மார்ச் 8ஆம் தேதியை மகளிர் தினமாய் நாம் கொண்டாடுகிறோம். சமுதாயத்திற்கு சேவை செய்த சிறந்த பெண்மணி பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் அவர்களை இந்த கட்டுரையில் வாழ்த்த விரும்புகிறேன்.
கீழ்வெண்மணி கிராமத்து விவசாய மக்களுக்கு அவர் தெய்வம் போல் என்று படித்தது நினைவு வந்தது.
அவர்கள் சில வெளி நாட்டு அன்பர்களுடன் வந்து இருந்தார்கள். செங்கல்பட்டுக்கு போகிறேன் என்றார்கள். நாங்கள் அவர்களை வணங்கி உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி என்றோம். எவ்வளவு உயர்ந்தவர்கள் அவர்களுடன் நின்று பேசுவதே பெரிய பாக்கியம். அவர்கள் அவர்களைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை கொடுத்தார்கள் அதைப்படித்த போது அவர்கள் எவ்வளவு விருதுகள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள், எவ்வளவு துன்பங்கள் பட்டு இருக்கிறார்கள் என்பது எல்லாம் தெரிந்தது.
நிறைய விருதுகள் பட்டங்கள் எல்லாம் வாங்கியும் பெருமை கொஞ்சமும் இல்லாமல் மிக எளிமையாக நிறைகுடம் போல் ஒளிர்ந்த அவர்களை போட்டோ எடுத்துக் கொள்கிறேன் என்று அவர்களை மட்டும் போட்டோ
எடுக்கப் போனேன். அவர்களுடன் வந்து இருந்த அயல்நாட்டுப் பெண்மணி நீங்கள் சேர்ந்து நில்லுங்கள், நான் எடுக்கிறேன் என்று அன்பாய் எடுத்துக் கொடுத்தார்கள். அவர்களை பார்த்து வந்தபின் அடிக்கடி பொதிகை தொலைக்காட்சியில் அவர்கள் பேட்டி வைத்தார்கள். நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன். இதை முன்பே பார்த்து இருந்தால் அவர்களிடம் உங்களை பொதிகையில் பார்த்தேன் என்று சொல்லி இருக்கலாம். மன உறுதி நிறைந்த சமூகசேவையை உயிர் மூச்சாகச் செய்த பெண்மணியை சந்தித்தது பற்றி இந்த மகளிர் தினத்தில் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.
”நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ” என்று தினமலர் குறிப்பிட்டு இருக்கிறது. படித்து இருப்பீர்கள். இருந்தாலும் இந்த பெண்கள் தினத்தில் வீரமிக்க பெண்மணிக்கு வணக்கம் சொல்ல மறுபடியும் படிக்கலாம் அல்லவா!
//"அந்த கூட்டத்தில் கல்யாண வயதில் இருந்த அந்தப் பெண் மட்டும் கழுத்தில், காதில், மூக்கில் என்று பொட்டு தங்க நகைகூட இல்லாமல், சாதாரண கைத்தறி புடவை அணிந்த நிலையில் எளிமையின் வடிவமாக காணப்பட்டார்'' என்று சுதந்திர போராட்ட தியாகியான ஜெகந்நாதனால் கைப்பிடிக்கப்பட்டவரும், தலித் சமூகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தவரும், பூமிதான இயக்கத்தின் ஆணிவேராக இருந்தவரும், நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் சுவீடன் நாட்டால் வழங்கப்படும் "வாழ்வுரிமை விருது” பெற்றவரும்' இன்றைக்கு 94 வயதானாலும் தளரா மனஉறுதியுடன் காணப்படுபவருமான கிருஷ்ணம்மாளை இந்த கட்டுரை படம் பிடிக்கிறது
திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் 1926 ம் ஆண்டு பிறந்தவரான கிருஷ்ணம்மாள்தான் தமிழக தலித் இனத்தின் முதல் பட்டதாரி எனலாம்.கல்லூரியில் படிக்கும் போது எதிர்பாரதவிதமாக காந்திக்கு உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.,இதன் காரணமாக காந்தியத்தை கடைபிடிக்கத் துவங்கியவர், சர்வோதய இயக்கத்தில் பணியாற்றியவர், காந்தியவாதியான ஜெகந்நாதனை திருமணம் செய்துகொண்டவர்.
இந்த நிலையில் நாகை,கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்ட விவசாயிகள் எரித்துக்கொன்ற சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நாகை வந்தவர் , பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற வேண்டி நாகையில் தங்கியவர் பின்னர் நாகை வாசியாகவே மாறிவிட்டார்.
அப்போது விநோபாவே நாடு முழுவதும் பூமிதான இயக்கத்தை நடத்திக்கொண்டு இருந்தார். இருப்பவரிடம் இருந்து நிலத்தை பெற்று இல்லாதவருக்கு வழங்கும் இந்த பூமிதான திட்டத்தை தமிழகத்தில் நடத்திச் சென்றவர் கிருஷ்ணம்மாளாவார். தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் ஏக்கர் நிலத்தை பெற்று ஏழைகளுக்கு வழங்கினார்.
எவ்வளவுதான் உழைத்தாலும், எத்தனைகாலம் உழைத்தாலும் அரைப்படி நெல் கூடுதலாக கிடைத்தால் அதிசயம் என்று எண்ணியிருந்த உழவர்களுக்கு, சொந்தமாக உழைத்த மண்ணே கிடைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இந்த விஷயத்தை அசாதாரணமாக கிருஷ்ணம்மாள் நடத்திக்காட்டினார்.
நில மீட்பிற்காக தொடங்கப்பட்ட "லாப்டி' இயக்கத்தை விரிவுபடுத்தி விவசாய தொழிலாளர்களின் குடும்பத்தினர் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுதல், பாய் நெய்தல், மேல்படிப்பு படித்தல் என்று வலுவான,வளமான வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.
இதை எல்லாம் செய்யும் நாங்கள் தேவதூதர்கள் அல்ல,கொள்கைகளை மட்டுமே உதிர்க்கும் அரசியல்வாதிகளும் அல்ல, காந்திய சிந்தனையில் ,விநோபா வழியில் கிராமங்கள் உயர கிராமமக்கள் விழிப்புணர்வு பெற எங்களால் முடிந்த அளவு முயற்சிக்கிறோம்.,இந்த முயற்சி ஆங்காங்கே பலரால் மேற்கொள்ளப்பட்டால், நம் தேசம் ஏழைகளும், கோழைகளும் இல்லாத நல்ல கொள்கைப் பிடிப்புள்ள தேசமாகும் என்பதே எங்களது நம்பிக்கை, அந்த நம்பிக்கையை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறோம் எனும் கிருஷ்ணம்மாளின் பாதையில் தடைக் கற்களும்,முட்களும் மிக அதிகம், உடம்பிலும்,மனதிலும் பட்ட காயங்கள் இன்னும் அதிகம்.,ஆனால் இதையெல்லாம் சொல்லி எந்த நிலையிலும் பச்சாதாபத்தை பெற விரும்பாதவர் இவர்.
நாடி நரம்பு தளர்ந்து கயிற்றுக்கட்டிலில் எழுந்து உட்காரக்கூட ஆள் துணை தேடும் 82வயதில்தான் இவர்,விளைநிலங்களை உப்பளங்களாக மாற்றும் இறால் பண்ணையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் மேற்கொண்டார். இதற்காக இவர் குடியிருந்த வீடு தீவைத்து எரிக்கப்பட்டது, கூட இருந்தவர்கள் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இப்படி சொல்லமுடியாத சிரமங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்று போராடியவர்.
விவசாய மண்ணையும்,விவசாய மக்களையும் இவர் நேசித்த அளவிற்கு நாட்டில் யாரும் நேசித்து இருப்பார்களா என்பது சந்தேகமே,இதனால் அனைவராலும் "அம்மா' என்றழைக்கப்படுபவர்.
கத்தியின்றி,ரத்தமின்றி சாதிக்கமுடியும் என்பதன் அடையாளமே கிருஷ்ணம்மாள் என்று வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவர் இவரைப்பற்றி எழுதிய புத்தகத்தில் வியந்து பாராட்டி எழுதியுள்ளார்.
தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக இல்லாத விவசாயிகளுக்கு நிலம், வீடு, கல்வி, வேலைவாய்ப்பு என்று நிகழ்காலமாகவும்,எதிர்காலமாகவும் விளங்கும் கிருஷ்ணம்மாளுக்கு சுவீடன் அரசு தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான "வாழ்வுரிமை விருது' வழங்கி கவுரவித்துள்ளது.
சிலருக்கு விருதால் பெருமை
சிலரால் விருதிற்கு பெருமை
கிருஷ்ணம்மாள் சந்தேகமில்லாமல் இரண்டாவது ரகம்.
-எல்.முருகராஜ்.//
இரு காந்திகள்
இக் கட்டுரை ஜெயமோகன் எழுதி இருக்கிறார்.
இந்த லிங்கில், கத்தியின்றி ரத்தமின்றி ! என்ற புத்தகத்தின் மதிப்புரை வந்திருக்கிறது.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்- சுதந்திர போராளியின் வீரவரலாறு இதில் கூறப்படுகிறது.
திருமதி . கிருஷ்ணம்மாள் அவர்களின் கணவருக்கு நினைவாற்றல் குறைந்து வருவதாகவும் உடல் நலிவுற்ற கணவரை அன்பாக பார்த்துக் கொண்டார் என்று பத்திரிக்கை மூலம் அறிந்து கொண்டேன்.
போன மாதம் பிப்ரவரி 12ம் தேதி திரு ஜெகந்நாதன் அவர்கள் மறைந்தார் அப்போது அவருக்கு வயது 100 . திரு ஜெகந்நாதன் அவர்களின் புகழை விவசாயிகள் காலம் முழுவதும் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.