சனி, 7 பிப்ரவரி, 2015

மாற்றம் ஒன்றே மாறாதது

மதுரையில்  டெம்பிள் சிட்டி என்ற ஓட்டலில்,  காலம் மாறும்போது நம் உணவு  உண்ணும் முறை மாறியதை  வருடங்கள் போட்டுப்   படம் வரைந்து பிரேம் போட்டு  மாட்டி  வைத்து இருந்தார்கள்.

எளிமையாக இருந்த உணவு பரிமாறும் முறை, இப்போது ஆடம்பரமாய் மாறி விட்டது. நாளை என்ன, எப்படி இருக்கும் உணவுப் பழக்கம் என்ற  கேள்வியை  வேறு  முன் வைக்கிறது.

கீழே அமர்ந்து சம்மணம் இட்டு உணவு உண்ணும் முறை  இப்போது ஓட்டல், கல்யாண கூடங்கள் எங்கும் இல்லை. ஏன்?  வீடுகளிலும் இல்லை. எல்லாம் மேஜை, நாற்காலி தான். வாழ்க்கை முறை மாறி விட்டது. நகர்ந்து போய் எடுக்ககூட வேண்டாம் என்று சுழலும் மேஜை எல்லாம் வந்து விட்டது.

இந்த ஓட்டலில் 1975ல்  உணவு, மேஜைச்சாப்பாடாக மாறியது என்று சொல்கிறது. உண்மைதான் என்று நினைக்கிறேன். என் சகோதரிக்கு 1969ல்,  கீழே அமர்ந்துதான் விருந்து உண்ணல்.  எனக்கு 1973  பிப்ரவரி 7 ல் திருமணம்  நடந்த போதும் கீழே அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் தான் இருந்தது. 


மின்சாரம் இல்லை போலும் விசிறியைக் கொண்டு வீசும் இளம்பெண். கண்ணாடிக் கூட்டுக்குள்  விளக்கு 
மின்விசிறி, மேஜை, நாற்காலி சாப்பாடு
குளிர்சாதன வசதி  சொகுசு இருக்கைகள் 
 குடும்பத்தினர்களுக்கு மட்டும்  வசதியான  தனி அறை
தாங்களே தங்களுக்கு விருப்பமான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும் வசதி.
அடுத்து என்ன மாற்றம் வரும்? சொல்லுங்களேன்.

கால்களை  தொங்க வைத்து  அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் முதல் படத்தில் காட்டியது போல் கீழே அமர்ந்து சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுவதே சிறந்தது என்கிறார்கள்.
                                       
                               நல்ல கருத்துக்கள் சுவர்களை அலங்கரித்தன.
                                           
விழுந்தாலும் எழுந்து முயற்சி செய்ததால்   கிடைக்கும் வெற்றி  வாழ்க்கையில் உயர்வு தரும் .  விட்டுக் கொடுத்தலும்  வாழ்க்கைக்கு தேவையான ஒன்று தானே!.

                    ஓட்டலில் உள்ளே வந்து விட்டு சாப்பிடாமல் போனால் எப்படி?

                       
                                                 வடை, கேசரி, பூரி உருளைக்கிழங்கு 
                                                                                                                                               
அடுத்து, தோசை வேண்டும் என்றால் அதற்கு சாம்பார்  வேண்டும் அல்லவா?

                                         மூன்று வகை சட்னி, மிளகாய்ப் பொடி


அப்புறம் மதுரையின் சிறப்புப் பானம்


                                                                 வாழ்க வளமுடன்.

                                        -------------------------------------------------------------54 கருத்துகள்:

 1. ஹோட்டல்களில் கூட கீழே அமர்ந்து உண்ணும் முறை இருந்ததா என்று தெரியவில்லை. 70 களில் நான் ஹோட்டல்கள் சென்றதுண்டு. 'டேபிள்-சேர்' தான். 90 இல் நடந்த என் திருமணத்தில் கீழே அமர்ந்துதான் விருந்து! உப்பிலியப்பன் கோவிலில்.

  மாட்டுத்தாவணியில் இறங்கியதும் நானும் இந்த ஓட்டலில் இட்லி வடை சாம்பார் காஃபி சாப்பிட்டு விட்டுச் சென்றேன்!

  பதிலளிநீக்கு
 2. காலத்திற்கு தகுந்தாற் போல உண்ணும் முறை மாறியதை சித்திரங்களாக வைத்து இருக்கும் டெம்பிள் சிட்டி ஹோட்டல் நிர்வாகத்திற்கும், அதனை பேசும் படங்களாக பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் நன்றி.
  த.ம.2

  பதிலளிநீக்கு
 3. கும்பகோணத்தில் அமர்ந்து உண்ணும் நிலையில் மங்களாம்பாள் ஓட்டல் (என்று நினைக்கிறேன்) இருந்தது. ஒவ்வொரு ஓட்டலும் மாற அந்த ஓட்டல் நெடுநாள் மாறவில்லை. கடைசியில் மாறியது. அவ்வாறு அமர்ந்து சாப்பிடும் அழகே அழகு. நாம் சாப்பிடுவதை விட அதனைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

  பதிலளிநீக்கு

 4. அழகான சித்திரங்களுடன் அருமையான விளக்கவுரையுடண் அருமை...
  நாளை ?

  யாமறியேன் பராபரமே....

  பதிலளிநீக்கு
 5. காலத்திற்கேற்ப மாறிவந்த பழக்கத்தை கலைநயத்துடன் வெளிப்படுத்திய அற்புத படங்கள்! வெகு நேர்த்தி! 'மாயா' தூரிகை எடுத்து விளையாடியிருக்கிறார்!
  ஹோட்டல்காரர்களைத் தவறாது
  பாராட்டியிருப்பீர்களே!

  பகிர்ந்து கொண்டு ரசிக்க வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி,கோமதிம்மா.  பதிலளிநீக்கு
 6. 2020?...

  யாரெல்லாம் என்னன்ன கருத்து சொல்லப்போகிறார்கள் என்று பார்ப்போம்...

  பதிலளிநீக்கு
 7. //ஹோட்டல்களில் கூட கீழே அமர்ந்து உண்ணும் முறை இருந்ததா என்று தெரியவில்லை.//

  இப்பொழுது கூட உண்டு, ஸ்ரீராம்!
  சின்ன கேன்டீன் மாதிரி உணவகங்களில் உண்டு.

  வெளியே கூட்டமாக இருக்கும் பொழுது "வாங்கோண்ணா.."என்று
  ரொம்ப பழக்கப்பட்ட வாடிக்கையாளர்களை ஒரு ஸ்பெஷல் நெருக்கத்துடன் உள்பக்கம் அழைத்து மணைபோட்டு இலை போட்டுப் பறிமாறுவது உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதும் இப்படி ஒன்றிரண்டு கடைகளாவது இருந்தால் ஆச்சரியம்தான் ஸார்.

   நீக்கு
 8. அடேடே! ஒப்பிலியப்பன் கோயிலிலா?
  இருவருமே கொடுத்து வைத்தவர்கள்! வாழ்த்துக்கள், ஸ்ரீராம் தம்பதியருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸார்.

   இன்னொரு கூடுதல் தகவல். என்னுடைய இரண்டு மகன்களுமே திருவோண நட்சத்திரம்தான்!

   :))))))))))))

   நீக்கு
 9. திருச்செந்தூர் - உவரிக்குச் செல்லும் போதெல்லாம் வழியில் - மதுரை மாட்டுத் தாவணியில் இறங்கியதும் எங்கள் தேர்வு இந்த உணவகம் தான்!..

  உணவகத்தின் சித்திரங்கள் மனம் கவர்ந்தவை..

  சிறப்பான சேவை உண்மையில் நினைவு கூரத்தக்கது.

  பதிலளிநீக்கு
 10. தங்களுடைய பதிவினைக் கண்டு - மகிழ்ச்சி..

  தொடர்புடைய பதிவு ஒன்றிற்கு தங்களுடைய படங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமா!..

  தங்கள் அனுமதியினை வேண்டுகின்றேன்..

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

  நானும் கீழே அமர்ந்து சாப்பிடும் ஓட்டலில் சாப்பிட்டது இல்லை. ஆனால் கேள்வி பட்டு இருக்கிறேன்.
  ஆனால் காசிக்கு 1978ல் போன போது நகரத்தார் சத்திரத்தில் கீழே அமர்ந்து தான் உணவு உண்ண வேண்டும்.
  இப்போது போன கோவில்களில் (கர்நாடகாவில்) கீழே அமர்ந்து தான் அன்னதான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  போன புதன் கிழமை போன திருக்கோஷ்டியூரில் அன்னதானத்திற்கு மேஜை , பெஞ்ச் போட்டு இருந்தார்கள்.

  உங்களுக்கு 90ல் திருமணம் உப்பிலியப்பன் கோவிலில் (தெரிந்தால் வந்து இருப்போம் பக்கம் தான்.) மகிழ்ச்சி கேட்கவே!

  கூடுதல் தகவல்//
  இரண்டு குழந்தைகளும் திருவோண நட்சத்திரம். உப்பிலியப்பனின் ஆசி கிடைத்து இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் தி.தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.

  உடல் நலமா?
  துரைசெல்வராஜூ அவர்கள் பதிவு பின்னூட்டத்தில் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று படித்தேன்.

  உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் டாக்டர், வாழ்க வளமுடன்.
  இப்போதும் இருக்கிறதா மங்களாம்பாள் ஓட்டல் ?

  உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் ஜீவி, சார், வாழ்க வளமுடன்.
  அவர்கள் படத்தை முதலில் பாராட்டினேன், பின் அனுமதி பெற்று படங்களை எடுத்தேன் சார்.

  //வெளியே கூட்டமாக இருக்கும் பொழுது "வாங்கோண்ணா.."என்று
  ரொம்ப பழக்கப்பட்ட வாடிக்கையாளர்களை ஒரு ஸ்பெஷல் நெருக்கத்துடன் உள்பக்கம் அழைத்து மணைபோட்டு இலை போட்டுப் பறிமாறுவது உண்டு//

  கேட்கவே மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. இப்படி சமைப்பவர்களுக்கும், சாப்பிடுபவர்களுக்கும் , பரிமாறுபவர்களுக்கும் அன்பு, பரிவும் இருந்தால் உடல்நலம் பாதிக்காது.
  உங்கள் வரவுக்கும், இனிய கருத்துக்களுக்கும் நன்றி சார்.
  பதிலளிநீக்கு
 16. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

  நீங்களும் இங்கு செல்வீர்களா?

  //தொடர்புடைய பதிவு ஒன்றிற்கு தங்களுடைய படங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமா!..//

  பயன்படுத்திக் கொள்ளுங்கள் சார்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. மிக அருமையான அழகான ருசியான பகிர்வு.

  பார்த்தாலே பசி தீரும் என்பார்கள்.

  ஆனால் இந்தப்பதிவின் மூலம் எனக்குப் பசியைக் கிளப்பி விட்டுள்ளீர்கள்.

  பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. வெகுகாலம் வரை [சமீபத்தில்கூட] எங்கள் ஊர் ‘சங்கர் கஃபே’ என்ற ஹோட்டலில், வயதான தாய்மார்களை விட்டு ஆட்டுக்கல்லில் மாவு அரைக்க வைத்து, தோசை இட்லி முதலியனவற்றை வீட்டில் செய்வது போலவே செய்து வழங்கி வந்தனர்.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

  உணவகத்தைப்பார்த்தவுடன் பசி வந்து விட்டதா?
  நல்லது.
  சங்கர் கஃபே போல்
  நிறைய வீட்டு முறை சாப்பாட்டுக்கடைகள் மதுரையிலும் உண்டு.
  ஆட்டுக்கல்லில் அரைத்த மாவில் மல்லிகைப்பூ இட்லி, குழிபணியாரம் எல்லாம் உண்டு.
  உங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 20. 2020?...

  யாரெல்லாம் என்னன்ன கருத்து சொல்லப்போகிறார்கள் என்று பார்ப்போம்...//
  இந்த கருத்தை இப்போதுதான் பார்த்தேன் சார்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 21. திருச்சியில் 1966-ம் ஆண்டு திருவெறும்பூரில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு எழுந்தேன். நான் சாப்பிட்ட இலையை எடுத்துத் தொட்டியில் போடச் சொன்னார்கள். அவரவர் சாப்பிட்ட இலையை அவரவரே எடுக்க வேண்டும் என்றிருந்தது. காசியில் சங்கர மடத்தில் அங்கே தங்கும் சிலரது வசதிக்காக நம் தென் இந்திய உணவு சமைத்துப் பரிமாறப்படும். தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். தர்மஸ்தலாவிலும் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.நான் போய் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகிறது.

  பதிலளிநீக்கு
 22. சாப்பாட்டுக் கடைச் சரித்திரம் நன்று....
  எங்களால் வாசிக்கத் தான் முடியும்.
  நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 23. உண்மைதான் கீழே உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் இப்பொழுது இல்லவே இல்லை.

  இப்படியே போனால் 2020 ல் சாப்பாடே கிடையாது ஏதாவது மாத்திரையை சாப்பிட்டுவிட்டுதான் போகவேண்டும்.

  அழகிய படங்களுடன் அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 24. உணவகங்களில் தரையில் அமர்ந்து சாப்பிடும் காட்சியை பார்த்ததில்லை, ஆனாலும் என் திருமணத்தின் போது, 1993 இல் தரையில்தான் அமர்ந்துதான் அனைவரும் சாப்பிட்டார்கள்
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். இந்த பக்கமும் அப்படி வீட்டு முறைப்படி உணவு பரிமாறும் ஓட்டல் உண்டு. அவர்கள் இலையை நீங்களே எடுத்து விடுங்கள் என்பார்கள்.

  ஆம், தர்மஸ்தலாவிலும் தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

  இப்போது பரிமாற வசதி, மக்களுக்கு கீழே அமரமுடியாத நிலையை உத்தேசித்து மேஜை சாப்பாடு ஆகிவிட்டது.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் ராம்வி, வாழ்க வளமுடன்.

  நீங்கள் சொல்வது போல் கீழே உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் மெல்ல குறைந்து வருகிறது.

  அம்மா, அப்பா, தம்பி, தங்கைகள் என்று அனைவரும் வட்டமாய் உட்கார்ந்து சாப்பிட்ட காலங்கள் கண்ணில் நிறைந்து இருக்கிறது.

  இப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரம் சாப்பிட வருகிறார்கள். சேர்ந்து சாப்பிடுவது அரிதாகி விட்டது.

  நீங்கள் சொல்வது போல், மூன்று வேலையும் மாத்திரை சாப்பிட்டால் போதும் என்ற காலம் வந்தாலும் வரும்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.  பதிலளிநீக்கு
 28. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும், தமிழமண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. வீட்டில் கூட நாம் சாப்பிட்ட தட்டை நாமே கழுவி வைத்தல் ஒரு நல்ல பழக்கம். (எத்தனை ஆண்பிள்ளைகள் இதைச் செய்கிறார்கள் என்பதே கேள்வி. திரைப்படங்களிலோ சாப்பிடும் ஆண்பிள்ளைகளுக்குக் கோபம் வந்து விட்டால் போதும். சோற்றிலேயே கைகழுவும் காட்சிகள் அதிகம்.) வெளிவீடுகளில் சாப்பிட்டால் கேட்கவே வேண்டாம். அவர்கள் வேண்டாம் என்றால் கூட கேட்காமல் வாஷ் பேசினைத் தேடி செய்து விடுவது நல்லது. அந்த வீட்டுப் பெண்மணி ஒருவித அசூயையுடன் நம் எச்சில் தட்டை எடுத்து ஸிங்கிங்கில் போட வேண்டாம் இல்லையா?.. ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையுமே வரவேற்க வேண்டியது.

  உணவகங்களில் நாம் சாப்பிட்ட இலையை நாமே எடுத்துப்போடும் பழக்கம் தஞ்சை மாவட்டத்தில் அதிகம். கும்பகோணத்தில் சின்னஞ்சிறிய உணவகங்களில் இந்த வழக்கம் உண்டு.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
  அவர் அவர் தட்டை அவர்களே கழுவிவைக்கும் பழக்கம் எங்கள் வீட்டுக்கும் பக்கத்து வீட்டில் இருந்த குடும்பத்தினர் செய்வார்கள்.

  எந்த வீட்டுக்கு சென்றாலும் அவர்கள் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்து விடுவார்கள்.

  எங்கள் அம்மாவும் சாப்பிட்ட தட்டு காயக் கூடாது, அதை அலசி வைக்க வேண்டும், வேலை ஆள் கழுவினாலும் அவர்களிடம் போடும் போது நீர் விட்டு அலசி பத்து இல்லாமல் போட வேண்டும் என்பார்கள். இல்லா கொடுமையால் கழுவ வருகிறார்கள் அவர்க்ளிடம் அப்படியே சாப்பிட்டது போல் போட கூடாது என்பார்கள். சாப்பிட்ட தட்டில் கை கழுவ கூடாது எழுந்து சென்று தான் கழுவ வேண்டும் என்பார்கள்.
  நல்ல பழக்க வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து வருகிறது.
  பெரியவர்கள் இளையவர்களுக்கு சிறுவயது முதலே பழக்க வேண்டும். இதில் ஆண், பெண் பேதம் பார்க்காமல்.

  //உணவகங்களில் நாம் சாப்பிட்ட இலையை நாமே எடுத்துப்போடும் பழக்கம் தஞ்சை மாவட்டத்தில் அதிகம். கும்பகோணத்தில் சின்னஞ்சிறிய உணவகங்களில் இந்த வழக்கம் உண்டு.//

  ஆம், சார் நீங்கள் சொல்வது போல் இந்த பக்கம் சின்னஞ்சிறிய உணவகங்களில் நாமே நம் இலையை எடுத்து போடும் பழக்கம் உண்டு.
  நன்றி மீண்டும் வருகைக்கும், கருத்துக்கும் சார்.

  பதிலளிநீக்கு
 31. எனக்கு 1973 பிப்ரவரி 7 ல் திருமணம் நடந்த போதும் கீழே அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் தான் இருந்தது.

  வாழ்த்துகள் சகோ

  பதிலளிநீக்கு
 32. எனக்கு 1973 பிப்ரவரி 7 ல் திருமணம் நடந்த போதும் கீழே அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் தான் இருந்தது.

  வாழ்த்துகள் சகோ

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் அன்பே சிவம், வாழ்க வளமுடன்.

  நீங்கள் கண்டு பிடித்து வாழ்த்தியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம்
  அம்மா
  கண்ணைக்கவரும் படங்களுடன் சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் த.ம 5 பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 36. அருமையான படங்கள்... பலவற்றை தெரிவிக்கின்றன...

  பதிலளிநீக்கு
 37. தங்களுக்கும் சாருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். பதிவுக்குள் அதை சொல்லியிருக்கும் விதம் அழகு.

  தலைப்புக்குப் பொருத்தமாக அந்தப் படங்கள் யாவும் நல்ல பகிர்வு. கீழே அமர்ந்து உண்ணும் ஓட்டல் நானும் பார்த்ததில்லை. சிறு வயதிலிருந்து கல்லூரி காலம் வரை வீட்டில் சாப்பாட்டு மேசை இருந்தாலும் எல்லோரும் கீழே அமர்ந்தே சாப்பிடுவோம். பெரியவர்கள் எனில் பந்தியில் வரிசையாக அமர்ந்து.., குழந்தைகள் எல்லாம் அம்மா அல்லது பெரியம்மாவைச் சுற்றி வட்டமாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

  பதிலளிநீக்கு
 38. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 39. கால மாற்றத்தை எவ்வளவு அழகாக படங்களின் மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினர் பலருக்கும் புதிய செய்திகளாக இருக்கும் அவை. பகிர்வுக்கு மிகவும் நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 40. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  வீட்டில் உறவினர் வந்து விட்டால் பந்தி ஜமுக்காளம், பந்தி பாய் விரித்து, அவர்களுக்கு குனிந்து நிமிர்ந்து பரிமாறுவோம்.

  நாம் அவர்களுக்கு பரிமாற அப்புறம் அவர்களை நமக்கு பரிமாற என்று மகிழ்ச்சியும் குதுகலமும் நிறைந்த நாட்கள். இப்போது நிறைய பேர் வந்து விட்டால் ஓட்டலில் ஆர்டர், அல்லது ஓட்டலுக்கு அழைத்து சென்று உணவு வாங்கி கொடுத்தல் நடக்கிறது.

  கீழே அமர்ந்து உண்ணும் கடைகள் இங்கு தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், குத்தாலம் போன்ற ஊர்களில் உண்டு.

  நம் ஊர் பக்கம் ஓட்டல் என்று வந்தது போத்தி ஓட்டல்தான் அவர்கள் மேஜை நாற்காலி போட்டு இருப்பார்கள், அல்லது டீக்கடை பெஞ்சுபோல் போட்டு நீண்ட மர மேஜை போட்டு இருப்பார்கள்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 41. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
  காலமாற்றங்கள் குழந்தைகளுக்கு தெரியவரும் என்பது உண்மைதான்.
  விவசாயநிலங்கள் விற்பனை ஆகி கொண்டே இருக்கிறது. உணவு பற்றாகுறை ஏற்படும் காலமாற்றத்தால்.
  யாருக்கும் நின்று நிதானமாக உணவை உட்க் கொள்ளக்கூட நேரமில்லை.
  ரமரவி சொன்னது போல்
  ஏதாவது ஒரு மாத்திரை உணவு தேவை எல்லாம் பூர்த்தி செய்யும் என்றால் அதை மட்டும் உட்க் கொண்டு வாழ பார்க்குமோ! சமூகம்.

  உங்கள் கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.

  பதிலளிநீக்கு
 42. நல்ல பகிர்வு...
  ஒரு சில ஹோட்டல்களில் கீழே அமர்ந்து சாப்பிட்டிருக்கிறேன்...
  டெம்பிள் சிட்டியிலும் ருசித்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 43. உணவகத்தினைச் சுற்றி வந்த உணர்வு.

  அருமையான வாசகங்களும் படங்களும்....

  ஹோட்டல்களில் கிழே அமர்ந்து சாப்பிட்ட நினைவில்லை......

  சமீபத்தில் குஜராத்தில் ஒரு இடத்தில் அப்படி சாப்பிட்டேன்...

  பதிலளிநீக்கு
 44. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.

  குஜராத்தில் இருக்கிறதா ?

  உங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 45. அழகான சித்திரங்களாக வைத்துள்ளார்கள். பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 46. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
  நலமா? நீங்கள் மீண்டும் வந்தது மகிழ்ச்சி. மகள் நலமா?

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 47. லேட்டா வருவதில் ஒரு நன்மை, எல்லாருடைய கருத்துகளையும் ஒரு சேர தெரிந்துகொள்ள முடிகிறது. (ஸ்ஸப்ப்பா...சமாளிச்சுட்டேன்... :-) )

  சின்ன வயதில், சில மெஸ்களில் தரையில் உட்காரவைத்து சாப்பாடு போடுவதையும், இலையை சாப்பிட்டவர்களே எடுத்துப் போடுவதையும் கவனித்திருக்கிறேன். இப்போல்லாம், கீழே இருந்த் சாப்பிடச் சொன்னால் அது தரம் குறைந்த ஹோட்டல் என்று நினைத்து விடுகிறார்கள்!! அதனாலேயே அப்படி ஒரு ஹோட்டலும் இல்லை போல...

  பதிலளிநீக்கு
 48. ஆனால், எங்கள் ஊரில் இன்றும் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஒரு சில குடும்பங்களில் மட்டுமே மேசை நாற்காலி பழக்கம் உள்ளது. ஆனால், கண்டிப்பாக கல்யாண வீடுகளில் தரையில் அமர்ந்துதான், அதுவும் ஒரு பெரிய தட்டில் 3-4 பேர் அமர்ந்து சாப்பிடணும். எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் சரி!! வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் டேபிள்-சேர் போடுவோம்.

  பெரிய கூட்டுக் குடும்பங்களிலும் தினப்படியாகவும் மற்றும் சின்னச் சின்ன விசேஷங்களின்போதும் இன்றும் இந்த பெரிய தட்டில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கம் இருக்கிறது. மிகவும் ரசித்து உண்ணலாம். பேசிக் கொண்டே, இன்னுங் கொஞ்சம் சாப்பிடு என்று சோற்றை நம் பக்கம் தள்ளி விடுவார்கள். கடைசியில், எழும்ப முடியாத அளவுக்கு உண்டு விடுவேன்.

  பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது, நிறைய சாப்பிடுவார்கள். சண்டையும் நடக்கும். சிறப்பான நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 49. வணக்கம் ஹுஸைனம்மா, வாழ்கவளமுடன்.
  நான் ஊருக்கு போய் இருந்தேன். இன்று தான் வந்தேன். உங்கள் பின்னூட்டங்களைப்பார்த்தேன்.
  நீங்கள் சொல்வது போல் காலம் மாறியவுடன் கீழே அமர்ந்து சாப்பிடும் ஓட்டல் தரம் குறைந்த ஓட்டலாக கருதுகிறார்கள் போலும்.


  உங்கள் திருமணங்களில் பெரிய தட்டில் உறவினர்கள் சேர்ந்து உணவு உண்பதை பார்த்து இருக்கிறேன்.
  அப்போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி, அன்பு ,குதுகலம் எல்லாம கலந்தகலவையை கண்டு மகிழ்ந்து இருக்கிறேன். குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டு பேசி, சிரித்து சாப்பிடும் போது உணவின் அளவு தெரியாமல் சாப்பிடுவது சகஜம் தான்.

  நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஹுஸைனம்மா.

  பதிலளிநீக்கு
 50. மிக அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

  நேரம் கிடைக்கும் பொழுது எனது வலைப்பூவுக்கும் வாருங்கள்.எனது இன்றைய பதிவு முட்டை 65 போன வாரத்து பதிவு அபியும் நானும் !!!

  பதிலளிநீக்கு