செவ்வாய், 5 அக்டோபர், 2021

பழமையும், புதுமையும்


அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அதற்கு மகன் ஆகஸ்ட்  மாதம்  வார விடுமுறையில் அழைத்து சென்றான். வெள்ளி, சனி, ஞாயிறு  போய் இருந்தோம். இரண்டு இரவுகள் இந்த பழமையான வீட்டில் தங்கி இருந்தோம்.



இந்த பதிவு  வரலாற்று சிறப்பு மிக்க வீடு
 என்ற போன பதிவின் தொடர்ச்சி.


சமையல் அறையில் இப்படி எழுதி வைத்து இருந்தார்கள்.

அந்தக் காலத்து எண்ணெய் பீப்பாய் வடிவில்  அலங்காரமாக வைத்து இருந்தார்கள்.

பழைய கால பீங்கான் பாத்திரங்கள் நல்ல கனமாக இருக்கிறது. 

கைபிடி வைத்த செம்பு பாத்திரங்கள்.

இந்த பாத்திரத்தில் துளைகள் இருக்கிறது.  மாவை ஊற்றி ஆவியில் வேக வைப்பார்கள் போலும் நம்  இட்லி போல.

இந்த அலமாரி புதுமையும் பழமையும் இணைந்து இருக்கிறது

காப்பி மேக்கர், சீனி, காப்பித்தூள்

பழைய காலத்து அலமாரி, அழகு சாதன   பெட்டிகள் மேலே இருக்கிறது.

மேஜைக்கு கீழே மைக்ரோ ஓவன் மற்றும்  சின்ன குளிர்சாதனபெட்டி உள்ளது.

1.பழைய இரும்பு சாமான்கள் மேலே பலகையில் வைத்து இருக்கிறார்கள், காப்பிகொட்டை அரைக்கும் மெஷின் இருக்கிறது.   2. இடியாப்ப அச்சு போல் இருக்கிறது, கீழ் பகுதியில் அச்சு இருக்கிறது. 


.3. பேரன் உட்கார்ந்து இருக்கும் ஷோபா பின் புறம் உள்ள மரச்சுவற்றில் பழைய காலத்தில் பயன்படுத்திய  இரும்பு கருவிகள் இருக்கிறது.

  4. காய் நறுக்க பயன்படும் மர தட்டு, மற்றும் மரக்கரண்டிகள். 5. காரட் துருவும் கருவி இருக்கிறது. 
6.பொருட்களை அளந்து போட வில் தராசும் பாத்திரமும் இருக்கிறது. 
 7.குளியல் அறையில் அழகான சின்ன மர அலமாரி.
 8. அவர்கள் பயன்படுத்திய கோடாரிகள். 
9.சின்ன சின்னதாக நிறைய இரும்பு சமையல் பாத்திரங்கள்.


பழைய காலத்து  தொலைபேசி.
கம்பி இல்லா தந்தி கொடுக்கும் தகவல் சாதனம் போல் இருந்தது அலமாரி மேல் .பொருட்களை அப்படியே இருக்க வேண்டும் என்று சொன்னதால் அதை எடுத்துப்பார்க்கவில்லை. வீட்டின் உரிமையாளர் அருகில் இருந்து இருந்தால் கேட்டு இருக்கலாம். கூகுளில் பார்த்தேன் இது போல் தான் இருக்கிறது கம்பி இல்லா தந்தி கொடுக்கும் சாதனம்.

பின் வாசல் கதவு  புதுப்பிக்க பட்டது போல் இருக்கிறது.

வீட்டுக்கு பின்னால் சின்ன அழகான பால்கனி.    டீபாயில் கண்ணாடி கூண்டுக்குள் மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றி மாலை நேரம் அமர்ந்து பேசலாம்

நான்கு படி இறங்கி போனால் தோட்டம்.






பால்கனியிலிருந்து தோட்டத்தை எடுத்த படம். 

வீட்டின் பின் பகுதி, வேண்டாதவை போட்டு வைத்துக் கொள்ள ரேடிமேட் மர வீடு.   பழைய நாற்காலி, குளிர் காய கட்டைகள் போட்டு நெருப்பு மூட்ட  நடுவில்  நாலு கால்வைத்த  இரும்பில் செய்த பாத்திரம் .நெருப்பு பொறி பறக்காமல் இருக்க அதன் மேல் இரும்பு வலை மூடி.


அந்தக் காலத்தில் வழிப்பயணங்களில்  இப்படி பாத்திரங்களை தொங்க விட்டு நெருப்பு மூட்டி  சமைத்து சாப்பிடுவார்கள்.  பழைய காலத்து அரிக்கேன் விளக்குகள்.(லாந்தர் விளக்குகள்)


அழைப்பு மணியாக பயன் படுத்தியது. கொக்கி போன்ற கம்பியை  அந்த முக்கோண கம்பியில் அடித்தால் நல்ல ஒலி வருகிறது. வீட்டின் இலக்கம் 11.

ஒரு சின்ன அறையில் கிட்டார்  வைக்கும் பெட்டியும் , பழைய காலத்து வெந்நீர் தயார் செய்யும் ஹீட்டரும் இருந்ததது.

அடுத்த பகுதி  ஊரைப் பார்ப்போம். 


வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்

---------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

வரலாற்று சிறப்பு மிக்க வீடு



அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அதற்கு மகன் ஆகஸ்ட்  மாதம்  வார விடுமுறையில் அழைத்து சென்றான். வெள்ளி, சனி, ஞாயிறு  போய் இருந்தோம். இரண்டு இரவுகள் இந்த பழமையான வீட்டில் தங்கி இருந்தோம்.

மகனுக்கு இது போன்ற இடங்களுக்கு போய் பார்ப்பது பிடிக்கும், முன்பு குடும்பத்துடன்  போய் இருக்கிறான், மறுமுறை எனக்கு காட்ட அழைத்து சென்றான். போனமுறை வந்து இருந்த போது எங்களை அழைத்து செல்ல திட்டமிட்டு இருந்தான், அது முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு மட்டும் காட்டும்படி ஆகி விட்டது. என் கணவருக்கு இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்க்க பிடிக்கும்.

1880 ம் வருடம் இந்த வீடு கட்டபட்டதாம். பழைய பொருட்கள் அழகாய் காட்சிக்கு வைத்து இருந்தார்கள்.

சாப்பாட்டு மேஜையில் இந்த ஊரில் பார்க்க வேண்டிய இடங்கள் , போகும் வழி வரைபடம் வைத்து இருந்தார்கள்.

வியாழன், 30 செப்டம்பர், 2021

ஒலிம்பிக் பூங்கா


ஒலிம்பிக் பூங்கா

 ஜார்சியாவில்  அட்லாண்டா   நகரத்தில்  உள்ளது இந்த பூங்கா.
 1896 ஆம் ஆண்டில்  ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கப் பெற்றது.  அதன் நினைவாக 1996  XXVI  ஒலிம்பியாட்  நூற்றாண்டு கால நினைவாக கட்டப்பட்டது.

ஒலிம்பிக்கில் 197 நாடுகளிலிருந்து 10,320 விளையாட்டு வீரர்கள் போட்டியில்  கலந்து கொண்டார்களாம்.

கொரொனா அச்சத்தால் 2020 ல்   இந்த பூங்கா மூடப்பட்டு இருந்தது, இப்போது மீண்டும் மக்கள் பார்வைக்கு திறந்து விட்டு இருக்கிறார்கள்.


இந்த ஊரின் அழகையும் , இந்த பூங்காவின் அழகையும்  பார்க்க  அழைத்துப்  போய் காட்டினாள் மகள்.

அங்குப் பார்த்த காட்சிகள் பகிர்வாய் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

சனி, 25 செப்டம்பர், 2021

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்


காளமேகப் பெருமாள் கோவில் கோபுரம்

இன்று புரட்டாசி  இரண்டாவது சனிக்கிழமை  திருமோகூர் காளமேகப் பெருமாளைத் தரிசனம் செய்து வந்தோம். இது
103 வது திவ்ய தேசம்.  திருமங்கையாழ்வார் , நம்மாழ்வார் மங்களாசஸனம் செய்து இருக்கிறார்கள்.நம்மாழ்வாருக்கு மோட்சம் தந்த தலம்.மோகினி அவதாரம் எடுத்த தலம் அதனால் திருமோனவூர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் திருமோகூர் ஆயிற்று.


காலை எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி விட்டோம். காலையில் சிக்கீரம் போனால் கூட்டம் இருக்காது என்று  சொல்வார்கள். 


வாசலில் மாடு நின்று கொண்டு வருவோர் போவோர் என்ன கொடுப்பார்கள் என்று ஏங்கிப் பார்த்துக் கொண்டு இருந்தது.

ஓம் நமோ நாராயண என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தோம். கொடிமரம் வணங்கி உள்ளே சென்றால் உற்சவர் அழகாய் கொலுவிருந்தார். அவருக்குத்தான் அர்ச்சனை எல்லாம். மூலவரை பார்த்து விட்டு வந்து  விட வேண்டும்.. இரண்டு ரூபாய் கட்டணம் உள்ளே போக. முன்பு பலவருடங்களுக்கு முன் பார்த்த பெருமாள்  இவ்வளவு உயரமா? நினைவில் இல்லை. (இப்போது வளர்ந்து விட்டாரா என்ன எப்போதும் இதே உயரம் தான்)  

ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்துடன் அற்புதமாய் காட்சி அளித்தார். நன்கு கண்ணாரக் கண்டு மனதாரத் தொழுது வாங்கிச் சென்ற துளசி மாலையைக் கொடுத்து வணங்கி வந்தோம்.

சுவாமி சன்னதி வாசல் தூணில் மன்மதன் சிலை நல்ல பெரிதாக உடல் முழுவதும் சந்தனம் பூசி இருக்கிறது அழகாய், அதற்கு எதிர் தூணில் ரதி சிலை அழகாய் சந்தனம் பூசி இருக்கிறது.
                               
                           காளமேகப் பெருமாள் இருக்கும் சன்னதி விமானம்
தாயார் மோகனவல்லி  சன்னதி  விமானம்

பெயருக்கு ஏற்றார் போல் தாயார் மோகனமாய் இருக்கிறார். அவர் சன்னதி மண்டபத்தில் உற்சவர் சக்கரத்தாழ்வார், பின் புறம் நரசிம்மர் உள்ள உற்சவருக்கு அர்ச்சனை நடக்கிறது .

 தாயார் மோகனவல்லி. தாயார் சன்னதியில்   ஒரு பட்டர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து குங்குமம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்  

                                                   
                               சக்கரத்தாழ்வார் சன்னதி தங்கக்கோபுரம் 

நரசிம்ம சுதர்னம் என்று அழைக்கிறார்கள். சுதர்சனரும், நரசிம்மரும் தங்க கவசத்தில் ஜொலிக்கிறார்கள். இவரைப் பார்க்கவும் இரண்டு ரூபாய் கட்டணம்.  சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன்16 ஆயுதங்களுடன் அழகாய்க் காட்சி அளிக்கிறார். மந்திர எழுத்துக்களுடன் மிகவும் சகதி வாய்நதவராம். இவரை வேண்டிக் கொண்டால்  எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை.
                                                         
                    சிறு விமானம் தெரியும் சன்னதி- ஆண்டாள் சன்னதி                                          
சிறு முன் மண்டபத்தை கடந்து உள்ளே போனால் மலர்  உடை தரித்து வெகு அழகாய் காட்சி தருகிறார் ஆண்டாள். உற்சவ ஆண்டாளும் அழகிய அலங்காரத்தில் காட்சி தருகிறார். ஆரத்தி தட்டைக் காட்டி  நாமே ஆரத்தியைத் தொட்டு வணங்கிக் கொண்டு மஞ்சளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் பட்டர். 

அழகிய பிரகாரம் கால் சுடாமல் இருக்க வெள்ளை  வர்ணம் பூசி இருக்கிறார்கள் .அதில் நடந்தால் சுடவில்லை.

கோடியில் இருக்கும் பெரிய கிணறு  இரும்பு கம்பி போட்டு மூடி இருக்கிறார்கள். பாலீதீன், பூ, குப்பைகளைக் கிணற்றில் போடாதீர்கள் என்ற அறிவிப்பு வைத்து இருக்கிறார்கள். எட்டிப் பார்த்தேன் காசுகள் போட்டு இருக்கிறார்கள். மக்கள்.


சிலபடிகள் ஏறிச் சென்றால் நவநீதகிருஷ்ணர் சன்னதி. வெள்ளிஅங்கியில் அழகாய் இருக்கிறார். அவரைச் சுற்றி வணங்கி வர வசதி உள்ளது. 

உள் சன்னதியை வலம் வந்து வெளியில் வந்தால்  வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி வெள்ளி கவசம் தாங்கி துளசி மாலை அணித்து சிறிய மூர்த்தியாய் காட்சி தந்தார்.


 அவருக்கு அருகே மதியம் அன்னதானத்திற்கு சமைக்கும் இடம். ஒரு அம்மா ஐந்து ஆறு வெண்டைக்காயை ஒன்றாய் அடுக்கி வைத்துக் கொண்டு வெட்டிக் கொண்டு இருந்தார்கள். அடுத்து மடைப்பள்ளி அங்கு புளியோதரை, பொங்கல், மற்றும் பலகாரங்கள் தயார் ஆகி கொண்டு இருந்தது. அதை தயார் செய்ய அடுப்பிற்கு விறகுகள் மரத்தடியில் அடுக்கி வைத்து இருந்தார்கள். வாதாம், தென்னை, மாமரம் இருந்தன.


தென்னை மரங்களுக்கு இடையே சக்கரத்தாழ்வாரின் தங்க விமானம்

                      மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள்.

அதனை ஒட்டி ஒரு பெரிய பாழடைந்த  கிணறு
குப்பை கூளங்களுடன் தென்னை மர நிழலும் விழுந்து இருக்கிறது, மொட்டைத் தென்னைமரம்,  கீற்றுடன் தென்னைமரம்
                        
 அடுத்து சதுரக் கல்லில்  சுற்றிவர சின்ன சின்ன  உருவங்கள் நடுவில்  சக்கரத்தாழ்வார். விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.



தரையிலும்  மேலேயும் பல கிளைகளை பரப்பிக் கொண்டு மரம் பச்சையாய்
அந்த மரத்தில் தங்கள் இதயங்களையும், பெயரையும்   வரைந்து வைத்து இருக்கிறார்கள்.

பிரகாரத்தின் முடிவில் சுவாமி இளைப்பாறும் மண்டபம்.


பிரகாரம் சுற்றி  கொடிமரம் தாண்டி வந்தால் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி இருக்கிறது. யாரும் மறைக்காமல்  பாம்பு படுக்கையில் ஸ்ரீதேவி, பூதேவி கால் அருகில் இருக்க வலது கையை படித்து மலர் கண்களை நன்கு மலர்த்தி நம்மை பார்க்கிறார். நல்ல வெளிச்சம் அவர் மேல் படுவதால் நன்கு கண்குளிரப் பார்க்க முடிகிறது.


சன்னதியை விட்டு வெளியில் வந்தால் அன்னதானத்திற்கு மேஜைகள் போட்டு இருக்கிறது ஒரு பக்கம், நடுவில் இருக்கும் மண்டபத்தில் மின்விசிறிகள் சுழல்வதால் மக்கள் பிரசாதங்களை வாங்கி வந்து அமர்ந்து சாப்பிட்டு இளைப்பாறிச் செல்கிறார்கள்.

அவர் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் கைகூப்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல்  உருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதைப் பார்த்தவுடன்  சீர்காழி கோவிந்தராஜன் பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.( பாடல் -குலசேகராழ்வார் )

 /செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!//
குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி.

அடியவர்களின்  பாதம் அந்த உருவங்களின் மேல்

உள்ளே தரிசனம் செய்து வெளியில் வந்தால் எதிரில் கருடன் மேல் திருமால் அமர்ந்து இருக்கும் மண்டபம் தெரிகிறது.

 நாம் முதலில் திருக்குளத்தில் கால்களை கழுவி, தலையில் தெளித்துக் கொண்டு  திருக்குளத்து அருகே இருக்கும் ஆலமரத்த்டியில் இருக்கும் தும்பிக்கை ஆழவாரைப் பணிந்து  பின்  உள்ளே காளமேகப் பெருமாளை வணங்கச் சென்று இருக்க வேண்டும். கூட்டம் வரும் முன்னே சேவிக்க வேண்டும் என்று முதலில் உள்ளே போய் விட்டு பின் ஆற அமர திருக்குள தரிசனம்.

இங்கு உள்ள திருக்குளம் திருப்பாற்கடல் என்று அழைக்கப்படுகிறது . அழகிய நீராழி மண்டபத்துடன்   திருக்குளம். நன்கு சுத்தமாய் இருக்கிறது.

சிறுவர்கள் நீச்சலடித்து குளித்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆலமரத்தின் நிழலும் திருக்குளத்தில் அலையடிப்பதும் பார்க்க அழகு.



ஆலமரத்தடியில் அகத்திக்கீரையும், அருகம்புல்லும் விற்கும் தாய்
  
அங்கு நிறைய பசுமாடுகள் இருக்கிறது அதற்கு அகத்தி கீரை விற்கிறார்கள், தும்பிக்கை ஆழவாருக்கு அருகம்புல் விற்கிறார்கள் அந்த அம்மா தன்  குழந்தையை கொஞ்சுவதைப் பாருங்கள்.




ஆலமரத்தில் தொட்டில் கட்டி தன் செல்லத்தை அதில் இட்டுக் கொஞ்சிப் பேசித் தாலாட்டும் தாய்.
ஆலமரக் காற்றும், திருக்குளக் காற்றும் உடலை வருட, தாயின் அன்பு குரல் மனதை வருட சுகமான தூக்கம் வராதோ குழந்தைக்கு!



இப்போது இடுப்பில் இருக்கும் குழந்தை சற்று முன் தொட்டில் ஊஞ்சலில் ஆடிய குழந்தை.


                                           ஆலமரத்தடியில் நாகர்கள்.
இந்த மண்டபத்தில் சூரியன் வரப்போகிறார் என்று நினைக்கிறேன். மேலே குதிரைகள் இருக்கே!
இப்போது ஆலமரத்தடியில் தகரக் கொட்டகையில் இருக்கும்  தும்பிக்கை ஆழவார் இங்கு வரப்போகிறார்.

குளத்து அருகே தாமரைக்குளம். தண்ணீர் இல்லை .சேறும் சகதியுமாய்,
 புற்களும் புதர்களுக்கு இடையே தாமரையும்  அழகாய் தலைதூக்கி சிரிக்கிறது. தூரத்தில் இருந்து எடுத்தேன். நிறைய மாடுகள் கூர்மையான கொம்புடன் அங்கு நின்றன.

கருப்பண்ணசாமி சன்னதியும் வெளியில் இருக்கிறது.

வாழ்க வளமுடன்.

----------

வியாழன், 23 செப்டம்பர், 2021

மஞ்சள் வெயில் மாலையிலே! வண்ணப்பூங்காவிலே!



மாலை நேரம்  இந்த பூங்காவிற்கு போனோம்,  நடைப்பயிற்சி செய்ய . ஊர் முழுவதும் மிக அழகிய பூங்காக்கள் இருக்கிறது.
வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்கா இது. (காரில் போனால் 10 நிமிடம்)

வெகு அழகான பூங்கா.  இரு பக்க மரங்களும் வசந்த காலத்தில்  வெள்ளைப்பூக்கள்  பூத்து குலுங்குவது பார்க்க அழகாய் இருக்குமாம், இப்போது மரம் இலைகளை உதிர்த்துவிட்டு குச்சி குச்சியாக நிற்கிறது.

நடைபாதை வெகு தூரம் போகிறது. ஒரு பாதியை ஒரு நாளும், மறுபாதியை இன்னொரு நாளும் நடந்து கடக்கும் போது பார்த்த காட்சிகள் இந்த பதிவில்.

திங்கள், 20 செப்டம்பர், 2021

ரூஸ்டர் காக்பர்ன் தீக்கோழிப் பண்ணை (ROOSTER GOGBURN OSTRIGN RANGH)



 ரூஸ்டர் காக்பர்ன் தீக்கோழிப் பண்ணை  

வாசலில் மிக அழகான கள்ளிகள் இருக்கிறது.
காக்பர்ன் தீக்கோழிப் பண்ணை  உள்ளே செல்லும் வழி.

தெற்கு அரிசோனாவில்  இருக்கிறது.   மகன் அழைத்து சென்ற இடம். மிகவும் அழகான இடம் . இது மூன்று தலைமுறையாக ஒரு குடும்பத்திற்கு சொந்தமாக இருக்கிறது. தீக்கோழிப் பண்ணை என்று பெயர் வைத்து இருந்தாலும் அங்கு வேறு விலங்கினங்களும் இருக்கிறது. 

1999ம் ஆண்டு முதல் பொது மக்கள் பார்த்து அவைகளுக்கு உணவு கொடுத்து மகிழ ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

நைஜீரியா குள்ள ஆடுகள், ஃ பாலோ மான், பெக்கிங் வாத்துக்கள்,  போயர் ஆடுகள் மற்றும்  பறவைகள், சேவல், கோழி, கழுதை ஆகியவையும் மேலும் முயல்,  வாத்தும்  இருக்கிறது.