சனி, 4 ஆகஸ்ட், 2012

காத்திருந்து, காத்திருந்து!


காத்திருந்து காத்திருந்து -என்ற தலைப்பு நல்ல பிரபலமான பாட்டை நினைவு படுத்துகிறதா!

எங்கள் வீட்டு  மொட்டை மாடிக்கு  இரண்டு பக்கமும் மாடிப்படி உள்ளது. அதில் ஒரு மாடிப்படியின்  கீழ்ப்பகுதியில்  மோட்டர் சுட்ச்சின் பக்கம் பறவை கூடு கட்டிக் கொண்டு இருந்தது.  மின்சார ஒயரில் பயமில்லாமல் கூடு கட்டி இருப்பது ஆச்சிரியமான உண்மை. தேங்காய் நார், சிறிய காய்ந்த குச்சிகள் வைத்து கட்டி இருந்தது.





 


 

அணிலும், புல் புல்லும் 

கூடு கட்டும் பறவை  என்ன பறவை என்று காத்திருந்து கண்டுபிடித்தேன், முதலில்.  தலையில் சிறிய கொண்டை உள்ள   அந்தக்கருப்புக்குருவியின் பெயர்  புல் புல்      (    BUL BUL ) என்று என்று  கூகுள் மூலம் அறிந்தேன். அது முட்டைகள் இட்டு வைத்து, அடை காப்பதை  இரவு நேரத்தில் போய்ப் பார்க்கப் போனால், தன் வாலை மட்டும் காட்டிக் கொண்டு தன்னைக்  கூட்டுக்குள்  நுழைத்துக் கொள்கிறது.  குஞ்சு பொறித்த பின் உணவு கொடுக்க வரும் போது படம்


தாய்க் குருவியும், தகப்பன் குருவியும் 



எடுப்பதற்காக தினம் பார்த்து வருவேன்.  நான்  காத்து இருக்கும்
போது வராது.  ஒருநாள்  பறவைகளுக்காக நான்மாடியில் வைத்திருந்த உணவை, காலையில் கொத்திக்கொண்டு இருந்தன, அந்த குருவிகள்.  அந்தக் குருவிகளின் பின்னே போய் ஒளிந்து கொண்டு எடுத்தேன்.

இந்த பன்னீர் மரத்தில் தான் அமர்ந்து தேன், புழு பூச்சிகளை தன் குஞ்சுகளுக்குஎடுத்து வரும்.



என் அசைவு கொஞ்சம் தெரிந்தாலும் பறந்து  விடுகிறது.  எத்தனை நாட்கள் படியில் இறங்கி , ஏறி , ஒளிந்து , மறைந்து காத்திருந்து எடுத்தேன்.
தாய்க்குருவி, தந்தைக் குருவி இரண்டும் பக்கத்தில் இருக்கும்,
பன்னீர் மரத்தில்  பன்னீர் புஷ்பத்தில் உள்ள தேன் எடுத்து கொடுக்கும்,
அதில் உள்ள புழு, பூச்சியை எடுத்து கொடுக்கும். என் கை கேமிரா சின்னது.  நல்ல ஜூம் செய்ய முடியாது, ஓரளவு தான் செய்ய முடியும். ஏதோ எனக்கு ஆசை.

காடுகளில்,போய் விலங்குகள், பறவைகளை எடுப்பவர்கள் எவ்வளவு

கஷ்டப்பட்டு வெகு நாட்கள் காத்திருந்து எடுக்கிறார்கள். அதற்கு சற்றும் குறைந்தது இல்லை என் காத்திருப்பு. பக்கத்து வீட்டில் உ ள்ளவர்கள் ,என் கணவர் எல்லாம் காமிராவும் கையுமாய் நான் அலைவதைப் பார்த்து  சிரிப்பு- இந்த காமிராவில் நல்லா எடுக்க முடியாது என்று. ஆனாலும்  என் ஆசை குறைய வில்லையே!.

புதன் கிழமை திருச்செந்தூர் சென்றோம்.  அங்கு முருகன்கோவில் எதிரில் நிறைய பெண் மயில், ஆண்மயில் நின்று கொண்டு இருந்தன. மாலை ஐந்து மணி இருக்கும். அப்போது ஒரு ஆண் மயில் தோகை விரித்து வெகு நேரம்












ஆடியது . எல்லோரும் நின்று பார்த்தும், காமிராவிலும்,

செல் காமிராவிலும் எடுத்துக் கொண்டு இருந்தார்கள்






சூரியஒளி தன் பின்புறம் விழும் படி ஆடியது.  அதனால் சரியாகத் தெரியவில்லை.  பின் புறம் ஈச்ச மரத்தின் விரிந்து கிடந்த தோகையும், மயிலின் தோகையும் ஒரே போல் இருந்ததால் சரியாகத் தெரியவில்லை.
முதலில் பின் பாகம் தெரிவது போல் ஆடிக் கொண்டு



இருந்தது. வெகு நேரம் காத்திருந்த பின் முன் பக்கம்காட்டி ஆடியது.  மக்கள் உற்சாக ஆரவாரம் செய்தார்கள். மயில்கள் ,தோரணவாயிலில் இருந்து எதிர்க்கட்டிடத்திற்கும், அங்கிருந்து இங்கும் மாறி மாறிப் பறந்து  பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. குமரன் அருகில் இருப்பதால் மகிழ்ச்சியில் அடிக்கடி  அகவிக் கொண்டு இருந்தது.

அங்கே ஒரு நாய் தன் ஏழு  குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டு இருந்தது. அதையும் எடுத்தேன் பக்கத்தில் போகாதே தூரத்திலிருந்து எடு என்று கணவர் சொன்னார்கள்.  நேரே பார்த்து எடுக்க முடியவில்லை. சைடிலிருந்து தான் எடுத்தேன்.





திருச்செந்தூர்  கடற்கரையில்  ஒரு நட்சத்திர மீனை  அலை அடித்துக் கொண்டு வந்தது. அதை சில சிறுவர்கள் கையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள்  தயவு செய்து கடலில் விட்டு விடுங்கள், உயிர் இருக்கிறது  என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் பார்த்தபின் கடலில் விடப்பட்டது நட்சத்திர மீன்.

 கடவுளின் படைப்பில்  ஒரு  அற்புதம் நட்சத்திர மீன். சிவப்பு கலர் தூரிகையால் ஓரத்தில் வரைந்த  மாதிரி இருந்தது.  பின் பக்கம் திருப்பிப் பார்த்தால் குட்டி குட்டி கால்கள் அசைவது பார்க்க அதிசயமாய் இருந்தது. தொட்டுப்பார்த்தேன்.

படங்களை ஜூம் செய்து பாருங்கள். புல் புல் பறவை  நான் எடுத்த படத்தில் சரியாகத் தெரியவில்லை என்றால் கூகுளில் பாருங்கள்.  புல்புல் பறவை நிறைய ரகங்கள் இருக்கிறது. எங்கள் வீட்டில் உள்ளது தலைப் பகுதி கழுத்து வரை நல்ல கருப்பு. தலையில் கருப்புச் சிறு கொண்டை. உடலின் அடி பகுதியில் லேசாக சிவப்பு  கலரில் இருக்கும்.

காத்திருந்து காத்திருந்து படங்கள் எடுத்ததில் மனது மகிழ்ச்சி அடைகிறது . அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறேன்.

                                                            வாழ்க வளமுடன்.

45 கருத்துகள்:

  1. இவ்வளவு பொறுமையா எல்லாபடங்களையும் காத்திருந்து எடுத்தது வீண்போகலே. ரொம்ப நல்லா வந்திருக்கு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. வாங்க லக்ஷ்மி அக்கா, பதிவு போட்டவுடன் வந்து உற்சாக பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் ஆசையும், ஆர்வமும், பொறுமையும், படங்களில் இல்லாவிட்டாலும், எழுத்துக்களில் நன்கு பளிச்சென்று தெரிகிறது, மேடம்.

    தொடரும்....

    பதிலளிநீக்கு
  4. அந்த நாயையும் அதன் குட்டிகளையும் நன்றாகவே படம் பிடித்துள்ளீர்கள்.

    அதுபோல அந்த நட்சத்திர மீன் படமும் நல்லாவே எடுக்கப்பட்டுள்ளது.

    பாராட்டுக்கள்.

    தொடரும்....

    பதிலளிநீக்கு
  5. //தாய்க் குருவியும்,
    தகப்பன் குருவியும்//

    ;)))))

    //என் கை கேமிரா சின்னது. நல்ல ஜூம் செய்ய முடியாது, ஓரளவு தான் செய்ய முடியும். ஏதோ எனக்கு ஆசை.//

    என்னிடம் நல்லதொரு கேமிரா உள்ளது. அதில் ஜூம் முதலிய பலவித காரியங்கள் செய்ய முடியும்.
    இருந்தாலும் நம் “மணிராஜ்” என்ற பதிவினில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தரும் மிகவும் RICH ஆன பளீச் பளீச் போட்டோக்களைப் பார்த்தால் எனக்கு சமயத்தில் மிகவும் பொறாமையாகக்கூட இருக்கும்.

    கேமிராவும் நல்லதாக இருக்க வேண்டும். அதை சரியான முறையில் பயன் படுத்தும் டெக்னிக்கும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

    என்ன செய்வது? ஏதோ தாங்கள் ஆசையாக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு, காத்திருந்து காத்திருந்து, போட்டோக்கள் எடுத்துப் பகிர்ந்து கொண்டதற்கு உங்களை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

    தொடரும்.....

    பதிலளிநீக்கு
  6. //இந்த பன்னீர் மரத்தில் தான் அமர்ந்து தேன், புழு பூச்சிகளை தன் குஞ்சுகளுக்குஎடுத்து வரும்.//

    பன்னீர் மரத்தை நன்கு கலர்ஃபுல்லாக படம் எடுத்துள்ளீர்கள்.

    மயில் படங்களைவிட தங்களின் வர்ணனை மிக அருமையாக உள்ளது.

    மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கும் தகவலுக்கும்
    என் நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  7. பறவைகள் புகைப்படம் எடுக்கக் காத்திருந்து தான் ஆகவேண்டும். ஆனாலும் புகைப்படம் எடுத்து அதைப் பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லையே.... :)

    நல்ல பகிர்வும்மா...

    த.ம. 1

    பதிலளிநீக்கு
  8. ஆ, வீட்டுல பறவை கூடு கட்டி, குஞ்சும் பொரிச்சுருக்குதா? பொறாமையா இருக்கு!! எங்க வீட்டுலயும் ஒரு படை அளவு குருவி, புறா, புல்புல் எல்லாம் வருது. ஆனா, எதுவுமே கூடு கட்டலை. ஏன்னு தெரியலை. :-((

    நிஜமாவே இந்தப் படங்களுக்கு நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். இதுவரை ஒரு குருவியைக் கூட என்னால படம்பிடிக்க முடியலை... ஓடிடும்!!

    இங்கேயும் ஒரு பார்க்கில் மயில் தோகை விரித்ததைப் படம்பிடித்து வைத்திருக்கிறேன். தெளிவின்மையால் போடவில்லை.

    புல்புல், மயில், நாய், நட்சத்திரமீன்.. கலந்துகட்டி அடிச்சுருக்கீங்க... “இராமநாராயணன் படம்” பார்த்த ஃபீலிங்!! :-))))))

    பதிலளிநீக்கு
  9. அருமையான படக்காட்சிகளை தந்தமைக்கு நன்றிகள் பல சகோதரி.

    பதிலளிநீக்கு
  10. காத்திருந்து காத்திருந்து படங்கள் எடுத்ததில் மனது மகிழ்ச்சி அடைகிறது . அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறேன்.
    //அழகான படங்கள்.அருமையான பகிர்வு.உங்கள் பொறுமைக்கு ஒரு ராயல் சல்யூட் கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் இதுபோல படங்கள் எடுத்து பகிர எண்ணம் வரும்.. ஆனால் என்னிடத்தில் கேமரா இல்லை.

    படங்களோடு பொருந்துகிற மாதிரியான தங்களின் எழுத்துகளும் எனக்குப் பிடித்திருந்தது. பகிர்வுக்கு நன்றி..!

    பதிலளிநீக்கு
  12. படங்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று புரிகிறது.... பாராட்டுக்கள்... (த.ம. 2)

    அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  13. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், நான்கு பின்னூட்டங்கள் போட்டு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அளித்தமைக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன்.

    காலை நேரம் இருள் பிரிந்து வெளிச்சம் வரத்துவங்கும் நேரம் தினம் பறவைகளுக்கு உணவு வைப்பேன். கீழே உட்கார்ந்து கொண்டு அந்த பறவைகளுக்கு தெரியாமல் என்னால்
    இவ்வளவு தான் படம் எடுக்க முடிந்தது.

    மாடிப்படி கீழ் இருட்டு வேறு. அதனால் பறவை உணவு கொடுக்கும் போது எடுத்த படங்களுக்கு பிளாஸ் வெளிச்ச குறைவால் தெளிவாகத் தெரியவில்லை.(எடுக்கும் ஆவலில் சார்ஜ் குறைந்ததை கவனிக்க வில்லை)

    எனக்கும் தெரியும் என்னைவிட நன்றாக எடுப்பவர்கள் பதிவுலகில் நிறைய இருக்கிறார்கள் மதிப்புக்குறிய திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் , திருமதி. ராமலக்ஷ்மி, திருமதி. அமைதிச்சாரல் எல்லாம் அருமையாக போட்டோ எடுப்பவர்கள்.

    //கேமிராவும் நல்லதாக இருக்க வேண்டும். அதை சரியான முறையில் பயன் படுத்தும் டெக்னிக்கும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.//


    நான் நல்ல கேமிரா வாங்கி நல்ல படம் எடுக்க கற்றுக் கொண்டு எடுப்பதற்குள் பறவை பறந்து விடுமே!
    அதனால் தான் சுமாராக இருக்கிறது என்று தெரிந்தே பதிவிட்டுஇருக்கிறேன்.

    கற்றுக் கொள்ளும் மாணவி நான் .
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. //நான் நல்ல கேமிரா வாங்கி நல்ல படம் எடுக்க கற்றுக் கொண்டு எடுப்பதற்குள் பறவை பறந்து விடுமே!//

    ஆஹா! நல்லதொரு நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள். ;)))))

    //கற்றுக் கொள்ளும் மாணவி நான்//

    நானும் உங்களைப்போலவே தான்.

    கற்றது கைமண் அளவே!
    கல்லாதது உலகளவு தான்!!

    //திருமதி. ராமலக்ஷ்மி, திருமதி. அமைதிச்சாரல் எல்லாம் அருமையாக போட்டோ எடுப்பவர்கள்.//

    அதுதான் உலகறிந்த விஷயமாச்சே!

    THEY ARE EQUAL TO PROFESSIONAL PHOTOGRAPHERS! ;)))))

    தவறாக ஏதும் எடுத்துக்கொள்ளாமல் அழகாக பொறுமையாக அளித்துள்ள தங்களின் பதிலுக்கு நன்றிகள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  15. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பின்னூட்டங்கள் எப்போதும் என்னை மேலும் எழுத தூண்டும் .
    அது போல் தான் இதுவும்.
    உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க வெங்கட், ஆம், நீங்கள் சொல்வது உண்மை தான். நாம் படம் எடுத்து அதை பார்க்கும் போது அளவில்லா மகிழ்ச்சி தான்.
    நன்றி வெங்கட், தமிழ்மண ஓட்டுக்கு.

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஹுஸைனம்மா,

    //நிஜமாவே இந்தப் படங்களுக்கு நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.//
    உண்மைதான்.

    பறவை கையில் காமிரா இருக்கும் போது வராது, நான் காமிரா இல்லாமல் போகும் போது வரும்.
    குஞ்சுகள் அம்மாவின் சொல் பேச்சு கேட்கும் குஞ்சுகள் அனாவசியமாக தலையை வெளியே நீட்டாது.

    பக்கத்தில் போய் எடுத்தால் நன்றாக இருக்கும், ஆனால் போக முடியாது.

    நாங்கள் ஏறி வரும் மாடி என்றால் பரவாயில்லை எவ்வளவு நேரம் என்றாலும் உட்கார்ந்து இருக்கலாம்.
    இது உங்கள் குடி இருப்பில் வேறு குடித்தனக்காரர்கள் இருக்கும் மாடிப்படி அதில் எல்லோரும் ஏறி , இறங்கி கொண்டு இருக்கும் போது அங்கேயே உட்கார்ந்து இருப்பது கஷ்டம்.
    கிடைத்த அவகாசத்தில் எடுத்த படங்கள்.

    //புல்புல், மயில், நாய், நட்சத்திரமீன்.. கலந்துகட்டி அடிச்சுருக்கீங்க... “இராமநாராயணன் படம்” பார்த்த ஃபீலிங்!! :-)))))) //

    ஆனலும் ரொம்பதான் வஞ்ச புகழ்ச்சி செய்கிறீர்கள்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  18. வாங்க ஹுஸைனம்மா,

    //நிஜமாவே இந்தப் படங்களுக்கு நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.//
    உண்மைதான்.

    பறவை கையில் காமிரா இருக்கும் போது வராது, நான் காமிரா இல்லாமல் போகும் போது வரும்.
    குஞ்சுகள் அம்மாவின் சொல் பேச்சு கேட்கும் குஞ்சுகள் அனாவசியமாக தலையை வெளியே நீட்டாது.

    பக்கத்தில் போய் எடுத்தால் நன்றாக இருக்கும், ஆனால் போக முடியாது.

    நாங்கள் ஏறி வரும் மாடி என்றால் பரவாயில்லை எவ்வளவு நேரம் என்றாலும் உட்கார்ந்து இருக்கலாம்.
    இது உங்கள் குடி இருப்பில் வேறு குடித்தனக்காரர்கள் இருக்கும் மாடிப்படி அதில் எல்லோரும் ஏறி , இறங்கி கொண்டு இருக்கும் போது அங்கேயே உட்கார்ந்து இருப்பது கஷ்டம்.
    கிடைத்த அவகாசத்தில் எடுத்த படங்கள்.

    //புல்புல், மயில், நாய், நட்சத்திரமீன்.. கலந்துகட்டி அடிச்சுருக்கீங்க... “இராமநாராயணன் படம்” பார்த்த ஃபீலிங்!! :-)))))) //

    ஆனலும் ரொம்பதான் வஞ்ச புகழ்ச்சி செய்கிறீர்கள்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  19. வாங்க அறிவுக்கடல். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா.
    வாங்க சேட்டைக்காரன், நீங்கள் மறுபடியும் பதிவுலகத்திற்கு வந்தமைக்கு நன்றி.
    என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.
    நிறைய எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. /அழகான படங்கள்.அருமையான பகிர்வு.உங்கள் பொறுமைக்கு ஒரு ராயல் சல்யூட் கோமதிம்மா.//

    வாங்க ஸாதிகா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. //எனக்கும் இதுபோல படங்கள் எடுத்து பகிர எண்ணம் வரும்.. ஆனால் என்னிடத்தில் கேமரா இல்லை. படங்களோடு பொருந்துகிற மாதிரியான தங்களின் எழுத்துகளும் எனக்குப் பிடித்திருந்தது. பகிர்வுக்கு நன்றி..!//

    வாங்க தங்கம் பழனி, உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    விரைவில் காமிரா வாங்கி படங்களுடன் பதிவிட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. படங்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று புரிகிறது.... பாராட்டுக்கள்... (த.ம. 2)

    அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...//

    வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் பாராட்டுக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.
    நண்பர்கள் தின வாழ்த்துக்கும் நன்றி.
    எல்லோருக்கும் நானும் சொல்லிக்கிறேன் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  23. பொறுமையுடன் படம் எடுத்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா.முயற்சி திருவினையாக்கும் தங்கள் அனுபவம் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  24. காத்திருந்து .....காத்திருந்து நீங்கள் எடுத்த படங்கள் அருமை.
    குருவி குடும்பம் இருப்பது மகிழ்ச்சி.

    நீங்க கூறியதுபோல பறவைகள், மிருகங்களை படம் எடுக்க நாம் படும் பாடு எடுக்கும் போதுதான் தெரியும் :))

    பதிலளிநீக்கு
  25. பொறுமையுடன் படம் எடுத்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா.முயற்சி திருவினையாக்கும் தங்கள் அனுபவம் பாராட்டுக்குரியது.//

    வாங்க இந்திரா, உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    நீங்களும் எழுதலாமே
    வலைத்தளத்தில்.

    பதிலளிநீக்கு
  26. காத்திருந்து .....காத்திருந்து நீங்கள் எடுத்த படங்கள் அருமை.
    குருவி குடும்பம் இருப்பது மகிழ்ச்சி.

    நீங்க கூறியதுபோல பறவைகள், மிருகங்களை படம் எடுக்க நாம் படும் பாடு எடுக்கும் போதுதான் தெரியும் :))//

    வாங்க மாதேவி, நீங்கள் சொல்வது உண்மை. படம் எடுக்கும் போது தான் கஷ்டம் தெரிகிறது.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  27. ரொம்ப சிரமப்பட்டு எடுத்தது வீண் போகலை. அருமையா வந்துருக்குது படங்கள். குறிப்பா நட்சத்திர மீன்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க அமைதிச்சாரல், நட்சத்திரமீன் நல்லாஇருக்கா மகிழ்ச்சி.

    சிறிய நட்சத்திரமீனும் வந்தது படம் எடுப்பதற்குள் ஏமாற்றி கடலுக்குள் போய் விட்டது.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. காத்திருந்து காத்திருந்து நீங்கள் எடுத்த புகைப் படங்கள் மன நிறைவைக் கொடுத்திருக்கும். மகிழ்ச்சி தரும் அனைத்துமே பாராட்டுக்குரியது. ஒரு முறை திருச்செந்தூரில் கடலில் இருந்து ஒரு நட்சத்திர மீன் கிடைக்க, அதனை ஒரு ப்லாஸ்டிக் கவரில் நீரில் போட்டு எடுத்துவர முயற்சித்தோம். எங்கள் முட்டாள்தனத்தால் பாவம் அது இறந்து விட்டது. உங்கள் பதிவு நினைவலைகளை தூண்டிவிட்டது.

    பதிலளிநீக்கு
  30. G.M. Balasubramaniam சார், உங்கள் நினைவலைகளை தூண்டிவிட்டதா நட்சத்திரமீன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  31. குமரன் அருகில் இருப்பதால் மகிழ்ச்சியில் அடிக்கடி அகவிக் கொண்டு இருந்தது.

    காத்திருந்து காத்திருந்து அருமையாய் பகிர்ந்த படங்கள் நிறைவாக கவர்ந்தன.. பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  32. அணிலின் ஆசாஹகு ஆட்டங்களை எங்கள் வீட்டிலும் ரசித்திருக்கிறேன். விரட்டி அடிக்காமல் பிற உயிரினங்களை நேசிக்கும் தங்கள் உளப் பாங்கு போற்றத் தக்கது.

    பதிலளிநீக்கு
  33. அன்பு கோமதி, சின்னக் கமிராவை வைத்தே இத்தனை ஜாலங்கள் செய்துவிட்டீர்கள் என்னிடம் இருப்பதும் சின்னக் காமிராதான். அதுவும் ஆடிவிட்டால் படம் போச்சு. மஹா பொறுமை உங்களுக்கு. ஒரு காவியமே செய்துவிட்டீர்கள்.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்மா.

    பதிலளிநீக்கு
  34. கோமதிக்கா மிக நல்ல பகிர்வு,புல்புல் பறவை,மயில்,நாய்,நட்சத்திரமீன் நல்ல ரசிப்புத்தன்மையுடன் பகிரப்ப்ட்ட பகிர்வு.

    பதிலளிநீக்கு
  35. படங்களையும் ரசித்துப் பார்த்தேன். எடுத்த அனுபவங்கள் சுவாரஸ்யம். நட்சத்திர மீன் இப்போதுதான் பார்க்கிறேன். அழகு.

    மயில் பட தொகுப்பில் 3, குறிப்பாக 5 அட்டகாசம். பின்னால் தெரிகிற தென்னங்கீற்றுகளைப் போலவே தோகை விரித்து நிற்கிறது மயில்.

    புல்புல் பறவைகள் அழகானவை. இணையத்தில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  36. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வாங்க டி.என். முரளிதரன், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வாங்க வல்லி அக்க உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கும், வரவுக்கும் மகிழ்ச்சி நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வாங்க ராமல்க்ஷ்மி, நீங்கள் இந்த படங்களை உங்கள் காமிராவில் நீங்கள் எடுத்தால் மிக அழகாய் இருந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தான் எடுத்தேன்.
    உங்கள் ரசிப்புக்கும் தொடர் ஊக்கம் அளித்தலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. சில படங்கள் தெளிவாக வரவில்லையென்றலும், உங்கள் ரசனை தெளிவாகத் தெரிகிறது.உயிருள்ள நட்சத்திரமீனை இன்றைக்குத்தான் பார்த்திருக்கிறேன்.

    திருச்செந்தூர் படங்களைப் பார்க்கவும் ஊர் ஞாபகம் வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  41. வாங்க முத்து. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    ஊர் நினைவு வந்து விட்டதா அந்த பக்கம் தான் உங்கள் ஊரா!

    பதிலளிநீக்கு
  42. ஐந்தறிவு ஜீவன்களையும் ஆதரிக்கும் நன் மனத்தைத் தெய்வமும்
    கண்டு ரசிக்கும் .சிறப்பான இப் பகிர்வினை நானும் கண்டு
    மகிழ்ந்தேன் !
    வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
    என் பழைய பதிவைப்பார்த்து கருத்து அளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  44. நட்சத்திர மீனைப் பார்த்ததுமே இந்தப் பதிவை முன்னர் வாசித்த நினைவு வந்து விட்டது:).
    அதே போலவே படித்து கருத்தும் இட்டிருக்கிறேன்.

    நீங்கள் காத்திருந்து ஓடி ஓடி எடுத்தது போலதான் இப்போது நான் பறவைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பலபறவைகள் கதவுப் பக்கம் நம் அசைவு தெரிந்தாலே பறந்து விடுகின்றன. சில கண்டு கொள்வதில்லை.

    கேட்டுக் கொண்டதற்காகத் தேடி பதிவின் இணைப்பை அளித்தமைக்கு நன்றி:).

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    முன்னர் படித்த நினைவு வந்து விட்டதா?
    உங்கள் தோட்டத்தில் வரும் பறவைகளை நீங்கள் எடுத்த படங்களை
    ரசித்து வருகிறேன் தொடர்ந்து.

    பறவைகள் மிக மென்மையான உணர்வை கொண்டு இருக்கிறது நம் சிறு அசைவுக்கும் பயந்து பறந்து விடுகிறது. சத்தம் எழுப்பாமல் ஒளிந்து இருந்துதான் எடுக்க வேண்டி உள்ளது.
    பழைய பதிவை படிக்க ஆசை பட்டு கேட்டு படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு