப்ளான் இருக்கு. உங்க கிட்ட அப்போ விவரங்கள் தெரிஞ்சிக்கறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
    அவர்கள் பாடல் பெற்ற சிவதலங்கள் பார்க்கும் காலத்தில் இப்போது உள்ளது போல் பஸ் வசதி எல்லாம் கிடையாது , ஒரு பஸ் அல்லது இரண்டு பஸ் போகும் சில குறிப்பிட்ட நேரம் தான் போகும். சைக்கிளில், வண்டியில் கால் நடையாக எல்லாம் போய் இருக்கிறார்கள். மூடி கிடக்கும் கோவிலை பக்கத்தில் இருக்கும் குருக்களிடம் கோவிலை திறக்கச்சொல்லி எல்லாம் பார்த்து இருக்கிறார்கள். இப்போது எல்லா கோவில்களுக்கும் வசதியாக சென்று வர முடிகிறது. எல்லா கோவில்களிலும் கூட்டமும் இருக்கிறது.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் புதுகைதென்றல், வாழ்க வளமுடன்.
    கடவுள் தரிசனத்துடன் பக்கத்தில் கடற்கரையும்
    இயற்கை அழகும் நிறைந்த இடங்களும்கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

    போய் வாருங்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. கொல்லூர் , கோகர்ண சென்றோம் ஆனால் குக்கே செல்ல இயலவில்லை ....விரைவில் செல்ல வேண்டும் ...படங்கள் ரொம்ப அழகு ..

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
    குக்கே சென்று வாருங்கள். உங்கள் கருத்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  26. வாழ்க நலம்!..
    அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  27. சூரிய மூலை, திருநாங்கூர், குக்கி இது மூணுமே பார்த்ததில்லை கோமதி மேம்

    அழகா கூட்டிப்போய் காமிச்சதுக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  28. அழகிய படங்கள்... தகவல்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  29. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  30. அழகிய புகைப்படங்கள், தெளிவான விளக்கங்களுடன் சிறப்பான பதிவு!

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் துரைசெல்வராஜூ சார். வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் வெங்கட் , வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் கலையரசி, வாழ்க வளமுடன். வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி. நான் வெளியூரில் இருக்கிறேன்.
    தகவலுக்கு நன்றி படிக்கிறேன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. எவ்வளவு தகவல்கள்... படங்கள்.. வியப்பு மாறாமல் ரசித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  37. ஒரு திருத்தலத்தை புதிதாக அறிந்தேன். படங்கள் ஆஹா

    பதிலளிநீக்கு