ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

ஆடிப்பெருக்கு





ஆடிப்பெருக்கு


குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் என்பது போல் ஆறிருக்குமிடம்
எல்லாம் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது . என்றாலும்
காவிரிக்கரைகளில் சிறப்பாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கன்னிப்பெண்கள் நல்ல கணவரை அடையவும், புதுமணத் தம்பதியர்
தங்கள் வாழ்வு சிறக்கவும், மணமான பெண்கள் தங்கள் மணாளர்
நீண்ட ஆயுள் பெறவும் ஆற்றுமண் எடுத்துக் காவிரியம்மன்
உருவம் செய்து வழிபடுவார்கள்

ஒவ்வொரு ஆடிப்பெருக்கின் போதும் இதற்கு முந்தைய ஆண்டுகளில்
எனது மகள் , மகனோடும் அக்கம்பக்கத்தாருடனும் ஆற்றுக்குப்போய்
இவ்விழாவைக் கொண்டாடியதை நினைவுபடுத்திக்கொள்வேன்.

என்மகள் சிறுபெண்ணாக இருக்கும்போது கைகளிலும் கால்களிலும்
மருதாணி வைத்துக்கொள்வாள். தன் தம்பியோடு கடைக்குச்
சென்று வளையல் பாசிமணி ரிப்பன் தோடு என்று அவளுக்குப்
பிடித்தமானவைகளை வாங்கிவருவாள்.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் எம்.ஜி,ஆர் கடை என்ற கடையொன்று
உண்டு.அங்கு போய் தான் வாங்குவாள்,கொஞ்சம் பெரியவள் ஆனதும்
சரசுகடையில் நதியா வளையல்,நதியா தோடு, நதியா பாசி,என்று
வாங்கி வருவாள்.அவளுக்குப் பிடித்தது கருமணி தான்.இப்போது
திருமணமான பின்னும் அவளுக்குப் பிடித்தது கருமணிதான்.

சிறு பையன்கள் அவர்களே செய்த ஆடித்தேர்களை இழுத்து
வருவார்கள். என் குழந்தைகளும் கூடச் சென்று மகிழ்வார்கள்,

இப்போது காவிரியாற்றில் நல்ல தண்ணீரும் இல்லை. எனது
பிள்ளைகளும் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள்,
ஆற்றுக்குச் செல்ல பழைய நண்பர்களும் இல்லை.எல்லாக்
குழந்தைகளும் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள்.

அதனால் இப்போதெல்லாம் வீட்டிலேயே காவிரியம்மனுக்கு
வழிபாடு செய்து நீர் நிலைகளில்அதைச் சேர்ப்பது மட்டும்
நடக்கிறது.

ஏரிகுளம் கிணறு ஆறுஎல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய்ப் பொழிய வாழ்க வளமுடன்








14 கருத்துகள்:

  1. நல்லதொரு நினைவுப் பதிவு.

    நான் ஆடிப்பெருக்கு கொண்டாட்டங்களைப் பார்த்ததில்லை.
    பெரியவர்கள் சொன்னதைக் கேட்டதுதான்.

    மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஊர் மாறினால் எந்த நதிக்கரையோரம் இந்தக் கொண்டாட்டத்தைப் பார்க்க முடியும்:)

    ஆற்றங்கரைக்கும் உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் நினைவோடைகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி! தங்கள் ஆதங்கமும் புரிகிறது!!

    பதிலளிநீக்கு
  3. படிக்கும் ​போது பழைய நினைவுகள் ​பெருக்கெடுக்கின்றன!!

    பதிலளிநீக்கு
  4. தங்கள் வரவுக்கு நன்றி.
    நீங்கள் கேட்டு கொண்டது மாதிரி நெல்லை கோயில்கள் பற்றி பின் எழுதுகிறேன்.
    ஆகஸ்டு முதல் தேதி விராலிமலை முருகனைபற்றி எழுதியிருக்கிறேன்,எப்படியிருக்கிறது
    என்று படித்து சொல்லுங்கள்.
    ந்ன்றிவல்லி.

    பதிலளிநீக்கு
  5. வாங்க முல்லை,
    இப்போது நீங்கள் உங்கள் மகளை பற்றி
    எழுதிவருகிறீகள்,

    எனக்கு என் மகளை பற்றி எழுத இப்போதுதான் வாய்பு கிடைத்துள்ளது.

    குழந்தைகள் இல்லாத விழாக்களில்
    நிறைவு இல்லை.
    அவர்கள் வரும் நாள்தான் விழா.

    பதிலளிநீக்கு
  6. இயற்கையை ஆராதித்த காலத்தில் சுழித்து ஓடிய ஆறு இன்றைக்கு சாக்கடையாக குறுகி நிற்பது வேதனை.


    \\ஏரிகுளம் கிணறு ஆறுஎல்லாம் நிரம்பி வழிய மாரி அளவாய்ப் பொழியட்டும் //
    வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அம்மா, நல்ல மழை பெய்து எப்பொழுதும் தண்ணீர் காவேரிக் கரைகளைத் தொட்டு ஓடட்டுங்கிற வேண்டுதல் ரொம்ப அவசியமாகப் படுகிறது, இன்னிக்கு.

    உங்க பொண்ணை நல்லாவே கருகமணி ரசிகையா வளர்த்திருக்கீங்க... அதுவும் ஒரு விதத்தில ரொம்ப நல்லதுதான் :-))

    பதிலளிநீக்கு
  8. நன்றி தெகா,


    எண்ணம் போல் வாழ்வு என்பார்கள்,
    என் மகளுக்கு பிடித்த கருகமணிதான்
    அவள் ஊரில் போடமுடியும்.

    பதிலளிநீக்கு
  9. முத்துலெட்சுமி,வழிமொழிதலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஆடிப்பெருக்குன்னா எங்களுக்கு சின்ன வயசுல ஞாபகத்துக்கு சட்டுன்னு வர்றது சப்பர விளையாட்டுதான்..

    காவிரியை சுற்றி இருக்கின்ற எல்லா ஊர்களிலும் ஆடிப்பெருக்கு அட்டகாசமான திருவிழாவாக முன்னர் இருந்தது.

    பதிலளிநீக்கு
  11. ஆடிப் பெருக்கு பற்றி அழகான நினைவுகள்.

    எல்லாக் கொண்டாட்டங்களும் இப்போது இப்படியாகி விட்டது. திருவிழா போல வீட்டு வாசலில் மாக்கோலமிட்டு செங்காவி தீட்டிய மண்கட்டிகள் வைத்து ஓலைகள் வைத்து பொங்கிய பொங்கல் இன்று கேஸ் அடுப்பில் முடிந்து விடுகிறது.

    என் கைகளில் இப்போது மருதாணி வாசம் வருவது போலிருக்கிறது:)!

    நதியா காலத்தையும் நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராமலக்ஷ்மி!
    வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. சென்ஷி இங்கு ஆடிபெருக்கு சமயம்
    ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால்
    சிறுவர்களின் சப்பர விளையாட்டு இல்லை.

    பதிலளிநீக்கு