செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இளமையின் ரகசியம் - தீராக் கற்றல்






  கற்றல் என்பது தாயின் கருவறையிலிருக்கும் போது இருந்தே ஆரம்பித்து விடுகிறது. வயிற்றில் இருக்கும் போதே குழந்தை  சத்தங்களை உணர்ந்து கொள்கிறது. 
      திருமணம் செய்து குடும்பம் என்று ஆனவுடன் கணவன், குழந்தைகள் என்று அவர்களுக்காக வாழ்ந்த அம்மா, அவர்களுக்கு எல்லாம் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட்ட பின்  தன்னைக் கொஞ்சம் பார்க்க ஆரம்பிக்கிறாள்.  குழந்தைகள் எல்லாம் இப்போது பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியாத காலச்சூழ்நிலை. முதலில் அதை அம்மா ஏற்றுக் கொள்கிறாள்.  குழந்தைகளை நாம் பார்க்க முடியாதே, நமக்கு உடம்புக்கு ஏதாவது வந்தால் உடனே வந்து பார்க்க முடியாதே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்காமல்  அவர்கள் வாழ்க்கையை அவர்கள்  நன்றாக வாழவேண்டும், நம் பாசத்தால் அவர்களைக் கட்டிப் போடக்கூடாது என்பதில் இப்போது உள்ள தாய்மார்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாம்  நன்றாக இருந்தால் தாம் தூரத்தில் இருக்கும் நம் குழந்தைகள் நிம்மதியாக வேலைப்பார்க்கலாம், அவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்க தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தங்கள்  வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள் (மாற்றி யோசி) . தங்களை சுறு சுறுப்பாய் வைத்துக் கொள்ள ஏதாவது  படிக்க ஆசைப்படுகிறார்கள். முன்பு  படிக்க முடியாமல் போனதைப் படிக்கிறார்கள்.  எந்த வயதிலும் படிக்கலாம், மனம் இருந்தால் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள்.

       நம்மிடம் கற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கை வருகிறது. கற்கும் ஆசை உள்ள தாய்மார்களுக்கு  குருவாக  குழந்தைகள், பேரன், பேத்திகள் சொல்லித்தரத்தயாராய் இருக்கிறார்கள்.  இவர்களிடம் என்ன படிப்பது என்று எண்ணத்தை தள்ளி வைத்துவிட்டு  மாணாக்கர்களாய் சேர்ந்து  நிறையக் கற்றுக் கொள்கிறார்கள்.முதலில் கணினி இயக்க கற்றுக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் மிக அவசியமான தேவைகளில் கணினிப் படிப்பும் ஒன்று என்று ஆகி விட்டது. வெளி நாட்டில், வெளியூரில் வாழும் குழந்தைகளை முதலில் நேரில் பார்த்துப் பேச, அவர்கள் நம்மைப் பார்க்க, கணினி இன்றியமையாத தேவை ஆகிறது.  பிறரை எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல் தாமே கற்றுக்கொண்டு அதை இயக்கி அவர்களுடன் உரையாடுகிறார்கள்.  

       இப்போது யாரும் கடிதம் எழுதுவது இல்லை. ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுத வீட்டு முகவரி வாங்கிக் கொண்ட காலம் மாறி, உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள் என்று கேட்டு வாங்கும் காலம் ஆகி விட்டது.  அதனால் நமக்கு என்று மின்னஞ்சல் முகவரி வைத்துக் கொண்டு  வீட்டுப்பண்டிகைகளில் எடுத்த படங்கள், உறவினர் வீடுகளுக்கு சென்று வந்தபோது அவர்களுடன் எடுத்த படங்கள் என்று தங்கள் பிள்ளைகளுடன் பகிரும் போது அவர்களுக்கும் உறவினர்களிடம்  உள்ள நெருக்கம் அதிகமாவதை உணர்கிறார்கள். இதை உண்மை என உணர்த்தும்  அம்பாளடியாள் எழுதிய கவிதை

உறவெல்லாம் வலைத்தளத்தில்
ஒளிந்திருக்கு ஆச்சி இனிமேல்
உனக்கும் தான் இது தேவைப்படும்
ஒவ்வொன்றாய்க் கற்றுக் கொள்ளு ஆச்சி !.....

மலருக்கு கலியாணம் அது
நடந்திடுச்சு ஆச்சி இப்போ
மணமக்களின் புகைப்படத்தை
இப்படிப் பார்க்க வேண்டும் ஆச்சி

மருமகனின் பெயரோடு உன்
பேத்தி பெயரைச் சேர்த்து
முகப் புத்தகக் கணக்கினுள்ளே
அந்த முகவரியைத் தேடு
நட்புக்கு அழைப்பொன்று
நீ கொடுத்தால் போதும்
நாங்கள் எல்லாம் அவர்களுடன்
நின்ற படம் தோன்றும் !....

மறக்காமல் லைக்கு மட்டும்
போட்டு விடு ஆச்சி அதையே
மற்ற எங்கள் சொந்தங்களுக்கும்
நீயே கற்றுக் கொடு ஆச்சி...........!!!//

http://rupika-rupika.blogspot.com/  ஆச்சிக்கு பேத்தி கற்றுக் கொடுத்து ஆச்சி தன் சொந்தங்களை  இணையத்தில் பார்த்து மகிழப் பேத்தி சொல்லித் தருகிறாள்.  மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கச் சொல்கிறாள். கருத்து சொல்ல நேரம் இல்லாமல் லைக் மட்டும் போட்டுவிட்டு ஓடும் காலத்தை  அழகாய் தன் கவிதையில் குறிப்பிட்டு இருக்கிறார்.



          சமீப காலமாய் பெண்களின் திறமைகளை வெளிக் கொண்டுவவரப் பத்திரிக்கைகள் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு பெண்களுக்கு போட்டிகள் எல்லாம் 
நடத்துகிறார்கள்  வயது வித்தியாசம்  இன்றி கலந்துகொண்டு தங்கள் திறமையை  வெளிக்காட்டுகிறார்கள். வயதானவர்கள் கூட ,ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். வினாடி வினாவிற்கு பதில் சொல்கிறார்கள். வெற்றி கீரிடம் அணிந்து கொள்கிறார்கள். எல்லாத் 
துறையிலும் இப்போது முதியவர்களும் வெற்றிக் கொடி நாட்டுகிறார்கள். வயதானவர்களுக்கு எப்போதெல்லாம் சாதிக்கும் கனவு வருகிறதோ அப்போதெல்லாம் முடித்துக் காட்டுகிறார்கள். அதற்கு அவர்களின் முயற்சியே கை கொடுக்கிறது. முதுமையை நினைத்து மூலையில் ஒதுங்காமல் தன்னாலும் முடியும் என்று சாதித்துக் காட்டுகிறார்கள். இணைய வழி நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் .  பத்திரிக்கை, தொலைக்காட்சி முதலியவற்றில் சாதனைப் பெண்களின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்படுகிறது. அவர்கள் எப்படி சாதித்தார்கள் என்பதை எல்லாம் அறியும்போது பெண்களுக்குத் தன்னம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படுகிறது.

வயதானவர்கள் நிறைய எழுதுகிறார்கள், இணையத்தில். வயது ஆக ஆக  ”மெமரி லாஸ் ” பிரச்சனை வரும் என்கிறார்கள்  மருத்துவர்கள்  அதற்கு நிறைய புத்தகங்கள் படிக்கச் சொல்கிறார்கள்.  நாளைடைவில் இந்த பிரச்சனை சரியாகி விடும் என்கிறார்கள் அதற்கு இணையம் கை கொடுக்கும், அவர்களுடம் பேச ஆள் இல்லை என்றால் அதற்கு இணையம் ஒரு நல்ல துணை. ஏதாவது கதை,கட்டுரை தன்  வாழ்க்கையில் கிடைத்த அனுபவம், தனக்குத் தெரிந்த சமையல் கலை, தையல் கலை, மற்றும் தனக்குப் பிடித்த புத்தகங்கள், சினிமா விமர்சனம் , பயணக்கட்டுரை எல்லாம் எழுதுகிறார்கள். அதைப் படித்து கருத்து சொல்பவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். பாராட்டு ஒரு நல்ல டானிக். அது அவர்களை நாள் முழுவதும்  உற்சாகத்தோடும் மனபலத்தோடும் வாழவைக்கும் மருந்து ஆகிறது.  மெமரி லாஸும் போய் சிறு வயது நினைவுகள் எல்லாம் வருகிறது. பலருடன் தன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்வாய் இருக்கிறார்கள். நண்பர்களிடமிருந்து நாள்தோறும் ஏதாவது புதிதாய்க்  கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். தன்  உடல்  குறையையே எப்போதும் கூறிக்  கொண்டு இருக்காமல்  குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்கள்,  தனக்கு தெரிந்த கைவைத்தியம், உடலோம்பல் முறைகள் எல்லாம் எல்லோருக்கும் சொல்கிறார்கள். பிறர் சொல்வதைக் கேட்கிறார்கள்.

இப்போது உடல் ஆரோக்கியத்திலும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது பெண்களிடம். வீட்டில் எல்லாம் இயந்திரமயமாய் போய் விட்டதால் உடல் உழைப்பு அதிகம் இல்லை. பயன்படுத்தபடாதபொருள் துருபிடித்து போவது போல் நம் உடலுக்கு ஏற்ற அசைவுகள் இல்லாத போது அந்த உறுப்புகளில் ஒரு இறுக்கம் ஏற்பட்டு அங்கு இரத்தஓட்டம், வெப்பஓட்டம், காற்றோட்டம்  குறைகிறது. வலி ஏற்படுகிறது அந்த வலி நாளைடைவில் பெரிதாகி வியாதியாக மாறுகிறது மருத்துவரிடம் போனால் எலும்பு தேய்மானம் என்கிறார். உடற்பயிற்சிகள் செய்யுங்கள் என்கிறார். அதனால் இப்போது எளிய முறை  உடல் பயிற்சிகள், உடலுக்கும், மனதை நன்றாக வைத்துக் கொள்ள தியானமும் கற்றுக் கொள்கிறார்கள்.  

      பயிற்சிகள் உடலை ஆரோக்கியமாய் வைக்கிறது நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. ஒரு செயலை கவனத்துடன் செய்யும் போது அதை நாம் மறப்பது இல்லை மனம் ஒன்றாமல் செய்யும் செயல் நம் நினைவில் நிற்பது இல்லை..உடற்பயிற்சிகள் செய்யும் போதும் தியானம் செய்யும் போதும் கவனத்துடன் செய்கிறோம் மனம் அதில் ஒன்றும் போது நலம்பல விளைகிறது. எந்த வேலை செய்தாலும் அதில் முழுமனசோட இருந்தால் 
அதில் வெற்றியும் மகிழ்ச்சியும் வந்து சேரும் என்பத நன்கு உணர்ந்து வருகிறார்கள்.சிந்தனை ஒருமுகப்படும் போது மன இறுக்கங்கள் மறைந்து எந்தவேலை எடுத்துக் கொண்டாலும்  சிறப்பாக செய்ய முடிகிறது. 

தான் கற்றதை அதனால கிடைத்த நன்மைகளை பிறருக்கு சொல்லும் போது  அவர்களும் பயன் பெறுகிறார்கள். நாம் சொல்லி அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியுடன் தான் பெற்ற இன்பத்தை  மற்றவர்களுக்கு பயிற்றுவைக்கும் ஆசிரியர்களாய் மாறுகிறார்கள்.  தோற்றத்தில் இளமையாக இருக்க வேண்டும் என்பதைவிட மனதில் இளமையாக இருக்கவேண்டும். இளமையாக இருக்க வேண்டும் என்றால் நாள்தோறும் ஏதாவது புதிதாக கற்க வேண்டும், அல்லது கேட்க வேண்டும்.அது வாழ்கையை நல்லபடியாக நடத்தி செல்ல உதவும்.நல்ல மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சி அலைகளை பரப்பிவரும் பெண்களே எல்லோராலும் விரும்பபடுகிறார்கள். இந்தக்கலாத்தில் பொன்நகை அணிந்து போகாமல் புன்னகை அணிந்து போவது மிகவும் நல்லது என்பதையும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் பெண்கள். 

கடந்து போனகாலம் இனி மறுபடியும் வாராது இருக்கும் கணங்கள் தான்  நமக்கு முக்கியம் இதை நழுவ விடாமல் நாள்தோறும் நம்மை புதுபித்துக் கொள்ளலாம். கற்றலும், கேட்டலும் நம் வாழ்வை வளம் பெறச் செய்யும் முதுமைத் துன்பம்,  உடல் துன்பம் எதுவும் இருக்காது. முதுமையிலும்  இன்பம் காணலாம்.


 சித்திரை  முதல் நாளில்  ’ பண்புடன் ’  இணைய இதழுக்காக  நான் எழுதிய  கட்டுரை.
நன்றி  சிறப்பாசிரியர் முத்துலெட்சுமி.

பண்புடன்



சனி, 13 ஏப்ரல், 2013

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்


சித்திரை விஷுக்கனி காணும் நாளில்,  மா, பலா, வாழை  என்ற முக்கனிகளும்
மற்றும் எல்லாப் பழங்களும் இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படும்.



தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற பதிவில் சென்ற ஆண்டு விஷுக்கனி
கொண்டாடுவதைப் பற்றி  சொல்லிவிட்டேன்.

இந்த ஆண்டு,  விஷுக்கனியில் முக்கியமாக  இடம் பெறும் மா, பலா, வாழையும் அதன் நன்மைகளையும் பற்றிப் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பழங்களைப்பற்றி இயற்கை சங்கத்தில் சொல்வதையும் பகிர்ந்து கொள்கிறேன்.


சூரியன் தனது ஒளியால் காய்களைக்  கனியச்செய்கிறது.
சூரியசக்தியால் சுவை ஊட்டப்பட்ட கனிகளைச் சாப்பிடுவதால் எல்லா
உயிரினங்களும், மனிதர்களும், உடலுக்குத் தேவையான சக்திகளைப்
பெறுகிறார்கள்.

காலையில் பழ உணவு எடுத்துக் கொள்வதைப் பழ ஆகாரம் என்று சொன்னார்கள். அது  தான் மருவி இப்போது பலகாரம் என்று ஆனதாய் சொல்கிறார்கள், இயற்கைச் சங்கம் என்ற அமைப்பை வைத்து இருப்பவர்கள். காலையில் சாப்பிடும் பழ  உணவு, பொன் போன்றது. மத்தியானம் வெள்ளி போன்றது. இரவில் ஈயம் போன்றது என்கிறார்கள். தினசரி உணவில் ஒரு பகுதி பழங்களாக அமைந்தால் அதன் மூலம் இயற்கை சத்துக்கள் கிடைக்கும் .அந்த அந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களை உண்பதால் இயற்கை சக்திகள் குறைவில்லாமல் கிடைக்கிறது. நோய் வராமல் பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

பழம் சாப்பிடுவதால் அது உணவாகவும் இருக்கிறது, மருந்தாகவும்
இருக்கிறது. குடலுறிஞ்சிகளால் எளிதில் உறிஞ்சப்படக்கூடியதாகவும்,
நார்ப்பொருள்கொண்டதாகவும்,  குடலின் புளிப்புத் தன்மையை
அகற்றுவதாகவும் இருக்கிறது.

 முக்கனிகள்

 மாம்பழம்:

மாம்பழத்தில் வைட்டமின் A உயிர்ச்சத்து நிறைந்து உள்ளது.  இரத்தம்
சுத்திகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.  மாம்பழம் கிடைக்கும் காலங்களில்
மாம்பழத்தை உண்டு பலம் பெறலாம்.

வாழைப்பழம்:

குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்
பழம், வாழைப்பழம். இதில் வைட்டமின் A ,  வைட்டமின் B,  B2,  C
உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய
இருக்கின்றது. இந்த சத்தின் அளவு வாழைப்பழத்தில் உள்ள வகைக்கு வகை
வித்தியாசப்படும்.

பலாப்பழம்

முக்கனிகளுள் ஒன்று. தலைநரம்புகளுக்கு  வலிமையக் கொடுக்கும். அதிக
அளவு சூட்டைத்தருவதால் அளவோடு உபயோகிக்க வேண்டும்.
வைட்டமின் A உயிர்ச்சத்து அதிகம் இருப்பதால் இதைச் சாப்பிட்டால் உடல்
வளர்ச்சி சீரடையும். தேகத்தில் தோலை வழுவழுப்பாக வைத்து இருக்க
உதவும். நரம்புகளுக்கு உறுதி தரும். இரத்தத்தை விருத்தி செய்யும். பல்
சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும் , பற்களைக் கெட்டிப்படுத்தும்.
வைட்டமின் A உயிர்ச்சத்துக்கு தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி
உண்டாகையால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

பொதுவாக பலாப்பழம் உடலுக்கு நன்மை தரக்கூடியதாகவே உள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தில் கூடப் பலாப்பழம் சேர்க்கப்படுகிறது. ஐந்து வகை
பழத்தினையும் தேனையும் சேர்ந்து தயாரிக்கும் பஞ்சாமிர்தம் உடலுக்கு
மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். விருந்துகளில் முக்கனி பரிமாறப்படுகிறது.  அதற்குக் காரணம், விருந்தில் சுவையான உணவுகள் பரிமாறப்படும்போது  நாம் அதிகமாய் சாப்பிட்டு விடுவோம். அதனால் உணவு ஜீரணம் ஆகவும்  உடற் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும்  நம் முன்னோர்கள் முக்கனிகளை விருந்தில் பரிமாறினார்கள். விருந்துணவை முக்கனிகளுடன் சாப்பிடும் போது ஜீரணம் சீக்கிரமாக நடந்து, இரைப்பையை விட்டு உணவு வெளியேறிவிடும். வயிற்று உபாதை இருக்காது.


எங்கள் வீட்டில் செய்யும் தமிழ்ப்புத்தாண்டு இனிப்பு:

   1 டம்ளர் அவலுக்கு அரை டம்ளர் வெல்லம் வேண்டும். வெல்லத்தைப் பொடி செய்து  1 ட்ம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து,  கல், மண் போக வடிகட்டி பின் அதைக் கொதிக்க   வைத்து சுத்தம் செய்யப்பட்ட அவலில்   ஊற்றி மூடி வைக்க வேண்டும்,   அதனுடன் சிறிது பாசிப்பருப்பு, எள் வறுத்துப் போடலாம்.,(வெல்ல நீரை  கொதி வந்தவுடன் அவலில் ஊற்றிவிடவேண்டும். வெகு நேரம் கொதிக்கவைத்தால் பாகு மாதிரி ஆகிவிடும்). அதுவும் ஊறினால் நன்றாக இருக்கும். நன்கு அவல் ஊறியவுடன் அதனுடன் தேங்காய்த் துருவலைப் போட்டு, கிளறி , ஏல்க்காயைப் பொடி செய்து போட்டு, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு  போட்டால்    இனிப்பு அவல் ரெடி.

புத்தாண்டு செய்திகள்

விஜய ஆண்டு நல்ல பலன்களைக் கொடுக்கட்டும்!

//மண்ணில் விசய வருடம் மழை மிகுதி
எண்ணு சிறுதானியங்கள் எங்குமே-- நண்ணும்
பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
நயன்களின்றி வாடுமென நாட்டு//

என்று பஞ்சாங்கத்தில் உள்ள பாடல் கூறுகிறது.

இப்பாடலில் கூறப்பட்டுள்ள நன்மைகளே நடக்கட்டும்.மழை பெருகட்டும்!
தானியங்கள் விளையட்டும்.

இனிய புத்தாண்டு மலரட்டும்!
இனிய வாழ்வு அனைவருக்கும் மலரட்டும்!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

இந்தப் புத்தாண்டில் நல்லதே நடக்க வேண்டுவோம்.

//இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின்புற்றிருந்து  வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.//

 ===== மகா கவி பாரதியார்.


வாழ்க வளமுடன்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

இன்ப மழை பெய்ய வேண்டும்!


கோடை காலத்தில் உயிரினம் வாழ நீர் அவசியம் வேண்டும்.
கோடையில் வெப்பம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்
 அமைத்து  தண்ணீர் கொடுத்து வருகிறார்கள்.

தண்ணீர்ப் பானைகள் வீட்டுத்திண்ணைகளில் வைக்கும்
பழக்கம் முன்பு இருந்தது. நடந்து செல்வோரின் தாகம் தணிக்க
வீட்டுத் திண்ணைகளில் மண்பானைகளில் தண்ணீர், மற்றும்
நீர்மோர் இருக்கும். இப்போது குடி தண்ணீர் கஷ்டத்தில் தண்ணீர்
 விலைக்கு வாங்கும் மக்கள், தண்ணீர் சேவை செய்வது கஷ்டமே!
 அப்படியும்  செய்து வரும் நல் உள்ளங்களும் உண்டு.

தண்ணீர் மூலம் வியாதிகள் பரவுவதைத் தடுக்கத் தண்ணீரைக்
காய்ச்சி குடிக்கவேண்டும் என்பதால் வெளியில் தண்ணீர்
குடிக்கவும் பயமாய் உள்ளது. இந்தக் கோடைகாலத்தில்
கோவில்களில் கொடியேறி, விழாக்கள் நடக்கும். அப்போது
திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தண்ணீர்ப் பந்தல்
வைப்பார்கள். சிலர் மாங்காய், இஞ்சி, பச்சைமிளகாய்,
கருவேப்பிலை, கொத்தமல்லி போட்ட  நீர்மோர் தருவார்கள்.

இப்போது  தண்ணீர் தண்ணீர் என்னும் நிலை ஏன் வந்தது?
என்ன காரணம்? மழை பொய்த்துப் போனதற்கு என்ன காரணம்
என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்தால் நீர்வளத்தை
மேம்படுத்தலாம்.

ஊர்களில் உள்ள ஊருணிகள், குளங்கள் , ஏரிகள் இவற்றை
சுத்தம் செய்யவே ண்டும்.மழை நீரை சேமிக்க அவற்றிற்கு
 நீர் வரும் பாதைகளைச் சரிசெய்யவேண்டும். நீர் வரும்
வழியில் வீடுகளைக் கட்டி நீர் வரத்தை தடுத்துக் கொண்டு
இருக்கும் தடைகளை அப்புறப்படுத்தி நீர்வரத்து வர ஒத்துழைக்கலாம்.வீட்டுக்குப்பைகள், கழிவுகளைக் குளத்தில்
விடுவதை நிறுத்தலாம்.

குளத்தில் ஊர்க் குப்பைகளைக் கொட்டிக் கொட்டி நாளைடைவில்
அதை தூர்த்து விட்டு அதைக் காணாமல்அடிக்காமல் வைத்துக்கொள்ளவேண்டும்
(ஒரு படத்தில் வடிவேல் கிணத்தை காணோம் என்பார்)
அப்படி எத்தனை, குளங்கள் காணாமல் போய் விட்டது என்று கணக்கெடுத்தால் தெரியவரும்.

”எங்கள் பிளாக் ”என்ற வலைத்தளத்தில்  ஸ்ரீராம் அவர்கள்
வழங்கிய பாசிட்டிவ் செய்திகளில் நேற்று பகிர்ந்த விஷயம்
மனதைக் கவர்ந்தது.  நீர் இல்லாமல் மக்கள் படும் துன்பத்தை
ஒரு தனி மனிதர் எப்படிப் போக்கினார் என்று  குறிப்பிட்டு
இருந்தார்கள்

// வானம் பார்த்த பூமி,  நிலத்தடி நீர் குறைந்து போதல், விவசாயக்
கடனுக்கு வட்டி கட்டி மாளாதது, என்று குடும்பமே ஊரை விட்டு
மாறி, மற்றும் விவசாயிகளின் தற்கொலை என்று மகாராஷ்டிராவின்
 பல கிராமங்களில் இருந்த நிலையேதான் ஹைவாரே பஜார் என்ற கிராமத்திலும். அந்த அவலங்களைத் தனி நபராகத் தடுத்து நிறுத்தி
தன் அறிவின் மூலம், தன் உழைப்பின் மூலம் சாதித்திருக்கிறார்
போப்பட் ராவ் பவார்.

                    முதற்கட்டமாக மக்களின் குடிப் பழக்கத்தை நிறுத்தி,
 புகையிலை,     குட்கா, பான் பராக் போன்ற போதைப் பொருட்கள் உபயோகிப்பதையும் நிறுத்த வைத்து, மக்கள் சக்தியின்
ஒருங்கிணைப்போடு கிராமம் முழுவதும் சிறுசிறு குளங்கள்
வெட்டி, மழைக்காலத்தில் பெய்யும் மழையைச்  சேமித்து,
 நிலத்தடி நீர் மட்டம் உயரச் செய்து, (52 மண் அணைகள், 2
நீர்த் தொட்டிகள், 9 சின்ன வாய்க்கால்களை அரசாங்கப்
பணத்திலேயே கட்ட வைத்தார்) 1995 களில் 80-125 அடிகளில்
கிடைத்த தண்ணீரை, தற்சமயம் 15 அடி தோண்டினாலே
கிடைக்கச் செய்திருக்கிறார். //

இது போல் நம் தமிழ்நாட்டிலும் செய்தால் நன்றாக இருக்கும்.

தொலைக்காட்சியில் நேற்று கேட்ட செய்தி மனதை கனக்க
வைக்கிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டுக்காடுகளில் யானைகள்
 அதிகமாக இறக்கின்றனவாம். காட்டிலிருந்து யானைகள் கூட்டமாய் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் ஊருக்குள் வருகிறது .  தண்ணீருக்காகவும் ஊருக்குள் வரும் யானைகள் பூச்சிக்
கொல்லி அடித்த பயிர்களை சாப்பிடுவதால் அவை சீக்கிரம் இறந்து
விடுகின்றன என்கிறார்கள், வனவிலங்கு பாதுகாவலர்கள்.

யானையின் வழித்தடத்தில் சுற்றுலாவிடுதிகள், அமைப்பதால்
அவைஅவதிப்படுகின்றன, 32 யானைகள் இறந்து இருக்கின்றன, காட்டுஎருமைகளும் நிறைய இறந்து இருக்கின்றன.

வனவிலங்கு பாதுகாவலர் இதற்குக் காரணங்கள் சொல்லுகிறார்கள்:
சுற்றுலா வரும் பயணியர் போடும்  பாலீதீன் கவர்,குப்பைகளை சாப்பிடுவதாலும்  பூச்சிமருந்துகள் அடித்த பயிர் பச்சைகளைச்
சாப்பிடுவதாலும் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு இறக்கின்றன
என்கிறார்கள். ஒரு யானைக்கு ஒரு நாளைக்கு 250 லிட்டர்
தண்ணீர் வேண்டுமாம், காடுகளில் அதற்கு தென்னை ஓலைகள்,
தண்ணீர் தொட்டிகள் எல்லாம் அமைத்து இருக்கிறார்கள். அவை
 ஊருக்குள் வராமல் தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரைக்
குடித்தும், மேலே ஊற்றியும் கொள்கிறது, அதுகளுக்கு வைத்த
உணவைச் சாப்பிட்டு செல்கிறது.

 (யானைக்கு வேர்வை சுரப்பிகள் குறைவாய் இருப்பதால்  வெப்பத்திலிருந்து  காத்துக் கொள்ள உடம்பின் மேல் தண்ணீரை வாரி இறைத்துக் கொள்கிறதாம்.)

இயற்கை விஞ்ஞானி  நம்மாழ்வார்  அவர்கள் ஒரு தொலைக்
காட்சியில் சொன்னார்: //தண்ணீர் உபயோகத்திற்கு  ,நம் தந்தைக்கு அவருடைய அப்பா குளம், ஏரியைக் காட்டினார்,   நம் தந்தை,
குழந்தைகளுக்கு கிணற்றைக் காட்டினார், நாம் நம் குழந்தை
களுக்கு பைப்பைக் காட்டினோம்., நம் குழந்தைகள் அவர்களின் குழந்தைகளுக்குப் பாட்டிலைக் காட்டுகிறார்கள். //

வருங்காலத்தில் நிலைமைஎன்னவாகும்?

 மண்ணுக்கு மழைத்துளி, நமக்கு உயிர்த்துளி. பறவைகள் கூட மழை
எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள வானிலை அறிக்கையை எதிர்பார்க்கிறதாம்

’எங்கள் பிளாக்’  ஆசிரியர்
குழுவில் உள்ள ஸ்ரீராம் அவர்கள்  இன்று பகிர்ந்து கொண்ட கற்பனைக் கவிதை பாருங்கள்.

//வானிலை அறிக்கையைக்
கொஞ்சம்
சத்தமாக வையுங்கள்
ரமணன் சொல்கேட்டு
மழை வரும் நாள்
அறிந்து
ஆடுகிறேன்..//

எப்படி இருக்கிறது  மயில் சொல்லும் கவிதை ? மழை பெய்து பறவைகளும்,
விலங்குகளும் ஆடட்டும்.

 நகரங்களில்   மோட்டார் வைத்துக் கார்ப்பரேஷன் குடிதண்ணீரை
சில குடியிருப்புகளில்  திருடிக் கொள்வதால் மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்க மாட்டேன் என்கிறது. தனியார் நிறுவனங்கள் தண்ணீரை மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து பாட்டில்களில் அடைத்து
விற்கிறார்கள். அதைத் தடுக்கவேண்டும் என்று மக்கள் சாலை மறியல் செய்தார்கள் , மதுரையில்.

தண்ணீர் கஷ்டம் தீர, குளம் குட்டைகளைப் பராமரிப்பதுடன் நாம்
 இயற்கைக்கு மாறாய் நடக்காமல் இருந்தாலே மழை பெய்யும்.
மழையை மக்கள் ஒவ்வொரு காரணங்களால்  வேண்டாம் என்று
சொல்லக் கேட்கும் போது மழை தள்ளிப் போகிறது.

இயற்கையை போற்றுதும் என்பார்கள்.
இயற்கையானது ஓயாது தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.

மழைக் காலத்தில் மழை வேண்டும், வெயில் காலத்தில் வெயில்
வேண்டும். மழை இல்லை என்றால் உயிரினங்கள் வாழமுடியுமா?
வெயில் இல்லை என்றால் தாவரங்கள் உணவு தயார் செய்ய முடியுமா?
நாமும் தான் வெயில் காலத்தில் தானியங்களை காயவைத்து
எடுத்துக் கொள்கிறோம், வத்தல், வடகம் போட்டு மழைக்  காலத்தில் உபயோகப்படுத்த சேமித்து வைக்கிறோம். நாம் மட்டும் அல்ல சகலஜீவராசிகளும் கோடைக்காலத்தில் மழைக்காலத்திற்குத்
தேவையான  உணவை சேமிக்கும் அறிவு  பெற்று இருக்கிறது.

பாரதி வெம்மைகொடுக்கும் ஞாயிறைப் போற்றுகிறார்:

//நாம் வெம்மையை புகழ்கின்றோம்,வெம்மைத்தெய்வமே,
ஞாயிறே, ஒளிக்குன்றே, அமுதமாகிய உயிரின் உலகமாகிய
உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே!
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே, வலிமையின்
ஊற்றே, ஒளி
மழையே, உயிர்க்கடலே!
மழையும் நின் மகள்; மண்ணும் நின் மகள்; காற்றும் கடலும்
கனலும் நின் மக்கள் ; வெளி, நின் காதலி; இடியும் மின்னலும்
நினது வேடிக்கை.
நீ தேவர்களுக்குத் தலைவன். நின்னைப் புகழ்கின்றோம்.//

பாரதி பராசக்தியின் செயல் தான்  கருணை  மழை   என்கிறார்.

//மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான்
வானிருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்,
ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழையெலாம் இடையின்றிவ் வானநீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
“மாழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்
வாழ்க தாய்!” என்று பாடும்மென் வாணியே.//

வாணி பாடும் பாட்டைக்கேட்டு , பராசக்தி நம் துயர் தீர்க்க,
கருணை மழை பெய்து அருள் செய்ய வேண்டும்.

தாயுமானவர் இறைவனை நினைந்து பாடும் போது,

//வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி
எனை வாழ்விப்பது உன்பரங் காண்,//

என்கிறார்.


எல்லோரும் நலமாய் வாழ இன்பமழையாய் இறங்கி வா இறைவா!

இன்று உலக சுகாதார தினம். ஊர் முழுவதும் சுத்தமாய் வைத்துக்
கொள்ள வேண்டும். இப்போது விடுமுறை வ்ரப்போகிறது
குடும்பத்துடன் இயற்கை சூழ்ந்த இடங்களை கண்டு களிக்க
சுற்றுலா போவோம் அப்படி போகும்   இடமெல்லாம் நாம்
 சுத்தமாய்  வைத்துக் கொண்டால்  போதும்.
”சொர்க்கம் என்பது நமக்கு  சுத்தம் உள்ள ஊருதான் “
விண்ணில் உள்ள சொர்க்கத்தை மண்ணில் காண சுத்தமாய் வைத்து இருப்போம் நம் ஊரை.

இறைவன் குடி இருக்கும் வீடு சுத்தமாய் இருக்க வேண்டும்
அல்லவா! விண்ணுக்கு ஒருமருந்து மண்ணுக்கு வர நாம்
எல்லோரும் ஒத்துழைப்போம்.

                                                        வாழ்க வளமுடன் !

                                                    --------------------------------


வெள்ளி, 29 மார்ச், 2013

கடல் அழகு





                       
கடல் அழகு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. கடல் ஒரு அலுக்காத பொழுது போக்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும். கடல் அற்புதமான  இதம் தரும் மருந்து. மனதை மகிழச் செய்யும் குழந்தை. அவர் அவர் மனநிலைக்கு ஏற்ற இடம் கடல் தான்.

இந்தத் கோடை வெயிலுக்கு இதம் தரும் இடம். காசு செலவில்லாமல்
காற்றை நாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கி வரலாம், காற்று
வாங்கப் போய் கவிதையும் வாங்கி வரலாம் என்று கவிஞர்களும் பாடி
இருக்கிறார்கள். வெயில் காலத்தில் கடற்கரை  இருக்கும் ஊரில்
உள்ளவர்கள் எல்லாம்  மாலை நேரம் அங்கு கூட ஆரம்பித்து
விடுவார்கள். சுகமான காற்று வாங்கி மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக்
களிப்பார்கள். கடலைப்பார்த்தவுடன் சிலருக்கு கவிதை, பாட்டு எல்லாம் வருகிறது. எனக்குக் கடலை ரசிக்கத் தெரியும், அதைக் கண்டு குதூகலிக்கத் தெரியும்.   இதில்  பாரதியின் பாடலையும், புகழ்பெற்ற  எழுத்தாளர் எழுதிய கதையில் வரும் ஒரு பெண்  பாத்திரம் கடலில் போகும் போது பாடிய பாடலையும் பகிர்ந்து இருக்கிறேன்.
 
பாரதி கடல் நீர் ஆவியாகி மழை பொழிந்தால் நல்லது என்கிறார்.
மக்கள், பறவைகள்  பகல் பொழுதில் வெயிலின் கொடுமையால்
படும் துன்பம், குறைய இன்ப மழையை அழைத்துப் பாடுகிறார். நாமும் அவருடன் சேர்ந்து இன்ப மழையை அழைத்துப் பாடுவோம்.

//வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மைகுன்றிய
     பிரதேசங்களுக்கு காற்று ஓடி வருகிறது.
அங்ஙனம் ஓடி வரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக்
     கொண்டு வருகிறது.
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை  கடற்பாரிசங்களிலிருந்தே
     வருகின்றது.
காற்றே , உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்
     மழை கொண்டு வா.
உனக்குத் தூபதீபங்கள் ஏற்றி வைக்கிறோம்.
வருணா, இந்திரா, நீவிர் வாழ்க
இப்போது நல்ல மழை பெய்ய்யும்படி அருள் புரிய வேண்டும்.
எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய் விட்டன்.
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று
     காலிகளுக்கும் நோய் வருகிறது. அதனை மாற்றியருள
     வேண்டும்.
பகல்நேரங்களிலே அனல் பொறுக்க முடியவில்லை
மனம்” ஹா ஹா” வென்று பறக்கிறது.
பறவைகளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப்
    பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன.
பலதினங்களாக, மாலை தோறும் மேகங்கள் வந்து
    கூடுகின்றன.
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய்,ஓரிலைகூட
     அசையாமல்,புழுக்கம் கொடிதாக இருக்கிறது.
சிறிதுபொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து
     மேகங்களை அடித்துத் துரத்திக் கொண்டு போகின்றன.
இப்படிப் பல நாட்களாக ஏமாந்து போகிறோம்.
இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா, உங்கள்
     கருணையைப் பாடுகிறேன்.
எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து உலகம் தழைக்குமாறு
 இன்ப மழை பெய்தல் வேண்டும்.//

 --இவை கடலை பார்த்தவுடன்  பாரதிக்கு தோன்றும் எண்ணம்.

அவர் அவர் மனநிலைக்கு ஏற்ற இடம் கடல் தான் என்று முன்பு
சொன்னது போல் ஒரு மங்கைக்கு இந்த கடலைப் பார்த்தவுடன் இப்படி
மனது பொங்கிப் பாடுகிறாள்.- யார் என்று சொல்லுங்களேன்!

//அவளுடைய  கானத்தைக் கேட்பதற்காகவே கடலும் அலை அடங்கி
ஓய்ந்திருந்தது போலும்! அதற்காகவே காற்றும் வீசி அடிக்காமல் மெள்ள
மெள்ள தவழ்ந்தது போலும்! தூரத்தில் தெரிந்த காட்டு மரங்களுமிலை
அசையாமல் நின்று அவளுடைய கானத்தைக் கவனமாகக் கேட்டன
போலும்! வானமும் பூமியும் அந்த கானத்தைக் கேட்டு மதி மயங்கி
அசைவற்று நின்றன போலும்! கதிரவன் கூட அந்த கானத்தை
முன்னிட்டே மூலைக்கடலை அடைந்தும் முழுகி மறையாமல் தயங்கி
நிற்கிறான் போலும்!
தேனில் குழைத்து வானில் மிதந்து வந்த பாடலை நாமும் சற்றுச் செவி
கொடுத்துக் கேட்கலாம்.

“அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான்  பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே!
வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பது மேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே
காற்று சுழன்றடிப்பதுமேன்?”//

யார் என்று தெரிந்து விட்டதா?
எல்லோருக்கும் தெரிந்த பெண் தான்.  இந்தப் பெண் எந்தக்கதையில் வரும் பாத்திரம் என்று தெரிகிறதா?

----------



வியாழன், 21 மார்ச், 2013

வாழைக்காய் அப்பளம்



மாசி மாதம் ஆரம்பித்துவிட்டால் வத்தல், வடகம் போட ஆரம்பித்து விடுவார்கள். பங்குனிக்குள் முடித்துவிடுவார்கள். சித்திரை வத்தல் சிவந்துவிடும் என்று சொல்வார்கள்.


அக்கம் பக்கத்து வீடுகளில் கூழ்வடகம் போடவில்லையா? என்றும்  முடித்துவிட்டீர்களா? என்றும் ஒருவருக்கு ஒருவர்   கேட்டுக் கொள்வார்கள்.
 திருநெல்வேலியில் சாலைக்குமரன் கோவில் எதிரில் அருமையான வீட்டுமுறையில் போட்ட வடகம், வத்தல் கிடைக்கும். சென்ற முறை அங்கு சென்றிருந்தபோது அதை வாங்கி வந்து விட்டேன்.  அங்கு வாங்கியதை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டுவிட்டேன். நம்மால் இப்போது செய்ய முடியவில்லை. வீட்டில் எல்லோரும், கஷ்டப்படுத்திக் கொள்ளாதே போதும். வத்தல் எல்லாம் போட்டு வத்தலாய் காய்ந்தது எல்லாம் போதும் என்கிறார்கள்.
முன்பெல்லாம் இரவு சுடச் சுட சாதம் , வத்தக் குழம்பு , மிளகு ரசம், , துவையல், வத்தல் , வடகம்தட்டு நிறைய வறுத்து வைத்து  சாப்பிட்ட காலங்கள் போய் விட்டது. இப்போது இரவு, பலகாரம் தான். குழந்தைகளுக்கும் வித விதமாய் டிபன் தான் வேண்டி இருக்கிறது. வத்தல் வடகம் பொரிப்பது குறைந்து விட்டது.

இந்த முறை வாழைக்காய் அப்பளம்  மட்டும் செய்தேன்.முன்பு ஒருமுறை மஞ்சரி பத்திரிக்கையில் வந்த குறிப்பு அது.

அதன் செய்முறை :
வாழைக்காய் -பெரியது 6
பச்சைமிளகாய் -6
உப்பு, பெருங்காயம்- தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் -ஒரு ஸ்பூன்.

உப்பு, காரம் அவர் அவர்கள் விருப்பம் போல் கூடவோ, குறைத்தோ போட்டுக் கொள்ளலாம்.

பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வாய் அகன்ற பாத்திரத்தில் வாழைக்காயை முழுதாய் தோலுடன் வேக வைக்க வேண்டும். குக்கரில் வேக வைக்கலாம். ஆனால் கலர் வெள்ளையாக இருக்காது.

நான் குக்கரில் தான் வேகவைத்தேன்.முன்பு எல்லாம் இட்லி கொப்பரையில் வேக வைப்பேன். நேரத்தை மிச்சம்செய்யவும் , கேஸ் சேமிப்புக்காகவும் குக்கரில் வேக வைத்துவிட்டேன்.

வாழைக்காய் இளஞ்சூட்டில் இருக்கும் போதே கல்லுரலில் இட்டு அரைத்துக் கொள்ளவேண்டும் .

நான்  கல்லுரல் இல்லாத காரணத்தால் காரட் துருவியில் துருவிக் கொண்டேன். பின்  பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் வைத்து  அரைத்துக் கொண்ட கலவையை, வாழைக்காய் துருவி வைத்ததில்  கலந்து, நன்றாக பிசைந்து கொண்டு, சிறிது சிறிதாக உருட்டிக் கொண்டு, இரண்டு பாலீதீன் சீட்களுக்கு நடுவில் வைத்து, சப்பாத்திக் கட்டையால் அப்பளம் போல் செய்து கொள்ளலாம்.  கைகளால் தட்டவும் செய்யலாம்.
அப்பளம் ஒன்றுபோல அழகாய் இருக்க, நான் பில்டர் மூடியால் வெட்டிக் கொள்வேன்.

பின் வெயிலில் காயவைக்கவேண்டும். இரண்டு நாளில் காய்ந்துவிடும் .
எண்ணெயில் பொரித்தோ, அல்லது சுட்டோ சாப்பிடலாம்.
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது வாழைக்காய் அப்பளம்.


































செய்து பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

புதன், 6 மார்ச், 2013

பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்


மார்ச் 8ஆம் தேதியை மகளிர் தினமாய் நாம் கொண்டாடுகிறோம்.  சமுதாயத்திற்கு சேவை செய்த  சிறந்த பெண்மணி பத்மஸ்ரீ  கிருஷ்ணம்மாள் அவர்களை இந்த கட்டுரையில் வாழ்த்த விரும்புகிறேன்.








நாங்கள் கயிலைக்கு  புனிதப்பயணம் ஆரம்பித்தபோது 31.08.2011 அன்று நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து காலை 11 மணிக்கு சோழன் விரைவு ரயில் வண்டியில் சென்னைக்குப் புறப்பட்டோம்.    ரயிலில்  எங்கள் இருக்கைக்கு போகும் முன்பு ஒரு வயதான பெண்மணி இருந்த இருக்கையை தாண்டி போக நேரிட்டது. அவர்களை எங்கோ பார்த்தமாதிரி இருந்தது , அவர்களை ஏதோ பத்திரிக்கையில்(மங்கையர் மலர், அல்லது சிநேகிதி  என்று நினைக்கிறேன்) படித்து இருக்கிறேன் என்று என் கணவரிடம் சொல்லிக் கொண்டு இருந்த போது எனக்கு நினைவு வந்து விட்டது. அவர்கள்  சுதந்திர போராட்ட  வீராங்கனை, சமூக சேவகி  பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் ஆவார்.
கீழ்வெண்மணி கிராமத்து விவசாய  மக்களுக்கு அவர் தெய்வம் போல் என்று படித்தது நினைவு வந்தது.

அவர்கள் சில வெளி நாட்டு அன்பர்களுடன் வந்து இருந்தார்கள். செங்கல்பட்டுக்கு போகிறேன்  என்றார்கள்.  நாங்கள்  அவர்களை வணங்கி உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி என்றோம்.  எவ்வளவு உயர்ந்தவர்கள் அவர்களுடன் நின்று பேசுவதே பெரிய பாக்கியம். அவர்கள் அவர்களைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை கொடுத்தார்கள் அதைப்படித்த போது அவர்கள் எவ்வளவு விருதுகள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள், எவ்வளவு துன்பங்கள் பட்டு இருக்கிறார்கள் என்பது எல்லாம்  தெரிந்தது.

நிறைய விருதுகள் பட்டங்கள் எல்லாம் வாங்கியும் பெருமை கொஞ்சமும் இல்லாமல் மிக எளிமையாக நிறைகுடம் போல் ஒளிர்ந்த அவர்களை  போட்டோ எடுத்துக் கொள்கிறேன் என்று அவர்களை மட்டும் போட்டோ
எடுக்கப் போனேன். அவர்களுடன் வந்து இருந்த அயல்நாட்டுப் பெண்மணி நீங்கள் சேர்ந்து நில்லுங்கள், நான் எடுக்கிறேன் என்று அன்பாய்   எடுத்துக் கொடுத்தார்கள். அவர்களை பார்த்து வந்தபின் அடிக்கடி பொதிகை தொலைக்காட்சியில் அவர்கள் பேட்டி வைத்தார்கள். நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன். இதை முன்பே பார்த்து இருந்தால் அவர்களிடம் உங்களை பொதிகையில் பார்த்தேன் என்று சொல்லி இருக்கலாம். மன உறுதி நிறைந்த  சமூகசேவையை உயிர் மூச்சாகச் செய்த பெண்மணியை சந்தித்தது பற்றி  இந்த மகளிர் தினத்தில்  பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

”நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ” என்று தினமலர் குறிப்பிட்டு இருக்கிறது. படித்து இருப்பீர்கள். இருந்தாலும் இந்த பெண்கள் தினத்தில்  வீரமிக்க  பெண்மணிக்கு வணக்கம் சொல்ல மறுபடியும் படிக்கலாம் அல்லவா!

//"அந்த கூட்டத்தில் கல்யாண வயதில் இருந்த அந்தப் பெண் மட்டும் கழுத்தில், காதில், மூக்கில் என்று பொட்டு தங்க நகைகூட இல்லாமல், சாதாரண கைத்தறி புடவை அணிந்த நிலையில் எளிமையின் வடிவமாக காணப்பட்டார்'' என்று சுதந்திர போராட்ட தியாகியான ஜெகந்நாதனால் கைப்பிடிக்கப்பட்டவரும், தலித் சமூகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தவரும், பூமிதான இயக்கத்தின் ஆணிவேராக இருந்தவரும், நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் சுவீடன் நாட்டால் வழங்கப்படும் "வாழ்வுரிமை விருது” பெற்றவரும்' இன்றைக்கு 94 வயதானாலும் தளரா மனஉறுதியுடன் காணப்படுபவருமான கிருஷ்ணம்மாளை இந்த கட்டுரை படம் பிடிக்கிறது

திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் 1926 ம் ஆண்டு பிறந்தவரான கிருஷ்ணம்மாள்தான் தமிழக தலித் இனத்தின் முதல் பட்டதாரி எனலாம்.கல்லூரியில் படிக்கும் போது எதிர்பாரதவிதமாக காந்திக்கு உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.,இதன் காரணமாக காந்தியத்தை கடைபிடிக்கத் துவங்கியவர், சர்வோதய இயக்கத்தில் பணியாற்றியவர், காந்தியவாதியான ஜெகந்நாதனை திருமணம் செய்துகொண்டவர்.

இந்த நிலையில் நாகை,கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்ட விவசாயிகள் எரித்துக்கொன்ற சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நாகை வந்தவர் , பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற வேண்டி நாகையில் தங்கியவர் பின்னர் நாகை வாசியாகவே மாறிவிட்டார்.

அப்போது விநோபாவே நாடு முழுவதும் பூமிதான இயக்கத்தை நடத்திக்கொண்டு இருந்தார். இருப்பவரிடம் இருந்து நிலத்தை பெற்று இல்லாதவருக்கு வழங்கும் இந்த பூமிதான திட்டத்தை தமிழகத்தில் நடத்திச் சென்றவர் கிருஷ்ணம்மாளாவார். தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் ஏக்கர் நிலத்தை பெற்று ஏழைகளுக்கு வழங்கினார்.

எவ்வளவுதான் உழைத்தாலும், எத்தனைகாலம் உழைத்தாலும் அரைப்படி நெல் கூடுதலாக கிடைத்தால் அதிசயம் என்று எண்ணியிருந்த உழவர்களுக்கு, சொந்தமாக உழைத்த மண்ணே கிடைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இந்த விஷயத்தை அசாதாரணமாக கிருஷ்ணம்மாள் நடத்திக்காட்டினார்.

நில மீட்பிற்காக தொடங்கப்பட்ட "லாப்டி' இயக்கத்தை விரிவுபடுத்தி விவசாய தொழிலாளர்களின் குடும்பத்தினர் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுதல், பாய் நெய்தல், மேல்படிப்பு படித்தல் என்று வலுவான,வளமான வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.

இதை எல்லாம் செய்யும் நாங்கள் தேவதூதர்கள் அல்ல,கொள்கைகளை மட்டுமே உதிர்க்கும் அரசியல்வாதிகளும் அல்ல, காந்திய சிந்தனையில் ,விநோபா வழியில் கிராமங்கள் உயர கிராமமக்கள் விழிப்புணர்வு பெற எங்களால் முடிந்த அளவு முயற்சிக்கிறோம்.,இந்த முயற்சி ஆங்காங்கே பலரால் மேற்கொள்ளப்பட்டால், நம் தேசம் ஏழைகளும், கோழைகளும் இல்லாத நல்ல கொள்கைப் பிடிப்புள்ள தேசமாகும் என்பதே எங்களது நம்பிக்கை, அந்த நம்பிக்கையை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறோம் எனும் கிருஷ்ணம்மாளின் பாதையில் தடைக் கற்களும்,முட்களும் மிக அதிகம், உடம்பிலும்,மனதிலும் பட்ட காயங்கள் இன்னும் அதிகம்.,ஆனால் இதையெல்லாம் சொல்லி எந்த நிலையிலும் பச்சாதாபத்தை பெற விரும்பாதவர் இவர்.

நாடி நரம்பு தளர்ந்து கயிற்றுக்கட்டிலில் எழுந்து உட்காரக்கூட ஆள் துணை தேடும் 82வயதில்தான் இவர்,விளைநிலங்களை உப்பளங்களாக மாற்றும் இறால் பண்ணையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் மேற்கொண்டார். இதற்காக இவர் குடியிருந்த வீடு தீவைத்து எரிக்கப்பட்டது, கூட இருந்தவர்கள் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இப்படி சொல்லமுடியாத சிரமங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்று போராடியவர்.

விவசாய மண்ணையும்,விவசாய மக்களையும் இவர் நேசித்த அளவிற்கு நாட்டில் யாரும் நேசித்து இருப்பார்களா என்பது சந்தேகமே,இதனால் அனைவராலும் "அம்மா' என்றழைக்கப்படுபவர்.

கத்தியின்றி,ரத்தமின்றி சாதிக்கமுடியும் என்பதன் அடையாளமே கிருஷ்ணம்மாள் என்று வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவர் இவரைப்பற்றி எழுதிய புத்தகத்தில் வியந்து பாராட்டி எழுதியுள்ளார்.

தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக இல்லாத விவசாயிகளுக்கு நிலம், வீடு, கல்வி, வேலைவாய்ப்பு என்று நிகழ்காலமாகவும்,எதிர்காலமாகவும் விளங்கும் கிருஷ்ணம்மாளுக்கு சுவீடன் அரசு தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான "வாழ்வுரிமை விருது' வழங்கி கவுரவித்துள்ளது.

சிலருக்கு விருதால் பெருமை
சிலரால் விருதிற்கு பெருமை
கிருஷ்ணம்மாள் சந்தேகமில்லாமல் இரண்டாவது ரகம்.
-எல்.முருகராஜ்.//


இரு காந்திகள்
இக் கட்டுரை ஜெயமோகன் எழுதி இருக்கிறார்.


இந்த லிங்கில், கத்தியின்றி ரத்தமின்றி ! என்ற புத்தகத்தின் மதிப்புரை வந்திருக்கிறது.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்- சுதந்திர போராளியின் வீரவரலாறு இதில் கூறப்படுகிறது.

திருமதி . கிருஷ்ணம்மாள்  அவர்களின் கணவருக்கு  நினைவாற்றல் குறைந்து வருவதாகவும்   உடல் நலிவுற்ற கணவரை அன்பாக  பார்த்துக் கொண்டார்  என்று பத்திரிக்கை மூலம் அறிந்து கொண்டேன்.
போன மாதம் பிப்ரவரி 12ம் தேதி திரு ஜெகந்நாதன் அவர்கள் மறைந்தார் அப்போது அவருக்கு வயது 100 . திரு ஜெகந்நாதன் அவர்களின் புகழை விவசாயிகள் காலம் முழுவதும்  சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

திருமதி. கிருஷ்ணம்மாள் அவர்கள் மனம் தளராமல் தன் பணியைத் தொடர இறைவன் அவர்களுக்கு மனபலத்தையும், உடல் நலத்தையும் அருளவேண்டும்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.


                                                       ----------------------------

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மெல்ல மெல்ல விடியும் வைகறைப் பொழுது.


                                
                                        காலைப் பொழுது ---  நான் எடுத்த புகைப்படங்கள்
-



காலைப்  பொழுது மிகவும் ரம்மியமாய் இருக்கும்.  அதிகாலையில் எழுந்துகொள்வது கஷ்டம். ஆனால் எழுந்துகொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.அதிகாலை  நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள். அந்த நேரம் செய்யும் பிரார்த்தனைகள் , ஜப, தவங்கள்,  உடலுக்கு சக்தி அளிக்கும் உடற்பயிற்சிகள் என்று எல்லாமே நன்மை பயக்கும்.

 ஆனால் காலையில் எழுந்து கொள்ள வேண்டுமே!

 காலை எழுந்துகொள்ள வேண்டும் என்றுஅலாரம் வைத்துக் கொண்டு படுப்பவர்கள் கூட அது அடிக்கும் போது அதன் தலையில் தட்டிவிட்டு மறுபடியும்  போர்வையை முகம்  முழுதும் மூடிக் கொண்டு  தூங்குவது உண்டு. 




இப்போது செல்போனில் அலாரம்  வைத்துக் கொண்டு படுப்பவர்கள், அது அடிக்கும் போது கை அனிச்சையாக  அணைத்துவிட்டு சுகமாய் தூங்குவது உண்டு.

என் மகன் காலையில் எழுப்பிவிடு அம்மா என்று சொல்லிப் படுப்பான்,
காலையில் எழுப்பினால்,  ’ அம்மா!   கொஞ்சம் நேரம் கழித்து ,
கொஞ்சநேரம் கழித்து ” என்பான். “ நீ தானே எழுப்ப சொன்னாய்!” என்றால் ,
நீங்கள் எழுப்பும் போது இன்னும் கொஞ்சம் தூங்க ஆசையாக இருக்கிறது,
அப்போதுதான் சுகமாய் தூக்கம் வருகிறது ” என்பான். அவன் எழுந்து
கொள்ளவேண்டிய நேரத்திற்கு முன்பே அவனை எழுப்ப
ஆரம்பித்துவிடுவேன்.  அவன்  எந்த நேரம் எழுந்து கொள்ள நினைத்தானோ
அந்த நேரம் சரியாக இருக்கும். அவனுக்கும் அது தெரிந்துவிட்டதால்
சிறிது நேரம் படுத்துக்கொண்டுவிட்டுதான் எழுந்துகொள்வான்.

முன்பு குழந்தைகள், கணவர் எல்லோரும்  எழுந்துகொள்வதற்கு முன், நான்
எழுந்து   தியானம், உடற்பயிற்சி, மற்றவேலைகள் என்று பம்பரமாய் சுற்றிய   உடம்பு கொஞ்சம்  மக்கர் செய்கிறது. செல்லில் நாலுமணிக்கு அலாரம் வைத்தால்,  அதைக் கேட்டு எழுந்து கொள் என்கிறது மனம்,  கொஞ்சம் படுத்துக் கொள் என்கிறது உடல்.  சில நேரம் மனம் சொல்வதை கேட்டு சுறுசுறுப்பாய் எழுந்துகொள்வேன். சில நேரம் உடல் சொல்வதை கேட்டுப் படுத்துக் கொள்வேன். எப்படி என்றாலும் ஐந்து மணிக்கு மேல் படுத்திருக்க முடியாது.  தொட்டில் பழக்கம் என்பார்களே அப்படி .என் அம்மா காலை எழுந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

காலையில் மொட்டை மாடியில் என் வரவுக்குக்  புள்ளினங்கள் காத்திருக்கும்., காக்கா, புறா, தவிட்டுக்குருவி, புல்புல், மைனாவுடன் மற்ற ஜீவராசிகள் அணில், எறும்பு எல்லாம் காத்து இருக்கும்.  முதல்நாள் உணவை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து இருப்பேன்.  அதை விடியற் காலையில் பறவைகளுக்கு வைப்பேன். விடியற்காலையில் பறவைகள்  கூட்டில் தன் குஞ்சுகளை விட்டுவிட்டு, அதற்கு இரை தேடிப் பறந்து வரும்- அந்தநேரம்  உணவு அதற்கு மிகவும்  மகிழ்ச்சி அளிக்கும் .






ஒரு மண் பாத்திரத்தில் தண்ணீரும் வைத்து இருக்கிறேன். காலையில் கொஞ்சம் நடந்து கொண்டே பறவைகள் உண்ணும் அழகைப் பார்ப்பேன். அண்டங் காக்கா வந்தால், மற்ற பறவைகள் அது சாப்பிட்டுப் போகும் வரை பக்கத்தில் வராது,  காக்கா சாப்பிட்டு முடித்தால் புறா வரும். 


அதுவும் எந்த பறவையையும் பக்கத்தில் விடாது. கீழே சிந்துவதை சாப்பிடலாம் என்றால் அதையும் விடாது .கீழேயும்  வந்து துரத்தும். இக்காட்சியை என் கணவர் வீடியோ எடுத்துத் தந்தார்கள்.



                                           


 அப்புறம் அணில் , தவிட்டுக்குருவி, மைனா வந்து சாப்பிட்டது  போக மீதி இருக்கும் பருக்கைகளை எறும்பு இழுத்துப் போகும். சிறிது நேரத்தில் அந்த இடம் சுத்தமாகி விடும் !

மெல்ல மெல்ல சூரியன் வெளிக் கிளம்பும் அழகைப் பார்ப்பது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கும்.  வானம் விடியல்காலையில் பார்க்க மிக ரம்மியமாய் இருக்கும்.

வானம் எனக்கு ஒரு போதி மரம் !
 நாளும்எனக்கு ஒரு செய்தி சொல்லும்” 

காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது -நீலக்
 கடல் அலையில் மயில் எழுந்து நடனம்புரியுது”

என்ற பாடல்கள் என் மனதில் ஓடும்.    கிளிக்கூட்டம் பறக்கும் ’கீச் கீச்’ என்ற சத்தத்துடன், கொக்கு வரிசையாய் பறக்கும்.  கிருஷ்ணபருந்து பறக்கும்,  மீன் கொத்தி, மரக்கொத்தி, வாலாட்டும் குருவி, கறுப்புக்குருவி., தேன்சிட்டு எல்லாம் பறக்கும். காலைப் பொழுது அருமையானது. அதை எல்லாம் பார்த்து மகிழ கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும் நாளும்.
மாணிக்கவாசகரும், ஆண்டாளும் பாடிய காலைப் பொழுதுப் புள்ளினப் பாடல்கள் எல்லோருக்கும் தெரியும், மாறுதலாய் காலை அழகைப்பற்றிய வாணிதாசன்  கவிதை ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

       காலை அழகு

வெள்ளி முளைப்பினிலே - அழகு

துள்ளுது வான்பரப்பில்!-சிறு
புள்ளின ஓசையிலே - அழகு
பொங்கி வழியுதடி!

காலைப் பிறப்பினிலே - அழகு

கண்ணைக் கவருதடி! - சிறு
சோலைக் கலகலப்பில் - அழகு
சொரியுது உள்ளத்திலே!

சேவல் அழைப்பினிலே - அழகு
சிந்தையை அள்ளுதடி! - மன
ஆவல் அழித்துவிட்டால் - அழ
கானது நம்முடைமை!

தாமரை மொட்டுக்குள்ளே - அழகு
தங்கிக்  கிடக்குதடி! - கதிர்
சாமரை வீச்சினிலே - விரிந்து  
சஞ்சலம் போக்குதடி!

வீடு துலக்கும்பெண்கள் - குளிர்முகம்
வீசும் ஒளியழகில் - வான் 
நாடு விட்டு நகரும் - முழுமதி
நாணி முகம் வெளுத்தே!

பாரதியார் ’காலைப் பொழுது’என்று   பாடியுள்ளார்.

பாரதிதாசன் அதிகாலை பற்றிப்பாடி இருக்கிறார்.

பாரதியார் அக்கவிதையில் ஒற்றுமையைக் காண்கிறார் . பாரதிதாசன்  தன் பாடலில் உழைப்பைப் பற்றி  பாடுகிறார்.

இப்போது பரீட்சைக்கு படிக்கும் குழந்தைகள் காலை எழுந்து படித்தால் நல்லது , இரவு சீக்கீரம் தூங்கப்போய் அதிகாலை எழுந்து படித்தால், படித்தவை நினைவில் நிற்கும்.  நான் நன்கு படிப்பேன், நான் படிப்பது என் நினைவில் நிற்கும் ,நான் சிறப்பாய்த் தேர்வு எழுதுவேன், நல்ல மதிப்பெண்கள் பெறுவேன்என்று நாளும் மனதுக்குள் சொல்லிவிட்டுக் காலையில் படித்தால் படித்தவை  நினைவில் நின்று நன்கு தேர்வு எழுதமுடியும். எல்லா குழந்தைகளும் நன்கு படித்து நல்ல குழந்தைகளாய் வளர வாழ்த்துக்கள். குழந்தைகள் எல்லாம் அன்பும் கருணையும் நிறைந்து வாழ வேண்டும்.

நல்ல எண்ணத்தைக் காலையில் நினைத்தால் அது அப்படியே பலிக்கட்டும் என்று வானத்தில் உள்ள தேவதைகள் வாழ்த்துவார்களாம்!  நாமும் நாளும் வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் ! என்று நினைக்கலாம். வையகம் அமைதியாய் அன்பாய் இருந்தால் நாமும் அப்படியே இருக்கலாம் இல்லையா!.

                   
                                               வாழ்கவளமுடன்.


                                                    ---------------------