திங்கள், 20 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத் தலபயணம் - பகுதி - 7
                                   பகுதி - 7
                               திருக்கேதாரம்
                                 KEDHARNATH
15.05.2012  காலை மணி 7.30 மணியளவில் திருக்கேதாரம் செல்லு வதற்கான டோலி ஸ்டேண்டை அடைந்தோம். டோலியில் செல்வதற்கும் குதிரையில் செல்வதற்கும் மக்கள் வந்து சேர்ந்தவண்ணம் இருந்தார்கள்.
திருக்கோயில் நிர்வாகம் நல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பொதுவாக ஒரு ஆளுக்கு 4000 ரூபாய் .ஒவ்வொருவரின் எடையும் கருவிமூலம் பார்க்கப்படுகிறது. 60கிலோவுக்குக்கு மேல் போனால் 5000ரூபாய் எனவும், அதேபோல் எடை அதிகமாக அதிகமாக ரூபாயும் அதிகமாய்ப் போய்க் கொண்டே இருக்கிறது. எங்களுடன் வந்த ஒரு அம்மா ரொம்ப வெயிட். அவர் ஒருவருக்கே எட்டாயிரம் ரூபாய் வாங்கிவிட்டார்கள். எங்கள் இரண்டு பேருக்கு டோலியில் செல்ல மொத்தம் 8200 ரூபாய் ஆகியது.

டோலியில் மேலே செல்ல சுமார் 4 மணிநேரம் ஆகிறது.

மேலே செல்ல.14.5 கி.மீ தூரம். இடையில் டோலிவாலாக்களுக்கு கானாபீனா (குடித்தல்,உண்ணல்) . அருமையான மலைவழி.

ஆங்காங்கே டிராபிக் ஜாம். வழியில்  7கி.மீ தொலைவில்  ராம்போடா என்ற இடம் உள்ளது. குதிரைகள் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கின்றன. அருவிகள் பல இடங்களில் அழகாக விழுகின்றன. 
பனிப்பகுதிகள்:

செல்லும் வழியில் பனிக்கட்டிகள் இருபுறமும் கைக்கெட்டும் தூரத்தில் காணப்படுகின்றன. சில இடங்களில் பனிக்கட்டி உருகி ஓடுவதையும் காணலாம். சில இடங்களில் 4 அடி உயரத்திற்கு பனி காணப்படுகிறது.ஹெலிகாப்டர் வசதி உள்ளது. சீதாப்பூரில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள phata என்ற ஊரில் ஹெலிபேட் உள்ளது. அதன் அருகில் நல்ல தங்கும் விடுதி hotel paradise உள்ளது. ஒரே நாளில் திருக்கேதாரம் சென்று வருவது போல் நெருக்கடியான பயணத்திட்டம் வைத்திருப்பவர்கள் ஹெலிகாப்டரில் செல்லுவது கடினம். வானிலை நன்றாக இருந்தால் மட்டுமே இவை செல்லும். இரண்டு மூன்று நாட்கள் கால அவகாசம் இருந்தால் நல்லது. ஹெலிகாப்டரில் செல்லக் கூடியவர்கள் மலைமேலே சென்றவுடனேயே திருக்கோயிலுக்குள் காத்திராமல் சென்று தரிசித்து, வெளியே வந்து, உடனே ஹெலிகாப்டரில் ஏறித்திரும்பலாம். மற்றவர்கள் எல்லாம் உள்ளே செல்வதில் உள்ள கஷ்டம் சொல்லி முடியாது. அது அங்கே போனபின் தான் தெரிகிறது. இரவில் சிறப்பு பூசைக்கட்டளை செய்யும் அன்பர்கள் தரிசிக்க வாய்ப்பு உள்ளது. அதற்குப் பலஆயிரம் ருபாய் ஆகிறது. அந்த வாய்ப்பு ஒரு குழுவினருக்கு மட்டுமே தரப்படும். மேலும் திருக்கேதாரத்தில் இரவு தங்கினால் மட்டுமே அந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கேதார்நாத்தில் தங்குமிட வசதிகள், மருத்துவ வசதிகள் மிகக் குறைவு. குளிர் மிக அதிகம். இந்த ஆண்டு திருக்கோயில் திறந்த முதல்நாள் அன்றே 4 பக்தர்கள் கேதார்நாத்கோயிலில் குளிரால் இறந்துபோனார்கள் என்று செய்தி வந்திருந்தது.

என் கணவரின் அண்ணன் குடும்பத்தினர் போன போது கேதார்நாத்திலேயே தங்கியதால் அதிகாலையில் ஒரு அலங்காரம், மாலையில் ஒரு அலங்காரம் பார்த்து வந்தார்கள். எங்கள் வழி காட்டி மாலை 5 மணிக்குள் கீழே இறங்கி விட்டால் நல்லது என்று சொல்லி விட்டார். எங்கள் குழுவில்  வந்த 40 அல்லது 45 வயது இருக்கும் ஒரு பெண்மணிக்கு கங்கோத்திரியில் 
மூச்சுத் திணறல்  ஏற்பட்டு விட்டது. அவர்கள் பஸ் நிறுத்தி வைத்திருந்த இடத்தை அடையவே கஷ்டப்பட்டார்கள். சீத்தாபூரில் வந்து டாக்டரிடம் போய் வந்தார்கள். ’ஆக்ஸிசன்  சிலிண்டர் சிறியது வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் பட்டால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் கொடுத்து விடலாம்’ என்று சொல்ல, அதை வாங்கி வந்தார்கள்.

கேதாரத்திற்கு டோலிக்காரர்களின் கட்டணம் முதலியவை வரைமுறைப் படுத்தப் பட்டிருக்கிறது. இருந்தாலும் அவர்களுக்கு அவ்வப்போது. டீ,குளிர்பானம், சிற்றுண்டி முதலியவற்றை வாங்கிக் கொடுத்துக் கொண்டே யிருககவேண்டும். எப்போது டோலியைக் கீழே வைப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதற்குத் தகுந்தாற்போல், வழி நெடுகிலும் கடைகள். ஆனால் டோலி தூக்குபவர்கள் மிகுந்த கஷ்டத்தோடு தான் மலையேற வேண்டியிருக்கிறது. குதிரைக்காரர்களின் பாடும் சிரமம் தான். ஆன்மிகச்சுற்றுலாவை நம்பியே இவர்கள் இருககிறார்கள். ஆண்டில் 4 மாதங்களே இந்தத் தொழில் செய்ய முடியும். குளிர்காலமானால் கோயில்கள் மூடப்படும்.. அந்த நாட்களில் இவர்களின் பாடு இன்னும் சிரமம் தான்.

திருக்கேதாரத்தை நெருங்குகிறோம்.

திருக்கேதார நகரியத்தில்  பனிக்கட்டிகள் சாலையில் ஓரளவு மட்டும் அகற்றப்படுகிறது. ஊர்ச் சாலைகளின் இருபுறமும் பனிககட்டிகள் உள்ளன


திருக்கோயிலில் மிகுந்த கூட்டம். எங்கள் டோலி வாலா எங்களை சீக்கிரம் தரிசனம் செய்ய அங்குள்ள பூசாரியிடம் ஏற்பாடு செய்கிறேன் என்று பேசினார். பூசாரி தரிசனம் செய்து வைக்க ஆளுக்கு 1000 ரூபாய் என்று சொல்லி விட்டு அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டு இருந்தார். நேரமும் ஆகி கொண்டே இருந்தது. போலீஸ்காரர்களை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.போலீஸ்காரர்கள் எங்களிடம், கடவுளுக்காக கொஞ்சநேரம் வரிசையில் நிற்க முடியாதா? போங்க! போய் வரிசையில் நின்று தரிசனம் செய்யுங்கள் ! என்றார். சிறப்பு வழியில்லை. வரிசையாய் மக்கள் ஒரு கி.மீ தூரத்திற்கு நிற்கிறார்கள். கியூ மெதுவாக நகர்கிறது. மேற்கூரை நீளமாக அமைக்கப்பட்டிருந்தாலும். அதற்கு வெளியேயும் வரிசையின் வால்பகுதி நிற்கிறது. அங்கு தான் நின்றோம் குளிர் காற்று வீசியது. கை எல்லாம் விரைத்து போய் விட்டது. எங்களுக்கு மதிய உணவாக சப்பாத்தியும், தக்காளி தொக்கும்  கொடுத்து இருந்தார்கள். குளிரில் சாப்பிட முடியவில்லை. உச்சி வேளையிலும் அதிகக் குளிர்காற்று வீசிக்கொண்டே இருந்தது.

.
வரிசையில் நிற்கும் போது பனியில் காய்ந்து போன புதர்ச் செடியில் ஊர்க் குருவி கீச் கீச் என்றி ஒலி எழுப்பி அங்கேயும் இங்கேயும் பறந்து கொண்டு இருந்தது. சில குருவிகள் நம் ஊர்க் குருவி மாதிரி கலர் !
சில குருவிகள் சிறிது சிவப்பாய் இருந்தன. அன்னதானக் கூடத்தில் மக்கள் உணவு உண்டு கொண்டு இருந்தார்கள். அதன் அருகில் அரிசி குருவிகளுக்காகப் போட்டார்களா அல்லது சிதறி விட்டதா என்று தெரியவில்லை அவற்றை அவை கொத்திக் கொண்டு இருந்தன.

 ஆங்காங்கே வரிசையின் நடுவில் நுழைவதற்குப் பலர் முயற்சி செய்வதும், அவர்களை நோக்கி வரிசையின் பின்னே இருப்பவர்கள் கூக்குரலிடுவதும் நடந்தவண்ணம் இருக்கிறது. வரிசையில் நிற்பவர்களிடம் தரிசனம் செய்து வைக்கிறோம் வாங்க என அழைப்பவர்களும் உண்டு. அவர்களை உள்ளே போலீஸ்காரர்கள் அனுமதிப்பது இல்லை ஆனாலும் நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். வரிசையின் முன்பகுதியில் மட்டும் - கோயிலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மட்டும் - போலீஸ்காரர்கள் நின்று ஒழுங்குபடுத்துகிறார்கள். பின்பகுதியில் நடப்பவற்றைக்கண்டு கொள்வதில்லை. 

பக்தர்களிடத்தில் ஒழுங்கு கட்டுப்பாடு இல்லை. சந்நிதிக்குள் நுழையும் போது வரிசை குலைந்து நெருக்கடியாக ஏற்படுகிறது.. 

கோயில் நுழைவாயில் பகுதிக்கு படிகள் ஏற வேண்டும். அங்கு கூட்டம் நம்மை படி ஏறவிடாமல் நெருக்கி தள்ளுகிறது.  நுழைவாயில் சென்றதும் இன்னும் நெருக்கடி அதிகமாக உள்ளது. கருவறை அருகே செல்வதற்குள் கூட்டம் அலைமோதுகிறது.

இனந்தெரியாத ஒரு அச்சம் ஏற்படுகிறது. நல்லபடியாக வெளியே வரவேண்டுமே என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த நேரத்தில் இறைவனின் திருநாமத்தைச் சொல்லியே இத்துன்பங்களை ஒதுக்கவேண்டியிருககிறது. கருவறைக்குள்ளே ஒரு வழியாக நுழைந்தோம்.(சொல்லப்போனால் தள்ளப் பட்டோம். சுவாமி மேலே கை தொட்டு வணங்கும் நிலை தானாகவே ஏற்படுகிறது.) தெய்வீக அனுபவம்! வார்த்தைகளால் சொல்லமுடியாது. அதுவரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்து போய்விட்டது. மூலஸ்தானத்தில் திருக்கேதாரநாதரைத் தொட்டு வணங்கினோம். சாமிமேல்  வெண்ணெயும் குங்குமமும்  இருப்பதால் எங்கள் கைகள் சிவப்பாய் ஆனது. அங்கு சுவாமி பக்கத்திலிருந்து கூட்டத்தை  ஒழுக்கு படுத்தும் அன்பர் என் கணவருக்கு இறைவன் பிரசாதமாய் இரண்டு ரூபாய் கொடுத்தார் கருவறையினுள்ளே மின்னொளி பிரகாசிக்கிறது..கருவறைக்குள்ளேயே சுவாமியைச் சுற்றி  வலம்வரும் வகையில், அகலநடைபாதை உள்ளது. அதில் சுற்றி வந்தோம்.அங்கு வேலைப்பாடு மிகுந்த தூண்கள் உள்ளன. . முழுமையான திருப்தியோடு வெளியே வந்தோம்.உள்ளே பைரவர் சந்நிதியுள்ளது.

கோவிலுக்கு பின் புறம் ஐஸ் குவியல் இருந்தது அதை பெண்கள் எல்லோரும் கையால் சிவலிங்கம் மாதிரி பிடித்து வைத்து குங்கும், பூ எல்லாம் வைத்து வணங்கினார்கள் நானும் வணங்கினேன்.

கோவிலின் வடகிழக்கு பகுதியில் திருஞானசம்பந்தர் பாடிய தேவார கல்வெட்டு இருந்தது.


தேவாரக் கல்வெட்டு

நாங்கள் உள்ளே இருக்கும்போதே வெளிப்புறம் சந்நிதிவாசல் அடைக்கப்பட்டது. இனி மாலை 5 மணிக்குத் தான் திறக்கும் என்றார்கள். நல்லவேளை எங்களுக்கு அதிக நேரம் மறுபடியும் காத்திருக்கத்தேவை இல்லாமல் போனது.

எங்கள் குழுவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 13 பேர் வந்தார்கள் அவர்களில் ஒரு பெண்ணை அழைத்து வந்தவர்கள் டோலி சரியில்லாமல் காலை டோலியில் ஏறியவர் மதியம் மூன்று மணிக்குத் தான் கோவில் வந்து சேர்ந்தார். உடன் வந்தவர்களை பார்க்க முடியாமல், பேசமுடியாமல், கோயிலில் வந்து ஒலிபெருக்கியில் அறிவிப்பு கொடுத்து, உடன் வந்தவர்களைப் பார்த்து, பின் எல்லோரும் தரிசனம் செய்து,அவர்கள்  கீழே வரும் போது இரவு 9 மணி விடுதி வந்து சேர 11 ம்ணிக்கு மேல் ஆனது. அவர்கள் எல்லாம் 5 மணிக்கு கோவில் திறந்த பின் பார்த்து வந்ததால் இப்படி நேரமாயிற்று. மேலும் அவர்களை கருவறைக்குள் விடவில்லையாம். மாலை சுவாமிக்கு நகைகள் அணிவித்து அலங்கார தங்க குடை எல்லாம் வைத்து விடுகிறார்கள், அதனால் வெளியிலிருந்து பார்த்து விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும் சிறிது நேரம்கூட நிற்க முடிய வில்லையாம்.

ஒவ்வொரு நாளும் கவசத்தோடு சுவாமியைத் தரிசிக்கும் நேரமும் கவசம் இல்லாது பார்க்கும் நேரமும் உள்ளன. நாம் போகிற நேரத்தைப் பொறுத்து இந்த வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. 


எங்களை சீக்கிரம் நல்லபடியாக அழைத்து சென்று கூடவே வந்து எங்களை வழி நடத்திய டோலி வாலாக்களுக்கு  நாங்கள் நன்றி சொன்னோம்.  என் கணவரை அழைத்துச் சென்றவர்களும் நல்லவர்கள். என்னை அழைத்து சென்றவர்களும் மிக மிக நல்லவர்கள்.
ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். நாங்கள் டோலியில் ஏறப் போகும் போது ஒரு பையனின் அடையாள அட்டையை நம் கழுத்தில் மாட்டி விட்டு விடுகிறார்கள் - திரும்பி வந்து நாம் அவர்களை அடையாளம் தெரிந்து ஏற வசதியாக இருக்கும் என்று.

அரசாங்கத்தில் அனுமதி பெறாதவர்களிடம் நாம் போகக் கூடாது. ஒருவர் எங்களை ஏமாற்ற பார்த்தார் . டோலி ஏறும் இடத்தில் ’மாதாஜி என் கூட வாருங்கள் நல்ல டோலியில் அழைத்து செல்கிறேன்’ என்று ஆனால் அதற்குள் எங்கள் டோலிக்காரார் வந்து எங்களிடம்,’ நாங்கள் தான் மாதாஜி உங்களை அழைத்து செல்ல வேண்டும்’ என்று அடையாள அட்டையைக் காட்டி அழைத்து சென்றார்கள்.

டோலிக்காரர்கள் தங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொண்டால் நல்லது. வழியில் இருக்கும் கடைகளில் சிகரெட் வாங்கி அதன் உள் இருப்பது வெளியில் கொட்டி விட்டு இவர்கள் கையில் கசக்கிய ஏதோ வைத்து புகைக்கிறார்கள். வாயில் பான் பராக் வேறு. இது உடலுக்கு கேடு அல்லவா! சுவரை வைத்துத் தான் சித்திரம் என்பது போல் அவர்கள் உடல் தாம் மூலதனம்  அதுவும் வயது ஆகி விட்டால் இப்படித் தூக்கி செல்ல முடியுமா! இதை உணர்ந்தால் நல்லது.
அதை அவர்களிடம் தமிழில் தான் சொன்னேன். ஏதோ புரிந்த மாதிரி ’சரி மாதாஜி ’என்றார்கள். கடவுளிடம் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டினேன்.

திரும்பி வரும் போது மிகவும் கூட்டம், இறங்கி வருபவர்கள், மேலே இறைவனை தரிசிக்க போகிறவர்கள், நடப்பவர்கள், குதிரையில் போகிறவர்கள் என்று நெரிசல். 

நடந்து வந்த  ஒரு வயதானவர்,அவருடன்  மருமகளோ. மகளோ யார் என்று தெரியவில்லை, குழந்தையுடன் வந்தார்! குழந்தைக்கு 1 வயது இருக்கும். எதிரில்  வந்த குதிரை  அவரைக் கீழே தள்ளி அவர் உடம்பின் குறுக்கே தாண்டிப் போனது. எங்கும் ஒரே கூச்சல்! என்ன நடந்தது என்று தெரியாத பெரியவர் போனவர், வந்தவர் என்று கண் மூடித்தனமாக எல்லோரையும் அடித்தார். உதவிக்கு போன எங்கள் டோலி வாலாக்களுக்கும் அடி விழுந்தது. அவர்கள்,அவரிடம்’ தாத்தா நாங்கள் இல்லை,  குதிரைக்காரர்’ என்று சொன்னதும் குதிரைக்காரரைத் துரத்திக் கொண்டு ஓடினார். நல்ல வேளை குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அந்தப் பெண்மணிக்கு ஊமைக் காயம்.  தொடர்ந்து நடந்து போய்த் தரிசனம் செய்தார்களா எனத் தெரியவில்லை. அவர்களுக்கு ஒன்றும் ஆக கூடாது என்று பிரார்த்தனையுடன் எங்கள் பயணம் தொடர்ந்தது
.
என்னைத் தூக்கி வந்தடோலிக்காரர்களுக்கும் பின்னாலே வேறு ஒருவரை தூக்கி வருபவர்களுக்கும், முன்னே போவதில் போட்டி  .போட்டியில் பின்னே வந்தவர் என் கை மேல் இடித்து விட்டுப் போனார். (கையில் ரத்தம் கட்டி விட்டது.) நான்  கூச்சல்  போட்டதில் எங்கள் ஆட்களுக்கும், பின்னே தூக்கிவந்தவர்களுக்கும் சண்டை வந்து விட்டது. சமாதானம் செய்து பின், தொடர்ந்து இறங்கினோம். வழியில் கொஞ்ச தூரத்திற்கு படிகள் இருக்கும் பகுதிகள் உள்ளன. அப்போது அவர்கள் படியில் ஓடினால் நம் உடம்பு குலுங்கி வலி ஏற்படுகிறது. வயிற்றுக்கு பெல்ட் அணிந்து சென்றால் நலம். அனுபவங்கள் பல.

எந்த நேரமும் மழை பெய்யும். அதனால் மழைக்கோட்டு  அணிந்தே போக வேண்டும் என்றார்கள். கொண்டு வராதவர்களுக்கு அங்கே ஒன்று 15 ரூ வீதம் விற்கிறார்கள். அது ஒரு முறை உப்யோகித்தவுடன் தூக்கி எறிந்து விடலாம். குளிருக்கும் ரேயின் கோட் நன்றாக இருக்கும்.

கோயிலின் பின்புறம் ஆதிசங்கரர் தவமியற்றிய இடம் உள்ளது. அங்கு பெரிய மண்டபம் உள்ளது. அவரது உருவச்சிலை உள்ளது.
டோலிக்காரர்களிடம்  விடைபெறல்
மாலை 4 மணிக்கு மீண்டும் டோலியில் ஏறி 7.30 மணிக்குக் கீழே வந்து சேர்ந்தோம்.அதன் பின்னர் ஜீப்பில் ஏறி சீதாப்பூர் திரும்பினோம்.

மறுநாள் பத்ரிநாத் புறப்பட்டோம்.அது பற்றி அடுத்த பதிவில்.
(தொடரும்)

37 கருத்துகள்:

 1. மிகவும் திகிலான புனித யாத்திரை.

  கேதாரநாதர் தர்சனம் பனிக் கட்டிக் குளிருடன் நீண்ட வரிசையைப் பார்க்கவே பயமாக இருந்தது.

  கிடைத்தற்கு அரிய தர்சனம்.

  மனம்குளிரப் பெற்று இன்புற்றோம் உங்கள் புண்ணிய யாத்திரையில்.
  சொல்ல வார்த்தைகள் இல்லை.நன்றி. நன்றி.

  பதிலளிநீக்கு
 2. படமும் பதிவும் அருமை...

  தொடருங்கள்... கூடவே வந்து கொண்டுள்ளோம்... வாழ்த்துக்கள்...

  கண்ணொளியும் இணைத்தது சிறப்பு...

  நன்றி... (TM 1)

  பதிலளிநீக்கு
 3. பயணமும் படங்களும் ரொம்ப நல்லா இருக்கு 10 நாள் உங்களை மிஸ் பண்ணப்போரேன். வந்து சேர்த்து வ்ச்சு படிச்சுடுவேன் சென்னை போரேன்

  பதிலளிநீக்கு
 4. சிட்டுக்குருவிகள் அழகு..

  டோலிக்காரர்களிடம் மெதுவாகப்போகச்சொல்லுவதிலிருந்து
  அவர்கள் உடல்நலனை கவனிக்கச்சொல்லுவதுவரை எல்லாமே
  தமிழிலேயே பேசி .. புரியவச்சிட்டீங்க :)

  சில விசயங்கள் படிக்க திகிலாகத்தான் இருக்கிறது .

  பதிலளிநீக்கு
 5. ஏராளமான படங்கள் தாராளமான தகவல்கள். மிகவும் த்ரில்லிங்கான பயணமாகத்தான் இருந்திருக்கும்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  வாழ்த்துகள். தொடருங்கள்.

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 6. எல்லா சிரமங்களும் கிடைக்கிற தரிசனத்தின் முன் சாதரணமாகி விடுகின்றன என்பது உண்மைதான். அத்தனை தூரம் அழைத்துச் செல்பவர் சேவை மதிப்பிற்குரியது. சிகப்பு சிட்டுக்குருவிகள் அழகு. படங்கள் எல்லாமே அருமை.

  பதிலளிநீக்கு
 7. சுவாமி மேலே கை தொட்டு வணங்கும் நிலை தானாகவே ஏற்படுகிறது.) தெய்வீக அனுபவம்! வார்த்தைகளால் சொல்லமுடியாது. அதுவரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்து போய்விட்டது. மூலஸ்தானத்தில் திருக்கேதாரநாதரைத் தொட்டு வணங்கினோம்.

  தெய்வீக அனுபவங்கள் நெகிழவைத்தன...

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 8. கொஞ்சம் வெய்யில் காலம் வந்த பிறகு போனால் குளிர் குறைவாக இருக்கும். மொத்தத்தில் ஆபத்து நிறைந்த பயணம்தான்.

  பதிலளிநீக்கு
 9. வாங்க கவி அழகன், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க மாதேவி, இந்த புனிதயாத்திரையை மறக்க முடியாது.
  நீங்கள் தொடர்ந்து 7 பகுதிகளையும் ஒரே நாளில் படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி, மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் மிகவும் நன்றி.
  தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க லக்ஷ்மி அக்கா, நீங்கள் சென்னையில் பதிவர் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா?
  வந்து மீதி பதிவுகளை படிப்பேன் என்றது மகிழ்ச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வா முத்துலெட்சுமி, சிட்டுக்குருவி அழகாய் இருக்கா ! தூரத்தில் இருந்து எடுத்தேன் பக்கத்தில் போனால் பறந்து விடுமே.

  அன்புக்கு மொழி எதற்கு !.இந்தி பேசினால் புரிகிறது , பேசத்தான் முடியவில்லை. அது போல் அவர்களுக்கு தமிழ் புரிகிறது மறு மொழி இந்தியில் தான் சொன்னார்கள். புரிந்ததால் தானே சொன்னார்கள்.

  குழந்தையை வைத்து கொண்டு இருந்த பெண்ணை தள்ளி அவள் உடலின் குறுக்கே ஓடிய குதிரையை இப்போது நினைத்தாலும் திகிலாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 14. வாங்க கண்மணி, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
  நீங்கள் சொன்ன ரகசியத்திற்கு நன்றி, மகிழ்ச்சி.

  பதிவுகள் தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 15. வாங்க வை. கோபாககிருஷ்ணன் சார்,
  மிகவும் திர்ல்லிங்கான பயணம் தான்.
  உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி, மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க ராமலக்ஷ்மி, எங்கள் கஷ்டங்கள் நல்ல தரிசனத்தால் மறைந்தன.

  நம்மை அழைத்து செல்பவர்களின் சேவை மகத்தானது தான்.

  படங்கள் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் சொல்வது மகிழ்ச்சி, நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க இராஜராஜேஸ்வரி, தெய்வீக அனுபவங்கள் சிலிர்க்க தான் வைத்தன, மனதை நெகிழவைத்தன நீங்கள் சொன்னது போல்.

  உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி , மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க கந்தசாமி சார், நாங்கள் மே மாதம் போனோம்.
  ஜீன், ஜீலை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நீங்கள் சொல்வது போல். அப்போது போய் வந்தவர்களும் பனி பெய்து கொண்டு இருந்தாக சொன்னார்கள்.
  உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி, மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 19. கொடுத்து வைத்திருக்கிறீர்கள். அனுபவங்கள் சுவாரசியம் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. ஆன்மீக பயணமோ தரிசனமோ விதி விலக்கா என்ன. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
 20. சிறப்பான படங்களுடன் அழகிய பயண அனுபவங்கள்! என் பெற்றோரும் காசி யாத்திரை செல்ல உள்ளார்! உங்கள் பயண அனுபவங்கள் உதவியாக உள்ளன. நன்றி!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
  http://thalirssb.blogspot.in/2012/08/5.html

  பதிலளிநீக்கு
 21. வாங்க ஜி.எம். பாலசுப்பிரமணியம் சார், உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.  பதிலளிநீக்கு
 22. வாங்க சுரேஷ், உங்கள் பெற்றோர்கள் காசி யாத்திரை போவது மகிழ்ச்சி. உத்திரகாசிப் பற்றி அல்லவா எழுதினேன். அங்கும் போகிறார்களா?
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. நான் கேதார் போன போது வழி எங்கும் மழை பெய்து கொண்டு இருந்தது. (செப்டம்பர்) பனிக்கட்டிகள் வழியில் இல்லை. கோயிலில் கூட்டமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அனுபவம் போல..

  பதிலளிநீக்கு
 24. பிரமாதமாக பதிவு செய்துள்ளீர்கள்
  அங்கு நடந்த சிறு சிறு சம்பவங்களை விளக்குவது
  எங்களையும் மன ரீதியாக அவ்விடம் இருப்பது போன்ற
  உணர்வை ஏற்படுத்தியது
  சன்னதிக்குள் போவதற்கும் க்யூவில் பட்ட கஷ்டத்தை
  விரிவாக சொல்லி பின் சன்னதி சென்றதும் கிடைத்த
  சந்தோஷத்தைச் சொன்னது எங்களுக்குள்ளும் சந்தோஷத்தைக்
  கொடுத்தது.விரிவான பதிவாயினும் படிக்க சுவார்ஸ்யமாகவும்
  அருமையாகவும் இருந்தது.தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 25. இனிய பயணம். டோலிக்காரர்கள் புகையருந்துவதும், குட்கா சாப்பிடுவதும் கஷ்டம் தான். அதனால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்வதில்லை.

  கேதார் பயணம் ஒரு இனிய அனுபவம் தான். செல்வது கடினம் என்றாலும் தரிசனம் செய்யும் போது கிடைக்கும் உணர்வுக்காக நிச்சயம் செல்ல வேண்டிய இடம்.

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. ஆனால் கேதார்நாத் திகில் நிறைந்த பயணமாக உள்ளது. நல்ல மன உறுதியுடன் நீங்களும், உங்கள் கணவரும் பயணம் மேற்கொண்டு நல்லதொரு இறை தரிசனம் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி.

  தைரியமாகவும், அன்பாகவும் டோலிகாரர்களுடன் பேசி, அவர்கள் மனம் குளிரும்படியாக அவர்களுடன் போட்டோக்கள் எடுத்து பகிர்ந்துள்ளீர்கள். உங்களின் அன்பான பேச்சுக்கு கட்டுப்பட்டு அவர்கள் தங்கள் உடல் நலனை இனி நல்லபடியாக கவனித்துக் கொள்வார்கள். பயணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக உங்கள் அன்பான பிரார்த்தனைகள் கண்டு என் மனமும் நெகிழ்ச்சியடைகிறது. ஆனால் பயணத்தின்போது கையில் காயம் பட்டது மனதுக்கு வேதனை தந்தது.

  படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.பனி நிறைந்த படங்கள் அழகாக உள்ளன. ஆனால் அங்குள்ள குளிரையும் ஊகிக்க முடிந்தது. சிகப்பு குருவிகள் மிகவும் அழகாக உள்ளது. எங்கு சென்றாலும், பறவைகளுக்கும், உங்களுக்கும் உள்ள இணைபிரியாத உறவை நினைக்கும் போது என் மனம் வியப்படைகிறது. உங்கள் அன்பு நிறைந்த உள்ளம் என்றும் நல்லபடியாக இருக்கும் என மனதாற வாழ்த்துகிறேன்.

  உங்களின் இப்போதைய பனிச் சிற்பங்கள் பதிவை படித்து வரும் போதே, அதில் நீங்கள் தந்த சுட்டியின்மூலம் இந்தப்பதிவின் எழுத்து சுவாரஸ்யத்தினால் கவரப்பட்டு இதை படித்துப் படங்களை பார்வையிட்டு கருத்திடுகிறேன். அப்போதெல்லாம் உங்கள் பதிவுகளுக்கு நான் வராததற்கு வருத்தமும் படுகிறேன்.

  பதிவும் படங்களும் நன்றாக உள்ளது சகோதரி. பதிவை படிக்கையில் நானும் பயணம் மேற்கொண்டு இறைதரிசனம்பெற்ற உணர்வை அடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   //பதிவு அருமை. ஆனால் கேதார்நாத் திகில் நிறைந்த பயணமாக உள்ளது. நல்ல மன உறுதியுடன் நீங்களும், உங்கள் கணவரும் பயணம் மேற்கொண்டு நல்லதொரு இறை தரிசனம் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி.//
   ஆமாம், நடந்து செல்லும் கூட்டம், குதிரையில் செல்லும் கூட்டம், டோலியில் செல்லும் கூட்டம் என்று குறுகிய பாதையில் செல்வது திகில் நிறைந்த பயணம் தான். இறைவனை தரிசனம் செய்ய போகிறோம் என்ற மன உறுதிதான் நம்மை பயணம் செய்ய வைக்கிறது.

   //தைரியமாகவும், அன்பாகவும் டோலிகாரர்களுடன் பேசி, அவர்கள் மனம் குளிரும்படியாக அவர்களுடன் போட்டோக்கள் எடுத்து பகிர்ந்துள்ளீர்கள். உங்களின் அன்பான பேச்சுக்கு கட்டுப்பட்டு அவர்கள் தங்கள் உடல் நலனை இனி நல்லபடியாக கவனித்துக் கொள்வார்கள். பயணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக உங்கள் அன்பான பிரார்த்தனைகள் கண்டு என் மனமும் நெகிழ்ச்சியடைகிறது. ஆனால் பயணத்தின்போது கையில் காயம் பட்டது மனதுக்கு வேதனை தந்தது.//

   என் கணவர் அடுத்து வருகிறார் என்ற தைரியம் தான், திரும்பி பார்க்கும் போது அவர்கள் தெரியவில்லை என்றால் மனம் பதை பதைக்கும். கேதாரில் வெள்ளப் பெருக்கு வந்த போது அவர்களை நினைத்து கொண்டேன், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.

   //படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.பனி நிறைந்த படங்கள் அழகாக உள்ளன. ஆனால் அங்குள்ள குளிரையும் ஊகிக்க முடிந்தது. சிகப்பு குருவிகள் மிகவும் அழகாக உள்ளது. எங்கு சென்றாலும், பறவைகளுக்கும், உங்களுக்கும் உள்ள இணைபிரியாத உறவை நினைக்கும் போது என் மனம் வியப்படைகிறது. உங்கள் அன்பு நிறைந்த உள்ளம் என்றும் நல்லபடியாக இருக்கும் என மனதாற வாழ்த்துகிறேன்.//
   உங்கள் அன்பான வார்த்தைகளும் பிரார்த்தனைகளும் மனதை நெகிழ வைத்தன.


   //உங்களின் இப்போதைய பனிச் சிற்பங்கள் பதிவை படித்து வரும் போதே, அதில் நீங்கள் தந்த சுட்டியின்மூலம் இந்தப்பதிவின் எழுத்து சுவாரஸ்யத்தினால் கவரப்பட்டு இதை படித்துப் படங்களை பார்வையிட்டு கருத்திடுகிறேன். அப்போதெல்லாம் உங்கள் பதிவுகளுக்கு நான் வராததற்கு வருத்தமும் படுகிறேன்.//

   கடமைகள் உங்களுக்கு நிறைய இருக்கும் போது என் அழைப்பினை ஏற்று படித்து கருத்து சொன்னது மிகவும் மகிழ்ச்சி.

   //பதிவும் படங்களும் நன்றாக உள்ளது சகோதரி. பதிவை படிக்கையில் நானும் பயணம் மேற்கொண்டு இறைதரிசனம்பெற்ற உணர்வை அடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

   உங்கள் விரிவான அன்பான கருத்துக்கு நன்றி நன்றி கமலா.
   நீக்கு
 27. இந்தத் தொடரை நான் படிக்கவேண்டும். ரொம்பவே இண்டெரெஸ்டிங் ஆக இருக்கிறது. நடந்தும் செல்லலாம் என்று நினைக்கிறேன்.

  அடுத்து பத்ரிநாத்தா? இந்தத் தொடரை முழுமையாக வாசிக்கிறேன். நல்லவேளை, சார் எல்லா இடங்களுக்கும் கூட்டிச்சென்றுவிட்டார். இல்லைனா கேதார்நாத் பத்ரிநாத்லாம் போவது சுலபமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

   //இந்தத் தொடரை நான் படிக்கவேண்டும். ரொம்பவே இண்டெரெஸ்டிங் ஆக இருக்கிறது. நடந்தும் செல்லலாம் என்று நினைக்கிறேன்.//

   நடந்து செல்லலாம், எங்களுடன் வந்த இரு வயதான பெண்மணிகள்
   நடந்து வந்தார்கள், அதில் ஒருவர் நடக்க முடியாமல் திரும்பி வரும் போது அங்கு தங்கி விட்டவர்கள் டோலி காலியாக இருந்ததில் பயணம் செய்து வந்தார்கள். நடப்பதும் கடினம் தான், குதிரைகள் ஒரு பக்கம் டோலிகள் ஒரு புறம் என்று குறுகிய பாதையில் நடக்க சிரமம் அதிகம். ஒதுங்கி வழிவிடும் போது கவனம் தேவை மலை விளிம்பில் பத்திரமாக கால் ஊன்றி நிற்க வேண்டும்.

   //அடுத்து பத்ரிநாத்தா? இந்தத் தொடரை முழுமையாக வாசிக்கிறேன். நல்லவேளை, சார் எல்லா இடங்களுக்கும் கூட்டிச்சென்றுவிட்டார். இல்லைனா கேதார்நாத் பத்ரிநாத்லாம் போவது சுலபமா?//

   ஆமாம், பத்ரிநாத போனோம், தொடரை முழுமையாக வாசிக்க போகிறேன் என்று சொன்னது மகிழ்ச்சி.
   அவர்கள் எல்லா கோவில்களுக்கும் அழைத்து சென்று விட்டார்கள். அவர்கள் இல்லாமல் பயணம் செய்வது இனி சாத்தியம் இல்லை.   நீக்கு
 28. மே மாதம் சென்றால் பனிக்கட்டிகளைப் பார்க்கலாம்னு தோணுது. ஒருவர் செப்டம்பரில் சென்று மழை இருந்தது ஆனால் தரிசனத்திற்குக் கூட்டமில்லை என்று எழுதியிருப்பதையும் படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மே மாதம் சென்றால் பனிக்கட்டிகளைப் பார்க்கலாம்னு தோணுது. ஒருவர் செப்டம்பரில் சென்று மழை இருந்தது ஆனால் தரிசனத்திற்குக் கூட்டமில்லை என்று எழுதியிருப்பதையும் படித்தேன்.//

   ஆமாம், மே மாதம் சென்றால் பனிக்கட்டிகளைப் பார்க்கலாம். மழை காலத்தில் பயணம் செய்வது கடினமாக இருக்கும்.
   என் அழைப்பை ஏற்று பதிவை படித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி நெல்லை.

   நீக்கு
  2. முதல் காணொளியில் என் கணவர் பேசுவதும் இருக்கும், என் டோலி முன் போய் விட்டது சிறிது நேரம் அவர்கள் என்னை பார்க்க முடியவில்லை. தவிப்பை உடன் வந்தவரிடம் சொல்லி பேசி கொண்டு வருகிறார்கள், என்னை பார்த்து விட்டதை மகிழ்வாய் சொல்கிறார்கள். கேட்டு பாருங்கள்.

   நீக்கு
 29. அருமையான பதிவு..

  ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகத்தைக் கல்வெட்டாகக் கண்டதும் கண்கள் கலங்கி விட்டேன்..

  இதைக் காண நேர்ந்ததும் நான் பெற்றபேறு..

  ஓம் நம சிவாய..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //அருமையான பதிவு..

   ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகத்தைக் கல்வெட்டாகக் கண்டதும் கண்கள் கலங்கி விட்டேன்..//

   இப்போது அந்த பதிகம் உள்ள இடம் எல்லாம் வெள்ளம் கொண்டு போய் விட்டது. மீண்டும் அந்த பதிகம் பதிக்கபட்டது போல தெரியவில்லை. புதிய கேதார்நாத்தை பார்த்தேன். நிறைய மாற்றங்கள். சுவாமியை வணங்க போவதற்கும் கட்டணங்கள் என்று இப்போது எல்லாம் மாறி விட்டது.

   //இதைக் காண நேர்ந்ததும் நான் பெற்றபேறு..

   ஓம் நம சிவாய..//

   கணவர் இருக்கும் போதே இங்கு எல்லாம் அழைத்து சென்றார்கள் .
   இப்போது நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

   சுட்டியை பார்த்து வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு