சனி, 17 ஜனவரி, 2015

கீழச் சூரிய மூலை அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம்

பொங்கல் திருநாள் அன்று (15/01/2015) நாங்கள் கீழச்சூரிய மூலை என்ற ஊரில் உள்ள அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று இருந்தோம்.,
இக் கோயில் கும்பகோணத்தில் இருந்து 15.கி.மீ தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலுக்கு அருகே கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து இவ்வூர் அமைந்துள்ளது.

கீழச்சூரிய மூலை என்றகிராமத்தில் அருள்மிகு பவளக்கொடி அம்பிகை சமேத ஸ்ரீ சூரிய கோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.




 தன் வாழ்நாளெல்லாம் தமிழுக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும் , ஓலைச்சுவடிகளிலிருந்து சங்க நூல்களையும் , காப்பியங்களையும் நூலாக அச்சிலேற்றி தமிழ் உலகுக்குத் தந்தவருமாகிய, தமிழ்த் தாத்தா டாக்டர் .உ.வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர் ,கீழச் சூரிய மூலையாகும். கோவிலில்  அவரின் ஓவியம் வரைந்து வைத்து இருக்கிறார்கள். அவர் வீடு இருந்த தெருவே இப்போது இல்லையாம்.

கீழச்சூரிய மூலைகோவிலின் சிறப்பு :--

கருவறையில் ஈச்வர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான “ஏகமுக”
ருத்திராட்சத்தினால் ஆன பந்தல் உள்ளது.
                அருள்மிகு  சூரிய கோடீஸ்வரர்                    
அருள்மிகு பவளக்கொடி அம்பிகை 
ஸ்வாமிக்கு நேரே  மண்டபத்தில் நந்தி இருக்கிறார்.

இங்குள்ள மூலவரை , காலை முதல் மாலைவரை சூரிய பகவான் தன் பொன்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கேற்ப சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை  மூலவரின் நிழல் சுவரில் தெரியுமாம். குருக்கள் கண்ணாடி வைத்து சூரிய ஒளியைக் காட்டினார். 


பிரதோஷ காலத்தில் சூரியன் இறைவனைத் தரிசிக்க அருள்புரிந்த ஸ்ரீ காலபைரவர்  மிகவும் விஷேசமானவர்.  இவர் சொர்ணபைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த பைரவருக்கு  தீபாராதனை காட்டும் போது அவரது கண்டத்தில் சிறிதாக  பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுகிறது. அது தீபாராதனையின் போது மெல்ல அசைவது போல் இருக்கும். இதைக் குருக்கள்  விவரித்து தீபாராதனை செய்து காட்டினார்.

இந்த பைரவரின் கண்டப்பகுதி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுவதும், பின் பழைய நிலையை அடைவதும் இததலத்தின் சிறப்பு. இத் தலத்தின் பைரவரை தரிசனம் செய்தால் பக்தர்களின் கண்டம் நீங்குமாம்.

பைரவரின் கழுத்தில் தெரியும் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய , சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும் , பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாம்.

தெற்கு கோஷ்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னைகைத்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு மேலே உள்ள சர்ப்பத்தின் ஒரு தலையில் ஆஞ்சநேயரின் முகம் தெரிகிறது
இங்கு உள்ள துர்க்கைக்கு ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் வலது காலை முன் வைத்து எழுந்து வரவேற்கிறாளாம்.


கோயிலைச்சுற்றி வந்தபின் தான் குருக்கள் சொன்னார் துர்க்கையின் சிறப்பை .முன்பே சொல்லி இருந்தால் கால் விரலை குளோசப்பில் எடுத்து இருக்கலாம்.
வெளிப்பிரகாரத்தில் பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் முருகன், 






சுந்தர மஹாலக்ஷ்மி
சண்டேஸ்வரரின் கால் பகுதியில் சூரியஒளி

நவக்கிரகங்கள் தங்கள் வாகனத்துடன் இருக்கிறார்கள்








மேலும்  கோவிலின் சிறப்புகள்   ;-

ஸ்ரீ யாக்ஞவல்கியருடைய வேதமந்திர சக்திகளெல்லாம் ஸ்ரீ சூர்ய கோடீஸ்வரருடைய திருவடிகளிலே ஓர் அற்புத விருட்சமாய் மலர்ந்த
இலுப்பை  மரம்தான் இக்கோவிலின் தலவிருட்சமாகும்.

சூரிய தோஷம் , மனசஞ்சலம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்குமாம்.

பார்வைக்குறைகள், பலவிதமான கண் நோய் உடையவர்கள் பிரதோஷவழிபாட்டையும், ஞாயிற்றுக்கிழமை காலை 6-7 சூரிய ஹோரை நேரத்தில் பூஜையையும் செய்தால் கண்  நோய்களிலிருந்து தீர்வு பெறலாம் என்றும், அன்னதானம் செய்தால் நம் முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும் அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும் என்றும் குருக்கள் கூறினார்.

சுக்கிராச்சாரியார் தான் இழந்த கண்பார்வையை திரும்பவும் பெற, ஆதித்யஹ்ருதய  மந்திர ஹோம பூஜைகளைச் செய்த ஸ்தலம் இது.

ஸ்ரீராமர் தசரதருக்கு  ஈமக்கடன்களை ஆற்ற இயலாமற் போனதால் அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க 108 புனித விருட்சங்களின்  கீழ் ஸ்ரீராமர் தர்ப்பணம் செய்தார். அப்படி இலும்பை மரத்துக்கு கீழ் செய்த தலம் கீழச்சூரிய மூலையாகும்.

 இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வதால் பித்ரு சாப நிவர்த்தி கிடைக்கும்.
இக்கோவிலில் ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை ஓதி வழிபட்டால் சாந்தமும், மனநிம்மதியும் கிடைக்கும்  என்று தலவரலாறு கூறுகிறது என்று சொன்னார் குருக்கள்.

கும்பகோனத்திலிருந்து  திருலோகி செல்லும் டவுன் பஸ் 38ல்  கோவிலுக்கு செல்லலாம். ஆடுதுறை, திருப்பனந்தாளிலிருந்து ஆட்டோ, கார் வசதிகள் உண்டு. அம்பிகா சர்க்கரை ஆலையிலிருந்து 2கி.மீ வடக்கே உள்ளது.

                                                           வாழ்க வளமுடன்

                                      =================================


27 கருத்துகள்:


  1. விளக்கவுரைகளுடன், புகைப்படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் வாழ்க வளமுடன்.முதலில் வந்து படித்து கருத்து சொல்லி , தமிழ்மண வாக்கு அளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமையான புகைப்படங்களுடனும், தெரியாத விவரங்களுடனும் பதிவு அருமை. எவ்வளவு சிறப்புகள்?

    பதிலளிநீக்கு
  4. கீழ்க்கோடி சூர்ய மூலை தலத்தைப் பற்றிய விவரங்கள் அருமை.. அழகான படங்கள்.. நேரில் தரிசனம் செய்தது போல இருக்கின்றது. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    பக்கத்தில் இருக்கிறது, இவ்வளவு சிறப்புகள் கொண்ட கோவில் இப்போது தான் பார்க்க முடிந்தது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    அம்மா.

    ஆலயம் பற்றி சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது... நானும் வழிபட்டது போல ஒரு உணர்வு.. பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
    போகும் வழி எல்லாம் இயற்கை காட்சி அருமையாக இருக்கிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    அம்மா
    த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
    நீங்களும் வழிபட்டது மகிழ்ச்சி.
    கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. கோயிலில் உ.வே.சா அவர்களின் ஓவியம் நெகிழ்ந்து போனேன் சகோதரியாரே நன்றி

    பதிலளிநீக்கு
  11. வணக்கம், கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

    நானும் உ.வே.சா அவர்களுக்கு ஓவியம் வரைந்து மரியாதை செய்து இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அழகான படங்களுடன் விளக்கங்கள்...

    வாழ்த்துக்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. // தன் வாழ்நாளெல்லாம் தமிழுக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும் , ஓலைச்சுவடிகளிலிருந்து சங்க நூல்களையும் , காப்பியங்களையும் நூலாக அச்சிலேற்றி தமிழ் உலகுக்குத் தந்தவருமாகிய, தமிழ்த் தாத்தா டாக்டர் .உ.வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர் ,கீழச் சூரிய மூலையாகும்.//

    இந்த செய்தியைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரைப்பற்றிய வாழ்க்கை வரலாறு முழுவதும் சின்ன வயதில் படித்து, அவர்பட்ட கஷ்டமெல்லாம் நினைத்து வருந்தியுள்ளேன். சூரியனார் கோயிலுக்கும், கஞ்சனூருக்கும், இதர நவக்கிரஹக்கோயில்கள் அனைத்துக்கும் சென்று வந்துள்ளேன். ஆனால் இங்கு சென்றது இல்லை. தங்களின் இந்தப் பதிவினில் நேரில் போய்வந்தது போல திருப்தியாக உள்ளது..

    //கோவிலில் அவரின் ஓவியம் வரைந்து வைத்து இருக்கிறார்கள். //

    மிக்க மகிழ்சியான இனிய செய்தி.
    தங்களால் நாங்களும் அவரின் ஓவியத்தில் அவரை இன்று மீண்டும் கண்டுகளிக்க முடிந்ததில் திருப்தியே.

    //அவர் வீடு இருந்த தெருவே இப்போது இல்லையாம்.//

    இது மிகவும் கொடுமை. யார் யாரெல்லாமோ இன்று தமிழைக் கட்டிக்காத்து வருவதாகச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    உண்மையிலேயே தமிழ்த்தொண்டுக்காகவே தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டவருக்கு இந்த கதி :(

    உழைக்கத் தெரிந்தவருக்குப் பிழைக்கத் தெரியாது. பிழைக்கத்தெரிந்தவருக்கு உழைக்கத் தெரியாது. இதுதான் உலகம்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  15. கோயிலைப்பற்றிய படங்களும், அதன் வரலாற்றுச் சிறப்புகளும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது சரிதான்.
    உழைக்க தெரிந்தவர்களுக்கு பிழைக்க தெரியாது தான்.
    பிறருக்கு தொண்டு செய்யும் மனம் உள்ளவர்கள் தன்னலத்தை பெரிதாக நினைக்க மாட்டார்கள்.


    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  17. சிறப்பான ஒரு கோயிலைப் பற்றி அறிந்துகொண்டேன்! அழகான படங்கள்! விரிவான தகவல்கள்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.

    உங்கள வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. சிறப்பு வாய்ந்த கோவில் பற்றி அருமையாக விவரம் தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் கே,பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  21. உ.வே.சா. ஊர் இதுவா? கும்பகோணத்துக்காரர் ஆன என் கணவருக்கே இப்போ நான் சொல்லித் தான் இந்தக் கோயில் தெரிந்தது. முடிந்தால் போகணும். அருமையான தகவல்கள். படங்கள் எல்லாம் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  22. முகநூலில் பார்த்துட்டு ஓடி வந்தேன். :)

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் கீதா , வாழ்க வளமுடன்.
    எங்கள் சாரும் இப்போது தான் இந்த கோவிலைப் பற்றி தெரிந்து கொண்டு அழைத்து சென்றார்கள். போன் நம்பரில் பேசி விட்டு போக வேண்டும்.

    பொங்கல் அன்று கூட்டம் இருக்கும் என்று நினைத்து போனோம், ஆனால் நாங்கள் இரண்டு பேர் மட்டும் தான்.
    குருக்கள் அபிஷேகம் செய்து கொண்டு இருந்தார். எங்களுக்கு பூஜை செய்து விட்டு வேறு கோவிலுக்கு கிளம்பி விட்டார்.
    திறந்திருக்கும் நேரம் காலை 6.மணி முதல் 12 என்றும், மாலை 4 மணி முதல் 7 மணி வரை என்று போட்டு இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. நாங்கள் செல்லும் கோயில் உலாவின்போது இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. ஆச்சரியமூட்டும் தகவல்களுடன் அருமையான பகிர்வு. ஏகமுக உத்திராட்சப் பந்தல் பார்க்க அழகாக இருந்திருக்கும். கோவிலின் சிறப்புகளை அறியத் தந்திருப்பதற்கும் படங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி. சாமி அலங்காரம் என்ன ஒரு நேர்த்தி! அழகு! அருமையாகப் படமாக்கிக் காணத் தந்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு